• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 7

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
308
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 7

உள்ளதை உள்ளபடி
காட்டும் கண்ணாடி
காயங்களையும் வடுக்களையும்
மறைக்காமல் காட்டுகையில்
கடந்தகாலத்தின்
கசப்பான நினைவுகள் எழுந்து
வேதனையைக் கூட்டி
வெறுப்பை விதைக்கின்றன!

பூரணியைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர், அந்த மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் பற்றியும் அங்கே சட்டவிரோதமாகக் குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்வதைப் பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். இப்போது ஒரு குழந்தை அங்கு வேலை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததும் கொந்தளித்து எழுந்தார். குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள்.

அந்தப் பெண் மருத்துவரின் நண்பர் ஒரு சட்ட நிபுணர். குழந்தைகளின் நலனுக்காகவும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு தொண்டு நிறுவனம் அதாவது அரசு சாரா த் தொண்டு நிறுவனம்( NGO- non governmental organization) நடத்திக் கொண்டிருந்தார். உண்மையில் குழந்தைகளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம் என்று நல்ல பெயர் பெற்றிருந்தது. அவர்களுக்கு இந்த நிகழ்வைப் பற்றி புகார் அனுப்பிவிட்டார். அவர்கள் வந்து மசாலா கம்பெனி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம், மருத்துவரின் தோழி ஒருத்தி வெளிநாட்டில் வேலை பார்த்து நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு தாய்நாடு திரும்பியவள், மருத்துவரின் வீட்டில் தங்கியிருந்தாள்.

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக ஏதாவது செய்யத் துடித்துக் கொண்டிருந்தாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்து ஆதரவற்ற மக்களுடன் ஆறுதலாகப் பேசி தைரியம் ஊட்டி வந்தாள். தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வந்தாள். அவருடைய கண்ணில் பட்டாள் பூரணி. படுக்கையில் ஜுரவேகத்தில் பிதற்றிக் கொண்டிருந்த பூரணியைக் கண்டு பதறிப் போனாள் அந்தப் பெண்.

“ சித்தி, வேணாம் சித்தி. எனக்கு ஸ்கூல் போகணும். நெறையப் படிக்கணும். வேலைக்கு அனுப்பாதீங்க சித்தி. அம்மா, என்னை விட்டுட்டு எங்கேம்மா போனீங்க? நீங்க இருக்கற எடத்துக்கு என்னையும் கூட்டிண்டு போங்களேன். இங்கே யாருமே என் கிட்டப் பிரியமா இல்லையே! ” என்று அந்தப் பிஞ்சு புலம்பியதைக் கேட்டு அந்தப் பெண்ணின் உள்ளம் உருகிப் போனது. சிறுமி பிதற்றிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய உள்ளத்தில் குத்தீட்டியாக இறங்கியது. கண்ணீர் தானாகவே வழிந்தது.

“ யார் இந்தக் குழந்தை? யாரு இங்கே கொண்டு வந்து சேத்தாங்க? ” என்று அருகிலிருந்த செவிலியிடம் கேட்டாள்.

“ தெரியலை மேடம். கொண்டு வந்து சேத்தவரங்க அடுத்த நிமிஷமே காணாமப் போயிட்டாங்க” என்று சொல்லிவிட்டாள். தன் தோழியான மருத்துவரிடம் மற்ற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள் அவள். இரண்டு நாட்கள் கழித்து பூரணியின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. அனைத்திற்கும் காரணம் அந்தப் பெண் தான். அருகிலிருந்து கொண்டு பெற்ற தாயைப் போலவே கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.

உடல்நலம் சற்றுத் தேறியதும் தன்னிடம் பிரியம் காட்டிய பெண்ணை, தன்னுடைய அம்மா அனுப்பிய தேவதையாகவே கருதிய பூரணி, தன்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவளிடம் கொட்டி விட்டாள்.
தன்னுடைய அப்பா வெளிநாடு போனது, சித்தியின் வெறுப்பு , தன்னுடைய குட்டித் தம்பி இவற்றோடு தன்னுடைய ஒரே ஃப்ரண்டான மணிமேகலை பற்றிக் கூடச் சொல்லிவிட்டாள். கள்ளமில்லாத அந்தக் குழந்தை உள்ளத்திற்கு எதையும் மறைக்கும் சாமர்த்தியம் இல்லை.

ஒருவழியாக இரண்டு நாட்கள் கழித்து ஆடி அசைந்து சித்தி வந்துசேர்ந்தாள்.

“ ஐயோ, என்னடி பூரணி ஆச்சு? கைக்குழந்தையை வச்சுண்டு என்னால ஒடனே வரமுடியலையே? எதையாவது பண்ணி ஒடம்புக்கு இழுத்து விட்டுண்டுருக்கயே இப்படி? ஜாக்கிரதையா இரு, ஜாக்கிரதையா இருன்னு எத்தனை தடவை படிச்சுப் படிச்சுச் சொன்னேன்! சொன்னதைக் கேக்காம இப்படிப் பண்ணிட்டயே? உங்கப்பா கேட்டார்னா நான் என்ன பதில் சொல்லப் போறேன்? ” என்று செயற்கையாகக் கத்தி அமர்க்களம் செய்து ஓவரா ஸீன் போட்ட சித்தியை , பூரணியின் தேவதைக்குப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. அவளுடைய முதலைப் பிடியிலிருந்து பூரணியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்தாள் அந்த தேவதை.

“ இவ்வளவு அக்கறை இருக்கறவங்க எதுக்கு இந்த கஷ்டமான வேலைக்கு அனுப்பினீங்க? “ சீற்றத்துடன் தெறித்தன தேவதையின் சொற்கள்.

“ என்ன பண்ணறது? வீட்டோட நிலைமை அப்படி? சாப்பாட்டுக்கே ததிங்கிணத்தோம். ரெண்டு கொழந்தைகளை வச்சுண்டு நான் என்ன பண்ணுவேன்? அதுவும் அவளே ஆசைப்பட்டு நான் போகணும்னு ஒத்தைக் காலில் நின்னதுனாலே அனுப்பினேன்”

“ நடந்தது நடந்து போச்சு. இப்போ நான் இந்தக் கொழந்தையை என் கூடக் கூட்டிட்டுப் போய்ப் படிக்க வைக்க ஆசைப்படறேன். உங்க சம்மதம் வேணும் “

“ அது எப்படி சம்மதிக்க முடியும்? இவளோட அப்பாவும் இங்கே இல்லை. நாளைப் பின்ன, எல்லாருமாச் சேந்து என்னை இல்லை குத்தம் சொல்லுவாங்க? முன்னே பின்னே தெரியாதவங்க கூட, எங்களோட கொழந்தையை அதுவும் பெண் குழந்தையை எப்படி அனுப்ப முடியும்? ”

“என்னைப் பத்தி இங்கே இருக்கற டாக்டர் கிட்டக் கேட்டுப் பாருங்க. உத்தரவாதம் தருவாங்க. இந்தப் பொண்ணு வேலைக்குப் போயி எவ்வளவு சம்பாதிப்பாளோ, அவ்வளவு பணத்தை நான் உங்களுக்கு மாசாமாசம் தந்துடறேன். நீங்க எப்போ அவளைத் திருப்பி அனுப்பச் சொல்லறீங்களோ அனுப்பிடறேன்” என்று சொல்ல, சித்தியின் முகம் மலர்ந்து போனது. பணம் என்கிற ஒரு வார்த்தை போதுமே அவளுடைய மனதை வெல்வதற்கு? உடனடியாகச் சம்மதித்து விட்டாள்.

“ இவளோட அப்பா வரும்போது இவளைக் கொண்டு வந்து விட்ருங்கோ. என்னைக் கோச்சுண்டுடுவார் இல்லைன்னா? அப்படியே உங்களோட அட்ரஸ், திடீன்னு கூப்பிடணும்னா பக்கத்துல எங்கேயாவது ஃபோன் இருந்தா அந்த நம்பர்லாம் கொடுத்திருங்கோ” என்று சொல்லித் தான் பொறுப்பானவள் என்று நிரூபிக்க முயற்சி செய்தாள். ஆனால், மனதுக்குள் மகிழ்ச்சி காட்டாறாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

பூரணியின் கடந்த கால நிகழ்வுகளைத் தெரிந்துகொண்ட மணிமேகலை ஆச்சர்யத்தில் உறைந்துபோயிருந்தாள்.

“ பூரணி இப்படில்லாம் கூட நடக்குமா வாழ்க்கையில்? நம்பவே முடியலை. ஆனால், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுன்னு உன் வாழ்க்கையை வச்சுக் கண்டிப்பாய் சொல்லலாம். அப்புறம் என்ன ஆச்சு? நீ உங்கப்பாவைப் பாத்தியா? சித்தி உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாங்களா? அப்புறம் என்ன நடந்தது முழுசாச் சொல்லி முடி. யார் அந்த தேவதை? இப்போ எங்கே இருக்காங்க? ”

“ எனக்கும் கூட இப்ப நினைச்சுப் பாத்தாலும் அதே எண்ணம்தான் வருது. அந்த தேவதை மட்டும் வரலைன்னா, என் கதி என்ன ஆயிருக்குமோன்னு நினைச்சுப் பாத்தாலே ஒடம்பு நடுங்குது”

“ சரி, மீதியைச் சொல்லி முடி. அப்புறம் நான் என்னோட கதையைச் சொல்லறேன்”

“ அப்புறம் என்ன? தேவதை அம்மா என்னை இங்கே கொடைக்கானலுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. என் வாழ்க்கையும் அன்னைலேந்து சீராப் போயிட்டு இருக்கு”

“ அப்புறம் அவங்களோட வந்ததுக்கப்புறம் உன்னோட அப்பாவைப் பாக்கலையா? அவர் உன்னைத் தன்னோட தான் இருக்கணும்னு சொல்லலையா? ”

“ நல்லவேளை சொல்லலைன்னு நான் சந்தோஷப்பட்டேன். என்னோட தேவதை அம்மா, என்னைக் கூட்டிக்கிட்டு இங்கே கொடைக்கானலில் இதே ஸ்கூலில் டீச்சர் வேலைக்குச் சேந்தாங்க. என் மேல அன்பைக் கொட்டி என்னைத் திக்குமுக்காட வைச்சாங்க. அதே சமயம் படிப்பு, டிஸிப்ளின் இதில் எல்லாம் பயங்கர ஸ்ட்ரிக்ட். நிறைய எனக்குக் கத்துக் கொடுத்தாங்க. இங்கே என்னல்லாம் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் இருந்ததோ அத்தனையையும் கத்துக்கணும்னு சொன்னாங்க. அப்படித்தான் நான் கராத்தே, நீச்சல், டென்னிஸ் எல்லாமே கத்துக்க ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் எப்படி ஓடிப் போச்சுன்னே தெரியலை. திடீர்னு ஒருநாள் அப்பா வெளிநாட்டில் இருந்து வரப்போகும் தகவல் சித்தி கிட்டேந்து வந்தது . நாங்க கெளம்பி, சித்தியோட ஊருக்குப் போனோம்”

“ அப்பா என்ன சொன்னார்? “ என்று பரபரத்தாள் மணிமேகலை.

“ அப்பா வெளிநாடு போனதற்குப் பிறகு முதல் தடவையாக வந்திருந்தார். அவருடைய வேலையை அங்கே நிரந்தரமாக்கி விட்டார்கள். குடும்பத்தை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். சித்தி என்னைப் பற்றி என்னவெல்லாம் அப்பாவிடம் சொன்னாளோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் அப்பாவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டார். இதுவரை அந்த மாதிரி அவர் பாசத்தைக் காட்டியதேயில்லை. எனக்கே அப்படியே அப்பாவின் மடியில் படுத்துக் கதறி அழவேண்டும் போல இருந்தது. உணர்ச்சி பூர்வமான சந்திப்பாக இருந்தது அது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை அம்மாவின் முகத்தில் சுரத்தே இல்லை. என்னை இந்த முறை தன்னுடன் அழைத்துப் போக முடியாது என்று தீர்மானித்தே விட்டார். அப்போதுதான் ஓர் அதிசயம் நடந்தது” என்று நிறுத்தினாள் பூரணி.

“ என்ன பூரணி இது? பயங்கர ஸ்பென்ஸான எடத்துல நிறுத்திட்டயே? ”

“ பொறுமையாக் கேளு. அப்புறம்தான் பயங்கர இன்ட்ரஸ்டா ஒண்ணு நடந்தது. தேவதை அம்மா, என்னோட அப்பாவையும் சித்தியையும் பாத்துக் கைகூப்பி ஒரு வேண்டுகோளை வைத்தார். பேசும்போது அவங்க குரல் தழுதழுக்க ஆரம்பிச்சது” என்று சொல்ல ஆரம்பித்தாள். கடந்த காலத்தில் மீண்டும் எட்டிப் பார்க்கலாமா நாமும்?

பூரணியின் தேவதை அம்மா, அவளுடைய சித்தி, அப்பாவின் முன்னே தெய்வத்திடம் வரம் கேட்கும் பக்தையாகக் கண்ணீர் மல்க, கை கூப்பி நின்றுகொண்டிருந்தாள்.

“ என் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருந்தேன். உங்க பொண்ணு வந்ததும் தான் என் வாழ்க்கையில் வசந்தம் வந்தது. வாழ்க்கைக்கு அர்த்தமும் கிடைச்சது. உங்க பொண்ணு எனக்குக் கெடைச்ச பொக்கிஷம். அதைத் தொலைக்க எனக்கு இஷ்டமில்லை. நீங்க சம்மதிச்சா அவளை நான் சட்டப்படி தத்து எடுத்துக்க விரும்பறேன்” என்றாள்.

சித்திக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. மனதிற்குள் தீபாவளிப் பட்டாசுகள் வெடித்தன.

“ உங்க கிட்டேந்து உங்க குழந்தையைப் பிரிக்கறதா நெனைக்க வேணாம். உங்க பொண்ணு இந்த ரெண்டு வருஷத்துல என்னோட வாழ்க்கையின் ஆதாரமாக மாறிட்டா. அவளைப் பிரியறதை என்னால நெனைச்சுக் கூடப் பாக்க முடியலை. நீங்களோ வெளிநாடு போகப் போறீங்க! உங்களோட ஒரு குழந்தை நம்ம தாய்நாட்டிலயே வளரட்டுமே? நீங்க இந்தியா வரும்போது, போகும் போதெல்லாம் அவளைச் சந்திக்கலாம். அவளை உங்க கூட வச்சுக்கலாம். எனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை” என்று சொல்லிவிட்டு அவர்களுடைய முகங்களைக் கண்கொட்டாமல் பார்த்தாள் அவள்.

அப்பா நிமிர்ந்து பூரணியை ஏற இறங்கப் பார்த்தார். இரண்டு வருடங்களில் உடலில் நல்ல வளர்த்தி தெரிந்தது. முகத்தில் ஒரு பளபளப்பு தெரிந்தது. நிச்சயமாக இந்தப் பெண் நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறாள் என்று அவருடைய மனதில் உறுதியானது. என்னதான் சித்தியின் பேச்சுக்குத் தலையாட்டும் பொம்மையாக இருந்தாலும் தன்னுடைய மனைவியின் உண்மை ஸ்வரூபத்தை நன்றாக அறிந்தவர் தானே அவர்? நிச்சயமாக இந்த அளவு கவனிப்பு தன் வீட்டில் கிடைக்காது என்று அவருடைய உள்மனது சொன்னது.

‘ என் மனசுல அப்பப்ப ஒப்புக்காக உதிக்கற பாசத்துக்கு முன்னால இந்த மேடம் பூரணி மேல காட்டற அன்பு ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. அது பூரணியைப் பாத்தாலே தெரியறது. நான் இவளை அமெரிக்காவுக்குக் கூட்டிண்டு போனாலும் இந்த ராக்ஷஸி, பூரணியைப் போட்டுப் பாடாப் படுத்தத்தான் போறா. நான் இல்லாதப்ப பூரணியை மசாலா கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினவளாச்சே இவ? அவளைப் படிக்க வைப்பாளான்னு தெரியாது. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி ஆத்தோட ஒக்காத்தி வச்சு தன்னோட வேலைக்காரியா மாத்திடுவா. அதுவும் வெளிநாட்டுல எல்லா வேலைகளும் தானே பண்ணியாகணும். இங்க மாதிரி வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கறதெல்லாம் ரொம்பச் செலவாகும்னு இந்தக் கடன்காரிக்கு இப்போ தெரியாது. சொல்லவும் வேணாம். நன்னா அங்கே போய்த் திண்டாடட்டும். என் பொண்ணு இந்த மேடத்தோட இருந்தா நன்னாப் படிச்சு முன்னுக்கு வந்துருவா’ என்று நினைத்தவர் உடனடியாகத் தத்துக் கொடுக்க சம்மதித்துவிட்டார். பூரணிக்கே அப்பாவின் முடிவு சற்று ஏமாற்றத்தைத் தந்தது. தேவதை அம்மாவின் முகம் மலர்ந்து போனது.

“ நான் வேணா ஏதாவது பணம் தந்துரட்டுமா? ” என்றாள் தயங்கித் தயங்கி.

“ அதெல்லாம் வேணாம். பணத்தை வாங்கிண்டா என் மனசாட்சி என்னைச் சும்மா விடாது. என் கொழந்தையை நான் உங்களுக்கு விக்கற மாதிரி ஆயிடும். தயவுசெஞ்சு பணத்தைப் பத்திப் பேசவேண்டாம்” என்றார் கைகூப்பியபடி.

சித்திக்கோ பயங்கரக் கோபம். கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள்.

“ ஏன்னா பணம் வேண்டாங்கறேள்? நாம ஒண்ணும் கேக்கலையே? அவாளாத்தானே தரேன்னு சொல்லறா? பணத்தை வாங்கி பேங்கில போட்டு வச்சா, நாளைப் பின்னே அவளோட கல்யாண சமயத்துல நகையா வாங்கி அவளுக்கே போடலாமே? ” என்றாள்.

“ வேண்டாம்னா வேண்டாம். இன்னொரு தடவை பணத்தைப் பத்திப் பேசாதே. என் கொழந்தை எங்கே இருந்தாலும் நன்னா சந்தோஷமா இருந்தா அதுவே போதும் எனக்கு” என்று திட்டவட்டமாகக் கூறிவிட, சித்தி வாயடைத்துப் போனாள். முதல் தடவையாக அவளை எதிர்த்து நின்ற கணவனின் புது அவதாரம் அவளுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

எது எப்படியோ நல்லபடியாக எல்லாம் முடிந்தன. சட்டப்படி பூரணியைத் தத்தெடுத்துக் கொண்டாள் தேவதை அம்மா.

“ அதுக்கப்புறம் நல்லாப் படிச்சேன். எனக்கும் அம்மா மாதிரி டீச்சராகணும்னு ஆசை. என்ன வேணாலும் படி, எவ்வளவு வேணாலும் படின்னு அம்மா சொன்னாங்க. ஆனால், நான் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி. முடித்து பி.எட் பண்ணி இதே ஸ்கூலில டீச்சராச் சேந்தேன். சின்ன ஸ்கூலா இருந்தது, வளந்து இப்போ பெருசா ஆயிடுச்சு. நல்லா ஃபேமஸாவும் ஆச்சு. இந்த ஸ்கூலை நடத்தின குடும்பம், வெளிநாடு போகறதாகவும், ஸ்கூலை மூடப் போகறதாகவும் சொன்னாங்க. அம்மா, நானே இதை என்னோட பொறுப்பில் எடுத்துக்கறேன்னு சொல்லிட்டு அவங்களுக்கு இந்த இடத்துக்கான பணத்தைக் கொடுத்து ஸ்கூல் நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக்கிட்டாங்க. நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தாங்க. இன்னைக்கு இந்த ஸ்கூல், இந்தியாவில் இருக்கற தனியார் பள்ளிகளோட ரேங்க் பட்டியலில் மூணாவது இடத்தைப் பிடிச்சிருக்குன்னா அதுக்கு முழுக்க முழுக்கக் காரணம் அம்மாவோட உழைப்பும், தொலைநோக்குப் பார்வையும்தான். நானும் கொஞ்சம் கொஞ்சமாக வளந்து இப்போ ஸ்கூல் பிரின்ஸிபல் ஆயிட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் முடித்தாள் பூரணி.

“ முதலில் கஷ்டப்பட்டாலும் உன்னோட தேவதை அம்மாவால உன்னோட வாழ்க்கை சீராயிருக்கு. நீ ரொம்ப லக்கி. ஆமாம், அவங்க எங்கே இப்போ? நீ சொன்னதைக் கேட்டதில் இருந்து எனக்கு அவங்களை உடனே பாக்கணும்னு ஆசையா இருக்கு” என்றாள் மணிமேகலை.

“ அவங்க இந்த ஸ்கூலோட தாளாளர் இப்போ. அதாவது கரஸ்பாண்டன்ட்( correspondent). பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளோடு ஏதோ மீட்டிங்னு சென்னை போயிருக்காங்க. இன்னும் ரெண்டு, மூணு நாளில வருவாங்க. சாயந்திரம் அவங்க மொபைலில் பேசினப்ப, உன்னைப் பத்தின எல்லா விஷயங்களையும் சொன்னேன். சந்தோஷப்பட்டாங்க. அவங்களுக்கும் உன்னை உடனே பாக்கணும்னு ஆசையா இருக்காம்” என்று சொன்னாள்.

மணிமேகலையின் மனதில் திடீரென ஏதோ கலக்கம் தோன்றியது. ஏதோ புயலொன்று அவளைத் தாக்கி நிலைகுலைய வைப்பதற்காகவே எங்கோ உருவாகிக் கொண்டிருக்கிற மாதிரி அவளுடைய உள்ளுணர்வு அவளை எச்சரி
த்தது. என்னவாக இருக்கும்?

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
சட்டென்று மாறுது வானிலை போல
சிறையில் இருந்து
சட்டென்று மாறி
சிறகு விரித்து
வானில் பறந்த கதை....
தேவதை யாரோ????
 

Lakshmi

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மணிமேகலையின் அம்மாவாக இருக்குமோ.?
 
Top Bottom