• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 13 - PREFINAL

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
34
Mr. மாமியார் 13


“அங்கேயே நில்லு, உள்ள வராத”

புலர்ந்தும் புலராத காலைப் பொழுதின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அசரீரித்த சீதளாவின் குரலில் அந்நேரத்துக்கே வீட்டு வாசலில் வந்து நின்ற லலிதா, லக்ஷ்மி, ரங்கராஜன் மூவர் மட்டுமின்றி, அவர்களுக்குக் கதவைத் திறந்த ஸ்ரீசைலமுமே கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்.

ஆனால், ஒரு சிறிய பேஸினில் ஒரு கையில் ஆரத்தியும் மறு கையில் பேரன் கிருஷ்ணாவையும் சுமந்து வந்த மாமியாரைப் பார்த்த லலிதா பரமேஸ்வரி, இடைப்பட்ட அந்த நூற்றி முப்பது நொடிகளில் அனுபவித்த உணர்வுகளும் , அவளுள் எழுந்த கேள்விகளும் ஏராளம்.

அசந்தர்ப்பமான சூழலில் வந்து நின்ற மருமகளிடம் பேரனைக் கொடுத்து “கிழக்க பாத்து நில்லு” என்றபடி ஆலம் சுற்றிய சீதளா “இப்ப வா உள்ள, நீங்களும் வாங்க” என வரவேற்றாள்.

இரவு முழுதும் நொடியும் உறங்காது, ஏதேதோ நினைத்து, பேசி, எல்லோரையும் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடும் ஆத்திரத்துடன் வந்த லலிதாவை, அந்நேரத்தில் அவளது மனநிலையும், எதிர்பார்ப்பும் பதட்டமும் பரிதவிப்பும் புரிந்தவராக, குழந்தையைக் கொண்டுவந்து கையில் தந்ததோடு, இறுக்கமான சூழலிலும் பதறாது, பிள்ளை பெற்று வந்த மருமகளையும் பேரனையும் நிற்க வைத்து ஆலம் சுற்றிய மாமியாரின் பாங்கான வரவேற்பில், லலிதா மட்டுமின்றி அவளது பெற்றோரும் திகைத்துதான் நின்றனர்.

தீபத்தின் திரியும் நல்லெண்ணையும் எரிந்த மணமும், காஃபி டிகாக்ஷனின் வாசனையும், பால்காயும் மணமும் வீடெங்கும் சூழ்ந்திருந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகனை, இத்தனை நாள் இல்லாத வகையில் தன்னோடு அணைத்துப் பிடித்தபடி பதினோரு மாதங்களுக்குப் பின் புகுத்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள் லலிதா பரமேஸ்வரி.

கிருஷ்ணாவின் தூக்கம் கலையாதிருக்க வேண்டி, ஹால் விளக்கைப் போடாமலே “உட்காருங்க, இதோ வந்துடறோம்” என சீதளாவும் ஸ்ரீசைலமும் ஆளுக்கொரு திசையில் சென்றுவிட்டனர்.

தன்னைத் தேடித் தவிக்காது, நிச்சிந்தையாகத் மகன் உறங்குவதில், உறுத்தலும், ஏக்கமும் மிக மெலிதான கோபமும் லலிதாவைப் புரட்டியது.

‘அத்தனை வலியும் மருந்தும், பத்தியமும் அவ்வளவுதானா? பால் கொடுப்பதை நிறுத்தி விட்டால் அம்மாவெல்லாம் சும்மாதானா?’

ஒருநாள் மகனைப் பிரிந்து இருந்ததில், அதுவும் வாமனமூர்த்தி குழந்தையை மட்டும் அழைத்துச் சென்றதில் தன்றை மட்டும் தள்ளி நிறுத்தியதாகத் தோன்றியதில். கழிவிரக்கம் மிகுந்தது.

தனித்து (!) விடப்பட்ட மூவரும் சமையலறை விளக்கு, பூஜையறை தீபம், வெளியில் பரவும் மிக மெலிதான வெளிச்சத்தில் சங்கடமாக அமர்ந்திருக்க,

தலைவழியே மாட்டிய டீ ஷர்ட்டை இழுத்து சரி செய்தபடி வாமனமூர்த்தி தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

ரங்கராஜன் மாப்பிள்ளையை அவஸ்தையாகப் பார்க்க, “குட் மார்னிங் மாமா, வாங்க ஆன்ட்டீ” என்றவன், தன்னைக் கண்களாலேயே பொசுக்கிய லலிதாவைப் பார்த்து ‘இங்க எங்க?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினான்.

லலிதாவைப் போல் வெளிப்படுத்த முடியாது, லக்ஷ்மியுமே கோபத்தில் இருப்பது வாமனனுக்குப் புரிந்தாலும் அலட்சியம் செய்தான்.

தன் அறையிலிருந்து வெளியே வந்து நேரே பூஜையறைக்கு சென்று, நெற்றியில் விபூதி துலங்க வந்த ஜானகி பாட்டி “வாங்க, வாங்க, என்னம்மா லலிதா, பசு கன்னுக்குட்டியத் தேடி வந்துடுச்சு போல?” என, முதல் பந்தையே தூஸ்ராவாக வீசினார்.

காஃபியுடன் வந்த சீதளாவிடமிருந்து ட்ரேயை வாங்கிய வாமனமூர்த்தி எல்லோருக்கும் விநியோகித்தான். கையில் எடுக்காமல் இருந்த லலிதாவை நோக்கி சற்றே குனிந்தவன் “குடி, தெம்பா சண்டை போடலாம்” என்றது எல்லோர் செவிகளிலும் தெளிவாகக் கேட்டது.

அனைவருமே அடர்ந்த மௌனத்தில் காஃபி உறியும் சத்தம் பிறருக்குக் கேட்காதிருக்கப் பிரயத்தனப்பட்டனர்.

கிருஷ்ணாவை அணைத்துப் பிடித்திருந்த லலிதா, ஒரு கையால் சூடான காஃபி தம்ளரை சமாளிக்கத் திணறினாள். பாட்டி “தூங்கற புள்ளைய படுக்கப் போட்டு வந்து நிம்மதியா காஃபியைக் குடி” என்றதில், மறுப்பாகத் தலையசைத்த லலிதா மகனைத் தன்னோடு இறுக்க, கிருஷ்ணா சிணுங்கவும், வாமனமூர்த்தி மனைவியைக் கூர்ந்தான்.

பூனையும் எலியும் முறைத்துக்கொண்டு நிற்க, மணியைக் கையில் எடுத்துக்கொண்ட ஸ்ரீசைலம் தொண்டையை செருமியபடி,

“நேத்து வாமனன் சொல்லாம கிருஷ்ணாவை இங்க தூக்கிட்டு வந்ததும், ராத்திரி முழுசும் இங்கேயே …”

இடைமறித்த வாமனமூர்த்தி “நீங்க என்னப்பா, நான் என்ன புள்ளை புடிக்கறவனா, இல்ல கிருஷ்ணாவை திருடிட்டு வந்தேனா? ஆன்ட்டீ கிட்ட சொல்லிட்டுதானே தூக்கிட்டு வந்தேன்?”

“அவனை இங்க, நம்ம கூட வெச்சிக்கிட்டதுல என்ன தப்பு, ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா, அவன் எனக்கும்தானே…”

“வாமனா, நீ கொஞ்சம் பேசாம இருக்கியா?” - ஸ்ரீசைலம்.

லக்ஷ்மி “நீங்க வெளில தூக்கிட்டு போறேன்னு சொன்னீங்கதான். ஆனா, நைட் முழுசும் வராம, ஃபோனும் செய்யாம, எங்க காலையும் எடுக்காம…. பத்து மாசக் குழந்தை அம்மாவைத் தேடாதா தம்பி?”

வேகமாக “அப்டி அவன் தேடி, ஏங்கி அழுதிருந்தா, நானே கொண்டு வந்து விட்டிருக்க மாட்டேனா?” என்ற வாமனமூர்த்தியே, மனைவியின் முகம் போன போக்கை பார்க்க மாட்டாது,

“தூங்கற முன்னால கொஞ்சம் ரெஸ்ட்லெஸா இருந்தான், ஆனா மேனேஜபிள்தான்”

லக்ஷ்மி “உங்க குழந்தைதான் தம்பி, இருந்தாலும் நீங்க சொல்லிட்டு…”

“சொன்னா…. உடனே தூக்கிட்டு போன்னு சொல்லிடுவீங்களா, அப்பவும் அம்மா, அணில், ஆடு கதைதான் ஓடியிருக்கும்”

ரங்கராஜன் தன்மையாக “சின்னக்குழந்தை இல்லையா வாமனன், ரொம்பவே பதட்டமாயிடுச்சு. ஆஃபீஸ்ல இருந்து வந்த லலிதா புள்ளையைக் காணும்னதும் பாவம், ஒரே அழுகை”

“அதான் உடனே தேடி வந்துட்டீங்களோ?”

“வாமனா…” என குரலை உயர்த்திய சீதளா “...ண்ணா, அவன் ஏதோ ஆசைல தூக்கிட்டு வந்துட்டான். வாமனன் ஃபோனை எடுக்கலைன்னா, எனக்கோ, அவருக்கோ நீங்க (ஸ்ரீசைலம்) பேசி இருந்தா, இந்த டென்ஷனே தேவை இல்லையே…”

“...”

“வாமனன் சொன்னாப்போல, நீங்க நைட்டே கூட இங்க வந்திருக்கலாம்”

லக்ஷ்மி “மதியம் மூணு மணிக்கு போனவங்களை நைட் பதினோரு மணியாகியும் காணும்னா என்னன்னு யோசிக்கிறது, எங்கேன்னு தேடறது”

ஜானகி பாட்டி “நல்லவேளையா, போலீஸ்ல புகார் சொல்லாம இருந்தீங்களே” எனவும் வாமனமூர்த்தி பக்கென சிரித்துவிட, ரங்கராஜனின் முகம் மாறியது.

‘அப்பாவாவே இருந்தாலும், அதெப்டி அவர் எங்க போறேன்னு சொல்லாம கிருஷ்ணாவை தூக்கிட்டுப் போகலாம், போலீஸ்ல கம்ப்ளையின்ட் செஞ்சாதான் இது மாதிரி ஆளுங்களுக்கு புத்தி வரும் ’ என்று குதித்த லலிதாவை அடக்க அவர் பட்ட பாடு அவருக்குதானே தெரியும்!

இதற்குள் மணி ஏழை நெருங்கவும், கிழக்கு வெளுத்து வெளிச்சம் பரவியதிலும், பேச்சுக்குரல்கள் உயர்ந்ததிலும் உறக்கம் கலைந்த கிருஷ்ணா, யாரிடம் இருக்கிறோம் என்ற கவனமின்றி, எதிரே நின்ற தந்தையைப் பார்த்ததும் “...ப்பா..” என தாவ முயற்சித்ததில், லலிதாவின் பிபி எகிறியது.

குழந்தை லேசாக நெளியத் தொடங்கியதுமே உள்ளே சென்று “எழுந்தாச்சா செல்லம், அம்மா பாத்தீங்களா குட்டி சார்” என்றபடி புத்தம்புது சிப்பரில் (sipper) பாலோடு வந்த சீதளா, வெகு இயல்பாக,

“உள்ள போய் அவனோட டயப்பரை அவுத்துட்டு இந்த பாலை குடு லலிதா” என்றதை மறுக்க மாட்டாது எழுந்து சென்றாள்.

டயப்பரை அவிழ்த்ததும் சமத்தாக பாத்ரூமில் சிறுநீர் கழித்த கிருஷ்ணாவை மடியில் கிடத்தி சிப்பரைத் தர, ரொம்பப் பசித்து விட்டது போல் வேக வேகமாக உறிஞ்சியவன், அம்மாவின் தாலி செயினைப் பிடித்து இழுத்தபடி சிரிக்க, லலிதாவிற்கு அழுகை வரும்போல் இருந்தது.

போன மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது கூட இல்லாத நெகிழ்வு இப்போது வர, மகனை வருடி கால்களைப் பிடித்துவிட்டாள்.

கிருஷ்ணா முன் பசியாறியதில் சீராக குடிக்கத் தொடங்கவே, லலிதாவின் கவனம் அந்த அறையில் சென்றது.

எதிரே இருந்த மர பெஞ்ச் ஒன்றில் கிருஷ்ணாவிற்கான உடைகள் ஐந்தாறு, டயப்பர், இன்னொரு புது சிப்பர், பேபி வைப்ஸ், நேப்கின் என எல்லாம் புதிதாக இருந்தது. குழந்தை அப்போது கூட புதிதுதான் அணிந்திருந்தான்.

சுற்றிலும் லேப்டாப், உடைகள், புத்தகங்கள், டேபிள் டென்னிஸ் ராக்கெட், ஜிம் பால் என வாமனமூர்த்தியின் உடமைகளே நிறைந்திருக்க, வாமனன் அங்கேயே நிற்பதுபோல் தோன்றியது.

‘இவர் இங்கதான் இருக்காரா, அப்ப எங்க(!) வீட்ல?’

பாலை வாயில் வைத்துகொண்டு ‘க்ழ்ர்ர்ர்’ எனக் கடையும் சத்தம் கேட்டு கவனம் கலைந்தவளைப் பார்த்துச் சிரித்த கிருஷ்ணா ‘..ப்பா..’ என்றதில் சட்டென மூண்ட கோபத்தில்,

“என்னடா பெரீய்யய அப்பா?’ என்று தோளில் தூக்கி, முதுகைத் தட்ட மீண்டும் குழந்தை ‘…ப்பா..’ என்றதில்
இன்னும் பேச்சு வராத கிருஷ்ணாவுக்கு எல்லாமே, எல்லாருமே …ப்பா, …த்தா தான் என லலிதாவிற்கு பல்பு எரிந்தது.

மெலிதான, சின்னச் சின்ன பாதங்களின் கொலுசுச் சத்தமும் “கிச்னா பேபி (எ)ங்க?” என்ற குரலும் முன்னே வர, ஒருக்களித்திருந்த அறைக்கதவை படீரெனத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் அம்புக்குட்டி.

தன்னைக் கண்டதும் சிறிது தயங்கியவளின் வெட்கம் வசீகரிக்க, லலிதா “ஹாய் அம்பு, எப்டி இருக்க?’

ம்ஹும், எங்கே, அம்புவின் கவனமெல்லாம் கிருஷ்ணாவிடம்தான்.

அவளிடமும் “…ப்பா…” என்றான் கிருஷ்ணா.

“ஹலோ அங்கிள், எப்டி இருக்கீங்க ஆன்ட்டீ?” என, ஸ்ரீராம் தன் பெற்றோரை குசலம் விசாரிப்பது கேட்டது. கூடவே,

“பவி ஏதோ எமர்ஜென்ஸின்னு நாலு மணிக்கு ஹாஸ்பிடல் போனா. எனி டைம் வந்துடுவா. மார்னிங் அவ ஃப்ரீதான். எனக்கு ஒம்போது மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு” என்றவன் “அம்புலு” என மகளை விளித்தான்.

அறைக் கதவைத் தட்டியபடி முதலில் வாமனன் வர, ஸ்ரீராம் பின்னே வந்து “ஹாய் லலிதா, எப்டி இருக்க?”

“ஃபைன் அண்ணா, நீங்க ..?

“ஆல் குட் மா. குட்டி ஸார் என்ன சொல்றார், டயமாச்சு மா, ஸீ யூ, அம்புலு, பட்டுகுட்டியா இருக்கணும், பேபிய டிஸ்டர்ப் பண்ணாம விளையாடு, ஓகே?”

தலையை வேகமாக ஆட்டிய அம்புலு, ஸ்ரீராம் குனிந்து கை விரிக்கவும், குடுகுடுவென அவனிடம் ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

“மாமாக்கு?” என்ற வாமனனிடம்,

“நோ, அப்பாக்கு” என்றாள் அம்பு.

வாமனன் “பைக்ல போகணும்னு வாடீ, அப்ப வெச்சுக்கறேன்”

“ரெண்டு பேரும் நல்லா அடிச்சுக்கோங்க, நான் வரேன்” என்ற ஸ்ரீராம், தன்னோடு வந்த வாமனனிடம், அறைக்கு வெளியே நின்று “ஆத்திரப்படாம நிதானமா பேசுடா” என்றது கேட்டது.

அம்புவும் கிருஷ்ணாவும் சிரித்துக் கொண்டிருக்க, சிறிது நேரம் அமைதியாக விளையாட விட்டாள்.

வெங்காயம் வதங்கும் மணம், மிக்ஸியின் ர்ர்ரும்ம்…, தாளிக்கும் ஓசை எல்லாம் தெளிவாகக் கேட்டது.

“அம்பும்மா” என்ற சீதளாவின் அழைப்பில், போக மறுத்த அம்புவை அழைத்துக்கொண்டு, மகனைத் தூக்கியபடி லலிதா வெளியே வர, வாமனமூர்த்தியை அங்கே காணவில்லை. பெரியவர்கள் அனைவரும் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தனர்.

லக்ஷ்மி சம்பந்தி வீட்டில், மருமகனின் படுக்கையறையில் இருந்த மகளிடம் செல்ல முடியாத தவிப்பில் இருந்தாள். புகுந்த வீட்டினர் த்ன் மகளையும் பேரனையும் ஆக்ரமித்து, தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாக நினைத்தவள் அது அவர்களின் உரிமை என்பதை மறந்தாள்.

மகள் புகுந்த வீட்டில் நல்ல மருமகள் என்று பெயர் வாங்கி செல்வாக்கோடு கோலோச்ச வேண்டும் என்று ஒரு புறமும், பேரனும் மகளும் தன் அருகிலேயே இருக்க, மருமகனும் மகளின் பேச்சைக் கேட்டுத் தங்களுக்கு சாதகமாக நடந்து, விருந்து, விசேஷமென்றால் மகள் தன் புகுந்த வீட்டிற்கு சென்று, அந்நேரத்தில் அம்பலத்தில் ஆடினால் போதுமென்று ஒருபுறமும் ஆசைப்பட்டாள்.

இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் நடக்கமுடியும் என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளாது ஆசை லக்ஷ்மியின் அகக் கண்ணைக் கட்டியது.

தனது உடல் உபாதைகளைப் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கு உழைக்கத் தயாராக இருந்தவளை,
அவளது தந்தை ரத்னமும், ரங்கராஜனும் ‘லலிதாவுக்கு தூபம் போடாத லக்ஷ்மி, இங்கதானே இருக்கா, எப்ப வேணா வரட்டும், நாமும் போய் பார்க்கலாம்’ என்றதை புறந்தள்ளினாள்.

மகள் மாப்பிள்ளையை சமாளித்து, இங்கே இருக்கும் வரை இருக்கட்டுமே என்ற எண்ணம் லக்ஷ்மிக்கு.

ஆனால், மனைவியிடம் சொல்லிச் சொல்லி, கேட்டுக் கேட்டுக் களைத்த வாமனமூர்த்தி, இப்படி குழந்தையை மட்டும் தனித்துத் தூக்கிக் கொண்டு போனது சற்றும் எதிர்பாராதது.

“நீ ஏம்மா கிருஷ்ணாவை அவர்கிட்ட குடுத்த?” - லலிதா.

“இது என்ன கேள்வி, அவர் புள்ளைடீ அது. தடுக்கறதுக்கு நான் யாரு?”

அறையிலிருந்து வெளியே வந்த மகளைப் பார்த்த லக்ஷ்மி, பேரனை வாங்கிக்கொண்டாள்.

இதற்கு மேல் என்ன செய்வது, என்ன பேசுவது என்று புரியாமல் ‘நிக்கட்டுமா… போகட்டுமா?’ மொமன்ட்.

வாமனன் செய்த வேலையில்
வாரத்தின் நட்ட நடுவே யாரும் அலுவலகம் செல்லவில்லை.

காற்றில் இட்லியின் மணம் பரவ, ஒரு சின்ன தட்டில் இட்லி, நெய், சாம்பாருடன் வந்த வாமனன் “அம்புகுட்டி, சாப்பிடலாம் வா” என மருமகளைத் தூக்கி டைனிங் டேபிளில் அமர்த்தி ஊட்டத் தொடங்கினான்.

வாமனமூர்த்தியின் வேலை செய்யும் இயல்பையும், மருமகளை சீராட்டுவதையும், மகனைக் கையாள்வதையும் கண்ட ரங்கராஜன் மனைவியையும் மகளையும் கண்டனப் பார்வை பார்த்தார்.

‘இவரா உன்னை வேலை செய்யச் சொல்லி கஷ்டப்படுத்தறது?’

நேற்றிலிருந்து தன்னைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றிய தந்தை, இன்னொரு குழந்தையோடு பேசிச் சிரித்தபடி உணவூட்டுவதைப் பார்த்த கிருஷ்ணா என்ன நினைத்தானோ, லக்ஷ்மியின் மடியிலிருந்து திமிறி கீழே நழுவி, நாலுகால் பாய்ச்சலில் ஆனையாடிக்கொண்டே வாமனனிடம் போய் கருடாழ்வாரைப் போல் நின்றான்.

அம்புக்கு கதை சொல்வதில் கவனம் வைத்திருந்த வாமனன், குழந்தையைக் கவனிக்கவில்லை.

ஸ்ரீசைலம் “வாமனா, புள்ளையைத் தூக்குடா முதல்ல” என சத்தம் போட்டார்.

“பாக்கலடா ஜூனியர், ஸாரி, இட்லி சாப்பிடுறீங்களா ஸார்?” என, கிருஷ்ணாவை ஒரு கையால் தூக்கிய வாமனன் பயத்தம்பருப்பு சாம்பாரில் சிறிய துண்டு இட்லியைப் பிரட்டி, விரல்களால் நசுக்கித் தர,

லக்ஷ்மி “ஐயோ, தம்பி, அது காரம்”

வாமனன் “அதனால என்ன, பழகிக்கட்டும். அவன் வேணாம்னா தண்ணி குடுக்கலாம்”

லலிதா “யாராவது பத்து மாச புள்ளைக்கு சாம்பார் குடுப்பாங்களா?”

வாமனன் “சாம்பார்தானேடீ, என்னவோ சரக்கு குடுத்தாப்போல இத்தனை ரியாக்ஷன் ஏன்?” என்றான் லக்ஷ்மிக்கும் சேர்த்து.

மகனாவது காப்பாற்றுவான் என்று பார்த்தால், அம்புவிடம் ஈஷியபடி இட்லி கிருஷ்ணாவாகக் காட்சியளித்தான் குழந்தை.

பாட்டி “இந்தாடீ லலிதா, லக்ஷ்மி, உன்னையுந்தான், புள்ளை சாப்புடறதையே வெச்ச கண்ணு வாங்காம பாத்தா… பெத்தவ கண்ணே படும்” என்றதற்கு லலிதா எகிறாமல் இருந்தது பாட்டியின் அதிர்ஷ்டம்.

குழந்தைகள் உண்டு முடிக்கும் வரை பொறுமை காத்த லலிதா, வேகமாக வந்து பிள்ளையைத் தூக்கியவள் “நாங்க கிளம்பறோம்” என்றாள் மொட்டையாக.

ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்த புகுந்த வீட்டிலிருந்து மகளைத் தங்களோடு அழைத்துச் செல்வதா, அவள் இங்கேயே தொடர சம்மதிப்பாளா, சம்மந்தி, மாப்பிள்ளை எல்லோரும் என்ன சொல்வர், இத்தனை தூரம் பேரனை சீராட்டுபவர்களிடம் இருந்து அவர்கள் வீட்டு வாரிசைத் தள்ளி வைப்பது சரியா, மகள் தன் பிரமையினால், பிடிவாதத்தினால் நல்லதொரு வாழ்க்கையை இழந்து விடுவாளோ என்ற பயம் கலந்த கேள்விகளும் கலவையான உணர்வுகளுமாகக் கவலையாக அமர்ந்திருந்த ரங்கராஜன், எழுந்து நின்றிருந்த மனைவியையும் மகளையும் அதிர்வோடு பார்ந்தார்.

இதென்ன, எந்த முடிவுக்கும் வராது, வைத்ததை எடுப்பது போல், இங்கிருந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு போவதெப்படி?

அப்படிச் சென்றால் மறுபடி எந்த முகத்தோடு இங்கே வருவது? அப்படியே வந்தாலும் வரவேற்பு எப்படி இருக்கும்?

இன்று முறித்துக்கொண்டு சென்றால், வாமனன் நாளை பின்னே பிள்ளையைப் பார்க்க அங்கே வருவதற்கே யோசிப்பானே?

ரங்கராஜன் தன் கற்பனையிலும் நினைக்க விரும்பாத விஷயங்களிலிருந்து காப்பாற்றிய வாமனன் “ஏன் போகணும்?” என்றான் மனைவியிடம்.

“ஏன் போகக் கூடாது, இப்ப பவித்ரா அண்ணி வேலைக்குப் போறாங்கன்னு, அம்புக்காக இங்கேயே இருக்கறாப்போல, நானும் எங்க அம்மா கூட இருக்கேன். இப்ப மாதிரியே நீங்க அங்க வந்துட்டுப் போங்க”

லலிதாவின் நேரடி அறிக்கையில், இதை விரும்பிய லக்ஷ்மியே அதிர்ந்தாள் எனில், மற்றவர்களுக்குப் பேச்சே எழவில்லை.

நிதானித்த வாமனமூர்த்தி “நான் கிருஷ்ணாக்கு அப்பாவா, இல்ல அப்பப்ப வந்துட்டுப் போற அங்கிளா? அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா உனக்கு?”

சீதளா “வாமனா” என்று அதட்ட, லலிதாவின் கையில் இருந்த குழந்தையைத் தூக்கியவன்,

“என்னை என்ன இனிஷியல் பிரச்சனைக்கு மிக்ஸர் திங்கற அப்பான்னு நினைச்சியா, போறதுன்னா நீ மட்டும் போ. கிருஷ்ணா எங்கூடதான் இருப்பான்” என்றவன், விருட்டென குழந்தையோடு தன் (எதிர்) வீட்டிற்குச் செல்லத் திரும்ப, வீட்டுக்குள் நுழைந்து, வாசல் கதவோரம் நின்றிருந்த பவித்ராவைக் கண்டு அதிர்ந்தான்.
 

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 13 - PREFINAL
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
70
ஹலோ வேதாமா, லலிதா இன்னும் திருந்தல, ஏன் திருந்த முயற்சி பண்ணின மாதிரி கூட தெரியல, அதுக்குள்ள prefinal போட்டுட்டீங்க?🤔

லக்ஷ்மியை என்ன பண்ணப்போறீங்க? அவ வாயை அடைச்சாதான் மகள் கொஞ்சமாவது யோசிக்க ஆரம்பிப்பாள்.

வாமனன் பாவம் எவ்வளவு தான் சமாளிப்பான்? வாழ்க்கையை அனுபவிச்சு வாழ முடியல.
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
70
வேதாமா அடுத்த கதை என்ன ஐடியா வச்சிருக்கீங்கன்னு தெரியல.

ஆனால் சீக்கிரமா "எந்தையும் தாயும்" பார்ட் 2, கபிலன் கதை தாங்க பிளீஸ் 🥰🤗
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
69
வேலை செய்ய லஷ்மியை போல ஓரு அடிமை கிடைத்தால் லலிதா போன்றவர்கள் வாழ்வு கொண்டாட்டம்தான்
 
Joined
Jun 19, 2024
Messages
16
😍😍😍

அதானே, என்னை என்ன மிக்சர் திங்குற அப்பான்னு நினைச்சிட்டயா? 😏😏😜😜

FB_IMG_1632814340472.jpg
 
Top Bottom