• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 14

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
174
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 14


இருவரும் அப்படியே அணைத்தபடி சிறிதுநேரம் அந்த இனிமையை முழுமையாக அனுபவித்துக் கொண்டு மெய்மறந்து நின்றார்கள்.

“ இந்த மலை, இந்த குளுகுளு காத்து, காட்டுச் செடிகளின் மணம், வண்டுகளின் ரீங்காரம் எல்லாமாச் சேந்து மனசை என்னவோ செய்யுதுடி. ரொம்ப நேரம் இங்கே நின்னா என்னோட பொறுமை என்னை விட்டுப் போயிடும்” என்று அவளுடைய காதுகளில் கிசுகிசுத்தான்.

“ என்னை மறந்துட மாட்டீங்களே துகிலன்? எந்த சந்தர்ப்பத்திலும் என்னைக் கைவிட மாட்டீங்களே? ” என்று பரிதாபமாகக் கேட்டாள் மாதுரி. அந்த சமயத்தில் மாதுரி என்கிற பெண் புலி, மருண்ட பார்வை கொண்ட மானாக மாறியிருந்தது.

“ என்ன கேள்வி இது மாதுரி? அம்மா, அப்பா கிட்ட ஏற்கனவே உன்னைப் பத்திப் பேசிட்டேன். அம்மாவுக்கு பயங்கர சந்தோஷம் தெரியுமா? எங்க வீட்டு விசுவாமித்திரனை மயக்கின மேனகையை எப்போ எங்க கண்களில் காமிக்கப் போறேன்னு அனத்திட்டே இருக்காங்க” என்றான்.

“ ஆமாம், எப்போ உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போறீங்க? ”

“ எப்ப வேணாலும் போகலாம். நாளைக்கே கூடப் போகலாம்” என்று சொன்னான். அங்கிருந்து கிளம்பி சமணப்படுகையை வெளியே இருந்து பார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். இருட்டாக இருந்ததால் அங்கு அதிக நேரம் செலவழிக்காமல் கீழே இறங்கத் தொடங்கினார்கள். நேரே தேனிக்குச் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மாதுரியின் மொபைலில் அழைப்பு வந்து வந்து துண்டிக்கப்பட்டது.

அப்போது அவர்களுடைய ஊர் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ அப்பாவோட நண்பர் தான் கூப்பிடறாரு. ஏதோ முக்கியமான விஷயம் போல இருக்கு. ஸிக்னல் வந்துட்டு வந்துட்டுப் போகுது. கனெக்ட் ஆக மாட்டேங்குது ” என்றாள் மாதுரி கவலையுடன்.

“ இரு, வண்டியை நிறுத்தறேன். ஓரமா அந்த மரத்தடியில் நின்னு கூப்பிட்டுப் பாரு” என்று சொல்லிவிட்டு ஓரமாக வண்டியை நிறுத்தினான்.

மாதுரி வேகமாக இறங்கிச் சென்று முயற்சி செய்ததில் வெற்றிகரமாக அவருடன் பேசமுடிந்தது. பேசும்போது அவளுடைய முகமாற்றத்தை கவனித்துக் கொண்டேயிருந்த துகிலனால் தகவலின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ என்ன ஆச்சு மாதுரி? ஸீரியஸா மாறிடுச்சே முகம்? என்ன நியூஸ் வந்தது? ” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“ அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கலையாம். கொலை செஞ்சு தற்கொலை மாதிரி ஜோடிச்சிருக்காங்களாம். இப்பத்தான் விசாரணையில் விஷயம் வெளிவந்திருக்கு” என்று சொன்னபோது அவளுடைய கண்கள் கலங்கிவிட்டன.

“ அச்சச்சோ” என்றான் துகிலன்.

“ அம்மாவின் லெட்டரோட வாசகங்களை நினைவு படுத்திப் பாத்தா, அவங்க உயிருக்கு ஆபத்து இருக்குன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அதுனால தான் அவசர அவசரமா அந்த லெட்டரை எழுதிருக்காங்க. பாவம் என்னெல்லாம் வேதனை அனுபவிச்சாங்களோ தெரியலை. பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை செஞ்சுக்கற அளவு கோழைகள் இல்லை அவங்கன்னு நெனைச்சது சரியா இருக்கு” என்று புலம்ப ஆரம்பித்தாள் மாதுரி.

“ வீட்டுக்குப் போய் ஒரு மாத்திரை போட்டுட்டுத் தூங்க முயற்சி பண்ணு மாதுரி. இதையே யோசிச்சுட்டு உடம்பைக் கெடுத்துக்காதே. நான் போய் காரை ஸ்டார்ட் பண்ணறேன். சீக்கிரமா வா ” என்று சொல்லிவிட்டு வண்டியில் சென்று அமர்ந்தான். வீலென்று மாதுரி கத்தும் குரல் கேட்டு மீண்டும் வெளியே பாய்ந்தான்.

மாதுரியின் நெஞ்சில் கத்தி பாய்ந்திருந்தது. இரத்தம் பெருகி அவளுடைய மேலாடையின் நிறம் சிவப்பாக மாற ஆரம்பித்தது. சுற்றி முற்றிப் பார்த்தான். யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. கத்தி எறிந்தவனைத் தேடிப் பிடிப்பதை விட மாதுரியைக் காப்பாற்றுவதே முக்கியம் என்று உணர்ந்து அவளைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் மாதுரி.

நல்லவேளையாக உடனடியாக மருத்துவமனை வந்துவிட்டதால் சரியான நேரத்தில் சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டுவிட்டது.

விஷயம் தெரிந்து பதறியடித்துக் கொண்டு வந்த கண்மணியின் பிளட் குரூப், மாதுரியின் குரூப்போடு மேட்ச் ஆனதால் கண்மணி இரத்ததானம் செய்தாள். அவுட்ஹவுஸில் இருந்த பெண்ணும் வந்து இரத்ததானம் செய்தாள்.

பத்து நாட்களுக்குப் பிறகு, ராஜேஸ்வரியின் அறையில் துகிலன் அவருடன் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான். மருத்துவமனையில் இருந்து அன்று காலை தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மாதுரியைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்திருந்தான்.

வாசலில் யாரோ தன்னைச் சந்திக்க வந்திருப்பதை அறிந்து கண்மணி வாசலுக்குச் செல்ல, அங்கே தன் சித்தியையும் தம்பியையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.

என்றும் இல்லாத திருநாளாக இன்று எதற்காகப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது அவளுக்கு.

“ எப்படிம்மா இருக்கே கண்மணி? ”என்று சித்தி கேட்டபோது எரிச்சலாக வந்தது கண்மணிக்கு. பதில் சொல்லாமல் தலையசைத்தாள் அவள்.

“ உனக்கு என்மேல ரொம்பக் கோபம் இருக்கும்னு எனக்குத் தெரியும் கண்மணி. பணத்தாசை பிடிச்ச பேய்னு கூட நீ என்னைப் பத்தி நினைச்சிருக்கலாம். ஆனால், அந்த சமயத்தில் உன்னை வேலைக்கு அனுப்பறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலை. உங்கப்பாவுக்கு எப்படியோ குடிப்பழக்கம் வந்து நிறையக் கடன் வாங்கிட்டாரு. அந்தக் கடன்களைக் கொடுத்தவன், பணத்தைக் கேட்டு நெருக்கடி செஞ்சப்போ, அந்தக் கிழவனுக்கு உன்னை வித்துடறதா அதாவது கல்யாணம் செஞ்சு தரதா முடிவு பண்ணிருந்தாரு. அது தெரிஞ்சு தான் நான் உன்னை அவசரம் அவசரமா இந்த வேலையில் சேத்துவிட்டேன். நீ மாசாமாசம் அனுப்பின பணத்தை நான் தொடவேயில்லை. அப்படியே உன் பேரில் பேங்கில் போட்டு வச்சிருக்கேன். இந்தா பாஸ்புக்” என்று அவள் கையில் அதைக் கொடுக்க, கண்மணி அப்படியே உருகிப் போனாள்.

சித்தியைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“ அய்யோ சித்தி, உங்களைப் பத்தித் தப்பா நெனைச்சுட்டேனே? உங்க மனசுல என்மேல பாசமே இல்லைன்னு நெனைச்சேனே? என்னை மன்னிச்சுருங்க சித்தி. தங்கச்சி எப்படி இருக்கா? ”

“ அவளை என்னோட அண்ணன் வீட்டுக்கு அனுப்பிப் படிக்க வச்சுட்டிருக்கேன். இவனும் நல்லாப் படிக்கறான். படிச்சு முடிச்சு வேலைக்கு முயற்சி செய்வான். நீ தப்பித் தவறி வீட்டுப் பக்கம் வந்துராதே. உங்கப்பா சரியில்லை. சீக்கிரம் ஒரு நல்லவனாப் பாத்துக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு. உன் ஃப்ரண்ட் மாதுரி எங்கே? அந்தப் பொண்ணு தான் என்னோட ஃபோனில் பேசி ஒரு தடவையாவது உன்னை வந்து சந்திக்கச் சொல்லுச்சு. நல்ல பொண்ணும்மா” என்று சொல்ல, மாதுரி சொன்ன ஸர்ப்ரைஸ் இதுதானென்று கண்மணிக்குப் புரிந்தது.

“ அவ வேற இடத்தில் இருக்கா. இருங்க கூட்டிட்டுப் போறேன் ” என்று சொல்லிவிட்டு அவர்களுடன் துகிலன் வீட்டுக்குச் சென்றாள்.

ராஜேஸ்வரியின் அறையில் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான் துகிலன்.

“ மாதுரி எப்படி இருக்கா இப்போ? அவளைத் தாக்கினது யாருன்னு தெரிஞ்சுதா? இந்த ஊருல அவளுக்கு விரோதிகள் எப்படி இருக்க முடியும்? ” என்று கேட்டார் ராஜேஸ்வரி.

“ நான் சொல்லறேன் அதை” என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தார் அவுட்ஹவுஸில் வசித்த பெண். அவரைப் பார்த்து முகம் சுளித்தார் ராஜேஸ்வரி.

“ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கமாட்டேன்னு பிடிவாதமா அவுட்ஹவுஸில் இருந்த காதம்பரி தேவி, தன்னுடைய சபதத்தை மறந்து எப்படி உள்ளே வந்தங்க? ” என்று நக்கலாகக் கேட்டார்.

“ நீ செய்யற அக்கிரமத்துக்கு முடிவு கட்டத்தான் ராஜேஸ்வரி. அந்தப் பொண்ணு மேல கத்தி எறிஞ்சவனை போலீஸ் கைது பண்ணிட்டாங்க. போலீஸோட தடியடிக்கு பயந்து உண்மையைக் கக்கிட்டான். சீக்கிரம் போலீஸ் இங்கே வரப்போகுது. அதுக்குள்ள பேசவேண்டியதைப் பேசலாம்னு வந்தேன். மாதுரி யாருன்னு கண்டுபிடிச்சுட்டே இல்லையா? மாதவியோட மகளேதான் அவ. இந்தச் சொத்துக்கு ஒரே வாரிசு அவதான். இனிமேல் உன் ஆட்டம் குளோஸ்”

“ அவ மாதவியோட மகளா இருக்கலாம். ஆனால் என் கணவருக்கும் மாதவிக்கும் இருந்த உறவில் பிறந்தாள்னு எப்படிச் சொல்ல முடியும் உங்களால? ”

“ உன்னை மாதிரியே கேலமாத்தான் உன்னோட எண்ணங்களும் இருக்கும்னு தெரியும். துகிலன் ஏற்கனவே சேதுபதி
அண்ணாவை வச்சு பேடர்னிடி டெஸ்ட்டு( paternity test) எடுத்துட்டான். அண்ணாதான் மாதுரியோட பயலாஜிகல் ஃபாதர்னு நிரூபிச்சாச்சு” என்று எகத்தாளமாக காதம்பரி கூறத் திடுக்கிட்டாள் ராஜேஸ்வரி.

“இல்லை, இல்லை, நான் நம்பமாட்டேன். மாதவியும், அவளோட குழந்தையும் எப்பவோ இறந்துபோயிட்டாங்க” என்று கத்தினார் ராஜேஸ்வரி.

“ நீ கொல்லத்தான் ஆட்களை அனுப்பிச்சு அவங்க வீட்டுக்குத் தீ வச்சே. மாதவி , குழந்தையை நம்ம மாலினி கையில, அதாவது உன்னோட அண்ணியின் கையில் கொடுத்துட்டுத்தான் உயிரை விட்டா. இப்போ மாதுரி, தன் அம்மாவோட கொலை கேஸையும் ரீ ஓபன் பண்ண அப்ளை பண்ணிருக்கா. நீ இனிமேல் தப்பமுடியாது. நான் எதுக்காக இந்த வீட்டில் காலடி வச்சேன் தெரியுமா? என் சபதத்தில் ஜெயிச்சுட்டேன். இந்த வீட்டோட உண்மையான வாரிசைக் கண்டுபிடிச்சுட்டேன். நான் இனிமேல் இங்கே தான் இருப்பேன். நீ வேணால் வெளியே போயிக்கோ. இல்லை இல்லை, போலீஸ் வந்து மரியாதையோட அழைச்சுட்டுப் போயி விருந்து கொடுப்பாங்க. நான் இப்போ அண்ணனைக் கூட்டிக்கிட்டு துகிலன் வீட்டுக்குப் போறேன். அப்புறம் ஒருநாள் ராத்திரி யாரோ இங்கே வந்ததா மாதுரி சொன்னாளே? அது நான்தான். மாதுரியைப் பத்திச் சொல்ல வந்தேன். அதுக்குள்ள அவரே கண்டுபிடிச்சுட்டார். அப்புறம் இப்போ அண்ணாவால பேசமுடியும். நடக்க முடியும். வாங்கண்ணா” என்று அழைக்க, அவரும் எழுந்து நடந்துவந்து தங்கையின் அருகில் அமர்ந்தார்.

“ நாங்க கெளம்பறோம். நீ மட்டும் தனியா இங்கே என்ஜாய் பண்ணு. அதுவும் போலீஸ் வர வரைக்கும்” என்று சொல்லிவிட்டு அண்ணனை அழைத்துக் கொண்டு துகிலனின் வீட்டுக்குக் கிளம்பினார் காதம்பரி. மாதுரியைச் சந்திப்பதற்குத் தான்.

அங்கே துகிலனின் வீட்டில் தனது தோழியின் மகள் மீது பாசத்தைப் பொழிந்துகொண்டிருந்தார் துகிலனின் அம்மாவான மாலினி. கண்மணியின் சித்தி, மாதுரியைச் சந்தித்துப் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்று விட்டார்.

கண்மணியிடம் மாதுரியின் அம்மா மாதவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் மாலினி.

“ நான், காதம்பரி, மாதவி மூணு பேரும் மதுரையில் காலேஜில் ஒண்ணாப் படிச்சவங்க. ஹாஸ்டலில் ஒரே ரூமில் தங்கியிருந்ததால் ரொம்ப குளோஸா இருந்தோம். காதம்பரியைச் சந்திக்க வந்த சேதுபதிக்கு மாதவியின் அழகும், குணமும் பிடிச்சதுனால அவளை மனசார நேசிச்சார். மாதவிக்கு எந்த உறவும் இல்லைங்கறதுனால நானும், காதம்பரியும் எப்படியாவது அவங்களைச் சேத்து வைக்கணும்னு முடிவு பண்ணினோம். சேதுபதியின் வீட்டில் விஷயம் தெரிஞ்சு எதிர்ப்பு கிளம்பியது. சேதுபதி வீட்டை விட்டு வெளியேறி மாதவியை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டார். மதுரையில் வீடு பாத்துக் குடித்தனம் நடத்த ஆரப்பிச்சாங்க.
அப்பத்தான் இந்த வீட்டில எனக்குக் கல்யாணம் ஆச்சு. என்னோட நாத்தனார் தான் ராஜேஸ்வரி. சேதுபதிக்கு முறைப் பொண்ணு. அவர் மேல வெறித்தனமா ஆசை வச்சிருந்தா. அவளோட தூண்டுதல்னால சேதுபதியின் பெற்றோர், மதுரைக்கு ஆளனுப்பி சேதுபதியைக் கடத்தித் தங்களோட வீட்டுக்குக் கொண்டு வந்துட்டாங்க. மாதவி அப்போ நிறைமாத கர்ப்பிணி. வீட்டுக்குத் தீ வச்சுட்டாங்க. மாதவி எப்படியோ தப்பிச்சுட்டா. மருத்துவமனையில் அட்மிட் ஆகிக் குழந்தையும் பொறந்துச்சு. யாரையோ ஆளைப் பிடிச்சு, எனக்கும் காதம்பரிக்கும்
தகவல் அனுப்ப, நாங்க அங்கே போனோம். குழந்தையை எங்க கிட்ட ஒப்படைச்சுட்டு இறந்துபோனா.
அப்போ அங்கே அதே ஹாஸ்பிடலுக்குக் குழந்தை இல்லைன்னு ட்ரீட்மென்ட் எடுத்துக்க வந்த எங்க ஸீனியர் காஞ்சனாவைப் பாத்து அவங்க கிட்டக் குழந்தையைக் கொடுத்து உண்மைகளைச் சொல்லிட்டோம். தமிழ்நாடு பக்கம் வராதீங்கன்னு சொல்லி அனுப்பினோம். அவங்களும் குழந்தையோட உடனே கொல்கத்தா கிளம்பிப் போயிட்டாங்க. ஆனால் விதிவசமா மாதுரி தன்னோட வீட்டுக்கே வேலைக்கு வந்து சேந்தா” என்று சொல்லிமுடித்தார் மாலினி.

“ அப்பாடி, இவ்வளவு விஷயம் நடந்துருக்கா? கேக்கக் கேக்க ஆச்சர்யமா இருக்கு” என்று வியந்தாள் கண்மணி.

“ அப்போ துகிலனுக்கு எப்போ உண்மை தெரிஞ்சது? ” என்று கேட்டாள் மாதுரி.

“ உன்னைப் பாத்துப் பேசினதும் காதம்பரிக்குப் புரிஞ்சது. காதம்பரி தான் எங்க கிட்ட சொன்னா” என்றார் மாலினி.

“ மாதவி வயத்துல குழந்தையோட இறந்துட்டான்னு சொல்லி எப்படியோ கட்டாயப்படுத்தி ராஜேஸ்வரியைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பிறந்த வீட்டிலயே யாருக்கும் ராஜேஸ்வரியைப் பிடிக்காது யாருக்கும் ” என்று மாலினி சொன்னதும் உண்மையே.

மூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் துகிலன், மாதுரி திருமணம் விமரிசையாக நடந்தது.

அதில் கலந்து கொண்டு மணமகளின் தோழியாக வளைய வந்தது மந்திராவே தான். ராஜேஸ்வரியின் கதையைக் கேட்ட பின்னர் இன்னொரு ராஜேஸ்வரியாக மாறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மந்திரா.

ராஜேஸ்வரியின் அரக்கு மாளிகையைக் காவல் துறையினர் அடைவதற்கு முன்னால் தீவிபத்து எப்படியோ ஏற்பட்டு ராஜேஸ்வரி உயிரிழந்திருந்தார். அரக்கு மாளிகை கருநிறத்தைப் பூசிக் கொண்டு நின்றது.
காதம்பரி, தன் அண்ணனுடன் வேறு வீட்டிற்கு மாறிக்கொண்டார்.

சேதுபதியும் நன்றாக குணமாகி வருகிறார். மகளும், மருமகனும் சேர்ந்து கவனிக்கிறார்களே?

கண்மணி, இப்போது காதம்பரியின் வீட்டில் தங்கி கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் பட்டப்படிப்பு படித்துவருகிறாள்.

“ மாதுரி, உனக்கு என்ன வேணும்னு சொல்லு. உடனே நிறைவேத்தி வைக்கறேன்” என்று தனிமையில் மாதுரியைச் சந்தித்தவுடன் கேட்டான் துகிலன்.

“ உங்க ஊருல மலையில் ஏறினோமே ஒருநாள் சாயந்திரம்? அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போறீங்களா? “ என்று மாதுரி கேட்க, “ நாளைக்கே கிளம்பலாமே” என்றபடி அவளைக் காதலுடன் அணைத்தான் அவளுடைய கணவன். இனி அவர்கள் வாழ்வில் இனிமையே பொங்கட்டும்!

உயிர்க்கொடியில் பூத்தவள்
உறவுகளைச் சென்றடைந்தாள்!

நிறைவு.

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: உயிர்க்கொடியில் பூத்தவளே! 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
51
கதை நன்றாக இருக்கிறது ஆனால முடிவும், திருப்பங்களும் சட்றென்று முடிவுற்றது போல இருகு.
I feel more gap in-between sorry
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
174
கதை நன்றாக இருக்கிறது ஆனால முடிவும், திருப்பங்களும் சட்றென்று முடிவுற்றது போல இருகு.
I feel more gap in-between sorry
நன்றி🙏💕. மாத நாவலுக்காக எழுதியது. ஆகையால் சிறியதாக முடிக்க வேண்டிய கட்டாயம்.
 
Top Bottom