• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 12

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
34
Mr. மாமியார் 12



லிதாவின் வளைகாப்பு விழா விமரிசையாக நடந்து முடிந்திருக்க, மாடியில் பந்தி நடந்துகொண்டிருந்தது.

கீழே தங்கள் படுக்கை அறையில் கை நிறைய வளையல் குலுங்க கூரைப் புடவையில் கட்டிலில் அமர்ந்திருந்த லலிதாவைப் பிடித்துக் கொண்டு நின்றபடி
அவளது வளையலையும் கழுத்தில் இருந்த ஹாரத்தையும் தொட்டு தொட்டுப் பார்த்து சிட்- ஸ்டாண்ட் பண்ணிக் கொண்டிருந்த அம்புக்குட்டியின் கையிலும் கூட முழங்கை வரை கலர் கலரான வளையல்கள்.

ஏழுவகை சித்ரான்னங்களில் ஒவ்வொரு ஸ்பூனும், கால் தம்ளர் பாயசமும் அரை வடையும் உண்டதே லலிதாவிற்கு நெஞ்சைக் கரித்தது. காலையில் இருந்து அமர்ந்தே இருந்ததில் முதுகில் நல்ல வலி. கால் இரண்டும் நன்கு வீங்கி இருக்க, நீர் வைத்திருந்ததில் முகமுமே எதிர்த்துக் கிடந்தது.

மறுநாள் வெள்ளிக்கிழமை , அஷ்டமி ஆதலால், இன்றே பிரவத்திற்கு பிறந்தவீட்டிற்கு அழைத்துச் செல்வதாக இருந்தனர். தாத்தா ரத்னம் அமெரிக்காவில் இருந்து திரும்ப வந்திருந்தார்.

குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்காக பவித்ரா மகளைத் தன்னிடம் இழுத்ததைக் கூடக் கவனிக்காது லலிதாவின் மனதில் சற்று முன் நடந்ததே சுழன்றது.

சடர்விட்டுப் பிரகிசித்த இரண்டு பெரிய குத்து விளக்குகளுக்கு இடையே லலிதாவும் வாமனமூர்த்தியும் மணையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

எதிரே விரிக்கப்பட்டிருந்த பவானி ஜமக்காளத்தில், சீதளாவும் பவித்ராவும் ஒரு தாம்பாளத்தில் பட்டுப்புடவையும், மற்றொன்றில் கண்ணாடி வளையல்களும், இன்ன பிற மங்கலப் பொருட்களையும் கொண்டு வந்து வைத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து லக்ஷ்மி, ரங்கராஜன், அவரது அக்கா மற்றும் அக்காவின் மகள் நால்வரும் பிறந்த வீட்டு சீர் தட்டுகளைக் கொண்டு வந்து அடுக்கினர்.

தாத்தா ரத்னம் பாட்டியின் ஒரு ஜோடி வெள்ளைக்கல் வளையலும், லலிதாவின் பெற்றோர்கள் இரண்டு ஜோடி தங்க வளையல்களும் சீராக எடுத்து வந்திருக்க,

“வேப்பிலைக் காப்பும் கண்ணாடி வளையலும்தான் நம்ம வீட்டு வழக்கம். அதுதான் ராசியும் கூட. இந்த வளையலை எல்லாம் பின்னால போட்டுக்கோ” என்றுவிட்டார் பாட்டி ஜானகி.

‘அப்படீன்னா இவங்க வெறும் கண்ணாடி வளையல்தான் வாங்கி இருக்காங்களா?’

‘ஆனா பவித்ராவுக்கு தங்க வளையல் போட்டாங்களே?’

‘இவர் கூட பவித்ரா அண்ணியோட ஸ்ரீராம் அண்ணாக்கும் சேர்த்து ஜோடியா பிரேஸ்லெட் வாங்கினாரே!’

ஆசையாக மகளுக்கென ஆர்டர் கொடுத்து செய்த வளையலை உதாசீனம் செய்து ஓரங்கட்டியதாக உணர்ந்த லக்ஷ்மியின் முகம் சுணங்க, ரங்கராஜன் பாட்டியின் பேச்சை ஆமாதித்ததோடு, மனைவியை அமைதியாக இருக்கச் சொல்லி பார்வையால் எச்சரித்தார்.

ரங்கராஜனின் அக்கா ஒருபடி மேலே போய் “இதெல்லாம் சொல்லணுமா, அவங்கவங்க குடும்பத்துல ஆகி வந்தது என்னவோ அதைத்தான் செய்யணும்” என சம்பந்திகளுக்கு வக்காலத்து வாங்கியதில் பொறுமை இழந்த லலிதா, சீதளாவிடம்

“அத்தை, அப்ப நீங்க எப்டி பவித்ரா அண்ணிக்கு தங்க வளையல் போட்டீங்க?” என்றது, அவள் கேட்க நினைத்ததை விட வேகமாக ஒலித்ததில் அருகே அமர்ந்திருந்த வாமனமூர்த்தி, மனைவியைத் திரும்பி முறைக்க, பதட்டமடைந்த ரங்கராஜன் “சடங்கு, சம்பிரதாயமெல்லாம் பெரியவங்களுக்குத் தெரியாதா லலிதா, நீ பொறுமையா உக்காரு” என்றார்.

சீதளா “பவித்ராவோட புகுந்த வீட்டு வழக்கம் என்னவோ அதைத்தான் அவளுக்கு செஞ்சோம். நம்ம வீட்டுப் பழக்கம் இதுதான்” என்றாள் மீறமுடியாத கறாரான குரலில்.

அவளுக்கென வாங்கிய வளையல்கள் எங்கேயும் போய்விடாது என்பது தெரிந்தும், ஏனோ, பவித்ராவையும் தன்னையும் வேறாக நடத்துவதான எண்ணம் லலிதாவிற்கு.

நல்ல நேரம் முடிவதற்குள் புறப்பட வேண்டி, முதலில் சாமான்களை வண்டியில் ஏற்ற வந்த ரங்கராஜன், லலிதா கட்டி வைத்திருந்த சாமான்களைப் பார்த்து மலைத்தார்.

“இத்தனையும் நம்ம வீட்டுக்காம்மா?”

லலிதா பிரசவத்திற்கு புறப்படுகையில் வாமனமூர்த்தி அங்கே இருக்கக் கூடாதென்று சொல்லி இருந்தனர். எனவே, அவன் தன் வீட்டில் இருந்தான்.

இது தெரியாத லலிதா கணவன் சற்று முன் கூட தன்னுடன் வந்து பேசி, சாமான்களை காரில் ஏற்ற உதவியதை மறந்து, வாமனன் பை சொல்லாததற்கு கவலையும் கோபமும் கொண்டாள்.

*********************


“இதுவரை ஒரு செக் அப் பண்ணக்கூட உங்க பொண்ணு ஒத்துழைக்கலை, அது கூட ஸ்கேன் செஞ்சு பாத்தாச்சு. ஆனா, தொடவே கூடாதுன்னா எந்த டாக்டராலயும் டெலிவரி பாக்க முடியாது. கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு போங்க, தெரியும். நர்ஸுங்கள்லாம் நாக்கைப் புடுங்கற மாதிரி கேப்பாங்க”

“...”

“சொல்லுங்கம்மா, சுகப்பிரசவம் வேணும்னா வலி வர ட்ரிப்ஸ் போடணும். உங்க பொண்ணை நம்பி லேபருக்கு அனுப்பி, பாதில முடியல, தொடாதன்னா, ரெண்டு உயிருக்கும் ஆபத்து”

“...”

“இங்க பாரு லலிதா, நார்மலோ, சிஸேரியனோ வயத்துல இருக்கற குழந்தை வெளில வந்துதான் ஆகணும். சீக்கிரமா முடிவு பண்ணு. தண்ணி வேற கம்மியா இருக்கு. நேத்தோட ட்யூ டேட்டும் முடிஞ்சாச்சு. சட்டுபுட்டுனு ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க, நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்”

மருத்துவரிடம் சரியெனத் தலையை ஆட்டிய லக்ஷ்மி மகளைப் பார்க்க, லலிதாவின் முகமெல்லாம் பயத்தில் வெளுத்துக் கிடந்தது.

கொடுக்கப்பட்ட தேதி வரை வலி வராது போனதோடு லலிதாவிற்கு பின்னிரவில் சற்றே அசௌகரியமாக இருந்ததில், அதிகாலை மூன்று மணிக்கே மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

இரண்டு நாள் முன்பு கூட “வலி வரட்டும் வெயிட் செய்யலாம்” என்ற மருத்துவர் இன்று அவசரப்படுத்தினார்.

வலி வருவதற்கான அறிகுறி இல்லாது சோர்ந்த லலிதா, பரிசோதனை, வலியை வரவழைக்கும் ஊசி, எபிட்யூரல் (Epidural) என எதற்குமே ஒத்துக்கொள்ள மறுத்தாள்.

மருத்துவர் சென்றதும் கதவை சார்த்திவிட்டு வந்த லக்ஷ்மி

“நீ படிச்ச பொண்ணுதானேடீ, இல்ல, பிரசவம்னா என்னன்னே தெரியாத பப்பாவா?”

“ம்மா…”

“என்னடீ அம்மா, யூட்யூபும் கூகுளும் உன் வலியை வாங்கிக்கப் போகுதா என்ன? போதாக் குறைக்கு பன்னெண்டாயிரம் கொடுத்து கர்ப்பத்தை, வலியை சமாளிக்கவும், குழந்தையை பாத்துக்கவும் க்ளாஸ் வேற”

“...”

“ பிரசவம் இயற்கையானது, எல்லாருக்கும் உள்ளதுன்னு ஆறுதலா பேசி, தைரியம் கொடுக்கறதுக்கு பதில் காசையும் வாங்கிக்கிட்டு மூட் ஸ்விங், போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்னு பயத்தை குடுத்துருக்காங்க”

“...”

“ஏன், இன்னும் சின்ன வயசுலயே கல்யாணம் கட்டி , குழந்தை பெத்துக்கிட்ட பெரியவங்களுக்கு இதெல்லாம் தெரியாதா?”

“...”

“சாப்பாடு, மூணாம் மாசம், அஞ்சாம் மாசம்னு அம்மா வீட்டுக்கு போறது, சீமந்தம் செய்யறது, யாராவது கூடவே இருந்து பேச்சு குடுக்கறதுன்னு தனியா விடாம பார்த்துப்பாங்க.
இன்னும் சொன்னா, இந்த நேரத்துல புருஷனோட எப்ப சேரணும், எப்ப சேரக்கூடாதுங்கறது கூட பிரசவத்தை சுலபமாக்கதான்”

“...”

“கர்ப்பமா இருக்கற பொண்ணு என்ன சாப்பிடணும், அவளுக்கு என்ன சக்தி தேவைன்னு அந்தப் பொண்ணோட உடம்பே சொல்லும். சிலருக்கு புளிப்பு பிடிக்கும், சிலர் ஸ்வீட் சாப்பிடுவாங்க, இன்னும் சிலர் சாம்பலைக் கூட சாப்பிடுவாங்க. என் கூட வேலை பாத்த ஒரு மராட்டி டீச்சர் வெத்தலைல விக்ஸை வெச்சு சாப்பிடுவா”

“...ம்மா…”

பொறுமையை வரவழைத்துக்கொண்ட லக்ஷ்மி “நான் இல்ல லலிதா, நீதான் இப்ப அம்மாவாகணும். நான் சொல்றதைக் கேளு. நீ மட்டும் கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கிட்டு நார்மல் டெலிவரிக்கு ஒத்துழைச்சா, ரெண்டு, மூணு மணி நேர வலியோட…”

“உனக்கென்னம்மா, ஈஸியா சொல்லிடுவ, வலியை அனுபவிக்கப்போறது நான்தானே. நரசிம்மாவதாரம் மாதிரி… அதை நினைச்சாலே பயமா இருக்கும்மா” என்றவளின் உடல் உதறியது.

“பாத்துடீ…, எனக்கு வலிக்காமலேவா நீ பொறந்த, அதைவிடு. நார்மல் பயமா இருந்தா சி செக்ஷனுக்காவது ஒத்துக்கோ. ” என்று லக்ஷ்மி, யாரோ கதவைத் தட்டவே திறக்கச் சென்றாள்.

டாக்டர் வாங்கச் சொன்ன பொருட்களுடன் ரங்கராஜன் நின்றிருக்க, கூடவே வாமனனும் அவனது பெற்றோர்களும்.

மகளின் உடல், மனநிலை, பயம், பிடிவாதத்தை அவளது கணவனும் புகுந்த வீட்டினரும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற யோசனையில் இருந்தவளை ‘வா லக்ஷ்மி’ என ரங்கராஜன் வெளியே அழைத்துச் சென்றார்.

மருமகளை விசாரித்து, தைரியம் சொன்ன ஸ்ரீசைலமும் சீதளாவும் முன்பே வெறியேறி இருக்க, தம்பதி மட்டும் தனியே…

வாமனமூர்த்தி எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். ஓரிரு நிமிட மௌனத்தையே தாங்க முடியாத லலிதா “காது ஓட்டையாகற அளவுக்கு எல்லாரும் பேசிட்டாங்க. உங்க பங்குக்கு நீங்களும் ஏதாவது…”

“...”

“உங்களுக்கென்ன, குழந்தை பொறந்தப்பறம் ‘ப்ரின்ஸஸ் அரைவ்ட்/ கிங் ஈஸ் பார்ன்’ னு (Princess arrived/ king is born) ஸ்டேடஸ் வெச்சா போதும். வலியெல்லாம் எனக்கு மட்டும்தானே?”

“...”

“நேத்துல இருந்து எத்தனை டயர்டா இருக்கு தெரியுமா?”

“...”

“இப்ப எனக்கு ஏதாவது ஆயிட்டா…”

“உளறாதடீ”

எழுந்த வேகத்தில் நாற்காலியை பின்னுக்குத் தள்ளிய வாமனமூர்த்தி மனைவியைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்.

“உனக்கு ஒண்ணும் ஆகாது லால்ஸ்”

“எனக்கு வலியை நினைச்சா பயமா இருக்கு”

“அப்ப நார்மல் டெலிவரி வேண்டாம், விடு”

“ஆபரேஷன்னாலும் எனக்கு பயம்”

“அப்ப வா, நம்ம வீட்டுக்கு போகலாம். பேசாம பேபியை உனக்குள்ளயே வெச்சுக்கோ”

“அதெப்படி முடியும்?”

“தெரியுதுல்ல, அப்புறம் ஏன் இந்த கலாட்டா?”

“உங்களுக்கு டெலிவரியானா தெரியும்”

“துரதிர்ஷ்டவசமா அதுக்கு வாய்ப்பில்லயே, நான் என்ன செய்ய?”

“இருந்தா மட்டும்…”

“கமான் லல்லு, இயற்கையை நம்மால என்ன செய்ய முடியும்? மனுஷன் மட்டுமில்ல, செடி கொடில கூட ஆண், பெண் உண்டு. தப்போ, சரியோ எல்லா ஜீவராசிலயுமே சுமக்கறது பெண்தான்”

லலிதா ‘நீ பேசு ராஜா, பேசு’ என்பது போல் சைகை காட்டியதில் வாமனன் பக்கென சிரித்துவிட்டான்.

“ஸாரிடீ”

வாமனன் நின்றிருக்க, கட்டிலில் அமர்ந்தபடி அவன் அணைப்பில் இருந்த லலிதா, கணவனின் முதல் ஸாரியில் நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன?”

“பயமா இருக்குங்க”

சட்டெனக் குனிந்து அவள் இதழில் வேகத்துடன் அழுந்தப் பதிந்தவன், தொண்ணூற்றி மூன்று விநாடிகளில் தன்னை மீட்டுக்கொண்டான்.

“நான் உன் கூடவே இருக்கேன். உன் வலியைப் பத்தி யோசிக்கறதை கொஞ்சம் நிறுத்திட்டு , உள்ள இருக்கற பாப்பாக்கு தண்ணி இல்லாம, இடமும் இல்லாம கஷ்டமா இருக்காதா, சொல்லு?”

“...”

“...”

வேகமாக விலகிய லலிதா “பேபிக்கு எதுவும் ஆகாதுல்ல?”

“எதுவும் ஆகாது, நீ ரெடியா இரு. நான் போய் டாக்டரை பார்த்துட்டு வரேன்”

லலிதா தயக்கத்துடன் “ம்…”

“லால்ஸ், எழுந்து நில்லு”

நின்றாள். கைகளை விரித்தவன்

“ஹக்?”

“பேர் ஹக்”

கரடிப்பிடியாக அணைத்துக் கொண்டவன் “குட் கேர்ல்” என வெளியேறினான்.

மருத்துவரைப் பார்த்து லலிதா சி செக்ஷனுக்கு தயார் என்றுவிட்டு காத்திருந்த பெற்றோர்களிடம் வந்தான்.

“ஆபரேஷன்லாம் எதுக்கு தம்பி?” என்றாள் லக்ஷ்மி.

“பரவால்ல ஆன்ட்டி, அவ வலி தாங்க மாட்டா” என்றான் வாமனமூர்த்தி.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கிருஷ்ணா வெளியில் வந்துவிட்டான்.

*******************

பெரும்பாலான இக்கால இளைஞர்களைப் போன்றே, லலிதாவும் Comfort zone - கம்ஃபர்ட் ஸோன் எனப்படும் தனக்கான வசதி வட்டத்தை அணுவளவும் விட்டுத் தர தயாராக இல்லாததில் லக்ஷ்மிக்கு முழி பிதுங்கியது.

ஆட்டிவைக்கும் மெனோபாஸ், ஆரம்ப நிலையில் இருந்த ஆர்த்தரைட்டிஸ், வயதான தந்தை, அலுவலகம் செல்லும் கணவர், சிஸேரியன் ஆன மகள், புதுக் குழந்தையைப் பார்க்கவென வந்து செல்லும் உறவும் நட்பும், அடிக்கடி வந்து செல்லும், தங்கும் மாப்பிள்ளை, இரவெல்லாம் ஓவர்டைம் பார்ப்பதோடு, பகலிலும் கோழித்தூக்கம் தூங்கும் பேரன் என அந்தி, சந்தி தெரியாத நிலை லக்ஷ்மிக்கு.

முதல் இருபது நாள்கள் வரை அம்மாவும் பிள்ளையும் பசியாற்றவும் ஆறவுமே அப்படி ஒரு குஸ்தி போட்டனர். உடல் எடை கூடி, அறுவை சிகிச்சை செய்ததில் சரியாக உட்காரக் கூட முடியவில்லை என லலிதா புகார் வாசிக்க, பசியாறும்போது சிறிதே அசங்கினாலும் நாதஸ்வரத்தை ஊதினான் மகன்.

பிள்ளை பெற்று அறுபது நாட்களைக் கடந்தும், லலிதா பாலூட்டுவதைத் தவிர தன் இமையைக் கூட அசைக்க முயலவில்லை.

சரி, தவறு, உரிமை, உரிமை மீறல் போன்ற விமரிசனங்களை தாண்டி தன்னை, தன் சுகத்தை, தன் சௌகர்யத்தை மட்டுமே முன்னிறுத்தும் பிடிவாதத்திற்கான பலன்கள் தற்காலிகமானவை, பிறரை இம்சிப்பவை.

நாம் சாமர்த்தியமென கருதுவது அடுத்தவருக்கு அராத்தாக தெரியலாம். நிபந்தனைகள் வியாபாரத்திற்கானவை. அதிலுமே உடன்படிக்கை வேறு, ஒப்பந்தம் வேறு.

கல்யாணமும் குழந்தை பெறுதலும் வியாபாரமல்ல.
கட்டம் போட்டு, கணக்கு போட்டு, திட்டம் போட்டுத் துணையை திணறடிப்பதல்ல திருமணம். அது வாழ்நாள் பொறுப்பு, கடமை, கமிட்மென்ட். வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகுமான நீட்சி.

லலிதா குழந்தையைக் கொஞ்சத் தயாராக, குறிப்பாக புகுந்த வீட்டிலிருந்து யார் வந்தாலும் பிள்ளையைத் தன் மடியை விட்டு இறக்காது கட்டிக் காத்ணாள்.

லக்ஷ்மியின் அவஸ்தையைக் கண்ட வாமனமூர்த்தி, தன் வருகையை, இங்கே இருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள. லலிதா அதற்கும் ‘எங்க மேல உங்களுக்கு அக்கறையே இல்லை’ என ஆத்திரப்பட்டாள்.

சீதளா நான்காம் மாத முடிவில் மருமகளையும் பேரனையும் அழைக்க வருகிறோம் என்றதற்கு “இன்னும் உடம்பு தேறலை” என்றாள்.

அம்மா கைச் சாப்பாடு, விளையாட குழந்தை, சம்பளத்துடன் விடுப்புடன் வீட்டு வேலை குறித்த எந்தக் கவலையுமின்றி என ஹாயாக இருந்தாள்.

கிருஷ்ணாவிற்கு ஏழாம் மாதம் தொடங்கியபின், பேறுகால விடுப்பு முடிந்து வேலையில் சேர்ந்த பிறகும் கூட, லலிதாவிற்கு தன் வீட்டிற்குச் செல்லும் எண்ணமே எழவில்லை.

லக்ஷ்மிக்கு வேலை அழுத்தியது கடினமாக இருப்பினும், வீடெங்கும் தவழும் பேரனின் சிரிப்பும், விளையாட்டும் மயக்கியதில், மகள் இருக்கும் வரை இருக்கட்டுமே, அதுவரை பேரனும் இங்கிருப்பானே என்ற நப்பாசை.

ஒரு நாள் பேரனுடன் குழந்தையைப் பார்க்க வந்த பாட்டி ஜானகி, “சாக்குபோக்கு சொல்லாம சீக்கிரமா குழந்தையோட நம்ம வீட்டுக்கு வர வழியைப் பாரு லலிதா” என்றார் நேரடியாக.

“இங்கன்னா நான் வேலை செய்யும்போது கிருஷ்ணாவை எங்கம்மா பார்த்துக்கறாங்க பாட்டி. அங்க வந்தா யார் செய்வாங்க? அத்தைக்கு அம்புகுட்டியை பாக்கவே நேரம் சரியா இருக்கு”

“நீ முதல்ல அங்க வா. வந்தா தானா வழி பொறக்கும்” என்றார் பாட்டி.

மீண்டும் “பவித்ரா அண்ணி….“ என்று தொடங்கியவளை உறுத்த வாமனமூர்த்தி “நீ உன்னைப் பத்தி மட்டும் பேசு” என்றான் எச்சரிக்கையாக.

ஆசைதான், பிடித்தம்தான். தங்கமாகப் பிள்ளை பெற்றுத் தந்து, தளதளவென மெருகேறி நிற்பவள் மீது காதல் மீதூறுகிறதுதான். ஆனாலும், வாமனனுக்கு தன் பொறுப்பை உணராது, கற்பிக்கப்பட்ட சித்தாந்தங்களை, தேவையில்லாத காரணங்களைத் தேடி எடுத்து கட்சி கட்டுபவளின் மேல் எழும் எரிச்சல் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போனது.

மனைவியைத் தவிர்க்க எண்ணி இந்தப்பக்கம் வராதவனை, எட்டு நாள் சென்று தந்தையைக் கண்டதில் துள்ளலும் சிரிப்பும் அழுகையும் புகார்ச் சிணுங்கலுமாக நாலுகால் பாய்ச்சலில் தவழ்ந்து வந்த கிருஷ்ணா குற்றவுணர்வுக்கு ஆளாக்கினான்.

அடுத்தமுறை மாமனார் வீட்டுக்கு வந்த வாமனன், வழக்கம்போல் லக்ஷ்மி தந்த டீயை அருந்திவிட்டு, மகனைத் தூக்கிக்கொண்டு வேடிக்கை காட்ட வெளியில் சென்றவன், இரவாகியும் வீடு திரும்பவில்லை.
 

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
148
லலிதாக்கு ரொம்ப லொள்ளு தான், வாமன் பேசாம குழந்தைய உங்க வீட்டுக்கு தூக்கிண்டு போய்டு
 

EswariSasi

New member
Joined
Jun 3, 2025
Messages
20
அது தான் கரைக்ட்...தன்னப்போல வருவா லால்ஸ் 😝😝😝
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
68
அதானே? 9 மாதம் முழுசா குழந்தையை வயத்துல சுமந்ததே பெரிய சாதனைதான். அப்புறம் எப்படி சுகப் பிரசவம்?

எப்படியோ கிருஷ்ணா வந்துட்டான். இன்னும் comfort zone விட்டு வெளியே வர மனசில்லன்னா என்ன பண்றது? இந்த லக்ஷ்மி அம்மாவுக்கும் சேர்த்துதான் punishment கொடுக்கணும்.
 

Lakshmi

Active member
Joined
Jun 19, 2024
Messages
150
லலிதா அவள் அம்மாவை நினைத்து பார்க்கவே இல்லை.
 

poovizi

New member
Joined
May 23, 2025
Messages
10
உண்மை இந்த காலத்தில் பெண்பிள்ளைகளை பெற்றோர்களின் நிலைமை 🤤😪
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
69
லலிதாவின் குணம் எப்படிப்பட்டது?.
சாமர்த்தியமானதனமா ? அடுத்தவரின் உணர்வுகளை புரியாதவளா? என்ன விதமான பெண் ?இந்த மாதிரியான பெண்கள்தான் இப்போ இருக்கிறார்கள். யார் மேல் தவறு?
முழி பிதுங்கி போகுது....
 
Joined
Jun 19, 2024
Messages
15
😍😍😍

இந்த லலிதானால அப்பாவே மகனை கடத்திட்டு போக வேண்டிய நிலை ஆகி போச்சு...🤦🤦🤷🤷
 
Top Bottom