• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -8

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
315
நான் போடுற கோட்டுக்குள்ளே - 8

பால்கனியில் அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் சம்பத். தாத்தா பாட்டியின் திருமண நாள் கொண்டாட்டங்கள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. வந்திருந்த அனைவரும் அவரவர் இல்லம் திரும்பி விட்டனர். சம்பத்தின் மனதோரம் ஒரு சொல்ல முடியாத குழப்பம் ஒன்று இருந்தது.

ஐஸ்வர்யாவைப் பற்றியும் அவளது கேள்வியைப் பற்றியும் எப்படி யோசித்தாலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவளது கடந்த காலம் நினைவுக்கு வந்து மேலும் குழப்பியது. தவமிருந்து பெற்ற மகள் என்று அவளது தாயும் தந்தையும் தலைகால் புரியாமல் கொண்டாடியதில் அவளும் தலைகால் தெரியாமல் ஆடிவிட்டாள். உண்டான விளைவுகள் அவர்களைப் புரட்டிப் போட்டு விட்டது. சமீப காலமாத் தான் அவளைப் பற்றிச் சற்றுக் கவலை இல்லாமல் இருக்கின்றனர்.

அவனது அத்தை கோமளவல்லி தான் தாத்தா பாட்டியின் மூத்த மகள். அடுத்தடுத்து இரண்டிரண்டு வயது வித்தியாசத்தில் அவளது தம்பி தங்கைகள். அவளது வாழ்க்கையைப் பற்றிப் பல நேரங்களில் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறான். அவையெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து அவனை ஒரு முடிவுக்கு வர முடியாமல் செய்தது.

கோமளவல்லிக்கு அவளது இருபத்திரண்டாவது வயதில் எம்.ஏ. முடித்த உடன் திருமணம். கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு அன்றைய Royal Enfield கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். நல்ல வேலை, கை நிறைய சம்பளம். நிறைவான வாழ்க்கையாகத் தான் ஆரம்பித்தது.

திருமணம் முடிந்து முதல் முறையாக அவள் வீட்டுக்கு விலக்கான போது அவர்களது சம்பிரதாயப் படி நாலாம் நாள் சொந்த பந்தங்களை அழைத்து அவளை மணையில் அமர வைத்து புதுப் புடவை கொடுத்து, பூச்சூட்டி, புட்டு செய்து "பேரன் வரப் போகிறான்" என்று விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

ஆனால் அடுத்த மாதத்தில் இருந்தே , "ஏதாவது விசேஷம் உண்டா?" "மாட்டுப் பொண்ணு இன்னும் குளிச்சிண்டு தான் இருக்காளா?" என்பது போன்ற கேள்விகள் வரத் தொடங்கியது. இரு வீட்டிலுமே அதைப் பற்றி பெரிய அளவில் கவலைப் படவில்லை. ஆரம்பத்தில் கோமளவல்லியின் மாமியார் கூட, "நாலெழுத்து படிச்சவா. ஏதேனும் கட்டுப்பாட்டோட இருக்காளோ என்னவோ?" என்று பட்டும் படாமலும் தான் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆனால் மாதங்கள் வருடங்களாகி உருண்டோட, அடுத்தடுத்து திருமணம் ஆன தம்பிகளுக்குக் குழந்தைகள் வரவும் கோமளா குழந்தைக்காக ஏங்கலானாள். மருத்துவப் பரிசோதனைகள் யாவும் தம்பதியருக்கு எந்தக் குறையும் இல்லை என்றது.

இந்த நிலையில் சுற்றமும் நட்பும் தொடர்ந்து கேள்வி கேட்க ஆரம்பிக்க கோமளவல்லி துவண்டு போனாள். அவளது மாமியார் ஒரு படி மேலே போய் பிள்ளைக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கத் தயாராக இருந்தார். மனைவியின் ஏக்கத்தை அறிந்த கணவன் தனது ஜாகையை சென்னையில் இருந்து லண்டனுக்கு
மாற்றிக் கொண்டான்.

எம்.ஏ. ஆங்கிலம் படித்திருந்த கோமளாவுக்கும் அருகில் இருந்த பள்ளியில் வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டான். ஆரம்பத்தில் அறிந்தவர் தெரிந்தவர் என்று யாரும் இல்லை என்று வருத்தப் பட்ட கோமளா, நாளடைவில் லண்டன் வாழ்க்கையில் பொருந்திப் போனாள். குறிப்பாகக் குழந்தையைப் பற்றிக் கேள்வி கேட்பார் இல்லாததால் அந்த வருத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது.

இன்றைய காலகட்டத்தில் "ஸ்டெரஸ் எடுத்துக்காதீங்கோ, அதையே நினைக்காமல் ஃப்ரீயா இருங்கோ. நார்மலா இருந்தாலே நல்லபடியா குழந்தை பிறக்கும்" என்பதையே அந்தக் காலத்தில் "இரண்டு பேரும் நன்னா சந்தோஷமா இருங்கோ. கோயில் குளம்னு போயிட்டு வாங்கோ. மத்ததெல்லாம் பகவான் பார்த்துப்பார்" என்ற வார்த்தைகளில் பெரியவர்கள் கூறி வந்தனர்.

கோமளா விஷயத்திலும் இது சரியாக வேலை செய்தது. தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்தது. ஐஸ்வர்யா பிறந்தாள். அவளுக்கு அடுத்து ஆணொன்றும் பெண்ணொன்றுமாய் இரட்டையர். வாராது வந்த மாமணிகள் ஆயிற்றே, அவர்கள் நினைத்தது, நினைக்காதது எல்லாமே உடனே கிடைத்தது. அவர்களின் எதிர்காலத்திற்காக ஓடி ஓடி உழைத்த பெற்றோர் நிகழ்காலத்தைக் கவனம் வைக்க மறந்து விட்டார்கள்.

பெற்றோர்கள் அவரவர் தொழிலில் மூழ்கி இருக்க, பிள்ளைகள் மூவருமே மேலை நாட்டு நாகரீகத்தில் ஊறித் தான் வளர்ந்தார்கள். அதிலும் ஐஸ்வர்யா பல படிகள் மேலே இருந்தாள். பதினாறு வயதில் பாய் ஃப்ரண்டைப் பெற்றோருக்கு அறிமுகப் படுத்தினாள். இருபது வயதில் ஒருவனைக் காதலிக்கிறேன் என்று வந்தாள். இருபத்திரண்டு வயதில் இன்னொருவனைத் திருமணமே செய்து கொண்டு வந்து எனது பார்ட்னர் என்று அறிமுகம் செய்தாள்.

அவனை லைஃப் முழுவதற்குமான பார்ட்னராக அவள் நினைக்கவில்லை என்பது விரைவில் வெளிப்பட்டது. ஆறே மாதத்தில் அவனை விவாகரத்து செய்து விட்டாள். அவர்கள் இந்தியா வருவதற்கு ஒரு மாதம் முன்பு தான் அந்த விவாகரத்து நடந்தது. கணவன் அவளது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பது தான் காரணமாக இருந்தது. என்னென்ன எதிர்பார்ப்புகளோ தெரியவில்லை.

இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட ஐஸ்வர்யா தனக்கு மனைவியாக வந்தால்?? நினைக்கவே பயமாக இருந்தது சம்பத்திற்கு. 'கல்யாணமா?? மனைவியா?? ரொம்ப யோசிக்காதீங்க சார்.. அவ உன் கூட பழகிப் பார்க்கலாம்னு தான் சொன்னா, கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லவே இல்லை' என்று சரியான நேரத்தில் மனசாட்சி எட்டிப் பார்த்தது.

இத்தனையும் நினைத்துப் பார்த்த சம்பத்திற்கு அத்தை அத்திம்பேர் இருவரும் அவர்களது தொழில் முன்னேற்றத்தில் காட்டிய அக்கறையைக் குடும்பத்தில் காட்டவில்லை என்றே தோன்றியது.
ஐஸ்வர்யா இந்த விஷயத்தில் இன்னும் ஒரு முயற்சி செய்வாள் என்றே அவனுக்குத் தோன்றியது. அவளது பெற்றோருக்கும் கூட அவளது எண்ணம் நிறைவேறாதா என்ற ஆசை இருக்கிறதோ என்று சந்தேகம் வந்தது.

"இன்னைக்கு காலைல வந்த அத்தையும் அத்திம்பேரும் நேரடியா பேசலையே தவிர, சுத்திச் சுத்தி நீ ஒரு நல்ல பதிலாச் சொல்லுன்னு தானே சொன்னா.. நல்ல பதில்.." மைன்ட் வாய்ஸ் என்று சத்தமாகப் பேசிவிட்டவன் திடீரென அதை உணர்ந்து வாயைச் சட்டென்று மூடினான்.

அந்தக் கேள்வி மீண்டும் தன்னிடம் வருவதற்குள் தான் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். எப்படி என்று தான் தெரியவில்லை.

வழக்கமாக ஏதேனும் பிரச்சினை என்றால் தாத்தாவிடம் சென்று விடுவான். அவரும் ஒரு நண்பனைப் போல அனைத்தையும் காது கொடுத்துக் கேட்டு ஒரு ஆலோசனை சொல்வார். தாத்தாவைப் பொறுத்தவரை இன்றைய இளைஞர்களின் குழப்பங்களுக்கு முந்தைய தலைமுறையினர் தீர்வு சொல்வது என்பது இயலாத காரியம். அதனால் வெறும் ஆலோசனையோடு நிறுத்திக் கொள்வார். அதுவே பேரனுக்கு ஒரு தெளிவைக் கொடுத்து விடும்.

ஆனால் இன்று அவரிடம் கூட பேசுவதற்கு சம்பத்திற்கு விருப்பம் இல்லை. தனிமையில் அமர்ந்து தன்னைத் தானே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். ஏனோ தனது இயல்பைத் தொலைத்து விட்டது போலத் தோன்றியது.

ஐஸ்வர்யாவின் கேள்வியை தான் ஏன் தவிர்த்தோம் என்பது அவனுக்குப் புரியவே இல்லை. எதிர்பாராத நேரத்தில் வந்ததாலா.. இல்லை கேட்டது ஐஸ்வர்யா என்பதாலா.. இல்லை அன்றைய வீட்டு சூழ்நிலையா.. இப்படியாகப் பல கேள்விகள் அவனுக்குள் படையெடுத்து வந்தன.

படிக்கும் காலத்திலேயே பெண்களின் கனவு நாயகனாக இருந்தவன் தான். ஆண் பெண் பேதமின்றிப் பழகினாலும் அதில் நட்பைத் தவிர வேறெதுவும் இருந்ததில்லை.
குதிரைக்கு லாடம் கட்டியது போல படிப்பு ஒன்று தான் லட்சியம் என்று இவன் இருந்தாலும் சுற்றி இருப்பவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.

கல்லூரிப் பெண்கள் ஒரு ஹேன்ட்சம் ஹீரோவைப் பார்த்தால் விடுவார்களா? இந்தக் காலத்தில் எல்லாவற்றிலும் சம உரிமை தானே. பெண்கள் வந்து இவனிடம் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியதும் உண்டு. அவற்றை எல்லாம் ஒரு புன்னகை, ஒரு சாரி, நாட் இன்டரெஸ்டட் என்று கடந்து விட்டான்.

இப்போது, ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவன். அதனால் பல நாடுகளுக்கும் சென்று பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துக் கொண்டு இருப்பவன். சொல்லப் போனால் அவனது வாழ்க்கையில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருந்தது.

"ஹேய் யூ ஆர் ஸோ ஹேண்ட்சம் மேன்" என்பதையே பல பாஷைகளில் கேட்பவன். அவற்றை எல்லாம் "தாங்க் யூ!" என்று புன்னகையுடன் கடந்து சென்று விடுபவன்.

தினம் தினம் எத்தனை பெண்களைச் சந்திக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணும் இவனது கண்ணைத் தாண்டி உள்ளே போகவே இல்லையோ? கடந்த ஒரு வருடமாகவே ராஜலக்ஷ்மி பேரனின் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார். அதையெல்லாம் ஏதோ செய்தியாகவே கடந்திருக்கிறான். நினைத்துப் பார்த்தால் அவனுக்கே சிரிப்பாக இருந்தது.

'நம்ம ஹிஸ்டரிய நினைச்சுப் பார்த்தா நமக்கே ரொம்ப கஷ்டமா இருக்கே! கேர்ள்ஸ் எல்லாரும் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பா? ஐஸ்வர்யா அந்தக் கேள்வியைக் கேட்கும் வரை நமக்கு ஹார்மோன்கள் வேலை செய்யவே இல்லையோ?? என்னடா இது சம்பத்திற்கு வந்த சோதனை?'

இல்லை, அப்படியும் சொல்ல முடியாது. சில விதிவிலக்குகளும் இருந்தது. சமீபத்தில் கூட வெகு சில நிமிடங்கள் மட்டுமே பார்த்த ஒருத்தி அவனது கவனத்தை ஈர்த்தது நிஜம். ஆனால் அது எந்த வகை ஈர்ப்பு என்று தான் தெரியவில்லை.

இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருப்பாளோ என்று கற்பனைக் குதிரையைப் பறக்கவிட்டான். ம்ஹூம். பெரிதாக எதுவும் தோன்றவில்லை.

ஆனால் அவர்கள் வீட்டில் நடந்த கல்யாணங்களை வைத்தே கல்யாணச் சந்தை தலைகீழாக மாறிவிட்டது என்பதை அவன் அறிந்திருந்தான்.

முந்தைய தலைமுறையில் கடைசி கல்யாணமாக நடந்த பரத்தின் தந்தை ரகுராமனின் கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் கை தான் ஓங்கி இருந்தது. பெண் இப்படி இருக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், கண்டிஷன்கள்.

சம்பத் பத்து பதினோரு வயதில் இருந்த போது நடந்த கல்யாணம். அவனது அத்தைகள் இருவரும் சேர்ந்து பெண் வீட்டாரிடம் போட்ட கண்டிஷன்களும் திருமணத்தில் அவர்களின் அலப்பறையும் ராஜலக்ஷ்மியையே முகம் சுழிக்க வைத்தது.

ரகுராமன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தாரே தவிர எதற்கும் மறுப்பு சொல்லவில்லை. அக்காமார் அடுக்கிய சீர்வரிசைகளைக் கூட பெரியவர்களின் விருப்பம், இதில் எனக்கு உடன்பாடு இல்லேன்னாலும் நான் எதுவும் செய்ய முடியாது என்று சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டார். இத்தனைக்கும் அவரது மனைவியாக வந்தவள் அழகில், படிப்பில், வேலையில், சம்பாத்தியத்தில் ரகுராமனை விட ஒரு படி மேலாகவே இருந்தாள்.

அவளது வீட்டினரும் கல்யாணத்தில் இதெல்லாம் சகஜம் என்று விட்டுக் கொடுத்து போகவும் நாத்தனார்களின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் சேஷாத்ரி தலையிட்டு பெண்களை அடக்கி வைத்தார். திருமணத்திற்குப் பிறகு அரசாட்சி சித்தியிடம் மட்டுமே என்றானது. இதையும் உலக வழக்கம் என்று ஏற்றுக்கொண்டு ரகுராமன் பணிந்து போனார்.

மாப்பிள்ளை வீட்டாரின் நிலைமை அதன் பிறகு தலைகீழாக மாறிவிட்டது. யார் செய்த மாயமோ மந்திரமோ தெரியவில்லை. திடீரென கல்யாண மார்க்கெட்டில் பெண்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பெண்கள் அனைவரும் படித்து, சம்பாதித்து சமுதாயத்தில் முன்னேற ஆரம்பித்ததும் ஒரு காரணம். எதிர்பார்ப்புகள் கண்டிஷன்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற ஆரம்பித்தது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நடந்த அக்கா ராஜஸ்ரீயின் கல்யாணத்தில் சம்பத் இந்த மாற்றத்தைக் கண்டு கொண்டான்.
அன்றைய நிகழ்வுகள் அவனுக்கு வார்த்தை பிசகாமல் ஞாபகம் இருக்கிறது. ஸ்ரீ, பி.இ. ஃபைனல் இயரிலும் இவன் ப்ளஸ் டூவிலும் இருந்தார்கள். பொங்கல் பண்டிகை முடிந்ததும் பாட்டி பேச்சை ஆரம்பித்தார்.

"முரளி! இந்த வருஷம் கண்ணம்மா படிப்பை முடிச்சிடுவா. தைலயே ஒரு நல்ல நாளா பார்த்து அவ ஜாதகத்தை எடுத்துண்டு போய் பார்த்துட்டு வந்துடலாமா? அப்புறம் அறிஞ்சவா தெரிஞ்சவான்னு சொல்லி வச்சா நல்ல வரனா அமைஞ்சிடும், இல்லையா?"

"அம்மா! இப்போ என்ன அவசரம்? சின்னக் குழந்தை மா அவ. அப்படி என்ன வயசாயிடுத்து?" தந்தையின் கண்ணுக்கு மகள் எப்போதும் குழந்தை தான்.

"அது சரி.‌ பொண்ணு வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு சொல்லுவா. உன் பொண்ணுக்கு இப்போ இருபத்திரண்டு நடக்கறது. நீ இன்னும் குழந்தைன்னு சொல்லிண்டு இரு. இது தான் சரியான வயசு. தேவிகா! நீ என்ன வாயைப் பார்த்துண்டு இருக்க, நீயே உன் ஆம்படையான் கிட்ட சொல்லு.‌"

மாமியாரின் பேச்சைக் காதில் வாங்கிய தேவிகா கணவனைப் பார்க்காமல் மகளைப் பார்த்தாள்.

திடீரென வந்த திருமணப் பேச்சில் ஜூனியர் ராஜி திருதிருவென விழிக்க, அவளது தாத்தா உதவிக்கு வந்தார். "ராஜி! எந்தக் காலத்தில இருக்கே நீ? இந்த விஷயத்தில் கண்ணம்மாவோட அபிப்பிராயம் தெரியாமல் நீயா முடிவு பண்ணிடுவியா? வெளி உலகத்தைக் கவனிக்கறியா இல்லையா? இப்போ பொண்கள் எல்லாருமா நன்னா படிச்சு வேலைக்குப் போறா. தன் கால்ல நிக்கணும்னு ப்ரியப்படறா. அப்புறம் தான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கறா. உன் காலம் மாதிரி கல்யாணம் பண்ணிண்டு படிக்கறேன்னு யாரும் சொல்றதில்லை. குழந்தைக்காக யாரும் வேலையை விடறதில்லை. என்ன டா கண்ணம்மா! நான் சொல்றது சரி தானே?"

"அவ கிட்ட என்ன கேட்கறது? பெரியவா முடிவெடுத்தா அவளுக்கு நல்லது தான் இருக்கும்னு தெரியாதா?"

பாட்டி அப்போதும் தன் பிடியை விடாது இருக்கத் தாத்தா பேத்தியின் அபிப்பிராயம் கேட்டார்.

"ம்ச். ராஜி! அவளைப் பேச விடு. நீ சொல்லு டா!"

"நான் இப்போ CAT எழுதி இருக்கேன் இல்லையா. எப்படியும் க்ளியர் பண்ணிடுவேன்னு கான்ஃபிடன்ஸ் இருக்கு. எம்பிஏ பண்ணிட்டு இரண்டு வருஷம் வேலைக்கு போயிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறேனே"

"இருபத்தேழு வயசுலயா! ஏன்னா! நீங்க தான் உங்க பேத்திக்கு எடுத்து சொல்லுங்கோ. எலும்ப

தாத்தா அமைதி காக்க, தேவிகா மகளிடம் பேசினாள். "ஸ்ரீ! இருபத்து நாலு வயசுன்றது சரியா இருக்கும். இந்த வருஷம் CAT க்ளியர் பண்ணிட்டா மேல் படி. இல்லேன்னா வேலைக்குப் போ. நீ எப்படியும் கேம்பஸ்ல ஒரு நல்ல கம்பெனில செலக்ட் ஆகிடுவ. இரண்டு வருஷம் தான் நாங்க கொடுக்க முடியும். அப்புறம் வரன் பார்க்க ஆரம்பிச்சிடுவோம்."

பிசிறில்லாமல் இது தான் முடிவு என்று சொன்ன தாய்க்கு பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவதைத் தவிர வேறு வழியின்றிப் போனது மகளுக்கு.

அவள் நினைத்தது போல எம்பிஏ படிக்க வாய்ப்பு கிடைக்க படித்து முடித்தவள் ஒரு நல்ல வேலையில் அமர்ந்தாள்.

அது வரை அவளது ஜாதகத்தை யாரும் தொடவே இல்லை. சொந்தங்களிடம் சொல்லி வைத்ததோடு நில்லாமல் சில மேட்ரிமோனி சைட்களிலும் பதிவு செய்தார்கள்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்ற கேள்வி பெண்ணிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவள் சொன்ன பதில் இப்போது நினைத்தாலும் ஹப்பா! இவ்வளவு தானா? என்று தோன்றும்.

"ஜாயின் ஃபேமிலி ஓகே. என்னை விட அரையடியாவது உயரமா இருக்கணும் ( இவளே ஐந்தே முக்கால் அடி) கலர் வீட்டிஷ் ப்ரவுன் (wheatish brown) கூட ஓகே. ரொம்ப டார்க்கா இருக்கக் கூடாது, ஐடி கம்பெனி வேண்டாம் ஒரு பெர்மனென்ட் ஜாப்ல இருக்கணும்.." இதெல்லாம் ஒரு சாம்பிள்.

அத்தோடு விட்டாளா, அரவிந்தின் புரோஃபைலை ஒரு சைட்டில் பார்த்த போது, டீடோட்டலர்னு சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். நான் நம்பவே மாட்டேன் என்று அடம் பிடித்தாள். எல்லா வகையிலும் அரவிந்தின் பக்கம் ஸ்ட்ராங்காக இருக்க, வீட்டினர் மற்ற சம்பிரதாயங்களை ஆரம்பித்து வைத்தனர்.

பெண் பார்க்க வந்தவனிடம், ராஜஸ்ரீ தனது சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவான பிறகே இந்த உலகத்தில் டீடோட்டலர் என்று ஒரு கேட்டகரி நிஜமாகவே இருக்கிறது என்று ஒத்துக் கொண்டாள். பிறகென்ன டும் டும் தான்.

ஆறேழு வருடத்திற்கு முன்பே அப்படி என்றால் இப்போது எந்த மாதிரியான மாற்றம் நிகழ்ந்திருக்கிறதோ? எத்தனை வெர்ஷன்ஸ் அப்டேட்ஸ் ஆகி இருக்கிறதோ? நினைக்கவே பயமாக இருந்தது.

கம்பெனியில் டைனிங் ஹால் சென்றால் நிறைய பெண்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதாலேயே தனது கேபினில் லஞ்ச் சாப்பிடுபவன் அவன். இனிமேல் டைனிங் ஹால் செல்ல வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். நாட்டு நிலவரம் தெரிய வேண்டாமா??

மனதுக்குள் இன்னொரு விஷயம் கூட ஞாபகம் வந்தது. சில மாதங்களுக்கு முன் செய்தித்தாளில் படித்த விஷயம் அது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. தென்தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் மணப்பெண்ணின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் கட் அவுட் வைத்திருந்தனர். மணமகள் மணமகனுக்கு கட்டளை இடுவதாக அவர்கள் அச்சடித்து வைத்த வசனங்கள் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.

இவை தான் அந்த பத்துக் கட்டளைகள்:
1. உன்னுடைய மனைவி நான் ஆகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது
2. அடுத்தவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.
3. இரவு 8:30 மணிக்கு கிச்சன் க்ளோஸ். 4. இரவு 9:30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ்.
5 தேங்காய் எண்ணெய், சோப்பு,ஷாம்பு, துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். தொந்தரவு செய்யக்கூடாது. 6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடு என்றாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும். 8. சாயங்காலம் 6:30 முதல் 9:30 மணி வரை சீரியல் டைம். அந்த நேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. பச்சை தண்ணீர் கூட கிடையாது.
9. உறக்கத்தில் சத்தம் போடவோ, குறட்டை விடவோ கூடாது.
10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.

தனக்கு வரப்போகிறவள் எத்தனை கட்டளைகள் போடப் போகிறாளோ என்று நினைக்கும் போதே பகீரென்றது.

இப்படி யோசனையில் இருந்தவன் தனது எதிர்பார்ப்புகள் என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே இல்லை.

மறுநாள் சூரிய ஒளி வந்து முகத்தில் சுள்ளென்று விழவும் கண்விழித்துப் பார்த்தவனுக்கு தான் இருக்கும் இடம் புரியவே இல்லை. யோசனைகளோடு பால்கனியில் படுத்து உறங்கி இருப்பதை நினைத்துச் சிரித்தபடி எழுந்தான்.

அதே நினைவுகளோடு அலுவலகம் வந்தவனுக்கு லிஃப்ட்டில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom