நான் போடுற கோட்டுக்குள்ளே - இறுதி அத்தியாயம்
மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றி இருந்த அனைவரும் கிளம்பி விட்டனர். வேலை பார்த்தது போதும் என்று லேப்டாப்பை மூடிவைத்து விட்டு மொபைலைக் கையில் எடுத்தாள் சுபிக்ஷா. கைகள் தானாக ஓலா, யூபர் என்று கார்களைத் தேடினாலும் அவளுக்கு ஏனோ வீட்டுக்குச் செல்லும் ஆசையே இல்லை. நேரம் தான் ஓடியதே தவிர எந்த காரும் புக் ஆகவில்லை. அவளது மனதைப் புரிந்து கொண்டது போல ஓலாவும் யூபரும் கூட கார்களைத் தேடிக் கொண்டே தான் இருந்தன.
"ம்ச்..இதை நம்பி வந்திருக்கக் கூடாதோ?" என்று எரிச்சலாக வந்தது.
அவர்களின் ஃப்ளாட் நடக்கும் தூரம் தான், ஆனால் அதைத் தான் சம்பத் காலி செய்து வாடகைக்கு விட்டு விட்டானே. எல்லாப் பொருட்களையும் பெசன்ட் நகர் வீட்டுக்கு எடுத்துச் சென்ற பிறகே அந்த விஷயத்தை மனைவிக்குத் தெரிவித்தான் அவன், அதுவும் ஒரு வாட்ஸ்அப் செய்தியின் மூலம். அதைப் பார்த்த போது சம்பத் எல்லா வழிகளிலும் தன்னைக் கார்னர் செய்வதாகவே அவளுக்குத் தோன்றியது. அவளது கோபத்தைக் காட்ட முடியாமல் அவளது உடல்நிலை தடுத்து விட்டது.
நான்கு நாட்களாகத் தனது பிறந்த வீடு இருந்த நிலையைப் பார்த்துத் தனது விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு அலுவலகம் வர ஆரம்பித்திருந்தாள்.
இன்று காலையில், அவர்களின் வழக்கமான நேரத்தில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக லிஃப்ட்டில் ஏற, என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள் சுபிக்ஷா. முதல் நாள் இரவு பேசிய போது கூட வீட்டில் நடக்கும் விஷயங்களையோ விடுமுறையைக் கான்சல் செய்ததையோ அவனிடம் சொல்லி இருக்கவில்லை.
சம்பத் அப்படி எல்லாம் தயங்கி நிற்கவில்லை. 'இவளுக்கு இன்னும் ஒரு வாரம் லீவ் இருக்கே?' என்று யோசித்தவன், அதையே வார்த்தைகளில் வெளிப்படுத்த, "நான் தான் கேன்சல் பண்ணிட்டேன்" என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் சுபிக்ஷா. "ஓ.." என்ற ஒற்றை எழுத்துடன் அவன் நிறுத்திக் கொண்டான். கையில் லேப்டாப் பையை மட்டுமே வைத்திருந்தவளை மேலும் கீழுமாகப் பார்வையிட்டவன் அமைதியாகவே நின்று கொண்டான்.
லிஃப்ட் அவர்களின் தளத்தை அடைந்த போது சுபிக்ஷாவை அவளது தோழிகள் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஆரம்பிக்க, ஒரு தலையசைப்புடன் சம்பத் அவனது அறைக்குள் சென்று விட்டான். நாள் முழுவதும் அவளருகில் வராவிட்டாலும் அவளது டேபிளுக்கு அவ்வப்போது வந்த ஜுஸ் மற்றும் உணவு வகைகளில் தெரிந்த அவனது அக்கறையில் சுபிக்ஷாவிற்கு கண்கள் கலங்கியது. காலையில் அவன் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தது.
அன்று முழுவதும் அவன் மீட்டிங்கில் இருப்பான் என்று அவளுக்குத் தெரியும். அதற்கிடையில் தன்னையும் கவனித்துக் கொண்டவனை நினைக்க நினைக்க மனம் கனத்துப் போனது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவளை இயல்பாக இருக்க விடவில்லை. எதற்கெடுத்தாலும் கண்கலங்க வைத்துக் கொண்டிருந்தது.
சுபிக்ஷாவைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தின் அவஸ்தையாக நாள் முழுவதும் பசியும் கூடவே ஒரு சோர்வும் மிகுந்திருந்தது. அகோரப் பசியாக இருந்தது, அதே நேரம் எனக்குப் பிடித்தது என்று எதையும் சாப்பிடவும் முடியவில்லை. இதுவரை அவளுக்கு பிடிக்காத லிஸ்டில் இருந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது.
"அம்மா! எனக்கு எண்ணெய் கத்தரிக்காய் பண்ணித் தரயா?" என்று கேட்ட போது அவளை வேற்றுக் கிரக வாசி போலப் பார்த்து வைத்தாலும் சுபிக்ஷா கேட்ட உணவுகளைச் செய்து கொடுத்தாள் அனுராதா. எல்லாம் அவளது இளைய மகள் வரும் வரை தான்.
மானஸாவின் வரவு அங்கே ஏற்படுத்திய தாக்கத்தால் சுபிக்ஷா மீதான அனுராதாவின் அக்கறை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. கர்ப்பமாக இருக்கும் பெண் என்ற ஞாபகமே இல்லாதது போல நடந்து கொண்டாள்.
நேற்று இரவே இவள் அலுவலகம் செல்வது பற்றிச் சொன்ன போது கூட சரி என்று தலையசைத்து வைத்தாளே தவிர அவளது மதிய உணவைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இவளுக்கும் கேட்பதில் இஷ்டம் இல்லை, அந்த அளவுக்கு தாயின் மறுமுகத்தைக் கண்டதில் ஆடிப்போயிருந்தாள்.
அலுவலக காண்டீனில் பார்த்துக் கொள்ளலாம் என்று காலை உணவுடன் கிளம்பி விட்டாள். சம்பத்திடம் கேட்க அவளது ஈகோ சம்மதிக்கவில்லை. இவள் கேட்காமலே அவன் புரிந்து கொண்டான் என்று நினைத்த போது எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
சோர்வுடன் மேசை மீது தலைசாய்த்தவளின் கண்கள் தன்னிச்சையாக சம்பத்தின் அறையை நோக்கிய போது அவனும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இவளைப் பார்த்துப் புருவம் உயர்த்தியவன், "ஆர் யூ ஓகே சுபி? ஏன் இன்னும் கிளம்பலை?" என்ற கேள்வியுடன் அருகில் வந்தான்.
"ஹான்… ஐயாம் ஓகே.. cab எதுவும் கிடைக்கலை. அதான்.." என்று இழுத்தாள் அவள்.
"வாட்!! Cabஆ? உன் வண்டி என்னாச்சு? சே.. ஐயாம் ஸாரி.. நீ இப்போ வண்டி ஓட்டறது ரிஸ்க்.. பட் மாமா ட்ராப் பண்ணி இருக்கலாமே! இப்போ எப்படி போவ? எனக்கு இன்னும் ஒரு கால் இருக்கே! கார்த்தாலயே கேட்கணும்னு நினைச்சேன், நீ எதுக்கு இப்படி சடனா ஆஃபீஸுக்கு வந்திருக்க? முடியலேன்னு தானே லீவ் போட்ட? அப்படியே லீவைக் கேன்சல் பண்ணினாலும் வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கி இருக்கலாமே." கேள்வியும் நானே பதிலும் நானே என்று பேசிக்கொண்டே சென்றான் சம்பத்.
எதற்கும் பதில் சொல்லாமல் அமைதி காத்த மனைவியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவன், "ம்ச்.. சுபி! இப்போ என்ன தான் செய்யப் போற?" என்று அடுத்த கேள்வியை கேட்டான். அதற்கு அவள் சொன்ன பதிலில் மனைவியை வினோதமாகப் பார்த்து வைத்தான்.
"நான் இன்னைக்கே உங்க ஆத்துக்கு வந்துடவா? நீங்க கிளம்பற வரைக்கும் இங்கேயே வெயிட் பண்றேன்." அந்த நிமிடம் வரை அதைத் தன் வீடு என்று அவளால் நினைக்க முடியவில்லை. அதையே அவளது வார்த்தைகளில் வெளிப்படுத்த, அவனுக்கோ கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
"வாட்!! ஐ கான்ட் அன்டர்ஸ்டேன்ட் யுவர் ஸ்டேட்மென்ட். கம் அகெயின்!"
"நீங்க சரியா தான் கேட்டேள், உங்க ஆத்துக்கு வரேன்னு சொன்னேன்."
"எங்க ஆத்துக்கு நீ ஏன் வரணும்?" சம்பத்தின் வார்த்தைகளில் காரம் எப்போதையும் விடத் தூக்கலாகவே இருந்தது.
"எங்க ஆத்துக்கு" என்று அந்த வார்த்தைகளில் அவன் கொடுத்த அழுத்தம் அவனது கோபத்தின் காரணத்தை உணர்த்தினாலும் சுபிக்ஷா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
"இப்போ எதுக்கு இவ்வளவு கோபப் படறேள்? இப்போ எங்க ஆத்தை நீங்க எப்படி மென்ஷன் பண்ணுவேள்? உங்க அம்மா வீடு, உன் பிறந்த வீடு.. இந்த மாதிரி தானே! உங்களுக்கு ஒரு ஃபார்முலா, அதுவே லேடீஸ்னு வரும் போது நாங்க டக்குன்னு இது நம்ம வீடுன்னு மாமியார் ஆத்தை நினைக்கணுமா? என்னைப் பொறுத்தவரை அது உணர்ந்து சொல்ல வேண்டிய விஷயம். நான் க்ளியராவே சொல்றேன். எனக்கு இன்னும் அது என் வீடுன்னு ஃபீல் வரலை. அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். அப்படி இருக்கும் போது சும்மா பேச்சுக்குக் கூட என் வீடு, நம்ம வீடுன்னு என்னால சொல்ல முடியாது. மேபி இன் ஃப்யூச்சர், எனக்கு அப்படி ஒரு ஃபீல் வந்தால் நானே என்னை மாத்திப்பேன். அப்படி சொன்னால் தான் நான் அந்த வீட்டுக்கு வரணும்னு நீங்க நினைச்சால்…."
தனது நீளமான பேச்சை முடிக்காமல் நிறுத்திய சுபிக்ஷாவை இயலாமையோடு பார்த்தான் சம்பத். அவளது நிலையை, அவள் தெளிவாகவே சொல்லி விட்டாலும் அவனது மனம் சமாதானம் அடைய மறுத்தது.
"ம்ம்.. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட்" என்று முடித்துக் கொண்டு மேலே எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தான். சுபிக்ஷா பற்றி அவனது வீட்டில் பெரியவர்கள் எந்த கேள்வியும் வாயைத் திறந்து கேட்கவில்லை என்றாலும் அவர்களது பார்வையில் வெளிப்படும் ஆர்வம் அவனை ஊமையாக்கிக் கொண்டிருந்தது. இன்று அவளே வருகிறேன் என்று சொல்லி விட்ட போதிலும் அதில் இருந்த ஒட்டாத தன்மை அவனை முடிவெடுக்க முடியாமல் செய்தது.
நேரம் நகர்ந்ததே தவிர சம்பத் வாய் திறந்து அவனது சம்மதத்தையோ மறுப்பையோ சொல்லவில்லை. சுபிக்ஷாவின் பொறுமை கரையைக் கடக்கக் காத்திருந்த வேளையில், "உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லியாச்சா?" என்று கேட்டான் சம்பத்.
இல்லை என்ற தலையாட்டல் பதிலாகக் கிடைத்தது. ஏன் என்று கேட்டவனுக்கு மௌனமே பதிலானது.
"லுக் சுபி! நீ இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணமோ தெரியலை. ஆனால் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லாம இப்படி கிளம்பறது சரியில்லை. நீ இப்போ உங்க ஆத்துக்குப் போ. ஒரு நல்ல நாள் பார்த்து நானே வந்து அழைச்சிண்டு போறேன்" என்று சொன்னபோதே அவளை எப்படித் தனியாக அனுப்புவது என்ற கவலை வந்தது அவனுக்கு.
"ஓ மை காட்! மணி ஏழாகப் போறது. எனக்கு ஒரு கால் இருக்கு இப்போ. ஜஸ்ட் வெயிட் ஃபார் ஃபிப்டீன் மினிட்ஸ். நானே உன்னை ட்ராப் பண்றேன். நீ உள்ள வந்து உட்காரு" என்று அவசரமாக அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அறைக்குள் அரைகுறை மனதுடன் நுழைந்தவளுக்கு ஜுஸ் வரவழைத்து, "மேக் யுவர்செல்ஃப் கம்ஃபர்டபிள்" என்று அவளை உட்கார வைத்த பின்பே தனது வேலையைத் தொடர்ந்தான்.
அவன் வேலையை முடித்து விட்டு வரும் போது சுபிக்ஷா உட்கார்ந்த நிலையில் தூங்கிப் போயிருந்தாள். அத்தனை சோர்வுடன் அவளைப் பார்த்தறியாதவன் எழுப்ப மனமின்றி பார்த்துக் கொண்டு இருந்தான். அதற்குள் சுபிக்ஷாவின் அலைபேசி ஒலியெழுப்ப சட்டென்று அவளது தூக்கம் கெடாதவாறு அதைக் கையில் எடுத்து அழைப்பை ஏற்றான். ரங்கராஜன் தான் அழைத்திருந்தார்.
"சுபி! ஏன் இவ்வளவு நேரம்? எங்க இருக்க? ஆஃபீஸ்ல இருந்து கிளம்பியாச்சா இல்லையா?" என்று படபடத்த மாமனாருக்கு உரிய பதிலைச் சொல்லி விட்டு மனைவியை எழுப்பினான் சம்பத். அவ்வளவு அக்கறை இருக்கிறவர் அவள் வந்து போக ஏதாவது ஏற்பாடு பண்ணி இருக்கலாமே என்று மனதுக்குள் ஒரு கோபம் வந்தது.
மறக்காமல் தனது தாயை அழைத்துத் தாமதமாக வருவேன் என்று தெரியப்படுத்திய சம்பத், சுபிக்ஷாவை அழைத்துக் கொண்டு அண்ணாநகர் நோக்கிப் பயணித்தான்.
முதல் ஐந்து நிமிடங்கள் மௌனமாகக் கழிய, "மானஸா வந்திருக்கா!" என்று தனது வாய்ப்பூட்டைத் திறந்தாள் சுபிக்ஷா.
"என்ன திடீர்னு, இப்போ லீவ் இருக்காதே. ஏற்கனவே ப்ளான் பண்ணி இருந்தாளா?"
"அவ ப்ளான் பண்ணித் தான் வந்திருக்கா"
"எப்படி இருக்கா?" என்று ஆரம்பித்தவன்,மனைவியின் ஒற்றை வரி பதிலில் ஏதோ தோன்ற, "இஸ் எவ்ரிதிங் ஓகே?" என்றான்.
"ம்ச்.. நாட் ஓகே. அதான் என்ன பண்றதுன்னே தெரியாமல் ஆஃபீஸ் வந்துட்டேன்" என்ற பதிலுக்குள் ஒளிந்திருந்த பதிலையும் அவன் கண்டு கொண்டான்.
"ஓ.. நீ ஆத்துக்கு வரேன்னு சொன்னதோட பேக்ரவுண்ட் இது தான், ரைட்?" என்று கேட்கவும் செய்தான்.
"அதுவும் ஒரு காரணம், கூடவே அம்மா.." என்று ஆரம்பித்தவளுக்கு எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை, தொடர இஷ்டமும் இல்லை.
மாமியாரின் திருவிளையாடல்களை ஏற்கனவே அறிந்திருந்த சம்பத் அதற்கு மேல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் சுபிக்ஷா சற்றுத் தெளிவடைந்து விட்டாள் போலும், தானே வீட்டு நிலவரத்தை விலாவாரியாக விளக்கிவிட்டாள்.
—--
ஒரு வாரத்திற்கு முன்பு சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நின்ற மானஸாவை வாய் நிறைய வரவேற்றாலும் எதற்கு இந்த திடீர் விஜயம் என்ற சந்தேகம் வீட்டில் அனைவருக்கும் வந்தது. அது அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது.
வந்தவள் நேராக சுபிக்ஷாவிடம் சென்று அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். "ஹாய் சுபி! எப்படி இருக்கே? ஹவ் இஸ் ஜூனியர்?" என்று குதூகலமாக விசாரித்தவளுக்கு சுபிக்ஷா எந்த பதிலும் சொல்லாமல் நின்றாள். அப்போது தான் வீட்டினரின் முகங்களைப் பார்த்த மானஸா இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
"ஹேய்! என்னதிது? நான் சர்ப்ரைஸ் தரலாம்னு வந்து நின்னா சந்தோஷப் படாமல் எல்லாரும் ஏன் இப்படி டவுட்டா பாக்கறேள்?" அவள் கேட்ட கேள்விக்கு பத்மாசனி தான் பதில் சொன்னார். "இதென்னடி ஏதோ பக்கத்துத் தெருவிலே இருந்து வந்தது மாதிரி சொல்ற? கடல் கடந்து இருக்கறவ இப்படி சொல்லாமல் கிளம்பலாமா? நாலையும் யோசிக்க வேண்டாமா? உன்னைச் சொல்லிக் குத்தம் இல்லை. கலி முத்திப் போச்சு, அதான் இப்படி எல்லாம் செய்யத் தோணறது"
உலக அதிசயமாக அனுராதா மாமியாரின் வார்த்தைக்கு எதிராக எதையும் பேசவில்லை. அவளுக்கு மகளைப் பார்த்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும் யாரிடமும் அறிவிக்காமல் வந்ததில் உடன்பாடில்லை.
மகளோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.
"ஹாய்! நான் தான். நீ எப்போ இங்கே வர்ற? நான் பேசும் போது நீயும் கூட இருந்தால் பெட்டரா ஃபீல் பண்ணுவேன். ட்வன்டி மினிட்ஸ் ஆகுமா? இட்ஸ் ஓகே, ஐ கேன் வெயிட்."
முகம் முழுவதும் புன்னகையுடன் ஹஸ்கி வாய்ஸில் பேசியவளை வீடே ஆச்சர்யமாகப் பார்த்தது.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவள் பேசிய பேச்சுக்கள் இருக்க, கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் என்னவாகும் இருக்கும் என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அனைவருக்கும் ஒரே ஊகம் தான் என்றாலும் அதை யாரும் வெளியே சொல்லவில்லை.
பதில் சொல்ல வேண்டிய மானஸா கூலாக அமர்ந்து கொண்டு, "மாம்! என்ன இப்படி ஆஃப் ஆகி நின்னுட்டே! எத்தனை நாள் கழிச்சு வந்திருக்கேன். எனக்கு ஏதாவது சாப்பிட தரணும்னு கூடத் தோணலையா? ஹூம்.. ஆல் மை டைம்" என்று அலுத்துக் கொண்டவளை சந்தேகமாகப் பார்த்தபடி சமையலறை நோக்கித் திரும்பிய அனுராதாவை, "எதுவானாலும் இரண்டு பேருக்குப் பண்ணும்மா. ஹி இஸ் ஆன் தி வே" என்ற மகளின் குரல் அங்கேயே நிறுத்தியது.
அவளின் "ஹி"யில் தங்களின் ஊகம் நிஜம் தான் என்று முடிவு செய்துவிட்ட அனுராதா மகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
"யாரது மானு? படிக்கறதுக்கு அனுப்பினா நீ என்ன வேலை பாத்திருக்க? உன்னை அப்படியா வளர்த்தேன்? நீ யாரையாவது அழைச்சிண்டு வந்தா நாங்க கண்ணை மூடிண்டு சரின்னு சொல்லிடுவோம்னு நினைச்சியா?" இப்படி இடைவிடாது பெய்த கேள்வி மழையில் மானஸா மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட இன்னொருவரும் சேர்ந்தே நனைந்தனர்.
அனுராதா கேள்வி கேட்க ஆரம்பித்த போதே அங்கே வந்திருந்தவன் பதில் பேசத் துடிக்க கண்ணால் அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தாள் மானஸா.
"பேசி..ஸாரி ஸாரி.. கேள்வி கேட்டு முடிச்சிட்டியாம்மா? இப்போ இப்படி வந்து உட்காரு. அப்பா நீங்களும் தான்" என்ற மானஸா, வந்தவனுக்கு ஒரு நீண்ட அறிமுகம் கொடுத்து தனக்கும் அவனுக்கும் உள்ள சொந்தத்தையும் சொல்ல கேட்டிருந்த மற்றவருக்கு வார்த்தை வரவில்லை.
அவன், அந்த அபிலாஷ் பல ஹிந்தி சினிமாக்களில் காட்டுவது போல நான்கு தலைமுறைக்கு முன் லண்டனில் குடியேறி இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரக் குடும்பத்தின் கடைசி வாரிசு.
பாட்டியின் மருத்துவத்திற்காக மானஸா வேலை செய்யும் மருத்துவமனை வந்த போது ஏற்பட்ட பழக்கம், இன்று பெண்ணைப் பெற்றவரிடம் சொல்லாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது.
ஆதிமூலத்தில் இவர்களது சமூகமாக இருந்தாலும் ஒவ்வொரு தலைமுறையிலும் சிலபல கலப்புகளைச் சந்தித்து இன்று அவர்களை இந்திய வம்சாவளியினர் என்ற ஒற்றை அடைமொழிக்குப் பொருத்தமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லும் அளவுக்குப் பரந்த மனது அங்கே யாருக்கும் இல்லை.
அதைப் பற்றிய அக்கறை மானஸாவுக்கு இல்லவே இல்லை என்பது அவளது கல்யாணக் கதையைக் கேட்ட போது தெரிந்தது. இவர்களின் எதிர்ப்பைத் தெளிவாக உணர்ந்தே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து விட்டு வந்து பேசுகிறாள்.
காதல் என்று சொல்லப் போகிறாள், எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளுவாள் என்று நினைத்த பெற்றோரின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டிருந்தாள், மகள்.
எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் பெரியவர்கள் மூவரும் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட, சுபிக்ஷா தான் தலைசுத்திப் போனாள். மகள்களைப் பற்றிய அனுராதாவின் ஆசைகளை (!!) அறிந்தவள், தாயின் மனம் படும் பாட்டை அவளால் உணர முடிந்தது. ஆனால் இரண்டே நாட்களில் தலைகீழாக மாறிய அனுராதா மானஸாவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை விவாதிக்க ஆரம்பிக்க சுபிக்ஷா தான் தனித்து நின்றாள்.
அனுராதாவிற்கு நடந்தது என்ன?
இளைய மகள் அசால்ட்டாக வீசிய குண்டு குறிபார்த்து அடித்ததில் ஆடிப் போயிருந்த அனுராதா, நிதானமாக யோசித்த போது தான் அபிலாஷின் பின்புலம் உரைத்தது. சம்பத் வீட்டில் தான் காட்டிய முகத்தை இங்கே காட்டவே முடியாது என்றும் புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில், அதுவும் ஒரு மில்லியனர் வீட்டு வாரிசைப் பிரிப்பது என்பது நடக்காத காரியம் என்று உணர்ந்து கொண்ட போது, அனுராதா அப்படியே பல்டி அடித்து விட்டாள். எப்படி இருந்தாலும் பெத்த பொண்ணை விட்டுக் கொடுக்க முடியுமா என்று பேச ஆரம்பித்தாள்.
முறைப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தவள் மூத்த மகளைப் பற்றி சிந்திப்பதையே நிறுத்தி இருந்தாள். அவளை அழைத்து வந்தது பற்றியோ, அவள் கர்ப்பமாக இருப்பதைப் பற்றியோ மறந்து போனது போல் நடந்து கொண்டதைக் கண்ட சுபிக்ஷா தாங்க முடியாமல் தவித்தாள். அனுராதா சமைக்கும் உணவு கூட அபிலாஷிற்குப் பிடித்தமானதாக இருந்து வைத்ததில் நொந்து போனாள் அவள்.
இளைய மகளின் செய்கையில் தனக்குள் ஒடுங்கிப்போயிருந்த ரங்கராஜனும் மூத்த மகளைக் கண்டு கொள்ள மறந்து போனார். பத்மாசனி அங்கே இருக்கவே பிடிக்காமல் மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மருமகளைப் பற்றி மொபைலில் பேசித் தீராது என்ற காரணமாக இருக்குமோ?
பதினைந்து நாட்களாகத் தாயின் அக்கறையில் திளைத்தவளுக்கு இந்த உதாசீனத்தைக் கண்டு அழுகை வரும் போல இருந்தது. நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அலுவலகம் கிளம்பி விட்டாள்.
அத்தனை நேரம் மனைவி பேசியதைக் கேட்ட சம்பத் எப்போதும் போல, "ம்ம்.. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட்" என்று முடித்துக் கொண்டான்.
முதன் முதலாக மனைவி மனம் திறந்து பேசியிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான். அவனிடம் சுபிக்ஷா சொல்லாத ஒரு விஷயமும் உண்டு என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?
அது தான் அவளை மாமியார் வீட்டுக்குச் செல்லும் முடிவை எடுக்க வைத்தது என்று அவள் வாய் திறந்து சொல்லவே இல்லையே.
நேற்று முன்தினம் நடந்ததை அசைபோட்ட சுபிக்ஷா ஒரு கசந்த முறுவலுடன் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அக்மார்க் இந்திய அம்மாவாக மாறிய அனுராதா, இளையமகளுக்குக் கூறிய அறிவுரைப் பட்டியல் அது. தனக்குச் சொல்லப்பட்ட அதே மாமியார் வீடு பற்றிய விஷயங்கள் தான், ஆனால் முற்றிலும் நேர்மாறான அறிவுரைகள். சுருக்கமாகச் சொன்னால் நல்ல மனைவி, நல்ல மருமகள் என்று பெயர் வாங்குவது எப்படி என்பது குறித்து பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள் அனுராதா.
யதேச்சையாக அதைக் கேட்க நேர்ந்த சுபிக்ஷாவிற்குத் தோன்றிய உணர்வுகளை வார்த்தையால் விவரிக்க இயலாது. கேட்ட வார்த்தைகளை இரண்டு நாட்களாகியும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அது தான் அவளை சம்பத்திடம் வீட்டுக்கு வரலாமா என்று கேட்க வைத்தது.
இது நாள் வரை, தாயின் மடியில் இருந்த சுபிக்ஷா ஒரு கோடு போட்டு அதற்குள் சம்பத்தை நிற்க வைக்கும் முயற்சியில் இருக்க அவனோ அந்தக் கோட்டை தாண்டிச் செல்லவே நினைக்கவில்லை. அவன் தான் கோட்டை அழிக்கும் வித்தையை அறிந்திருந்தானே! இப்போது அவளே அந்தக் கோடுகள் எல்லாம் தேவையில்லை என்று உணர ஆரம்பித்தாள்.
இப்படி சுபிக்ஷா யோசனையில் ஆழ்ந்திருந்த வேளையில் சம்பத் பாட்டியிடம் பேசி மனைவியை அழைத்து வர அவரது சம்மதத்தைப் பெற்றிருந்தான்.
அண்ணா நகரில் அவளது தாய் வீட்டு வாசலில் கார் நின்ற போதும் இறங்க மனமே இல்லாமல் அமர்ந்திருந்தாள் சுபிக்ஷா.
அவளது கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தவன், "சுபி! ரொம்ப ஸ்ட்ரெஸ் ஏத்திக்காத. இந்த பீரியட்ல நீ மைன்ட ஃப்ரீயா வச்சுக்கணும். நாம இன்னைக்கே நம்ம ஆத்துக்குப் போயிடலாம். நீ போய் உன் திங்க்ஸ பேக் பண்ணு. நான் உங்க அப்பா அம்மா கிட்ட பேசறேன்" என்றான்.
"ம்ம்.." என்றவள் மனமே இல்லாமல் இறங்கி உள்ளே சென்றாள். அவளைப் பார்த்ததும் அனுராதா பொரிய ஆரம்பித்தாள். கர்ப்பமாக இருக்கும் மகளது பசியோ அவளது முகத்தில் இருந்த சோர்வோ அவளது கண்களுக்குப் புலப்படவே இல்லை.
"என்ன சுபி இது? டூ வீலர்ல தானே போன? லேட்டாகும்னு ஒரு ஃபோன் பண்ண மாட்டியா? உங்க அப்பா ஏதோ நான் தான் உன்னை ஆஃபீஸ் அனுப்பி வச்சா மாதிரி பேசறார்.." என்று ஆரம்பித்து ஏதேதோ பேச, அத்தனையும் கேட்டுக் கொண்டே சம்பத் உள்ளே நுழைந்தான். அவனது பார்வை என்றும் இல்லாத அளவுக்கு மாமியாரைக் கூர்மையுடன் நோக்கியது.
"வாங்கோ மாப்பிள்ளை!" என்று ரங்கராஜன் அவசரமாக வரவேற்க அனுராதா, இந்த நேரத்தில் இவன் எதற்கு வந்திருக்கிறான் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். அதற்குள் சத்தம் கேட்டு மானஸா வெளியே வந்தாள்.
"ஹாய் அத்திம்பேர்! ஹவ் ஆர் யூ? கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் நான் அபியை இன்ட்ரோட்யூஸ் பண்ணி வச்சிருப்பேனே. அவன் இப்போ தான் கிளம்பினான். சே.. நீங்க லேட் அத்திம்பேர்" என்று சிரித்தவளைப் புரியாதது போல பார்த்தான் சம்பத்.
அபிலாஷைப் பற்றிய அறிமுகம் செய்து வைத்து நடந்த விஷயங்களை அவனுக்கு விளக்கிய மானஸா அனுராதாவின் கண்டனப் பார்வைக்கு ஆளானாள்.
"ம்ச். மானு! இப்போ எதுக்கு அவருக்கு இவ்வளவு விளக்கம் கொடுத்துண்டு இருக்க? ஆத்து மனுஷாளுக்குச் சொன்னதோட நிறுத்திக்கோ. எல்லார் கிட்டயும் சொல்லணும்னு அவசியம் இல்லை" என்று சொன்ன நொடியில் அனுராதா சுபிக்ஷாவை விட்டு வெகுதூரம் சென்றிருந்தாள்.
'ஆத்து மனுஷாளா? அப்போ அவர் யாரு?' என்று சூடாகக் கேட்க நினைத்தாலும் இதற்குத் தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் அவளை வாய் மூட வைத்தது. அங்கே இருந்து கிளம்புவதில் வேகம் காட்டினாள்.
மாமியாரின் பேச்சைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மானஸாவை வாழ்த்திய சம்பத் மாமனாரிடம் திரும்பி, "சுபிய இப்பவே அழைச்சிண்டு போறேன் மாமா" என்றான்.
"என்னாச்சு மாப்பிள்ளை? என்ன திடீர்னு? அவ இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு வரட்டுமே. ஆஃபீஸ் வரதுன்னால சொல்றேளா? அவளுக்கு பழகின டூவீலர் ட்ரைவிங் தானே" என்ற ரங்கராஜனுக்கு வீட்டு நிலவரமும் தெரியவில்லை. காலையில் அவள் டூவீலரில் செல்ல பயந்து டாக்ஸியில் சென்றதும் தெரியவில்லை.
"டூவீலரா? அவ இன்னைக்கு டாக்ஸில ஆஃபீஸ் வந்திருக்கா. இது கூட யாரும் நோட்டீஸ் பண்ணலை போல இருக்கே. தட்ஸ் ஓகே. நான் எதையும் கேட்க முடியாது. பட், அங்கே வந்துட்டா, அவ இரண்டு வேளையும் தனியா டாக்ஸில ட்ராவல் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. கூடவே, எங்க அம்மாவும் பாட்டியும் அவளை நன்னாவே கவனிச்சுப்பா. நீங்க அவளைப் பத்தி கவலைப் படாமல் இருக்கலாம்." என்றான் அனுராதாவைப் பார்த்துக் கொண்டே. அவளோ சமீப காலமாக சம்பத் காட்டிய வேறு முகத்தில் பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள். ரங்கராஜனோ மகளைக் கவனிக்கத் தவறியதை நினைத்து நொந்து போனார்.
"அம்மா! அப்பா! நாங்க கிளம்பறோம்" என்ற சுபிக்ஷாவின் குரலில் வெறுமனே தலையசைத்து வழியனுப்பி வைத்தனர் அவளது பிறந்த வீட்டினர்.
ஒரு வழியாகப் புகுந்த வீட்டில் கால் வைத்த சுபிக்ஷா அங்கே இருந்த மாற்றங்களைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அவர்களின் ஃப்ளாட்டில் இருந்த பொருட்கள் யாவும் முதல் மாடியில் அடுக்கி வைக்கப் பட்டிருக்க, சொந்த வீட்டில் தனிக்குடித்தனம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தான் சம்பத்.
நாட்கள் செல்லச் செல்ல சுபிக்ஷா மெல்ல மாமியாரிடம் நெருங்க இருந்தாள். இருவருக்கும் அவ்வப்போது முட்டிக்கொள்ளும் என்றாலும் தேவிகா விட்டுக் கொடுத்து போவதால் பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. தனது பாட்டியைப் போல் அல்லாது கலகலவென்று இருந்த தாத்தாவும் பாட்டியும் அந்த வீட்டில் சுபிக்ஷாவிற்கு பிடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்கள்.
ஒரு மகனாகத் தந்தைக்கான கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தான் சம்பத். அனுராதா மூத்த மகளையே மறந்து விட்டது போல இருந்தாள். எல்லாம் மானஸாவின் திருமணம் முடிந்து அவள் கிளம்பும் வரையில் தான். அடுத்த நொடியே பழைய அனுராதா விழித்துக் கொள்ள, அங்கே மாமியார் மருமகன் மோதல் ஆரம்பித்தது.
"நான் கொஞ்சம் அசந்த நேரத்தில் என் பொண்ணை ப்ரைன் வாஷ் பண்ணி இங்கே கொண்டு வந்து அடைச்சிட்டேள். இதெல்லாம் சரியே கிடையாது. அவ எப்படி இத்தனை மனுஷாளோட குடும்பம் நடத்துவா?" என்று குற்றம் சாட்டிய அனுராதாவை 'இந்தக் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என்ன?' என்று சம்பத் பார்த்து வைத்தான்.
இளைய மாப்பிள்ளையின் பின்னணியில் மயங்கி மூத்த மகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதை வசதியாக மறந்து போன அனுராதா மேலும் மேலும் கேள்வி எழுப்பினாள்.
""அம்மா! யாரும் எனக்கு ப்ரைன் வாஷ் பண்ணலை. எனக்கே ஒரு குழந்தை வரப் போறது. இப்போ கூட சொந்தமா யோசிக்கத் தெரியலேன்னா நான் தானே பின்னாடி கஷ்டப் படணும். எப்போ பாரு உங்கிட்ட வரமுடியுமா? உனக்கு நான் மட்டுமா, நீ மானஸாவையும் கவனிக்கணும் இல்லையா. ஸோ, இனிமேல் என்னைப் பத்திக் கவலைப் படாமல் இரு. என்னை நான் பார்த்துப்பேன்" என்று காரமாக பதில் கொடுத்தாள் சுபிக்ஷா.
'அட! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!" என்று மனைவியைப் பார்த்த சம்பத்திற்கு, 'இந்த ஞானோதயம் எத்தனை நாளுக்கோ?' என்றும் தோன்றியது.
அந்த நினைப்பை அவ்வப்போது உண்மையாகக்கிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. ஐந்தாம் மாதம் என்று தாய் வீட்டுக்கு ஒரு வாரம் சென்று வந்த போது நான்கு நாட்களுக்கு யாரிடமும் பேசாமல் முதல் மாடியிலேயே குடியிருந்தாள். சாப்பிடக் கூட கீழே இறங்கவே இல்லை.
ஒரு வாரத்திற்கே இப்படி என்றால் பிரசவத்திற்கு பின் எப்படியோ என்று இப்போதே தலையில் கைவைத்தான் சம்பத். வளைகாப்பு, சீமந்தம் என்று எல்லாவற்றிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று மாப்பிள்ளையிடம் தோற்றுப் போன அனுராதா தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தாள்.
விளைவு, சீமந்தம் முடிந்து எட்டாம் மாதம் பிறந்த வீடு சென்ற சுபிக்ஷாவை குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் தாண்டியும் அனுப்ப மறுத்துக் கொண்டிருந்தாள். தனியாகச் செல்லவேண்டும் என்ற அதே பல்லவி தான். குழந்தையை அனுராதாவிடம் விட்டு விட்டால் சுபிக்ஷா நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் என்று கூடுதலான தகவல் வேறு.
முரளிதரனின் முதல் வருட திதி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மனைவியை எப்படி வரவழைப்பது என்று விழிபிதுங்கி நின்றான் சம்பத். இடையே குழந்தைக்குப் பெயர் வைப்பது தொடர்பாக ஒரு பஞ்சாயத்து வேறு நடந்து முடிந்தது.
பெண் குழந்தையை எதிர்பார்த்து அனுராதா காத்திருந்த போது குழந்தை ஆணாகப் பிறந்ததில் சம்பத் அடைந்த நிம்மதிக்கு அளவே கிடையாது. உலகத்தில் இருந்த அத்துணை கடவுள்களுக்கும் கணக்கில்லாமல் நன்றி சொன்னான்.
இப்போதும் அந்த கடவுளரைத் துணைக்கு அழைத்தான். அவன் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ பெரிய பிரச்சினை எதுவும் இன்றி, சுபிக்ஷா குழந்தையுடன் சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தாள். வழக்கம் போல அனுராதாவின் முன்னுக்குப் பின்னான நடவடிக்கைகள் தான் காரணம். அவளது ஆறு மாத பிரசவ விடுமுறை முடியும் தறுவாயில் இருந்தபோது மானஸா தனது கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள்.
அவளுக்குத் தனது உதவி தேவை என்று சுபிக்ஷாவை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு லண்டன் பறந்து விட்டாள் அனுராதா. "அப்பாடா!" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட போதும் 'இனி அடுத்த கோடு எப்போது, என்ன காரணம் காட்டி போடப் படுமோ?' என்று நினைத்த சம்பத் மனைவியிடம் தெரிந்த மாறுதல்களைச் சில நாட்கள் கழித்தே உணர்ந்து கொண்டான்.
குழந்தை வந்து விட்டது தெரிந்து குடும்பத்தில் அனைவரும் அங்கே படையெடுக்க மனைவி ஏதாவது சொல்லி விடுவாளோ என்று பயந்தவனுக்கு வேறு முகத்தைக் காட்டினாள் அவள். அனைவரிடமும் அவரவருக்கு ஏற்றபடி பழகியவளைக் கண்டு, மயங்கி விழ இருந்தவனைத் அரவிந்த் தான் தாங்கிப் பிடித்தான்.
அனுராதாவின் அலும்புகள் இனிமேலும் தொடரலாம். ஆனால் சுபிக்ஷா தனக்கான இடத்தை நன்றாக அறிந்து கொண்டாள். வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவளது செயல்கள் அதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.
சேஷாத்ரியும் ராஜலக்ஷ்மியும் பேரனின் வாழ்க்கையில் இனிமையான பக்கங்கள் ஆரம்பித்து விட்டதை நினைத்து சந்தோஷம் அடைந்தார்கள். கொள்ளுப் பேரன் அவர்களை எப்போதும் போல சுறுசுறுப்பாக வைத்திருந்தான்.
இந்த நேரத்தில் முரளிதரன் இல்லையே என்று வருந்தினாலும் தேவிகா மகனது சந்தோஷத்தில் தானும் சந்தோஷம் அடைந்தார்.
மாமனாரின் திவசத்தில் கணவனுடன் சேர்ந்து நின்ற சுபிக்ஷா தனது கடமையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். மண்ணில் இருந்தவர்களோடு விண்ணில் இருந்து முரளிதரனும் மனமார வாழ்த்தி இருப்பார் என்னும் நம்பிக்கையோடு நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்!

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே - இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.