பகலிரவு பல கனவு -21
பிரபாகரனும் சம்யுக்தாவும் தங்கள் கல்யாண சாப்பாட்டை வெறித்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் ரிசப்ஷன் முடிந்து இருவரும் படுக்கையில் விழுந்த போதே அடுத்த நாள் வந்து விட்டிருந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் இரண்டு மணி நேர தூக்கம் கூட இல்லாமல் எழுந்து பியூட்டிஷியனிடம் தலையைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள் சம்யுக்தா. மனதில் ஏகப்பட்ட சந்தேகங்கள், எதற்கும் ஒரு தெளிவு கிடைக்காமலே முகத்தில் ஒட்ட வைத்த செயற்கை புன்னகையுடன் மணமகளாக மேடை ஏறினாள்.
மலர்விழி, சரண்யா மற்றும் நண்பர்கள் கூட்டம் மணமக்களைச் சற்று உற்சாகமாக வைத்திருந்தது. சம்பந்தி சண்டை இல்லாமல் இந்திய திருமணங்கள் இல்லை. இங்கே வாய்ச்சண்டை என்று எதுவும் இல்லை. வழக்கமான சீர் செனத்தி குறைவு, சாப்பாட்டில் குறை, மாப்பிள்ளை வீட்டாரை மதிக்கவில்லை என்பது போன்ற விஷயங்கள் எதுவும் இல்லை. .
அதே சமயம் தங்கள் பிள்ளைகளின் திருமணம் என்ற உற்சாகமும் இல்லை.
கண்ணன் பட்டும் படாமலும் பேசினார் என்றால் பாரதி வாய் திறந்து பேசவே இல்லை. சஞ்சய் பிரபாகரன் வீட்டாரை முறைத்துக் கொண்டே இருந்தான். இவர்கள் இப்படி என்றால் காமாட்சி செய்ய வேண்டிய முறைகளை மாமியாரின் உதவியுடன் பார்த்துப் பார்த்து செய்தார். ஆனாலும் அவரிடம் ஏதோ ஒன்று குறைகிறது என்று பிரபாகரனின் அறிவு அவ்வப்போது சுட்டியது. முருகானந்தம் முருங்கை மரத்தை விட்டு இறங்கவே இல்லை, அவரைக் கண்டு கொள்ள அங்கே ஆளும் இல்லை.
மற்றபடி திருமண மண்டபம் கொள்ளாமல் விருந்தினர் கூட்டம். தங்களுக்குள் முறைத்தாலும் வந்தவர்களை நன்றாகவே கவனித்தார்கள். பிரபாகரனுடன் பள்ளியில் படித்த பலரும் வந்திருந்தனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர், தொழிலதிபர் என அவர்களின் பின்னணியும் பிரபாகரனைப் பற்றிய அவர்களது மதிப்பீடும் சம்யுக்தா வீட்டினரைப் புருவம் உயர்த்த வைத்தது. அனைவரும் சந்தோஷமாக மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதோ சடங்குகள் முடிந்து மணமக்கள் சாப்பிட வந்து விட்டார்கள். அதன் பிறகு நல்ல நேரத்தில் மணமகன் வீடு கிளம்ப வேண்டியது தான். அதை நினைத்தாலே சம்யுக்தாவுக்கு தொண்டையில் அடைத்துக் கொண்டது. அதில் என்ன பிரச்சினை வருமோ என்று அவள் மனம் யோசித்துக் கொண்டிருக்க, கைகள் சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட நண்பர்கள் களத்தில் குதித்தனர்.
“டேய் மச்சான்! அந்த ஸ்வீட் எடுத்து தங்கச்சிக்கு ஊட்டி விடு. இதெல்லாம் தாலி கட்டறத விட முக்கியமானது. காமிரா மேன் ரெடியா இருக்காரு பாரு. இந்த ஃபோட்டோ இல்லேன்னா கல்யாண ஆல்பமே இல்ல..”
“ஆமா மச்சான்.. ஸ்வீட்ட தங்கச்சிக்கு கொடுக்கணும்.. நீ கையால ஊட்டினாலும் சரி.. இல்ல.... வேற மாதிரி ஊட்டினாலும் சரி.. அது உன் சாய்ஸ்.”
“டேய்! எதுக்கும் அவங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்னு தெரிஞ்சிட்டு காரியத்துல இறங்குடா.. இல்லேன்னா பின்விளைவுகள் மோசமா இருக்கும்..”
“ஆமா பிரபா.. அனுபவஸ்தன் சொன்னா கேட்டுக்கணும். அஞ்சு வருஷம் ஆச்சு. இவன் வைஃப் இவன மட்டும் இல்லாம நம்ம எல்லாரையும் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் வச்சு செய்யறாங்க.”
“டேய் அவன் கல்யாணம் நடந்து அஞ்சு வருஷம் ஆச்சுன்னு தெரியதுல்ல. அந்த கேள்விக்கெல்லாம் இப்போ அவசியம் இருக்காது. முன்னாடி மாதிரி ஃபிக்ஸட் மெனு கிடையாது. இப்போல்லாம் ஒவ்வொரு வேளை மெனுவும் பொண்ணு மாப்பிள்ளை தான் ரெடி பண்றாங்க. அவங்க சாப்பிடறாங்களோ இல்லையோ, எல்லா ஐட்டமும் அவங்களுக்கு பிடிச்சதா தான் இருக்கும். என்ன சிஸ்டர் நான் சொல்றது சரிதானே?”
அனைத்தையும் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த பிரபாகரன் இதற்கும் அதையே செய்தான். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு இனிப்பை எடுத்து சம்யுக்தாவுக்கு ஊட்டினான். எந்த வித சலனமும் இல்லாமல் வாயைத் திறந்து இனிப்பை வாங்கிக் கொண்டாள் சம்யுக்தா. இந்த நிகழ்வு பற்றிய பல்வேறு கற்பனையில் இருந்தவள்.
“ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்கன்னு மொத்தமா ஸ்வீட்ட வாயில திணிச்சா அப்புறம் என்னோட வேற முகத்தைப் பார்க்க வேண்டியது வரும்” என்று முன்பே அவனை மிரட்டி இருந்தாள்.
“அச்சோ பயம்மா இருக்கே. அப்படி நான் ஊட்டி விட்டா எனக்கு திருப்பி கொடுத்துடு. நீ எப்படி கொடுத்தாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன்” என்று அவன் பதில் சொல்லி அவளிடம் இரண்டு அடிகளை வாங்கியிருந்தான். இப்போது அவையெல்லாம் நினைவில் வர சம்யுக்தாவுக்குத் தொண்டையில் அடைத்தது.
இலையில் இருக்கும் அனைத்தும் அவளின் சாய்ஸ் தான். தேர்ந்தெடுத்த போது இருந்த உற்சாகமும் சந்தோஷமும் இப்போது காணாமல் போய் விட்டிருந்தது. அழுவது கோழைத்தனம் என்று அனைவரையும் கேலி செய்பவள், இன்று தனது வாழ்வின் முக்கியமான நாளில் கண்களை மறைத்த நீரை மறைக்க முயன்று தோற்றாள்.
“அட! எதுக்கும் கலங்காத என் நண்பி சம்யூவா இது? எதுக்கு இப்படி டேம திறந்து விடறா? ஸ்வீட் தொண்டையில மாட்டிக்கிச்சா? நோஓஓஓஓ.. நான் இருக்கும் போது உன் கண்ணு கலங்கலாமா? மாப்பிள்ளை சார்! ஸ்வீட் ஊட்டி விட்டு என் ஃப்ரண்ட இப்படி அழ விட்டீங்களே. இதுக்கு பதில் கொடுக்காமல் ஓய மாட்டாள் இந்த சரண்யா. நான் குடிக்கிற ஸ்ட்ராபெரி ஜூஸ் மேல சத்தியம். ”
அவளை உற்சாகமாக வைக்க சரண்யா களத்தில் இறங்கினாள். மலர்விழி அவளுடன் கைகோர்த்தாள்.
“யெஸ் அண்ணி. லேடீஸ் பவர் என்னன்னு உங்க ஹஸ்பன்டுக்கு கொஞ்சம் காட்டுங்க. உங்க கண்ணுல தண்ணி வர வச்சவன் கண்ணுல ரத்தக் கண்ணீர் வராம விடக்கூடாது.”
“அடப்பாவி! நீயெல்லாம் ஒரு தங்கச்சியா? பாசமலர் படங்காட்டி என் கிட்ட எவ்வளவு பணம் கறந்திருப்ப? இப்போ என்ன சைட் மாறிப் போற? உங்க அண்ணி இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கல.. இரண்டு பேரும் என்ன தேவைன்னாலும் என் கிட்ட தான் வரணும். ஞாபகம் இருக்கட்டும்.” பிரபாகரன் பொங்கி எழ, பெண்கள் இருவரும் சிரித்தனர். கூடை சுற்றி இருந்த பெரியவர்களும் வாய் விட்டுச் சிரித்தனர். அதில் ஒருவர் அவனுக்கு வாழ்க்கைப் பாடம் நடத்தினார்.
“அடப் போங்க தம்பி. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீங்க தான் ஞாபகத்துல வைக்கணும். தாலி கட்டுயாச்சுன்னா பொண்டாட்டி தான் வீட்டுக்கு நிதியமைச்சர். அப்போ தான் வீடு விளங்கும். காலங்காலமா நடக்கிற விஷயத்தை மாத்த நினைக்காதீங்க. வீட்டுக்கு போன உடனே பீரோ சாவிய பொண்டாட்டி கையில கொடுங்க.”
“அட என்ன சண்முகம் நீங்க, இப்ப நாம டிஜிட்டல் இந்தியாவில இருக்கோம். பணத்தைக் கொண்டு வந்து பீரோல வைக்கிறதில்லையே.”
“ஆமா.. மறந்தே போனேன் பாருங்க. அதனால என்ன தம்பி, உடனடியா உங்க பாங்க் அக்கவுன்ட்டுல பொண்டாட்டி பேர சேர்த்து விடுங்க.” இளைஞர் பட்டாளம் பலத்த கைதட்டலுடன் அந்த ஆலோசனையை வரவேற்றது.
“சூப்பர் சார். பிரபா! அனுபவஸ்தர் சொல்லும் போது கேட்டுக்கணும். எனக்கு யாரும் இதைச் சொல்லித் தரலையே.. இரண்டு வருஷமா என் பொண்டாட்டி கிட்ட மாத்து வாங்கறேனே!” பிரபாகரனின் நண்பன் ஒருவன் புலம்பினான்.
இப்படி சாப்பாட்டு வேளை அந்த ஜோடியை கொஞ்சம் உற்சாகமாக்கியது.
சரண்யா, கிடைத்தது வாய்ப்பென்று புகுந்து விளையாடினாள். அதன் பிறகு நண்பர்கள் கூட்டம் சுற்றி அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தது.
“மாப்பிள்ளை சார்! என் கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஒரு துளி கண்ணீர் வந்தாலும் ஐலைனர் எல்லாம் கரைஞ்சு என் ஃப்ரண்ட் மூஞ்சி சந்திரமுகியா மாறிடும். அப்புறம் உங்களுக்கு பார்க்கவே பயம்மா இருக்கும். அதனால வெங்காயத்தைக் கூட நீங்களே கட் பண்ணிடுங்க.” ஜாக்கிரதையாக சம்யுக்தாவிடமிருந்து தள்ளி நின்று சிரித்தாள் சரண்யா.
சம்யுக்தா, அவளைத் துரத்த வேண்டும் என்று வேகமாக எழுந்து நின்று விட்டாள். சுற்றி இருந்த அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க, பிரபாகரன், ‘ஐயோ சம்யூ! அடங்குடீ!’ என்று மனதுக்குள் அலறினான். மனைவியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அப்போது தான் போட்டிருந்த மணமகள் வேஷம் ஞாபகம் வர சம்யுக்தா தோழியை முறைத்தபடி அமர்ந்தாள்.
கலகலப்பான பேச்சு வார்த்தைக்கு நடுவே யதேச்சையாக சுற்றுப்புறத்தை நோக்கிய சம்யுக்தாவின் கண்களில் சற்றுத் தள்ளி நின்று அவர்களை முறைத்துக் கொண்டிருந்த சஞ்சய் பட்டான். எப்போதுமே சஞ்சய் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. இதற்கு முன்னர் நடந்த சொந்த பந்தங்களின் திருமணத்தில் எல்லாம் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டவன்.
“அப்பாடா! வந்துட்டியா சஞ்சய்? இவ்வளவு நேரம் ஏதோ ஒன்னு குறையற மாதிரியே இருந்தது. இனிமேல் ஆட்டம் தூள் கிளப்பும்” என்று அவன் வரவைக் கொண்டாடுவார்கள்.
அப்படிப்பட்டவன் தனது பாசமலர் தங்கையின் திருமணத்தில் யாரோ ஒருவன் போல் பட்டும் படாமலும் நடந்து கொண்டிருந்தான். சம்யுக்தாவின் பார்வை தன்னிடம் இருப்பதை அறிந்த அடுத்த நொடியே அங்கிருந்து நகர்ந்து விட்டான். அத்தனை நேரமும் இருந்த உற்சாகமும் மொத்தமாக வடிந்தது போல் உணர்ந்தாள் சம்யுக்தா. துக்கம் தொண்டையை அடைத்தது. அவள் திடீரென்று அமைதியானது கண்டு அனைவருமே அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த பிரபாகரன் மனைவியின் கையைப் பற்றி அழுத்தினான். அவளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அவன் நினைவுகள் சற்று பின்னோக்கிச் சென்றது.
“ஓய் சம்யூ! நம்ம கல்யாணம் முடிஞ்சு எங்க வீட்டுக்கு வரும் போது சினிமால எல்லாம் காட்டுற மாதிரி அழுவியா? உங்க பாசமலர் அண்ணன், என் கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்னு வசனம் பேசுவானா?”
“நினைப்பு தான்.. உள்ளூர்லயே இருக்கப் போறேன். நினைச்சா அம்மாவ பார்த்துட்டு வரலாம். உன் கிட்ட பர்மிஷன் கேட்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணாத, அதெல்லாம் கண்டிப்பா செய்ய மாட்டேன். அப்புறம் எதுக்கு அழணும், நோ சான்ஸ். அப்புறம் என்ன கேட்ட, எங்க அண்ணனா. எங்க வீட்டு அடாவடிய உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். பார்த்து ஜாக்கிரதையா இருங்கன்னு வேணா சொல்லுவான்.”
அவர்களின் கற்பனை ஒன்றாக இருந்திருக்க நிஜத்தில் அப்படியே காட்சிகள் மாறிப் போனது. எதிர்பாராத ஏமாற்றத்தை உள்ளுக்குள் விழுங்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
கலகலப்பான சூழலில் சட்டென்று பலத்த அமைதி நிலவியது. இவர்கள் அனைவரும் டைனிங் ஹாலின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மண்டபத்தின் உள்ளே ஏதோ கடுமையான வாக்குவாதம் நடப்பது போல சத்தம் கேட்டது. பிரபாகரனும் சம்யுக்தாவும் திடுக்கிட்டு எழுந்தனர்.
“அண்ணா! நீங்க இரண்டு பேரும் இங்கேயே இருங்க. நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன். வீட்டுக்கு கிளம்பணுமில்ல. சாமான் எல்லாம் பேக் பண்ணுவாங்க. அதுல தான் யாராவது சத்தமா பேசிட்டு இருப்பாங்களா இருக்கும். தேவையில்லாம டென்ஷன் ஆகாதீங்க” என்று எழுந்து சென்றாள் மலர்விழி.
சென்றவள் வெகு நேரம் ஆகியும் வராமல் இருக்க மணமக்கள் இருவரும் எழுந்து சென்றனர். அங்கு கண்ட காட்சியை நம்புவதற்கு மனம் வரவில்லை. ஆனால் நிஜத்தில் நடந்து கொண்டிருந்ததே..
சம்யுக்தாவின் தந்தை வந்து அப்பத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தார். பாரதி, சஞ்சய், காமாட்சி, முருகானந்தம் என அனைவரும் அங்கே இருந்தனர்.
“இதுல சம்யூவோட நகையும் வெள்ளி சாமானும் இருக்கு. உங்க கிட்ட கொடுத்துட்டோம்” என்று ஆரம்பித்தது அந்தப் பேச்சு.
“இந்தாங்க, இந்த பாஸ் புக்கையும் வச்சுக்கோங்க. அவ அக்கவுண்ட்ல இருப்பத்தஞ்சு லட்சம் இருக்கு. இதுக்கு மேல சீமந்தம், பிரசவம், காதுகுத்துன்னு எல்லாத்துக்கும் தேவைப்படும்” கண்ணன் இந்த வார்த்தைகளைச் சொன்ன போது தான் சம்யுக்தா அங்கே வந்து சேர்ந்தாள். என்ன நடக்கிறது என்று யோசித்துப் பார்த்துக் கிடைத்த பதில் அவளை உயிரோடு கொன்றது.
காரசாரமாக நடந்த விவாதத்தின் சாராம்சம் இதுதான். சம்யுக்தாவின் பெற்றோர் கல்யாணத்துடன் தங்கள் உறவு முடிந்தது என்று அறிவித்து விட்டார்கள். சொத்தில் அவளது பங்கைப் பணமாகவும் நகையாகவும் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். அத்தனையிலும் ஹைலைட்டாக சம்யுக்தா என்று ஒருத்தி அவர்கள் வீட்டில் இருந்தாள் என்ற அடையாளம் இல்லாத வகையில் அவளது அத்தனை பொருட்களும் அங்கே அணிவகுத்து நின்றது.
“எங்களுக்குப் பொண்ணே பிறக்கலைன்னு நினைச்சிக்கிறோம்”
“இனிமே எங்க வீட்டு வாசப்படிய மிதிக்காத”
“உன்னைத் தலைமுழுகியாச்சு” என்பது போன்ற வார்த்தைகள் இல்லை. மற்றபடி செயல்பாடு அத்தனையும் இது தான் விஷயம் என்று சொல்லாமல் சொல்லியது.
பல நாட்கள் கண்ட கனவு பொய்த்துப் போனது போலிருந்தது அவளுக்கு. எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். அவளது வாழ்க்கையின் இருபத்திரண்டு வருடங்கள் சில நொடிகளில் ஒன்றுமே இல்லை என்று ஆனது. அப்படி என்ன தவறு செய்தாள் என்று தெரியவில்லை. நேற்று வரை சாதாரணமாக இருந்த பெற்றோர் இன்று முற்றிலும் புதிராக நடந்து கொண்டனர். கல்யாணப் பேச்சு வார்த்தை நடந்த போது பட்டும் படாமலும் இருந்தாலும் கூட அவளுக்குச் செய்ய வேண்டிய விஷயங்களில் அக்கறை காட்டவே செய்தார்கள்.
இப்படி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. பெற்றோரின் பார்வையைச் சந்திக்க முயன்றாள், அவர்களோ அந்தப் பார்வையைத் தவிர்த்து விட்டனர். அவளது அண்ணன் ஏற்கனவே மண்டபத்தில் இருந்து கிளம்பியிருந்தான். பெற்றோரே இப்படி என்றால் சொந்த பந்தங்கள் என்ன செய்வார்கள். அவர்களும் ஆசிர்வாதம் செய்ததோடு கடமை முடிந்தது என்று சென்று விட்டார்கள்.
திரைப்படங்களிலும் உறவுகள் வீடுகளிலும் கண்ட பிரியாவிடை காட்சியைப் போல் இல்லாமல், சென்று வருகிறேன் என்ற வார்த்தை கூட இல்லாமல், ஏன் ஒரு தலையசைப்பு கூட இல்லாமல் அவளது வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பிரபாகரனின் நண்பன் ஒருவன் உடனடியாக ஒரு வேன் அவர்களை ஏற்றிக் கொண்டு பிரபாகரன் இல்லம் நோக்கிக் கிளம்பியது.
வேனில் யாரும் யாருடனும் பேசவே இல்லை. அப்பத்தா மட்டுமே அவ்வப்போது ஏதோ சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார். சம்யுக்தா ஜன்னலில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். பிரபாகரன் வேனில் இருந்தவர்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
மண்டபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அப்பத்தா மட்டுமே வாய் திறந்தார். பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று தனது வாய்ஜலத்தைக் காட்டும் முருகானந்தம் கூட வாய்மூடி நின்றார். அவரே அப்படி என்றால் எப்போதும் வாய் திறக்காத காமாட்சி பற்றிக் கேட்கவே வேண்டாம். மாமியார் அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்தார். ஆனால் அடுத்தது காட்டும் பளிங்கு போல அவரது முகம் அவரது உள்ளத்து உணர்வுகளை படம் போட்டுக் காட்டியது.
என்ன செய்யக் காத்திருக்கிறாரோ என்று நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது. அப்போது கூட நிச்சயமாக சம்யுக்தா வீட்டினர் போல நடந்து கொள்ள மாட்டார் என்றே நம்பினான். அவன் நம்பிக்கையை அடுத்த சில நிமிடங்களில் உடைத்தெறிந்தார் காமாட்சி. வேனில் இருந்து முதல் ஆளாக இறங்கியவர் எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்று விட்டார்.
“ஆரத்தி எடுத்துட்டு வருவா. இங்கேயே இருங்க “ என்று மணமக்களை வாசலில் நிறுத்தி வைத்துத் தானும் உள்ளே சென்றார் அப்பத்தா. வேனில் இருந்து சாமான்களை இறக்கி வைக்க உதவி செய்து அவற்றை பிரபாகரன் அறையில் அடுக்கி வைத்துவிட்டு அரை மணி நேரம் கழித்து வாசலுக்கு வந்த மலர்விழி பிரபாகரனும் சம்யுக்தாவும் அங்கேயே நிற்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.