• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 8

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
160
உயிர்க்கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 8


கண்மணியின் கதையைத் தெரிந்துகொண்ட பின்னர் மாதுரியின் மனம் கனத்துப் போனது. இந்தச் சிறிய வயதில் விரக்தியான மனநிலைக்கு கண்மணி தள்ளப்பட்டதற்குக் காரணம், சுயநலம் பிடித்த அவளுடைய குடும்பத்தினரே ஆவர். ஆனால், அவர்கள் பக்க நியாயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் தீர்ப்பு வழங்க முடியாது. அவரவர் நியாயங்கள், அவரவர்க்குச் சரியாகவே படலாம்.

வீட்டை அடையும் வரை வேறு எதுவும் பேசவில்லை இருவரும். அமைதி அவர்களுடன் சேர்ந்து பயணித்தது. மேடத்தின் அறையை நோக்கி விரைந்தாள் மாதுரி. அறைக்கு அருகில் வந்தபோது உள்ளேயிருந்து வந்த சிரிப்புச் சத்தம் மற்றும் கலகலப்பான உரையாடல் கேட்டுத் தயங்கி நின்றாள்.

சொந்தக்காரர்கள் யாராவது குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தால் உள்ளே போவது தவறாகி விடுமோ என்று எண்ணியபடி, கதவை இலேசாகத் தட்டினாள்.

“ கம் இன்” என்று ராஜேஸ்வரி மேடத்தின்
ஒப்புதல் கிடைத்ததும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள், துகிலனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள்.

மாதுரியின் முகம் தானாகவே மலர்ந்து போனது. தனக்கே உரிய குறும்புச் சிரிப்புடன் அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“ ஹலோ டாக், எப்ப வந்தீங்க? ” என்று விசாரித்தபோது அவளுடைய குரலில் உற்சாகம் தெரிந்தது.

“ இங்க அனுபவம் எப்படி இருக்கு மாதுரி ? ராஜேஸ்வரி அத்தை உன்னைப் புகழோ புகழ்னு புகழறாங்க. உன்னை அனுப்பி வச்சதுக்காக என் பேரில சொத்தையே எழுதி வச்சிருவாங்க போல இருக்கு? ஏதோ சொக்குப்பொடி போட்டு மயக்கி வச்சிருக்கே போலயே? மாமா வேற உன் கையால தான் சாப்பிடறாராம்! அப்புறம் நேத்து நைட் வேற வீரப் பொண்ணா ஒருத்தனை விரட்டினயாமே? அப்படியே ஹீரோயின் மெட்டீரியல் தான் போ! ” என்று உண்மையில் கொஞ்சம் கேலியைக் கலந்து அவளைப் பாராட்டினான்.

மாதுரி, ஆர்வத்துடன் அருகில் அமர்ந்திருந்த மந்திராவின் முகத்தைப் பார்த்தாள். தனானைப் பற்றிய பாராட்டு அங்கே என்ன விளைவுகளை உருவாக்கும் என்று அவளுக்கா தெரியாது?

ஆனால், ஆச்சர்யமோ ஆச்சரியம். மந்திராவின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இது நிச்சயமாக துகிலன் அங்கிருப்பதன் விளைவுதான். அவன் இருக்கும் இடத்தில், அவனைச் சுற்றி எந்த எதிர்மறையான செயலும் நிகழ்வதில்லை. அவன் வாங்கி வந்த வரம் அது. மற்றொரு விஷயம் என்னவென்றால் துகிலனின் எதிரில் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு தன்னை நல்லவளாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறாள்.

“ என் எதிரில் மாதுரியைக் கலாய்க்காதே துகிலா. ரொம்ப நாளைக்கப்புறம் எனக்கே ஒரு நல்ல அஸிஸ்டன்ட் கெடைச்சிருக்கா. அதைக் கெடுத்துராதே. அப்புறம் சொத்து, பத்துன்னு ஏதோ சொன்னயே? நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்களோட சொத்து உனக்குத் தான் வரப்போகுது. இதுல நடுவில மாதுரி விஷயத்தை ஏன் இழுக்கறே? ” என்றார் ராஜேஸ்வரி சிரித்துக் கொண்டே.

“ ஏன் அத்தை இப்படி சொல்றீங்க? இதோ உங்க பக்கத்துல உக்காந்துகிட்டு நர்ஸ் ட்யூட்டி பண்ணறாளே? இவளுக்கு ஒண்ணும் கெடையாதா? ” என்றான் துகிலன் கண்களைச் சிமிட்டியபடி.

மந்திராவுக்கு இவர்கள் சொத்தைப் பற்றி இப்படிப் பேசுவது ஏனோ பிடிக்கவில்லை. தர்ம சங்கடத்துடன் நெளிந்தாள்.

“ கொடுக்கலாம். நீ சொன்னா சரித்தான். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்னிடம் ஒரு ஸொல்யூஷன் இருக்கு. அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் உங்க ரெண்டு பேர் கையிலயும் தான் இருக்கு” என்று அவர் சொன்னது, அவர்களுடைய திருமணத்தைப் பற்றி என்று அவர்களுக்கா தெரியாது? ஆனால், இதைக் கேட்டு துகிலனின் முகம் மாறியது. இந்தப் பேச்சு வேறு திசையில் செல்வது அவனுக்குப் பிடிக்கவில்லை
.
“ நீங்களா என்னென்னவோ சொல்லறீங்க அத்தை? மாமா மனசுல வேற என்னவோ இருக்குன்னு நினைக்கிறேன். அவரோட வாரிசுன்னு திடீர்னு வேற யாராவது வந்து குதிக்கலாம். அப்போ என்ன செய்வீங்க?” என்று அவன் பேசியதில் நிச்சயமாக விளையாட்டுத்தனம் இல்லை. எதையோ பூடகமாகத் தெரிவிக்க விரும்பியது போலவே இருந்தது மாதுரிக்கு.

எப்படியும் வெளி ஆளான தன்னெதிரே வீட்டு விஷயங்கள் விவாதிக்கப்படுவதை அவள் விரும்பவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.

“ பேங்க் வேலை முடிஞ்சது. வேற ஏதாவது வேலை இருக்கா? நான் என் ரூமில் உக்காந்து வேணாப் பாக்கறேன்” என்று தயக்கத்துடன் சொன்னாள் மாதுரி.

“ மதியம் லஞ்ச் சாப்பிட்டதுக்கு அப்புறம் வேணாப் போயிக்கோ. இப்போ இங்கயே இரும்மா. அந்த புக் ஷெல்ஃபில் இருக்கற புக்ஸ் எல்லாம் எடுத்து அடுக்கி வை பாக்கலாம்” என்று அவளுக்கு ராஜேஸ்வரி அடுத்த வேலையை அறிவிக்க, புத்தக அலமாரியை நோக்கி விரைந்தாள்.

‘ அப்பாடி, கொஞ்ச நேரம் இதுல பொழுது போகும். இவங்களோட அரட்டைப் பேச்சு கூடக் காதுல விழாம இருக்கும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு புத்தகங்களை இழுத்து வெளியே வைத்தாள்.

அப்பாடி, எத்தனை புத்தகங்கள்! அதுவும் பல விதமான புத்தகங்கள்! ஆங்கிலம், தமிழ் என்று இரண்டும் கலந்திருந்தன. முதலில் இரண்டையும் தனித்தனியே எடுத்து வைத்தாள். அலமாரியை நன்றாகத் துடைத்துவிட்டுப் புத்தகங்களையும் தூசி தட்டி விட்டு அழகாக அடுக்கினாள். மொழிப்படி முதலில் பிரித்தவள், அதன் பிறகு, கவிதை, கட்டுரை, நாவல்கள், வணிகவியல் சார்ந்த புத்தகங்கள் என்று ரகவாரியாகத் தனித்தனியாகப் பிரித்து வரிசையாகப் பெயர் தெரியும்படி அழகாக அடுக்கினாள்.

அவளுடைய முதுகுக்குப் பின்னால் பேசிக் கொண்டிருந்தவர்களின் உரையாடலை அவள் கவனிக்கவில்லை. தன்னை யாரோ பார்ப்பது போன்ற குறுகுறு உணர்வு தோன்றத் திரும்பிப் பார்த்தாள். சேதுபதி ஐயா, அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவரருகில் சென்று உட்கார்ந்து, கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

“ என்னமாவது வேணுமா ஐயா? ஜுஸ் கொண்டு வரவா? தாகமாக இருக்கா? ” என்று மாதுரி விசாரித்தபோது வேண்டாமென்று தலையசைத்தார்.

அங்கிருந்து அவள் நகரப் பார்த்தபோது, அவளுடைய கையைப் பிடித்துத் தடுத்துவிட்டார். ஏதோ சொல்ல முயற்சி செய்து சைகை செய்தார். மாதுரிக்குப் புரியவில்லை. அதற்குள் ராஜேஸ்வரி குரல் கொடுக்க, சேதுபதி ஐயா அமைதியாகி விட்டார்.

“ மாதுரி, அட, அதுக்குள்ள புக்ஸை அடுக்கி முடிச்சுட்டே போல இருக்கு. பாக்க நீட்டா இருக்கு இப்போ. நீ போய்க் கைகளைச் சுத்தம் பண்ணிட்டு, சாப்பாடு எடுத்துட்டு வரயா? ” என்று சொன்னதும், மாதுரி கிளம்பினாள்.

“ மாதுரி, ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” என்று சொன்ன துகிலன்,

“ அத்தை, நீங்க இன்னைக்கு எங்களோட டைனிங் டேபிளிலயே சாப்பிடுங்க. மாமாவுக்கு மாதுரி பாத்துக் கொடுத்துருவா” என்றான்.

“ எதுக்குப்பா? அதெல்லாம் வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் போய் நல்லாச் சிரிச்சுப் பேசிட்டு சந்தோஷமாச் சாப்பிடுங்க. நான் எதுக்கு நடுவில? இங்கயே உங்க மாமா சாப்பிட்டதும் வழக்கம் போல நான் சாப்பிடறேன்” என்று மறுத்தார் ராஜேஸ்வரி.

“ ப்ளீஸ் அத்தை, இன்னைக்கு ஒரு நாளைக்கு எங்களோட சேந்து சாப்பிடடுங்களேன்! நான் உங்களோட சேந்து சாப்பிடணுங்கற ஒரே காரணத்துக்காகவே வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட வரமாட்டேன்னு அம்மாட்ட சொல்லிட்டு வந்தேன். நீங்க வரலைன்னா, நானும் இங்கே சாப்பிடலை. இப்பவே கிளம்பறேன்” என்று போலியாகக் கோபித்துக் கொண்டான்.

“ சரி சரி, டிராமா பண்ணாதே, வரேன். ஆனால், மாதுரி உங்க மாமாவுக்கு சாப்பாடு கொண்டு வந்ததுக்கு அப்புறம் போகலாம் ” என்று சொல்லி விட்டார் ராஜேஸ்வரி.

சொன்னதைப் போலவே மாதுரி தள்ளுவண்டியில் பெரியவருக்காக உணவை எடுத்துக் கொண்டு வந்ததும் கிளம்பினார்கள்.

துகிலன், தன்னுடைய அத்தையின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு அவருடன் குதூகலமாகப் பேசிக் கொண்டே சாப்பிடப் போனான்.

மாதுரி பொறுமையாக அவருக்கு உணவைச் சிறிய ஸ்பூனால் ஊட்டினாள். அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளை மந்திரா எடுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருந்ததால் அவற்றையும் உடனே கொடுத்துக் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து வாயைத் துடைத்துவிட்டாள்.

“ கொஞ்ச நேரம் இப்படியே சாய்ஞ்ச மாதிரி உக்காந்திருங்க. சாப்பிட்ட ஒடனே படுக்கவேணாம். கொஞ்ச நேரம் கழிச்சு நானே மாத்திவிடறேன்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர ஆரம்பித்தாள். அவரோ அவளுடைய கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

“ என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா? இல்லை மேடம் வர வரைக்கும் பக்கத்துலயே உக்காரணுமா? ” என்று பணிவுடன் அவரரருகில் குனிந்து கேட்டாள்.

ஆனால், அடுத்ததாக அவர் செய்த காரியம் அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது. தன்னுடைய கண்களை நம்பமுடியாமல் பார்த்தாள்.
தன்னுடைய ஆக்ஸிஜன் மாஸ்க்கைத் தானே கழட்டிவிட்டு, அவளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். பேச்சு லேசாகக் குழறிக் குழறி வந்தாலும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

“ இங்கிருந்து கிளம்பிப் போயிடு. உன்னோட உசுருக்கு ஆபத்து” என்றார்.

“ என்ன ஆபத்து? யார் கிட்டேந்து ஆபத்து? ஒண்ணுமே புரியலை” என்றாள் மாதுரி.

நிஜமாகவே அவர் பேசியதைக் கேட்டுக் குழம்பிப் போய் நின்றாள் அவள்.

“ இங்கே பாரு. அதிக நேரமில்லை என்னிடம். அவங்க திரும்பி வரதுக்குள்ள நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடறேன். என்னால அதிகம் பேசமுடியாது. மூச்சு வாங்குது. நீ யாருன்னு என்னால அனுமானிக்க முடியுது. உன்னோட முகச்சாயல் உன்னைக் காட்டிக் கொடுத்துடுச்சு. நீ என்ன நோக்கத்தோட இங்கே வந்திருக்கேன்னு எனக்குத் தெரியாது. உசுரோட இருக்கணும்னா யாருக்கும் தெரியாமல் கிளம்பிப் போயிடு” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் பொருத்திக் கொண்டார்.

அதற்குள் கதவருகே பேச்சுச் சத்தம் கேட்க, மாதுரி சட்டென்று அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

மூன்று பேரும் உள்ளே நுழைந்தார்கள். மந்திராவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. துகிலனோ விடாமல் அத்தையுடன் பேசிக்கொண்டே வந்தான்.

“ மாதுரி, அவர் சரியாச் சாப்பிட்டாரா? உன் கையாலக் கொடுத்ததுன்னால நிச்சயமா சரியாகத்தான் சாப்பிட்டிருப்பார்? கேட்க வேண்டிய அவசியமே இல்லை. போய் நீயும் சாப்பிட்டுட்டு வாம்மா ” என்று ராஜேஸ்வரி சொல்ல, மாதுரியும் பதில் பேசாமல் கிளம்பிப் போனாள்.

துகிலன் மட்டும் அவளுடைய முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்துவிட்டான். பசியால் இருக்கும் என்று தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான். அவளுடைய மனதில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களைப் பற்றி அவனால் யூகிக்கவே முடியாது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Top Bottom