• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -22

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
பகலிரவு பல கனவு -22

“அட! இரண்டு பேரும் என்ன இங்கேயே நிக்கிறீங்க?” கேட்டுக் கொண்டே அண்ணனின் அருகில் வந்தாள் மலர்விழி. இருவரும் பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தனர்.

“அங்கே என்ன தெரிகிறது?” என்று வடிவேலுவை மிமிக்ரி செய்து பார்த்தவளுக்கு மௌனம் தான் பதிலாகக் கிடைத்தது.

“ஹலோ! என்ன நக்கலா? நிலா காயுறதா நினைப்பா? வேகாத வெயில்ல நிக்கறாங்களேன்னு ஒரு அக்கறைல கேட்டா.. ரொம்பத்தான் பண்றாங்க” நொடித்துக் கொண்டவளுக்கு மீண்டும் மௌனமே பதிலாகக் கிடைத்தது.

“சரிதான்.. நான் ஒருத்தி மாங்கு மாங்குன்னு பத்து தடவை மாடிக்கு ஏறி இறங்கி உங்க சாமான் எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கேன். நீங்க என்னடான்னா..”

தனது பேச்சுக்கு இருவரிடமும் எந்த எதிர்வினையும் இல்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டாள் மலர்விழி. அதுவும் அண்ணனின் கூர்மையான பார்வை அவளது கேலியை ரசிப்பதாக இல்லை. திருமண கோலத்தில் இருவரும் இருந்தாலும் சம்யுக்தாவின் நிலை பிரபாகரனை விடப் பரிதாபமாக இருந்தது. வெயிலில் அவளது HD மேக்கப் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருந்தது. எப்போதும் கரையைக் கடந்து விடுவேன் என்று கண்கள் குளமாகி நின்றது. ஐலைனர் எல்லாம் கரைந்து கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறிக் கொண்டிருந்தாள்.

தான் நிர்கதியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு தோன்றி அவளைத் தள்ளாட வைத்தது. பிரபாகரன் சட்டென்று அவளைப் பிடித்துத் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி நிறுத்திக் கொண்டான். அவனது பொறுமை பறந்து கொண்டிருந்தது.

“மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள அழைக்கணும் மலரு. அதுக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லச் சொல்லு, நாங்க இப்படியே வெளியே போயிடறோம்” என்று பல்லைக் கடித்தான்.

“வாட்! அம்மா அதுக்குத் தான முதல் ஆளா வீட்டுக்குள்ள போனாங்க. இன்னுமா ஆரத்தி கரைக்கிறாங்க. இந்த அம்மாவ… “ என்று பதிலுக்கு பல்லைக் கடித்த மலர்விழி, “அம்மாஆஆஆஆஆ!” என்று அலறியபடி உள்ளே சென்றாள்.

“ஏ புள்ள மலரு! எதுக்கு உங்க அம்மாவ இப்படி ஏலம் விடற ஆத்தா? என் பேரன் பொண்டாட்டி பயந்துக்கப் போறா” பூஜையறையில் புது மருமகள் விளக்கேற்ற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட்டு வெளியே வந்த அப்பத்தா பேத்தியைக் கடிந்து கொண்டார்.

“உன் மருமக பண்ற காரியத்துக்கு ஏலம் போடாம என்ன செய்ய.. நீயே வந்து பாரு” என்று அவரை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

கையில் ஆரத்தி தட்டுடன் சமையலறை வாசலில் காமாட்சி நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி சொந்த பந்தங்கள் சிலர். மிகுந்த அக்கறையுடன்(?!) பேசிக்கொண்டிருந்தனர்.

“என்னத்த சொல்றது காமாட்சி, நம்ம ஜனமா இருந்திருந்தா இப்படி மாப்பிள்ளை வீட்டுக்கு மரியாதை இல்லாம இருக்குமா?”

“நல்லா தேடிக் கண்டுபிடிச்சிருக்கான் உன் மகன். குடும்பமா அது, உன் மாமியார் வாய்க்கு பயந்து தான் நாங்க எல்லாம் பேசாம வந்தோம். இல்லேன்னா அந்த டாக்டர் பொம்பள பேசின பேச்சுக்கு நல்லா பதில் கொடுத்திருப்பேன். நம்மள யாருன்னு நினைச்சா? நாம பாக்காத பணமா?”

“அதானே.. நல்லா சொல்லு பங்கஜம். பொண்ணு டாக்டராம், நாளைக்கே லட்சம் லட்சமா‌‌ சம்பாதிப்பாளாம். நம்ம பையன் என்ன வக்கத்து நிக்கிறானா, பொண்டாட்டிய சம்பாதிக்க வச்சு தான் அவன் சாப்பிட போறானா?”

“முப்பது லட்ச ரூபாய் கொடுத்து உறவ அத்து விட்டுட்டாங்க. அவங்க வீடு மட்டுமே நாலஞ்சு கோடி தேறும். படிச்ச குடும்பத்தோட லட்சணம் இப்படி இருக்கு.”

“பணம் பவுசோட வந்தா ஆச்சா? நாளைக்கே அவங்க பொண்ணுக்கு குழந்தை உண்டானா மாமியாரா எல்லாம் செய்யணும்?”

“நீயும் ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்க காமாட்சி. உன் புருஷனும் எதுக்கும் லாயக்கில்லை. மகனை நம்பித்தான் இருக்கணும்னு உன் தலையில ஆண்டவன் எழுதி வச்சுட்டான். அந்த மகன் இப்படி கல்யாணம் பண்ணிகிட்டான்னு தெரிஞ்சா நாளைக்கு உம்பொண்ண யாரு கட்டுவா?”

“இப்போ சொல்லி என்ன பிரயோஜனம்? நடக்கிறது எல்லாம் பார்த்தா உம்மகன் எப்படி மாறுவான்னு யாருக்கு தெரியும்? நீயாவது உஷாரா இருந்து சேர்த்து வச்சிருக்கணும். நீயே ஒரு அப்பிராணி. மகன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சுட்ட. ஆனா அவன் பாரு, பெத்தவ, கூடப் பிறந்தவன்னு யாரையும் யோசிக்காம பெரிய புளியங்கொம்பா பார்த்து பிடிச்சிட்டான். என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு ஒரு டாக்டர். அம்மா அப்பா பாக்கலேன்னா என்ன? பணத்தை வீசினா எல்லாம் செய்யறதுக்கு ஆள் வருவாங்க.”

“நீ வேற, இப்பவே டாக்டர்னு சொல்லாத. இன்னும் ஒன்னரை வருஷம் படிப்பு பாக்கி இருக்காம். அதுக்கும் நம்ம பையன் தான் செலவழிக்கணும்.”

“அடக் கொடுமையே! இதுக்கெல்லாம் நீ எப்படி சம்மதிச்ச காமாட்சி? ஹான்.. மறந்தே போயிட்டேன் பாரு. இந்த வீட்டுல நீ பேசி எது நடந்திருக்கு. நீ உன் புருஷன் கூட கூறோட பொழச்சிருந்தா உன் நாத்தனாரு உன் தலைல மொளகாய் அரைச்சிருக்குமா? என்னமோ போ.. வயசாகியும் விவரம் பத்தாமத் தான் இருக்க.”

புதிதாகத் தோன்றிய அக்கறையுடன்(!?) ஆளாளுக்கு அருமையான கருத்துக்களை அள்ளி வீசிக்கொண்டிருக்க காமாட்சி அமைதியாக நின்று கொண்டிருந்தார். முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அவர் மனதில் பெரிய பிரளயமே உருவாகிக் கொண்டிருந்தது.

“ரொம்ப நல்லா இருக்கு. வாசல்ல புது மருமகள நிக்க வச்சிட்டு இங்கே வெட்டிப் பேச்சுக்கு காது கொடுத்திட்டு நின்னா வீடு விளங்கும்.” மாமியாரின் குரலில் காமாட்சி திடுக்கிட்டு திரும்ப, அவரைச் சுற்றி இருந்த கூட்டம், “பால் பழம் எல்லாம் எடுத்து வச்சாச்சா? விளக்குல எண்ணெய் திரி எல்லாம் இருக்கா? மருமக உள்ள வந்ததும் முதல்ல விளக்கேத்தணும்” என்று ஆளாளுக்கு ஒன்று சொல்லி அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

“அம்மா! கையில வச்சிருக்கிறது என்னன்னு தெரியுதா? வரப் போற மருமகளுக்கு நான் தான் ஆரத்தி எடுப்பேன், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு வாய் கிழிய பேசுவீங்களே இப்போ அந்த மருமக அரை மணி நேரமா வெயில்ல நிக்குறா. இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

மகளுக்கு பதிலேதும் சொல்லாமல் வாசலை நோக்கி நடந்தார் காமாட்சி.
அமைதியாக ஆரத்தி எடுத்த தாயை ஆராய்ச்சியாகப் பார்த்தான் பிரபாகரன். அவனது கல்யாணம் பற்றிப் பேசும் போதெல்லாம் தான் தனது மருமகளை எப்படி நடத்துவேன் என்று தான் நிறைய பேசி இருக்கிறார் காமாட்சி. அந்தப் பேச்சில் பெரும்பாலும் மருமகளுடன் கூட்டணி அமைத்து மகனை எப்படி டீல் செய்வது என்பது தான் இருக்கும். சம்யுக்தா தான் மருமகள் என்று தெரிந்த பின்னர் இன்னும் நிறையவே பேசி இருக்கிறார். ஆனால் இன்று இறுகிய முகத்துடன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

மகனின் பார்வை ஏன் இப்படி என்று கேட்பதை உணர்ந்து அவனது பார்வையை முற்றிலும் தவிர்த்தார். அவனோ விடுவதாக இல்லை. தாயின் மனம் நடந்த நிகழ்வுகளால் குழப்பத்தில் இருக்கிறது, மற்றபடி அவரது உண்மையான இயல்பு மருமகளைத் தள்ளி நிறுத்தாது என்று அந்த நொடி வரையில் நம்பினான்.

“அம்மா! என்னது இது, நீங்க தான் புதுப் பொண்ணு மாதிரி தலைகுனிஞ்சு ஆரத்தி எடுக்கிறீங்க? உங்க மருமகளைப் பாருங்க எப்படி நிமிர்ந்து நிக்கிறான்னு? வெட்கம்னா கிலோ என்ன விலைன்னு கேட்பா?ள” தாயுடன் சேர்த்து மனைவியையும் வம்புக்கு இழுத்தான். அந்தோ பரிதாபம்! அவனது முயற்சி படுதோல்வி அடைந்தது. அமைதியாக ஆரத்தி எடுத்து முடித்த காமாட்சி, “இரண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ளே போங்க!’ என்று பட்டும் படாமலும் சொல்லி விட்டு ஆரத்தியை வாசலில் கொட்டுவதற்குப் போய்விட்டார். சம்யுக்தாவோ என் காது கேட்காது என்ற நிலையில் இருந்தாள்.

“மருமகளே! மருமகளே! வா! வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா! வா!” என்று பாடியபடி சம்யுக்தாவின் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்று சூழ்நிலையின் கனத்தைக் குறைக்க முயன்றாள் மலர்விழி.‌ அண்ணனை அம்போவென்று விட்டு அண்ணியை அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தாள்.

“மலரு! அண்ணிய சாமியறைக்கு கூப்பிட்டு வா. சாங்கியம் எல்லாம் முடிஞ்சதும் கொஞ்சிக்கலாம். புதுப் பொண்ணே! வா! வா! வந்து விளக்கேத்து.‌” அவளைக் கையோடு அழைத்துச் சென்று பேரனின் பலத்த முறைப்புக்கு ஆளானார் அப்பத்தா.

“அடேங்கப்பா என்ன முறைப்பெல்லாம் பலமா இருக்கு. இதுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு அப்பப்போ ஞாபகப்படுத்திக்க.. மசமசன்னு நிக்காம பொண்டாட்டி பின்னால நடைய கட்டு. நிறைய வேலை கிடக்கு.” அப்பத்தாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அடுத்த நொடியே மனைவியின் அருகில் சென்று நின்றான் பிரபாகரன்.

“அம்மாடி புதுப் பொண்ணே இந்தா வத்திப்பெட்டி. அந்த இரண்டு விளக்கையும் ஏத்திட்டு சாமியக் கும்பிடு. பேராண்டி! நீயும் பக்கத்தில நில்லு. இரண்டு பேருமா சேர்ந்து சாமி கும்பிட்டு வாங்க. ஆத்தா! இரண்டு பேரையும் நல்ல படியா வாழ வை.” கையெடுத்துக் கும்பிட்டு அவர் பூஜையறையில் இருந்து கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தார்.

அதுவரை வெளியே நின்ற மலர்விழி மெல்ல அடியெடுத்து வந்து அண்ணியின் அருகே நின்றாள். சம்யுக்தாவோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் அங்கே இருந்த தெய்வங்களை வெறித்தபடி நின்றிருந்தாள். பிரபாகரன் கைகளைக் கூப்பி கண்களை மூடி நின்றிருந்தான்.

“அண்ணி! நான் ரொம்ப திங்க் பண்ணாதீங்க. நான் ஒன்னு சொல்லவா? ஒரு ஃபைட் சேஸ்னு எதுவும் இல்லாமல் அஞ்சு வருஷமா ஜாலியா லவ் பண்ணி இருக்கீங்க. அதுக்கு திருஷ்டி மாதிரி சிலது நடக்குது. எங்க அப்பத்தா இதுவும் கடந்து போகும்னு அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லும். அது மாதிரி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மாறிடும். கவலைப் படாதீங்க, டைம் இஸ் எ பெஸ்ட் ஹீலர். அந்த நம்பிக்கையோட சந்தோஷமா விளக்கேத்துங்க.”

அருகில் இருந்த பிரபாகரன் தங்கையின் பேச்சில் இருந்த முதிர்ச்சியில் ஆச்சரியம் அடைந்தான். ஆனால் அவளோ கடைசி பஞ்ச்சாக, “எங்க அண்ணனைக் கல்யாணம் பண்றத விடக் கொடுமை எதுவும் உலகத்தில இருக்க முடியாது. அதையே தைரியமா செஞ்சுட்டீங்க. மத்தவங்க எல்லாம் ஜூஜூபி.. ஈஸியா டீல் பண்ணிடலாம்” என்று சொல்லி விட்டு அண்ணியைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

“அடிப்பாவி! அவளே ஒரு அடப்பாவி. நீ வேற சேர்ந்துட்டியா.. என் கதி அதோ கதி தான்” பிரபாகரன் தங்கையின் காதைத் திருக, சம்யுக்தாவின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. மலரின் முயற்சி புரிந்து அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

“இப்போ தான் கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்கீங்க. சீக்கிரம் விளக்கேற்றி சாமி கும்பிட்டு வாங்க. எல்லாரும் வெயிட்டிங்.”

சம்யுக்தா அமைதியாக விளக்கேற்ற என்ன வேண்டிக் கொள்வது என்பது தெரியாமல் இருவரும் கீழே விழுந்து வணங்கி விட்டு வெளியே வந்தனர். வந்திருந்த உறவுகள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர். சம்யுக்தா தயக்கத்துடன் பிரபாகரன் அருகில் அமர்ந்தாள்.

காமாட்சி ஒரு டம்ளரில் பாலும் இரண்டு வாழைப்பழங்களையும் கொண்டு வந்தார். இப்போதும் அமைதியாக, சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கடனே என்று கடமையாற்றத் தயாரானார்.

“அதென்ன, எப்போ பார்த்தாலும் இந்த பாலும் பழமுமே கொடுக்கிறது? அதுவும் கொழ கொழன்னு வாழைப்பழம் மட்டும். ஏன் இந்த ஆப்பிள், திராட்சை எல்லாம் கொடுத்தா ஆகாதா? இல்ல.. பாலையும் பழத்தையும் ஜூஸர்ல போட்டு மில்க் ஷேக்கா கொடுத்தாத் தான் ஆகாதா? சிந்தாம குடிச்சிறலாம். இந்தக் கல்யாணத்துக்கு முக்கியமான காரணமே ஒரு மில்க் ஷேக் தான். என்ன அண்ணி நான் சொல்றது சரிதானே? உங்களுக்கு சப்போட்டா மில்க் ஷேக் தானே பிடிக்கும்?”

தனது பேச்சால் மலர்விழி மட்டும் இது கல்யாண வீடு என்பதை அவ்வப்போது ஞாபகப்படுத்தினாள். இதுவரையில் தன் முயற்சியில் வெற்றியும் கண்டாள். ஆனால் இப்போது அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஒரு வழியாக சம்பிரதாயம் எல்லாம் முடிந்தது. எப்போது உடையை மாற்றுவோம் என்று காத்திருந்த மணமக்கள் இருவரும் ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள்.

“மலர்! எனக்கு.. “

“என்ன அண்ணி? எதுனா வேணுமா? சாங்கியம் எல்லாம் முடிஞ்சாச்சு. இனிமேல் நைட் வரை ரெஸ்ட் தான்.” கண்ணடித்த மலர்விழி அப்பத்தாவிடம் மாட்டிக் கொண்டாள்.

“ மலரு பெரிய பேச்செல்லாம் பேசாத.”

“உத்தரவு அப்பத்தா! நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க அண்ணி.. சாரி! நான் டாபிக்க மாத்திட்டேன்.”

“இந்த ஜுவல்ஸ் எல்லாம் கழட்டுறதுக்கு ஹெல்ப் பண்றீங்களா? ரொம்ப ஹெவியா இருக்கு. அப்புறம்.. ரெஸ்ட் ரூம் போகணும்.. டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாமான்னு தெரியணும்..”

“அட! இதுக்குத் தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களா? ஒவ்வொன்னா கவனிப்போம். முதல்ல இந்த நகையெல்லாம் கழட்டுறேன். இப்படி திரும்பி உட்காருங்க. தலைல இருந்து ஆரம்பிப்போம்.”

“ஏய் சில்வண்டு பார்த்து.. அவளுக்கு வலிக்கப் போகுது” இடைபுகுந்த அண்ணனை முறைத்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்தாள்.

“ஏன் அண்ணி, இந்த செட் பார்க்க சூப்பரா இருந்துச்சு. ஆனால் இவ்வளவு வெயிட்டா இருக்கு. எப்படி இவ்வளவு நேரம் அட்ஜெஸ்ட் பண்ணீங்க?”

“பழகிடுச்சு மலர். சொந்தக்காரங்க கல்யாணம் வந்தாலே அம்மா இத்தனையும் மாட்டி விட்டுடுவாங்க.”

“ஓ.. என்னாதுஉஉ.. கல்யாண பொண்ணு மட்டும் இதெல்லாம் போட்டா ஆகாதா? இந்த அம்மாக்கள் எல்லாம் இதுல ஒத்துமையா இருப்பாங்க” நொடித்துக் கொண்டே அனைத்தையும் கழட்டி ஓரமாய் வைத்தாள். ஏதோ ஒரு நகை கீழே விழுந்தது.

“பார்த்து மலர். ஈஸியா உடைஞ்சிடும். ஃபிக்ஸ் பண்றது கஷ்டம்.”

சம்யுக்தாவின் வார்த்தைகள், வாடகைக்கு வாங்கிய நகைகளை சேதப்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறை என்று நினைத்துக் கொண்டாள். அதை எடுக்கக் குனிந்த தான் காலில் இருந்த மெட்டியும் கொலுசும் கண்ணில் பட்டது.

‘இதுவுமா? சரி மாடர்ன் ட்ரெண்ட்ல ஒரு நாள் தான் மெட்டி போடுவாங்க போல..’ என்று நினைத்துக் கொண்டு அதையும் கழட்ட முயன்றாள்.

“மலர்.. அதை எதுக்கு கழட்டுறீங்க?” பதறிப் போய் காலை நகர்த்தினாள்.

“ஓகே..‌ஓகே.. இதெல்லாம் எங்க எடுத்தீங்க? என் ஃப்ரண்ட் கூட கேட்டா.. அவ கல்யாணத்துக்கு தேவைப்படும்.”

“எனக்குத் தெரியாது மலர். அம்மா கிட்ட தான் கேட்கணும்.. சின்ன வயசுல இருந்தே வாங்குனது தான். நேத்து போட்ட செட் தான் புதுசு.”

“வாட்.. சின்ன வயசுல இருந்தே வாங்குனதா.. இதையா.. “

“ஆமா மலர். கோல்ட் எல்லாம் மொத்தமா எப்படி வாங்க முடியும்?”

“அடி ஆத்தி! எல்லாமே கோல்டா??” என்று அலறிய மலர் சுற்றுப்புறத்தை உணர்ந்து கைகளை வைத்து அவசரமாக வாயை மூடினாள்.

“அப்போ… நேத்து போட்டிருந்தது???”

“நிச்சயத்துல போட்டது ரூபி செட். ரிசப்ஷனுக்கு போட்டது அன்கட் டயமண்டு. இரண்டும் எங்க அண்ணன் வேலைக்கு போனதும் என் பர்த்டேக்கு வாங்கிக் கொடுத்தான்” என்றவளுக்கு இப்போதைய அண்ணனை நினைக்கும் போதே தொண்டையில் அடைத்துக் கொண்டது. கண்களில் வழிந்த நீரை துடைக்க வேண்டும் என்று தோன்றாது தலைகுனிந்து கொண்டாள்.

“அண்ணி முதல்ல இதையெல்லாம் பிடிங்க.. உள்ள இருக்கிற பெரிசுங்க கண்ணுல படறதுக்குள்ள எடுத்து பத்திரப்படுத்தி வைக்க. நான் ஒரு லூசு.. எல்லாம் வாடகை செட்டுன்னு நினைச்சு அசால்டா ஹேண்டில் பண்ணிட்டேன். தப்பா நினைக்க வேண்டாம்.”

“மலர்!! என்ன இது? எதுக்கு இவ்வளவு டென்ஷன்? எனக்கு கோல்ட் தவிர எது போட்டாலும் அலர்ஜி வந்துடும். சில்வர் கூட ஒத்துக்காது. அதனால தான் எல்லாமே கோல்ட் வாங்கிட்டாங்க.” சம்யுக்தாவின் குரல் சாதாரணமாக இருந்தது.

“அப்போ.. இந்த மெட்டி கொலுசெல்லாம் கூட தங்கமா?”

“ஆமா.. “

அதுவரை திறந்த வாய் மூடாமல் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபாகரன் வாயைத் திறந்தான்.

“அம்மா! தாயே! இவ்வளவு தங்கத்தை எப்படி வீட்டுல வைக்க முடியும்?
எதுக்கு இத்தனையும் இங்க கொண்டு வந்திருக்க? என் கிட்ட ஏன் முதல்லயே சொல்லல? இதுக்கு உங்க அம்மாவும் அண்ணனும் என்னவெல்லாம் பேசப் போறாங்களோ? எனக்குத் தேவையா இதெல்லாம்?”

பல்லைக் கடித்தவன் சட்டென்று அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். சம்யுக்தா அதிர்ந்து போய் மலரைப் பார்க்க அவள் எழுந்து அண்ணனைத் தடுத்து நிறுத்தினாள்.

“அண்ணா! எதுனாலும் உங்க ரூம்ல போய் பேசுங்க. அண்ணிய கூப்பிட்டு மேல போங்க. எதுடா சாக்குன்னு காத்திருக்கிறவங்களுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க. போங்க..”

தங்கை சொல்வதில் இருந்த நியாயம் உணர்ந்து பிரபாகரன் சம்யுக்தாவின் கரம் பிடித்து எழுப்பினான். சரியாக அந்த நேரத்தில் ஆஜரானார் அப்பத்தா.

“டேய் பேராண்டி! நீ மட்டும் மேல போ. மலரு! உங்க அண்ணிய உன் ரூமுக்கு கூட்டிட்டு போ. அவளுக்கு மாத்து உடை எடுத்துக் கொடு. எல்லாத்துக்கும் நேரம் காலம் பார்க்கணும். முறைன்னு ஒன்னு இருக்குல்ல.”

“பாட்டீஈஈஈஈ!” பல்லைக் கடித்த பிரபாகரன் அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன் காமாட்சி வாய் தி
றந்தார்.

“ஆமா.. இங்க எல்லாம் முறையா நடந்திருச்சு.. இது ஒன்னு தான் குறை..” நக்கலுடன் வந்த தாயின் வார்த்தைகள் பிரபாகரனை சிலையென நிற்க வைத்தது.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Lakshmi

Active member
Joined
Jun 19, 2024
Messages
159
காமாட்சி ஒரு முடிவோடு தான் இருக்காங்க.
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
68
சொந்தங்கார பூசாரிகள் அடித்த வேப்பிலை, போட்ட மந்திரமும் காமாட்சிக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
75
காமாட்சி முன்பே மாறி விட்டாரா?🤔 அல்லது சம்யூவின் பெற்றோர் அவளை மொத்தமா தலை முழுகிட்டதால வந்த மாற்றமா?🤔

எப்படி இருந்தாலும் இந்த மாமியார்களை மட்டும் நம்பவேக் கூடாதுப்பா......😜😂😂

ரெண்டு பேருக்கும் மலரும், அப்பத்தாவும் தான் துணை...
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
68
காமாட்சி முன்பே மாறி விட்டாரா?🤔 அல்லது சம்யூவின் பெற்றோர் அவளை மொத்தமா தலை முழுகிட்டதால வந்த மாற்றமா?🤔

எப்படி இருந்தாலும் இந்த மாமியார்களை மட்டும் நம்பவேக் கூடாதுப்பா......😜😂😂

ரெண்டு பேருக்கும் மலரும், அப்பத்தாவும் தான் துணை...
அப்பத்தா மாமியார் கட்சி ஆரமிக்கபோறாங்க காமாட்சி எதிரா, சம்யு பிரபாகரனுடைய ஆதரவாக
 
Top