• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 13

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
178
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 13


சில நாட்களாக ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த மாதுரி திடீரென உற்சாகம் காட்டியதால் நிச்சயமாக ஏதோ நல்லது நடந்திருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது. ஆனால், என்னவென்று மட்டும் கண்மணிக்குப் புரியவில்லை. அவளாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். முதலில் துகிலனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“நான் தான் சொன்னேனே மது? நீதான் படிப்பை விடப் போறேன்னு அவசரப்பட்டுப் பேசினே? சுய மரியாதையுடைய சிங்கப் பெண்ணாச்சே? என் பணத்துலதான் படிப்பேன்னு பிடிவாதம் வேற. இனிமேல் உன் பணத்துலயே படிக்கறதுக்கான வாசல் திறந்தாச்சு. இனிமேல் என்னோட மதுவின் காட்டில் மழை தான் போ. சரி, சாயந்திரம் எங்கேயாவது போகலாம். ரெடியா இரு. அத்தைட்ட நான் வந்து அனுமதி வாங்கிட்டு உன்னைக் கூட்டிட்டுப் போறேன் ” என்று துகிலன் சொல்ல, மாலை நேரத்தில் மன்னவனுடன் கழிக்கப்போகும் தருணத்துக்காக அப்போதிருந்தே அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது.

அதன்
பிறகு கண்மணியும், மாதுரியும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்பொழுது தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணத்தை கண்மணியுடன் பகிர்ந்து கொண்டாள் மாதுரி.

“அக்கா, இதுவரைக்கும் என்னோட குடும்பத்தைப் பத்தி உங்க கிட்ட நான் சொன்னதில்லை. நான் பொறந்தது எங்க ஞாபகன்னு தெரியாது. கொல்கத்தா, மும்பை, தில்லின்னு சுத்திட்டு இருந்தோம். அப்பாவுக்கு அரசாங்க வேலை. அதுவும் ரகசியப் புலனாய்வு துறை. அடிக்கடி வெளியூர் போவாரு. எங்கே போவாரு, எப்ப வருவாருன்னு எங்களுக்குத் தெரியாது. நான் ஆறாம் கிளாஸ் வந்ததில் இருந்து கொல்கத்தாவில் நானும், அம்மாவும் நிரந்தரமாத் தங்கிட்டோம். ஒவ்வொரு லீவிலயும் ஊர், ஊராச் சுத்துவோம் மூணு பேரும்.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிஸ்ஸா, பீகார், அஸ்ஸாம், சிக்கிம்னு நிறைய இடங்களுக்குப் போயிருக்கோம். எனக்கு மெடிக்கல் சீட் சென்னையில் கிடைச்சபோது அம்மாவும், அப்பாவும் தமிழ்நாடு பக்கம் நீ போகவேணாம்னு தடுத்தாங்க. நான் தான் பிடிவாதம் பிடிச்சு வந்தேன்.
எதுக்குத் தடுத்தாங்கங்கற காரணம் எனக்கு அப்போ புரியலை. ஏதோ ஆபத்து, ஆபத்துன்னு பயப்படுவாங்க.

நான் இப்போ பெரியவளாகிட்டேன். என்னைப்
பாதுகாத்துக்க எனக்கு தெரியும்னு சொல்லித்தான் என் விருப்பத்தை நிறைவேத்திகிட்டேன். நான் இரண்டாவது வருடப் படிப்பை முடிச்சிட்டு லீவுக்கு ஊருக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் தான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் வந்தது” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள் மாதுரி.

“பரவாயில்லை மாதுரி. அப்புறமாச் சொல்லும்மா. மனசைக் கஷ்டப்படுத்த வேண்டாம்” என்று தடுத்தாள் கண்மணி.

“ பரவாயில்லைக்கா. உங்க கிட்ட எப்படியும் ஊருக்குப் போறதுக்குள்ள சொல்லணும்னு நெனைச்சேன்.சொல்லிடறேன். அப்பா ஏதோ தேச துரோகம் பண்ணிட்டாராம். அவர் மேல நிறையக் குற்றச்சாட்டுகள் சுமத்திருக்காங்க. அவமானம் தாங்கமுடியாமல் அம்மா, அப்பா ரெண்டு பேரும் தற்கொலை செஞ்சுகிட்டதாகவும், அப்பாவோட அக்கவுண்ட் எல்லாத்தையும் முடக்கியதாகவும் தகவல் வந்தது. கேஸ் முடியற வரைக்கும் அவரோட பணத்தை ரிலீஸ் பண்ண மாட்டாங்கன்னு தெரிய வந்தது. ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வந்தேன்.
தற்கொலைன்னு சொல்லாமல் எல்லார் கிட்டயும் விபத்துன்னு சொன்னேன். சென்சிடிவ் கேஸ்னால ரகசியமா விசாரணைகள் நடக்கும்னு சொல்லிருந்தாங்க. அந்த நிமிஷத்தில் இருந்து நான் தன்னந்தனியாயிட்டேன். என்ன செய்யறதுன்னு புரியாமல் நின்னேன். கையில் ஒரு பைசா கிடையாது. என்ன அப்பத்தான் படிப்பை நிறுத்திட்டு வேலை பாக்கலாம்னு முடிவு செஞ்சேன். துகிலனுக்கு மட்டும் உண்மைகளைச் சொன்னேன். நான் உதவி பண்ணறேன். நீ மேலே படின்னுதான் அவர் சொன்னார். நான்தான் மறுத்துட்டு வேலை தேடப் போறதாச் சொன்னார். அவர்தான் இங்கே வேலைக்கு ரெகமண்ட் செஞ்சது” என்றாள்.
கண்மணிக்கு மாதுரியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டதும் மனம் கனத்துப் போனது.
தன்னுடைய துயரத்தை விட மாதுரியின் துயரம் அதிகம் என்று உணர்ந்து வருந்தினாள்.

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இரகசியமா வைக்கவேண்டியது. உங்க கிட்ட மறைக்காமல் சொல்லிடறேன்
. இறந்து போறதுக்கு முன்னால எழுதின லெட்டர் போஸ்டில வந்தது. அந்தக் கடிதத்தைப் படிச்சதும் எனக்கு அடுத்த அதிர்ச்சிகரமான தகவல் கிடைச்சது” என்று சொல்லி மீண்டும் நிறுத்தினாள்.

“அப்படி என்னம்மா எழுதிருந்தாங்க அதுல?” என்று விசாரித்தாள் கண்மணி.

“நான் அவங்க வயத்துல பொறந்த பொண்ணு இல்லையாம். அதாவது அவங்களோட பயலாஜிகல் டாட்டர் இல்லையாம் நான். அவங்க என்னைக் குழந்தையில் இருந்து வளத்திருக்காங்க”

“என்னம்மா சொல்லறே?எனக்கே கேக்கறதுக்கு இவ்வளவு அதிர்ச்சியா இருக்கு.உனக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்குப் புரியுது. வெளிப்படுத்தியிருந்தாங்களா?” என்று கேட்டாள்.

“இல்லைக்கா.உண்மையை மறைச்சதுக்காக மன்னிப்பு கேட்டிருந்தாங்க.நான் வளந்ததும் சொல்ல நெனைச்சாங்களாம்.சந்தர்ப்பம் அமையலையாம்.சூழ்ச்சி வலையில மாட்டிட்டிருக்கோம். அதிலிருந்து உயிரோட வெளியே வருவோமான்னு தெரியலை. அதுனால எங்களுக்கு ஏதாவது ஆறதுக்குள்ள உனக்கு உண்மையைத் தெரிவிக்க நினைச்சோம்' அப்படின்னு அதுல எழுதியிருந்தாங்க. அப்புறம் இந்த ஊரோட பேரை எழுதி, 'இங்கே இருக்கற ரகுநாத சேதுபதி எதிரில் போய் நில்லு. உண்மைகள் தானாவே வெளியே வரும்' அப்படின்னும் எழுதிருந்துச்சு. அதுனால துகிலன் இந்த வீட்டுக்கே அனுப்பினது ரொம்ப வசதியாப் போச்சு எனக்கு” என்று சொல்லி நிறுத்தினாள்.

“அப்படின்னா உன்னோட உண்மையான அம்மா, அப்பா இந்த வீட்டோட சம்பந்தப் பட்டவங்களோ என்னவோ! ஆமாம், இன்னைக்கு வந்த மகிழ்ச்சிகரமான செய்தியைச் சொல்லாமல் வேற ஏதோ பழைய தகவலைச் சொல்லறியேம்மா? ”

“பாத்தீங்களா? அதையும் சொன்னாத்தானே உங்களையும் என்னோட சந்தோஷம் தொத்திக்கும்? எங்கப்பா மேல இருந்த குற்றச்சாட்டு எல்லாமே பொய்யுன்னு நிரூபிச்சுட்டாங்களாம். அவரோட பணம் எல்லாம் நான் இனிமேல் எடுத்து செலவழிக்கலாமாம்”

“அட, இது நெஜமாவே ரொம்ப நல்ல நியூஸ்தான். உனக்குப் பணம் கெடைக்குதுங்கறதை விட நீ தொடர்ந்து படிக்கலாம்னு தெரிஞ்சதும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு சாயந்திரம் பக்கத்துல இருக்கற முருகன் கோயிலுக்குப் போய் விளக்கேத்திட்டு வந்துடறேன்” என்றாள் கண்மணி.

“நீங்க கோயிலுக்குப் போயிட்டு வாங்கக்கா. நான் இன்னைக்கு சாயந்திரம் டாக்டரோட வெளியில போகப் போறேன்” என்று கூறியபோது அவள் முகத்தில் வெட்கம். படர்ந்தது.

“என்ஜாய் பண்ணுடா தங்கம். ஆமாம், மேடம் கிட்ட நீ வேலையை விட்டு நிக்கப் போறதைச் சொல்லிட்டாயா?”

“இல்லை, சொல்லலை. துகிலன் நானே வந்து சொல்லிக்கறேன்னு சொன்னாரு”

“மாதுரி, எனக்கொரு ஐடியா தோணுது. பேசாமல் நானும் உன் கூட சென்னை வந்துரவா? நீ ஹாஸ்டலில் இருக்கறதுக்கு பதிலாத் தனியா ஒரு வீடு வாடகைக்குப் பாரு. கூட நிம்மதியா இருந்துடறேன்”

"நிஜமாவா சொல்லறீங்கக்கா? இது ரொம்ப நல்ல ஐடியா. மேடம் உங்களை அவ்வளவு ஈஸியா விடுவாங்களா?"

“ கேட்டுப் பாக்கலாம். நீ முதல்ல அவங்க கிட்ட விஷயத்தைச் சொன்னதுக்கு அப்புறம் நான் சொல்லறேன்”

“நாம ரெண்டு பேரும் கிளம்பறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதையும் பாத்துட்டே கெளம்புங்க” என்று சொல்லி அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு ஓடியே விட்டாள் மாதுரி.

அன்று மாலை துகிலன் வந்து தகவலைச் சொன்னபோது ராஜேஸ்வரி முதலில் வருத்தமடைந்தார்.
வேலையைப் பொருத்தவரையில் மாதுரியை யாராலும் மிஞ்சமுடியாது என்பதால் வருத்தம். ஆனால் மாதுரி அகன்றுவிட்டால் துகிலனின் மனதைக் கரைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நிம்மதியாகவும் இருந்தது.
சேதுபதி ஐயாவின் முகத்தில் நிம்மதிப் படர்ந்தது. அதை மாதுரியும் கவனித்துவிட்டாள்.



ஆனால், துகிலன் மாதுரியை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கேட்டபோது ராஜேஸ்வரிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவளால் மறுக்க முடியவில்லை. அதுவும் சென்ற வாரம் அவன் பொங்கியெழுந்து வார்த்தைகளைக் கொட்டியதால் பயமாகவும் இருந்தது அவருக்கு.

“எங்க போகப் போறோம் துகிலன்?” என்றாள் மாதுரி வண்டியில் ஏறியவுடனே.
“லாங் டிரைவ்.நீ இந்த ஊரை விட்டுக் கிளம்பறதுக்கு முன்னாடி எங்க மலைப்பகுதியைக் காட்டவேண்டாமா? முதலில் மலை அடிவாரத்துக்குப் போகலாம். முடிஞ்சவரை ஏறலாம். மலையில் கொஞ்சம் உயரத்தில் இருந்து வியூவைப் பாத்துட்டு அப்படியே கீழே வந்து காரில் ஏறி தேனிக்குப் போகலாம். அங்கே ஒரு நல்ல ரெஸ்டாரெண்டாப் பாத்து சாப்பிட்டுட்டு திரும்பலாம்”

"சாயந்திர நேரத்தில் மலை மேல ஏறிப் போறது சேஃப் தானா துகிலன்?"

“ரொம்ப தூரம் போகவேண்டாம் மாதுரி.ஆக்சுவல்லி கொஞ்சம் உயரத்தில் ஒரு சமணப் படுகை இருக்கு. பாழடைஞ்சு கிடக்கு. இருக்கு. குகைக்குள் போய், அபூர்வமான சில ஓவியங்களையும் பாக்கமுடியும். நம்ம ரெண்டு பேருக்குமே கொஞ்சம் துணிச்சல் அதிகம்தானே? இந்த அளவு ரிஸ்க் கூட எடுக்கலைன்னா வாழ்க்கையில் எதையுமே ரசிக்கமுடியாது” என்று துகிலன் பதிலளிக்க, மாதுரியும் சிறிது தூரம் மௌனமாக வந்தாள்.

நிஜமாகவே அந்த மலைப்பகுதியில் இயற்கையின் பரிபூரண அழகு கண்ணுக்கு விருந்தாக இருந்தது. கொஞ்ச தூரம் ஏறிவிட்டு, அந்த உயரத்தில் இருந்து அவர்களுடைய ஊரைப் பார்க்க முடிந்தது. இலேசாக இருட்ட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் மங்களக் கோட்டோவியம் போலத் தெரிந்த காட்சியும் அழகாகவே இருந்தது.

“இதோ கோபுரம் தெரியுது பாத்தயா? இதுதான் எங்க ஊரோட ஃபேமஸான முருகன் கோயில். மலைப்பகுதின்னாலே முருகளை வழிபடறவங்க அதிகம். குறிஞ்சி, அதாவது மலையும் மலை. சார்ந்த இடத்துக்கும் கடவுள் முருகன் தானே? முருகுன்னாலும் அழகுன்னு அர்த்தம். மலைப்பகுதியும் அழகு இல்லையா? அங்கங்கே சிவப்பாப் பூத் தெரியுதா? இதைச் செங்காந்தள்னு சொல்வாங்க. சிலர் இதைக் கார்த்திகைப் பூணும் சொல்வாங்க. இந்த இடத்துக்கே விசேஷமானது இந்தப் பூ. இந்தப் பூவால மாலை கட்டி முருகனுக்குச் சூடி வழிபடுவாங்க மலைவாழ் மக்கள். பெண்களோட கை விரல்களைச் செங்காந்தள் பூவோட இதழ்களோட ஒப்பிட்டுக் கவிதை பாடிருக்காங்களாம். தெரியுமா உனக்கு? எங்கே விரலைக் காமி . உண்மைன்னு பாக்கறேன்” என்று கூறியபடி அவளுடைய கைகளைப் பிடித்தான்.

“நைசா இந்தச் சாக்கில் கையைப் பிடிக்கறீங்களா டாக்டர் சார்?அதெல்லாம் நடக்காது.நான் படிச்சு முடிச்சதுக்கப்புறம் கல்யாண மேடையில் தான் கையைப் பிடிக்கலாம். அதுவரை பொறுமையா இருக்கணும் ” என்று அவள் வாய் சொன்னாலும் கைகளை விடுவித்துக் கொள்ளவில்லை.

“அப்படியா? சரி, விட்டுட்டேன்” என்று அவன் சட்டென்று கைகளை விடுவிக்க, மாதுரி தடுமாறிப்போனாள்.

“ஏய்” என்று சொல்லியபடி அவளுடைய கையை மீண்டும் பிடித்தவன் அப்படியே இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான். குனிந்து அவளது இதழ்களில் தன்னுடைய இதழ்களால் காதலை எழுதினான். உணர்ச்சிகள் கட்டவிழ்ந்த தருணமாக அமைந்தது அந்த மாலை நேரம்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்
 

Author: Puvana
Article Title: உயிர்க்கொடியில் பூத்தவளே! 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
48
மாலை நேரம் மயக்கும் நேரம். மாதூரிக்கு ஆபத்தான நேரம்
 

jacky

New member
Joined
Jun 19, 2024
Messages
9
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்
 
Top Bottom