• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 1

Dhakai

New member
Joined
Mar 23, 2025
Messages
5
"அவரை எனக்குச் சுத்தமா பிடிக்கலைமா" தாயிடம் கோப முகத்தைக் காட்டிக் கூறியிருந்தாள் சுந்தரலட்சுமி.

"இங்க யாரும் பிடிச்சி கல்யாணம் செஞ்சி, பிடிச்சி வாழலை. பிடிக்குதோ பிடிக்கலையோ கல்யாணம் செஞ்சிக்கனும்‌. வயசான காலத்துல, கூட ஒரு துணை வேணும்னு தான் பிடிக்கலைனாலும் வாழ்ந்துட்டு இருக்காங்க" என்று அவளின் அன்னை செல்வராணி கூறியதைக் கேட்டு,

அவளின் தந்தை முகுந்தன், "ஓஹோ அப்ப நீ என் கூட பிடிக்காம தான் வாழ்ந்துட்டு இருக்கியா என்ன?" கோபம் கலந்த முறைப்புடன் பார்த்தவராய் கேட்டிருந்தார்.

தந்தையின் கேள்வியில் தாய் முழிப்பதைக் கண்டு சுந்தரலட்சுமி வாய்க்குள் சிரித்திருக்க,

கடுப்பானவராய் செல்வராணி, "பொண்ணுக்கு இருபத்தொன்பது வயசு ஆகுது. எப்படியாவது பேசி சம்மதிக்க வைக்கலாம்னு பார்த்தா என்னை கேள்விக் கேட்டுட்டு இருக்கீங்க?" என்று கடுகடுத்தார்.

அம்மாவின் பதிலில் எரிச்சலானவளாய், "அம்மா அப்படி ஒரு கல்யாணம் எனக்குத் தேவையேயில்லை. யாரோட தயவும் இல்லாம என்னோட கடைசிக் காலத்தை எப்படி வாழனும்னு எனக்குத் தெரியும். அதுக்கான சம்பாத்தியமும் உடல் ஆரோக்கியமும் எனக்கு இருக்கு!" என்றவளைக் கடுங்கோபத்துடன் முறைத்தவராய் கணவரைப் பார்த்தவர்,

"எப்படிப் பேசுறா பாருங்க! அவளை விரும்பித் தேடி வர்ற வரனை எல்லாம் வேண்டாம்னு சொல்றா! இவ ஓகே சொல்ற வரன்கள்லாம் இவளை வேண்டாம்னு போய்டுறாங்க. காலாகாலத்துல கல்யாணம் செஞ்சா தானே குழந்தை பெத்துக்க வளர்க்கலாம் உடலுலயும் மனசுலயும் வலுயிருக்கும். நாம சொல்றதை ஏன் இவ புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா" மகளின் எதிர்காலத்தை எண்ணி கவலைக் கொண்டவராய் வருத்தமாய் உரைத்திருந்தார் செல்வராணி.

சென்னையிலேயே மத்திய அரசாங்கப் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவரான முகுந்தனும் இல்லத்தரசியாய் இருக்கும் செல்வராணியும் ஈன்றெடுத்த செல்வ மகளான சுந்தரலட்சுமி வணிக மேலாண்மைத் துறையில் (MBA) முதுகலைப் பட்டமேற்படிப்புக் கல்வி பயின்றபின் கடந்த எட்டு ஆண்டுகளாய் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி விட்டு, இப்பொழுது மகிழுந்து நிறுவனத்தில் விற்பனை மேலாளராய் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறாள்.

உயரமாய் வளர்த்தியான, அதற்கேற்ற பூசினார் போன்ற உடல்வாகுடன் இருக்கும் சுந்தரலட்சுமிக்கு மாநிறத்தில் அழகு முகம் ஆயினும் ஆஜானுபாகுவான தோற்றம்.

அவளின் திருமணம் தள்ளிப்போக இத்தோற்றமே காரணமான போதும், அன்றாடம் கோட் சூட் உடையுடன் பணிக்குச் செல்லும் யுவதியான அவளுக்கு, தனக்கிணையான உயரத்துடன் அழகுத் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலம் விளையாடும் மென்பொறியாளரை மணக்க வேண்டுமென்ற விருப்பமும் மற்றொரு காரணமாகிப் போனது.

இவளுக்கு வரும் வரன்கள் எல்லாம் இவளின் எதிர்பார்ப்பிற்கு எதிர்பதமாய் இருப்பதில் எவரையும் பிடிக்கவில்லை இவளுக்கு.

இவளுக்குப் பிடித்த வரன்களுக்கு இவளின் இந்த ஆஜானுபாகுவான தோற்றம் இவளை வேண்டாமென ஒதுக்க வைத்திருந்தது.

இவ்வாறாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தட்டிப் போகும் மகளின் திருமணத்தை எண்ணி தாய் தந்தை இருவருமே பெருத்த கவலையில் இருக்க, தற்போது வந்த வரனையும் வேண்டாமென மகள் கூறியதில் கவலைக் கொண்டனர் இருவரும்.

மகளைக் குறித்த செல்வராணியின் பரிதவிப்பும் கவலையும் முகுந்தனுக்குமே இருக்க, "லட்சுமி" என்று அழுத்தமான கண்டிப்பான குரலில் மகளை அழைத்தார்.

அவரின் அழைப்பில் அவர் புறம் திரும்பியவள் கோபாக்கினி கண்களுடன் அவரைப் பார்த்திருந்த போதும், என்றும் தந்தையை எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லை என்பதால் அமைதியாக நின்றிருந்தாள்.

"அந்தப் பையனுக்கு என்ன குறைச்சல்? ஏன் வேண்டாம்னு சொல்ற?" அதட்டலாய் கேட்டிருந்தார்.

"என்ன குறைச்சல் இல்ல? டிப்ளமோ தான் படிச்சிருக்காரு. அரிசிக் கடை வச்சிருக்காரு. தலைமுடியைப் படிய வாரிக்கிட்டு வேஷ்டி சட்டைப் போட்டுக்கிட்டு கிராமத்தான் மாதிரி இருக்காரு. நான் எதிர்பார்க்கிற ஸ்மார்ட் லுக் கூட இல்ல! உயரம் படிப்பு வேலைனு எல்லாத்துலயும் என்னை விட குறைவாக இருக்கிறவரை நான் கட்டிப்பேன்னு எப்படிப்பா நினைச்சீங்க? அவரோட போட்டோவைப் பார்த்ததும் பிடிக்கலைப்பா" முகத்தில் பிடித்தமின்மை படர உரைத்திருந்தாள் சுந்தரலட்சுமி.

"நீ சொல்ற வெளித்தோற்றம் நிரந்தமானது இல்லமா. பையன் ஆரோக்கியமா இல்லைனா தான் கேள்விக் கேட்கனும். அவனோட குணநலன்களும் சம்பாத்தியமும் தான் இங்கே முக்கியமா பார்க்கனும். வாழ்க்கைக்கு அது தான் முக்கியம்! படிப்பு முக்கியம் தான் ஆனால் பொறுப்பான பையனா இருக்கிறதும் முக்கியம் தானே. குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டு உன்னைக் காப்பாத்துற அளவுக்கு அவனுக்கு சம்பாத்தியமும், வீடும் இருந்தா போதாதா?" என்று கேட்டார்.

'எனக்கு என்னைக் காப்பாத்திக்கத் தெரியும். அதுக்காகலாம் கல்யாணம் தேவையில்ல' என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை முழுங்கியவளாய் தந்தையைப் பார்த்திருந்தாள் சுந்தரலட்சுமி.

"அம்மாவுக்காக அந்த பையன்கிட்ட ஒரு தடவை நேர்ல பேசுமா! அதுக்குப் பிறகும் உனக்குப் பிடிக்கலைனா நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அந்தப் பையனுக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு தரகர் சொன்னாரு. உன்னை பிடிச்சி வர்ற வரன் நல்லவனா இருக்கும் போது நாம வேண்டாம்னு சொல்ல வேண்டாமே" மகளின் தாடையைத் தடவிக் கொஞ்சியவராய் செல்வராணி உரைக்கவும்,

அவரின் கொஞ்சல் கெஞ்சலில் மனம் இரங்கியவளாய், "சரி நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்" என்றாள் சுந்தரலட்சுமி.

பெயருக்கு அவனிடம் பேசிவிட்டு, பிடிக்கவில்லையென தாயிடம் கூறிக் கொள்ளலாம் என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள்.

'பச்சையம்மா! எப்படியாவது இந்த சம்பந்தம் அமைஞ்சிடனும்' என்று மனதோடு குலத்தெய்வத்தை வேண்டிக் கொண்டவராய் செல்வராணி கணவனிடம் பெண் பார்க்கும் நிகழ்வை ஏற்பாடுச் செய்ய சொல்ல,

"பொண்ணு பார்க்க-லாம் வர வேண்டாம். பொம்மை மாதிரி அலங்காரம் செஞ்சிட்டு வந்து எத்தனை பேருக்குத் தான் காபி டீ கொடுக்கிறது? நான் அவரை காபி ஷாப்ல மீட் செஞ்சி பேசிக்கிறேன். அதுக்கு ஏற்பாடு செய்யுங்க" என்றாள் சுந்தரலட்சுமி.

"என்னது காபி ஷாப்ல பேசப் போறியா? ஹோட்டலுக்குப் போய் யாருனே தெரியாதவன் கூட காபி குடிச்சிட்டு பேசிட்டு இருப்பியா நீ? என்ன பழக்கம் இது?" எகிறிக் கொண்டு வந்தார் செல்வராணி.

கடுப்பானவளாய், "அப்பா! இவ்வளோ கட்டுப்பட்டித்தனமான அம்மாவை நீங்க கல்யாணம் செஞ்சிருக்க வேண்டாம்ப்பா" என்று சுந்தரலட்சுமி உரைத்த நொடி,

"அடிப்பாவி! உன்னை வாழ வைக்க நான் பேசினா.. என் வாழ்க்கையை நாசமாக்கப் பார்க்கிறியா நீ" என்று செல்வராணி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்துடன் கேட்டிருந்தார்.

"ஆபிஸ்ல எவன்னு தெரியாதவன் கூடலாம் தான் கஸ்டமர்னு பேச வேண்டியது இருக்கும். காபி டீ குடிக்க வேண்டியது இருக்கும். சில நேரம் சாப்பிட வேண்டியது கூட இருக்கும். இதெல்லாம் பார்த்தா முடியுமா மா! நான் அவரை காபி ஷாப்ல தான் பார்த்துப் பேசுவேன்" என்று கூறிவிட்டு அவள் வேலைக்குச் சென்று விட,

"என்னங்க இவ இப்படிப் பேசுறா? நாம பார்த்திருக்க பையன்கிட்ட போய் காபி ஷாப்ல பொண்ணை போய் பாருங்கனு சொன்னாலே பொண்ணை வேண்டாம்னு சொல்லிடுவாருனு தோணுது! டிப்ளமோ படிச்சிட்டு அரிசி கடை வச்சிருக்க பையனுக்கு இந்த பழக்கவழக்கங்கள்லாம் பிடிக்குமா என்ன?" என்று கவலையுடன் கேட்டார் செல்வராணி.

"நான் தரகர்கிட்ட பேசுறேன் செல்வா! ஆனா லட்சுமிக்கிட்ட அந்தப் பையனுக்கு அவளைப் பிடிச்சிருக்கிறதா ஏன் சொன்ன? நாம ஓகே சொன்ன பிறகு தானே நம்ம பொண்ணு போட்டோவையும் ஜாதகத்தையும் பையன் வீட்டுல கொடுக்கப் போறதா தரகர் சொன்னாரு. ஆனா நீ அதுக்குள்ள இப்படி ஏன் சொன்ன?" எனக் கேட்டார்.

"நீங்க தானே அந்தப் பையனை பத்தி விசாரிச்சிட்டு ரொம்ப பொறுப்பான நல்ல பையன். அந்தப் பையனுக்கு நம்ம பொண்ணை பிடிக்கிற பட்சத்துல மிஸ் செஞ்சிடக் கூடாதுனுலாம் நேத்து சொன்னீங்க. அதான் நல்ல பையனை மிஸ் செஞ்சிட வேண்டாமேனு அப்படிச் சொன்னேன்" என்றார் செல்வராணி.

"ஹ்ம்ம்ம் எப்படியாவது இந்தப் பையனை நம்ம பொண்ணுக்குக் கட்டிக் வைக்கனும்னு எனக்கும் தான் ஆசையா இருக்கு! ஆண்டவன் என்ன தீர்மானிச்சிருக்கானோ" என்று பெருமூச்சு விட்டவராய் தரகருக்கு அழைத்துப் பேசினார் முகுந்தன்.


அதே நேரம் இங்கே சென்னை தாம்பரத்தில் செந்தில் அரிசி மண்டி என்று பெயரிடப்பட்ட அந்தக் கடைக்குள் நுழைந்த செந்தில், அங்கு வேலையாளாய் பணிபுரிபவனை நோக்கி, "ஏன்டா காலங்காத்தாலயே போனை நோண்டிட்டு இருந்தீனா வேலை உருப்புடுமா?" என்றவனாய் அவனின் மண்டையில் தட்டி கைப்பேசியை புடுங்கிக் கொண்டு அரிசி மூட்டையின் கணக்கு வழக்குகளைப் பார்க்கலானான்.


அச்சமயம் திருமணத் தரகரான பாலமுருகன் கைப்பேசியில் அழைத்து அவனிடம் பேசியவராய், "பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்காம் செந்தில். பொண்ணை நேர்ல பார்த்து பேச வரச் சொன்னாங்க" என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.


பெண் வீட்டாருக்கு தன்னைப் பிடித்திருப்பதாக அறிந்ததில் மகிழ்வுற்றவனாய் கண்கள் மின்ன, "அப்படியா பாலாண்ணா. ரொம்ப சந்தோஷம். மாமாவுக்குப் பொண்ணு வீட்டுக்காரங்க டீடெய்ல்ஸ்லாம் அனுப்புங்கண்ணா. மாமாவுக்கும் அம்மாவுக்கும் இந்தச் சம்பந்தம் பிடிச்சிருந்துச்சுனா பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்யுங்க" என்றான்.

செந்திலின் பத்தாவது வயதில் அவனின் தந்தை இறைவனடி சேர்ந்திட, கும்பகோணத்தை விட்டு தாயுடன் சென்னை வந்தவன், பாலமுருகனின் வீட்டினருகில் தான் முதலில் வசித்திருந்தான்.

தான் பார்த்து வளர்ந்தவன் என்பதாலேயே அவன் மீது கரிசனம் கொண்டவராய் செந்திலின் வயதைக் கருத்தில் கொண்டு இந்தச் சம்பந்தத்தை எப்படியேனும் முடித்து விட வேண்டுமென எண்ணி சுந்தரலட்சுமியின் தந்தையிடம் செந்திலைப் பற்றி உயர்வாய் எடுத்துக் கூறி சம்மதிக்க வைத்திருந்தார் பாலமுருகன்.

அவ்வாறு தான் முன்னெடுத்து பேசி சம்மதிக்க வைத்த சம்பந்தத்தை உறுதிபடுத்த மாமாவின் சம்மதம் வேண்டுமென செந்தில் உரைத்ததில் கடுப்பானவராய், "செந்திலு நான் சொல்றதை கேளு. உன் மாமா உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிற எண்ணத்துல இருக்கிற மாதிரியே தெரியலை. எந்த ஜாதகம் கொடுத்தாலும் பொருந்தலை பொருந்தலைனு சொல்லி சொல்லியே உனக்கு முப்பத்திரண்டு வயசு ஆகிப் போச்சு. அவரோட ரெண்டு மகன்களுக்கும் இருபத்தஞ்சு வயசுல மொத வந்த பொண்ணு ஜாதகத்தையே பொருத்தம் வருதுன்னு கட்டி வச்சி இப்ப பேரன் பேத்தி பார்த்துட்டாரு. ஆனா உனக்கு மட்டும் இப்படியே தள்ளிட்டு போறாரு. இது எனக்கு சரியா படலை" என்றார்.

"பத்து வயசுல அப்பாவை இழந்துட்டு அம்மா கூட கும்பகோணத்துலருந்து சென்னைக்கு மாமாவை நம்பி மட்டும் தான் வந்தேன். அவர் தான் எங்களுக்கு உங்க வீடு பக்கத்துல தனி வீடு பார்த்துக் கொடுத்தாரு. என் அம்மாவுக்கு ரேஷன் கடை கவர்மெண்ட் வேலை வாங்கிக் கொடுத்தாரு. எனக்கு படிப்பு வரலைனதும் அவரோட அரிசிக் கடைலயே எனக்கு வேலையைக் கொடுத்து தொழில் கத்துக் கொடுத்து, சொந்தக் கடையும் எனக்கு வச்சி கொடுத்திருக்காரு. இப்ப வரைக்கும் எங்களுக்கு ஒன்னுனா வந்து நிப்பாரு! எனக்கு தாய்மாமன் மட்டுமில்ல தாய் மாதிரி அவரு. இனி அவரைப் பத்தி என்கிட்ட தப்பா பேசாதீங்க பாலாண்ணா. இப்படி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்" அழுத்தமாய் அவன் உரைத்ததில் அவருக்கு கோபம் மூண்ட போதிலும் அமைதிக் காத்தவராய்,

"உன் நல்லதுக்குத் தான் சொன்னேன் செந்திலு. அவரைக் குறைச்சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது. பொண்ணு ஜாதகத்தை அனுப்புறேன். உன் மாமாவையும் அம்மாவையும் கேட்டுட்டு சொல்லு. நேர்ல பேச ஏற்பாடு செய்றேன்" அவர் காரியத்தில் கண்ணாய் இருப்பது போல் காட்டிக் கொண்டு இணைப்பைத் துண்டித்தார்.

'உன் மாமனை நம்பிட்டு இருக்கிற வரைக்கும் உனக்கு வாழ்க்கைல உருப்படியா எதுவும் நடக்காதுடா செந்திலு' தனக்குள்ளேயே புலம்பியவராய் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றார் பாலமுருகன்.

புலனத்தில் தரகர் அனுப்பிய சுந்தரலட்சுமியின் புகைப்படத்தைப் பார்த்த செந்தில், 'இவ்ளோ அழகா இருக்கிறப் பொண்ணுக்கு என்னை எப்படிப் பிடிச்சிது?' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டவனாய் பெண்ணின் ஜாதகத்தை மாமா செல்லத்துரையின் புலனத்திற்கு அனுப்பினான்.

"மாமா! பொண்ணு ஜாதகம் ஒன்னு அனுப்பிருக்கேன் பாருங்க. பொண்ணு வீட்டுல சம்மந்தம் செய்ய சம்மதம்னு சொல்லிட்டாங்களாம். நேர்ல வந்து பேச சொன்னாங்களாம். நாம தான் பார்த்து முடிவு சொல்லனும்னு தரகர் சொன்னாரு" என்ற வாய்ஸ் மெசேஜையும் அவருக்கு அனுப்பி வைத்தான்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த வாய்ஸ் மெசேஜைக் கேட்ட செல்லத்துரை, "சரி செந்திலு! நான் நம்ம ஜோசியர்கிட்ட பார்த்துட்டு சொல்றேன்" என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.

தனது அரிசிக் கடையில் இருந்த செல்லத்துரை, வீட்டிலிருக்கும் மனைவி காஞ்சனாவிற்கு கைப்பேசியில் அழைத்தவராய், "செந்திலுக்கு பொண்ணு ஜாதகம் ஒன்னு வந்திருக்கு. நம்ம ஜோசியர்கிட்ட போய் பொருத்தம் பார்த்துட்டு வாமா" என்று அவருக்கு அனுப்பி வைத்தார்.

பொண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் அமோகமாக இருக்கிறது என்று ஜோசியர் உரைத்ததைக் கேட்டு வந்த காஞ்சனா, செல்லத்துரைக்கு அழைத்தார்.

"அந்தப் பொண்ண கட்டிக்கிட்டா செந்திலு காரு பங்களானு பேரு புகழோட அந்தஸ்தான ஆளா மாறிடுவானாம். வியாபாரம் விருத்தியாகுமாம். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை இருக்குமாம். பேருக்கு ஏத்த மாதிரியே அந்தப் பொண்ணு எந்த வீட்டுல இருக்கோ அந்த வீட்டுல மகா லட்சுமி குடியிருக்குமாம். அதனால விட்டுடாதீங்க எப்படியாவது பொண்ணு வீட்டுல பேசி, இந்தக் கல்யாணத்தை நடத்திடுங்கனு ஜோசியர் சொன்னாரு" என்று காஞ்சனா கூறியதைக் கேட்டு புருவங்கள் சுருங்கி விரிய யோசித்தார் செல்லத்துரை.

"சரி நான் செந்தில்கிட்ட பேசுறேன்" என்றவர் சொன்னதும்,

"என்னனு பேசுவீங்க?" என்று கேட்டார் காஞ்சனா.

"இந்தச் சம்பந்தம் நமக்கு சரியா வராது, பொருத்தம் இல்லனு ஜோசியர் சொல்லிட்டாருனு சொல்லிடுறேன். நமக்கு மேல அவன் வளர்ந்து நின்னா அப்புறம் நமக்கென்ன மரியாதை" என்று செல்லத்துரை சொன்னதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவராய்,

"எங்க இந்தப் பொண்ணை இவனுக்கு கட்டி வச்சிடுவீங்களோனு பயந்துட்டேன். என்னிக்கும் இவன் நம்ம கைக்குள்ள இருக்கிற மாதிரியான பொண்ணா பாருங்க" என்றவராய் காஞ்சனா இணைப்பைத் துண்டித்தார்.

"பொண்ணு ஜாதகம் பொருந்தி வரலை செந்திலு! தரகர் கிட்ட சொல்லிடு! வேற பொண்ண பார்ப்போம்" என்றவராய் கடை வியாபாரத்தைப் பற்றி செல்லத்துரை மேற்கொண்டு பேச, காலையில் மனதிலிருந்த மகிழ்ச்சி முற்றாய் வடிந்து வெறுமை பரவ, எதையும் வெளிக்காட்டாது அமைதியாகப் பேசியிருந்தான் செந்தில்.

பெண்ணின் ஜாதகம் பொருந்தவில்லை என்று செந்தில் கூறியதைக் கேட்டு கடுப்பாகிப் போன பாலமுருகன், இவர்களை இணைப்பதற்கான வேறு மார்க்கங்களைப் பற்றிச் சிந்திக்கலானார்.

******

"அழகுல என்னடா இருக்கு. வயசான பிறகு அந்த அழகா கூட வரப் போகுது. எனக்கு உறுதுணையா இருந்து அன்பா பாசமா பார்த்துக்கிற பொண்ணு கிடைச்சா போதும்டா. நாள் முழுக்க உழைச்சி களைச்சி வரும் போது தோள் சாஞ்சிக்க ஒருத்தி வேணும்னு மனசு கிடந்து தவிக்குது சரவணா. எவ்ளோ பிசியா இருந்தாலும் என்னை நினைவுல வச்சி சாப்பிட்டீங்களானு கேட்டு‌ மெசேஜ் அனுப்புற ஒரு உறவு என் வாழ்க்கைல வந்துடாதானு ஏக்கமா இருக்குடா மச்சி"

அன்றிரவு வானத்து வெண்ணிலவைப் பார்த்தவாறு தனது கைப்பேசியில் பள்ளிக்காலத்துப் பால்ய நண்பன் சரவணனிடம் ஏக்கமாய் உரைத்திருந்தான் செந்தில்.

"அதெல்லாம் வர வேண்டிய நேரத்துல மகாலட்சுமி மாதிரி வந்து நிப்பாங்க பாரு. எனக்கும் இப்படித் தானே பொண்ணு அமையாமலே இருந்துச்சு. இப்ப பொண்டாட்டி மகனு சந்தோஷமா இருக்கேன்ல! அந்த மாதிரி உனக்கும் ஒரு வாழ்க்கை அமையும் செந்தில்" என்ற சரவணன்,

"உன் மாமன் உனக்குப் பொண்ணு பார்த்து வைக்கணும்னு நினைக்காதடா செந்திலு! ஆயுசுக்கும் அவரோட தொழிலைப் பார்த்துக்கிற வேலையாளா உன்னை வச்சிக்கிறதுக்காகவே இப்படி ஜாதகம் பொருந்தலைனு தட்டிட்டு போறாரோனு தோணுது?" என்றான்.

"ம்ப்ச் மாமா அப்படி நினைக்கிற ஆளுலாம் இல்லடா! என்னை விட அவருக்குத் தான் என் கல்யாணம் இப்படித் தள்ளிட்டே போறதுல வருத்தம் அதிகம்" வருத்தமான குரலில் உரைத்தான் செந்தில்.

"ஆமா நீதான் உன் மாமனை மெச்சிக்கனும். அவரோட ரெண்டு பசங்களுக்கு மட்டும் உடனே எப்படிப் பொண்ணு அமைஞ்சிதாம். உன்னை விட சின்ன பையன்ங்க அவனுங்களுக்குலாம் இருபத்தஞ்சு இருபத்தேழு வயசுலேயே கல்யாணம் செஞ்சி வச்சவரு, முப்பத்திரண்டு வயசு ஆகுற உனக்கு ஏன் இன்னும் பார்த்து வைக்கலை. உன் அம்மாகிட்ட சொன்னா அவங்களும் 'என் அண்ணன் அப்படிலாம் இல்லப்பானு' சொல்றாங்க. அவரையும் உன் அம்மாவையும் நம்பாம நீயே உனக்கு பிடிச்ச பொண்ணா பார்த்துக் கட்டிக்கோடா செந்திலு" என்றான் சரவணன்.

"என் ஜாதகத்துல இருக்க கோளாறுனால எனக்கு பொண்ணு அமையலைடா! அதுக்கு ஏன் நீ மாமாவைக் குறை சொல்ற? அவர் இல்லனா இந்தக் கடை கூட எனக்கு இருந்திருக்காதுடா" என்று இவன் உரைக்கவும்,

"நீ அவரோட கடைக்கு வேலைக்குச் சேர்ந்தப்ப அவருக்கு ஒரு கடை தான் இருந்துச்சு. இப்ப ஏழு கடை இருக்கு அவருக்கு. உன்னோட உழைப்புனால அறிவுனால உண்டான கடைகள் அது. அவரோட பசங்கலாம் ஐடில வேலைப் பார்க்கனால அவரோட இந்தக் கடைகளைலாம் பார்த்துக்க நீ வேணும்னு பேருக்கு உனக்குனு ஒரு கடையை வச்சிக் கொடுத்திருக்காரு. இந்தக் கடையோட வருமானத்தை தாண்டி உனக்கு வேறென்ன வருமானம் இருக்கு சொல்லு. அவரோட கடைகளை எல்லாம் நீ மெயின்டெய்ன் செய்றதுக்கு எதுவும் சம்பளம் போட்டு தராறா என்ன? அவரோட கடையை பார்த்துக்கிறதுக்குப் பதிலா நீ கூட இரண்டு கடை போட்டீனா இன்னும் அதிகமா சம்பாதிக்கலாம். அவரால தான்டா நீ இன்னும் வாழ்க்கைல முன்னேறாமலே இருக்க! எப்ப தான் நீ அதை புரிஞ்சிக்கப் போறியோ" என்று ஆதங்கத்துடன் உரைத்தான் சரவணன்.

"எப்ப தான் நீ அவரைப் பத்தி குறைச் சொல்லுறதை நிறுத்தப் போறியோ" என்றான் செந்தில்.

"நீ நம்புற மாதிரியே உன் மாமன் நல்லவரா இருந்து உனக்கு நல்லது நடந்தா சரி தான் மச்சி" என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.

செந்திலின் சொந்த வீடான அவ்வீட்டின் மேல்மாடியில் செந்தில் தாயுடன் வசித்திருக்க, தரைத்தளத்திலும் முதல் மாடியிலும் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தனர்.

செந்திலின் தாயார் மீனா வீட்டிற்குள் படுத்திருக்க, செந்தில் மொட்டை மாடியிலிருந்த கயிற்றுக் கட்டிலில் வானத்து நிலவைப் பார்த்தவாறு படுத்தவனாய் கைப்பேசியில் தமிழ் பண்பலைச் செயலியை இயக்கினான்.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

என்ற பாடல் ஒலிக்கவும் கண்களுள் சுந்தரலட்சுமியின் முகம் மின்னி மறைய, கைப்பேசியில் இன்று தரகர் அனுப்பிய அவளின் படத்தைப் பார்த்தவன்,

"ஹ்ம்ம் உன்னை கட்டிக்க எனக்கு கொடுத்து வைக்கலையே சுந்தரி" என்று பெருமூச்சு விட்டவனாய்,

நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…


என வாய்விட்டுப் பாடியவாறு இனிமையான பாடலின் தாலாட்டில் உறங்கியவனின் கனவினில் காட்சிக் கொடுத்திருந்தாள் சுந்தரலட்சுமி.
 
Last edited:

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom