• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr.மாமியார் 17 - FINALE 4 AND EPILOGUE

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
45
Mr.மாமியார் 17


“இதென்னங்க திடீர் கூத்தா இருக்கு. அன்னைக்கு கிருஷ்ணாக்கு உடம்பு சரியில்லைன்னு வந்துட்டு போன மனுஷன் ஒருவாரமா குழந்தையைக் கூட பாக்க வரலை. சரி, இன்னைக்கு கல்யாண நாள், எப்படியும் வருவாருன்னு பார்த்தா, சம்பந்தி ஃபோன் பண்ணி, இன்னைக்கு நல்ல நாள். மருமகளையும் பேரனையும் கொண்டு வந்து விடுங்கன்னு சொல்றார். இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கே போற அளவுக்கு அப்படி என்ன அவசரம்? ஒரு ரெண்டு நாள் முன்னால , அது கூட வேண்டாம், அட்லீஸ்ட் நேத்தாவது சொல்லி இருக்கலாம்ல”

“...”

“புள்ளை பெத்து கொண்டுபோய் விடறதுன்னா லேசான காரியமா? ஸ்வீட்டு, வெத்தலை பாக்கு, பூ, பழம், குழந்தைக்கு, பொண்ணு மாப்பிள்ளைக்கு ட்ரெஸ், வெள்ளி சங்கு, புது சிப்பர், கிருஷ்ணாக்கு கஞ்சி மாவு, உரை மருந்துன்னு எத்தனை இருக்கு? நல்லவேளை, முன்னாலயே அவனுக்கு நகை வாங்கிட்டோம்”

“...”

லக்ஷ்மி, தனக்கு எதிரே அமர்ந்து அவள் அவசர அவசரமாகக் கிளறிய மைசூர்பாகு துண்டுகளை முற்றுகையிட முயற்சித்த கிருஷ்ணாவை தடுத்தபடி, அவற்றை புத்தம்புதிய எவர்சில்வர் சம்புடத்தில் போட்டுக் கொண்டே புலம்பினாள்.

ரங்கராஜனுக்குமே திகைப்புதான். எதிரே இருந்த குஷனில் அமைதியாக அமர்ந்திருந்த லலிதாவை நோக்கினார்.

ரங்கராஜன் மகளின் முகவாட்டத்தில்,

‘முதல்ல இவ அங்க போக சம்மதிக்கணுமே. அவங்க வரச் சொன்னபோதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி போக மறுத்துட்டா. இப்ப என்ன சொல்லுவாளோ? இவ அம்மா என்னடான்னா அதுக்குள்ள குடுகுடுன்னு மைசூர்பாகை கிளறிட்டா’

“ஏங்க, குருட்டுயோசனை செய்யறத்துக்கு பதிலா கிருஷ்ணாவை தூக்கலாம்தானே, கால் ஸ்வீட்டைத் தின்னாச்சு, கடலை மாவு வேற”

எழுந்து போய் பேரனைத் தூக்கிய ரங்கராஜன் “லலிதா அங்க போறதே இன்னும் முடிவாகல, அதுக்குள்ள மைசூர்பாகு ஏன்?”

“இது அவளோட வெட்டிங் ஆனிவர்ஸரிக்காக செஞ்சது. அவங்க இன்னைக்கே வான்னு சொல்லுவாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?”

“...”

“நீங்க சொல்றதும் சரிதான். உங்க பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுட்டுதான் சாமானை சேகரிச்சு கட்டணும்”

பெற்றோர் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த லலிதா,

“நான் போறேன், இன்ஃபாக்ட், நான்தான் வந்து கூட்டிட்டுப் போகச் சொன்னேன்” என்று திரியைக் கொளுத்த, லக்ஷ்மி வெடி ஏமாற்றாமல் வெடித்தது.

“ஏன், இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு நீயே வாலண்டியரா போய் வண்டில ஏறி இருக்க?”

ரங்கராஜனுக்குமே அதிர்ச்சிதான் என்றாலும், கணவன் மனைவிக்கு இடையில் ஊடலும் கூடலும் இயல்பே என்பதோடு, மகள் தன் வாழ்க்கை குறித்து ஒரு முடிவுக்கு வந்தது மகிழ்ச்சிதான். இருப்பினும், இதை தங்களிடமே சொல்லி இருக்கலாமே என்ற ஆதங்கமும் எழுந்தது.

“லக்ஷ்மி, இப்ப என்ன, என்னைக்காவது ஒருநாள் அவ அங்க போக வேண்டியதுதானே?”

“அதெல்லாம் சரிதாங்க. ஆனா, அவங்க வா வான்னு வருந்தி அழைச்சபோதெல்லாம் போகாம, இப்ப என்…”

“நேரம் அதிகம் இல்லை. மூணு மணிக்கு அங்க இருக்கணும். குட்டியை நான் பார்த்துக்கறேன், நீ மளமளன்னு வேலையைப் பாரு. லலிதா, நீயும்தான்”

முடிந்தவரை அவசியமான சாமான்களை எடுத்து வைத்து, ஒரு பொரியல், புளிக்குழம்பு என அவசரமாய் சமைத்து சாப்பிட்டனர்.


லலிதா அலுவலக வேலை செய்யும் மதிய நேரத்தில் கிருஷ்ணாவைத் தூங்க வைப்பதெற்கென ஹாலில் போடப்பட்டிருந்த தூளிக் கயிறையும், ஸ்பிரிங்கையும் அவிழ்த்து ரங்கராஜன் பேக் செய்யவும், பேரனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த லக்ஷ்மிக்கு அழுகை வந்துவிட்டது.

“என் ராஜாக்குட்டிய அனுப்பிட்டு நான் எப்படி இருப்பேன், வீடே வெறிச்சோடிப் போயிடும்”

லலிதா “நீதானேம்மா அவனை உங்கப்பா கிட்டயே போன்னு சொன்ன?”

லக்ஷ்மிக்கு அழுகையுடன் ஆத்திரமும் சேர “சொன்னா என்ன, ஐயோ, நாம இல்லாதபோது புள்ளைக்கு இப்டி ஆயிடுச்சேன்ற கவலைல, தனியா விட்டுப் போனதுக்கு மாப்பிள்ளை வீட்ல என்ன சொல்லுவாங்களோன்ற பதட்டத்துல வந்த வார்த்தைடீ அது. நான் என்னவோ கொலைக்குத்தம் செஞ்சாப்பல காத்திருந்து குத்திக்காட்டுற?”

“...”

“மாப்பிள்ளையும் நான் நெனச்சதையே சொல்லவும் , ராப்பகலா பார்த்துப் பார்த்து வேலை செஞ்சும், இன்னுமே பொண்ணோட அம்மான்னா இவ்வளவுதான் மரியாதையான்னு வருத்தமா போச்சு. இதே உங்க மாமியார் உங்க அம்மா கிட்டயே போன்னு சொன்னா, இப்டி பதில் பேசுவியா?”

“...”

“பிள்ளையார் கோவிலை பெருக்கலாம் மெழுகலாம், சொந்தம் கொண்டாட முடியுமான்னு சும்மாவா சொன்னாங்க. வயசாக ஆக, ஒவ்வொரு பழமொழிக்கா அர்த்தம் கத்துக்கறேன்”

லலிதா “ஆமாம்மா, நான் எங்கம்மா, அப்பா, என் வீடுன்னு உரிமையா இருந்தேன். ஆனா, இனிமே இங்க இருந்தா வாமனன் கிட்ட பேசக்கூட உங்ககிட்ட பர்மிஷன் கேக்கணும் போல…”

“...”

“நீயே சொல்லு, நான் இங்கயே இருந்து, நீங்க அமெரிக்கா போன பிறகு, ஏதாவது பிரச்சனைன்னா திரும்பவும் நான் அவரைக் கூப்பிட, உனக்குக் கோபம் வர…”

லக்ஷ்மி “வேணாம்டீ, என் வாயைக் கிளறாத” என்று கத்தினாள்.

ரங்கராஜன் “லக்ஷ்மி, போதும் நிறுத்து. போய் புடவையை மாத்திட்டு ரெடியாகு. மாமா, நீங்களும் வரீங்களா?”

ரத்னம் “இல்ல, நீங்க போய்ட்டு வாங்க. லக்ஷ்மி, மாப்பிள்ளையோட சேர்ந்து, குடும்பமா சந்தோஷமா இருக்கதானே லலிதாக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். யாரையோ தாயே கெடுத்த மாதிரி சரியான ரூட்ல போறவளை நீயே கெடுக்காத”
என்றவர், பேத்தியை அழைத்து லட்சரூபாய்க்கு செக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

எத்தனை கோபமானாலும் பிரசவத்துக்கென பிறந்தகம் வந்து, பதினோரு மாதங்கள் சீராடி இருந்தபோதிலும், பெற்றோரைப் பிரிவதும், நீண்ட இடைவெளிக்குப் பின் புகுந்தவீடு செல்வதில் வயிற்றில் சுழன்ற பயப்பந்தும் கிலேசத்தைத் தர, புறப்படும் நேரம், லலிதா அழுதுவிட, லக்ஷ்மியும் கலங்கிதான் போனாள்.

ஆணும் பெண்ணுமாய் ஐந்தாறு பிள்ளைகள் வைத்திருந்த காலத்தில் வேண்டுமானால், பெண் புகுந்த வீட்டில் போய் வாழ்வது பெற்றோருக்கு இயல்பாகவும், நிம்மதியாகவும் இருந்திருக்கலாம்.


இப்போது பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைவு, அதிலும் லக்ஷ்மியைப் போல் ஒற்றைப் பெண்ணைப் பெற்று, இருபத்தி மூன்று, இருபத்திநான்கு வருடங்கள் மகளே சிந்தனையாய், நல்ல கல்வியும், உத்யோகமும் வர/ தரப் பாடுபடும் படித்த இந்தத் தலைமுறை தாய்மார்களுக்கு இந்தப் பிரிவையும், மாப்பிள்ளை வீட்டாரின் முன்னுரிமையையும் ஏற்பது சுலபமாக இல்லை என்பதே நிதர்ஸனம்.

*******************

சீதளாவும் பவித்ராவும் சுற்றிய ஆரத்தியில் எரிந்த கற்பூரத்தைக் கை காட்டி ப்பா, த்தா, ம்மா என எச்சில் தெறிக்க லெக்சர் கொடுத்தவன், உள்ளே நுழைந்ததும் கேட்ட “கிருஷ்ணா” வில் தந்தையைத் தேடி, கண்டுபிடித்துவிட்டதில் லக்ஷ்மியின் இடுப்பில் இருந்தபடியே குதித்து, இரண்டு கையாலும் பாட்பியை அடித்தவன், வாமனமூர்த்தியிடம் தாவ முற்பட, மாமியாரின் மதிவதனம் சுருங்கியது.

ஸ்ரீராமும் பவித்ராவும் இவர்களது திருமண நாளுக்கென கேக் வாங்கி வைத்திருக்க, வெட்டி வீழ்த்தினர்!

கேக், வடை, சட்னி, ரவா- சேமியா கிச்சடி, காஃபி, பொதுவான பேச்சு, அம்பு, கிருஷ்ணாவின் விளையாட்டு என இரண்டு மணிநேரம் கழிய, எழச்சொல்லி மனைவிக்குக் கண்காட்டிய ரங்கராஜன் “அப்ப நாங்க புறப்படறோம்…” என்று இழுத்தபடி எழுந்து நின்றார்.

ஸ்ரீசைலமும் சீதளாவும் பிள்ளை பெற்று கொண்டு வந்து விட்ட சம்பந்திகளுக்கு பதில் மரியாதையாக பட்டுப்புடவை, வேஷ்டி சட்டை என ஒரு ட்ரேயில் வைத்து வழங்கினர்.

குங்குமத்தை எடுத்து வகிட்டில் இட்டுக்கொண்ட லக்ஷ்மி “கிருஷ்ணாவைதான் ரொம்ப மிஸ் பண்ணுவோம். இப்ப சத்தமும் சளசளப்பும் வேற கூடிப் போச்சா, அவன் இல்லாம வீடே அமைதியா போயிடும்”

சீதளா “அதுக்கென்ன, உங்க பேரனை பார்க்க எப்ப வேணுமோ வாங்க, லலிதாவும் அங்க வராமலா இருக்கப் போறா. இதோ, மூணு வாரத்துல அவனுக்கு ஃபர்ஸ்ட் பர்த் டே வருது. அதுக்குள்ள உறையூர் போய் முடி இறக்கி, காது குத்த நாள் பார்க்கணும்”

லக்ஷ்மி “அதுவும் நல்லதுதான். கிருஷ்ணாவோட பர்த் டே ஆன மறுநாளே என் தம்பி பொண்ணு கல்யாணத்துக்காக நாங்க மூணு பேரும் யு எஸ் போறோம், திரும்பி வர எப்படியும் ரெண்டு மாசமாவது ஆகும்”

சடாரென திரும்பி மனைவியைக் கூர்ந்து பார்த்த வாமனனின் பார்வையில் திணறிய லலிதா ‘உன் கலிஃபோர்னியா கதையைச் சொல்ல நல்ல நேரம் பார்த்தம்மா நீ!’ என மைன்ட் வாய்ஸினாள்.

வாமனன் “ஓ, இதான் ப்ளானா லலிதா?” என்று கூட்டத்தில் குண்டு போட்டான்.

ஆளாளுக்கு எழுப்பிய கண்டனக் குரலில்,

‘நானே என்னைக் கூட்டிட்டுப் போன்னு சொன்னது தப்போ?’ என லலிதாவும்

‘என்ன இவன், வரச்சொல்லிட்டு இப்படிக் குதர்க்கமா பேசறான், இவனை நம்பி எம்பொண்ணை எப்படி இங்க விட்டுட்டுப் போறது, இந்த லக்ஷ்மி வேற சமயங் காலம் தெரியாம…. இதை இப்படி யோசிக்கவே இல்லையே’ என ரங்கராஜனும் நொந்து போய் நின்றனர்,

“என்னடா மச்சான்?” என மெல்லிய குரலில் அதட்டிய ஸ்ரீராம், இந்தியன் தாத்தா போல் வாமனனின் தோளில் வர்மக்கலை பயில முயற்சித்தான்.

சுதாரித்த சீதளா “வாமனா, இது என்ன, நீ சொல்லிதானே அவளை கொண்டு விடச் சொன்னோம்?”

“ஸ்ரீ, சும்மா இருடா, ச்சில் மா, நான் எதுவும் தப்பா கேட்கலை. போன தரம் இங்க வந்துட்டு உடனே திரும்பி போய்ட்டா. ஒருநாள் குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு அவசரமா கூப்பிடவும் போனேன். அப்புறம் இன்னிக்கு காலைல… “

மகனைத் திரும்பிப் பார்த்து “வாமனா…” என்ற ஸ்ரீசைலம் ரங்கராஜனிடம் “அதனால என்ன, நீங்க ரிலாக்ஸ்டா போய்ட்டு வாங்க. ஆமா, உங்க பதவிக்கு அத்தனை நாள் லீவு கிடைக்குமா?” என இயல்பான விசாரணையில் இறங்கினார்.

“உங்க மகளுக்கு ஆனிவர்ஸரி, டின்னர் சாப்பிட்டு போகலாம்” என்றதை மறுத்து ரங்கராஜன் தம்பதி சென்றுவிட, லலிதாவிற்கு பயமாக, சங்கடமாக, தயக்கமாக, தவிப்பாக, எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிவிடலாம் போல இருந்தது.

நிச்சய மோதிரம், தாலி, மெட்டி, சீமந்த வளையல் என வளையம் வளையமாகப் போட்டதெல்லாம் விலங்காகத் தோன்றியது.

கிருஷ்ணாவைத் தேடி இங்கு வந்து சென்றதிலிருந்தே வாமனமூர்த்தியின் அண்மையும் பேச்சும், அவளுக்கென உடைகள் வாங்கி வைத்திருந்ததும், தான் இல்லாது அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்றதும் லலிதாவை பெரிதும் இளகச் செய்திருந்தது.

அதிலும் ‘ஒரு தரம் முடிவை கைல எடுத்துப் பாரு, புரியும்’ என்றது நினைவில் உழன்றது. அதற்காக அவள் வேண்டுமென்றே எதையும் முயலவில்லைதான்.

ஆனால், அம்மா தன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை, அவசரம், அவசியம், வேறு வழியில்லை என்ற நிலையில் தன் கணவனை அழைத்ததையே தவறென்று சொன்னது லலிதாவிற்கு வாமனன் சொன்னது எத்தனை உண்மை என்பதை வலிக்கப் புரிய வைத்தது.

தந்தை ரங்கராஜன், தனியே குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் திறமையும் பொறுப்பும் தனக்கு இல்லை என்றதும் லலிதாவை உறுத்தியது.

பெற்றோர்களின் ‘எதா இருந்தாலும், எப்படி இருந்தாலும், நாங்கதான் முடிவு செய்வோம்’ என்ற அதிகாரம் நிரம்பிய, பாதுகாப்பான நிழலை விட, அழைத்ததும் வந்து, ஆவன செய்து, தன் தனிமையை, பசியை, பயத்தைப் புரிந்து, பெற்றோர் வரும்வரை உடன் இருந்து, ‘உன்னோடு நான் இருக்கிறேன்’ என்ற தைரியத்தை,
ஒற்றை அணைப்பில் கடத்திய கணவனிடம் பாதுகாப்பைத் தாண்டிய தன்னம்பிக்கையை உணர்ந்தாள் லலிதா.

அதற்காக அவள் தன் பெற்றோர்கள் செய்த எதையும் குறைத்து மதிப்பிடவோ, புறந்தள்ளவோ இல்லை. பெற்றோரை அவளும், ஒற்றை மகளை அவர்களும் இனி தேவை இல்லை என வெறுக்கவோ, ஒதுக்கவோ முடியுமா என்ன?

‘இவ்வளவு படித்து, வேலை பார்த்து, லட்சங்களில் சம்பாதிக்கும் எனக்கு, என் குழந்தையைக் கூட சரியாகப் பேணத் தெரியவில்லையோ, அதனால்தான் வாமனனை அழைத்துவிட்டேனோ, எனக்கு தன்னம்பிக்கை இல்லையோ?’ என்ற யோசனை மண்டையைப் பிய்த்ததில், கவனம் சிதறி எழுதிய ப்ரோக்ராம் ரன் ஆகாமல், கணினி ‘கோடிங் எரர்’ என்றதில் டீம் லீடிடம் இருந்து காஷன் மெயில் வந்து விட்டது.

அது மட்டுமன்றி, தன்னோடு இருக்கும் வேலை பார்க்கும் மகளும் ஒரு வயதுப் பேரனும் இத்தனை பெரிய வீட்டில் தனியே என்ன செய்வார்கள் என்ற சிந்தனையோ, கவலையோ இன்றி, அமெரிக்கா செல்வதற்கு விடுப்பு எடுக்கச் சொல்லி அம்மா, அப்பாவை நச்சரிக்கத் தொடங்கியதில் லலிதாவிற்கு அதிர்ச்சி இல்லை என்றாலும், ஏமாற்றமும், தானும் கிருஷ்ணாவும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட உணர்வையும் அவளால் தவிர்க்க இயலவில்லை.

‘அம்மா நானும் வரேனான்னு கேட்கவும் இல்லை, அதோட, என்னால போகவும் முடியாது’

‘அப்பா கண்டிப்பா இந்த வீட்ல தனியா இருக்க விட மாட்டார்’

‘அப்ப எங்க வீட்டுக்குதானே (!) அனுப்புவாங்க?’

‘அம்மா, அப்பா இல்லாதபோது என் ஹஸ்பண்டை நான் கூப்பிடக் கூடாதாம் , ஆனா, இவங்க விருப்பப்பட்டா நான் அவரோட போய் இருக்கணுமாம், ‘நல்லா இருக்கே நியாயம்!’

இரண்டு மூன்று நாட்களாக இதுவே மனதில் ஓடியது. கடைசி இறகாக இன்று காலையில்…

அழைத்ததும் வந்த கணவன் தான் நன்றி சொன்னது பிடிக்காமல் முறுக்கிக் கொண்டவனை திருமண நாளன்று மலையிறக்க விரும்பிய லலிதா, அதற்கான வழியும், தன் அகத்தை விட்டுக் கீழிறங்க மனமும் இல்லாது, இரவு முழுவதும் கோழித் தூக்கம் தூங்கியவள், ஆறு மணிக்கே(!) எழுந்துவிட்டாள்.

கிருஷ்ணா நல்ல உறக்கத்தில் இருக்க, முன்னறைக்கு வந்து தன் ஆஸ்தான குஷனில் அமர்ந்து கொண்டாள்.

முன்பே எழுந்து, தன் தினசரி வேலைகளைச் செய்யத் தொடங்கி இருந்த லக்ஷ்மி “ஹாப்பி ஆனிவர்ஸரி லலிதா, மாப்பிள்ளை விஷ் பண்ணினாரா?”

“தேங்க் யூ மா, இன்னும் இல்லை”


லக்ஷ்மி. மூவருக்கும் காஃபியுடன் வர, “குட் மார்னிங் லலிதா, ஹாப்பி ஆனிவர்ஸரி, மாப்பிள்ளை எப்ப வரார், இன்னிக்கு உங்க ப்ளான் என்ன?” என்றவாறே வந்து மகளின் கையைப் பற்றிக் குலுக்கி வாழ்த்தினார் ரங்கராஜன்.

“தேங்ஸ்ப்பா, இது வரைக்கும் எதுவும் இல்லப்பா. இன்னும் கால் வரலை”

“பேசுவார் மா. இல்லைன்னா, நீதான் கால் பண்ணேன்”

லக்ஷ்மி “எல்லாரும் நடுராத்திரி பன்னெண்டு மணிக்கே கேக் வெட்டறாங்க, இங்க எல்லாம் கிழக்கும் மேற்குமா இருக்கு”

ரங்கராஜன் “லக்ஷ்மி, நல்ல நாளும் அதுவுமா, இதென்ன பேச்சு?”

“நான் என்ன இல்லாததையா சொல்றேன், அவர் புள்ளைக்குன்னா ஓடி வரத் தெரிஞ்சவருக்கு, கல்யாண நாள், நமக்காக பொண்டாட்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பான்னு தெரிய வேணாமா? நேத்தே இங்க வந்திருக்கலாம்தானே?”

பேச்சு போகும் திசை பிடிக்காத லலிதா எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.

ரங்கராஜன் “அவருக்கு என்ன வேலையோ, நீ ஏன்டீ காலங் காலைல லலிதாவோட மூடை ஸ்பாயில் செய்யுற?” என்றது கேட்டது.

மகனருகில் விட்டத்தைப் பார்த்து அசையாது படுத்துக் கொண்டவளுக்கு யார் சரி, யார் தவறு என்று குழப்பமாக, ஆயாசமாக இருந்தது. வாமனன் வந்து, இந்த நாளையே வண்ணமயமாக்கி, அம்மாவின் மூக்கு உடை படுவதைப் பார்க்க, எனக்காக வந்திருக்கார் பாரு என்று காட்ட மிக விரும்பினாள். கூடவே வருவானா மாட்டானா என்ற தன் இரண்டு விரல்களில் ஒன்றை தானே நீட்டி மூன்று வாய்ப்பிலும் வருவான் என்ற விரலைத் தொட்டு திருப்தி பட்டுக்கொண்டாள்.

நம்பிக்கைமானியின் பாதரசம் மேலும் கீழும் ஊசலாடியதில் அவனை முந்திக்கொண்டு, நானே வருகிறேன் என்றுவிட்டாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, தான் அழைத்ததை இதுவரை அவன் யாரிடமும் சொல்லவில்லை என்பதில் நிம்மதியாக ஏன், கர்வமாகக் கூட உணர்ந்தாள்.

முறைமை மாறாது இத்தனை செய்த வாமனமூர்த்தி ‘இதானா உன் பிளான்?’ என்றதும், அதில் இருந்த உண்மை சுட, எழுந்த குற்றவுணர்வில், யாரேனும் எதுவும் சொல்வதற்காகக் காத்திருந்தாள்.

லலிதாவின் அடுத்தது காட்டும் பளிங்கு முகம் பிரதிபலித்ததைப் பார்த்தபடி, எதிரே இருந்த ஒற்றை சோஃபாவில் சரிந்து அமர்ந்திருந்த வாமனனோ, அம்புகுட்டியும் கிருஷ்ணாவும் கொஞ்சிக் குலாவுவதை ரசித்திருக்கும் மற்றவர்களோ, லலிதாவின் சிந்தையிலேயே பதியவில்லை.

“ஹலோ, அங்காள பரமேஸ்வரி மேடம், நான் பேசுறது கேக்குதா?”

எந்த ரியாக்ஷனும் இல்லாது போக, மிக அருகில் சென்ற வாமனன் “ப்பே” என்று பயமுறுத்த, லலிதா அதிர்ந்து விழித்தாள்.

ஸ்ரீராம் “நேத்தெல்லாம் தேவதாஸ் மாதிரி சுத்திட்டு… ஏன்டா இப்டி பண்ற?”

எல்லோருக்கும் தேநீருடன் வந்த பவித்ரா “அவன் முதுகுலயே ரெண்டு போடு ஸ்ரீ… லலிதா, நீ மட்டும் இன்னிக்கு இங்க வரலைன்னா…”

“நான் அங்க வந்திருப்பேன்” என்ற வாமனன் “கெட் ரெடி ஃபார் டின்னர் மக்களே, க்ரீன்ஹவுஸ் பார்பிக்யூல டேபிள் ரிஸர்வ் பண்ணி இருக்கேன்”

சீதளா “நாங்க எதுக்குடா, கிருஷ்ணாவை நாங்க பாத்துக்கறோம், நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க”

லலிதாவின் கண்களை சந்தித்த வாமனன், சிரிக்காமல் “இவளோட தனியா போனா எனக்கு பயமா, வெக்கமா இருக்காதாம்மா, இவளை நம்பி நான் எப்படி போறது?”


“அடங்க மாட்டியாடா நீ?” என்ற பவித்ரா, அருகில் வந்து வாமனனை அடிக்க, அம்புக்குட்டியும் கிருஷ்ணாவும் தொடர்ந்தனர்.

அவளை இயல்பாக்கும் அவர்களது முயற்சி புரிய, லலிதாவிற்கு புன்னகையோடு சேர்ந்து கண்ணைக் கரித்தது.

******************

கணவன், மனைவி இருவருக்குமே சமீபமாக இத்தனை அமைதியான, நிறைவான இரவு இருந்ததே இல்லை எனத் தோன்றியது.
மிக மெலிதான நீல நிற இரவு விளக்கு ஒளிர்ந்தது.

இத்தனைக்கும் கிருஷ்ணா உறங்கி இருக்க, அருகில் வாமனன் கால் நீட்டி அமர்ந்திருந்தான். தனிமை தயக்கம் தர, கிருஷ்ணாவின் உடமைகளை எடுத்து வைப்பதான பாவனையில் இருந்தவளைப் பார்த்து வாமனனுக்கு சிரிப்பு.

சண்டை போடத் தயங்காதவள், சரசத்துக்கும், சமாதானத்துக்கும் தயங்குவது புரிந்தது. எழுந்து அருகில் சென்றான்.

“இருட்டுல என்னடீ செய்யுற?”

“கிருஷ்ணா…”

“அதைக் கீழ போட்டு என்னைப் பாரு”

“...”

“லால்ஸ்”

“இருங்க, நான் முதல்ல… “

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ சொல்லாமலே அங்க என்ன நடந்திருக்கும்னு எனக்குத் தெரியும்”

“...”

“உங்க வீட்ல ஒரு மாதிரின்னா, இங்க வேற மாதிரி. எங்கம்மாக்கும் பவித்ராக்கும் சண்டையே வரலைன்னா நினைக்கற?”

“!!!”

“எல்லா அம்மா, அப்பாவும் ஒரே மாதிரிதான். தன் பேச்சைக் கேட்டா குழந்தைன்னுவாங்க. நீயே ஒரு முடிவை எடுத்தா, அவங்களுக்குப் பிடிக்காது. எடுக்கலைன்னா கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதுன்னு திட்டுவாங்க”

“...”

“நாமே அம்மா, அப்பா ஆனதுக்குப் பிறகும் பொறுப்பு இல்லாம, பொறுப்பை ஏத்துக்காம இருக்கறதுதான் தப்பு, ரைட்?”

“ம்”

“நாளைக்கு காலைல ஆறு மணிக்கு எழுந்தாதான் டயத்துக்கு வேலை செய்ய முடியும், ரைட்?”

“ம்”

“இப்ப தூங்கலாம், ரைட்?”

“ஹான்… ம்”

வாய்விட்டுச் சிரித்த வாமனமூர்த்தி “ஹக்?”

“ம்”

“...”

“...”

“ஊஃப்… லால்ஸ், எனக்கு ஒரு டவுட்டுடீ?”

“என்ன?”

“அன்னைக்கு நான் ட்ரெஸ்ஸு மட்டும்தானே வாங்கி வெச்சிருந்தேன். அப்போ குளிச்சிட்டு நீ… ம்ப்ச் ஜஸ்ட் மிஸ்டுடீ”

லலிதாவின் பொத்திய கையின் மேல் தெரிந்த வாமனனின் கண்கள் சிரிப்பில் மின்னியது, இருளிலும் தெரிந்தது.

*****************

நான்கு வருடங்களுக்குப் பின்…

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஸ்ரீராமின் மடியில் மொட்டை அடித்த தலையோடு அமர்ந்திருந்த ஒரு வயது பெண் குழந்தை வீறிட்டு அழ, அழ ஆசாரி செப்பு ஊசியால் காதைக் குத்தி, மெலிதான தங்க வளையத்தை மாட்டியதை அம்புக்குட்டியும் கிருஷ்ணாவும் உன்னிப்பாக வேடிக்கை பார்த்தனர்.

அழுத மகளைத் தூக்கிய லலிதாவை முறைத்த வாமனமூர்த்தி “பாப்புவை யார் கிட்டயாவது குடுத்துட்டு வா. பந்தியை பார்க்கணும். உங்கம்மா அங்க சும்மாதான் நிக்கறாங்க பாரு” என்றவன் விறுவிறுவென பக்கத்து மண்டபத்துக்கு நடக்க, லலிதா ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தாள்.

சீதளாவின் தங்கை “உன் மருமக பரவாயில்லக்கா, நல்ல பொறுப்பாயிட்டா” என்றதை கேட்டு, அருகே நின்ற லக்ஷ்மியின் வாயெல்லாம் பல்.


“இதைச் செய், அதை செய்யாத, அப்படிப் பேசு, எங்க வீட்டு வழக்கம், இந்த வாரம் உங்க அப்பாக்கு சுகர் செக் செஞ்சாங்களான்னு கேட்டியா… ப்ளா, ப்ளா, ப்ளா…”

முழு மூச்சாக முயன்று லலிதாவை ஒரு குடும்ப இஸ்திரியாக மாற்றிவிட்டே ஓய்ந்த வாமனன், அவன் சொன்னது போலவே அவளைத் தனக்கேற்றபடி தகவமைத்துக் கொண்டவன், அவளது அறியாமைகளை இட்டு நிரப்பவும் தயங்கியதில்லை, விட்டுக் கொடுத்ததும் இல்லை.

உணவுக் கூடத்துக்குச் சென்று, மாமனாரும் அப்பாவும் அங்கிருப்பதைப் பார்த்தவள், அவர்கள் தங்கி இருந்த அறையில் தேங்காய் பைகளை எண்ணிக் கொண்டிருந்த கணவனைத் தேடிச் சென்றாள்.

“என்ன இங்க வந்துட்ட, டைனிங் ஹால்ல எல்லாம் ஓகேதானே?”

“ஓகே இல்லாம, மிஸ்டர். மாமியாரின் திறமையான உத்தரவின் கீழ் எல்லாம் டபுள் ஓகே”

“போட்டேன்னா தெரியுமா, இது என்ன எப்பப் பாரு மிஸ்டர் மாமியார்னு…”

லலிதா “அடடா, மாமியார்னா அத்தை மாதிரி சாதுன்னு நினைச்சீங்களா, சேச்சே… ஓயாம நச்சரிச்சு, அட்வைஸ் பண்ணி, திட்டி, வேலையை கத்துக் கொடுத்து, கைட் பண்ணி, என் கூடவே வேலையும் செய்யற என்னோட மிஸ்டர் (கணவன்) கம் மாமியார் நீங்கதானே?”

சுற்றும் முற்றும் பார்த்தவன் “வாய்தான்டீ உனக்கு, என்று அருகில் நெருங்க, “கிருஷ்ணா, உங்க அம்மாவும் அப்பாவும் இங்க இருக்காங்க பாரு” என்ற அம்புக்குட்டி கதவை விரியத் திறந்தாள்.

குழந்தைகளின் பின்னே வந்த ஸ்ரீராம், வாமனமூர்த்தியிடம் “இங்க என்னலே நடக்கு?”

அவனுக்கு பதிலளிக்காத வாமனன் “இங்க எனக்கு ஸ்ரீ ஹெல்ப் பண்ணுவான், நீ போய் பாப்புவைப் பாரு” என அதட்டலாக லலிதாவை விரட்ட, முறைத்துக்கொண்டே சென்றாள்.

ஸ்ரீராம் “லலிதா கோச்சிக்கிட்டாளாடா மச்சான்?”

வாமனன் “அவ கோபப்பட்டாதான்டா எனக்கு நல்லது”

“புரியலடா மச்சான்”


“அது அதைவிட நல்லது”

ஸ்ரீராம் “மச்சான்!”

“சொல்லுடா”

“உன் கோபம், பட்டு கத்தரிச்ச மாதிரி வெட்டிப் பேசறது எல்லாம் அப்படியே இருக்குதான். ஆனா, எனக்கென்னவோ, கொஞ்சம் மைல்டா, மென்மையா ஆன ஃபீல்…”

வாமனன் “திரிவிக்ரமனா விஸ்வரூபம் எடுக்கறது ரொம்ப ஈஸிடா மாப்ளை. வாமனமூர்த்தியா அடக்கி வாசிக்கறதுதான் கஷ்டம் தெரியுமோ?”


லலிதா திரும்பி வந்த தினத்தின் நினைவு படர்ந்ததில் வாமனனின் முகமும் கண்களும் ஒளிர்ந்து, மென்மையானது.

தன்னிடம் கோபம் கொள்ளும், தன் பொறுப்பின்மையை, சுயநலத்தை குத்திக் காட்டும் வாமனனை எதிர்பார்த்துத் தயங்கி நின்ற லலிதா பரமேஸ்வரி, தணிந்த குரலில் தட்டிக்கொடுத்துத் தன்னை அரவணைத்த கணவனை திருமணத்தின் இயல்பான உறவைத் தாண்டி நம்ப, மதிக்க, நேசிக்கத் தொடங்கினாள்.

வாமனன் அறைவாசலில் பட்டுப்புடவை சரசரத்ததில், ஸ்ரீராமின் பின்னே மகளுடன் வந்து நின்ற லலிதாவைப் பார்க்க, அவள் “ஹக்” என்று வாயசைக்கவும், கண்களை மூடித் திறந்தான், புன்னகைத்தான்.

“பாப்புக்குட்டீ, தோடு போட்டுக்கிட்டீங்களா?” என்றபடி பெண்ணைத் தூக்கியவன், இயல்பாக ஒரு கையால் மனைவியை அணைத்து விடுவித்தான்.


விருந்தினரைக் கவனிக்க விரைந்த லலிதாவைப் பின் தொடர்ந்தவனின் நேசம் நிறைந்த பார்வையில்தான் எத்தனை ரசனை!
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr.மாமியார் 17 - FINALE 4 AND EPILOGUE
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

EswariSasi

New member
Joined
Jun 3, 2025
Messages
23
எந்த மேல் பூச்சும் இல்லாத யாதார்த்தமான கதை ❣️❣️❣️❣️❣️ வாழ்த்துக்கள் ஜீ ❤️ ❤️ ❤️ ❤️
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
45
எந்த மேல் பூச்சும் இல்லாத யாதார்த்தமான கதை ❣️❣️❣️❣️❣️ வாழ்த்துக்கள் ஜீ ❤️ ❤️ ❤️ ❤️
நன்றி மா🙏
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
77
ஈகொ இல்லாத கண்டிப்பு,, நேர்மையான, நேர்த்தியான, வாழ்கை கடைபிடிபவற்கே இது சாத்தியம்
வாழ்க வாமனன்
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
78
மாமியார் கொடுமைகளையே பார்த்தும், கேட்டும் பழகிய எங்களுக்கு, கணவனே மாமியாராகி, கொஞ்சம் கடுமை காட்டி, நிறைய தட்டிக் கொடுத்து, விட்டுக் கொடுத்து, அவன் குடும்ப வழக்கத்தைக் கற்றுக் கொடுத்து........ வாமனன் மாதிரி மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் என்று எண்ண வச்சுட்டீங்க.

ஶ்ரீ மற்றும் பவியின் அன்பும், புரிதலும் அழகு.

வாமனன் மற்றும் ஶ்ரீயின் நட்பு அருமை.
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
42
இப்போ இருக்குற எதார்த்தம் இது தான்... எல்லாம் ஒண்ணே ஒண்ணு பெத்து வச்சிட்டு சீரும் சிறப்புமா வரளர்கிறேன் சொல்லி சோம்பேறியா வளர்த்து விட்டு கல்யாணம் ஆனா பிறகு ஒன்னும் தெரியாம முழிக்கிற ஆணோ பொண்ணோ அவுங்க வாழ்க்கையை கன்னுமுன்ன காட்டி இருக்கீங்க... செம எத்தனை எத்தனை நெத்தியடி
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
45
இப்போ இருக்குற எதார்த்தம் இது தான்... எல்லாம் ஒண்ணே ஒண்ணு பெத்து வச்சிட்டு சீரும் சிறப்புமா வரளர்கிறேன் சொல்லி சோம்பேறியா வளர்த்து விட்டு கல்யாணம் ஆனா பிறகு ஒன்னும் தெரியாம முழிக்கிற ஆணோ பொண்ணோ அவுங்க வாழ்க்கையை கன்னுமுன்ன காட்டி இருக்கீங்க... செம எத்தனை எத்தனை நெத்தியடி
நன்றி டீச்சர்🙏
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
45
மாமியார் கொடுமைகளையே பார்த்தும், கேட்டும் பழகிய எங்களுக்கு, கணவனே மாமியாராகி, கொஞ்சம் கடுமை காட்டி, நிறைய தட்டிக் கொடுத்து, விட்டுக் கொடுத்து, அவன் குடும்ப வழக்கத்தைக் கற்றுக் கொடுத்து........ வாமனன் மாதிரி மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் என்று எண்ண வச்சுட்டீங்க.

ஶ்ரீ மற்றும் பவியின் அன்பும், புரிதலும் அழகு.

வாமனன் மற்றும் ஶ்ரீயின் நட்பு அருமை.
நன்றி🙏
 

Adhithya

New member
Joined
May 23, 2025
Messages
6
Beautiful story, wonderful writing. கதைய அழகா கொண்டு வந்துருக்கீங்க ma'am. Romba naal vamanan kudavum Lalitha kuda travel panniten.
எல்லா அம்மா, அப்பாவும் ஒரே மாதிரிதான். தன் பேச்சைக் கேட்டா குழந்தைன்னுவாங்க. நீயே ஒரு முடிவை எடுத்தா, அவங்களுக்குப் பிடிக்காது. எடுக்கலைன்னா கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதுன்னு திட்டுவாங்க
After marriage and childbirth i realised that this is the truth. Hatts off ma'am. 👏👏I've read all of your stories available in kindle. I've become a huge fan of your writing. எனக்கும் எழுதணும்னு ஒரு inspiration வந்தது உங்க கதைகள் படிச்ச அப்பறம் தான். Thank you ma'am keep going 🤝👏
 

Savimahe

New member
Joined
Jun 30, 2025
Messages
1
Nice story and very much needed at this era. Lalitha embodies the mindset of modern young women. Vamanan’s journey was eased by the harmonious and supportive nature of his entire family, especially Seethala as mother-in-law and Pavithra as sister-in-law. Something for all MILs and SILs to think about.
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
45
Beautiful story, wonderful writing. கதைய அழகா கொண்டு வந்துருக்கீங்க ma'am. Romba naal vamanan kudavum Lalitha kuda travel panniten.

After marriage and childbirth i realised that this is the truth. Hatts off ma'am. 👏👏I've read all of your stories available in kindle. I've become a huge fan of your writing. எனக்கும் எழுதணும்னு ஒரு inspiration வந்தது உங்க கதைகள் படிச்ச அப்பறம் தான். Thank you ma'am keep going 🤝👏
Thank you & All the best⚘️
 
Top Bottom