• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 8

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
இழைத்த கவிதை நீ! 8


‘புவன சுந்தரா! நான் உன்னைக் கணவனாக மனதில் வரித்து விட்டேன். இருப்பினும், நற்குலத்தில் பிறந்து, சகல கலைகளையும் கற்ற, குணவதியான எனக்கு உனக்கு மனைவியாகும் அத்தனை தகுதிகளும் உண்டு, உன்னை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை’ என்று
சகல ஜீவராசிகளுக்கும் மித்ரனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தூதனுப்பி, வரவழைத்து, தன் திருமணத்தை நிறைவேற்றிக் கொண்டாள் புராண கால ருக்மிணி.

அதே தன்னம்பிக்கையும் நிமிர்வும் மிளிர்ந்த ருக்மிணியின் கைத்தலம் பற்றி, மங்கலநாண் அணிவித்து, அக்னிசாட்சியாக ஏழு அடி (சப்தபதி) நடந்து, அவளைத் தன் உற்ற சிநேகிதியாக ஏற்று, அவளோடு தன் சந்ததிகளைப் பெருக்கி(!), இல்லறத்தின் மாண்புகளை, பெரியோரை, இயற்கையைப் போற்றி, இருவரும் மரணபரியந்தம் பிரியாது, கருத்தொருமித்து இணைந்து வாழ்வோம் என வாக்களித்து சௌமித்ரன் ருக்மிணியின் வாழ்நாள் மித்ரனான்.

இருவருமே அசட்டு கேலிகளையும், துளைக்கும் பார்வைகளையும் பொருட்படுத்தாது, படு இயல்பாக திருமண நிகழ்வுகளில் ஈடுபட்டதே அவர்கள் இருவருக்குமான பரிச்சயத்தைப் பறைசாற்றியது.

திருமணத்தை அத்தனை எதிர்த்த ருக்மிணியின் தந்தை, தாலி முடிந்த மறுகணம் “பதினேழு வயசுல இன்ஜினீயரிங் படிக்க போனதுல இருந்து ருக்கு தனியாதான் இருக்கா. படிப்பு சம்பந்தமானதைத் தவிர, தனக்கு அவசியமானதைக் கூட உரிமையா கேக்க மாட்டா. நீங்கதான் பார்த்து…” என்று உடைந்து அழுதவரின் கையைப் பற்றி அழுத்தினான் சௌமித்ரன்.

ருக்மிணியின் குடும்பமே கண் கலங்க, கண்ணும் முகமும் ஜிவுஜிவுக்க அழுதவளிடம் குனிந்து “முனீஸ், என் கூட வரவா இத்தனை அழுகை, நீ வேணா உங்கப்பா கூடவே இரேன்” என, சுற்றி நின்ற கூட்டத்தைப் பயன்படுத்தி, மணமேடையிலேயே ருக்மிணி சௌமித்ரனின் காலை அழுத்தமாக மிதிக்க, புதுமெட்டி தன் தடத்தைப் பதித்ததில் முத்திரையும் கீறலும் பெற்றான் புது மாப்பிள்ளை.

மண்டபத்தைக் காலி செய்து ருக்மிணியின் வீட்டுக்கு வந்து விட்டனர். பெரும்பாலான சௌமித்ரனின் உறவுகள் மதியமே சென்றிருக்க, அவனது பெற்றோர், சகோதரியின் குடும்பம், அவனது மாமா, மாமி எல்லோரும் மணமக்களுடன் மறுநாள் பெங்களூருக்கு வேனில் செல்லவிருந்தனர்.


ருக்மிணியினுடைய பிறந்த வீடு அறுபதுகளில் கட்டப்பட்ட வசதியான வீடாக இருந்தாலும், மகள்கள், மாப்பிள்ளைகள், குழந்தைகள், இன்னும் சில நெருக்கமான உறவுகள், இப்போது புது சம்பந்திகள் என நிரம்பி வழிந்தது வீடு.

விருந்தினர்களுக்கு உணவு, படுக்கை என முன்னேற்பாடாகத் தயாராக இருந்தாலும், மணமக்களின் வசதி கருதி, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஹனிமூன் சூட் (suite) புக் செய்திருந்தனர்.

இரவு உணவு முடிந்து, வழக்கமான சம்பிரதாயங்களுக்குப் பின் மாலா மற்றும் ரேகா தம்பதியினர் இவர்களை ஹோட்டலில் கொண்டு போய் விடுவதாக இருந்தது.

ரேகா, மாலா, இந்து மூவரும் தத்தம் கணவர்களுடன் சேர்ந்து புது தம்பதியை இடை விடாது கேலி செய்தனர்.


மேல்நாட்டு வாசம், படிப்பு, வேலை, நாகரிகம் எல்லாம் ஒருபுறம் , அந்த இரவுக்கான எதிர்பார்ப்பு ஒருபுறம் என இருந்த சௌமித்ரனும் ருக்மிணியும் உடன் பிறந்தவர்களின் கேலியில் கூச்சமும் சங்கடமுமாக, ஆனால் அதை வெளிக்காட்டாது ஆளுக்கொரு பக்கம் நின்றிருந்தனர்.

அவர்களது நட்பூ நேசமாக மலர்ந்தது போன்ற இயல்புடன் இந்த நாளைக் கடக்க விரும்பியவர்கள், பெரியவர்கள் கொடுத்த பட்டுப்புடவை, வேஷ்டியையும் உடுத்த மறுத்து, ருக்மிணி சல்வாரிலும், சௌமித்ரன் முக்கால் பேண்ட், டீ ஷர்ட்டிலும் நிற்க, மாலா, இந்து, ரேகா என ஆளாளுக்கு விசாரிக்க, தமக்கையிடம்

“இந்த ஃபார்மாலிடியெல்லாம் வேண்டாமே ரேக்ஸ்” - சௌமித்ரன்.

மாலாவிடம் “பட்டுப்புடவை, பால்சொம்புனு படுத்தாதடீ மாலு, எம்பாரஸிங்கா இருக்கு” - ருக்மிணி.

“ஃப்ரெண்டு, லவ்வுங்கற பேர்ல சேர்ந்து ஊரைச் சுத்தும்போது வராத வெக்க வெல்லமும் சங்கட சக்கரையும் இப்பத்தான் வரதாமா? பார்த்துடா மித்ரா, உங்க எம்பாரஸ்மெண்ட்ல எறும்பு மொய்க்கப் போறது” என்று மைதிலி கழுத்தை நொடிக்க,

சௌமித்ரனின் தந்தைதான்
“ ஃப்ரீயா விடு மைதிலி, ரெண்டு பேரும் சௌகரியமா, சந்தோஷமா இருந்தா சரிதான். நல்ல நேரம் முடியற முன்ன அனுப்பி வைப்போம்” என்று மகனைக் காப்பாற்றினார்.

மகளின் பிடிவாதம் குறித்து வெகுவாக சங்கடப்பட்ட ஜெயந்தியிடம்,

“அட, நீங்க வேற…, இந்த கூச்ச, நாச்ச பவிசெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நாமும் பார்க்கத்தானே போறோம்” என்று நடக்கப் போவதை முன்பே கணித்த மைதிலியின் வாய்க்கு சர்க்கரை என்ன கல்கண்டே போடலாம்!

**********************

கண்ணை உறுத்தாத வெளிச்சம், காதில் இரையாத இசை, கவனம் சிதறாத அலங்காரத்தோடு இருந்த அறை தம்பதியரை உள்வாங்கிக் கொண்டது.

அமெரிக்க வாசமும், அங்கு கற்ற நாகரிகமும் அந்த நேரத்து ஆதி உணர்வை, மனதின் படபடப்பை, வயிற்றின் பதைபதைப்பை, உடலின் பரபரப்பை அடக்கவோ வெளிக்காட்டாது இருக்கவோ உதவாது போக, இயல்பு போல் காட்டிக் கொள்ள வெகுவாக முயன்று, முடியாமல் முகம் சிவந்து தடுமாறிய ருக்மிணியை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தான் சௌமித்ரன்.

அவன் பார்வை தாளாது, ருக்மிணி “என்…ன?”

“என்ன?”

“என்ன?”

இருவரிடையே இருந்த இடைவெளியைக் குறைத்தவனை சற்றே கலவரத்துடன் பார்த்தவளைத் தொடாது, குனிந்து சட்டென அவள் இதழில் பதிய, சற்றே தள்ளாடி, தாவுக்கு அவனையே பற்றிக் கொண்டவளைத் தன்னுடன் இறுக்கினான்.

அவன் விலகிய கணம் “சௌ, ப்ளீஸ்…”

அடுத்த இடைவெளியில் “நாம கொஞ்சம் பேச…”

“ஏய், ஒன்னரை வருஷமா கூடவே சுத்தறேன். லவ்வை சொல்லி எட்டு மாசமாச்சு. ஹேவ் எ ஹார்ட் இப்ப நோ டாக்கிங், ஒன்லி லவ்விங்”

“சௌ”

“என்னடீ,

“சேஃபா….”

“ம்….”

“சௌ…” என்றவளை மேலே பேச விடாது, சௌமித்ரன் பேசிய பேச்சில் ருக்மிணியின் காது ரெண்டும் கூசித்தான் போனது.

தன் வேட்கையும் வேகமும் அவளைக் காயப்படுத்தா வண்ணம், அவளது விருப்பமும் வலியும் வழியும் கேட்டவனின் வாஞ்சையிலும் வாத்ஸல்யத்திலும் ருக்மிணி கரைந்து, கலந்து, கனிந்தாள்.

அடர்ந்த திரைச்சீலையும், குளிர்சாதனமும் அறையை இரவு பகல் தெரியாது காத்ததில், வெளியே பளீரென அடித்த வெயிலை உணராத, ஆழ்ந்த, நிம்மதியான உறக்கம்.

முதலில் கண் விழித்து மொபைலை எடுத்து மணி பார்த்த சௌமித்ரன் பத்தேகால் எனக் கண்டு அதிர்ந்தவன், முப்பதுக்கும் மேற்பட்ட மிஸ்ட் காலில் நோகாது தலையில் அடித்துக் கொண்டான்.

ருக்மிணியை உலுக்க, “ஹேய் சௌ, நீ எப்டி என் ரூம்ல?” என்றபடி எழுந்தவள், கண்களை மூடி, சரக்கென மீண்டும் போர்வைக்குள் புகுந்து கொண்டாள்.

“ம்…. விஸா வாங்கிண்டு வந்திருக்கேன். ஆளைப்பாரு. எழுந்திருடீ, நேரமாச்சு” என்று பதட்டத்துடன் அங்குமிங்கும் நடந்தவனிடம் “சௌ, ஏன் டென்ஷன், லேட் ஆனதென்னவோ ஆயாச்சு. ரிலாக்ஸ்” என குளியலறைக்குள் சென்றாள்.

கொண்டு வந்த பையைப் பார்க்க, அதில் இருந்தது முதலிரவுக்கு உடுத்த வேண்டிய பட்டாடைகள்!

கண்ணாடி முன் நின்றவள், கணவனின் பார்வையைத் தவிர்த்தாள். அவளுக்கு முன்னே வந்து நின்றவன் புருவம் உயர்த்திச் சிரிக்க, சிவந்தாள்.

“என்னடீ முனீம்மா, புதுசா வெக்கமெல்லாம் படற?”

“உன்னாலதான். குழந்தை வேணாம்னு சொல்லிட்டு…”

“நானென்லாம் கீதையை ஃபாலோ பண்றவனாக்கும். உன் பேருதான் ருக்மிணி…”

“ஏன், என் பேருக்கென்ன, நீங்க என்னவோ மகாபாரதப் போருக்கு போறா மாதிரி…”

“கீதைல பகவான் கடமையை செய், பலனை எதிர் பார்க்காதேன்னு சொன்னாரா இல்லையா?”

“ம்…”

“அதான். பலனை எதிர்பார்க்காம நான் என் கடமையை செஞ்சேன், அர்த்தமாயிந்தா?”

“Gosh!”

“ பை தி வே, மஹாபாரதம் லெவலுக்கு இல்லைன்னாலும் இதுவுமே போர்தான். நீ டஃப் பைட் குடுக்கல?”

“சௌ…” என்றவள் லஜ்ஜை தாளாது, அதற்குக் காரணமானவனிடமே அடைந்து கொண்டாள்.

“தயவு செய்து எதுவும் பேசாத சௌ, அப்புறம் நான் வெளிலயே வர மாட்டேன்”

“நல்ல ஆஃபரா இருக்கே”

ஒருவழியாக, இருவரும் கிளம்பி, ஹோட்டல் டாக்ஸியில் வீடு வந்தபோது மணி பதினொன்றரை!

நேற்றிரவு கட்ட மறுத்த புடவை, வேஷ்டியுடன் பட்டப் பகலில் வந்து நின்றவர்களைப் பார்த்த தாய்மார்கள் முகத்தில் முள்ளைக் கட்டிக் கொள்ள, தந்தையர்கள் ரியாக்ஷன் தரத் தெரியாது முழித்தனர்.

தமக்கைமார்கள் வெட்கச் சிரிப்பு சிரிக்க, அவர்களின் கணவர்களோ அசட்டு சிரிப்பு, அவுட்டு சிரிப்பு, கேலி, நக்கல், நையாண்டி, பரிகாசம் என சிரிப்பில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையிலும் உருண்டு புரண்டு சிரித்தனர்.

மைதிலி ”என்னடா மித்ரா, இத்தனை நேரம், எல்லாரும் என்ன நினைப்…?”

“ஸாரி மா” என சௌமித்ரன் சரண்டராக. ஹோம் பிட்ச்சில் இருந்த ருக்மிணி தடுத்தாடினாள்.

ஜெயந்தி மகளிடம் தனியாக “முதல் நாளே இத்தனை நேரம் வரைக்கும் அப்டி என்னடீ தூக்கம், ஏழு மணில இருந்தே உங்க மாமியார் மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பிச்சாச்சு”

ருக்மிணி “அதுக்கு பையனுக்கு கல்யாணம் பண்ணாம இருந்திருக்கணும்” என்று முணுமுணுத்தாள்.

“ருக்கு”

“ம்ப்ச்… ஏதோ தூங்கிட்டோம். விடேம்மா. எங்களுக்கும் கில்ட்டியாதான் இருக்கு. Don’t make it obvious” என சற்றே குரலை உயர்த்தி, அழுத்தமாக ருக்மிணி சொன்னதை அனைவரும் கேட்டிருந்தனர். கேட்க வேண்டுமென்றுதானே
சொன்னதே?

*******************

“மித்ரா, அதான் இன்னும் பதினஞ்சு நாளுக்கு மேல லீவ் இருக்கே, அப்புறம் ஏன் இப்பவே போகணும்னு சொல்ற?”

“...ம்மா, கொஞ்சம் பெருசா வீடு பார்க்கணும். ரெண்டு பேரோட சாமான்களையும் வேண்டாததை தூக்கிப் போட்டு, ஏதாவது தேவைன்னா வாங்கணும். பேங்க் அக்கவுன்ட், விஸால மேரேஜ் ஆனதை அப்டேட் பண்ணனும். ஃப்ரெண்ட்ஸ், கொலீக்ஸுக்கு பார்ட்டி தரணும்…”

“என்னவோ சொல்ற, இப்பத்தான் வந்த மாதிரி இருக்கு…” என்ற மைதிலிக்குத் தொண்டை அடைக்க, சௌமித்ரன் தாயை அணைத்துக் கொள்ள, இருவரும் சில நிமிடங்கள் உணர்ச்சிப் பிழம்பாக உருகினர்.

கல்யாணத்தில் கண்கலங்கிய பின் அடுத்தடுத்த நிகழ்வுகளை இயல்பாகக் கடந்த ருக்மிணிக்கு அம்மா- பிள்ளையின் அழுகாச்சி காவியம் படு சுவாரஸ்யமாக இருந்தது.

‘கல்யாணமாகி அம்மா, அப்பாவை விட்டு வந்திருக்கற நானே சும்மா இருக்கேன், இவன் என்னடான்னா சென்டிமென்ட்டை புழியறானே!’

சௌமித்ரன் “அப்ஸெட் ஆகாதம்மா, வந்த நேரத்துல சட்டுனு கல்யாணம் முடிஞ்சதால, அங்க எந்த ஏற்பாடும் செய்யல”

சௌமித்ரனின் தந்தை “மித்ரன் சொல்றதும் சரிதானே மைதிலி, அவன் இந்தியா வந்தும் ஒரு மாசமாச்சே”

ரேகா “ஏம்மா, எனக்கும் நீதான் அம்மா, ஞாபகம் இருக்கா?”

சௌமித்ரன் “அம்மா, நான் வீடெல்லாம் பார்த்து செட் பண்ணினதும் நீயும் அப்பாவும் யுஎஸ்க்கு வாங்களேன்”

அதுவரை பாசத்தைப் பொழிந்த மைதிலி, ருக்மிணியை ஒரு முறை திரும்பிப் பார்த்தபின் “பார்க்கலாம், எல்லாம் சரியா, சௌகரியமா இருக்கணுமே”

சௌமித்ரனும் ருக்மிணியும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

திருமணமான இரண்டு வாரங்களில், சில முறையே என்றாலும், ருக்மிணியின் தீர்க்கமான யோசனைகளும், பளிச் பளிச்சென வந்து விழும் பதில்களும், மிகச் சரியான அனுமானங்களும் மைதிலிக்குப் பிடித்துதான் இருந்தது. ஆனால், சௌமித்ரனுக்கும் அது பிடித்ததில்தான் அவருக்குப் பிடித்தமில்லை.

உணவு, உடை, திட்டமிடல், என சௌமித்ரனும் ருக்மிணியும் பல விஷயங்களில் ஒருவரை ஒருவர் அறிந்து இணக்கமாக இருப்பதில் நிச்சயமாக அவருக்குப் பொறாமை இல்லை.

ஆனாலும், மருமகள் சொல்வதற்கெல்லாம் சூரபத்மனைப்போல் மகன் பலமாகத் தலையை ஆட்டுவதாகத் தோன்றியதில் கலவரமான மைதிலி, சௌமித்ரனின் கண்ணசைவில் நகர்ந்த ருக்மிணியைக் காணத்தவறினார்.

இருவரது பெற்றோர்களும் சகோதரிகளும் வந்து வழியனுப்ப, எல்லோரையும் அமெரிக்காவிற்கு வருக, வருக என வரவேற்ற ருக்மிணியும் சௌமித்ரனும் தங்கள் கனவு குடித்தனத்தை எதிர் நோக்கி கலிஃபோர்னியாவுக்குப் பறந்தனர்.

****************

இரண்டு படுக்கையறைகள், ஒரு படிக்கும் அறை, பெரிதான முன்னறை, அதை ஒட்டிய வசதியான சிட் அவுட் என வீடு நன்றாக இருந்தது.

அத்யாவசிய பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு, இருவரது சாமான்களையும் வீண் செய்யாது, முடிந்தவரை உபயோகிக்க முடிவு செய்தனர்.

தனித் தனியே குடித்தனம் நடத்தியவர்களுக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வது சுலபமாகவும் இயல்பாகவும் வந்தது. சில சமயம் ஒருவர் சற்று சுணங்கினால் மற்றவர் விட்டுக்கொடுத்தனர்.

இருவரில் முதலில் வீடு வருபவர் சமையல் செய்தனர். உணவை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணாது, தினமும் சமைப்பதை கொள்கையாகவே வைத்திருந்தனர்.

ஒரு ஞாயிறன்று கிரைண்டர் போட சோம்பல் பட்ட ருக்மிணி “இந்த வாரம் ஃபுல்லா நானே பிரேக் ஃபாஸ்ட் செய்யறேன்” என்று வாக்களித்தாள்.


‘சரியாக வரும் வரை உன்னை விட்டேனா பார்!’ என அரிசி, ரவை, சேமியா, கோதுமை ரவா என, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ருக்மிணி தினமும் ஒரு உப்புமாவைக் கிண்டினாள்,

வியாழனன்று காலை எழுந்து வந்த ருக்மிணி கிரைண்டர் ஒருபுறம் ஓட, ரொட்டிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த சௌமித்ரனைக் கண்டாள்.

“முனீம்மா, இன்னிக்கு நான் லீவுடீ”

“ஏன்?”

“என்னால இதுக்கு மேல களி திங்க முடியாதுடா முனீஸ்”

கையிருப்பு, பர்ஸில் உள்ள பணம், கிரெடிட் கார்டுக்கு எத்தனை சதவீதம் வட்டி, எந்த சீஸனில் எந்த காய்கறிகளும் பழங்களும் மலிவாகக் கிடைக்கும் என்பதில் தொடங்கி, பணத்தில் சிக்கனம் பிடித்து, முதலீடு செய்து நிர்வகிக்கும்
சௌமித்ரனின் திறனைக் கண்டவள் “நீயே மேனேஜ் பண்ணு சௌ, எனக்கு செலவுக்கு பணம் குடுத்தா போதும்” என தன் கணக்கையும் அவனிடமே விட்டுவிட்டாள்.

காலையில் பதினைந்து நிமிட யோகா மற்றும் அரை மணி நேர ஜாகிங்குடன் தொடங்கும் நாள், வீட்டிலிருக்கும் பொழுதுகளெல்லாம் இருவருக்கும் இழையவும், இயையவும், இணையவும்தான் நேரமிருந்தது.

நேரமிருப்பின் வார நாட்களிலும், கட்டாயமாக வார இறுதியிலும் விளையாடச் சென்றனர்.

ஆறேழு மாதங்கள் கடந்த நிலையில், சௌமித்ரனின் பெற்றோர்கள் அமெரிக்கா வந்தனர். தசரா, தீபாவளி கார்த்திகை என பண்டிகைகள் அணி வகுத்து நிற்க, தங்கள் வீட்டின் பழக்க வழக்கங்களை, பாரம்பரியத்தை , மைதிலி மருமகளுக்குக் கடத்த முற்பட, சௌமித்ரன்

“ரிலாக்ஸ் மா, இப்டி ஒரே நாள்ல இத்தனையும செய்யணும்னு என்ன அவசியம், யார் போட்ட ரூல்?”

“நமக்கு நாமே போட்ட ரூல்தான்டா. இந்த சீஸன்ல இது விளையும். அதனால முன்ன காலத்துல இந்த பண்டிகைக்கு இந்தந்த பலகாரம், பக்ஷணம்னு யோசிச்சுதான் வெச்சுருக்கா”

“ஆமா, எல்லாரும் டயட்டீஷியன் பாரு”

“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் டயட்டீஷியன்தான் டா. கோடைல வர ராம நவமிக்கும், சித்திரை மாசப் பொறப்புக்கும் வெள்ளரிக்கா, நீர்மோர், பானகமும், ஆடி மாசத்துல ராகிக் கூழும், கோகுலாஷ்டமிக்கு அரிசி மா பலகாரங்களும், வெயிலும் மழையும் மிதமா இருக்கற நவராத்திரி சமயத்துல சுண்டல் வகைகளும், பொங்கலுக்கு புது காய்கறிகளை சேர்த்த கூட்டும்னு, காலத்துக்கு தகுந்தபடி தெளிவாதான் சொல்லி இருக்கா”

“அது ஒகேம்மா, ஆனா மினி பாவம்மா, அவ இதையெல்லாம் செஞ்சா தாங்க மாட்டா. சும்மா சிம்பிளா ஏதாவது ஒரு பாயசம், ஸ்வீட் இல்லைன்னா பழம் கூட ஓகேம்மா, சாமி என்ன கேக்கவா போறார்?”

‘கடலை உருண்டை வேணும்மா, நிப்பட்டு (தட்டை) பண்ணேன். உன் புளியோதரைக்கும் கை முறுக்குக்கும் ஹாஸ்டலே வெய்ட் பண்றதுமா’ என மாதம் ஒருமுறை லிஸ்ட்டோடு வந்தபோது என்னைப் பார்க்க பாவமாக இல்லையாடா?’

‘அதுசரி, டப்பா டப்பாவா பண்ணி அனுப்பின என்னைச் சொல்லணும். எனக்குதான் தெரியும்னு யாரோ கிரீடம் வெச்ச மாதிரி மாங்கு மாங்குனு வேலை செஞ்ச நான் பாவமா, வேலை செய்யணும்னு நினைச்சாலே சோர்ந்து போற உன் பொண்டாட்டி பாவமா?’

கணவரின் கண் ஜாடையில் அமைதி காத்த மைதிலி, இத்தனைக்கு நடுவிலும் ருக்மிணி வாயைத் திறந்து மரியாதை நிமித்தமாகக் கூட ஒரு வார்த்தை பேசாததில் நொந்து போனார்.

அந்தக்காலம் போல் எல்லாவற்றையும் இழுத்துக் கட்டி செய்ய வேண்டாம். ஒன்றிரண்டையாவது கடைப்பிடிக்கா விட்டால் எப்படி?

இந்த ஊரில் கூட கிறிஸ்துமஸுக்கு பாரம்பரிய முறைப்படி டர்க்கியை வாங்கி சமைக்கத்தானே செய்கின்றனர்.

ரேகா “நீயும்தான் இந்த தடவை அடுப்படில வேகாம ஜாலியா இரேம்மா” என்றாள்.

மைதிலிக்கு பெங்களூரோ, பே ஏரியாவோ, சௌமித்ரனின் வீடு எங்கே இருந்தாலும், அது தனது வீட்டின் நீட்சியாக இருக்க வேண்டுமென்ற எண்ணம்,

ரேகாவின் திருமணம் வரை வாயும் கையுமாகக் கோலோச்சிய மாமியாரிடம் இருந்து தான் கற்ற குடும்ப நியதிகள், சடங்கு, சம்பிரதாயங்களை விளக்கி மருமகளுக்கு க்ராஷ் கோர்ஸ் நடத்த விரும்பிய மைதிலிக்கு, தன் மகனின் ‘என் வீடு, என் விருப்பம்’ என்ற தாரக மந்திரம் தெரியாமல் போனது.

அம்மாவும் மாமியாரும் சொன்ன நியதிகள்தான் பின்பற்றக் கடினமாக இருந்ததே ஒழிய, கெட் டு கெதர் என்ற பெயரில் பத்துப் பதினைந்து நண்பர்களுக்கு இந்திய, சைனீஸ் மற்றும் கான்ட்டினென்டல் உணவு வகைகளை மெனு போட்டு சமைத்து விருந்து வைக்கையில் மட்டும் சுலபமானது எப்படி என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மகன், மருமகளின் தன்னிச்சையான போக்கையும் இருவரும் ஒன்றுபோல் பேசுவதையும் புரிந்துகொண்ட மைதிலி மெதுவே விலகத் தொடங்கினார்.

ருக்மிணியும் சௌமித்ரனும் இந்தியா வந்து செல்லும் சொல்ப நாள்களிலுமே மாமியாருக்கும் மருமகளுக்கும் கார்கில்தான்.

சௌமித்ரனுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களைக் கடந்தபின், ரேகாவிற்கு இரண்டாவதாகப் பெண் பிறந்திருக்க, இருவரும் இந்தியா வந்திருந்தனர்.

பெற்றோர், உற்றோர், உடன்பிறந்தோர் என எல்லோரது கேள்வியும் குழந்தை பற்றியதாகவே இருந்தது.

அவர்கள் அமெரிக்கா புறப்படும் முன் மைதிலி “ருக்கு. வருஷம் மூணாச்சு. ரெண்டு பேருக்கும் வயசாறது. அதோட, எனக்கும் உங்கம்மாக்கும் தெம்பு இருக்கும்போதே குழந்தை பொறந்துட்டா, வளர்க்கறது சுலபம்” என்றார் பளிச்சென.

இரண்டு வருடங்களாகவே தன் பெற்றோரை தங்களோடு வந்து தங்கும்படி அழைத்துக் கொண்டிருந்த ருக்மிணி, இம்முறையும் தந்தையை வற்புறுத்தினாள்.

தன் வளர்ச்சியை, வாழ்க்கையை தன் பெற்றோர் காண வேண்டும், சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட்டாக அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட தனி கேபினை அவர்களுக்குக் காட்ட வேண்டும், சரளமான சௌமித்ரனுடன் தன் தந்தை சகஜமாகப் பழக வேண்டும் என்ற ஏக்கமும் ஆசையும் ருக்மிணிக்கு.

“ஒரு தரமாவது வரலாமேப்பா. நீங்கதான் ரிடையர் ஆயாச்சே, அம்மாவால லீவ் போட முடியுமாம். ரெண்டே ரெண்டு மாசம்தானேப்பா. எல்லா ஏற்பாடும் நான் பண்றேன். ஆஃபீஸ்ல கூட ஒர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு வாங்கிடுவேன். நடுநடுல நாங்க லீவு போட்டுக்கறோம். கொஞ்சம் சுத்திப் பாக்கலாம், சொல்லேம்மா”

“வரோம்மா, உன்னைப் பார்க்க வராம எங்க போகப் போறோம், அதுக்கான சமயம் வரும்போது நிச்சயம் வருவோம்” என்றார் தந்தை.

பின்னர் மாலாவும் இந்துவும் “ருக்கு அவ்வளவு சொல்றாளேப்பா, போயிட்டுதான் வாங்களேன்”

“அவளுக்கு எதுக்கும்மா வீண் செலவு, இதோ, ஒரு குழந்தை உண்டாயிட்டாள்னா, எப்படியும் அங்க போய்தான் பிரசவம் பார்க்கணும். குழந்தையைப் பார்த்துக்க, மாப்பிள்ளையோட அம்மா, அப்பாவும் நாங்களும் மாத்தி மாத்தி போகத்தானே வேணும். அப்ப ருக்கு கூப்பிடாமலே போறேனா இல்லையான்னு பாரு”

கடல் கடந்து மகள் குடித்தனம் நடத்தும் அழகை, வேலைக்குச் செல்லும் கம்பீரத்தை, பேரக் குழந்தையின் வரவைக் காணும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்த அந்தத் தந்தைக்கு மகளும் சரி, மகேசனும் சரி அந்த வாய்ப்பை கடைசி வரை தரவேயில்லை.

இதைச் சொன்ன அடுத்த நான்கு மாதங்களிலேயே அவர் கடும் மாரடைப்பால் காலமானார்.

‘எங்கூட வந்து இருக்காமலே போய்ட்டியேப்பா’ என்று அழுத ருக்மிணியும், அவளது வாரிசைக் காண காத்திருந்த
தந்தையும் ‘வா, வரேன்’ என்றதைத் தாண்டி தங்களது அபிலாஷைகளை பகிர்ந்து கொள்ளவே இல்லை.

ஏதோ ஒரு புள்ளியில் அவரவர் எல்லையில் விலகி நின்ற தந்தையும் மகளும் நெருங்க நினைத்தும் அவர்களால் முடியாமல் போனது.

அவளது தந்தையின் ஆசை பற்றி எதுவும் தெரியாது , அன்று உச்சிப் பிள்ளையார் கோவிலில் எடுத்த குழந்தை வேண்டாம் என்ற முடிவை, அதன் காரணங்களைக் காப்பாற்றுவதில் கணவனும் மனைவியும் தீவிரமாக இருந்தனர்.

அன்று…

“முனீஸ், நான் உனக்கு முன்னாலயே சொல்லி இருக்கேன். என் ஃபிட்னஸ், ரீடிங், ஸ்போர்ட்ஸ் இதுல எல்லாம் காம்ப்ரமைஸ் பண்ணிக்க எனக்கு இஷ்டம் இல்ல. எனக்கான டைமும் ஸ்பேஸும் எனக்கு வேணும். நீயும் அதே போலதான் ஃபீல் பண்றன்னு எனக்குத் தெரியும்”

“இதெல்லாம் ஏற்கனவே நாம பேசினதுதானே சௌ?”

“சரிதான், அது மட்டும் இல்லாம , நாம ரெண்டு பேருமே இப்பதான் நம்ம கேரியர்ல அடுத்த லெவலுக்கு போயிருக்கோம்.
டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட் வேலை சுலபம் கிடையாதுன்னு உனக்கே தெரியும். அதே போல உன்னோட வயசுக்கு சைபர் செக்யூரிட்டி கோர்ஸ்லாம்…. சான்ஸே கிடையாதுடா மினி. அவ்வளவு ப்ராக்ரஸிவான (வளரக்கூடிய) பீரியட் உனக்கு”

“ஆமா சௌ, எனக்கு உங்க கிட்ட எப்டி சொல்றதுன்னு தயக்கமா இருந்தது. இப்போதைக்கு நமக்கு…”

“வெய்ட் மினி, நான் பேசி முடிச்சுடறேன். நம்ம ரொட்டீன், வேலை, மாசம் ஒரு ஷார்ட் ட்ரிப், யார் தொந்திரவும் இல்லாம ஆறு மாசத்துக்கு ஒரு தரம் புது இடத்துல வெகேஷன்னு லைஃபை என்ஜாய் பண்ணணும்டா”

ருக்மிணிக்கு அவன் சொல்வதைக் கேட்பதே பரவசமளித்தது. சௌமித்ரன் தொடர்ந்தான்.

“வேலை மட்டுமில்லடா முனீஸ், நாம இருக்கற ஊர்ல ப்ரெக்னென்ஸி, டெலிவரி பிரச்சனை கிடையாது. ஆனா, எப்படி வளர்க்கறதுன்னு சொல்லு? நம்ம பேரன்ட்ஸால நம்மோட வந்து எத்தனை நாள் இருக்க முடியும்?”

“கரெக்ட் சௌமி, நாம ஆஃபீஸ் போயிட்டா, குழந்தைக்கோ, அப்பா, அம்மாக்கோ ஏதாவதுன்னா யார் பாக்கறது? நம்ம பேரன்ட்ஸுக்கு அந்த ஊர்ல தனியா வெளில போய் மேனேஜ் பண்றது கஷ்டம்”

“அதான்டா மினி நானும் சொல்றேன். நமக்கு ஒரு குழந்தை பொறந்து, அதை நானி கிட்ட, க்ரச்சுல, டே கேர்லன்னு விட்டு வளர்க்கறதுல எனக்கு விருப்பமில்ல. நம்மை நம்பி வர பேபியை நம்மால பார்த்துக்க முடியலைன்னா கில்ட்டியா இருக்கும்டா”

“...”

“இல்லைன்னா, நாம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கேரியர்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும். கர்ப்பமா இருக்கும்போதும், குழந்தை பிறந்து அட்லீஸ்ட் முதல் ஆறு மாசமும் நீதான் பார்க்கணும். மெட்டர்னிடினால திரும்பவும் உன்னை ஆரம்பிச்ச இடத்துக்கே போகச் சொல்ல நான் தயாரில்ல மினி. இந்த இடத்துக்கு வர நீ எத்தனை உழைச்சிருக்க, எத்தனை தடையை தாண்டி வந்துருக்கன்னு எனக்குத் தெரியும்”

“சௌ…”

“என்னை தப்பா நினைக்காத மினி. நம்ம சுதந்திரத்தையும், நிம்மதியையும் இழந்துட்டு, அந்தக் குழந்தையையும் நம்ம சௌகரியத்துக்கு அலைக்கழிக்கறது எனக்கு சரின்னு படலை. நீ என்ன சொல்ற?”

“...”

“இருந்தா நல்ல பேரன்ட்ஸா கூடவே இருந்து வளர்க்கணும். இல்லையா குழந்தையே பெத்துக்காம இருக்கணும். ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்னு இருக்கறதால நாமும் அவஸ்தை பட்டு, பேபியையும் இம்சை படுத்துவோம்”

“...”

ருக்மிணியின் மனதில் குழந்தைக்காக அக்காக்கள் இருவரும் வேலையை விட்டது, தன் வேலை, குழந்தை, குழந்தை வளர்ப்பு, அவளைச் சுற்றி இருக்கும் இந்தியப் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை எல்லாம் காட்சிகளாக ஓட மௌனமாக இருந்தாள்.

குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி அவள் அதுவரை அதிகம் சிந்திக்கவில்லை எனினும், மற்றவர்களின் தினசரி ஓட்டமும், எல்கேஜி முதலே பல்வேறு வகுப்புகளில் அவர்களைத் திணிப்பதும், வார இறுதியில் ஒவ்வொரு க்ளாஸுக்கும் அப்பாவோ அம்மாவோ மாற்றி மாற்றி சாரத்யம் செய்வதும்…

கர்ப்பமான நாள் முதல், குறைந்தது இருபது, இருபத்திரெண்டு வயது வரை வளர்த்து, படிக்க வைத்து…

இன்னும் ஜனிக்காத குழந்தையை வேலை பார்க்கும் வயது வரை மனதில் வளர்த்து விட்ட ருக்மிணிக்கு நினைக்கவே மலைப்பாக இருந்தது.

“முனீம்மா?” என்று சௌமித்ரன் ருக்மிணியின் கையைப் பிடித்தான்.

“நீ சொல்றதுதான் சௌ கரெக்ட். என்னால கேரியரை விட முடியாது. குழந்தையை யார் கிட்டயும் விட்டுட்டு கவலைப் படவும் முடியாது”

“புரியறதா மினி, உன்னை நான் கம்பெல் பண்ணலை. உனக்கு குழந்தை வேணும்னா எனக்கு ஓகே, ஐ’ம் இன் தி கேம்”

“சௌ, நாம நினைக்கற ‘couple goal’ லைஃப்க்கு குழந்தை பெத்துக்கறதெல்லாம் சரியா வராது. அதோட என்னால ஒரு குழந்தையை சரியா வளர்க்க முடியுமான்னு தெரியலை சௌ. எனக்கு கமிட் பண்ணிக்கவே பயமா இருக்கு”

“டோன்ட் ஒர்ரி முனீஸ், நாம நம்மளோட ஆசையை, வாழ்க்கையை ஃப்ரீயா, நிம்மதியா நம்ம இஷ்டப்படி வாழ்ந்து பார்த்துடலாம், டீல்?”

“டீல்”

பெருகி வரும் நுகர்வோர் கலாச்சாரம், தனிமனித சுதந்திரம், வசதிகள், எதிர்பார்ப்புகள், சமூகத்தை விட, என் சுற்றத்தை விட நான் உயர்த்தி என்ற எண்ணத்தில், தன் பழமையான சமூகக் கட்டமைப்பில் இருந்து விலகி நிற்கும் தலைமுறையின் பிரதிநிதிகளாக, குழந்தை வேண்டாம் எனத் தீர்மானித்த சௌமித்ரன், ருக்மிணியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார், அவர்களுக்கு சாட்சியாய் அமர்ந்திருந்த உச்சிப் பிள்ளையார்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

கடமையை நல்லாவே செய்யுறான்..🙈🙈
குழந்தைக்கு மட்டும் தான் கட்டுப்பாடு..😏😏
மனைவிக்கிட்ட எதுக்கு கண்ணியம்னு..😜😜
மொத்தத்துல கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு நல்லாவே ஆத்தோ ஆத்துன்னு ஆத்துறான்..😜😜🙈🙈

 
Last edited:
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

இதுவும் போர்தான்... காதல் போர்..🙈🙈

ஆரிய உதடுகள் என்னது…
திராவிட உதடுகள் உன்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

இதில் யார் தோல்வியுறும் போதும்…
அதுதான் வெற்றி என்றாகும்…
இதில் நீ வெற்றி பெற வேண்டும்…
மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்…

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
😍😍😍

கடமையை நல்லாவே செய்யுறான்..🙈🙈
குழந்தைக்கு மட்டும் தான் கட்டுப்பாடு..😏😏
மனைவிக்கிட்ட எதுக்கு கண்ணியம்னு..😜😜
மொத்தத்துல கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு நல்லாவே ஆத்தோ ஆத்துன்னு ஆத்துறான்..😜😜🙈🙈

 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
30
குழந்தை பெத்துகிறத்க்கும், அதை வளர்க்க ஓரு வியாக்கிணம் சொல்ரான் பாருங்க,,மித்ரா ரெம்ப நல்லா வருவ.
இதையே நம்ம ஊர்ல சொன்னா மக்கள் தொகை குறையுமில்ல
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
குழந்தை பெத்துகிறத்க்கும், அதை வளர்க்க ஓரு வியாக்கிணம் சொல்ரான் பாருங்க,,மித்ரா ரெம்ப நல்லா வருவ.
இதையே நம்ம ஊர்ல சொன்னா மக்கள் தொகை குறையுமில்ல
இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க🙄
 
Top Bottom