• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
168
பகலிரவு பல கனவு - 3

ஜூஸ் கடையில் இருந்த அறைக்குள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பிரபாகரன். இன்று காலையில் பார்த்த மனிதர்கள் அவனுக்குள் ஓர் எரிமலையையே ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

முருகானந்தம் தங்கை ஜோதியின் மீது பாசமலர் சிவாஜியை விட பலமடங்கு பிரியம் வைத்தவர். தங்கை எதையும் வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே வாங்கிக் கொடுத்து விடுவார். அந்தக் காலத்திலேயே மதுரைக்கு அனுப்பி கல்லூரியில் படிக்க வைத்தார். பல தலைமுறைகள் கடந்து குடும்பத்தில் பிறந்த பெண் வாரிசு, வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என்று போகிற போக்கில் தந்தை சொல்லிவிட அதுவே தனயனின் வேதவாக்காகிப் போனது.

அவளது கல்யாண விஷயத்திலும் அப்படித்தான், இவர்களின் தகுதிக்கு மீறிய வசதியான மாப்பிள்ளை மீது அவள் ஆசைப்பட்ட போது பாதி சொத்துக்களை விற்று தங்கைக்குச் சீர் செய்தார். தங்கை காட்டிய பெண்ணையே தானும் மணம் செய்து கொண்டார்.

ஆனால் அவருக்கு மனைவியாக வந்த காமாட்சி விரைவிலேயே நாத்தியின் குணத்தைப் புரிந்து கொண்டாள். இவர்களை விடவும் வசதியாக வளர்ந்தவள் காமாட்சி. ஆனால் தனக்கு உரிய சொத்தை நாத்தியின் வீடு அனுபவிக்கட்டும் என்று விடும் அளவு பெருந்தன்மை அவளுக்கு இல்லை.

எதிர்பாராத விதமாக மாமியாரின் உதவி அவளுக்கு முழுதாகக் கிடைத்தது. “எம்புள்ளைங்க தான். தறுதலைங்களா வளர்த்து வச்சிருக்கேன். இப்படியே போனா நாம நடுத்தெருவில தான் நிக்கணும். இந்த மடையனுக்கு இப்படியா பாசம் கண்ணை மறைக்கும். நாளைப் பின்ன நமக்கும் குழந்தைங்க வரும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சா இப்படிச் செய்வானா?” என்று புலம்பினார் அவர்.

ஆச்சரியமாக பார்த்த காமாட்சியைப் பார்த்து மெலிதாகச் சிரித்து வைத்தார். “தங்க ஊசின்னா கண்ணுல குத்திக்க முடியுமா? ஒத்தப் பொண்ணுன்னு நானே செல்லம் கொடுத்ததில்ல. சொல்லப் போனா ரொம்ப கண்டிப்பா தான் இருந்திருக்கேன். அவங்க அப்பாரும் அப்படித்தான். உம்புருஷன் தான், உலகத்தில இல்லாத தங்கச்சி வந்தது மாதிரி அந்த ஆட்டம் ஆடுவான். அது தெரிஞ்சு அவளும் நல்லா கண்ணக் கசக்கி காரியம் சாதிச்சிட்டுப் போயிடுவா. இது எங்க போய் நிக்கப்
போகுதோ. கௌமாரித் தாயே நீ தான் ஒரு வழி காட்டணும்!”

ஜோதிக்குத் திருமணம் முடிந்து சில வருடங்கள் குழந்தைப் பேறு இல்லாமல் போனது. ஆனால் காமாட்சிக்குத் திருமணம் முடிந்து முதல் வருடத்திலேயே பிரபாகரன் பிறந்து விட்டான், அடுத்த மூன்று வருடத்தில் மலர்விழி பிறந்து விட்டாள்.

ஜோதிக்கு வைத்தியம் என்ற பெயரில் பணம் தண்ணீராகச் செலவழிந்தது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு மருமகளுக்கு மட்டும் இவ்வளவு செலவா என்ற கேள்வியும், இதற்கு பதில் வேறொரு திருமணம் செய்துவிடலாமே என்ற அறிவுரையும் எளிதாகக் கிடைத்தது.

தங்கையின் நிலை கண்டு முருகானந்தம் மனமொடிந்து போனார். சொத்துக்கள் மொத்தமும் போனாலும் பரவாயில்லை, தங்கைக்கு குழந்தை வேண்டும் என்பதே அவரது லட்சியம் ஆனது. மதுரையில் சிறந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர் சொன்ன அறிவுரைகளை விடாமல் பின்பற்றியதில் ஜோதி கர்ப்பம் தரித்தாள்.

ஒரே பிரசவத்தில் அவளுக்கு ஜாக்பாட் அடித்து பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஐந்து வயது பிரபாகரனிடம் வருவோர் போவோர் எல்லாம், “ஏலேய் ராசா! இங்க பாத்தியா இது தான் உன் அத்தை மக, உன் வருங்கால பொண்டாட்டி. நீ தான் கண்ணுல பொத்தி வச்சுப் பாத்துக்கணும்” என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

ஏற்கனவே அத்தை மகளின் ரோஜா போன்ற சருமத்தில் லயித்திருந்த சிறுவன் அவள் தனக்குரியவள் என்று மனதிற்குள் பதிய வைத்துக்கொண்டான். சங்கீதாவும் வளர வளர மச்சான் என்று கிள்ளை மொழி பேசி அவன் பின்னால் சுற்றி வந்தாள்.

ஆரம்பத்தில் ஏதோ நம்ம ஆளு என்று கிளுகிளுப்பாக இருந்தாலும் இதுவே பள்ளியிலும் தொடர அனைவரும் கேலி செய்ய, பிரபாகனுக்குக் கூச்சமாக இருந்தது. பிரபாகரன் ஐந்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் உணவு இடைவேளையின் போது ஒன்றாம் வகுப்பில் இருந்த சங்கீதா அவனது வகுப்பறைக்குள் தயங்கித் தயங்கி வந்தாள்.

வலது கையில் இருந்த தனது டிஃபன் பாக்ஸை நீட்டி, “மச்சான்! எனக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க. இந்த ஜோதி எனக்கு ஆம்லெட் வச்சிருக்கு. எனக்கு சாப்பிடத் தெரியல” என்று வந்து நின்றாள்.

பிரபாகரன் இதென்ன சோதனை என்று திருதிருக்க உடனிருந்த மற்ற சிறுவர்கள், “டேய்! பிரபா! உன் பொண்டாட்டி தான டா. ஊட்டி விடு. ஊட்டி விடு.. நாங்க வேணும்னா கண்ணை மூடிக்கிறோம்” என்று கேலி செய்ய பிரபாகனுக்குக் கோபம் வந்தது.

ஆனால் அவன் வளர்ந்த விதம் அத்தை மகளின் பசியைக் கவனிக்க சொன்னது. அந்த நேரத்தில் கோபத்தை ஒத்தி வைத்து சங்கீதாவின் பசியாற்றி அனுப்பி வைத்தான்.

“மா! ஒன்னு அந்த சில்வண்ட ஸ்கூல் மாத்தி விடுங்க. இல்லேன்னா, நான் வேற ஸ்கூலுக்கு போறேன். எப்போ பார்த்தாலும் மச்சான், மச்சான்னு பின்னாடியே வந்து.. ஒரு மாதிரி இருக்கும்மா..” என்று முருகானந்தம் இருக்கும் போது தாயிடம் கூறினான். அன்று நடந்த விஷயத்தை அவன் சொன்ன போது முருகானந்தத்திற்கே தங்கையின் மீது சந்தேகம் வந்தது. ஆனாலும் அவளை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.

“ஓ… துரைக்கு என் மருமக மச்சான்னு கூப்பிடறது கேட்கப் பிடிக்கலையோ. அதனால என்ன, நஷ்டம் உனக்குத்தான்.” என்று இவனது ஸ்கூலை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். காமாட்சி தனது தந்தையின் மூலம் பிரபாகரனை கொடைக்கானலில் இருந்த பிரபலமான கான்வென்ட் ஒன்றில் சேர்த்து விட்டாள்.

ஆறாம் வகுப்பில் அவன் கான்வென்ட் மாணவன் ஆனான். அது வரை தேனியில் இருந்த பிரபலமான மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். படிப்பு மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் படுசுட்டியாக இருந்தான். அண்ணனைத் தொடர்ந்து மலர்விழியும் கான்வென்ட் மாணவி ஆனாள்.

பிரபாகரன் கொடைக்கானல் சென்றதுமே சங்கீதாவிற்குக் காய்ச்சல் வந்தது. அதற்காகச் சிறு பிள்ளையைத் தவமாய் தவமிருந்து பெற்ற மகளைப் பிரிய ஜோதி தயாராக இல்லை. பிரபாகரனும் படிப்பில் கவனம் வைத்திருந்த போதும் அவ்வப்போது சங்கீதா அவனது நினைவுகளில் வராமல் இல்லை.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் தான் பள்ளியின் முதல் மாணவனாக வருவான் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அது பொய்த்து விடாமல் காப்பாற்றி விட்டான்.

நாட்கள் உருண்டோட, சங்கீதா அடம் பிடித்து அங்கே ஆறாம் வகுப்பில் வந்து சேர்ந்தாள். பிரபாகரன் இப்போது பதினொன்றாம் வகுப்பில் இருந்தான். சங்கீதாவை அங்கு கண்டதும் பிரபாகரனின் மனம் தடுமாறியது நிஜம். பதின்ம வயதிற்கே உரிய பூரிப்புடன் தனது முறைப்பெண், தனக்கே உரியவள் என்ற கர்வம் அவனை அடியோடு சாய்த்தது. ஒரு நாளில் பத்து தடவையாவது மச்சான் என்று வந்து சந்தேகம் கேட்டாள். இப்போதெல்லாம் அவள் வாயில் இருந்து வரும் மச்சான் தேனாக இனித்தது. இன்னொரு முறை சொல்லுங்கனு கேட்கணும் போல இருந்ததோ?!

பிரபாகரனின் டியூஷனில் சங்கீதா சூப்பராகப் படித்தாள். அவனுக்கோ படிப்பில் கவனம் சிதறியது. நல்ல நண்பர்களுடன் மட்டுமே தொடர்பில் இருந்தவன் இப்போது சில போதைப் பழக்கங்களுக்குப் பழகி இருந்தான். தேர்வு நேரத்தில் தான் தானும் படிக்க ஞானோதயம் வந்து சேர்ந்தது. ஆனால் பத்தாம் வகுப்பில் 490/500 வாங்கியிருந்த பையன் பன்னிரண்டாம் வகுப்பில் 280/500 வாங்கி இருந்தான்.

ஏழாம் வகுப்பில் இருந்த சங்கீதாவிற்கு வேறு சில நண்பர்கள் கிடைத்திருக்க பிரபாகரனை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போலப் பார்த்து வைத்தாள். மச்சான் என்ற வார்த்தை தவறியும் அவள் வாயிலிருந்து வரவில்லை. ஆசிரியர்கள் திகைத்து நின்றனர். அவனோ தெனாவெட்டாக நின்றான். தாயை ஏமாற்றிவிட்டோம் என்பது ஒரு ஓரத்தில் இருந்தாலும் தந்தையின் கோபத்தில் குளிர்காய்ந்தான்.

ஏழாம் வகுப்பு லீவிற்கு வீடு வந்த சங்கீதா பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சேதி வந்து சேர்ந்தது.

பிரபாகரன் தான் குடிசை அமைத்து சீர் செய்ய வேண்டிய கட்டாயம். சொந்தத்தில் வேறு யாரும் முறை மாமன் இல்லை. வழக்கம் போல முருகானந்தம் மருமகளின் விழாவிற்கு எத்தனை சிறப்பாக சீர் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

ஏதோ போதாத நேரம், ப்ளஸ் டூவில் மதிப்பெண்களைக் குறைவாகப் பெற்றாலும் பிரபாகரன் போதுவாகவே நன்றாகப் படிக்கக் கூடிய பையன். ஏதேனும் கல்லூரியில் பணம் செலவழித்து படிக்க வைத்தால் நிச்சயமாக பணத்தை வீணடிக்க மாட்டான். இந்த விஷயத்தை பிரபாகரனில் ஆரம்பித்து காமாட்சி, மலர்விழி, அப்பத்தா, அறிந்தவர், தெரிந்தவர் என்று அனைவரும் முருகானந்ததிடம் சொல்லிவிட்டார்கள்.
அவர் மனம் இரங்குவதாக இல்லை.

“துரை வாங்கின மார்க்குக்கு நான் லட்ச லட்சமா கொட்டிக் கொடுத்துப் படிக்க வைக்கணுமா? அவனுக்காகக் கான்வென்ட்ல கொட்டுனது போதும். இதுக்கு மேல ஒரு சல்லிப் பைசா செலவழிக்க மாட்டேன்” என்று தெளிவாகச் சொல்லி விட்டார். காமாட்சியும் அப்பத்தாவும் அவரவர் சிறுவாட்டுக் காசைத் தருவதாகச் சொன்ன போது பிரபாகரன் மறுத்து விட்டான். எதுவாக இருந்தாலும் தந்தையின் வழியில் வரவேண்டும் என்பது அவனது எண்ணமாக இருந்தது.

ஆனால் அவரோ இப்போது தங்கை மகளுக்கு சீர் செய்ய வேண்டி இருக்கும் ஒரே வருவாய் ஆதாரமான ரைஸ் மில்லை விற்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். கூடவே, தங்கை மகளுக்கு ஒரு தென்னந்தோப்பை எழுதி வைத்தாயிற்று.

மில்லை விற்று ஐம்பத்தியொரு தட்டுகளில் சீர் கொண்டு போன மாமனுக்கு பெரிதான வரவேற்பு ஒன்றும் அங்கே இல்லை. அரசல் புரசலாக அந்த மில்லை வாங்கியது கூட அவரது அருமைத் தங்கை தான் என்று தெரிந்து கொண்ட போது சிலை போல அமர்ந்து கொண்டார் முருகானந்தம். மகனுக்கான வாய்ப்பைப் பறித்து தங்கையின் போலிக் கண்ணீரை நம்பியதன் விளைவு.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்களே, அது போல இரு குடும்பத்தின் வசதி வாய்ப்புகளில் மாற்றம் வந்தது. சங்கீதாவின் குடும்பம் ஏணியின் மேல் படியில் வேகமாக ஏறி இருக்க, பிரபாகரனின் குடும்பம் கீழேயே இருக்க வேண்டியதாயிற்று. ஏதோ இப்போது தான் தட்டுத் தடுமாறி ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே இருந்தது.

விளைவு, அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று பணம் பாட வைத்துவிட்டது.

சங்கீதா ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க, பிரபாகரன் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருந்தான். இதோ உடன் பயிலும் பணக்கார மருத்துவ மாணவனைக் காதலித்து கல்யாணம் வரை வந்து விட்டாள்.

பழைய நினைவுகள் மனதை அழுத்த தலையைப் பலமாக உலுக்கினான் பிரபாகரன்.

“அண்ணே!” என்று தயங்கித் தயங்கி உள்ளே வந்த பையன் “உங்க மொபைல் ரொம்ப நேரமா கதறிட்டு இருக்கு.‌ அம்மா விடாமல் கூப்பிட்டு இருக்காங்க. சாப்பாட்டு நேரம் தாண்டி போயிட்டு இருக்கு. எழுந்திருச்சு வீட்டுக்கு போங்க” என்றான்.

“டேய்! மனுஷன் என்ன நிலைமைல இருக்கான்னு தெரியாம… அட்வைஸ் பண்ண வந்துட்டான்.. போடா.. “

“அது சரி.. நான் அட்வைஸ் பண்ணி… நீங்க அதைக் கேட்டு.. பூமி அப்புறம் தலைகீழா சுத்தும். முதல்ல எழுந்திருங்க. சத்தமா பேசினா, இவரு பெரிய டான்னு நினைப்பு.. “ என்று பிரபாகரனை எழுப்பி விட்டான் அவன்.

“அல்லி நகரத்தில அந்த ஷாப் ஓனர் கிட்ட பேசணும்னு சொல்லி இருந்தேனே. இன்னைக்கு அவரு இருக்காரான்னு பாத்துட்டு போறேன்” என்று எழுந்தவன் வேகமாக வெளியே வந்து பைக்கை உதைத்தான்.

“இவரு ஹெல்மட் போட்டு போனாலே எதுக்க வாரவனெல்லாம் அரண்டு போவான். இதுல ஹெல்மெட் இல்லாம வேற போறாரு.. எத்தனை பேருக்கு பேயோட்டணுமோ?!” என்று பெருமூச்சு விட்டான் அவன்.

பிரபாகரனோ பேயோட்டும் நிலையைத் தாண்டி, “என்றென்றும் புன்னகை…” என்று பாடும் நிலையில் இருந்தான். அதே மயக்க நிலையில் வீடு வந்து சேர்ந்தான்.

‘அந்தப் பொண்ணு எதுக்கு என்னை அப்படிப் பாத்துச்சு?’ என்ற யோசனையிலேயே தனது வீடு வந்து சேர்ந்தான் பிரபாகரன். அவனது அப்பத்தா சாப்பிடாமல் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.

“ஏஞ்சாமி! வீட்டுக்கு யார் யாரோ வருவாங்க. அதுக்கெல்லாம் கோவிச்சிட்டு இப்படித்தான் சொல்லாம கொள்ளாம எங்கேயாச்சும் போறதா? குடும்பத்துக்காக மாடா உழைக்கிற ஆம்பள நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா? உனக்காக பாத்துப் பாத்து சமைச்சு வச்ச உங்க ஆத்தா மேல் கொஞ்சமாச்சும் மருவாதை இருந்தா இப்படி செய்தியா? வந்தவங்க தான் பொழப்பத்த ஆளுங்கன்னு தெரியும். இப்படிப் பாதிப் பேச்சுல பொசுக்குனு வெளிய போனா அதுங்க கூடவே கூப்பிட்டு வந்த சம்பந்தகாரங்க என்ன நினைப்பாங்க?” வாசலில் நிற்க வைத்து கேள்விகளாக அடுக்கினார் அப்பத்தா.

மகனைக் கண்டதும் அவனது தட்டை எடுத்து வைத்து பரிமாறத் தயாராக நின்றார் காமாட்சி. மலர்விழியும் அன்னைக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். முருகானந்தம் வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகள் எதையும் காணவில்லை. வந்தவர்கள் இத்தனை நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை, பிரபாகரன் நல்ல முறையில் வரவேற்று உபசரித்திருந்தால் அத்தையின் குடும்பம் சாப்பிட்டு சென்றிருக்கலாம்.

அது கூடாது என்பதற்காகவே பிரபாகரன் ஆரம்பத்திலேயே சொதப்பி வைத்தான். பெண் எடுக்கும் சம்பந்தி வீட்டில் மரியாதை குறைவாக நடத்திய பிறகு கை நனைக்க மானமுள்ள யார் தான் முன்வருவார். பிரபாகரனின் செயல் வீட்டில் யாருக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வீடு தேடி வந்தவர்களை மரியாதை குறைவாக நடத்தியற்கு மன்னிப்பு கேட்டே அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

மறந்தும் அவர்களைச் சாப்பிட்டுச் செல்லுமாறு உபசரிக்கவில்லை. அவர்கள் வந்த வேலை முடிந்ததும் உடனே கிளம்பி விட்டனர். அப்பத்தா கூட பெற்ற மகளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டு சம்பந்தி வீட்டு மனிதர்கள் புருவம் உயர்த்தினாலும், இது அவர்களின் குடும்ப விஷயம் என்று ஒதுக்கி விட்டனர்.

அவர்கள் சென்று வெகு நேரம் கழித்துத் தான் பிரபாகரன் வந்து சேர்ந்தான்.

வேறொரு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கும் பிரபாகரனின் கண்களுக்கு அப்பத்தாவின் உருவம் மறைந்து அங்கே சற்று முன்னர் பார்த்த பெண்ணைப் போலத் தெரிந்தது.

கண்களில் மயக்கத்துடன் அருகில் வந்த பேரனின் முகத்தை வினோதமாகப் பார்த்த அப்பத்தா, அவன் வேகமாக அவரைக் கட்டிப் பிடிக்கவும், “ஏ புள்ள காமாட்சி, சீக்கிரம் இங்க வாத்தா. உன் மவனைச் செத்த என்னான்னு கேளு” என்று அலறினார்.

இந்த அலறல் எல்லாம் பேரனின் காதில் விழுந்தது போல் தெரியவில்லை. “
அந்தப் பொண்ணு யாரா இருக்கும்?” என்ற கேள்வியுடனே தனது அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்.
 
Top Bottom