• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 10

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
16
இழைத்த கவிதை நீ! 10


டைனிங் டேபிளில் அமர்ந்தபடி சற்றே பெரிய அளவில் வெட்டி, தண்ணீரில் நன்கு கழுவிய மாங்காய் துண்டங்களை மிருதுவான, தூய்மையான வெண்ணிற மஸ்லின் துணியால் ஜெயந்தி துடைத்துப் போட, அடுத்த ஈடு மாங்காயை அலசி எடுத்து வந்தாள் ருக்மிணி.

மேஜையின் ஒருபுறத்தில் வெள்ளைக் கொண்டைக் கடலை, அரைத்த கல் உப்பு, கடுகு , வெந்தயம், மஞ்சள், மிளகாய் பொடிகள், நல்லெண்ணெய், பெருங்காயம் என ஆவக்காய்க்கு வேண்டிய மசாலாக்கள் எல்லாம் அளந்து தயாராக இருந்தன.

வீட்டுக்கு வந்து ஒரு வாரம் வரை கஷ்டப்பட்டு ஒய்வில் இருந்த ஜெயந்தி, உடல் சிறிது தேறியதுமே காய் நறுக்கவும், துணி மடிக்கவும் தயாராகி விட்டார்.

ருக்மிணிக்கும் அலுவலக நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி இருக்க, சாவதானமாக நாட்களைக் கழித்தனர். தொடர்ந்து இத்தனை நாள் இங்கு தங்கியிராத ஜெயந்திக்கு, தொடக்கத்தில் தான் ஓய்வில் இருக்க, சௌமித்ரன் அவருக்கு உதவுவதும், மகளுடன் இணைந்து வீட்டு வேலைகளைச் செய்வதும் சங்கடத்தைத் தந்தாலும், விரைவிலேயே பழகிவிட்டார்.

அதோடு, மைதிலியோ, ரேகாவோ வந்தாலுமே அவன் அவனது இயல்பில் இருந்து மாறாததும், அவர்களும் அதை எளிதாய் கடந்ததும் நெகிழ்ச்சியைத் தந்தது.

ஜெயந்தியின் எதிரிலேயே சௌமித்ரனும் ருக்மிணியும் ஒருவரையொருவர் சீண்டுவதும், கேலி செய்வதும், இருவரும் இணைந்து கலகலத்து சிரிப்பதும், பகல் பொழுதுகளில், அவர் அறைக்குள் ஓய்வில் இருக்கும் சமயங்களில் சில நேரம் திறந்திருக்கும் படுக்கையறை, சமையலறை, முன் கூடத்திலிருந்து சௌமித்ரன் கீழ்க் குரலில் ஏதோ சொல்வதும், அவனது உரத்த நகைப்பொலியும், மகளின் ஊடலும் சிணுங்கலும் ஜெயந்திக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் ஓருங்கே தந்தது.

அவர் பார்த்த அளவில், வாழும் சூழலில் பொறுப்பான, அக்கறையான, அன்பான, அதை வெளிக்காட்டத் தெரியாத ஆண்களை நிறைய பார்த்திருக்கிறார். அவரது தந்தை, சகோதரர்கள், ஏன், ருக்மிணியின் தந்தையுமே அப்படித்தான்.

மாலா, இந்துவின் கணவர்கள் இருவரிடமும் அவர்களின் தலைமுறைக்கேற்ப மனைவி கேட்டால், நேரமும் விருப்பமும் இருந்தால், அவசியமானால் உதவுவதும், வெளிப்படையான கேலி, கிண்டல்களும், மனைவியின் வீட்டினருடன் சகஜமான பேச்சும் உண்டுதான். ஆனால், சௌமித்ரன் அளவு புரிதலும் அனுசரணையும் கிடையாது.

‘என் திருஷ்டியே படும் போல இருக்கே, அப்பனே, மாணிக்க விநாயகா, ருக்குவும் மாப்பிள்ளையும் இதேபோல எப்பவும் சந்தோஷமா இருக்கணும்’ என வேண்டுதல் வைத்தார்.

இந்த பூரிப்பின் இடையே இத்தனை படிப்பும், அறிவும், வசதியும், வருமானமும் நற்குணங்களும் ஒரு வாரிசின்றி வீணாகிறதே என்ற ஆதங்கமும் எழத்தான் செய்தது.

தனக்காக மெனக்கெடுபவளிடம் மீண்டும் குழந்தை குறித்துப் பேசி வருந்தச் செய்ய அவருக்கு விருப்பமில்லை.

உண்மையில் தன் ஆசிரியப் பணி, குடும்பம், கடமைகள் என்றே உழன்றவருக்கு படிப்பிலோ, வளர்ப்பிலோ பெண்கள் மூவருமே எந்த விதத்திலும் தொந்திரவு தந்ததில்லை.

என்னதான் தான் பெற்ற மகள் என்றாலும், அவளது சுபாவம், விருப்பு வெறுப்புகள், அனைத்தும் தெரிந்தாலுமே, மற்ற இருவரும் திருச்சியிலேயே படிக்க, ருக்மிணி ஹாஸ்டலில் தங்கிப் படித்தது, வெளிநாடு சென்றது என தாயும் மகளும் இத்தனை நிதானமாக தனித்துப் பேசியபடி பொழுதைக் கழித்ததே இல்லை எனலாம்.

ருக்மிணி விடுமுறையில் வரும்போதெல்லாம் பெங்களூரில் கொஞ்சம், திருச்சியில் கொஞ்சம், வேண்டுதல், குலதெய்வம் என அட்டவணை போட்டுச் சுற்றி, வாங்கி வந்த சாக்லெட்டுகள், டிஸ்போஸபிள் ரேஸர்கள் மற்றும் டப்பர்வேர் டப்பாக்களை உறவுகளுக்குக் கொடுத்தபின், குர்த்திகளை வாங்கி, ரவிக்கைகளைத் தைத்து, பொடிகளை அரைத்தபின் ஊர் திரும்பும் நாள் வந்துவிடும்.

ருக்மிணி திருச்சிக்கு வந்தால், கூடவே சகோதரிகளின் குடும்பங்களும் வந்து விடுவதில், மகள்கள் உதவினாலுமே, ஜெயந்திக்கு எப்போதும் சமையலறை சாம்ராஜ்யம்தான்.

அதோடு அவரது பள்ளி, பிறகு டியூஷன் பிள்ளைகள், சுற்றத்தார் வீட்டு விழாக்கள், மகள்களுக்கு பிள்ளைப் பேறு, பேரக்குழந்தைகளின் மொட்டையடி, காதுகுத்து என விழாக்கள் என்ற பெயரில் அவரது கடமைகள் என்றுமே ஓய்ந்ததில்லை.

அதற்காக இருவரும் பேசியதே இல்லை என்று அர்த்தமில்லை. ஆனால், நாள் முச்சூடும் நேரம் நீண்டு கிடக்க, தாய், மகள் இருவரும் இப்படி ஆற, அமர அரட்டை அடிப்பதும், பழைய கதைகளைப் பேசுவதுமாக இருப்பது இதுவே முதல் முறை.

ஒரு வயதுக்கு மேல் அடிபட்டால், ஜுரம் வந்தால் தொட்டுப் பார்ப்பது, தலை வாரிப் பின்னுவது, தலைக்கு எண்ணெய் வைத்து விடுவது போன்றவை தவிர அநாவசியமாகத் தொடுவது, கட்டிப்பிடிப்பது, மடியில் படுத்துக்கொள்வது போன்றவற்றை ஜெயந்தியும் செய்ததில்லை, மகள்களும் கேட்டதில்லை.

ஆனால் பேரன், பேத்திகளுக்கு மட்டும் இதுபோன்ற தடைகள் ஏதுமில்லை. அதிலும், மகன் இல்லாத காரணத்தாலோ என்னவோ, மாலாவின் பிள்ளை அர்ஜூன் அத்தனை நெருக்கம். கேட்டால் “குழந்தைடீ அவன்” என்பார்.

இப்போது கிடைத்திருக்கும் நேரத்தை தாயும் மகளும் நன்றாகவே செலவழித்தனர். ஜெயந்திக்குப் பிடித்தமான சிவகுமார் மற்றும் பாக்யராஜ் படங்கள், நித்யஸ்ரீயின் கச்சேரி வீடியோக்கள், ருக்மிணிக்குப் பிடித்த கேஸில் (Castle) க்ரைம் சீரீஸ் என இணைந்து பார்த்தனர்.

உடல் சற்று தேறியதுமே “ஒரு மிளகாயும் ரெண்டு மிளகும் போட்டு நல்லெண்ணெய் காய்ச்சி கொண்டு வா, தலைக்கு தேய்ச்சு விடறேன்”

“முடியை வெட்டினது கூட ஓகே, நீட்டா அழகாத்தான் இருக்கு. ஆனா எப்ப பாரு தலையை விரிச்சு போடறது, இல்லைன்னா அள்ளி சொருகி அந்த ராட்சஸ க்ளிப்பைப் போட்டு எல்லாப் பக்கமும் வழிய விட வேண்டியது. இதுல சாயம் ஏறின துணி மாதிரி அங்கங்க பச்சையும் சிவப்புமா கலர் வேற” என்ற ஜெயந்தியின் அங்கலாய்ப்பில் சௌமித்ரன் விழுந்து, புரண்டு சிரிக்க, அந்த க்ளட்சராலேயே தாக்கப்பட்டான்.

“டிப்ஸ் பண்ணிக்கச் சொன்னதே நீதானேடா” என்ற மனைவியைப் பார்த்து சௌமித்ரன் கண் சிமிட்டிவிட்டுச் செல்ல, ஜெயந்தியின் சங்கடத்தைப் பார்த்த ருக்மிணிக்கு ஏக சிரிப்பு.

“ஃப்ரீயா இரும்மா, நாங்க புதுக் கல்யாண ஜோடியா என்ன, நீ கூச்சப்படறதால சௌ வேணும்னே ரொம்ப பண்றார்”

“நான் தலையை வாரி விடறேன் வா” என சீப்புடன் சட்டமாக உட்கார்ந்து விடுவார்.

“இடுப்பு வரைக்கும் இருக்கேடீ, பின்னி விடறேனே”

நீண்ட வருடங்களுக்குப் பின் அம்மாவிடம் தலைவாரிப் பின்னிக் கொண்டதில் ருக்மிணிக்கு ஏதோ பெரிதாகக் கிடைத்த நிறைவு. தான் இளமையாக, அழகாக இருப்பதாகத் தோன்றியது.

அதிலும் அன்று மாலை அம்மாவைப் பார்க்கவென வந்த இந்து “யாருடா இந்த குட்டி ருக்கு?” என்றதில் மீண்டும் சிறு பெண்ணாகி விட்ட சந்தோஷம்.


ஜெயந்தி “இங்க வேலை செய்ய வர சங்கீதாவோட மாமியார் பூ விக்கறாளாமே, தினமும் வேண்டாம், ஒரு நாள் கிழமை, செவ்வாய் வெள்ளில பூ வாங்கினாத்தான் என்ன?”

“அலங்காரமா ஹால்ல ஆர்க்கிடை வைக்கறதெல்லாம் சரிதான், பூஜை ரூம்ல பூ வெச்சா, ஸ்வாமி பாவம் வேண்டாம்னா சொல்லப் போறார்?”

அவரது ஏற்பாட்டில் செவ்வாய், வெள்ளி மாலை நாலரைக்கெல்லாம் டாணென்று மல்லி, ஜாதி, முல்லை என ஏதோ ஒரு பூ இரண்டு முழமும், ஐந்தாறு செண்பகப் பூவும், கதம்பமாக உதிரிப் பூவும் வரத் தொடங்கியது.

“அமெரிக்காலதான் பூ கிடைக்கல, அதனால வெச்சுக்கல, சரி. இங்க என்ன, திரும்பு சொல்றேன்” என பூ வைத்து விட்டார்.

“இன்னிக்குப் பங்குனி உத்திரம். நம்ம ஊர்ல எல்லா கோவில்லயும் ஸ்வாமிக்கு, பெருமாளுக்கு கல்யாணம் நடக்கும். தினமும்தான் இந்த அங்கியைப் போட்டுக்கற. பீரோ நிறைய புடவை இருக்கு. நல்லதா ஒரு புடவையைத்தான் கட்டிக்கோயேன்”

ருக்மிணி “ஸ்வாமியோட வெட்டிங் ஆனிவர்ஸரிக்கு நான் புடவை கட்டிக்கவா?” என்று கிண்டலடித்தாலும், பிறந்த நாளைக்கென மாமியார் வாங்கிக் கொடுத்த ஆர்க்கிட் பிங்க் நிற மைசூர் ஜார்ஜெட் புடவையைப் பிரித்து உடுத்திக் கொண்டாள்.

தாயின் மனதைக் குளிர்விக்கவென செய்தாலும், அவளுக்குமே பிடித்திருந்தது.

ஆறு மணிக்கு வந்த சௌமித்ரன், கதவைத் திறந்த ருக்மிணியைப் பார்த்து விசிலடித்தவன் “யாரும்மா நீ, இங்க முக்கா பேன்ட் முனீஸ்வரின்னு ஒருத்தங்க இருந்தாங்களே…”

சுள்ளென ருக்மிணியிடம் அடிவாங்கியவனின் கண்கள், குளித்து, உடை மாற்றி வந்த பின்னும் மனைவியையே சுற்றியது.

தன் சிறு வயதுக் கதைகள், கல்யாணம், மாமியாரின் கெடுபிடிகள், வேலைக்குப் போக எழுந்த எதிர்ப்பு, ருக்மிணியின் தந்தை அதை ஆதரித்தது என ஜெயந்தி நிறையச் சொன்னார்.

ருக்மிணிக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணர்த்தி, மூன்று பெண்களையும் நன்கு படிக்க வைத்த பெற்றோரின் போராட்டம் முன்பே தெரிந்ததுதான்.

வெளிநாட்டில் படித்து, வேலை பார்க்கும் தன்னை விட, பெற்றோர், மாமனார், மாமியார் என அனைவரது எதிர்ப்பையும் மீறி, மூன்று பெண்கள் பிறந்த பின், அவர்களது வாழ்க்கை செழிக்கவும், கணவருக்குத் தோள்கொடுக்கவும் பிடிவாதமாக நின்று ஆசிரியப் பணிக்குச் சென்ற தன் அம்மாவை விட ஆளுமை மிக்க பெண் யாருமில்லை எனத் தோன்றியது.

“உனக்குக் கஷ்டமா இல்லையாம்மா?”

“கஷ்டம்தான். உங்க பாட்டி, தாத்தா நம்மோடதான். அதனால வீட்டு வேலைல, பூஜை, பண்டிகை, பட்சணம், பலகாரம்னு எதுலயும் சமரசம் பண்ணிக்க மாட்டா”

“ஒரு நாள் நேரமானதுல ரசம் வைக்காம, குழம்பும் கீரையும் பண்ணிட்டு ஸ்கூலுக்குப் போயிட்டேன். அதுக்கு வேலைக்கு போற முடிவு உன்னோடது. நானா போகச் சொன்னேன், நீ சம்பாதிக்க ஒரு ரசம் கூட வைக்காம போவ, நீ போட்டதைத் திங்கணுமா நான்னு கேட்டார் உங்க தாத்தா. இத்தனைக்கும் உங்க பாட்டி தெம்பாதான் இருந்தா”

“ம்ப்ச், எங்களுக்காகதானே நீ வேலைக்கு போன, ஏண்டா குழந்தை பெத்துண்டோம்னு தோணலையாம்மா?”

“நிச்சயமா இல்லடீ ருக்கு. மச்சினர், ஓர்ப்படின்னு கூட்டுக் குடும்பத்துல நீங்களும் இல்லாம, வேலையும் இல்லாம இருந்திருந்தா மூச்சு முட்டிப் போயிருக்கும்”

“...”

“ரெண்டு பக்க பெரியவாளும் ஆண் குழந்தை வேணும்னு நச்சரிச்சா. எங்களுக்குமே அப்ப அந்த ஆசை இருந்ததுதான். ஆனா, அதுக்கு வருத்தமும் படலை, நீங்களும் எங்களை வருத்தப்பட விடலை. உங்கப்பாவே அடிக்கடி “தங்கமான குழந்தைகள்டீ நமக்குன்னு “ சொல்லுவார்.

ருக்குவும் தன் அமெரிக்க வாழ்க்கை, அங்கத்திய பழக்கங்கள், சந்தித்த மனிதர்கள், கலாச்சார வேறுபாடுகள், நம் மக்களின் மன மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் என நிறைய சொன்னாள்.

“நீயும் அப்பாவும்தாம்மா வரவே இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் என் ஆஃபீஸ் ரூம், வீடு அந்த ஊர், எவ்லாம் காட்டணும்னு எத்தனை ஆசையா இருந்தேன் தெரியுமா? அப்பாதான் திடீர்னு போய்ட்டா, நீயாவது வந்திருக்கலாம்”


“உங்க அப்பாக்கு உன்னோட பிரசவத்துக்கும், குழந்தையைப் பார்த்துக்கவும் அமெரிக்கா வரணுங்கற ஆசை நிறைய இருந்தது. அது நிறைவேறாமலே டக்குனு போயிட்டார். நான் மட்டும் தனியா வர எனக்கு மனசு இடம் கொடுக்கலை. ஒருக்கால் உனக்கு குழந்தை பொறந்திருந்தா நிச்சயமா வந்திருப்பேன் ” என வருடங்கள் கடந்தும் வருத்தப்பட்டார்.

ருக்மிணியின் முகமாற்றத்தைக் கவனித்தவரின் “ஏதோ பேச்சுல சொல்லிட்டேன்” என்ற மன்னிப்பை யாசிக்கும் குரலும் அவர் சொன்ன செய்தியும் ருக்மிணியை மௌனத்தில் ஆழ்த்தியது.

*******************

சௌமித்ரன் மதியம்போல் தாமதமாகத்தான் கார்டனுக்கு சென்றான். இரவு காஸ்மோபாலிடன் க்ளப்புக்குப் போவதால், வர நேரமாகும் என்றிருக்க, வீட்டில் தாயும் மகளும்தான்.


ரேகா அனுப்பி வைத்த வீட்டில் காய்த்த மாங்காய்களை சங்கீதா அரிவாள் கொண்டு வந்து வெட்டித் தந்திருந்தாள்.
சௌமித்ரனுக்குப் பிடித்த ஆவக்காய் ஊறுகாயைப் போடுவதில் ஜெயந்தியும் ருக்மிணியும் பிஸி.

“ஏம்மா, இந்த வேண்டாத வேலை, ரெஸ்ட்ல இருன்னா கேட்கறியா?”

“இதுல என்ன கஷ்டம், உட்கார்ந்த இடத்துல இதைக்கூட செய்ய மாட்டேனா? இன்னும் எத்தனை நாள் ஆயுசு இருக்கோ, கை, காலை அசைக்காம காலம் எப்படி ஓடும், சொல்லு?”

“எதுவும் செய்யாம கொஞ்ச நாள் நிம்மதியாதான் இரேம்மா”

“உடம்பு துருப்புடிச்சு போய் சோம்பேறித்தனம் மண்டும். அதை விடு, இத்தனை மாங்காயையும் வேஸ்ட் பண்ணவா முடியும்?”

“அட போம்மா, வருஷா வருஷம் இதுக்கு யார் வேலை செய்யறது, நான் நாலஞ்சு மாங்காய் மட்டும் போதும்னு சொல்லிடுவேன். அப்பப்போ பிசறல், வெல்லம் போட்ட பச்சடி செய்வேன். மத்தபடி மாமியாரும் நீயும் தர ஊறுகாய்தான். ஆனா, அவருக்கு ஆவக்காயெல்லாம் போடத் தெரியாதாம்”


“சரி வா, இந்த தரம் நீ போட்டுக் குடுத்ததா இருக்கட்டுமே. எல்லா மாங்காயையும் அந்த பெரிய பாத்திரத்துல போடு. ஈரமா இருந்தா துடைச்ச பிறகு போடு”

“இரும்மா, நாம ஒரு டீயோ காஃபியோ குடிச்ச அப்புறம் மிக்ஸ் பண்ணலாம்” என்ற ருக்கு சமையறைக்குச் செல்ல, காலிங் பெல் அடித்தது. வந்தது இந்து.

“என்னம்மா இது, ஊறுகா ஃபேக்டரி?”

ருக்மிணி செய்த பனானா கேக் மற்றும் டீயுடன் அரை மணி சென்றது.

ஏதேதோ பேசியபடி, மாலாவை வீடியோ காலில் அழைத்து வெறுப்பேற்றினர்.

ஊறுகாயை பெரிய கண்ணாடி பாட்டிலில் போட்டு வெள்ளைத் துணியால் வாயைக் கட்டி வைத்த ஜெயந்தி, நீண்ட நேரம் வேலை செய்ததில் படபடத்து வரவும் ஹால் சோஃபாவிலேயே படுத்துவிட்டார்.

ருக்மிணி “என்னம்மா பண்றது உனக்கு?”

இந்து “விடுடீ ருக்கு, கொஞ்ச நேரத்துல சரியாயிடும்”

சிறிது நேரத்தில் முகச் சுளிப்புடன் சட்டென எழுந்த இந்து “ருக்கு, நாப்கின் இருந்தா குடேன். ரெண்டு, மூணு மாசமா சீக்கிரம் சீக்கிரம் வரது. இருவது நாள்தான்…” என்றபடி ஓய்வறைக்கு சென்றவள், வெளியில் வந்து சுருண்டு படுத்துக்கொண்டாள்.

ஜெயந்தி “இன்னும் நாப்பது வயசு கூட ஆகலையேடீ”

ருக்மிணி “என்னாச்சு இந்து, டாக்டரைப் பார்த்தியா?”

“ரெண்டு மாசம் முன்னாலதான் போய் லூப் மாத்திண்டு வந்தேன். அதோட எஃபெக்ட்டுதானாம். இந்த அவஸ்தை இன்னும் எத்தனை நாளோ?”

ருக்மிணி “எது, லூப்பா, அதைப் போட்டுக்கற காரணமா?”

“ரெண்டும்தான். பயந்து பயந்து… போறும் போ. அவர் வேற இன்னுமா வரலை,

முப்பது நாள், முப்பத்திரெண்டு நாள்னு போஸ்டர் அடிப்பார்” என்றதில் ருக்மிணி கலகலத்துச் சிரிக்க, ஜெயந்தி “வெக்கமத்துப் போச்சுடீ உங்களுக்கு” என்றார்.

ஹாட் வாட்டர் பேகை கொண்டு வந்து தந்த தங்கையிடம் “நீ எப்படீடி இத்தனை வருஷமா சமாளிக்கற?”

வீட்டில் வேறு யாரும் இல்லாது சகோதரிகளின் பேச்சின் நடுவே இயல்பாக எழுந்த கேள்விதான். ஆனால், ருக்மிணியின் முகம் சட்டென மாறிவிட, தனக்கும் சௌமித்ரனுக்குமான அந்தரங்கத்தில் இந்து தலையிட்டதுபோல் தோன்றவும், அவளிடமிருந்த இளக்கம் போய் இறுகினாள்.

ஜெயந்தி “இந்து, போறும்”

இந்து “நான் சாதாரணமாதானேம்மா கேட்டேன். என்னை அவ கேலி பண்ணலையா?”

ருக்மிணிக்கு தன் தவறு புரிய, “ஸாரி இந்து” என்றவளுக்குத் தன் தடுமாற்றத்தை நினைத்து வியப்பு.

“இட்ஸ் ஓகே இந்து. நானும் டாக்டர் கிட்ட கேட்டதுக்கு, லூப் மாதிரியே Mirena ன்னு ஒன்னு போட்டா. அதுல சின்னதா ஒரு இன்ஃபெக்ஷன் வந்து எடுத்த சமயத்துல மாமனார் காலமாயிட்டார்னு இங்க வந்தோம். அப்பதான்…”

இந்து “ப்ச், அதை விடு, இப்ப என்ன பண்ற?”

ஜெயந்தி “இந்து, போறும்னா விடணும். நானும் இங்க வந்து ஒரு மாசம் ஆகப்போறது. நல்ல நாளா பார்த்து திருச்சிக்குப் போகலாம்னு நினைக்கறேன்”

ருக்மிணி வெடுக்கென “ஏன், இங்க இருக்கறதுல உனக்கு என்ன பிரச்சனை?”

“இப்ப என்னத்துக்குடீ எம்மேல பாயற, நான் உடம்பு சரியாதானே இருக்கேன். இங்க, அங்கன்னு எத்தனை நாள்? பாவம், என்னை நம்பி படிக்க வர குழந்தைகளுக்கு முழுப் பரீட்சை வர நேரம்டீ ருக்கு”

“திருச்சியே அம்மாவை நம்பிதான் இருக்கு, தெரியுமோ?” - இந்து.

“நாங்கள்லாம் இல்லையாம்மா?” ருக்கு.

“யார் இல்லைன்னா, நீங்க இங்க இருக்கற மாதிரி அங்கதான் பக்கத்துலயே மாலா இருக்காளே?”

“தனியா ஏன் இருக்கணும், இப்டியே என்கூடவே இரேன்”

ஜெயந்தி “அதெல்லாம் சரியா வராது, வேணும்னா இந்துவைக் கேளு” எனவும், இந்து அமைதியாக இருந்தாள். அடுத்த வாரம் அவளது மாமனார் வருகிறார்.

“ஏம்மா, பொண்ணோட வீட்ல இருக்கக் கூடாதுன்னு நினைக்கறயா?”

மகளை ஆழ்ந்து பார்த்த ஜெயந்தி “இது போல என்னிக்காவது உங்க மாமியாரை உன்கூட வந்து இருக்கச் சொல்லி இருக்கியா ருக்கு?”

“நான் வர வேண்டாம்னு சொல்லலையே?”

“ஆனா வரவும் சொல்லலையே”

இந்து “ருக்கு, உனக்கும் மித்ரனுக்கும் எந்த இடைஞ்சலும் கூடாதுன்னு குழந்தையே வேண்டாம்னா, அம்மாக்களும் அதிகப்படிதானே?”

“இந்தூ…”

“கத்தாதே ருக்கு, அவ கேட்டதுல என்ன தப்புன்னு சொல்லு?”

ருக்மிணி “நீ எங்களுக்கு இடைஞ்சல்னு நான் சொன்னேனாம்மா?”

“...”

“இல்ல, நீ இருக்கறதுனால, நாங்க பேசாம, கொள்ளாம இருக்கோமா? உன் எதிர்க்க சௌமி என்னை கேலி, கிண்டல் பண்ணலையா? நீ கூட இருந்தா எப்படி இருக்கணும்னு எங்களுக்குத் தெரியாதாம்மா, நாங்க புதுக்கல்யாண ஜோடியா என்ன?”

“அப்ப ஓரு குழந்தை, அதுவும் உங்களோட குழந்தை கூட இருந்தா அது இடைஞ்சலா ருக்கு, ம்?”

“...”

“உங்க ரெண்டு பேரோட, படிப்பு, அழகு, அறிவு, அனுபவம், வருமானம், நல்ல குணங்கள் எல்லாம் உங்களோட முடிஞ்சு போகாம, உங்களோட பிரதிபலிப்பா, நீட்சியா இருக்க ஒரு பையனோ, பொண்ணோ வேண்டாமா ருக்கு?”

“...”

“நாங்க இல்லையாம்மான்னு கேட்க, எனக்காக வேலைல பிரேக் எடுத்துண்டு என்னை பார்த்துக்க நீ இருக்கற மாதிரி, நாளைக்கு உங்களுக்குன்னு ஒருத்தர் வேண்டாமாடீ?”

“...”

“ஆண், பொண்ணு எல்லாத்தையும் விடு. குத்தமா சொல்லலை, இப்ப பையன் இருந்தும் உங்க மாமியாரே தனியாதான் இருக்கா. ஆனா, எல்லா பண்டிகை, பிறந்தநாள்னு ஒண்ணா சேர்ந்துதானே நடக்கறது?”

“...”

“எனக்கு செஞ்ச மாதிரி, அவசியம்னா நீ உங்க மாமியாரையும் பார்த்துப்பேன்னு எனக்குத் தெரியும், சரிதானே?”

“ம்…”

“உனக்குத் தெரியாதது இல்ல ருக்கு. என்னை விட நீ உலகத்தை அதிகம் பார்த்திருக்க. எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையே பூவா தலையாதான். குழந்தை வளர்ப்பே ட்ரையல் அண்ட் எரர்தான் (trial & error). அன்னிக்கு இந்து குழந்தை வளர்ப்பு பத்தி ஒரு வீடியோ காட்டினா. அதுபடி செஞ்சா நாயைக் கூட வளர்க்க முடியாது”

“...”

“ஒவ்வொரு குழந்தைக்கும் பொறக்கும்போதே வேற வேற சுபாவம். உலகத்துலயே அம்மாதான் பெஸ்ட் நர்ஸ். அது கத்துக் குடுத்து வராது. வயத்துல ஜனிச்ச குழந்தையோட அந்தப் பொண்ணுமே அம்மாவா ஜனிக்கறா”

“...”

“நம்பினா நம்பு ருக்கு, நாம சரியா வளர்ந்திருக்கோம், உன்னை நாங்க சரியா வளர்த்திருக்கான்னு நீ நினைச்சா, என்னால குழந்தையை வளர்க்க முடியுமா, நான் நல்லா அம்மாவா இருப்பேனாங்கற சந்தேகமே வராது”

“...”

“புருஷனும் பொண்டாட்டியும் நெருக்கமா, ஜாலியா இருந்தா நல்லதுதான். ஆனா அது ஆரம்ப கட்டத்துல. இப்ப நீயும் மித்ரனும் தனித்தனி கிடையாது ருக்கு. இன்னும் நாளாக, ஆக, உங்க ரெண்டு பேருக்கும் கட்டாயமா ஒரு பிடிமானம் தேவைப்படும்”

“...”

“அவஸ்தைதான், வலிதான். ஆனாலும் குழந்தை சுகம்தான். உன்னோட ஐடி பாஷைல சொல்லணும்னா
குழந்தை பெத்துக்கற ப்ராஜெக்ட், ப்ராஸஸ், ப்ராடக்ட் மூணுமே , அவசியம், அனுபவம், அதிசயம்”

“...”

“. இயற்கையா அந்தந்த வயசுல நடக்க வேண்டியதுதானே? உண்மைல பொறுப்பில்லாம, கடமையைத் தட்டிக் கழிக்கறவன்தான் குழந்தை என்னால வரலை, என் மூலமா வந்ததுன்னு வியாக்கியானம் பேசுவான்”

“...”

“நான் சொன்னதை நிதானமா யோசி ருக்கு”


தாழ்ந்த, மெலிதான குரலில் இதமாகப் பேசியவருக்கு ருக்மிணி , தன் வார்த்தைகளை மறுதலிக்காது, பதிலளிக்காது இருந்ததே பெரிதாகத் தோன்றியது.

சில நிமிட கனத்த மௌனத்திற்குப் பின் இயல்பானார்கள். இந்து கிளம்பவும், ருக்கு குழந்தைகளுக்கு கேக்கும், பாதாம் பருப்பும் கொடுத்து அனுப்பினாள்.

கேபில் ஏற்றி விட வந்த தங்கையை மெலிதாக அணைத்துக் கொண்ட இந்து “பெட்டர் லேட் தென் நெவர் ருக்கு” என சொல்லிச் சென்றாள்.

ஜெயந்திக்கு எட்டு மணிக்கு ரொட்டியும் தாலும் கொடுத்து, தானும் உண்டு , வேலையை முடித்து வர, மொபைல் ஒலித்தது.

“ஹாய் ரேகா”

“என்ன செய்யற ருக்கு, ஹௌ ஈஸ் ஆன்ட்டி?”

“அம்மா இப்போ மச் பெட்டர். டின்னர் முடிஞ்சது”

“மித்ரன் இருக்கானா?”

“காஸ்மோபாலிடன் க்ளப்புக்கு போய் இருக்கார், என்ன விஷயம், இல்ல தம்பிகிட்டதான் பேசணுமா?”

“ஹேய் கமான், அவன் மொபைலை எடுக்கலை, அதான் கேட்டேன். வர புதன் கிழமை ஸ்வாதியோட பர்த் டேக்கு கூப்பிடதான் கால் பண்ணினேன், அம்மாவோட வந்துடுங்கோ, ஆன்ட்டி கிட்ட குடு, ஸீ யூ ஆன் வெட்னஸ் டே”

*******************

அப்போதே சௌமித்ரனின் முன் போய் நிற்பதாகச் சொன்னவளை சிரமப்பட்டு தடுத்திருந்த குமார் “இப்ப ஏன் ரேக்ஸ் ருக்குவை குழப்பின?”

“இவன் விளையாட க்ளப்புக்கு போய் இருக்கான்னு அவ நம்பிண்டு இருக்கா குமார்”

“அவசரப்படாத ரேகா, அது சும்மா ஃப்ரெண்டாவோ, இல்ல க்ளையன்டாவோ கூட இருக்கலாமே?”

“ருக்கு இல்லாம ஃப்ரெண்டோட என்ன ஈட் அவுட் குமார், அதுவும்…”

“ரேகா…”

“ஸாரி டு ஸே திஸ், பூ விக்கறவனுக்கு சனிக்கிழமை ராத்திரி க்ளையன்ட்டோட டின்னரா குமார்?”

“நானாடீ டின்னருக்குப் போனேன்?”

“ஹோப், எவ்ரிதிங் ஈஸ் நார்மல் குமார்”

******************

பத்து மணிக்கு வந்த சௌமித்ரன் உணவை மறுக்கவும், ருக்மிணி கேள்வியாகப் பார்த்தாள்.

“ஏழு மணிக்குதான் டீ, சான்ட்விச் சாப்பிட்டேன், பசிக்கல. அம்மா தூங்கியாச்சா?”

“படுக்க போயாச்சு”

சௌமித்ரன் டீவியை ஆன் செய்ய, நறுக்கி வைத்திருந்த தர்பூசணி பழத்தை கொண்டு வந்து கொடுத்தாள்.

“தேங்க் யூ டார்லிங்”

“ஸ்வாதி பர்த் டேக்கு வரச்சொல்லி ரேகா பேசினா”

“ம்… ரெண்டு நாள் முன்னால அவளே கால் பண்ணி அஸ்வினுக்கு குடுத்ததை விட நல்ல கிஃப்ட்டா வேணும் மாமான்னு சொல்லிட்டா ”

“அடிப்பாவி!” என்று சிரித்த ருக்மிணி “உன் மொபைல்ல சார்ஜ் இல்லையா சௌ, நீ எடுக்கவே இல்லைன்னு ரேகா சொன்னா”

“கால் எதுவும் வரலையேடா”


ருக்மிணி அனிச்சையாக சௌமித்ரனின் மொபைலில் மிஸ்ட் காலை செக் செய்ய, எதுவும் இல்லாததில் குழம்பிய ருக்மிணி பிறகு அதை மறந்துபோனாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
13
😍😍😍

குழந்தை பத்தி ஜெயந்தி சொன்னதை இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுருவாளா? இல்ல மூளையில ஏத்துவாளா? 😏😏
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
10
அம்மா சொன்ன விஷயம் அருமை... அது புரிஞ்ச நல்லது... நம்ம சௌமி வேற ரொம்ப நல்ல பையன் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியல... என்னோட friend ஒண்ணு சொல்லுவாங்க எப்போவும் போல இல்லாம தீடீர்னு ரொம்ப caring யா பாசமா பொறுமையா இருந்தா என் husband ஏதோ தப்பை பண்ணி இருக்கார்னு அர்த்தம்னு சொல்லுவாங்க... இப்போ எனக்கு அது தான் நியாபகம் வருது
 
Top Bottom