• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு - 19

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
பகலிரவு பல கனவு -19

சரண்யா சென்று பல நிமிடங்கள் கடந்தும் மூவரும் வாய் திறந்து எதையும் பேசவில்லை. பெற்றோர் பேசுவார்கள் என்று சம்யுக்தா இருக்க, பாரதி கணவர் பேசுவார் என்று அவரைப் பார்க்க கண்ணனின் சிந்தனையோ எங்கோ இருந்தது.

இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவின் மனதில் சின்சான் வந்து, ‘அமைதி அமைதி அமைதியோ அமைதி… ‘ என்று கூவினான். இருக்கும் சூழ்நிலை மறந்து வாய்விட்டு சிரித்தாள் அவள்.

“சம்யூஊஊஊஊ” என்று பாரதியின் அதட்டல் அவளை பூலோகம் அழைத்து வந்தது.

“சாரி மா.”

“ம்ம். உன் சாரிய பத்திரமா வச்சுக்கோ. உன் பர்த்டேன்னு உங்க அப்பா சர்ப்ரைஸ் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனால் வேறு ஏதோ சீரியஸான விஷயம் இருக்குன்னு இப்போ புரியுது. இன்னைக்கு எங்க போன, யார் கூட போனேன்னு எனக்கு தெரிஞ்சாகணும்.”

“ம்மா! அது.. வந்து…. “

“போதும் சம்யூ. உனக்குத் தேவையான அளவு ஃப்ரீடம் கொடுத்திருக்கோம். அதை மிஸ்யூஸ் பண்ண மாட்டேன்ற நம்பிக்கைல தான் ஃப்ரண்ட்ஸோட வெளியே போறேன்னு சொன்ன போது நான் கேள்வியே கேட்காமல் சரின்னு சொன்னேன். இன்னைக்கு மட்டும் இல்லை, என்னைக்குமே கேட்டதில்லை.
ஆனால் எங்க நம்பிக்கை தப்புன்னு கொஞ்ச நேரம் முன்னாடி சரண்யா பேசினதுல இருந்து தெரியுது.”

“அம்மாஆஆஆ!” நம்பிக்கை வைத்ததே தவறு என்று பேசியதை சம்யுக்தாவால் தாங்க முடியாமல் போனது. என்ன சொல்லித் தன் நிலையைப் புரிய வைப்பது என்றும் புரியவில்லை. தலைகுனிந்து அமர்ந்து கொண்டாள்.

“எதுக்கு இத்தனை ஷாக்? தனியா பர்த்டே கொண்டாடற அளவுக்கு முக்கியமான ஆள். அதுவும் பைக்ல தைரியமா மேகமலை வரைக்கும் போயிருக்க. அந்தப் பையன் ஃப்ரண்டா மட்டும் இருந்திருந்தா அப்பாவைப் பார்த்த உடனே சொல்லி இருப்ப. இது அதையும் தாண்டின ரிலேஷன்ஷிப் அப்படித்தானே?”

“அம்மா!! அப்படி எல்லாம் கிடையாது. நான் உங்க கிட்ட எதையும் மறைக்கணும்னு நினைக்கலை. நம்புங்கம்மா. அவன் கிட்ட பேசிட்டு சொல்லலாம்னு தான் நினைச்சேன். இன்னைக்கு தான் முதல் தடவையா இரண்டு பேரும் வெளியே போனோம். இது வரைக்கும் அப்படி எல்லாம் எங்கேயும் ஊர் சுத்தலம்மா.”

“ஓ.. அப்போ எதுக்கு மேகமலைய சூஸ் பண்ணின. அப்பா அங்க இருப்பாங்கன்னு தெரியாதா?”

“அம்மா! ப்ளீஸ்! எங்கேயாவது போகலாம்னு முடிவு செஞ்ச போது எனக்கு மேகமலை தான் ஞாபகம் வந்தது. அப்பா அங்க இருப்பாங்கன்னு நல்லாவே தெரியும். பார்த்தால் பேசணும்னு தான் நினைச்சோம். ஆனால் அங்கே சூழ்நிலை சரியில்லை. அப்பா கிட்ட பேசவே முடியலை. இல்லேன்னா பிரபாவ இன்ட்ரோ பண்ணி இருப்பேன்.” வார்த்தைகள் எல்லாம் நன்றாகவே கோர்வையாக வந்தது. ஆனால் குரல் தான் பாதாளம் நோக்கிப் பாய்ந்து விட்டது.

“என்ன சத்தமே இல்லாம முணுமுணுப்பு. உண்மைய உரக்கச் சொல்லணும்னு சொல்லுவியே, இந்த விஷயத்தில ஏன் தயக்கம்?”

“நானே எப்படி சொல்றதுன்னு… “

இதுவரை தாயும் மகளும் பேசிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், “நீ உன் வாயால தான் சொல்லணும் சம்யூ. இதுக்கெல்லாம் சப்ஸ்டியூட் வைக்க முடியாது. எங்க கிட்ட சொல்லாமலே இருந்திருடலாம்னு நினைச்சியா?” என்று இடையே புகுந்தார்.

“அப்படி இல்லை டாடி. என் படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்னு நான் நினைச்சேன். ஆனால் பிரபா வீட்டுல கல்யாணப் பேச்சு ரொம்ப நாளா நடக்குதுன்னு சொன்னான். சீக்கிரம் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிடலாம்னு சொன்னான். அவனும் என் கூட வந்து உங்களைப் பார்க்கறேன்னு சொன்னான். அதான்…”

“நல்லா சமாளிக்கிற.. சரி அந்தப் பையனைப் பத்தின டீடெயில்ஸ் சொல்லு. யார் வீட்டுப் பையன்? கூட படிக்கிறவனா? அவங்க வீட்டில ரொம்ப நாளா கல்யாணம் பேசுறாங்கன்னா கூட படிக்கிறவனா இருக்க முடியாது. சீனியரா? எப்படி பழக்கம்? எத்தனை நாளா பழக்கம்?”

பாய்ந்து வந்த கேள்விக்கணைகளை கஷ்டப்பட்டு உள்வாங்கிய சம்யுக்தா எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் சில நொடிகள் முழித்தாள்.

“பிரபா எங்க காலேஜ் இல்ல டாடி. நீட் கோச்சிங் போகும் போது பழக்கம்.”

“ஓ.. அப்போ அவனும் டாக்டர் தான். இதைச் சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம்? தைரியமா சொல்லலாமே“

“அவன் டாக்டர் இல்லை டாடி. சொந்தமா பிஸினஸ் பண்றான்.”

“பிஸினஸா? அதுவம் சரி தான். நம்ம ஆளுங்க பிஸினஸ்ல தான் போவாங்க.”

“பிரபா நம்ம ஆளுங்க இல்லை.. அவன்.. xxxx “

“வாட்! நம்ம ஆளுங்க இல்லையா?” இடையே பாரதி குரல் கொடுத்து தனது இருப்பை உணர்த்தினார்.

“அம்மா!! எந்த காலத்தில இருக்கீங்க? 2025ல இதெல்லாம் ஒரு விஷயமா?”

“உனக்கு விஷயமா இல்லாம இருக்கலாம். எங்களுக்கு அதுவும் முக்கியம் தான். எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியது வருமோ? எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலே ஊர் வழக்கம், தெரு வழக்கம், வீட்டு வழக்கம்னு ஏகப்பட்ட பிரச்சினை வருது. இதுல வேற வேற ஆளுங்கன்னா எவ்வளவு கஷ்டம்?”

“அம்மா! லவ் பண்ணும் போது நீங்க என்ன ஆளுங்கன்னு கேட்டுட்டா லவ் பண்ணனும். விட்டா, ஜாதகப் பொருத்தம் பார்த்து எல்லாம் சரியா இருந்தா தான் லவ்வே பண்ணனும்னு சொல்லுவீங்க போலிருக்கே.”

“அப்படி சொல்லல சம்யூ. லவ் பண்ண எதுவும் தேவையில்லை.‌ ஆனால் கல்யாணம் பண்ண எல்லாம் தேவை. உனக்கு இப்போ புரியாது. பட்டால் தான் தெரியும்.”

“அம்மா!! என்னம்மா இப்படி சாபம் கொடுக்கிறீங்க?”

“ம்ச் பாரதி! எதுக்கு இவ்வளவு பேசற? அம்மா சாபம் கொடுக்கல சம்யு. எங்க அனுபவம் அப்படி, அது தான் அப்படிப் பேச வச்சிடுச்சு.”

“ஹான்.. உங்க அனுபவம் தான் எனக்குத் தெரியுமே. அம்மா பிறந்தது வேற கம்யூனிட்டி. ஆனால் அவங்கள சட்டப்படி அடாப்ட் பண்ணினவங்க வேற கம்யூனிட்டி. நீங்க சொல்ற நியாயப்படி பார்த்தா அடாப்ட் பண்ண கம்யூனிட்டில தான் கல்யாணம் பண்ணி இருக்கணும். நீங்க லவ் பண்ணதால, உங்க கம்யூனிட்டியும் அவங்க பிறந்த கம்யூனிட்டியும் ஒன்னுன்னு சமாளிச்சு கல்யாணம் பண்ணி இருக்கீங்க. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே அப்படி செஞ்சவங்க என்னை எதுக்கு இத்தனை கேள்வி கேட்கறீங்க?”

ஆவேசமாக வந்த சம்யுக்தாவின் வார்த்தைகளில் பாரதியும் கண்ணனும் பேச்சிழந்து போயினர். எப்போதும் பிள்ளைகளைக் கடிந்து பேசாதவர்கள், இன்றும் மற்றவர்களைப் போல் விஷயம் அறிந்ததும் கோபப்பட்டு வார்த்தைகளை விடாமல் நிதானமாகவே பேச ஆரம்பித்தார்கள்.

மகளது வாழ்க்கை என்று வரும் போது பெற்றவர்களாக பலவற்றையும் ஆய்ந்து தெளிவதில் தவறொன்றும் இல்லையே. சம்யுக்தாவும் இதனை நன்கு அறிவாள். ஆனாலும் அவளது வயதும் காதல் கை கூட வேண்டும் என்ற கவலையும் சேர்ந்து கொள்ள சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டாள். பெற்றோரின் திகைத்த முகம் பார்த்தவுடனே அவளது தவறு புரிந்தது.

“சாரிம்மா! சாரி டாடி! நான் …”

“சரி.. விடு. எங்க தப்பு தான். பசங்க கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணியிருக்கக் கூடாது. இப்போ அந்தப் பையனோட டீடெயில்ஸ் சொல்லு. நீ சொல்லி முடிக்கிற வரைக்கும் நாங்க எதுவும் பேசல. ஒரேயொரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோ, நீ கை காட்டுறதால மட்டுமே அந்தப் பையனுக்கு நாங்க ஓகே சொல்லிடுவோம்னு நினைக்காத. எங்களுக்கும் ஓகேவா இருக்கணும்” என்ற தந்தையின் வார்த்தைகள் சற்று பயம் கொடுத்தது.

“அவன் பேர் பிரபாகரன். பெரிய விவசாய குடும்பம். அவங்க வீட்டில அம்மா, அப்பா, தங்கச்சி அப்புறம் அவங்க அப்பத்தா இருக்காங்க. தங்கச்சி xxx காலேஜ்ல பிஈ படிக்கிறாங்க.‌ கொடைக்கானல் கான்வென்ட்ல ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சான். டென்த்ல ஆல் இண்டியா லெவல்ல தர்ட். இப்போ, ப்ரூட் ஷாப் அன்ட் ஜுஸ் ஷாப் வச்சிருக்கான். கம்பத்தில ஃபார்ம் இருக்கு. அவங்க கடைக்கெல்லாம் அங்க இருந்து தான் ஃப்ரூட்ஸ் வருது. பிரபா ஜுஸ் ஷாப்புக்கு தேனி, கம்பம் அன்ட் போடில மொத்தம் ஆறு ப்ராஞ்ச் இருக்கு. எங்க காலேஜ்ல கூட ஒரு ப்ராஞ்ச் இருக்கு.” பேச்சு வழக்கில் அவன் கொடைக்கானல் கான்வென்டில் படித்தவன் என்று பதிவு செய்தவள் கவனமாக அடுத்த வார்த்தைகளைக் கோர்த்தாள்.

ஆனாலும் பெண்ணைப் பெற்றவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.

“கொடைக்கானல் கான்வென்டா.. ஸ்கூல்ல நல்லா தான் படிச்சிருக்கார். காலேஜ் எங்க முடிச்சாராம்? என்ன மேஜர்?”

“டாடி… அது வந்து… “

“என்னம்மா தெரியாதா? கான்வென்ட் விவரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க, இது தெரியாதா?”

“தெரியும் டாடி” என்றவளின் குரல் தொண்டையை விட்டு வெளியே வருவேனா என்றது.

“அப்புறம் என்ன.. சொல்ல வேண்டியது தானே.”

“அவன் காலேஜ் எல்லாம் போகல டாடி. ஃபேமிலி சிச்சுவேஷனால ப்ளஸ் டூவோட படிப்பு நிப்பாட்டிட்டான்.” சொல்லி விட்டு பெற்றோரின் முகத்தில் வரும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“பொண்ண பிஈ படிக்க வைக்கிறாங்க. பையனுக்கு வசதி இல்லையா?”

“அப்படி இல்ல டாடி. அப்போ ஏதோ ஃபைனான்ஸ் ப்ராப்ளம் போல. பிரபா சம்பாதிக்க ஆரம்பிச்சத்துக்கு அப்புறம் தான் பழைய ஸ்டேட்ஸ் வந்திருக்கு.”

“ஹூம்.. பார்க்கலாம்.. இப்போ போய் ரெஸ்ட் எடு” விசாரணை முடிந்தது நீ போகலாம் என்று சைகை காட்டிய கண்ணன் மனைவியிடம் திரும்பினார்.

“பாரதி சஞ்சய் இந்த வீக் என்ட் ஃப்ரீயா கேளு. அப்படியே இந்தப் பையனோட டீடெயில்ஸ் கொடுத்து விசாரிக்க சொல்லு.”

“எங்க, நீங்க பார்த்திருக்கீங்களே.. எப்படி இருக்கான்?”

கண்ணனின் மனதில் அவசரமாக தனது முடியைச் சரி செய்த பிரபாகரனின் முகம் வந்து போனது.

“ம்ம்.. இருக்கான்.. “

“என்ன இப்படிச் சொல்றீங்க? ஒரு ஆளைப் பார்த்தாலே சரியா ஜட்ஜ் பண்ணுவீங்க? அப்போ, இவன் சரியில்லையா?”

“அப்படி இல்லை பாரதி. இந்த காலத்துப் பசங்க ஸ்டைல்னு என்னவெல்லாமோ பண்றாங்க. இவனும் நீளமா முடி வளர்த்து வச்சிருக்கான். ஹேர் கலர் பண்ணியிருக்கான், ஒரு கலரா இருந்தா பரவால்ல.. அதுல நாலஞ்சு கலர் இருக்கு. அது தப்புன்னு நாம சொல்ல முடியாது. ஆனாலும் மாப்பிள்ளைன்னு பார்த்தா ஏத்துக்க கஷ்டமா இருக்கு.”

“நீங்க இப்படி எல்லாம் யாரையும் பேச மாட்டீங்களே. பேசறவங்களையும் திட்டுவீஙக. உங்க பொண்ணுன்னு வரும் போது வலிக்குதோ?” பாரதியின் குரலில் கேலி இருந்தது.

“இருக்காதா..‌ ஏன் உனக்கு இல்லையா? நாம் லவ் பண்ணும் போது தப்புன்னு தோணாத விஷயம் எல்லாம் இப்போ தப்பா தெரியுதே.”

“அதானே.. நமக்கு வயசாகிடுச்சு கண்ணன் சார். இரண்டு பசங்களுக்கும் கல்யாண வயசு வந்தாச்சு.”

“பொண்ணு பரவாயில்லை.. உள்ளூர் மாப்பிள்ளைய பார்த்திருக்கா. பையன் என்ன செய்யப் போறானோ?”

“அவன் சின்ன வயசுல இருந்தே ஸ்டேடஸ் பார்க்கிறவன். அவனுக்கு ஈக்வலா தான் ஆளைப் பிடிப்பான்.”

“சம்யு விஷயத்தில் அவனை நினைச்சா தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு. என்ன சொல்லப் போறானோ?.”

“அவன் சரின்னு சொல்றான்னே வச்சிப்போம். இவ சொல்வதைப் பார்த்தால் அந்தப் பையன் குடும்பம் பழமைல ஊறினவங்க மாதிரி தெரியுது. இவ எப்படி அங்க போய் அட்ஜஸ்ட் பண்ணி இருப்பா. ரொம்ப கஷ்டம். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்ற பாரதியின் குரலில் தாய்க்கே உரித்தான கவலைகள்.

“கரெக்ட் தான். நாலு வருஷம் பழக்கம்னு சொல்றா. சரண்யா சொல்வதைப் பார்த்தால் அவளே அட்வைஸ் பண்ணி இருப்பா போலிருக்கே. நாமளும் சொல்லிப் பார்ப்போம். அதுக்கு மேல பிடிவாதமா இருந்தால் அடுத்து என்னன்னு யோசிக்கலாம்” என்று அப்போதைக்கு மனைவியைச் சமாதானம் செய்து வைத்தார் கண்ணன். அவருக்குமே பிரபாகரனைப் பற்றிய தகவல்கள் திருப்தியாக இல்லை.

இவர்கள் பயந்த மாதிரியே சனிக்கிழமை காலையில் வந்து இறங்கிய சஞ்சய் தங்கையின் கல்யாண கனவில் ஒரு மூட்டை மணலை அள்ளிப் போட்டான்.

“வெறும் எம்பிபிஎஸ் வச்சிட்டு எதுவும் பண்ண முடியாது. பீடியாடிக் சர்ஜன் ஆகணும்ன்னு சொல்லுவியே சம்யு. அதெல்லாம் என்ன ஆச்சு? நீ சொல்ற ஜுஸ் கடைக்காரன் படிக்க வைப்பானா இல்லை அவனோட சேர்ந்து நீயும் ஜுஸ் போடுவியா?”

“என்னண்ணா இப்படி பேசுற?”

“வேற எப்படி பேசச் சொல்ற? அவனையெல்லாம் எனக்கு ப்ரதர் இன் லான்னு சொல்லிக்க முடியாது. ஒழுங்கா அவனை மறந்துட்டு படிக்கிற வழியைப் பாரு. இல்லேன்னா எங்களை மறந்துடு.”

“சஞ்சய்.. என்ன சொல்ற நீ?”

“ஏம்பா.. உங்க பொண்ணு பார்த்திருக்க மாப்பிள்ளை உங்களுக்கு ஓகேவா. அவனும் அவன் ஹேர் ஸ்டைலும்.. பக்கா ரவுடி மாதிரி இருக்கான். அவனைப் போய்…” மேலும் என்ன பேசி இருப்பானோ, சம்யுக்தா இடை புகுந்தாள்.

“அண்ணா போதும் நிறுத்து. ஒரு மனுஷனை வெளித் தோற்றம் பார்த்து எடை போடக் கூடாதுன்னு உனக்கு எப்போ புரியும்? இப்படித் தான் க்ரிமினல்ஸ கண்டு பிடிக்கிறியா? பிரபாவ பத்தி உனக்கு என்ன தெரியும்? அவனோட நெட் வொர்த் என்ன தெரியுமா? மன்ந்த்லி இன்கம் எவ்வளவு தெரியுமா? ஹார்ட் வொர்க் பண்ணினா என்ன ரிசல்ட் கிடைக்கும்னு அவனைப் பார்த்து தெரிஞ்சுக்கணும். அப்பா பணத்துல படிக்கிற நமக்கு அவனைப் பத்தி பேசறதுக்கு தகுதியே கிடையாது.”

அவள் தன்னையும் சேர்த்தே பேசினாள் என்பதைப் புறந்தள்ளிய சஞ்சய், “ஓ.. அவனைப் பத்தி பேசறதுக்கு எனக்கு தகுதி இல்லேன்னு சொல்றியா? என் பவர் என்னன்னு காட்டட்டுமா? அப்புறம் நீ இருக்கிற திசையைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்” என்று கர்ஜித்தான். தோளுக்கு மேல் வளர்ந்து பொறுப்பான பதவியில் இருக்கும் மகனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று கண்ணன் திகைத்தார். அவன் பேசிய விதம் பிடிக்காவிட்டாலும் தங்கள் எண்ணமும் அதுவே என்பதால் பெற்றவர்கள் அமைதி காக்க, சம்யுக்தா பொறுமை இழந்தாள்.

விளைவு, இதோ மேடையில் ஜோடியாக பிரபாகரனின் அருகில் மணமகளாக நிற்கிறாள்.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு - 19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom