• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 10

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
178
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 10


ராஜேஸ்வரி மேடம் புன்சிரிப்போடு அவளை வரவேற்றாள். மாதுரியின் முகம் காஃபி அருந்தியதாலோ, இல்லை கண்மணியின் பரிவான வார்த்தைகளாலோ கொஞ்சம் புத்துணர்ச்சியை மீட்டிருந்தது. இருந்தாலும் அறைக்குள் தனிமையில் அழுது கொண்டே நேரத்தைக் கழித்த உண்மையை, அவளுடைய முகம் கண்ணாடியாகப் பிரதிபலிக்கத்தான் செய்தது. நல்லவேளையாக ராஜேஸ்வரி அவளிடம் தூண்டித் துருவி எதுவும் கேட்கவில்லை.

“ உடம்பு சரியில்லையா மாதுரி? ஏதாவது மாத்திரை போட்டுக்கறயா? உனக்கு நான் சொல்லமுடியுமா? நீயே பாதி டாக்டர் ஆச்சே? ” என்று இயல்பாகப் பேச முயற்சி செய்தார் ராஜேஸ்வரி.
“ லேசாத் தலைவலி தான் மேடம். சில சமயம் மைக்ரைன் தலைவலி வந்துச்சுன்னா ஒரு பேயாட்டம் போட்டு என்னைத் தொந்தரவு பண்ணிட்டுத்தான் போகும். மாத்திரை எதுவும் இதுக்குப் போட்டுப் பிரயோஜனம் இல்லை. அப்புறம் நான் ஒண்ணும் டாக்டர்லாம் இல்லை மேடம். இனிமேல் ஆகவும் முடியாது. அந்தப் படிப்பை நானும் கொஞ்ச நாட்கள் படிச்ச விஷயத்தைச் சீக்கிரம் மறந்துடுவேன்” என்று விரக்தியுடன் பேசினாள் மாதுரி.

‘ ஏற்கனவே எல்லாரோட ஸிம்பதியையும் சம்பாதிச்சாச்சு. அதுவும் இந்த துகிலன் அப்படியே ஐஸ்கிரீமா உருகறாரு. இவ கண்ணில கண்ணீர் எட்டிப் பாத்தா அவரோட நெஞ்சுல இரத்தம் கொட்டற மாதிரி இல்லை துடிக்கறாரு? இவ்வளவு சாதிச்சதுக்கு அப்புறமும் எதுக்கு இன்னும் ஸீன் போடறாளோ? ’ என்று மனதில் புஸுபுஸுவென்று பொங்கிய எரிச்சலை அடக்கிக்கொண்டு மாதுரியைப் பார்த்தாள் மந்திரா. வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. காலையில் கல்லாக இருந்த மந்திராவின் மனதையும் அல்லவா கரைத்துவிட்டாள் மாதுரி?

“ மாதுரி, நேத்து மாதிரி தோட்டத்துல உலாத்திட்டு வரலாம் வா” என்று ராஜேஸ்வரி அழைக்க, மறுப்புத் தெரிவிக்க முடியாத மாதுரியும் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு தோட்டத்திற்குப் போனாள்.

“ இப்பக் கூட நான் உனக்குத் தர ஆஃபரை கன்ஸிடர் பண்ணு மாதுரி. படிப்பை கண்டினியூ பண்ணு. நான் உதவி பண்ணறேன். இல்லைன்னா பேங்கில சொல்லி லோன் ஏற்பாடு பண்ணறேன்” என்று மீண்டும் சொல்லிப் பார்த்தார் ராஜேஸ்வரி.

கல்லுக்குள் ஈரம் எட்டிப் பார்க்கும் வரையில் அடி மேல் அடி வைத்து முயற்சி செய்து பார்த்தார். மாதுரியோ மசிவதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் என்னவோ தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்கிறாள் என்று மற்றவர்கள் எண்ணும்படியாக இருந்தது அவளுடைய நடவடிக்கை.

“ இல்லை மேடம். பேங்க் லோன் அப்ளை செஞ்சா, கோலேட்டரல் செக்யூரிட்டின்னு ஏதாவது பிராப்பர்ட்டி கேப்பாங்க. அதெல்லாம் என் கிட்ட ஒண்ணும் இல்லை.”
“ உன் கிட்ட இல்லைன்னா என்ன? எங்க கிட்ட எத்தனையோ பிராப்பர்ட்டி இருக்கே? அதுல ஒண்ணைக் காமிச்சாப் போச்சு. அது கூட வேண்டாம். நான் உத்தரவாதம் தந்து கேரண்டி கையெழுத்துப் போட்டால் போதுமே? வீட்டுக்கு வந்து பணத்தைக் கொட்டுவாங்க பேங்க்காரங்க. நான் பெருமை அடிச்சுக்கலை. இந்த ஊருல எங்களோட செல்வாக்கு அப்படி! ” என்றார்.

“ முன்னப் பின்னத் தெரியாத பொண்ணுக்காக நீங்க இவ்வளவு ரிஸ்க் எதுக்கு எடுக்கணும்? என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? என்னோட கடந்த காலம் மோசமானது. அதைப் பத்தி நான் பேச விரும்பலை. அதை மறைச்சு நான் யார் கிட்டயும் உதவி பெறவும் தயாரா இல்லை. அதுக்காக உங்களை ஏமாத்திட்டு ஓடிட மாட்டேன். கவலைப்படாதீங்க. நான் எடுத்துக்கிட்ட பொறுப்பை ஒழுங்கா நிறைவேத்துவேன். எனக்காக இல்லைன்னாலும் என்னை உங்களுக்கு ரெகமண்ட் செஞ்ச டாக்டர். துகிலனுக்காகவாவது தவறா நடந்துக்கமாட்டேன் ” என்றெல்லாம் பேசி ராஜேஸ்வரியின் வாயை அடைத்துவிட்டாள் மாதுரி.

‘ நேத்தைய அனுபவத்துனால இந்தப் பொண்ணு ரொம்ப சாது, அன்பாவும், பண்பாவும் நடந்துக்கற மென்மையான சுபாவமுள்ள பொண்ணுன்னு நினைச்சோமே! இன்னைக்கு நம்ம கருத்தை மாத்திக்க வைக்கறாளே? ரொம்பப் பிடிவாத குணம் இருக்கே இவ கிட்ட? எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாளே? ’ என்று மனம் வருந்தினார் ராஜேஸ்வரி.

இதற்கு மேல் மாதுரியை வற்புறுத்த இஷ்டமில்லாமல் விட்டுவிட்டார். முதல்நாள் பாட்டுப் பாடியபடி ரசித்த மாலை நேரம் இன்று இறுக்கமாகவே கழிந்தது. தோட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் ஒரு மரத்தடியில் இளைப்பாறிய சமயத்தில் தான் அதே காம்பவுண்டுக்குள் அவர்களுடைய மாளிகையில் இருந்து சற்றுத் தள்ளித் தனியாக இருந்த அந்த அவுட்ஹவுஸ் போன்ற வீட்டைக் கவனித்தாள் மாதுரி.

“ அட, இங்கே அவுட்ஹவுஸ் வேற இருக்கா? நேத்து நான் கவனிக்கவே இல்லையே? ஒருவேளை இந்தப் பக்கம் நாம் வரலையோ? ” மாதுரியின் குரலில் பழைய உற்சாகம் திரும்பியிருந்தது.

மாதுரி அந்தத் திசையில் கூர்ந்து கவனித்தபோது இரண்டு விஷயங்கள் புலப்பட்டன. கதவு பூட்டப்படவில்லை. வாசலில் கோலம் போடப்பட்டிருந்தது. நிச்சயமாக யாரோ இருக்கிறார்கள் அங்கே என்று நினைத்தாள்.

“ யாரோ இருக்காங்க போல இருக்கே? யார்? ” என்று கேள்வி கேட்ட மாதுரி, ராஜேஸ்வரியின் முகம் மாறியதைக் கவனிக்கத் தவறினாள்.

“ எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. உள்ளே போகலாம் வா மாதுரி ” ஏனோ அவசரப்பட்டார் ராஜேஸ்வரி.

ஆச்சரியத்துடன் சக்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பித்தாள் மாதுரி.
சரியாக அந்த நேரத்தில் அந்த வீட்டின் கதவு திறந்தது. கிட்டத்தட்ட ராஜேஸ்வரி மேடத்தின் வயதுடைய பெண் ஒருத்தி அவர்களை நோக்கி நணந்து வர ஆரம்பித்தார்.

“ சீக்கிரம் போலாம் மாதுரி “ என்று கூறிய ராஜேஸ்வரி, அந்தப் பெண்ணைப் பார்க்க மறுத்து எதிர்த்திசையில் பார்வையைச் செலுத்தினார். திடீரென்று பதட்டமடைந்த ராஜேஸ்வரியின் நடவடிக்கை, மாதுரிக்கு வினோதமாக இருந்தது. ஆனால், அதற்குள் அந்தப் பெண் அவர்களை நெருங்கிவிட்டார்.

“ என்ன மகாராணி நந்தவனத்தில் உலா வராங்க போல இருக்கே? யாரு இந்தப் புதுப்பெண்? ” என்று நக்கலாகக் கேட்டபடி அருகில் வந்தவர், மாதுரியைப் பார்த்து ஒரு நிமிடம் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டினார்.

“ மாதவி நீயா? ” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“ மாதவி இல்லை, நான் மாதுரி. ஸாரி, நான் உங்களைப் பாத்ததில்லை” என்றாள் மாதுரி.
மாதவி என்ற பெயர் எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது.

“ அதுதானே பார்த்தேன்? நீ எப்படி மாதவியா இருக்க முடியும்? மாதவிதான் இந்த உலகத்தை விட்டே போயிட்டாளே! இல்லை, இல்லை, தப்பாச் சொல்லக் கூடாது. இந்த உலகத்தை விட்டு வலுக்கட்டாயமா யாரோ அனுப்பிட்டாங்க. நான் கூடப் புது மாதிரியா, கண்ணகியும், மாதவியும் கைகோர்த்துக்கிட்டு உலா வராங்களோன்னு நினைச்சேன்” என்று சொல்லி விட்டு, ஹாஹாவென்று தனது நகைச்சுவையை இரசித்துத் தானே சிரித்துக் கொண்டார்.

அவருடைய பேச்சை ராஜேஸ்வரி கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.

“ தேவையில்லாத பேச்சு எதுவும் வேணாம். அதுவும் வெளி ஆட்கள் எதிரில் பேசவேண்டாம். எப்பவும் போல நீ உன் கூட்டுக்குள்ளே போய் அடைஞ்சுக்கோ” என்று கடுமையாகப் பேசினார் ராஜேஸ்வரி.

“ ஏன், அதுதான் உனக்கு சௌகர்யமா இருக்கோ? நான் கூட்டை உடைச்சுக்கிட்டு வெளியே வந்தா, நிறையப் பேரோட வாழ்க்கை நாறிப் போயிடும். அதை மறந்துடாதீங்க ராஜேஸ்வரி மேடம். கர்மா கால்ஸ். உன்னோட கெட்ட நேரம் ஆரப்பிச்சாச்சு ராஜேஸ்வரி. இந்தத் தடவை, உனக்குத் தோல்விதான். போ, போயி உன் மாளிகைக்குள் ஒளிஞ்சுக்கோ. அதுதான் உனக்கு பத்திரமான இடம்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று திரும்பித் தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தார் அந்தப் பெண்.

அவரிடம் ஒரு கம்பீரம் இருந்தது. ராஜேஸ்வரியின் நளினம் அவரிடம் இல்லை. ஆனால், அவரும் இந்த வயதில் ஒரு தனி அழகுடனேயே தெரிந்தார். யாராக இருக்கும் என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது. ராஜேஸ்வரி மேடமும், இந்தப் பெண்ணும் பேசிக்கொண்டதைப் பார்த்தால் இருவருக்கும் சுமுகமான உறவு இல்லை என்று தெரிந்தது. மேடம் இப்போது இருக்கும் மனநிலையில் பதில் சொல்லமாட்டார் என்று நினைத்து ஒன்றும் கேட்கவில்லை. கண்மணி அக்காவை விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். அறைக்குத் திரும்பும்வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அன்றைய பொழுது அப்படியே முடிந்தது. முதல் நாள் மிகவும் அமைதியாகக் கழிந்தது என்றால் இரண்டாவது நாளில் ஏகப்பட்ட அனுபவங்கள். துயரம், ஆச்சரியம், வருத்தம் என்று எல்லாவற்றையும் ருசித்தாகி விட்டது. நாளை என்னென்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புடன் தூங்கப் போனாள் மாதுரி.

அதிசயமாகப் படுத்தவுடன் தூங்கிப் போனவளுக்குச் சற்று நேரத்தில் தூக்கம் கலைந்துபோனது. ஜன்னல் வழியாகத் தோட்டம் தெரிந்தது. அந்த ஊருடைய சீதோஷ்ண நிலைக்கு ஏர்கண்டிஷனர் தேவையாகவே இல்லை. மலையை ஒட்டி அமைந்திருந்ததால் சிலுசிலுவென்று நல்ல காற்று. அதற்காகவே ஜன்னலைத் திறந்துவைத்திருந்தாள்.
மாதுரியின் உள்ளுணர்வு ஏதோ நடக்கப் போவதாக அவளுக்கு உணர்த்த, மனதிற்குள் புதிய தவிப்பு உருவானது. தூக்கம் சுத்தமாகக் கலைந்துபோக எழுந்து ஜன்னலுக்கு அருகே வந்தாள்.

தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தடியில் அன்று மாலை சந்தித்த அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இருந்து ஒரு கரிய உருவம் அவரைத் தாக்குவதற்காகக் கையில் நீண்ட கழியுடன் மெல்ல மெல்ல அடிகளை வைத்து நெருங்கிக் கொண்டிருந்தது. கறுப்புப் போர்வையால் அந்த உருவம் தன்னை மூடிக் கொண்டிருந்ததால் யாரென்று இங்கிருந்து தெரியவில்லை.

“ மேடம், பின்னால பாருங்க” என்று உரத்த குரலில் கத்தினாள் மாதுரி. அந்தப் பெண் காதில் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை,

மாதுரி கத்தியது அவருடைய காதில் விழவில்லை. ஆனால் அவரை நெருங்கிக் கொண்டிருந்த உருவத்தின் காதில் விழுந்துவிட்டது. திரும்பி மாதுரி இருந்த அறையின் திசையில் பார்த்தது. மாதுரி சட்டென்று பின்னால் வந்தாள். உடனடியாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், வெளிக்கதவை அடைந்து தோட்டத்தை நோக்கி ஓடினாள்.

‘ நான் தோட்டத்தை அடைவதற்குள் அந்தப் பெண் தாக்கப்பட்டால் என்ன செய்வது?’ என்கிற பதைபதைப்புடன் ஓடியவள், வழியில் கிடைத்த கற்களைப் பொறுக்கிக் கொண்டாள்.

அந்த உருவம் இப்போது அந்தப் பெண்ணை நெருங்கிவிட்டது. கையில் இருந்த கம்பை, அவருடைய தலையைக் குறிபார்த்து ஓங்கியது. மாதுரிக்கும் அந்த உருவத்திற்கும் கொஞ்சம் தூரம் இருந்தது.

“ ஏய், யார் நீ? ” என்று சத்தமாகக் கத்தியபடியே ஓடினாள் மாதுரி.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: உயிர்க்கொடியில் பூத்தவளே! 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom