- Joined
- Jun 17, 2024
- Messages
- 32
Mr. மாமியார் 11
பவித்ரா பிரசவத்திற்கு வந்தது முதலே, சீதளாவால் ஃபேக்டரிக்கு சரிவர செல்ல முடியவில்லை. அதனால் அவளுக்குப் பதில் வாமனமூர்த்தி செல்கிறான்.
அன்று ஏதோ சப்ளையர்களுடன் மீட்டிங் இருந்தது. ஜானகி பாட்டியால் உட்கார்ந்த இடத்தில் குழந்தையை சமாளிக்க முடியுமே தவிர, அவசரத்திற்கு சட்டென எழுந்து, ஓடி தூக்கி செய்ய முடியாது. எனவே, ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருந்த லலிதாவை பவித்ராவுடன் இருக்கச் சொல்லிவிட்டு சீதளா அலுவலகம் சென்றார்.
ஹாலில் அமர்ந்து கணினியில் ஆழ்ந்திருந்த லலிதாவை அழைத்துவிட்ட பவித்ரா, தயங்கினாள்.
“என்னண்ணி வேணும்?”
“அது… நாப்கின் இல்ல போல. உங்கிட்ட இருந்தா கொடேன் லலிதா, அம்பு பொறந்ததுக்கு பிறகு இதான் ஃபர்ஸ்ட் பீரியட். கவனிக்காம இருந்துட்டேன்”
“இதை கேட்கவா இத்தனை யோசிச்சீங்க?”
தன் வீட்டிற்கு வந்து பார்த்த லலிதா, அங்கே மூன்று நாப்கின்களே மீதமிருக்க,
‘நான் யூஸ் பண்ணாமலே எப்படி தீரும்?’ என ஏடாகூடமாக யோசித்தவள், அதை உபயோகிக்க வேண்டிய நாள்கள் கடந்திருந்தது புரிந்தாலும் அவளது புத்தியில் உறைக்கவில்லை.
லலிதா இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்க, வந்ததோ வாமனமூர்த்தி.
“வருஷத்துக்கு அரிசி, பருப்பு வாங்கறாப்ல இதை எதுக்குடீ ஒரே நேரத்துல இத்தனை வாங்கின?” என்றபடி, கையில் ஸ்விக்கி கவருடன் கதைவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான்.
முறைத்தவள் “எதுக்குன்னா?”
“இல்ல, யூஸ் பண்ணியே நாளாச்சு போலயே, அதான் கேட்டேன்”
“வாட்… உங்களுக்கு ரொம்பத் தெரி….”
சட்டென விழிகள் விரிய, மேலே பேசாது அமைதியானவள், “இதோ வரேன்” என பவியிடம் சென்றுவிட்டாள்.
வம்பிழுத்த வாமனனுமே, தான் பேசியதன் பொருளை உணராது, பேசப்பட்ட பொருளால் லஜ்ஜை மீறி மனைவி அமைதியாகி விட்டதாக நினைத்து ‘எங்கிட்ட என்ன இவளுக்கு?’ என்று தோளைக் குலுக்கிக் கொண்டான்.
நல்ல தூக்கம் போட்டு எழுந்த குழந்தைக்கு அமுதூட்டிய பவித்ரா உறங்கி விட, பசியாறி, ஃப்ரெஷ்ஷாக இருந்த அம்புகுட்டியை வாமனனிடம் கொடுத்த லலிதாவிற்கு வேலை, மூளை இரண்டுமே ஓடவில்லை.
இங்கிலீஷ், ஹிந்தி, கை விரல், கால்குலேட்டர் என எதில் எப்படி எண்ணினாலும் ஐம்பத்தி நாலுதான் வந்தது .
‘அதெப்படி நாளையே கவனிக்காம விட்டேன்?’
‘இவர் சொல்லலைன்னா, இப்பவுமே தெரிஞ்சிருக்காது’
‘ஆமா, எனக்கு வராதது அவருக்கு எப்படி தெரியும்?’
‘அதுசரி, ஆடிட்டருக்கு தெரியாத கணக்கா?’
‘ஒரு வேளை அதுவா இருக்குமோ?’
‘அப்படி இருந்தா இவர் வேற நம்பிக்கை, நாணயம்னு ஆரம்பிச்சுடுவாரே?’
‘நான் ஒருத்தி! வாயை வெச்சுக்கிட்டு சும்மா இல்லாம, இப்ப இதை சொல்லவே நூறு யோசனை செய்ய வேண்டியதா இருக்கு’
‘ஆம்மா… ஒரு வாந்தி, தலைசுத்தல்னு எந்த சிம்ப்ட்டம்ஸுமே இல்லையே, அப்புறம் எப்டி…’
சிந்தனா தேவியான லலிதா, தான் கர்ப்பமா இல்லையா எனக் கேட்க, தன்னால் முடிந்த வரை குழப்பியது கூகுள்.
இதற்குள் சீதளா வந்துவிட, வீடு திரும்பிய பின்னும் எதிலும் கவனமின்றி மௌனமாக இருந்தவளை உலுக்கி “என்னாச்சு உனக்கு?” என்றான் வாமனன்.
“...”
“லால்ஸ், என்னடீ?”
“நீங்க சொன்னது உண்மையோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு”
“உண்மைன்னா சந்தேகம் ஏன்?”
“உண்மைதான்னு தோணுது. ஆனாலும் கொஞ்சம் சந்தேகமா இருக்கு”
“கொஞ்சம் மனுஷனுக்கு புரியறாப்போல பேசுவியா?”
இருந்தாற்போல் இருந்தவள், திடீரென நாணிக் கோணியதில் சிரித்த வாமனமூர்த்தி “இப்ப என்னத்துக்குடீ இந்த பாம்பு டான்ஸ்?”
“நீங்க… நான்… என்று தடுமாறிய லலிதா, ஒருவழியாக சொல்ல வந்ததை சொல்லிவிட்டு, எதிர்வினைக்குக் காத்திருந்தாள்.
எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக எந்தவிதக் கேலியோ கிண்டலோ, ஆர்ப்பாட்டமோ, இல்லாது, தன்னை இறுக அணைத்துக்கொண்ட வாமனனைக் கண்ட லலிதாவிற்கு தான் சொன்னது அவனுக்குப் புரியவில்லையோ என்ற சந்தேகத்தோடு கூடவே நம்பிக்கை பற்றி தான் பேசியதில் கொஞ்சம் குற்றவுணர்வும் எழ அமைதியாக இருந்தாள்.
அவள் இதழில் அழுந்த பதிந்தவன் “நீ ஓகேதானே லால்ஸ்?”
“ம்…”
“இரு, பத்து நிமிஷத்துல வரேன்”
கிட் வாங்கி வந்து வீட்டில் பரிசோதித்து, பிறகு மருத்துவரிடம் போய் உறுதி செய்துகொண்டு, பெற்றோர்களுக்குச் சொல்லி என மீதி நாள் கழிய, லலிதா இரவிலும் தீவிர யோசனையில் இருந்தாள்.
“லலிதா”
“...”
“ஓய்…”
“...”
மனைவியின் முகத்தைத் திருப்பி நிமிர்த்தி “இப்ப என்ன புது குழப்பம்?”
“நான் ப்ரெக்னென்ட்டுனு நானே கண்டுபுடிச்சு, உங்கள்ட்டதான் முதல்ல சொல்லணும்னு வெய்ட் பண்ணி, சொல்லி, நீங்க என்னைத் தூக்கி சுத்தி…”
“...”
“இல்லைன்னா நான் தலைசுத்தி, வாந்தி எடுத்து நீங்க என்னன்னு கேட்டு… இப்டி எதுவுமே இல்லாம ப்ளெயின் வெனிலாவா...”
அடக்க மாட்டாமல் சிரித்த வாமனமூர்த்தி “ஓவரா ரொமான்ஸ் கதை படிச்சா இப்டிதான் யோசனை வரும். ஆனா, இப்பவும் எங்கிட்டதானே முதல்ல சொன்ன?”
“ஆமால்ல?”
“அது ஓகே, அதென்னடீ ப்ளெய்ன் வெனிலா?”
“சாக்லேட், பட்டர்ஸ்காட்ச்… இப்டி எந்த ஸ்பெஷல் ஃப்ளேவரும் இல்லாம சாதாவா…”
“அடடா, என்ன ஒரு ஒப்பீடுடா சாமி!”
ஆனால், அதன் பின்வந்த நாள்களிலும் லலிதாவின் கர்ப்பகாலம் வெனிலாவாகவே சென்றதில் வெகு வருத்தம் அவளுக்கு.
*****************
ஐந்தாம் மாதம் முடியும் தருவாயில் மருந்து கொடுக்கவென லக்ஷ்மியும் ரங்கராஜனும் லலிதாவை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
மகளின் மசக்கைக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் பரிமாறக் காத்திருந்த லக்ஷ்மி,
“ஏன்டீ லலிதா, வாய்க்கு ருசியா என்ன வேணும்னு கேட்டா, இப்டி எதானாலும் ஒகேன்னா என்ன அர்த்தம்?”
ரங்கராஜன் “நல்லதா, எனக்கு புடிச்சதா கேளு லலிதா. நீ இல்லாம உங்கம்மா குழம்பு, ரசத்தை தவிர எதுவுமே செய்யறதில்லை”
“...”
ரங்கராஜன் “என்னம்மா லலிதா, ஏன் என்னவோ போல இருக்க?”
“...”
“உங்கப்பா கேட்கறது காதுல விழலையா லலிதா?” - லக்ஷ்மி.
“என் காதுக்கு என்ன , இல்ல எனக்கேதான் என்ன, நல்ல கல்லு குண்டாட்டமா இருக்கேன், போதுமா?”
லக்ஷ்மி “இன்னொருத்தன் பொண்டாட்டியாச்சேன்னு பாக்கறேன், இல்லன்னா வாய்லயே போட்ருப்பேன். நீ சீரா பெத்து பொழைக்கணுமேன்னு நான் கவலைப்பட்டா… வயத்துல புள்ளைய வெச்சுக்கிட்டு என்ன பேச்சுடீ இதெல்லாம்?”
ரங்கராஜன் “என்ன லலிதா இது, அம்மா எவ்வளவு ஆசையா கேக்கறா. உனக்கு இப்ப என்ன குறைன்னு வாய்ல வந்ததை பேசற?”
“என்னை விட தாமாத்ஜியை (மாப்பிள்ளை) ஒசத்தியா நினைக்கற உங்களுக்கு அங்க நான் எவ்வளவு சிரமப் படறேன்னு சொன்னாலும் புரியாது பா”
“என்ன சிரமம், இல்ல என்ன சிரமம்னு கேட்கறேன்?”
“...”
“மாமியார் கொடுமையா, நாத்தனார் பிடுங்கலா இல்ல வாமனன் உன்னை ஏதாவது சொல்றாரா?”
“...”
“கேக்காமலே தனிக் குடித்தனம், அதுவும் சொந்த வீட்டுக்கு அனுப்பின மாமனார், மாமியார், நீ அஞ்சு லட்ச ரூபாய அம்போன்னு விட்டபோது கூட எதுவும் சொல்லாத புருஷன்… நினைச்சதை வாங்க, நம்ம வீட்டுக்கு வரன்னு எதுக்கும் அவங்க தடை சொல்றதில்லை. கல்யாணமாகி ஏழு மாசத்துல குழந்தை உண்டாகி இருக்க. வேற என்னதான் எதிர்பாக்கற?”
“ஓஃப்..ஓ! இதெல்லாம் பேஸிக்ஸ் (அடிப்படை) பா. எனக்கு தேவை ஆஸாதி. எனக்குப் புடிச்சதை செய்யறது மட்டும் சுதந்திரம் இல்லைப்பா. புடிக்காததை செய்யாம இருக்கற சுதந்திரம் வேணும்”
லக்ஷ்மி “ஏன், உன்னை எதையாவது செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தறாங்களா? புள்ளை பெத்து அஞ்சு மாசமாகியும் உன் நாத்தனார் ப…”
ரங்கராஜன் “ஸ்டாப் இட் லக்ஷ்மி, எப்ப பார்த்தாலும் அவங்க வீட்ல என்ன செய்யறாங்க, சமையல் நல்லா இருக்கா, நீ ஏன் குழந்தையை பாத்துக்க ஒத்துக்கிட்ட, பாட்டி ஏதாச்சும் வேலை செய்வாங்களா, உன் மாமியார் என்ன சொல்றாங்கன்னு ஓயாம கேள்வி கேட்டு லலிதாவை அங்க ஒட்ட விடாம கெடுக்கறதே நீதான்” என்று சீறினார்.
“ஆமா, உங்க பொண்ணு நான் சொன்னா கேட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பா. அவ போடற கண்டிஷனுக்கெல்லாம் ஒத்துக்காதீங்கன்னு வரன் பார்க்கத் தொடங்கும்போதே சொன்னேன், கேட்டீங்களா?”
ரங்கராஜன் “அதுசரி, கல்யாணம் ஆகற வரைக்கும் எதெல்லாம் தப்புன்னு சொன்னியோ, இப்ப அதையே செய்யச்சொல்லி உம் மகளை ஏத்தி விடறதே நீதான்”
“நான் சொன்னா உங்க மகளுக்கு புத்தி எங்க புல் மேயப் போச்சா, கேக்கறேன். இதுல இஞ்சினீர், சுக்குநீர் வேற”
லலிதா “ரெண்டு பேரும் என்னைக் கொஞ்சம் பேச விடறீங்களா?”
மனைவியிடம் வாயை மூடச் சொல்லி சைகை செய்த ரங்கராஜன் லலிதாவை ‘பேசு’ என்பதாகக் கை காட்டினார்.
லலிதா :
இதேதான், இதையேதான் அவரும் படு நக்கலா செய்வார். ஏதுடா, பொண்டாட்டி ப்ரெக்னென்ட்டா இருக்காளேன்னு கூட பாக்காம, காய் நறுக்கு, தேங்காய் துருவு, தோசை ஊத்து, துணியை மடின்னு எப்பப் பாரு என்னை வேலை ஏவுறதுதான் அவரோட ஃபுல் டைம் பொழுதுபோக்கே”
“...”
“நாலு மாசம் முடிஞ்சதுமே, புஷ்பாக்கா (பணிப்பெண்) பெருக்கி, துடைச்சிட்டு போனாலும், ஈவினிங்ல நான் ஒரு தரம் முழு வீட்டையும் பெருக்கணுமாம்”
“அதுக்கு ஏன் வேலைக்காரி?” என்ற லக்ஷ்மியை முறைத்தார் ரங்கராஜன்.
“பாலை மூடு, மசாலா டப்பாவை மூடு, சமைச்ச உடனே சாப்பாட்டை மூடி வை, குஷனை நிமிர்த்தி வை, எழுந்ததும் போர்வைய மடிச்சு வை, ஆர்ஓ வாட்டரை பாட்டில்ல புடிச்சு வை, காலைல ஏழு மணிக்குள்ள வாசல்ல கோலம் போடு, சஷ்டி கவசத்தை கேளு…. எத்தனை??? என்னால முடியலைப்பா”
“...”
“இதுல அந்தப் பாட்டி வேற இந்தப் பக்கம் படு, அந்தப் பக்கம் எந்திரி, இதைத் தின்னா வாயு, அதைத் தின்னா பித்தம்னு, நான் என்ன சாப்பிடறேன்னு பாத்துக்கிட்டே இருக்காங்க”
“....”
“போதாததுக்கு வரவர பவித்ரா அண்ணி வேற குழந்தை டாக்டரா, நமக்கே இவ்வளவு கஷ்டமா இருந்தா, வயத்துல இருக்கற குழந்தைக்கு எத்தனை சிரமம்னு ஓயாம லெக்சர் கொடுக்கறாங்க”
“...”
ரங்கராஜன் “இதெல்லாமே உன்னோட நல்லதுக்குதான் சொல்றாங்கன்னு உனக்குப் புரியுதா இல்லையா லலிதா?”
“...”
“மாப்பிள்ளை இடத்துல நான் இருந்தேன்னா, இவ்வளவு பொறுமையா இருக்க மாட்டேன்”
“என்ன பொறுமையோ, போங்கப்பா… புள்ளைய பெக்க சொன்னா மாமியாரைப் பெத்து விட்ருக்காங்க”
“பெரியவங்களை மரியாதை இல்லாம பேசறதெல்லாம் என்ன பழக்கம் லலிதா?” என தந்தை அழுத்தமாகக் குரலை உயர்த்தியதில், லலிதா சட்டென கண்ணீரை வழியவிட்டாள்.
லக்ஷ்மி “அவ ஏதோ நம்ம கிட்ட ஆறுதல் கிடைக்கும்னு பேசினா, அதுக்கு ஏன் கத்தறீங்க?”
“தப்பான விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணாத லக்ஷ்மி. நீ ப்ரெக்னென்ட்டா இருந்தபோது இப்டிதான் இருந்தியா, நீயும்தானே வேலைக்குப் போன?”
“...”
“சரி, இதைத் தவிர வாமனன் குடிக்கறாரா, அடிக்கறாரா?”
“சரியான பூமர் பா உங்க மாப்பிள்ளை. செல்ஃபி அதிகம் எடுக்க கூடாதாம். இன்ஃபாக்ட், ஃபோட்டோவே எடுக்கக் கூடாதாம். கல்யாணத்துலதான் ப்ரீ வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட்னு எதுவுமே எடுக்கலை. இப்ப சின்னதா ஒரு ப்ரெக்னென்ஸி ஷூட் எடுக்கலாம்னா அதுவும் கூடாதாம்”
“...”
“நான்தானேப்பா ப்ரெக்னென்ட்டா இருக்கேன். கஷ்டப்பட்டு டெலிவரி பண்ணப்போறது நான், இதுல, எனக்கு எது வேணும், எது வேணாம்னு முடிவு செய்யறது அவரா?”
“...”
“சரி, ஃபோட்டோ ஷூட் வேண்டாம். ப்ரெக்னென்ஸி ஞாபகமா மாசா மாசம் வயிறு சைஸ் மாறும்போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல (pop) mould (அச்சு) பண்ணிக்கலாம்னா அதுவும் கூடாதாம்”
லக்ஷ்மி எதையோ சொல்ல வாயைத் திறந்து விட்டு இறுக மூடிக்கொண்டாள்.
“குழந்தைக்காக ஒரு சமானும் வாங்க விட மாட்டேங்கறார்மா. என் பணத்துல நான் வாங்கறதுல இவருக்கு என்னப்பா நஷ்டம்?”
ரங்கராஜன் “இதென்ன லலிதா என் பணம் உன் பணம்னு பிரிச்சு பேசிக்கிட்டு… உங்கம்மாவும்தான் வேலைக்கு போனா. ஒரு நாள் கூட இந்த மாதிரி பேசினதில்ல. அது உங்க பணம்னு நினைச்சு பேசிப் பழகு”
“அம்மா டீச்சர் வேலைல வாங்கின சம்பளமும் நான் இப்ங சம்பாதிக்கறதும் ஒண்ணாப்பா?”
லலிதாவின் கேள்வியில் லக்ஷ்மி திக்கித்து நிற்க, மகளின் நிலை கருதி தன் ஆத்திரத்தை பெருமளவு கட்டுப்படுத்திய ரங்கராஜன் “உங்கம்மா சம்பாதிச்சாலும், இல்லைன்னாலும் ஒரு நாளும் என் பேச்சை மீறினதும் கிடையாது, என்னைத் தாண்டி யோசிச்சதும் கிடையாது”
“ஏன்னா, நீங்க அவங்கப்பாவை, அதான் ரத்னம் தாத்தாவை கூடவே வெச்சு பார்க்கணுமே”
லக்ஷ்மிக்கு அழுகை வந்துவிட,
“இதோட இந்தப் பேச்சு போதும்னு நினைக்கறேன். இங்க இருக்கறப் போற நாலு நாளோட மகிழ்ச்சியை கெடுத்துக்காத. நீ வா லக்ஷ்மி” என்ற ரங்கராஜன் மனைவியை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
நாள்களை சங்கடத்துடன் கடத்திய லலிதா, புறப்படும் முன் உணர்ந்தோ, உணராமலோ பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு, வீடு திரும்பினாள்.
****************
அம்புவைப் பார்த்துக் கொள்ள வேண்டி, பவித்ராவும் ஸ்ரீராமும் இவர்களது அபார்ட்மென்டிலேயே முதல் மாடியில் இருந்த ஒரு ஃப்ளாட்டில் இருந்தவரை காலி செய்யச் செய்து, குடியேறினர்.
பவித்ரா ஹஸ்பிடல் செல்லும் பகல் வேளைகளில் பத்மா இங்கேயே உதவிக்குத் தங்கி குழந்தையைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் யாராவது ஒருவர் உடன் இருந்தனர். பேத்தியை முன்னிட்டு சீதளாவுமே அவசியமின்றி வெளியில் போவதைத் தவிர்த்தாள். மாலையில் க்ளீனிக் முடிந்து பவித்ரா வரும்வரை அம்புதான் எல்லோருக்கும் பாஸிங் தி பார்ஸல்.
*********************
ரங்கராஜனும் லக்ஷ்மியும் லலிதாவிற்கு ஏழாம் மாதம் வளைகாப்பு வைப்பதைப் பற்றி பேச வந்தனர். பிடிவாதமாக ஒன்பதாம் மாதம்தான் என்றுவிட்டான் வாமனமூர்த்தி.
லலிதா “ஏன் அப்டி சொன்னீங்க? என்னால முடியவே இல்ல. மூச்சு வாங்குது”
“ஏன்னா, நீ நல்ல வெய்ட் போட்டிருக்க. டாக்டர் சொல்லியும் இஷ்டத்துக்கு ஸ்வீட் சாப்பிடற. இங்கன்னா என்னால உன்னை வேலை செய்ய வைக்க, வாக்கிங் கூட்டிட்டு போக முடியும். உங்க வீட்டுக்கு போனா சலுகைல எதுவும் செய்ய மாட்ட. உன்னோட நானுமா டெலிவரிக்கு வர முடியும்?”
“ஏன், வந்தா என்ன, இப்ப ஸ்ரீராம் அண்ணா இங்க வரலை?”
Last edited:
Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Mr. மாமியார் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.