• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 10

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
27
Mr. மாமியார் 10


ன் எதிரே இருந்த கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்த வாமனமூர்த்தி,
ஜன்னல் திட்டில் ஏறி, ஒடுக்கமாக அமர்ந்திருந்த லலிதாவை அவ்வப்போது ஓரக் கண்ணால் பார்த்தபடி இருந்தான்.

நேற்று இரவு இவனது வேலை என்னவென்று தெரிந்ததில் இருந்து குழந்தை போல் முகத்தைத் தூக்கி வைத்திருப்பவளைக் காண வாமனனுக்கு சிரிப்பு வந்தது.

மனைவியின் முகத்திலிருந்த தீவிர யோசனையைப் பார்த்ததிலேயே, அடுத்த ரவுண்ட் கேள்விகளும் விவாதங்களும் தொடங்கும் முன் ஏதாவது குடிக்க எண்ணி, இரண்டு கப் பூஸ்ட்டோடு வந்து லலிதாவிடம் ஒன்றை நீட்ட, ஏறிட்டவளிடம்,

“குடி, தெம்பா சண்டை போடலாம்”

ஸ்வேதாவின் கணவன் ராகவ் வைத்திருந்தது மிஷின் லேர்னிங் மற்றும் ஏஐ (Machine Learning & AI) தொழில்நுட்பத்தின் மூலம் ஃபின்டெக் (Fintech) எனும், பணப் பரவர்த்தனைக்கு உதவும் சிஸ்டம் அமைத்துத் தரும் மென்பொருள் நிறுவனம்.

ஆரம்பக் கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அந்த ஸ்டார்ட் அப், கணிசமான அளவில் முதலட்டாளர்களை/ வாடிக்கையாளர்களைப் பெற்று, நல்ல வரவேற்பையும் லாபத்தையும் பார்த்தது.

மென்மேலும் முதலீட்டாளர்களைக் கூட்டும் முயற்சியில், பொய்யான நிகர லாபத்தைக் காட்டத் தொடங்கினர். கம்பெனி திவாலானது வெளியில் தெரியாமல், காசு காகிதத்தில் மட்டுமே இருக்க, முணுமுணுப்புகள் எழத்தொடங்கின.

மினிஸ்ட்ரி ஆஃப் கார்ப்பொரேட் அஃபேர்ஸின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரகசிய தணிக்கையாளர்களில்/ விஸில் ப்ளோயர்களில் ஒருவனான வாமனமூர்த்தி, கடந்த இரண்டு வருடங்களாகவே ராகவின் கம்பெனியை கண்காணிக்கிறான்.

திருமணத்திற்கு முன்பே லலிதாவும் ராகவின் மனைவி ஸ்வேதாவும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது வாமனனுக்குத் தெரியும். ராகவிற்குதான் வாமனமூர்த்தியை தெரியாது.

நிற்க. லலிதாவைப் பொறுத்தவரை இப்போது ஸ்வேதாவோ, அவள் கணவன் ஜெயிலுக்குப் போனதோ பின்னுக்குச் சென்று வாமனமூர்த்தியின் இந்த வேலை குறித்து தன்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை என்ற இடத்தில் வந்து நிற்கிறது.

“உங்க அம்மா கூட ஃபேக்டரிக்குப் போறாங்க, நீங்க ஏன் வீட்லயே இருக்கீங்கன்னு எத்தனை தரம் கேட்டேன்?”

“இங்க இருக்கற பென்சில் ஃபேக்டரில வேலை பாக்கற நீங்க டெல்லி, மும்பைனு போக வேண்டிய அவசியம் என்னன்னு கேட்டேன்தானே?”

“கஸ்டமரை பார்க்க போறேன், அந்த ரெஸிடென்ஷியல் ஸ்கூலோட மேனேஜ்மென்ட்டை பார்த்து டீல் பேசப் போறேன்னு… எத்தனை பொய்?”

“ஏய்… பொய்யா, என்னைப் பார்த்தா பொய் சொல்றவன் மாதிரியா இருக்கு?”

வாமனமூர்த்தியை ஏற, இறங்கப் பார்த்த லலிதா “எப்படியும் இந்த வேலையை பத்தி எதுவுமே சொல்லாம மறைச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்லையா?”

“ஹல்ல்ல்லோ, லலிதா மேடம், நான் சொல்லலைன்னு யாரு சொன்னா, உங்கப்பாக்கு தெரியும்”

“எங்கப்பாவையா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எங்கிட்ட சொல்ல வேணாமா?”

“உங்கிட்ட சொல்லி இருந்தா என்ன செஞ்சிருப்ப?”

லலிதா, குரலில் தன்னை மீறி வழிந்த பெருமிதத்துடன்
“என்ன செய்வாங்க, என் ஃபியான்ஸே ஒரு சிஐடின்னு சொன்னா எவ்வளவு கெத்தா இருந்திருக்கும்? “

“அதான் சொல்லலை. நம்ம கல்யாணத்தப்போ இதைவிட முக்கியமான ஒரு அரசியல்வாதியோட கம்பெனியை விசாரிச்சுக்கிட்டு இருந்தேன். நீ மட்டும் தண்டோரா போட்டிருந்தேன்னு வை, என்னை கண்டு புடிச்சு காலி பண்ணி இருந்திருப்பாங்க”

ஒரு நொடி விழித்தவள் “ம்ஹுக்கும்… ரொம்பத்தான். சொல்லாதன்னு சொன்னா சொல்லாம இருந்திருக்கப் போறேன்”

“யாரு, நீ?”

“ஏன், நானேதான். அதுசரி, நீங்கதான் சொல்லலை, எங்கப்பா… மனுஷன் இன்னி வரைக்கும் வாயைத் திறக்கலையே… பொண்ணை விட மாப்பிள்ளை அத்தனை உசத்தியா போய்ட்டாரா, இருக்கு அவருக்கு”

“நான்தான் அவர்கிட்ட கல்யாணத்துக்குப் பிறகு நானே சொல்லிக்கறேன்னு சொன்னேன்”

“நீங்க சொன்னாலும் எங்கப்பா என்னை நம்ப வேண்டாமா?”

“ஏன், யாரை எப்போ, எதுக்கு நம்பணும்னு உனக்கு மட்டும்தான் தெரியுமா?”

“நான் எப்ப அப்டி சொன்னேன்?”

“பவி, ஸ்ரீ கிட்ட குழந்தை பெத்துக்கற அளவுக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னு நீ சொல்லலை?”

“அதுக்கு அப்டி அர்த்தம் இல்லை”

“நீ பேசறதை புரிஞ்சுக்க லலிதா பரமேஸ்வரி பதவுரைகள்னு ஒரு புக் போடு”

பதவுரைக்கு அர்த்தம் புரியாத லலிதா “அப்படீன்னா?”

“ஏய், மனுஷன வெறியேத்தாம போடீ… இந்தக் கேஸ் ஒருபக்கம், வீட்ல கெஸ்ட் ஒரு பக்கம், வளைகாப்பு ஃபங்ஷன் வேற… இதுல இன்னும் அத்தனை நாள் ஆகலை, நம்பிக்கை இல்லை, கியாரண்டி இல்லைன்னு வாய்ல வந்ததை எல்லாம் பேசி ரெண்டு நாளா மண்டை சூடாய்ட்டு சுத்தறேன்"

“நான் சொன்னதுல என்ன தப்பு, இந்த வேலை விஷயத்துல கூட நீங்க என்னை நம்ப…”

வாமனமூர்த்தி தன் எதிரே இருந்த கணியை வேகமாக நகர்த்தியதில் திசைக்கு ஒன்றாக சென்று விழுந்த அதன் சார்ஜர், மவுஸ், லேப்டாப் டேபிள் எல்லாம் மெத்தை மேலேயே விழுந்ததால் எமலோகத்தை எட்டிப் பார்த்ததோடு போயிற்று.

“யோசிக்கவே மாட்டியா லலிதா, எதையும் எதையும் கம்பேர் பண்ற? வேலை செய்யறது அரசாங்கத்துக்கு. வயசானவங்க, இயல்பாவோ, பெருமையாவோ வாய் தவறி யார் கிட்டயாவது சொல்லிடுவாங்கன்னு என் பாட்டிக்கு கூட என் வேலை பத்தி தெரியாது”

“உங்களுக்கு உங்க பாட்டியும் நானும் ஒன்னா?”

“அதை நீதான் சொல்லணும். ஆனா ஒன்னு, எங்க பாட்டிக்கு என்மேல முழு நம்பிக்கை உண்டு”

“நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை… எந்த நேரத்துல சொல்லித் தொலைச்சேனோ, அதையே எத்தனை தரம் சொல்லிக் காட்டுவீங்க?”

“நீ சொன்னதை சொன்னதுக்கே இத்தனை கோபம் வருதே, கல்யாணமாகி ஏழு மாசமான பிறகு நம்பிக்கை இல்லைன்னு என் தங்கை, வீட்டு மாப்பிள்ளை முன்னால நீ அறிக்கை விடுவ, நான் அதை ஏதோ சர்ட்டிஃபிகேட் கிடைச்ச மாதிரி ஏத்துக்கணுமோ, உன்னையெல்லாம்… எங்கம்மா கிட்ட போட்டு குடுத்து இருந்திருக்கணும்”

“ஏன், போய் சொல்ல வேண்டியதுதானே, யார் தடுத்தா?”

“என் சுயமரியாதை தடுக்குதே. மருமக வீட்டு வேலைல, சுய ஒழுக்கத்துல (self regimentation) முன்னப் பின்ன இருந்தாலும், எம் பையன் பொண்டாட்டியோட சந்தோஷமா குடும்பம் நடத்தறான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க, அதைக் கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை”

“எனக்கு மட்டும் சுயமரியாதை கிடையாதா?”

“இருந்திருந்தா பவி, ஸ்ரீ முன்னால நம்ம உறவை பத்தி பேசி இருப்பியா?”

“காஷ்!” எனப் பெருமூச்சு விட்ட லலிதா, நிறுத்தாது பேசிக்கொண்டே இருக்க,
வாமனமூர்த்தி ஓங்கத் துடித்த கை முட்டியை இறுக்கியபடி நின்றான்.


“நம்பிக்கை பத்தி இத்தனை பேசறீங்களே, பவி அண்ணிக்கும் ஸ்ரீ அண்ணாக்கும் பிரேஸ்லெட் வாங்கினதை நீங்க மட்டும் எங்கிட்ட சொன்னீங்களா?”

“என் மேல நம்பிக்கை இல்லாதவளுக்கு நான் ஏன் சொல்லணும்?”

“ஓ… அப்ப பழைய காலம் மாதிரி நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிட்டு, செஞ்சுக்கிட்டு, நீங்க என்ன செஞ்சாலும் பொறுத்துக்கிட்டு நான் உங்களுக்கு அடிமையா இருக்கணும், அப்படித்தானே?”

“தாயே அங்காள பரமேஸ்வரி, என் பத்தினித் தெய்வம், நம்பிக்கை நாயகி, லலிதா மேடம் அவர்களே… நமக்குக் கல்யாணம் ஆன பிறகு, நாலு மாசத்துக்கு முன்னால, உன் ஃப்ரெண்டுக்காக ராகவோட கம்பெனில அஞ்சு லட்ச ரூபா போட்டு, முதலீட்டாளரா ஆனதை, எங்கிட்ட நீங்க சொன்னீங்களா?”

லலிதா சற்றே தடுமாற, வாமனமூர்த்தி தொடர்ந்தான்.

“சரி, என் மேலதான் நம்பிக்கை இல்ல, உங்கப்பா, பாவம் என்ன செஞ்சார்?”

“...”

“அவரையும் விடு, உன்னோட லைஃப் ஸ்கில் அட்வைஸர்… (Life skill) அதான் உங்கம்மா… அவங்கள்ட்ட கூட சொல்லாம, அஞ்சு லட்ச ரூபாயை அள்ளிக் குடுத்திருக்க, இப்ப அது மொத்தமும் ஸ்வாஹா, அதாவது புரியுதா உனக்கு?”

நேற்று மதியத்திலிருந்து ராகவ் கைது, ஸ்வேதாவின் நிலை, வாமனமூர்த்தியின் ரகசியமான ரெகுலேட்டரி ஆடிட்டிங் உத்யோகம், தன்னிடம் அதை மறைத்தது என்பதிலேயே உழன்றவளுக்கு, சொளையாக… இல்லையில்லை, முழு பலாப்பழமாகவே ஐந்து லட்சம் போனது நினைவுக்கே வரவில்லை.

லலிதாவிற்கு முகம் சிவந்து கண்ணில் நீர் கோர்த்து நின்றது.

‘பணம் போனதை விட, நெருங்கிய நட்பெனக் கருதிய ஸ்வேதா கேட்டதனால்தானே முதலீடு செய்தேன், கணவனின் நிறுவனம் போகும் பாதை, ஸ்வேதாவுக்கு தெரியாமலா இருக்கும்?’

‘இவருக்கு எப்படி… அதுசரி, தணிக்கை செய்தவனுக்குத் தெரியாத வரவு செலவா?’

தொண்டை அடைக்க, செருமிய லலிதா “நீங்க ஏன் அப்பவே வேணாம்னு சொல்லலை?”

“இன்வெஸ்ட் பண்ற முன்னால எங்கிட்ட கேட்டிருந்தா சொல்லி இருப்பேன். நான் கவர்ன்மென்ட்டுக்கு ரிப்போர்ட் குடுக்க ஒருவாரம் இருக்கும்போது என் பொண்டாட்டி கிட்ட இருந்து, எனக்குத் தெரியாம, எங்கிட்ட சொல்லாம, அஞ்சு லட்சம் அந்த கம்பெனி கணக்குல சேருது. போட்ட மறு நிமிஷம் எடுத்துட்டாங்க. என்னை என்ன செய்யச் சொல்ற?”

“அப்பவே இதான் விஷயம்னு…”

“நிச்சயமா நீ என்னை நம்பி இருக்க மாட்ட”

கணவனை அடிபட்ட பார்வை பார்த்த லலிதாவால் பதில் பேச இயலவில்லை. அவன் சொல்வதும் உண்மைதானே?

எதுவும் சொல்லாது, ஜன்னல் வழியே இருளை வெறித்தாள். கப்போர்ட் டிராயரை திறக்கும் ஓசை கேட்டது.

அருகே வந்த வாமனமூர்த்தி
“ ******** ஜுவெல்லர்ஸ் வீட்டுப் பையன் என் ஃப்ரெண்ட். ரெண்டு வருஷமா அவனுக்காக நகை சீட்டு போட்டது. உன்னையும் கூட்டிட்டு போகலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ளதான் நீ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துட்ட”

“...”

“திரும்புடீ, மிச்ச பணத்துல உனக்கு வாங்கினது இது” என்றவன், லலிதாவின் கையைப் பிடித்து எதையோ வைத்து அழுத்தினான்.

ஓரிரு நிமிடங்களில், அரகே அரவமில்லாது போகவும், வாமனன் அங்கிருந்து சென்று விட்டானென எண்ணி, கையில் இருந்ததைப் பார்த்த லலிதாவிற்கு அடக்க முடியாத ஆத்திரம் பொங்கியது.

கையில் இருந்ததை வீசி எறியத் திரும்பியவள், எதிரேயே நின்ற வாமனனைப் பார்த்ததும், அவன் மீதே விட்டெறிய, கேட்ச் பிடித்துப் பிரித்தவன், தான் கொடுத்த சென்ட்டர்ஷாக் கேன்டியைப் பிரித்து லலிதாவின் வாயில் திணித்து, “கடிடீ” என்றவன், புளிப்பில் அஷ்ட கோணலான மனைவியின் முகத்தைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தான்.

****************

ஸ்ரீராமின் ஆசைப்படியே பவித்ரா மகளைப் பெற்றெடுத்தாள். அவன் முகத்தில் கால் நூற்றாண்டுக்குப் பின், தன் தாயோடு சேர்ந்த பரவசமும் நெகிழ்ச்சியும்.

கண் கலங்கியவனை இறுக அணைத்துக்கொண்ட, தங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட லலிதாவிடம் வாமனமூர்த்தி கண்களை சிமிட்டினான்.

ஹாஸ்பிடலிலும், பிறகு வீட்டிலும் பிள்ளை பெற்ற மனைவிக்குத் தேவையான எந்த வேலையையும் ஸ்ரீராம் விட்டு வைக்கவில்லை.

பவித்ரா தனக்கு செய்தே பழகியவனின் தலைகீழ் மாற்றம் லலிதாவை வியப்புக்கு உள்ளாக்கியது. அதை கணவனிடம் சொல்லவும் செய்தாள்.

“லலிதா, ஸ்ரீ, பவிக்கு உதவி செய்யக் கூடாதுன்னு நினைக்கற டைப் இல்லை. அவன் இழந்த சலுகை எல்லாத்தையும் அவன் அனுபவிக்கணும், அவனுக்கு பிடிக்கும்னு பவியாவேதான் எல்லாம் செஞ்சா, செய்வா. அவங்க உறவோட புரிதல், ஈக்குவேஷன் வேறம்மா”
என்ற வாமனனின் கூற்றில் லலிதாவின் முகம் மாறியது.

வேலை நேரம் போக எல்லோரும் குழந்தையைச் சுற்றியே கழித்தனர். முதலில் பிள்ளை பெற்ற மனைவியோடு தானும் இங்கேயே தங்கத் தயங்கிய ஸ்ரீராமை, “இத்தனை ஆசையை வெச்சுக்கிட்டு, தனியா போய், அங்கயும் இங்கேயுமா அலைஞ்சு, அவஸ்தை படுவானேன், பேசாம இங்கேயே இரு ஸ்ரீ” என்றது சாக்ஷாத் ஜானகி பாட்டியேதான்.

பாட்டி “அந்தக் காலத்துல பசுஞ்சாணி, இந்தக்காலத்துல சானிடைசர், எல்லாம் ஒண்ணுதான்” என்றதில் வெடித்துச் சிரித்தனர்.

குழந்தை பிறந்த பதினாறாம் நாள் மிக நெருங்கிய சுற்றத்தையும், நட்பு வட்டத்தையும் மட்டும் அழைத்துப் பெயர் சூட்டினர்.

“அம்புஜாங்கற பேரு கொஞ்சம் பழசா இல்லை?”

“வாமனமூர்த்தியை விடவா?” என நண்பர்கள் தங்களுக்குள் கலாய்த்துக் கொண்டனர்.

ஸ்ரீராமின் அம்மாவின் பெயரை பேத்திக்கு வைத்ததில் இந்தோனேஷியாவில் இருந்து விழாவுக்கென தனியே வந்திருந்த ஸ்ரீராமின் தந்தையுமே பழைய நினைவில் நெகிழ்ந்தார்.

ஒருமாதம் வரை சமத்தாக உண்டு, உறங்கிய குழந்தை, ரத்தம் ஊறத் தொடங்கவும் கொள்ளுப்பாட்டி தொடங்கி, மாமன், மாமி வரை
விடாது அனைவருக்கும் நைட் டியூட்டி போட்டாள்.

சந்தோஷ சலிப்புடன் இரவு, பகல் தெரியாது நாள்கள் சென்றன. ஒரு நாள் கையை விட்டு இறக்கினாலே அழுத குழந்தையை, சத்தம் கேட்டு எழுந்து வந்த வாமனன் “ரொம்ப அழுதா கூட்டிட்டு வரேன், நீங்க எல்லாரும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குங்க” என தன் வீட்டிற்குத் தூக்கி வந்து விட்டான்.

லலிதா பரமேஸ்வரியின் செவிகளில், எட்டாவது அதிசயமாகக் குழந்தையின் சிணுங்கலும், கணவனின் சமாதானமும் கேட்டதில், எழுந்துவிட்டாள்.

வாமனனின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு நேர்மாறாக, மருமகளை வெகு மென்மையாகத் தோளில் அணைத்தபடி நடை பயின்றவனையே பார்த்திருந்தாள் லலிதா.

ஒருவழியாக அதிகாலை நாலரை மணிக்கு உறங்கிய குழந்தையை கொண்டுபோய் விட்டு வந்த, வாமனன், மனைவி இன்னும் உறங்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

“...”

“என்ன?”

“ம்… ஒண்ணுமில்ல”

“ஓகே, குட் நைட், ஸாரி, குட் மார்னிங்”

அவன் படுத்த பிறகும் அமர்ந்தே இருந்தவள், கணவனை சுரண்டினாள்.

“ம்ப்ச்…. என்னடீ, தூங்க விடேன், காலைல வேலை இருக்கு”

“நத்திங்”

ஐந்து நிமிடம் சென்று கண்களைத் திறந்தவன், அதே போஸில் இருந்தவளிடம் “இப்ப என்னடீ வேணும் உனக்கு?”

“ஹக்?” என் கைகளை விரித்தாள் லலிதா.

“நிஜமாவா, இந்த நம்பிக்கை, தும்பிக்கை…”

“நோ கான்ஃபிடன்ஸ் மோஷன் கேன்ஸல் (நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ரத்து)”

“ஷ்யூர்?”

“ஷ்யூர்”

அறுபது நாட்களின் விலகலை அர்ஜென்ட்டாக அரை மணிநேரத்தில் ஈடுசெய்ததில், களைத்த மனைவியைக் கண்டு சிரித்தான் வாமனமூர்த்தி.

“என்ன சிரிப்பு?”

“உன் பொறாமையை, பொஸஸிவ்நெஸ்ஸை தூண்ட, என் அம்புக்குட்டியே போதும் போலவே”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை”

“அப்டியா?”

“ம்…ம்”

“பொய்”

“லைட்டா”

நம்பிக்கை, நம்பிக்கையின்மை எல்லாவற்றையும் பின் தள்ளி, லலிதா பரமேஸ்வரி அடுத்த மாதமே கருத்தரித்தாள்.
 

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Anuradha GRSR

New member
Joined
Nov 20, 2024
Messages
14
Nice...
அழகு ...
வாமனனின். விக்ரம அவதாரம்...அழகே அழகு...
என்ன ஒரு பேச்சு..
கலக்கி விட்டான்..
 
Last edited:

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
25
கணக்கை அக்கு வேறு ஆணிவேறாக பிரிக்கத் தெரிந்ததால்தான் லலிதாவை ஈசியா கணக்குப்பண்ணிட்டான். அவள் கருத்துகளையும், செயலையும், பிரித்து மேய்ந்து, அவளுக்குத் தன் மீது நம்பிக்கை வர வைத்துவிட்டான்.
சூப்பர் மா😍😍😍
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
35
லலிதா நீ எது பண்ணாலும் சரி ஆனா அதை மத்தவுங்க பான் கூடாது ... நல்லா இருக்கு உங்க நியாயம் மேடம்....
 
Joined
Jun 19, 2024
Messages
13
😍😍😍

நம்பிக்கையில்லா தீர்மான ரத்து செய்தவுடன், அறுபது நாட்களின் விலகலையும் அரைமணி நேரத்துல ஈடு செய்து அவளை கர்ப்பம் ஆக்கிட்டானே... அப்ப நம்பிக்கையில்லா தீர்மானம் எப்ப ரத்து செய்வான்னு காத்துக்கிட்டு இருந்திருக்கான்..😛😛
 
Last edited:
Top Bottom