• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
324
நான் போடுற கோட்டுக்குள்ளே - 3

கால் மேல் கால் போட்டு முன்னே அமர்ந்திருக்கும் பேத்தி அவரது கண்ணுக்கு நீலாம்பரியாக தெரிய, தானும் முயன்று அதே போல அமர்ந்து கொண்டார் பத்மாசனி. மனசுக்குள்ள பெரிய படையப்பான்னு நினைப்பு.


பேத்தியோ அதைக் கண்டும் காணாமல் தனது கட்டை விரல்களுக்கு வேலை கொடுக்கலானாள். அதாவது தனது மொபைல் ஃபோனில் ஐக்கியம் ஆனாள். பயிற்சி இல்லாததால் சற்று சிரமப்பட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.





"கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி, இந்த காலத்து குழந்தைகளுக்கு இந்த செல் ஃபோன் கிடைச்சிருக்கு. பொறக்கும் போதே ஆளுக்கொன்னா கைல வச்சிண்டு…அப்படி அதிலே என்ன தான் இருக்கோ.. சுத்தி இருக்கற மனுஷா எல்லாம் கண்ணுக்கே தெரியாம.. இப்படியே போனா நாளைக்கு நல்லது கெட்டதுன்னு அவா அவா செல் ஃபோன் தான் வரணும்.. மனுஷா வரமாட்டா.."





அவரது கவலை அவருக்கு.. நினைவுகள் சற்றே பின்னோக்கிப் போனது. கடந்த மாதத்தில் அவரது நட்சத்திர பிறந்த நாள் வந்தது. அவரது வழக்கப்படி மகன் மருகளோடு கோவிலுக்கு சென்று கொண்டாடியவரை பெண்கள் இருவரும் கண்டு கொள்ளவே இல்லை.





மிகுந்த சோகத்தில் இருந்தவரை பிறந்த தேதி அன்று "சர்ப்ரைஸ்" என்று அசத்தி(?!) விட்டனர். அவரது இரண்டு பெண்கள், மாப்பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று குடும்பத்தில் அனைவரும் முதல் நாளே வந்து பெரிய பிளான் எல்லாம் போட்டு ஏதேதோ செய்ய, பத்மாசனி தனது வாரிசுகளைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். மறுநாள் காலையில் அதே பெருமிதத்தை காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு கொடுத்துக் கொண்டுபிடிக்கலாமா என்று யோசிக்கும் படி ஆகிவிட்டது.





நடந்தது இது தான்.. ரங்கராஜன் வீட்டு மொட்டை மாடி தேவலோகம் போல அலங்காரம் செய்யப்பட்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காகத் தயாராக இருந்தது. பத்மாசனியின் பெண்கள் இருவரும் தாயின் கண்களை மூடி அழைத்து வந்தனர். மாடியில் அவர் கால் வைத்த வேளையில் அவர் மேல் ஜிகினா மழை பொழிந்தது.





எக்லெஸ் கேக் தான் என்று மூன்றடுக்கு கேக் வாங்கி, ஹேப்பி பர்த்டே பாடி அவரை கேக் வெட்ட வைத்து வெட்டிய கேக்கை சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தவரின் முகத்தில் அப்பி "ஹே…" என்ற ஆரவாரக் கூச்சலோடு பலூன்களை உடைத்து.. பத்மாசனியின் பாஷையில் ஏக ரகளையாக இருந்தது.





விழா நாயகியை நடுவில் அமர வைத்து குடும்பம் குடும்பமாக கேன்டிட் ஷாட் என்று விதம் விதமான திசையில் ஃபோட்டோ எடுத்து வந்திருந்த அனைவரும் விழாவைச் சிறப்பித்தார்கள்.





சின்சியராக ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்தவரை "பாட்டி! நீ கேமராவை முறைக்காத.. நீ கேசுவலா பேசிண்டே இரு.. கேன்டிட் ஷாட் தான் எடுக்கப் போறோம். அப்போ தான் ஷாட்ஸ் நன்னாவும் இருக்கும்.. " என்று விரட்டினார்கள் பேரன் பேத்திகள்.





"அம்மா! புடவைத் தலைப்பை இப்படி இழுத்து சொருகாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. நீ இன்னும் எங்களுக்கு அக்கா மாதிரி தான் இருக்க… தலைப்பை சிங்கிளா பின் பண்ணி முன்னாடி எடுத்து இப்படி விட்டுக்கோ.. அதான் ட்ரென்டியா இருக்கும்.. தலைப்பு எவ்வளவு க்ராண்டா இருக்கு பாரு.. அது ஃபோட்டோல தெரிய வேண்டாமா?"





"மா! நீ ஸ்ரீசூர்ணத்துக்கு பதிலா அழகா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சிண்டு இருக்கலாம். எடுப்பா இருந்திருக்கும். உன் ஸ்கின் கலருக்கு நல்ல ரெட் கலர் ஸ்டிக்கர் சூப்பரா இருக்கும். இரு, என் பேக்ல இருக்கா பாக்கறேன், இதோ கிடைச்சிடுத்தே. என் கிட்ட வெட் டிஸ்யூ கூட இருக்கு, இதோ உன் நெத்தி ரெடி. இப்போ நான் சொன்ன மாதிரி உட்காரு, இல்லேன்னா அப்படியே நடந்துண்டே எல்லார் கிட்டயும் பேசு." ஏதோ தோசை ரெடி மாதிரி சொல்லி விட்டு போனாள் அவரது அருமை மகள்.





இப்படி ஆளாளுக்கு அழைத்து ஆளுக்கொரு அட்வைஸ் கொடுத்து கடுப்பேற்றி விட்டனர். ஒரேயொரு நொடி அக்கா என்றதில் அவருக்கு வந்த சந்தோஷம் அடுத்த நொடியே காணாமல் போய்விட்டது. அவரது வயதிற்கு புடவையை வெகுபாந்தமாக உடுத்தி இருந்தவரைப் பார்த்து இப்படி சொன்னால் அவர் பாவம் என்ன செய்வார். ஆறுகஜமோ, மடிசாரோ அவர் புடவை கட்டும் அழகே தனி தான்.. புடவை முந்தானை தொங்கக் கூடாது, எதுவானாலும் இழுத்துச் செறுக வேண்டும் என்ற தலைமுறையைச் சேர்ந்த லேடி அவர்…





அடுத்தது சாப்பாடு.. "வரலாறு முக்கியம் பாட்டி!" என்று



அதிலும்.. இப்படி கையில எடு..‌அப்படி சாப்பிடு என்று ஏகப்பட்ட அட்வைஸூடன் ஒரு ஃபோட்டோ செஷன். அத்தனை வெரைட்டி சாப்பாடு.. ஆனால், யாராவது திருப்தியாகச் சாப்பிட்டார்களா என்பது சந்தேகம் தான்.





அனைத்திற்கும் ஹைலைட்டாக, அப்போதே "Granny's Birthday" என்ற ஹேஷ்டேக்குடன் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டா என்று ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப் பட்டது. இளைய தலைமுறையினர் அதில் பூரித்துப் போக, வயதில் மூத்தவராக முந்தைய தலைமுறையாக அவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.





மகனது குடும்பத்தில் இருந்த நால்வரைத் தவிர யாருக்கும் அவரது ஆசிர்வாதம் தேவையாக இருக்கவில்லை. பெண்கள் குடும்பத்தில் அனைவரும் லேட்டஸ்ட் ஃபேஷனாக பட்டும் படாமல் அணைத்துக் கொண்டு, கை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொன்னதோடு சரி. அதில் மிகுந்த வருத்தம் அவருக்கு. அந்த நிலையிலும் கூட மாட்டுப் பெண்ணை வெளிப்படையாகப் பாராட்ட மனம் வரவில்லை. பார்வையில் பாராட்டைத் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்.



—----



அன்றைய நினைவில் புலம்பிய பாட்டியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் சுபிக்ஷா.





மொபைலை அருகில் வைத்து விட்டு "உங்களுக்கு இப்போ என்ன தான் வேணும் பாட்டி? பொழுது போகலேன்னா அதுக்கு நான் தான் கிடைச்சேனா?"





எப்போதுமே மரியாதையுடன் பேசும் பேத்தியின் பேச்சு இன்று ஏனோ அவருக்கு ரசிக்கவில்லை. முதல் முறையாக பேத்தி தன்னை நெருக்கமாக நினைக்கவில்லை என்று தோன்றியது. மரியாதை கொடுத்து ஒதுக்கி வைக்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது. ஆனாலும் அதை வெளியே சொல்லி விட்டால் பாட்டியின் கெத்து என்ன ஆவது?





"எனக்கு என்னடியம்மா வேணும்… வயசான காலத்துல நான் மாட்டுக்கு கிருஷ்ணா ராமான்னு பொழுதை போக்கிண்டு இருக்கேன். எழுந்ததுல இருந்து அடையற வரைக்கும் அந்த ஃபோனையை உத்துப் பார்த்துண்டு.. தனக்குத் தானே சிரிச்சிண்டு, மூஞ்சிய அஷ்டகோணலா வச்சிண்டு ஃபோட்டோ எடுத்து உடனே ஏதோ புக்கு.. அது பேரென்ன?"





"ஃபேஸ்புக்…" பாட்டியின் கேள்வியில் சிரிப்பு வந்தாலும் பதில் சொன்னாள் சுபிக்ஷா.





"ஹான்.. அதுல போட்டு.. அதுக்கு நாலு பேர் ஆஹா ஓஹோன்னு பாராட்டி… ஆமா… நான் தெரியாமல் தான் கேட்கறேன்…அந்த கட்டை விரல் தான் வலிக்காதா.. இல்லை கழுத்து தான் வலிக்காதா..நாள் பூராவும் அந்தப் பாடு படுத்தறேளே!"





"எப்போ எல்லாம் என்னை இப்படி பாத்திருக்கேள்? சொல்லுங்கோ பார்ப்போம்." பாட்டியின் ஆதங்கத்தை பொறுமையாகக் கேட்டவள் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்க இப்போது விழிப்பது பாட்டியின் முறையாயிற்று. ஆம், அல்ட்ரா மாடர்ன் சுபிக்ஷா இதுவரை எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை.. இனிமேல் எப்படியோ… அதன் முதல் படியாக வாட்ஸ்அப் அவளது மொபைலில் எட்டிப் பார்த்திருக்கிறது.





படிப்பு, படிப்பு என்று தனக்கென ஒரு லட்சியத்துடன் இருந்தவள் இன்று அதன் முதல் படியை அடைந்து விட்ட சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாடவே மொபைலில் ஐக்கியம் ஆகி இருக்கிறாள்.





"உன்னைச் சொல்லல.. இன்னைக்கு நிறைய பேர் இப்படி தானே பண்றா.. நான் பொதுவாத் தான் சொன்னேன்" என்று வெற்றிகரமாக ஜகா வாங்கிய தாயைக் காப்பாற்ற ஆபத்பாந்தவனாக உள்ளே நுழைந்தார் ரங்கராஜன்.





"குட் மார்னிங் பா!" தனது நடையை முடித்து விட்டு உள்ளே வந்த ரங்கராஜன், மகளின் குட் மார்னிங்கில் ஓர் ஆச்சர்யப்பார்வையை வீசினார்.





"அட.. சுபி எழுந்தாச்சா? இன்னைக்கு என்ன டா இவ்வளவு சீக்கிரம்? சன்டேன்னு மறந்து போயிட்டியா? கிளம்பி ரெடியா இருக்க? என்ன புரோகிராம்?"





அம்மா முன்னாடி நல்லாத்தான் நடிக்கிறார் மனுஷன்.. இது ஒரு வகையான தப்பித்தல் (escapism) என்பதை அறியாத பத்மாசனி மகனது கேள்வியில் பல்லைக் கடித்த பேத்தியைக் கண்டு ஏக குஷியானார். பாவம் அவருக்கு அதில் இருந்த உள்குத்து புரியாமலே மார்னிங் ஷோ ஒன்றைப் பார்க்கத் தயாரானார். அதற்கான தனது பங்களிப்பை தாராளமாக வழங்கிச் சிறப்பித்தார்.





"அதானே.. நன்னா கேளு.. ஞாயித்துக்கிழமையும் அதுவுமா காலங்கார்த்தால இப்படி கண்றாவியா டிரஸ் பண்ணிண்டு.. அப்படி என்ன உன் பொண்ணுக்குத் தலை போற வேலை.. அதுவும் ராத்திரி தான் வருவாளாம்.. நாள் பூராவும் ஒரு பொண்ணு ஊர் சுத்தினா ஊர் உலகம் என்ன சொல்லும்.. வாரத்துல ஒரு நாள் தான் ஆத்துல இருக்கா..‌நிதானமா தலைல எண்ணெய தேய்ச்சு குளிச்சோமா.. அம்மாக்கு ஏதாவது ஊட மாட தளிகைல ஹெல்ப் பண்ணோமான்னு இல்லாமல்.. வயசுப் பொண்ணுக்கு இதெல்லாம் என்ன பழக்கம்? நாளைக்கே இன்னோரு ஆத்துக்கு போகப் போறவ.."





பாட்டியின் கண்களில் இருந்த ஆர்வம் சுபிக்ஷாவின் கண்களுக்குத் தப்பவில்லை. அவளுக்கு, 'இந்த அப்பா ஏன்தான் இப்படி பாட்டிக்கு முன்னால் பவ்யமாக வேஷம் போட வேண்டும்' என்று தோன்றியது. தாயிடம் ஆர்டர் செய்த காபி இன்னும் அவள் கைக்கு வந்து சேரவில்லை. வந்திருந்தால் இந்நேரம் பறந்திருப்பாள். அது வேறு அவளது எரிச்சலை மேலும் கூட்டியது.





"அம்மா இன்னும் என்னதான் பண்ணின்டு இருக்க? ஒரு காஃபி கலக்க இவ்வளவு நேரமா? எனக்கு டைம் ஆச்சு மா" என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தவள் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். அதுவரையில் பத்மாசனியின் புத்திரனாக இருந்த ரங்கராஜன் சட்டென்று சுபிக்ஷாவின் தந்தையாக மாறி கண்களாலேயே மகளிடம் அசடு வழிந்தார்.





அதையெல்லாம் கண்டுகொள்ளாத மகளோ தந்தையின் காதோரம் பேசினாள். "அப்பா… இன்னைக்கு சன்டேன்னு நேக்கு நன்னா ஞாபகம் இருக்கு. உங்களுக்குத் தான் அப்பப்போ செலக்டிவ் அம்னீஷியா வந்துடறது, இது கொஞ்சம் கூட நன்னா இல்லை. "





குரல் சாதாரணமாக இருந்தாலும் 'இதுக்கு மேல ஒரு கேள்வி வந்தாலும்…' என்ற மகளின் மறைமுக மிரட்டல் புரிந்து அமைதியாகி விட்டார் ரங்கராஜன். அது புரிந்த சுபிக்ஷா மேலும் பேசினாள்.





"அதுவும் உங்க அம்மா முன்னாடி ஆஸ்கார் லெவலுக்கு நடிக்க ட்ரை பண்றேள். பட் நோ யூஸ்.. உங்களை விட பாட்டி கீதார் பார்ட்டி. உங்க நடிப்பை எப்பவோ கண்டு பிடிச்சிருப்பா. ஓவர் ஆக்டிங்க கொஞ்சம் குறைச்சுண்டா உங்களுக்கு நல்லது.. ஏன் பா.. இத்தனை வயசுக்கு மேலேயும் இப்படி பாட்டி வாய்க்குப் பயந்து சாகறேள். தெளிவா அவா கிட்ட சொன்னா புரிஞ்சுக்காமலா போயிடுவா?"





'இனிமேல் எங்க அம்மா புரிஞ்சிண்டு… அப்படியே நடந்தாலும் அதுக்கு என் உடன்பிறப்புகள் விடணுமே..' மனதுக்குள் நினைத்துக் கொண்டதை வெளியே மகளிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை அவருக்கு. நீண்ட பெருமூச்சுடன் மகளைப் பார்த்து புன்னகைத்தார். மகளது இன்றைய உற்சாகத்தைக் கெடுக்க விரும்பாதவராய் அவளைத் தட்டிக் கொடுத்தார்.





மகளை முறைத்துக் கொண்டே சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் அனுராதா. "என்ன அப்பாவும் பொண்ணும் ரொம்ப ஓவரா கொஞ்சிண்டு இருக்கேள்?" என்று கேட்டபடி காஃபி கப்பை மகளின் கையில் திணித்தாள்.





அனுராதாவால் செய்ய முடியாததை அவளது மகள் பாட்டியின் எதிரே அமர்ந்து செய்ய ஆரம்பித்தாள். அதாவது, தனது கையில் இருந்த பீங்கான் கோப்பையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவள், பாட்டியைப் பார்த்துக் கொண்டே ஜெனிலியா ஸ்டைலில் காஃபியை குடிக்க ஆரம்பித்தாள்.





மாமியார் மருமகளின் காஃபி விஷயத்தை அறிந்து கொண்ட நாளில் இருந்து சுபிக்ஷா செய்யும் தினசரி வாடிக்கை தான் என்றாலும், அடுத்து எப்போது வெடிக்கலாம் என்று காத்திருந்த வெடிகுண்டு சட்டென்று பற்றிக் கொண்டது.





"ரொம்ப நன்னா இருக்குடீம்மா.. ரொம்பவே நன்னா இருக்கு.." என்று கழுத்தை நொடித்தவர் மடை திறந்த வெள்ளமாகப் பேச இல்லை..இல்லை.. புலம்ப ஆரம்பித்தார்.





"சரியான வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா, இப்போ இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகி இருப்போ.. இங்கே என்னடான்னா படிக்கிறேன் படிக்கிறேன்னு வயசை முழுங்கியாச்சு. படிச்சு என்னத்த கத்துண்டான்னு தான் நேக்குப் புரியவே இல்லை.. கொஞ்சமாவது நல்ல பழக்கத்தைக் கத்துக் கொடுத்திருக்கலாம்." பார்வை மாட்டுப்பெண்ணைச் சாடியது.

"எங்க காலத்துல பெரியவா முன்னாடி உட்காரவே யோசிப்போம். இப்போ என்னடான்னா கால் மேல கால் போட்டுண்டு காஃபியை உறிஞ்சி குடிச்சிண்டு.. போற இடத்தில‌ என்ன பாடு படப்போறாளோ? ஏன் அந்த காப்பியை லோட்டால விட்டு தூக்கிக் குடிச்சா ஆகாதா.. மத்தவா வந்தா கொடுக்கறதுக்குத் தானே இந்த பீங்கான் எல்லாம் வாங்கி வச்சிருக்கேள்? இதுலயே ஆத்து மனுஷாளும் குடிச்சா நன்னாவா இருக்கு?"

பாட்டியின் புலம்பல்களைக் கண்டு கொள்ளாமல் காஃபியை குடித்து முடித்த சுபிக்ஷா, பெற்றோரிடம் கண்களால் விடை பெற்று, "பை பாட்டி! ஈவ்னிங் பார்க்கலாம்!" என்று புறப்படத் தயாரானாள்.

"இட்ஸ் ஓகே டா. காஃபி சாப்பிட்டு நீ கிளம்பு. ஈவ்னிங் பார்க்கலாம். என்ஜாய் யுவர் டே. ஃப்ரண்ட்ஸ் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணனும்னு அவசியம் இல்லை. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.."

"யெஸ் பா. டோன்ட் வொர்ரி. ஐ நோ மை லிமிட்ஸ். பட், நம்ம பாட்டிக்கு கூட இன்னும் விஷயத்தைச் சொல்லலை. அவாளுக்கு விஷயம் தெரியும் போது பெரிய ரகளை பண்ணிடப் போறா. என் பேட்ச் மேட் ரேகாவோட அண்ணாவும் நம்ம ஹரியும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். பேக்கேஜ் விவரம் தெரியாமல் போனாலும் மத்த டீடெயில்ஸ் எல்லாம் கரெக்டா அங்கே போயிருக்கும். எந்த நேரம் வேணாலும் நங்கநல்லூர் புயல் நம்ம ஆத்துல மையல் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். மீ க்ரேட் எஸ்கேப் டுடே.."

பவர்ஃபுல் அணுகுண்டு ஒன்றை வீசிவிட்டு, தந்தையின் ஷாக் ரியாக்ஷனைப் பார்த்து சுபிக்ஷா கண்சிமிட்டிய அதே நேரம் "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" என்று பத்மாசனியின் மொபைல் அழைத்தது.

"ஹலோஓஓஓஓ! கீதா! அம்மா தான் பேசறேன்"

"..."

"ஹான்… நான்.. தனியா.. என் ரூம்ல தான் இருக்கேன்"

"...." அந்தப் பக்கம் என்ன செய்தி வந்ததோ தெரியவில்லை.

"என்ன விஷயம் மா? காலங்கார்த்தால கூப்பிட்டு ஏன் இப்படி கோபமா பேசற?"

என்றவர் அங்கே இருந்த மூவரையும் பார்த்த பார்வையில் அனல் தெரித்தது. அந்த பார்வை 'எத்தனை பெரிய விஷயத்தை என்னிடம் மறைத்திருகிறீர்கள்?' என்று கேளாமல் கேட்டது.

"ஸீ.. தேர் பா.. நங்கநல்லூரில் புயல் சின்னம் உருவாகியாச்சு..‌ லஞ்சுக்குள்ள அண்ணா நகர் வந்துடும்.. நீங்க சமாளிக்க ரெடி ஆகுங்கோ. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணின்டு இருப்பா. டைம் எயிட் தர்டி ஆச்சு பா.. நான் இப்போ கிளம்பினால் சரியா இருக்கும். பை பா. ப்ளீஸ் பா.. என் செல்ல அப்பா இல்ல… அம்மா கிட்ட நீங்களே சொல்லிடுங்கோ" என்று அவரது தாடையைப் பிடித்துக் கொஞ்சியவள் ஓடிப் போனாள். அவள் திரும்பி வரும் வரை அந்த புயல் அண்ணா நகரில் தான் மையம் கொண்டிருக்கும் என்பதை அவள் அறியவில்லை பாவம்.

தாய், தங்கை, மனைவி என்று யாரை எப்படிச் சமாளிப்பது என்று பெரிய ஆராய்ச்சியில் இறங்கி விட்டார் ரங்கராஜன்.

"இந்தாங்கோ! உங்க செகண்ட் டோஸ் காஃபி.

—-

அண்ணா நகர் கோபுரத்தின் அருகே இருந்த தனக்காகக் காத்துக் கொண்டிருந்த நண்பர்களுடன் "குட் மார்னிங் ஃப்ரண்ட்ஸ்! எல்லாரும் வந்தாச்சா? கிளம்பலாமா?" என்றபடி
ஐக்கியமானாள்.

இவளைக் கண்டதும் நண்பர் கூட்டம் கோரஸாக வாழ்த்தியது. ஆண்கள், பெண்கள் என கிட்டத்தட்ட பத்து பேர் கேஜி வகுப்பில் இருந்து ப்ளஸ் வரை ஒன்றாகப் படித்தவர்கள். அத்தனை பேரும் "அச்சோ அவங்களா? அவங்கெல்லாம் ஓவர் படிப்ஸ் க்ரூப் பா" என்ற வகையில் வருபவர்கள் தான். ப்ளஸ் டூ முடித்த பிறகு இன்ஜினியரிங் படிப்பை வெவ்வேறு கல்லூரிகளில் தொடர்ந்தவர்கள்.

நண்பர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பட்டமேலாண்மை படிப்பை முடித்து விட்டு இன்னும் சில நாட்களில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் மாத சம்பளமாக ஆறிலக்க ஊதியத்தைப் பெறக் காத்திருப்பவர்கள். அதில் முதல் இடம் பெறுபவர் யார் என்பது இன்றைய சந்திப்பில் தெரிந்து விடும். அது சுபிக்ஷாவாக இருக்கக் கூடும் என்பதே அனைவரின் அனுமானம். காரணம், அவள் படித்த கல்லூரி மற்றும் படித்த துறை. கூடுதலாக அவளைத் தேர்ந்தெடுத்த நிறுவனமும் ஒரு முக்கியக் காரணம்.

கிட்டத்தட்ட அனைவருமே என்ஜினியரிங்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சுபிக்ஷா மட்டும் புதிதாக அசுர வளர்ச்சி பெறும் டேட்டா சயின்ஸ் படித்தாள். ஆரம்பத்தில் அவ்வளவாக கேம்பஸ் செலக்ஷன் இல்லை தான். ஆனால் இப்போது அந்தப் பிரிவு தான் அநேக கம்பெனிகளின் அத்தியாவசிய தேவையாகிப் போனதில் நிலைமை தலைகீழாகிப் போனது.

"ஹேய் சுபி.. கங்கிராட்ஸ்.. very proud of you dear(உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு). பல வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறவங்களே அந்த கம்பெனில எப்படி நுழையறதுன்னு மண்டைய பிச்சிக்கும் போது நீ ஃபிரஷ்ஷரா ஈஸியா உள்ள நுழைஞ்சுட்ட. இதுக்காகவே நீ தனியா ட்ரீட் தரணும்" என்று ஆளாளுக்கு அவளைக் கட்டிப் பிடித்து, தோளோடு அணைத்து, கைலுக்கித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இவர்களின் கூச்சலில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்க்க, "ஹேய்! கொஞ்சம் வாயை மூடி பேசுங்க.. சுத்தி இருக்கற எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க பாருங்க."

"சுபி! உண்மையைச் சொல்லு. உன்னோட பேக்கேஜ் எவ்வளவு? நீ எங்கிட்ட பாதி கூட சொல்லலைன்னு தான் நினைக்கிறேன்" என்று ஆரம்பித்து வைத்தான் ஒருவன்.

இந்த விஷயத்தில் இவர்கள் வாய்மூடி இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்தவள், என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்க அவளைத் தற்காலிகமாக காப்பதற்கென்றே அவர்கள் ஏற்பாடு செய்திருந்த டெம்போ ட்ராவலர் வந்து சேர்ந்தது.

கிளம்பும் நேரத்தில் ஹரீஷ் அரக்கப் பார்க்க வந்து வண்டியில் ஏறிக் கொண்டான். சுபிக்ஷாவை முறைத்துக் கொண்டே அவளருகில் வந்தவன் கையில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள்களை சுபிக்ஷாவின் முன்னே விரித்து நீட்டினான். அவன் கண்களில் ஏன் மறைத்தாய் என்ற கேள்வி இருந்தது.

சுபிக்ஷா சொல்வதறியாது திகைத்து நிற்க "வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் துறை (data science and machine learning) மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இத்துறையில் இது வரை இல்லாத அளவுக்கு சுபிக்ஷா ரங்கராஜன் என்ற சென்னை மாணவிக்கு, இந்த வருடம் ஐஐடி சென்னையில் நடந்த கேம்பஸ் செலக்ஷனில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் சுமார்…. லட்சம் ரூபாய்கள்" என்று தமிழில் செய்திகளை வாசித்தான் ஹரீஷ்.

அங்கே தமிழ் தெரியாத சில நண்பர்களும் இருந்தார்கள். அதனால் இன்னொருவன் ஆங்கில செய்தித் நாளைப் பிடுங்கிச் சத்தமாக வாசித்தான்.

"IITM campus placements has been successfully completed for this
academic year. There is a huge opportunity for the new department data science and machine learning Highest package offered to Ms.Subiksha Rengarajan.. a Chennai girl. She was offered INR ….lacs" என்று அவன் சொன்ன தொகையில் நண்பர்கள் அனைவரது பார்வையும் மாறியது.. அது பெருமிதமா? பொறாமையா ??
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
73
சுபிக்கு படிப்பு இருக்கு, அது தந்த பெருமையும், கெத்தும் இருக்கு.
அதான் அந்த காலத்து பிரதிநிதியான பாட்டியப் பிடிகலப்போல...
 
Top Bottom