• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
344
பகலிரவு பல கனவு -20

சம்யுக்தாவும் அவளது அண்ணனும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இருவரது பேச்சும் வரம்பு மீறிச் செல்வதை அறிந்தும் பெற்றோர் தடுக்க முயன்றும் முடியாமல் போனது.

“ஒரு மனுஷனை நேரிலயே பார்க்காமல் அவன் இப்படித்தான் இருப்பான்னு எப்படி முடிவு பண்ணலாம். நீயெல்லாம் சைக்காலஜி படிச்சிருக்கேன்னு வெளியே சொல்லிடாத. கூடவே நீ ஒரு போலீஸ் வேற. இப்படித்தான் கிரிமினல்ஸ கண்டுபிடிக்கிறியா?”

“நான் கிரிமினலைக் கண்டு பிடிக்கிறது எப்படின்னு உன் கிட்ட ஐடியா கேட்கும் போது சொல்லு. அந்தப் பிரபாகரன் ஃபோட்டோல பார்த்ததே போதும். நேர்ல வேற பார்க்கணுமா? அந்த அளவுக்கு அவன் வொர்த் இல்லை. அவன் ஃபேமிலி பேக்ரவுண்ட் அவனை விட பிரமாதமா இருக்கு.”

“நாம என்ன ஸ்டோன் ஏஜ்ல இருக்கோமா? லவ் பண்றேன்னு தெரிஞ்ச உடனே அதை எப்படி கலைக்கிறதுன்னு ஆயிரம் வழி கண்டுபிடிக்கிறீங்க. நான் பிரபாவ தான் லவ் பண்றேன். அவன் ஃபேமிலி பத்தி எனக்கு அக்கறை இல்லை.”

“உனக்கு அக்கறை இல்லாமல் இருக்கலாம்.‌ ஆனால் கல்யாணம் பண்ணி உறவுக்காரங்களா வரும் போது எல்லாத்தையும் தான் யோசிக்கணும். நிச்சயமா உனக்கு அவன் செட் ஆக மாட்டான். ஒழுங்கா அவனை மறந்துட்டு படிக்கிற வழிய மட்டும் பாரு. உன் கல்யாணத்தை எப்போ யார் கூட செய்யறதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்.”

“அப்படி எல்லாம் நீ சொல்றேன்னு அவனை மறந்துட்டு இருக்க முடியாது. லவ் பண்றதால என் படிப்பு ஒரு துளி கூட அஃபக்ட் ஆகல.அப்புறம், நான் ஒன்னும் நாளைக்கே கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்கவே இல்லை. என் படிப்பு முடிஞ்சதும் தான் கல்யாணம்னு தெளிவா இருக்கேன்.”

“ஓ.. ரொம்ப தெளிவா தான் இருக்க. உன்னைப் படிக்க வைக்க அப்பா அம்மா வேணும். காரியம் முடிஞ்சதும் அவங்கள கழட்டி விட்டுட்டுவ. சூப்பர்.. இந்த ஐடியாவ அந்தப் பிரபாகரன் கொடுத்தானா? படிக்கும் போதே கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா இங்கே இருந்து எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சிருக்கும். அதான், நல்லா பயின்று விட்டு வச்சிருக்கான். பக்கா மாஸ்டர் ப்ளானா இருக்கே.. சபாஷ்“

நக்கலுடன் கைதட்டிச் சிரித்த சஞ்சயின் வேறொரு பரரிமாணத்தைப் பார்த்த அவனது பெற்றோர் திகைக்க, சம்யுக்தா அண்ணனின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் நின்றாள். இதுவரை அவனது வயதுக்கும் பதவிக்கும் மரியாதை கொடுத்து வேடிக்கை பார்த்த கண்ணன் இதற்கு மேல் மகனைப் பேசவிடுவது நல்லதல்ல என்று உணர்ந்து கொண்டார்.

“போதும் சஞ்சய். சம்யூ லவ் பண்றான்னு தெரிஞ்சதும் ஒரு ஷாக் வந்தது உண்மைதான். அதனால் தான், ஒரு அண்ணனா அவ காட்டுற ஆள் நல்லவனா கெட்டவனான்னு பார்த்து முடிவு பண்ணுவேன்னு தான் உன்னை வரச் சொன்னோம். ஆனால் உன் பேச்சு சரியில்லை. எங்களுக்கு அப்புறம் அவளுக்கு எல்லாமா இருக்க வேண்டியவன் நீ. இன்னைக்கு நீ பேசினதைப் பார்த்தால் அதுக்கு வாய்ப்பு இல்லைன்னு தெரியுது. நானோ உங்க அம்மாவோ காதலுக்கு எதிரி இல்லை. இன் ஃபேக்ட், எங்க கல்யாணமே லவ் மேரேஜ் தான். சம்யூவோட கல்யாணம் பத்தி நாங்க முடிவு பண்ணிக்கிறோம். இதுக்கு மேல நீ பேசாத.”

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிய தந்தையை முடிந்த வரை முறைத்தான் சஞ்சய்.

“என்னப்பா இப்படி பேசறீங்க? நான் அவளுக்கு அண்ணன்.அவ மேல அக்கறை இல்லாமலா இவ்வளவு பேசறேன்.”

“ஹான்.. பெரிய அக்கறை.. நான் ஏதோ பிரபா கூட சேர்ந்து ஸ்கீம் பண்ணி சொத்தை எல்லாம் ஆட்டைய போடற மாதிரி சொன்ன.. “

“அப்பா! அவளைப் பேச வேண்டாம்னு சொல்லுங்க. அவளைப் பத்தி, அவளோட லைஃப் ஸ்டைல் பத்தி எல்லாம் நல்லா தெரிஞ்சவன் நான். ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா கஷ்டப்படக் கூடாதேன்னு பேசறேன். அதைப் புரிஞ்சுக்க முயற்சியே பண்ணலேன்னா என்ன பண்றது? பட்டால் தான் புத்தி வரும்னா நாம என்ன செய்ய? இதுக்கு மேல என் கிட்ட எதுவும் அவளைப் பத்தி சொல்லாதீங்க” என்று எழுந்து சென்று விட்டான் சஞ்சய். போகும் போது அவன் பார்த்த பார்வை சம்யுக்தாவுக்குள் ஒரு பயத்தை விளைவித்தது.

அன்றைய பஞ்சாயத்து அத்துடன் முடிந்தது. ஆனால் மறுநாளே மீண்டும் கூடிய பஞ்சாயத்தின் முடிவில் சம்யுக்தா பிரபாகரனை அவசரமாக அழைத்தாள்.

********
பிரபாகரனின் இல்லத்தில் இரண்டு நாட்களாக பெருத்த அமைதி நிலவியது. யாரும் யாருடனும் பேசவே இல்லை. அப்பத்தா, பேரனின் கல்யாணத்தை எப்படியாவது சீக்கிரம் நடத்தி விடவேண்டும் என்று அதற்கான வழிகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

முருகானந்தம், காலையில் எழுந்து வெளியே போனால் தூங்குவதற்குத் தான் வீட்டுக்கு வந்தார். வீட்டில் தண்ணீர் கூட குடிக்கவில்லை.

“என் பேரன் பொறுப்பா நிமிர்ந்து நிக்கலேன்னா ஒரு வேளை சோறு கிடைச்சிருக்காது நமக்கு. பதினேழு வயசுல இருந்து வீட்டுக்காக மாடா உழைச்சு கொட்டறான். சொல்லப் போனால் அவன் தான் இந்த குடும்பத் தலைவன். ரேஷன் கார்டுல தலைவன்னனு போட்ட ஆளெல்லாம் தலைவனாகிவிட முடியாது. அவ்வளவு ரோஷம் இருந்தா உழைச்சு சாப்பிட வேண்டியது தானே.”

அப்பத்தா மகனைக் கடுமையாகச் சாடியிருந்தார். இன்னும் கூட பேசியிருப்பார். பிரபாகரன் போதும் என்பது போல் சைகை செய்ததால் நிறுத்திக் கொண்டார். அப்போதிருந்தே முருகானந்தம் வீட்டில் தண்ணீர் கூட குடிக்கவில்லை. தூங்கவும் குளிக்கவும் மட்டுமே வீட்டுக்கு வந்தார். அப்படி வரும் போது மகனைப் பார்க்க நேர்ந்தால் மறக்காமல் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அவரது மகனோ எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

காமாட்சி, தான் உண்டு தன் சமையலறை உண்டு என்று இருந்தார். மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள். எப்படி தீர்வு காண்பது என்று அறியாமல் திகைத்தார். கணவரின் நடவடிக்கைகள் அவருக்கு புதிதல்ல, அதனால் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மகனை நினைக்கும் போது இனம் தெரியாத ஒரு உணர்வு அவரை ஆட்கொண்டது.

பிரபாகரன் சாப்பிட வரும் போது அமைதியாக பரிமாறிவிட்டுப் போனார்.

“அம்மா! ஏம்மா, இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி இருக்கீங்க? நான் எதுவும் தப்பா பண்ணிடலை. புரிஞ்சுக்கோங்க” என்று மகன் சொன்ன சமாதான வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போனது.

மலர்விழி அண்ணனின் காதலை அறிந்தது முதல் சந்தொஷமாக உலவிக் கொண்டிருந்தாள். எப்போதும் போல அண்ணனை வம்பிழுத்து அவனை உற்சாகமாக வைக்க முயன்றாள்.

“ம்ச். ஃபளவர்! பேசாமல் போ. என் கோபத்தைக் கிளறாத” என்று எரிச்சல் பட்டவனை விநோதமாகப் பார்த்து வைத்தாள்.

“அட! இப்போ எந்த கப்பல் கவுந்து போச்சுன்னு இப்படி இருக்க? என் கிட்ட சொல்லுங்க ப்ரதர். இந்த மலர்விழி இருக்க பயமேன்”

“இந்த அம்மாவுக்கு என்ன ஆச்சு மலரு. ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காங்க. லவ் பண்றேன்னு தானே சொல்லி இருக்கேன். கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வரலையே.”

“ஓ.. உனக்கு அப்படி ஒரு ஐடியா வேற இருக்கா.. ஆனால் மிஸ்டர்.பிரபாகரன்! நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க. நீங்க சரியான அம்மா பைத்தியம். வரப் போற அண்ணி ரொம்ப பாவம்.”

“ஏய் என்ன வந்தா?”

“சே சே. நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஜோக்ஸ் அபார்ட். நம்ம அம்மா கொஞ்சம் கொஞ்சமா மாமியார் ரோலுக்கு ரெடி ஆகறாங்க. அதான் இந்த மூட் அவுட். யூ டோண்ட் வொர்ரி.”

“எதை வச்சு அப்படி சொல்ற? நம்ம அம்மா சராசரி மாமியார் மாதிரி இருக்க மாட்டாங்க. அவங்கள பத்தி இப்படிப் பேசாத.. “

“அட மக்கு அண்ணா! ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. அம்மா எல்லாம் நல்லவங்க தான். ஆனால் இந்த மாமியார்னு ஒரு பதவி வரும் போது அவங்களுக்கு ஒரு இன்செக்யூர் ஃபீலிங் வந்துடுது. வீட்டுல, நம்ம மகன் மேல் நமக்கு உள்ள உரிமை போயிடுமோன்னு ஒரு பயம், அந்த பயம் தான் அவங்கள வேற மாதிரி நடக்க வைக்குது.”

“அப்படியாங்க மேடம்.. நீங்க இன்ஜினியரிங் தானே படிச்சீங்க. எப்போ டாக்டர் ஆனீங்க?”

“இது பேசிக் லேடீஸ் மென்டாலிட்டி. இதைத் தெரிஞ்சுக்க டாக்டர் ஆகணும்ன்னு அவசியம் இல்லை. நீ எதுக்கும் கவலைப் படாதே. அம்மா தானா சரியாகிடுவாங்க.”

அண்ணனைச் சமாதானம் செய்த மலர்விழிக்கோ தங்கையின் பேச்சில் சற்று தெளிந்த அண்ணனுக்கோ காமாட்சியின் மனக் குழப்பத்தின் உண்மை காரணம் என்ன என்று தெரியவில்லை. அதனால் பிரபாகரனின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

“ம்ம்.. பார்க்கலாம். டாக்டர் மேடம் சொன்னபடி நடந்தால் எனக்கு சந்தோஷம் தான்” பேசிக்கொண்டிருந்த போதே பிரபாகரனின் மொபைல் அழைத்தது. மறுமுனையில் சம்யுக்தா.

“பிரபா! நாளைக்கே உங்க அப்பா அம்மா கூட வந்து வீட்டுல பேசுங்க. சீக்கிரமே நம்ம கல்யாணம் நடக்கணும்.”

“ஹேய்.. சம்யூ! என்ன ஆச்சு?” இவன் பதற மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

*******
பிரபாகரனும் சஞ்சயும் படையப்பாவும் நீலாம்பரியும் போல எதிரெதிரே அமர்ந்து முறைத்துக் கொண்டிருந்தார்கள். பிரபாகரன் ஒரு பக்கம் காமாட்சியும் அவரருகில் முருகானந்தமும் இருந்தனர். மறுபக்கம் மலர்விழி அண்ணனுடன் கை கோர்த்து அமர்ந்திருந்தாள். அவளருகில் அப்பத்தா.

சஞ்சய் அருகில் கண்ணன் அமர்ந்திருக்க பாரதி சம்யுக்தாவை அழைத்து வந்து கண்ணன் அருகில் அமர்த்தி தானும் அமர்ந்து கொண்டார். வந்தவர்களைக் கடனே என்று தலையசைத்து வரவேற்று வைத்ததில் முருகானந்தம் கடும் கோபத்தில் இருந்தார். ஆனாலும் வாய் திறந்து எதையும் பேசவில்லை.

“அவன் படிக்கணும்னு ஆசைப்பட்டு கேட்டதைத் தான் நடத்தி வைக்கல. இது அவன் வாழ்க்கைப் பிரச்சினை. இதைக் கூட செய்யலேன்னா அப்புறம் என்னத்துக்கு புள்ள பெத்துக்கணும்? பெத்தவனா லட்சணமா எங்க கூட வர்ற. அங்க வந்து வாயைத் திறந்து எதுவும் பேசக் கூடாது. என் பேரன் கல்யாணம், என் பொறுப்பு” இப்படி ஏதேதோ பேசி மகனை பொம்மையாக்கி வைத்த பெருமை அப்பத்தாவைச் சேரும்.

“அடுத்த இருபது நாளில் ஒரு முகூர்த்தம் இருக்கு. மண்டபமும் ஃப்ரீயா இருக்கு. ஒரு குறையும் இல்லாமல் எங்க பொண்ணு கல்யாணம் நடத்தி வைக்கிறோம். கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயம் வச்சுக்கலாம்” என்று எந்த விதமான முகமனும் இல்லாமல் அறிவித்தார் கண்ணன்.

சரி என்று சொல்லி விட்டு அப்பத்தா திருமண விஷயங்களைப் பேச ஆரம்பிக்க சஞ்சய் அவருக்கு பதில் சொல்ல ஒரு கட்டத்தில் எழுந்து நின்று விட்டான் பிரபாகரன். அவனைத் தொடர்ந்து அவனது குடும்பத்தாரும் எழுந்து நின்றனர்.

“மத்த விஷயம் எல்லாம் சம்யூ கிட்ட ஃபோன்ல சொல்லிடறேன். நீங்க ஏதாவது சொல்லணும்னாலும் அவ கிட்ட சொல்லிடுங்க. நாங்க கிளம்பறோம்” தண்ணீர் கூடக் குடிக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அதன் பிறகு பத்திரிகையில் ஆரம்பித்து திருமணம் பற்றிய எல்லா விஷயங்களையும் மணமக்கள் இருவரும் மொபைலில் பரிமாறிக்கொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு இருவருக்கும் பல விஷயங்களில் முட்டிக் கொண்டது. இப்படியே திருமண நாளும் வந்து சேர்ந்தது.

தேனி நகரின் மையத்தில் இருந்த அந்தக் கல்யாண மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

இவர்களுக்கெல்லாம் கழுத்து வலிக்காதா என்று நினைக்கும்படி பெண்கள் அனைவரும் நகைக்கடைகளாக வலம் வந்தார்கள். அவர்களது பட்டுப் புடவைகள் எல்லாம் பாரம்பரியத்தைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவர்களுக்கு நிகராக ஆண்களும் தங்கள் செல்வாக்கைத் தங்கள் கையிலும் கழுத்திலும் வெளிப்படுத்தினர்.

சொந்த பந்தங்கள் கூடினால் கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும். ஒரு பக்கம் இன்றைய வழக்கப்படி இளையோர்களின் ஆட்டமும் பாட்டமும் அரங்கேறியது.

விருந்தினர் அனைவரும் சந்தோஷமாக இருக்க மேடையில் இருந்தவர்களின் முகம் சந்தோஷத்தைத் தொலைத்திருந்தது. மணமக்கள் கடனே என்று வந்தவர்களை வரவேற்று சிரித்து வைத்தனர். அவர்களது குடும்பத்தினரும் நன்றாக நடித்து விழாவைச் சிறப்பித்தனர். இரு குடும்பத்தாரும் தப்பித் தவறிக் கூட நேரில் பார்த்துக் கொள்ளவில்லை.
அப்படி பார்க்க நேர்ந்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போனார்கள்.

வரவேற்பு தான் இந்த விதமாக நடந்தது என்றால் திருமண நாளும் அப்படியே விடிந்தது. குறித்த முகூர்த்த நேரமும் நெருங்கியது.

நடந்த ஒவ்வொரு சடங்கும் இரண்டு வீட்டின் வழக்கப்படி தனித்தனியாக நடந்தேறியது. தாலி கட்டும் வைபவமும் அப்படியே. புரோகிதர் வந்து ஹோமம் வளர்த்து மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் கோர்த்து மூன்றாவது முடிச்சை நாத்தனார் போடுவது தான் எங்கள் வீட்டில் வழக்கம் என்று அப்பத்தா ஸ்ட்ரிக்டாகச் சொல்லி இருக்க, எங்க பக்கம் பெரியவங்க ஆசிர்வாதம் செஞ்சு கொடுத்து கொடி போடுவது தான் வழக்கம் என்று சஞ்சய் பதில் கொடுத்திருந்தான்.

அப்படியே இரு வீட்டார் வழக்கப்படி பிரபாகரனும் சம்யுக்தா வரும் கணவன் மனைவி என்றானார்கள். நாத்தனார் முடிச்சு போட்ட மலர்விழி சம்யுக்தாவின் கன்னத்தில் முத்தமிட்டு அண்ணனின் முறைப்புக்கு ஆளானாள்.

கல்யாண சடங்குகள் முடிந்து மணமக்கள் கிளம்பும் நேரம் வந்தது. இதிலும் இரு வீட்டிலும் வேறு வேறு வழக்கம் இருந்தது. சம்யுக்தா வீட்டில் மணமக்கள் பெண்ணின் வீட்டில் தான் திருமண இரவன்று தங்குவது வழக்கம்.
பிரபாகரனின் வீட்டில் அப்படியே தலைகீழாக நடப்பது வழக்கம். மற்ற விஷயங்களை எல்லாம் முன்பே தெளிவாகப் பேசிய இரு வீட்டாரும் இதைப் பற்றி பேசிக்கொள்ளவே இல்லை.

இப்போது ஜெயிக்கப் போவது யாரு என்று மணமக்கள் இருவரும் வேடிக்கை பார்க்க தயாராக சம்யுக்தாவின் பெற்றோர் முதலில் பேசினார்கள். பேச்சின் முடிவில் ஒரு கூடை நெருப்பை அள்ளித் தன் தலையில் கொட்டிவிட்டது போல துடித்துப் போனாள் சம்யுக்தா.





 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
64
வாழ்த்தாவிட்டாலும் அமைதியாக இருந்திருக்கலாம். ஏன் இவ்வளவு வெறுப்பு.
 
Last edited:

Lakshmi

Active member
Joined
Jun 19, 2024
Messages
157
இது என்ன பெத்த பொண்ணுக்கு கடனே என்று கல்யாணம் செய்வது.
 
Top