• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 9

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
இழைத்த கவிதை நீ! 9


ருக்மிணி பன்னிரெண்டு வருடங்களை நெருங்கும் அவளது திருமண வாழ்க்கையில் இதுவரை அதிகம் கோபப்பட்டு அலட்சியப்படுத்திய கேள்வி

“ஆர் யூ ப்ளானிங்?”

ஆரம்ப நாட்களில் ‘நாட் யெட்’

‘அதுக்குள்ளயா?”

“என்ன அவசரம்?”

என சிறு புன்னகையுடன் கடந்தவள், இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் அதே கேள்வியும் அதைத் தொடர்ந்த சிறு வற்புறுத்தலோடு கூடிய ஆலோசனைகளும், கை வைத்தியங்களும், விரதங்களும் வேண்டுதல்களும், சைனீஸ் காலண்டர் முதல் சினைமுட்டை உருவாகும் நாள் வரை உறவுகொள்ள சிறப்பான நேரத்தையும் லாட்ஜில் ரூம் போடாமலே இலவசமாக அள்ளி வீசத் தொடங்கவும் ஆத்திரமடைந்தாள்.

ஒருவேளை அவளுக்குக் குழந்தைக்கான ஆசையும் ஏக்கமும் இருந்திருந்தால், அவற்றைக் கேளாததுபோல் கேட்டு, அதில் ஒரு சிலவற்றை இரண்டாம் பேருக்குத் தெரியாமல் முயற்சி செய்து கூடப் பார்த்திருக்கலாம்.

ருக்மிணியின் மனநிலையில், மற்றவர்களின் பேச்சு தேவையில்லாத தலையீடாகத் தோன்றியதில் வியப்பில்லை.

“ நமக்குக் குழந்தை வேணுமா, வேண்டாமான்னு நாமதானே முடிவு செய்யணும் சௌ?”

“குழந்தை பொறக்க ஐடியா குடுன்னு நான் உங்கிட்ட வந்து கேட்டா சொல்லணும்…”

“கொஞ்சம் விட்டா எப்டி பண்ணலா…”

“மினி…”

“ஸாரி சௌ. நம்ம ஊர் அளவுக்கு இல்லாத போனாலும் இங்கேயும் இதே புராணமான்னு இருக்கு”

“என்ன, இங்க பேச்சும் பாஷையும் ரொம்ப டீஸன்ட்டா, கரிசனமா இருக்கறாப் போல இருக்கு, ஆனா விஷயம் ஒண்ணுதான்”

“பத்து ஏலக்காயை கல்கண்டோட சேர்த்து பொடி பண்ணி, அரை டம்ளர் பச்சை பால்ல கலந்து காலம்பற வெறும் வயத்துல குடிச்சா பேபி கன்ஃபார்ம்தானாம். இது ஷைலஜா ரெட்டியோட சொந்த அனுபவமாம்”

“மிஸஸ் சௌஹான் இல்ல, அவ சொல்றா, பீரியட்ஸ் வந்த நாலாவது நாள்ள இருந்து தொடர்ந்து அஞ்சு நாளைக்கு பாஸ்மதி அரிசில சாதம் வடிச்ச கஞ்சில எலுமிச்சம்பழத்தைப் புழிஞ்சு வெறும் வயத்துல குடிச்சா, குழந்தை வரதுக்கு அவ கேரண்டியாம்”

“பிரதோஷ விரதம், சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், சதுர்த்தி விரதம்னு காலண்டர்ல எல்லா நாளும் விரதம், அதுவும் நான்தான் இருக்கணுமாம். ராத்திரி அதுக்கும் விரதமாம். இல்ல, தெரியாமதான் கேக்கறேன், அப்றம் எப்டி சௌ?”

தீவிரமாகக் கேட்டவளைப் பார்த்த சௌமித்ரன் உரக்கச் சிரித்தான்.

“நீ இருக்கியே, சான்ஸே இல்லடீ முனீம்மா”

“ஆளாளுக்கு எனக்கு அட்வைஸ் விடறது, உனக்கு சிரிப்பா இருக்கா சௌ?”

“முனீஸ், ஃப்ரீயா விடுடா”

“ஏன் ஃப்ரீயா விடணும், உன்னை யாராவது கேட்டா தெரியும். நம்ம ஊர் ஆட்களை விடு. அந்த எலினேர் இல்ல, அவ கேக்கறா ‘உனக்கும் மித்ரனுக்கும் நடுவுல எல்லாம் சரியாதானே இருக்குன்னு. நமக்குள்ள எப்படா சண்டை வரும்னு கண் கொத்திப் பாம்பா காத்துண்டு இருக்கா போல”

“மினி டார்லிங், அதனால அவளுக்கென்ன லாபம்?”

“என் வாயைக் கிளறாத சௌ. நான் உனக்கு வேண்டாம்னு எத்தனை தரம் அவ உங்கிட்ட சொன்னாள்னு உனக்குத் தெரியாதா? “

ஏதேதோ அழுத்தத்தில் ஆவேசமும் கலக்கமுமாக நின்றிருந்தவளைத் தன்னிடம் இழுத்து இறுக அணைத்தவன் “என் மினி குட்டிக்கு என்னடா குழப்பம், அவ சொன்னா நான் கேட்ருவேனா, ம்?”

“இப்ப கூட அவ உன்னோட கம்பெனிக்கு அப்ளை பண்ணி இருக்கறதா சொன்னா, நிஜமாவா சௌ?”

“எனக்குத் தெரியாதுடீ. பண்ணினா பண்ணிட்டுப் போறா, ஸோ வாட்?”

“...”

“தசரா, தீபாவளி, பாட்டுக் கச்சேரி, தேங்க்ஸ் கிவிங், ஆஃபீஸ் அவுட்டிங்னு வரிசையா கெட் டு கெதர் இருந்ததுல யார் யார் பேச்சையோ கேட்டு செமத்தியா குழம்பி கிடக்கடீ”

“...”

“தப்பா முடிவு செஞ்சுட்டோம், இப்ப குழந்தை வேணும்னு தோண்றதாடா?”

“ம்ஹும்”

“அப்புறம் என்ன?”

“...”

“முனீம்…மா”

“சௌமி…. ஸாரி”

“ஒரு ஸாரிய ஒழுங்கா சொல்லத் தெரியல… கமான், ஸே ஸாரி ப்ராப்பர்லி”

ஒற்றை மன்னிப்புக்கு ஊர்ப்பட்ட மூச்சு வாங்கியவளைப் பார்த்து “...ப்பா… ஹை வோல்டேஜ் ஸாரி” என்று சிரித்தான்.

உடற்கட்டு உருமாறி, கூச்சம் விட்டு, கணவனிடம் தன் அசௌகரியத்தை இயல்பாக வெளிப்படுத்தும் ஸ்வாதீனத்தைத் தரக்கூடிய குழந்தையை மறுத்து,
காலை எழுந்தவுடன் ஓட்டம், பிறகு சமையல், வேலை, படிப்பு, விளையாட்டு, இசை என,பாரதி சொன்னது அனைத்தையும் அவனுடன் செய்யப் பழக்கப்படுத்திக் கொண்டவள், அந்தப் பாடல் பாப்பாக்களுக்கானது என்பதை முற்றிலுமாக மறந்தாள்.

நிதானமாக நாளை துவக்குவது, உடற்பயிற்சி, சமையல், வீட்டு வேலைகள், நண்பர்களுடன் சந்திப்பு, அவரவர் நட்புகளில், வேலைகளில் தலையிடாது இருப்பது, இணையைக் குறை கூறாது அனுசரிப்பது என எப்பொழுதும் மகிழ்ச்சியை மட்டுமே பிரதிபலிக்கும் விளம்பரத் தம்பதிகளைப் போல் இருக்க வேண்டுமென்ற முனைப்பு இருவரிடமுமே இருந்தது.

வயிற்றிலும் வாழ்விலும் பிள்ளையை சுமக்கும் பொறுப்போ, பொறுமையோ இல்லாது, இரட்டைச் சம்பளம், எதிர்கால சேமிப்பு, நினைத்த பொருளை நினைத்த நேரத்தில் வாங்குவது, மாதம் ஒரு முறை நீண்ட தூர கார் பயணம், வருடமிரு முறை உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களில் விடுமுறை என வாழ்க்கையை நன்றாகவே அனுபவித்தனர்.

இளமையும் அழகும், மோகமும் கூடலும் தாண்டி, இணையின் உடல், மன சுணக்கத்தை தனதாக உணர்வதும், வலிக்கு மருந்தாவதும், பசிக்கு உணவாவதும், அவன்/ள் முன் கூச்சமின்றி அபான வாயு பிரிக்கும் சுதந்திரமும்தான் நிஜவாழ்வில் நெருக்கமான தம்பதிகளுக்கான ‘couple goal’ என்பதை ருக்மிணியும் சௌமித்ரனும் தங்கள் நாற்பத்தி எட்டு நாள் கருவை அழித்துதான் அறிந்து கொண்டனர்.

அந்த நிகழ்வினால் அடுத்தவர் மீதான அன்பும் அக்கறையும் அதிகரித்தபோதிலும், தங்கள் மனதில் ஏற்பட்ட (ஏ)மாற்றத்தை, இழப்பை, ஏக்கத்தை அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ இருவருமே முனையவும் இல்லை, உணரவும் இல்லை.

தேன்நிலவு காலத்தை நீட்டிக்க, நீட்டிக்க தங்கள் இளமையும் நெருக்கமும் அதிகரிப்பதாக உணர்ந்தவர்களால் தங்களை சூழ்ந்த வெற்றிடத்தை இனம் காண இயலவில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும், இயற்கையாகவோ, வலிந்தோ குறிப்பிட்ட இடைவெளியில் நிகழும் மாற்றங்களே நம் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்பதையும் இருவருமே உணரவில்லை. எண்ணுவம் என்பது இழுக்கென இருந்தனர்.

அந்த மாற்றம் சிகை அலங்காரமாக, சின்னக் குழந்தையாக, அலுவலகமாக, புதிதாகக் குடிவந்த அடுத்த வீட்டுக்காரராக, இத்தனை ஏன், நெருங்கிய உறவினரின் இழப்பாகக் கூட இருக்கலாம்.


தன் தந்தையின் இழப்பும் அதைத் தொடர்ந்த கருக் கலைப்பும் தன்னிடம் விளைவித்த மன மாற்றங்களை, கவனச் சிதறல்களை சௌமித்ரனும் உணரவில்லை, ருக்மிணியும் உணரவில்லை.

மாறாக, சௌமித்ரன் தன் கவனத்தை ஆர்க்கிட் வளர்ப்பு கோர்ஸ், பியானோ கிளாஸ், தீவிர ஸ்குவாஷ் பயிற்சி என மடை மாற்றிக்கொள்ள, தேன் நிறத்தில் ஹவனீஸ் (Havanese) நாய் ஒன்றை வாங்கிய ருக்மிணி அதைப் பாதுகாக்கும் பொறுமை இல்லாததோடு, அது தனக்கும் கணவனுக்கும் இடையே படுத்து, அவன் மடிமீது ஏறி விளையாடுவது பிடிக்காமல் மூன்றே வாரங்களில் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டாள்.

“ஏன்டா மினி?”

என்றவனுக்கு பதில் சொல்லாது, அடுத்த நான்கைந்து நாள்களுக்கு 24×7 சௌமித்ரனை ஒட்டிக்கொண்டே திரிந்தாள்.

இந்தியா வந்த பிறகு முதலில் லவ்பேர்ட்ஸ், பின் மகாவ் எனப்படும் பஞ்சவர்ணக் கிளியை வளர்த்தாள். சமீபமாக பறவை, நாயை விட பூனையைப் பராமரிப்பது சுலபம் என்பதால் ஜிஞ்சருடன் வாசம்.

“இப்படி நாய், பூனைன்னு பாடு படறத்துக்கு எட்டு புள்ளையைப் பெத்து வளர்த்துடலாம்” என மைதிலியும்,

“டாக்டரைப் போய் பார்த்து, ஒரு குழந்தைக்கு வழி பார்க்கறதை விட்டுட்டு தெனாலிராமன் மாதிரி பூனையை வளர்த்துண்டு…” என ஜெயந்தியும் நேராகவே சொல்லி விட்டனர்.

ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மைதிலி, ஜெயந்தி இருவருமே படித்த, வெளிநாட்டில் வாழும் மகன்/ மகளின் வாழ்க்கை முறை, அவர்களது சௌகரியம் கருதி கல்யாணமான மூன்று வருடங்கள் வரை குழந்தை குறித்து எதுவும் கேட்காமல் நாகரிகம் காத்தனர்.

அதிலும் மைதிலி மற்ற விஷயங்களில் முட்டிக்கொண்டாலும், இது குறித்து அதிகம் வாயே திறக்கவில்லை.

ருக்மிணிக்கு முப்பத்தைந்து வயதும் கல்யாணமாகி பத்து வருடங்களும் கடந்த பிறகுதான் அடிக்கடி பேசத் தொடங்கினர்.

**********************

ருக்மிணி, சௌமித்ரன் இருவரது மொபைலும் ஏக காலத்தில் ஒலிக்க, மனமின்றிப் பிரிந்தவர்கள், அடுத்த நாற்பதாவது நிமிடம் மருத்துவமனையில் இருந்தனர்.

ருக்மிணியின் தாய்க்கு தீவிர மூச்சுத் திணறல் என ஐசியூவில் அனுமதித்திருந்தனர்.
ஜெயந்திக்கு முன்பே ஆஸ்த்தமா எனப்படும் மூச்சுத்திணறல் நோய் இருக்க, இப்போது சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் உயர்ந்ததில் சிஓபிடி எனும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயாக (COPD - Chronic Obstructive Pulmonary Disease) தீவிரமடைந்து இருந்தது.

இந்துவும் அவள் கணவனும் பதட்டமாக நின்றிருந்தனர். சிறிது நேரத்திலேயே சௌமித்ரனின் அம்மா மைதிலி, ரேகா, அவளது கணவன் குமார் மூவரும் வந்தனர். குமார் சொல்லிதான் அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.


ஆக்ஸிஜன் அளவு எழுபதுகளுக்கு இறங்கி இருக்க, பல்ஸ் ரேட் நூற்றி முப்பதுக்கு எகிறி இருந்தது. தீவிர சிகிச்சை நடக்க, கனத்த அமைதி.

தன் துயரைப் பகிர்ந்து கொள்ள வந்த தங்கையைக் கண்டதும் அழுது நடந்ததை விவரித்த இந்து, பிறகு “உன்னைப் பார்த்துட்டு வந்ததுல இருந்துதான் அம்மா அழுது புலம்பிண்டே இருந்ததுல மறுநாளே ஆஸ்த்துமா அட்டாக் வந்து ரொம்ப இம்சை பட்டா. அதில இருந்தே ஜுரம், பிரஷர், சுகர்னு ஒன்னு மாத்தி ஒன்னு படுத்திண்டேதான் இருந்தது” என்றவள், மாலையில் மாலா வரவும் “உன்னாலதான் அம்மாக்கு இப்படி ஆச்சு” என நேராகவே குற்றம் சொல்ல, அங்கே அதை மறுப்பவர் யாருமில்லை.

இந்துவின் கணவனும் சௌமித்ரனும் குமாருடன் டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தனர்.
குழந்தை குறித்தான தங்களது நிலைப்பாடு வேண்டுமானால் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால், அதை அவள் வெளிப்படுத்திய விதம் தவறு என்பதை உணர்ந்திருந்த ருக்மிணி தனித்து, தவித்துப் போனாள்.


ஒருவேளை அம்மா பிழைக்காவிட்டால் என்ற பயம் எழுந்ததில், குடும்பத்தாரிடம் இருந்து சற்று விலகிச் சென்று அங்கிருந்த கிரானைட் பெஞ்சில் அமர்ந்து கண்களை முடிக்கொண்டாள்.

“என்னாலா, அம்மாவுக்கு இப்படி ஆனதற்கு காரணம் நான்தானா?’ என்ற கேள்வியே மனதில் ஓட,
‘எப்படியாவது அம்மாவை பிழைக்க வைத்து விடு’ என்று கடவுளிடம் மனுப் போட்டவளுக்கு, இதைச் செய்கிறேன், அதைத் தருகிறேன் என டீல் போடத் தெரியவில்லை.

சொல்லப்போனால், மனதிலும் பேச்சின் இடையிலும் கடவுளே, ஆண்டவா, மை காட், அட ராமச்சந்திரா! என இயல்பாக அழைப்பதைத் தாண்டி, விளக்கேற்றுகையில், கோவிலில் கண் மூடி நின்று, ஒற்றை விரலால் ஸ்டைலாக கன்னத்தில் இல்லையில்லை முகவாயில் போட்டுக் கொள்வதைத் தவிர ருக்மிணி பெரிதாக எதற்கும் வேண்டிக் கொண்டதே இல்லை எனலாம்.

தான் விட்ட வார்த்தைகளும், ஒரு வாரமாக அம்மா தன்னிடம் பேச மறுத்ததும், இப்போது டாக்டர் கூறிய முப்பது மணிநேரக் கெடுவும், அம்மா கடைசிவரை தன்னுடன் பேசாமலே போய்விடுவாளோ என் பயமும் அலையாய் சுருட்டியதில், கலங்கிய ருக்மிணியிடம் யாரும் நெருங்கிப் பேசவோ, ஆறுதல் சொல்லவோ முயலவில்லை.

ஆண்கள் மூவரும் டாக்டரை பார்த்துவிட்டு, டெட்ரா ஜூஸ் பாக்கெட்டுகளுடன் வந்தனர்.

குமார் “பிரஷர் குறைந்து ஆக்ஸிஜன் லெவலும் பல்ஸ் ரேட்டும் சீராகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை” என மருத்துவர் கூறியதைத் தெரிவிக்க, மனைவியைத் தேடிய சௌமித்ரன் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஓய்ந்து போய் தனியே அமர்ந்திருந்தவளிடம் விரைந்தான்.

“மினி” என்று அவள் தோளைத் தொட,

“பயமா இருக்கு சௌ” என்ற மனைவியின் அழுகை சௌமித்ரனுக்குப் புதிது.

அவளை கோபம், ஆத்திரம், கலக்கம், குழப்பம் என உணர்ச்சி வசப்பட்டு பார்த்திருக்கிறான். ஊரை விட்டு செல்கையில், தந்தையின் இறப்பில் அழுதும் பார்த்திருக்கிறான். அதுவேறு, ஆனால் பயம் ஏன்?

“இட்ஸ் ஓகே டா, பீ ஸ்ட்ராங். அம்மாக்கு சரியாகிடும்”

“அம்மாக்கு என்னாலதான் பிரச்சனையா சௌ?”

நிதானித்த சௌமித்ரன் “யார் சொன்னது?”

“ம்ப்ச்… அம்மா என்னோட பேசாமலே…”

“ஓ பாய், கட் இட் அவுட் மினி”

“ஒரு வாரமா அம்மா என்னோட பேசவே தயாரா இல்லை சௌ…”

“கமான் மினி, ஷி வில் பீ ஆல்ரைட். அண்ட் பிலீவ் மீ, அம்மாக்கு வந்திருக்கற அட்டாக் உன்னால இல்லை, ஓகே?

“...”

“மினி, உன்னை ப்ளேம் பண்ணது யாரு?”

“யாருமில்லை சௌ”

“மித்ரா” என்ற அன்னையின் அழைப்பில் ருக்மிணியின் தோளை அழுத்தி “இரு, வரேன்” என்றவனோடு தானும் எழுந்து சென்றாள்.

ஐசியூ வாசலில் இத்தனை பேரும் எத்தனை நேரம் இருக்க முடியும்? டியூட்டி டாக்டர் வந்து கலைந்து போகச் சொன்னாள்.

இதற்குள் மணியும் இரவு எட்டாகி இருக்க, இந்துவின் பன்னிரெண்டு மற்றும் எட்டு வயது மகள்கள் இருவரும் பள்ளி விட்டு வந்து வீட்டில் தனியே இருந்தனர்.

மாலாவின் மூத்த மகன் இன்ஜினீயரிங் முதல் வருடம் என்பதால் ஹாஸ்டலில் இருக்க, ப்ளஸ் ஒன் படிக்கும் மகளுடன் வந்திருந்தனர்.

மாலாவின் கணவர் “இந்து, நீங்க ரெண்டு பேரும் போய் பசங்களை கவனிங்கோ, நானும் மாலாவும் ஹாஸ்பிடல்ல இருக்கோம்”

“உங்களுக்கு டின்னர்…” - இந்து.

குமார் “நான் கேன்டீன்ல சொல்றேன். இங்கேயே வரும்”

இந்து “அங்க போனா, என்னால நிம்மதியா இருக்க முடியாது. நான் இங்கேயே இருக்கேன்”

மைதிலி “போய்ட்டு மார்னிங் வந்துடப் போற, நாளைக்கு பசங்க ஸ்கூல் போக வேண்டாமா, அவங்களை அனுப்பிட்டு வந்துடு”

ருக்மிணி எதுவும் சொல்லாமல் நிற்க, அவளது சகோதரிகள், அவனது அம்மா என யாருமே அவளிடம் எதுவும் பேசவில்லை என்பதை உணர்ந்த சௌமித்ரன், நிலமையை சரி செய்ய எண்ணி

“நானும் மினியும் இங்க இருக்கோம். மார்னிங் நாங்க ஃப்ரீதான்…” எனவும்

மைதிலி “அதான் தெரியுமே, அதைச் சொல்லித்தானே இப்படி படுக்கப் போட்டது”

“அம்மா…”

“என்னடா அம்மா, நான் என்ன இல்லாததையா சொன்னேன்,
நான் படுத்துண்டாலும் இதைத்தானே சொல்லப்போற”

ரேகா “இப்ப ஏம்மா?”

தங்கையிடம் மனத்தாங்கல் இருப்பினும், எல்லோர் முன்பும் அவள் மாமியார் பேசியது வருத்தத்தை தர, மாலா “விடுங்கோ மாமி, காரணம் எதுவோ, அம்மாக்கு இப்படி வரணும்னு இருந்திருக்கு. அவ்வளவுதான். இந்து நீ கிளம்பு, குழந்தைகள் ஃபோன் பண்ணின்டே இருக்கா பாரு. ருக்கு, நீயும் போய்ட்டு காலம்பற வா”

இந்து தம்பதி புறப்பட, அதுவரை அமைதியாக இருந்த ருக்கு “ நான் சமைச்சு கொண்டு வரேன், “விது, சித்தி கூட வரயா, மாலா, நான் வித்யாவை என்கூட அழைச்…”

“வேண்டா வெறுப்பா உனக்கேம்மா குழந்தையோட பொறுப்பு, விது எங்களோடயே வரட்டும். அங்க என் பொண்களோட கம்பெனியாவது இருக்கும்”


இந்து கூறிய விதமும் வேகமும் சௌமித்ரனை அதிரச் செய்ய, ருக்மிணி அங்கு நிற்கவோ, யாரையும் ஏறிட்டுப் பார்க்கவோ விரும்பாது, மௌனமாக வாயிலை நோக்கி நகரத் தொடங்க, சௌமித்ரன் பின் தொடர்ந்தான். பின்னோடே மைதிலி, ரேகா, குமார் மூவரும் புறப்பட்டனர்.

மாலாவும் இந்துவின் கணவனும் “அறிவிருக்கா உனக்கு?” என இந்துவை சாடுவது காதில் விழுந்தது.


‘குழந்தை பெத்துக்க விருப்பமில்லை, வேண்டாம்னா, எனக்கு குழந்தைகளையே பிடிக்காதுன்னு அர்த்தமா? நான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது பொறந்த இதே அர்ஜூனையும் வித்யாவையும் எங்கக்கா குழந்தைன்னு பெருமையா இடுப்புல தூக்கிண்டு, எத்தனை நாள் ஊரைச் சுத்தி இருப்பேன்’

‘ருக்கு சித்தி மாதிரி படிக்கணும், ருக்கு சித்தி மாதிரி கணக்கு போடணும், இங்கிலீஷ் பேசணும், ருக்கு சித்தி மாதிரி ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிக்க, அடுத்தவாளோட அளவா பேச, சிரிக்க கத்துக்கணும்’ என தன்னை தன் எதிரேயே குழந்தைகளிடம் உதாரணம் காட்டிப் பேசியதும் இதே இந்துதான்.


தன் கைப்பிடியில் இருந்த ருக்மிணியின் கை உணர்ச்சி வேகத்தில் நடுங்குவதை சௌமித்ரனால் உணர முடிந்தது.

பின்னால் வந்த குமார் காரை எடுத்து வரச் சென்றான். ரேகா ருக்மிணியின் தோளில் தட்ட, மைதிலி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

சௌமித்ரன் “அம்மா, பேசினது மினியா இருந்தாலும், அந்த முடிவு எங்க ரெண்டு பேரோடதும்தான். அவ அம்மாக்கு இப்படி ஆனதுல எங்களுக்கு மட்டும் சந்தோஷமா, இல்ல வேண்டுதலா, அது அவளுக்கும்தானே அம்மா? ” என்றவன், மனைவியை இழுத்துக்கொண்டு விறுவிறுவென காரை நோக்கிச் சென்றான்.

*********************

ஜெயந்தி உடல் தேறி வீடு வர முழுதாக எட்டு நாட்களானது.
நான்காவது நாள், இனி அபாயமில்லை என டாக்டர் உறுதியாகச் சொல்லவும் மாலாவின் குடும்பம் திருச்சி சென்றது.

இந்துவிடம் முதல் நாளிருந்த பிடிவாதத்தையும் கோபத்தையும் பிள்ளைகளின் பள்ளி, படிப்பு, பராமரிப்பு குறைத்திருக்க, பெரும்பாலும் ருக்மிணிதான் அம்மாவுடன் மருத்துவமனையில் இருந்தாள். பல சமயங்களில் சௌமித்ரன்தான் சமைத்துக் கொண்டு வந்தான்.

எமலோகத்தைத் தொட்டு மீண்டிருந்த ஜெயந்தி மகளிடம் எப்போதும் போல்தான் பேசினார். ரேகாவும் மைதிலியும் அவ்வப்போது வந்து சென்றனர்.

மறுநாள் காலையில் டிஸ்சார்ஜ் என்ற நிலையில் “...ம்மா, என் கூட வரயா, ஆஃபீஸ்ல நான் ஒரு மாசம் பிரேக் கேட்டிருக்கேன்” என்றவளின் குரலில் தான் செய்த தவறை சரி செய்து விடும் தீவிரமும் இறைஞ்சலும் இருந்தது. இந்துவின் எதிர்ப்பை மீறி ருக்மிணியின் வீட்டிற்கு வர சம்மதித்தார் ஜெயந்தி.

காலையில் இந்துவும் அவள் கணவனும் வரும் முன்னரே ருக்மிணி மருத்துவமனையில் பில் தொகையைக் கேட்டு ஒரு லட்சத்தி எண்பதாயிரம் ரூபாயை செலுத்தி இருந்தாள். இந்து வந்து அதற்கும் சடைத்துக் கொள்ள, ருக்மிணி பதில் பேசவில்லை.

சற்றே மலை இறங்கி இருந்த மைதிலி, வீட்டுக்கு வந்தபின் ஜெயந்தியைப் பார்க்க வந்தவர், மருமகளிடம் பழையபடி வழக்கமான மாமியாரானார்.

ஜெந்தியை சில நாட்களுக்கேனும் கண்ணாடிப் பாத்திரம் போல் கையாள வேண்டும் எனக் கூறி இருந்தனர். வீட்டிலேயே வாடகைக்கு ஆக்ஸிஜன் மெஷினை வாங்கி வைத்திருந்தனர்.

ருக்மிணி மட்டுமின்றி, உணவு பரிமாறுவது, வெந்நீர், காஃபி, டீ , மருந்து தருவது முதல், குறிப்பிட்ட நேரம் வரை ஆக்ஸிஜன் மிஷினை ஓடவிடுவது வரை
சௌமித்ரனும் செய்தான்.

இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வந்து பார்த்த இந்துவிற்கு, எவ்வளவு உரிமை இருந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் கணவனைக் கேட்டு, அவன் முகம் பார்த்து செயல்படும் தனக்கும், தன் செயல்களைத் தானே தீர்மானிக்கும் தங்கைக்கும்,

மனைவியின் செயல்கள் அவனுக்குத் தெரியுமா, தெரியாதாவென்றே புரியாது, அது குறித்த சிந்தனையே இல்லாது, தன் தாய்க்கு வேண்டியதைக் கேட்டும் கேட்காமலும் அவனாகவே செய்யும் சௌமித்ரனுக்கும் தன் கணவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்து உணர்ந்தாள். எங்கோ கணக்கு இடித்தது.

*********************

ரேகா மகளின் பிறந்தநாள் ஷாப்பிங்கிற்கென குடும்பத்தோடு அங்காடி ஹெரிடேஜ் மாலுக்கு சென்றிருந்தாள். உடைகள், அவள் கேட்ட பெரிய சைஸ் யானை, கேரமல் பாப் கார்ன், டோ நட் என இஷ்டத்துக்கு மேய்ந்தனர்.

மகன் “டாடி, ஐஸ்க்ரீம்” எனவும், பார்லரை நோக்கி நடக்க, சட்டென நின்ற குமார், ரேகாவின் கையைப் பிடித்து நிறுத்தி “அங்க பாரு ரே”

குமார் காட்டிய திசையில் பார்த்த ரேகா, அங்கிருந்த இத்தாலியானோ உணவகத்தின் கண்ணாடிச் சுவற்றின் வழியே, முப்பது, முப்பத்திரெண்டு வயது மதிக்கத்தக்க, அழகான, அதி நாகரிகமான பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சௌமித்ரனைக் கண்டாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

இப்ப சிரிச்சு பேசிக்கிட்டு இருக்குறது பிரேர்ணா கூடவா? 🤔🤔
எவ்வளவு நாள் தான் நம்மளும் ஹீரோ, ஹீரோயினிக்கே பாட்டு போடுறது..😁😁.ஒரு சேஞ்சுக்கு இந்த பாட்டு..😁😁

 
Last edited:

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
😍😍😍

இப்ப சிரிச்சு பேசிக்கிட்டு இருக்குறது பிரேர்ணா கூடவா? 🤔🤔
எவ்வளவு நாள் தான் நம்மளும் ஹீரோ, ஹீரோயினிக்கே பாட்டு போடுறது..😁😁.ஒரு சேஞ்சுக்கு இந்த பாட்டு..😁😁

ரைட்டு😍
 
Top Bottom