• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -16

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
320
நான் போடுற கோட்டுக்குள்ளே -16

சோஃபாவில் கண்மூடி அமர்ந்திருந்த தேவிகாவின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. சுபிக்ஷாவின் வீட்டில் இருந்து சற்று முன் தான் திரும்பி இருந்தார்கள். கிளம்பும் போது இருந்த கலாட்டாக்கள் எல்லாம் காணாமல் போய் திரும்பி வரும் போது அனைவரும் மௌனத்தைத் தத்தேடுத்திருந்தனர்.

முரளிதரனும் அவரது தம்பிகளும் போர்டிகோவில் பேசியபடி நின்றுவிட மற்றவர்கள் உள்ளே சென்றார்கள். ராஜஸ்ரீயும் அவளது சித்திகளும் உடை மாற்றி வருகிறோம் என்று சென்றுவிட அரவிந்தும் தோளில் தூங்கிய மகளுடன் அவர்களின் அறைக்குள் சென்றான்.

சூழ்நிலையை உணர்ந்து கொண்டவர்களாக ஸ்ரேயாஸ் உட்பட சிறியவர்கள் அனைவரும் மாடியில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டார்கள்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தளர்ந்து காணப்பட்ட தாத்தாவையும் பாட்டியையும் ஓய்வு தேவை என்று அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்றான் சம்பத். இருவரையும் படுக்க வைத்து கால்களை இதமாகப் பிடித்து விட்டான்.

என்ன பேசுவது என்று தெரியாமல் இருவருக்கும் பார்வையாலும் அவனது செய்கையாலும் ஏதோ ஒரு சமாதானத்தை அளித்தவன், இருவரும் உறங்கி விட்டார்கள் என்று உறுதி செய்த பின்பே வெளியே வந்தான்.

வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்த ஹாலைப் பார்வையால் வலம் வந்தவன், தனது தாயின் ஓய்ந்த தோற்றம் கண்டு வேகமாக அருகில் சென்றான். மூடிய கண்களின் பின்னே தெரிந்த உணர்வுப் போராட்டத்தை அறிந்து கொண்டவனாக அமைதியாகத் தாயின் மடியில் படுத்துக் கொண்டான்.

ஒரே ஒரு நொடி நேரம் கண்விழித்த தேவிகாவின் கைகளை எடுத்துத் தன் தலையில் வைத்த சம்பத், "அம்மா!" என்றான் அவனுக்கே கேட்காத குரலில். ஒட்டாத ஒரு புன்னகையுடன் மகனைப் பார்த்தவரது கண்கள் மீண்டும் மூடிக்கொண்டன. மகனது தலையைக் கோதிக் கொடுக்க ஆரம்பித்தது தாயின் கைகள்.

தாய் மகன் இருவருமே ஒரே விதமான உணர்ச்சியின் பிடியில் இருந்தாலும் அவர்களது மனம் வெவ்வேறு காலகட்டத்தில் பயணித்தது. தேவிகா கடந்த காலத்திற்குச் செல்ல சம்பத் தனது ஒளிமயமான (!?) எதிர்காலத்தை நோக்கிப் போனான்.

தேவிகா கூட்டுக் குடும்பத்தில் வளரவில்லை என்றாலும் அவளுக்கும் தாய், தந்தை இருவழியிலும் சொந்த பந்தங்கள் அதிகம் தான். அவரவர் வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் குடியேறி இருந்தவர்கள் நாள் கிழமை என்றால் ஏதோ ஒரு வீட்டில் ஒன்று கூடிவிடுவார்கள். தூரத்தில் இருந்தாலும் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி சொந்த பந்தங்களுக்கிடையே நல்ல பிணைப்பு இருந்தது. அவளது தந்தை தான் அனைவருக்கும் இளையவர் என்பதால் தேவிகா தான் குடும்பத்தின் கடைக்குட்டி. அனைவரும் அவளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள்.

உடன்பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதர சகோதரிகளின் அரவணைப்பில் பொறுப்புகள் ஏதும் இன்றி வளர்ந்த நிலைமை, திருமணம் என்று வந்த போது தலைகீழாக மாறியது. சேஷாத்ரி குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்த போது தேவிகா சற்று பயந்தபடியே தான் இருந்தாள். பிறந்த வீட்டில் இருந்து ஆயிரம் அறிவுரைகளோடு புகுந்த வீட்டில் காலெடுத்து வைத்தவளை ராஜலக்ஷ்மியின் அன்பும் ஆதரவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது.

விரைவில் அந்தக் குடும்பத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு, மூத்த மருமகளாகத் தனக்கான கடமைகளைத் திறம்படச் செய்ய ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் குடும்பம் மொத்தமும் தேவிகாவை அச்சாணியாகக் கொண்டு சீராக இயங்க ஆரம்பித்தது.

தேவிகா மற்றும் முரளிதரனின் திருமணத்திற்கு முன்பே நடந்த போது கோமளவல்லியின் திருமணம் நடந்திருந்தது. வீட்டில் மூத்தவள் என்பதால் தனது உரிமையையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்த முயன்று கொண்டே இருப்பாள் கோமளா. அவளது தங்கையும் தம்பிகளும் அண்ணன் மனைவியைப் பிரியத்துடன் அணுகினார்கள். அதற்கான அடித்தளத்தை மிகவும் ஸ்ட்ராங்காக சேஷாத்ரியும் ராஜலக்ஷ்மியும் போட்டிருந்தனர்.

"தேவிகா! கோமளா பூச்சூட்டலுக்கு நாள் பார்க்கணும். நான் வாத்தியாரைப் பார்த்துட்டு வரேன். யார் யாரெல்லாம் கூப்பிடறதுன்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு வைம்மா. மாப்பிள்ளை ஆத்துலயும் விசாரிச்சுட்டு மண்டபம் தேவையான்னு பார்க்கலாம்" என்று மாமனார் அவர் வேலைகளில் மருமகளை ஈடுபடச் செய்தார் என்றால்,

மாமியார், "தேவி! நீ முரளி கூட குமரனுக்குப் போய் அவளுக்கு ஒரு புடவை வாங்கிண்டு வந்துடு. மெரூன் கலர் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆறு கஜமே போறும். அவ எங்க ஒன்பது கஜம் கட்டிக்கப் போறா. அப்படியே ஜிஆர்டில போய் வெள்ளிக் காப்பும், தங்கக் காப்பும் வாங்கிடுங்கோ. நாம இரண்டு பேருமா இன்னொரு நாள் போய் கண்ணாடி வளையல் எல்லாம் வாங்கிண்டு வந்துடலாம்" என்று மருமகளை முன்னிறுத்தினார்.

"மன்னி! எங்க காலேஜ்ல அடுத்த வாரம் ஆனுவல் டே வரது. எல்லாரும் என்னைப் பாடச் சொல்றா. நல்ல பாட்டா சூஸ் பண்ணிக் கொடுங்கோ. நான் ப்ராக்டிஸ் பண்ணிக்கறேன்" என்று வந்த கனகவல்லியும்,

"மன்னி! என் டூர் விஷயத்தை அப்பா காதுல போட்டேளா? நீங்க சொன்னா அப்பா சரின்னு சொல்லிடுவா. உங்களைத் தான் மலை போல நம்பி இருக்கேன்" என்று வரும் மைத்துனன்மாரும்,

பிற்காலத்தில் அவர்களைத் திருமணம் செய்தவர்களும் என அனைவருக்கும் தேவிகா பிரியமானவளாகிப் போனாள்.

ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பமாக இருந்த போதிலும் காலத்தின் கட்டாயத்தால் சிறியவர்கள் சில பல சலுகைகளைப் பெற்றிருந்தார்கள்.

மொத்தத்தில் சேஷாத்ரி தம்பதிகள், தான் பெற்ற பிள்ளைகளுக்கும் அவர்களைத் திருமணம் செய்தவருக்கும் ஒரு பொழுதேனும் பாகுபாடு பார்த்ததில்லை என்பதால் குடும்பத்தில் குதூகலம் நிரம்பி வழிந்தது.

சமையல் முதற்கொண்டு வீட்டு வேலை என அனைத்திலுமே ஆணும் பெண்ணும் பாகுபாடின்றி பங்கிட்டுச் செய்யவே பழகிய குடும்பத்தில் பிரச்சினை என்று எதுவுமே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனாலும், அவற்றை எதிர்நோக்கிய விதத்தில் பெரிய அளவில் மனஸ்தாபங்கள் இன்றி, வந்த பிரச்சினைகள் எல்லாம் எளிதாக தீர்க்கப் பட்டன.

இதை இவர்கள் தான் செய்யனும் என்கிற வரை முறையோ, கண்டிப்போ எதுவுமின்றி இது நம் வீடு, எல்லா வேலையும் எல்லோரும் செய்யலாம் என்கிற எண்ணம் வந்தது.

ஞாயிறு அன்று அண்ணன் தம்பி குழந்தைகள் அனைவரின் ஸ்கூல் யூனிஃபாரம் துணிகளை யாரோ ஒருவர் அயர்ன் செய்து வைப்பார். இது என் குழந்தையின் துணி, இது என் வேலை என்று வேலை முடிந்ததும் போய் ரூமில் அடைக்கலம் ஆகும் எண்ணம் யாருக்கும் எப்போதும் இருந்ததில்லை.

கூட்டுக் குடும்பத்தில் பாகுபாடின்றி செய்யும் இது போன்ற சிறிய உதவிகள் தான் பல ஆண்டுகளாயினும் அவரவர் வீடு என்று வசதிக்கேற்ப தனியாகப் போனாலும் மொத்த குடும்பத்தையும் பிணைத்து வைத்திருக்கிறது.

மூத்த மருமகள் என்று தேவிகாவை முன்னிறுத்தும் ராஜலக்ஷ்மி மற்ற இருவரையும் கண்டுகொள்ளாமல் இருந்ததில்லை. வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் மூவரும் அவரவர் பங்கினைச் சிறப்பாகவே செய்தார்கள். தேவிகாவால் கலந்து கொள்ள முடியாத நிலைமை என்றால் மற்ற இருவரும் பொறுப்பேற்றுச் செய்து விடுவார்கள்.

ராஜஸ்ரீயின் திருமணத்தின் போது தேவிகாவுக்கு கருப்பை நீக்கப் பட்டிருக்க, அவரது ஓர்ப்படிகள் இருவரும் கல்யாண வேலைகளில் தொய்வில்லாதபடி பார்த்துக் கொண்டனர்.

தேவிகாவிடம் ராஜலக்ஷ்மி அடிக்கடி சொல்லுவார். "கல்யாணம் ஆன கையோட நாங்க ஊர் விட்டு ஊர் வந்துட்டோம். என் மாமியார் மாமனார் ஊரை விட்டு வரவே மாட்டேன்னு சொல்லிட்டா. அவாளை உட்காத்தி வச்சு சாப்பாடு போட எனக்குக் கொடுத்து வைக்கலை. கொடுப்பினைன்னு ஒன்னு இருந்தால் தான் மாட்டுப் பொண்ணு கையால சாப்பிட முடியும்னு என் மாமியார் அடிக்கடி சொல்லுவார். பகவான் புண்ணியத்தில் எனக்கு அந்தக் கொடுப்பினை இருக்கு."

சரியான நேரம் பார்த்து தேவிகாவின் ஞாபகத்தில் வந்த இந்த வரிகள் அவரை ஆட்டிப் படைத்தது.

"ஹூம்.. இப்படி ஒத்துமையா இருக்கறதைப் பார்த்து எத்தனை பேர் கண்ணு போடறாளோ. அடுத்த தலைமுறை எப்படி இருக்குமோ. சம்பத்துக்கு அமையற பொண்ணைப் பொறுத்து தான் எல்லாமே" என்று அவர்கள் அடிக்கடி பேசிக்கொண்ட போது தோன்றாத கலவரம் எல்லாம் இப்போது நிதர்சனத்தை எதிர்நோக்கும் போது தோன்றியது.

கூட்டுக் குடும்பத்தில் அதன் அருமை பெருமைகளை தெரிந்து வளர்ந்த காரணமோ இல்லை இயல்பிலேயே மனிதர்களை மதிக்கத் தெரிந்ததாலோ ராஜஸ்ரீ தனது புகுந்த வீட்டில் நன்றாகவே பொருந்திப் போனாள். பல நேரங்களில் பெண்ணியம் பேசுபவள்,
கல்யாணமான புதிதில் என்னடா இவ்வளவு மார்டனாக இருக்கிறாளே குடும்பத்திற்கு ஒத்து வருவாளா என மாமியாரையே குழப்பியவள் சீக்கிரமே அவரது வாயால் "உங்க அப்பா அம்மா உன்னை நன்னா வளர்த்திருக்கா" என்ற பாராட்டைத் தனக்கு மட்டும் அல்லாமல் தன்னைப் பெற்றவருக்கும் சேர்த்தே வாங்கிக் கொடுத்தாள்.

அவள் குழந்தைகளை வளர்க்கும் பாங்கு, இதமாகப் பேசும் விதம், உறவுகளைத் தன் குழந்தைகளுக்கு நல்லதாக அறிமுகப்படுத்தும் மரியாதை என பார்ப்பவரிடமெல்லாம் மருமகளின் புகழைப் பரப்பும் அளவுக்குப் பெயரெடுத்திருந்தாள் அவள்.

அவளது மாமியாருக்கு ஆபரேஷன் ஆகி ஹாஸ்பிடலில் இருந்தபொழுது வீட்டையும் ஹாஸ்பிடலையும் அழகாக மேனேஜ் செய்தாள். குழந்தையை வைத்துக் கொண்டு வீடு, அலுவலகம் இரண்டையும் கவனித்து, மாமியாரையும் கவனித்துக் கொண்டாள்.

ஹாஸ்பிடலில் அவளை பார்த்த செவிலியர்கள், டாக்டர்கள் கூட வியந்துதான் போனார்கள் .

"முதலில் உங்கள் மகள் தான் என நினைத்தேன், உங்கள் மருமகளா? இவ்வளவு அருமையான பெண் மருமகளா கிடைக்க நீங்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று கூறியதில் ராஜஸ்ரீயின் மாமியார் பூரித்துப் போனார்.

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு மாட்டுப் பொண்ணா வரணும்" என்று அவர் உருக,

"அம்மா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!" என்று அவரது மகள் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்த தேவிகாவிற்கு சஞ்சலம் கூடியது ஒழிய எள்ளளவேனும் குறைந்தபாடில்லை. "எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்" என்ற வரிகள் வேறு சம்பந்தம் இல்லாமல் ஞாபகம் வந்து மேலும் குழப்பியது. நான் நல்லதைத் தானே விதைத்தேன், எனக்கு ஏன் இப்படி என்ற எண்ணம் வந்து மேலும் வருத்தியது.

அனுராதா போட்ட அத்தனை கண்டிஷன்களுக்கும் ஒத்துப் போனவர்கள், தனிக்குடித்தனம் வைத்து விடவேண்டும் என்பதில் தான் சற்று முரண்பட்டார்கள். அவர்களது வீடே இரண்டு மாடிகளுடன் பத்து குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்ற அரண்மனை போல இருக்க தனிக்குடித்தனமா என்று தான் ஆளாளுக்கு நினைத்தார்கள்.

அவர்களுக்கும் ப்ரைவஸி தேவை என்று அனுராதா ஆணித்தரமாகக் கூற, ஒரு தளம் முழுவதையும் மகனும் மருமகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் யாரும் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூட முரளிதரன் ஒரு யோசனை சொன்னார்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு இரண்டு சமையல் செய்ய முடியாது, பெண்ணைப் பார்க்க நாங்கள் வரும் போது சங்கடமாக இருக்கும் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி அனுராதா பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

பிரியமாக வளர்த்த ஒரே மகன், அனைவருக்கும் பிரியமானவன், மிகவும் பொறுப்பானவன், அவனே ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லும் போது சந்தோஷமாகத் திருமணம் செய்யவே குடும்பத்தில் அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால், அந்தக் குடும்பமே திருமணத்திற்குத் தடையாக இருக்கிறது என்றால்? இன்றைய காலகட்டத்தில் ஒரே ஊரில் தனிக்குடித்தனம் செல்லும் இளையவர் பெருகி விட்டார்கள். உறவு நிலைக்க வேண்டுமானால் அதுவே சிறந்த வழி என்று அறிஞர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அடுத்த வீட்டில் நடந்த போது சாதாரணமாகத் தெரிந்த விஷயம் நம் வீட்டுக் கூடத்திற்கு வரும் போது பூதாகாரமாகத் தெரிந்தது.

இத்தனைக்கும், பெண் பார்க்க போகும் முன்பே ராஜலக்ஷ்மி பல விதங்களில் மருமகளைத் தயார்படுத்தி இருந்தார். சுபிக்ஷாவைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டவர், அவள் சம்பத்தின் சாய்ஸ் என்று சொல்லவில்லை. மெட்ரிமோனியில் வந்த வரன், ஒரே அலுவலகத்தில் அதுவும் சம்பத்தின் கீழ் வேலை செய்பவள் என்று தெரிந்ததும் பெரியவர்களுக்கு வந்த ஆர்வம் என்றே சொல்லி இருந்தார்.

பெண் பார்க்க நன்றாக இருக்கிறாள், நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம், குடும்பமும் நல்ல குடும்பம் தான். ஆனாலும் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறதே! அவள் சம்பத்தின் சாய்ஸ் என்று தெரிந்தால் தேவிகாவின் நிலை என்னவாக இருக்கும்? அப்போது முடிவெடுக்க எளிதாக இருக்குமோ?

இப்படி தேவிகா குழம்பிக் கொண்டிருந்த வேளையிலும் அவரது கை மடியில் படுத்திருந்த மகனின் தலையைக் கோதிக்கொண்டே இருந்தது. தாயின் நிலையை முழுமையாக அறிந்து கொள்ளாத சம்பத் அவனது தனி உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான்.

பாஸஞ்சர் டிரயின் போல நகர்ந்து கொண்டிருந்த அவனது வாழ்க்கை, கடந்த இரண்டு மூன்று வாரங்களில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறதோ என்ற சந்தேகம் அவனுக்கு.

அன்றொரு நாள் அலுவலகத்தில் திடீரெனத் தோன்றிய காட்சி மாற்றங்களால், நீறு பூத்த நெருப்பு போல மனதுக்குள் புதைந்து கிடந்த ஆசை எரிமலையாக விஸ்வருபம் எடுத்து நின்றது. விளைவு, அவளது புரோஃபைலை ஆர்வமாக ஆராயத் தூண்டியது. சந்தோஷமாகவே அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தவன் சீக்கிரமே சோர்ந்து போனான்.

இன்று தோன்றிய ஆர்வம் தானே என்று விட முடியாமல் அவளைக் கண்ட முதல் நாளில் இருந்து அடக்கி வைத்த ஆசை ஆட்டிப் படைத்தது. (விதியாகப் பட்டது வலியது.. வேறென்ன சொல்ல!?)

இரவு முழுவதும் தூங்காமல் தவித்தவன், காலையில் எழுந்த போது நான்கு நாட்கள் காய்ச்சலில் விழுந்து எழுந்தவன் போல இருந்தான். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து வீட்டுப் பெரியவர்களை புருவம் உயர்த்த வைத்தது. சிவந்த கண்களுடன் சுரத்தே இல்லாமல் வந்தவனைக் கண்ட ராஜலக்ஷ்மி கணவனிடம் கனகாரியமாகத் தனது சந்தேகத்தை எழுப்பினார்.

"ஏன்னா! நம்ம பேரனைக் கவனிச்சேளா? நேத்து ஆஃபீஸ்ல இருந்து வரும் போது அவன் மூஞ்சில ஒரு பிரகாசம் தெரிஞ்சதே. ஒரு நாளும் இல்லாத திருநாளா பிரமாதமா பாட்டெல்லாம் பாடிண்டு வந்தான். நான் கூட யாரையோ பார்த்து அவனுக்கு மணியடிச்சு பல்ப் எரிஞ்சாச்சுன்னு நம்பினேனே.. இப்போ என்னடான்னா எதையோ பறிகொடுத்தவனாட்டம் வந்து நிக்கறான். என்ன விஷயமா இருக்கும்? இதுக்கு தான் நேத்தே அவன் கிட்ட கேட்கலாம்னு சொன்னேன். நீங்க தான் அவனே சொல்லுவான்னு என்னைத் தடுத்துட்டேள். இப்போ, அவன் கிட்ட எப்படிக் கேட்கிறது?"

"வாயால தான் கேட்கணும்.." என்று நேரம் காலம் தெரியாமல் ஜோக்கடித்த சேஷாத்ரி மனைவியின் முறைப்பில் அடங்கிப் போனார்.
"நீ மட்டும் மணியடிச்சது.. பல்ப் எரிஞ்சதுன்னு லேட்டஸ்ட்டா பேசு.. நானும் பதிலுக்கு எதையாவது சொன்னா உனக்குப் பொறுக்காதே.." என்று வாய்க்குள் முணுமுணுத்தவர் தொடர்ந்து பேசினார்.

"ராத்திரி எல்லாம் அவன் ரூம்ல லைட் எரிஞ்ச போதே சந்தேகப் பட்டேன். ஏதோ தீவிர ஆராய்ச்சில இருந்திருக்கான். ரிசல்ட் என்னவோ தெரியலை. அதான் இப்படி காலங்கார்த்தால பிடில் வாசிக்கறான்னு நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் இன்னைக்கு தெரிஞ்சுக்காம விடறதில்லை" என்று சபதம் செய்தவர் பேரனின் வாயால் விஷயத்தை வாங்குவதற்குள் நொந்து போனார்.

கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த பேரனுக்கு இருபுறமும் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவனே வாய் திறந்தான்.

"உங்க கேள்வி என்னன்னு நேக்குப் புரியறது தாத்தா. ஆனால் அந்த கேள்விக்கான பதில் எனக்கே தெரியலை."

அப்போதும் பெரியவர்கள் இருவரும் அமைதி காக்க, "எவ்வளவு நேரம் தான் இப்படி உட்கார்ந்துண்டு இருக்கறது? வெயில் ஜாஸ்தியாறது பாருங்கோ. கிளம்பலாம்" என்று எழுந்து நின்றவன் பெரியவர்களின் முகத்தில் இருந்த தீவிரத்தை உணர்ந்து மறுபடியும் அமர்ந்து கொண்டான். இருவரது மௌனமும் அவனை ஏதோ செய்தது. முயன்று உற்சாகத்தை வரவழைத்தவன்,

"ம்ச்.. தாத்தாஆஆஆ.. சேஷாஆஆஆ.. இப்போ எதுக்கு இந்தப் பார்வை..
நான் வேணும்னா என்ன பார்வை உந்தன் பார்வைன்னு பாடட்டுமா? லொகேஷன் கூட கரெக்டா இருக்கு" என்று சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர் இல்லாததைக் கண்ட ராஜலக்ஷ்மி நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

"ராஜா! நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்றயா?" என்று கேட்டுப் பேரனின் சம்மதத்தைப் பெற்றவர், "பொண்ணு பேரென்ன?" என்றார்.

"சுபிக்ஷா" என்று அவனது வாய் தானாக பதில் கொடுக்க சட்டென்று சுதாரித்தவன், "எந்தப் பொண்ணு பாட்டி?" என்றான்.

"கண்ணா! போதும், இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம். நேத்து சாயங்காலம் இருந்த உன்னோட உற்சாகம் கார்த்தால காணாமல் போனதுக்கு அந்த சுபிக்ஷா தான் காரணம்னு தெரியறது. என்ன குழப்பமா இருந்தாலும் யார் கிட்டயாவது ஷேர் பண்ணின்டா ஒரு தீர்வு கிடைக்கும். இந்த லோகத்திலே தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் கிடையாது. நீ தைரியமா சொல்லு.. இரண்டுல ஒன்னு பாத்துடுவோம்" என்று தாத்தா அவனுக்கு வார்த்தைகளால் தைரியம் கொடுத்தார்.

"இல்ல தாத்தா. வேண்டாம்.. நேக்கு அவளைப் பார்த்ததுல இருந்தே பிடிக்கறது தான். ஆனால்… அவ நம்மாத்துக்கு செட் ஆக மாட்டா. ஸோ.. இந்தப் பேச்சை இத்தோட விடுங்கோ. இரண்டு நாள்ல நான் தெளிவாகிடுவேன்"

"நீயே எப்படி நம்மாத்துக்கு செட் ஆக மாட்டான்னு முடிவு பண்றே.. அவ கிட்ட பேசினியா?"

"பேசினியாவா? இதையெல்லாம் நேர்ல வேற பேசணுமா? அதான் மெட்ரிமோனி சைட்லயே அவா சைட் கண்டிஷன்ஸ் எல்லாம் கிளியரா சொல்லி இருக்காளே.. அதுக்கு மேல என்ன வேணும்?" பேரனின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் விஷயம் பெரியது என்றது.

"ஓ… அப்படி என்ன கண்டிஷன்ஸ் போடறா.. சொல்லேன் கேட்போம்"

"நீ சங்கடப்படுவ பாட்டி.. வேண்டாம்னா விடேன்"

"அப்படி எல்லாம் விட முடியாது.. நாங்க தான் அந்தக் காலத்திலே கேள்வி கேட்காமல் எல்லாத்துக்கும் சரின்னு மண்டையாட்டி வச்சுட்டோம். இப்போ உள்ள பொண் குழந்தைகள் ரொம்பவே தெளிவா சிந்திக்கறா. நீ தைரியமா சுபிக்ஷாவைப் பத்தியும் அவளோட கண்டிஷன்ஸ் பத்தியும் சொல்லு.. என்னன்னு தான் நாங்களும் தெரிஞ்சுக்கறோம்" என்றார் ராஜலக்ஷ்மி.

"நீ வேற.. ஏன் பாட்டி..?" என்று அலுத்துக் கொண்டாலும் சுபிக்ஷா பற்றிய விவரங்களையும் அவளது கண்டிஷன்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவன் தாத்தா பாட்டியின் அதிர்ந்த பார்வையில் நிறுத்திவிட்டான். சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

அவன் சொன்ன முக்கிய விஷயங்கள் இரண்டு. முதலாவது.. பையனுக்கு உடன் பிறந்த அண்ணா அல்லது தம்பி இருக்க வேண்டும்.. இரண்டாவது.. திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாகதன் தனிக்குடித்தனம் போக வேண்டும்.

"இந்த கண்டிஷனை எல்லாம் ஒரு ஓரமா வச்சிடு. ஒரு வருஷத்துக்கு மேலயே அந்தப் பொண்ணு கூட ஒரே ஆஃபீஸ்ல இருக்க. வேலை விஷயமா இருந்தாலும் நிறைய பேசியிருப்ப.. பொண்ணு எப்படின்னு கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கும்.. நோக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா? அதை மட்டும் சொல்லு" என்று கேட்ட பாட்டியை ஆச்சரியமாகப் பார்த்தான் சம்பத்.

"பாட்டி… அவளை எனக்குப் பிடிச்சுத்தான் இருக்கு.. அதுக்காக அவா சொல்ற எல்லாத்துக்கும் மண்டையாட்ட என்னால முடியாது. கண்டிஷன்ஸ் போட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சா.. அது நன்னாவா இருக்கும்? இப்போ எல்லாத்துக்கும் நாம சரின்னு சொல்லிட்டா அதுவே அவாளுக்கு அட்வான்டேஜா போயிடும்.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஒரு கண்டிஷன் வந்தா நான் என்ன ஆறது? உள்ளூர்லயே இருந்துண்டு நம்ம ஆத்த விட்டுத் தனியா இருக்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா? இம்பாஸிபிள் பாட்டி.. இந்தப் பேச்சை இத்தோட விடுங்கோ.." படபடவென்று பொரிந்து தள்ளி விட்டான் சம்பத்.

"அடேங்கப்பா.. இந்தப் பையன் இவ்வளவு நீளமா பேசி என்னைக்காவது பாத்திருக்கியா ராஜி?" என்று கிண்டல் செய்த தாத்தா, "உனக்கு அவா தனியா போகச் சொல்றது தானே பிடிக்கலை.. நாம பேசிப் பார்ப்போம். இரண்டு பொண்ணைப் பெத்தவான்னு சொல்ற, அவாளுக்கும் ஃப்யூச்சரைப் பத்தின கவலைகள் இருக்குமில்லையா? சுதந்திரமா பொண்ணாத்துக்கு வந்துட்டுப் போகணும்னு நினைக்க மாட்டாளா? நல்லபடியா மாப்பிள்ளைகள் வாய்ச்சுட்டா பரவாயில்லை.. இல்லேன்னா கஷ்டம் தானே.. இப்படி ஒரு கண்டிஷனா சொல்லிட்டா பிரச்சினை இல்லைன்னு நினைச்சிருக்கலாம். நீ லண்டன் போயிட்டு வரதுக்குள்ளே இதுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.. எல்லாத்தையும் அந்த பகவான் பார்த்துப்பான். கவலைப் படாதே.." என்று பெண் வீட்டார் சார்பாகவும் தானே பேசி பேரனுக்கு ஆறுதலையும் சேர்த்துக் கொடுத்தார்.

அதன்படியே சுபிக்ஷாவின் வீட்டில் தாத்தா பாட்டியே பேசி பெண் பார்க்க ஏற்பாடு செய்துவிட, கண்டிஷன்களில் ஏதாவது மாற்றம் இருக்காதா என்று எதிர்பார்த்து வந்த சம்பத் சுபிக்ஷாவின் வாய்மொழியாக மீண்டும் ஒரு முறை அவற்றைக் கேட்ட போது திணறித் தான் போனான்.

"பையனுக்கு கூடப் பிறந்த அண்ணா, தம்பின்னு யாராவது இருக்கணும்னு கேட்டதைக் கூட உங்களுக்காக நாங்க காம்ப்ரமைஸ் பண்ணிக்க ரெடியா தானே இருக்கோம். அதே மாதிரி எனக்காக நீங்க ஒரு விஷயத்தை அக்சப்ட் பண்ணிக்கக் கூடாதா?" என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் கேட்கும் அந்த ஒரு விஷயம் தானே அவனுக்குப் பெரியது.

பிற்காலத்தில் மாமனார் மாமியாரின் பொறுப்பு மொத்தமாக தனக்கே வந்துவிடக் கூடாது என்று அவள் போட்டிருந்த கண்டிஷன் அது. ராஜஸ்ரீ பற்றிய விவரங்கள் தெரிந்தவுடன் அண்ணா அல்லது தம்பி என்பது அக்கா அல்லது தங்கை என்றாலும் பரவாயில்லை என்று மாறியதால் வந்த காம்ப்ரமைஸ் இது.

"ஆக்சுவலா ஆத்தோட இருக்கற மாதிரி மாப்பிள்ளை வேணும்னு தான் முதல்ல நினைச்சோம். அம்மா தான், இந்தக் காலத்தில் எல்லாருக்கும் அவாளோட ப்ரைவஸி முக்கியம்னு சொல்லிட்டா. அதனால தான் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு பண்ணினோம். நாம தனியா இருந்தால் தான் எங்க அப்பா அம்மா சகஜமா வந்து போக முடியும்"

"நம்ம ஆத்துல நிச்சயமா உங்க அம்மா அப்பா ஃப்ரீயா ஃபீல் பண்ணுவா. அதை என்னால நிச்சயமா சொல்ல முடியும்." அவன் ஜாக்கிரதையாக வார்த்தைகளைக் கையாள அவளோ அவனை விடக் கில்லாடியாக இருந்தாள்.

"உங்க ஆத்து மனுஷாளைப் பத்தி நான் எதுவும் சொல்லலை. அவா எப்படின்னு தெரியாமல் நான் எதுவும் கமெண்ட் பண்ணவும் முடியாது. ஆனால் பொண்ணு ஆத்துக்கு வர்றது வேற சம்பந்தி ஆத்துக்கு வர்றது வேற தானே.. "

"....." என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் நிற்க,

"இப்பவே பதில் சொல்லணும்னு ஒன்னும் அவசரம் இல்லை. டைம் எடுத்துண்டு யோசிச்சு சொல்லுங்கோ." என்று அவளே பேச்சை முடித்து விட்டாள்.

கூடவே, "என்னோட பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்கோளேன். உங்களுக்கே நான் சொல்றது சரிதான்னு புரியும்" என்றாள் முத்தாய்ப்பாக.

"ஸீ யூ சூன்.. டேக் கேர்.." என்று புன்னகையுடன் வெளியே வந்து விட்டவனுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. எப்படியாவது தனது கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டுவிட மாட்டானா என்று எதிர்பார்க்கிறாள் என்பதையும் கண்டுகொண்டான்.

அவனுக்குமே பெண்ணைப் பெற்றவர்களின் நிலை புரிந்து தான் இருந்தது. பெண்ணுக்கும் பெற்றோரைக் கவனிக்கும் கடமையும் உரிமையும் இருக்கிறது என்பதை நம்புவன் அவன். மனைவிக்கு எல்லாவிதத்திலும் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவன். அதற்காக, எண்பதுகளில் இருக்கும் தாத்தா, பாட்டியையும் அறுபதை நெருங்கும் தாய், தந்தையையும் தனியே விட வேண்டும் என்ற நினைப்பே அவனுக்குக் கசந்தது. அதே சமயம் மனது சுபிக்ஷாவில் நிலைத்து நின்றது.

பெண் பார்க்க வந்தவர்களை அனுராதா நடத்திய விதமும் அவர்களிடம் பேசிய விதமும் சம்பத்தின் வீட்டில் ஏற்கனவே ஒரு பேசுபொருளாக மாறியிருந்தது. அதையும் தாண்டி அவன் சுபிக்ஷாவின் கண்டிஷனை ஏற்றுத் தனியே செல்கிறேன் என்று சொன்னால்.. என்னென்ன நடக்குமோ??

தாயின் மடியில் படுத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் இவன் தவித்துக் கொண்டிருந்த வேளையில், அனுராதாவும் சுபிக்ஷாவும் தங்கள் கண்டிஷனை பலப்படுத்த இன்னும் என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தனர்.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
68
அடக்கடவுளே, கண்டிஷன பலப்படுத்தப் போறாங்களா?🤔 சுத்தம்.

சுபி எப்படிப்பட்ட அழகான வீடு காத்திட்டு இருக்குன்னு தெரியாம, உன் வாழ்க்கையை உன் அம்மா பேச்சைக்கேட்டு கெடுத்துக்காத.
 
Top Bottom