• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
24
தோற்ற மயக்கங்கள் 3


“இங்க சிகப்பு கலர் குடும்மா”

“யெல்லோ கலர் வேணாம்மா, இதென்ன பட்டுப்புடவையா?”

“ஹான் அப்டியே ஷேட் மாதிரி இந்த க்ரீன், ஆரஞ்ச், யெல்லோவை ஒன் பை ஒன்னா வட்டமா சலிக்கணும், ம்ப்ச்… வட்டம்னா வட்டம் இல்லம்மா, மயில் றெக்கை எப்படி இருக்கும்னு தெரியாதா?”

“வார நாள்ல இத்தனை பெரிய கோலம் தேவையாடீ ஹேமா? எனக்கு உள்ள வேலை இருக்கு, உங்களுக்குதான் காலேஜ் லீவு. நான் ஆஃபீஸ் போகணும்”

“மார்கழி மாசம், வயசுப் பொண்கள் ரெண்டு பேர் இருக்கேள்னுதான் பேரு, ஒரு நாள் சீக்கிரம் எழுந்து ஒரு கோலம் போடத் துப்பு இருக்கான்னு கேட்டது யாரு?”

“அதுக்குன்னு இத்தனை பெரிய கோலமா?”

“அம்ம்மா… என்ன பண்ணி வெச்சிருக்க, எங்கேயாவது நீலக் கலர்ல ரோஜாப்பூ இருக்குமா?”

“இந்தா, நீயாச்சு, உன் கோலமாச்சு, ஆளை விடு”

இருள் பிரியாத மார்கழி மாதத்துக் காலையில் வாசலில் நின்று தாயும் தங்கையும் தர்க்கம் செய்வதைக் கேட்டபடி, எழ மனமின்றி படுத்திருந்தாள் அபர்ணா. முந்தைய நாள் இரவு வாணி மஹாலில் கச்சேரி முடிந்து வீட்டுக்கு வருகையில் நேரம் பதினொன்றரையைத் தாண்டி இருந்தது.

‘நீலக் கலர் ரோஜா’ என்ற வார்த்தையில் கம்பளியை இழுத்துத் தலைவரை போர்த்தி கொண்டவள், வெட்கச் சிரிப்பில் விகசித்த முகத்தைத் தலையணையில் புதைத்தாள்.

முகுந்தனின் பரிசும், அவன் தன்னிடம் விருப்பத்தைச் சொன்ன விதமும் அபர்ணாவைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. தங்களது ஆசை சாத்தியமாகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்க, அவரவர் இடத்தில், பணியில் நாட்கள் நகர்ந்தன. இருவருமே தங்கள் விருப்பத்தைக் கோடி கூட காட்டாது ரகசியம் காத்தனர்.

முகுந்தனின் மீது அழுத்தமான ‘க்ரஷ் அல்லது க்ரேஸ்’ என்று சொல்லக்கூடிய மனநிலையில் இருந்த அபர்ணா, அதற்கு மேல் எதையும் யோசிக்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது முகுந்தனின் நினைவு இடறுகையில் ஆழ் நீலநிறத்தின் அமைதியும், கண்ணாடியின் குளுமையும் மனதில் பரவத்தான் செய்தது.

கோவிலில் தனுர்மாத திருப்பள்ளி எழுச்சிக்குச் சென்றிருந்த பாட்டி ராஜலக்ஷ்மியும் தந்தை ஸ்ரீநினிவாசனும் உள்ளே நுழைந்தனர். காஃபி ஆற்றும் சத்தம், மணம்.

“ஹேமா, பேப்பர் வந்தாச்சா?”

முதலில் மேலோட்டமாக மேய்ந்து, பக்கங்களைத் திருப்பிய ஸ்ரீநிவாசன் “ஐயோ! சீதா, இங்கே வா” என்று அலறினார்.

தந்தையின் பரபரத்த குரலில் இருந்த அதிர்ச்சியிலும் பதட்டத்திலும், போர்வையை உதறி, அவசரமாகப் பல்லைத் தேய்த்து விட்டு அபர்ணா வருகையில் ஐந்து மணிக்கே ஆஃபீஸ் போக வேண்டுமென்ற அம்மா அழுகைக்கான முஸ்தீபுகளோடு அமர்ந்திருக்க, வீடே டென்ஷனில் இருந்தது.

ஸ்ரீநிவாசன் மீண்டும் மீண்டும் செய்தித்தாளைப் பார்த்தபடி இருந்தார்.

“ஏம்ப்பா ஒரு மாதிரியா இருக்கேள், அம்மா, அழறியான்ன?”

ஹேமா, தந்தையின் கையிலிருந்த தினசரியை வாங்கித் தமக்கையிடம் நீட்டினாள்.

“பேஜ் 3யைப் பாரு அபூ”

Spotted என்று தலைப்பிட்டு பெரிதும் சிறிதுமாய் மூன்று புகைப்படங்கள் இருந்தன. மூன்றுமே அபர்ணாவின் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சிகளில் எடுத்த படங்கள். மூன்றிலுமே அபர்ணாவிற்குப் பின்னால் அல்லது எதிரே இருந்தவனை அவளுக்கு அடையாளம் தெரிந்தது. ஆனால், அவன் யாரென்று இப்போதுதான் தெரிந்தது.

‘மத்திய அமைச்சர் புருஷோத்தமனின் மகன் அன்புநேசன், இளம் கர்நாடக இசைக் கலைஞர் அபர்ணா ஸ்ரீநிவாசனின் கச்சேரிகளில் தொடர்ந்து காணப்படுவதன் பின்னணி என்ன?’

என்ற கேள்வியோடு தொடங்கி இருந்த செய்தி, அன்பு நேசன் சிங்கப்பூரில் தொடங்கி மலேசியா, கோவை, திருவானைக்காவல் எனத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சி வரை அபர்ணாவின் கச்சேரிகளில் காணப்படுவதை விவரித்து, Is love is in the air? எனக் கேட்டிருந்தது.

செய்தியைப் படித்தவள் “என்னப்பா இது?” என்றாள் பயத்தில் முகம் வெளுக்க.

சீதா “இவனை உனக்குத் தெரியுமா?”

“இதென்ன கேள்வி சீதா, தெரிஞ்சா அவ ஏன் ஷாக் ஆகறா?” என்றார் பாட்டி.

“நேத்து கச்சேரிக்கு நானும்தானே வந்தேன்?” என்ற சீதா “நீங்க பார்த்தேளா?” என்றாள் கணவரிடம்.

ஸ்ரீநிவாசன் யோசனையோடு “பார்த்தா, பரிச்சயமான முகமா இருக்கு. கச்சேரின்னா. பாட்டுக்காக, பாடறவாளுக்காக, குறிப்பிட்ட குரலுக்காகன்னு எத்தனையோ பேர் வருவா. எல்லாரையும் நமக்கு எப்படித் தெரியும்? இல்ல ஏன் வந்தேன்னு கேட்கத்தான் முடியுமா?”

தன் கச்சேரிகளில் தொடர்ந்து அவனைப் பார்த்தும் எதுவும் தோன்றாது கடந்து விட்டவளுக்கு, அவன் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது ஏனோ கலக்கத்தைத் தந்தது.

பாட்டி எழுந்துபோய் காஃபி கலந்துகொண்டு வந்து தர, புரியாமல் பார்த்தவளை
“என்னடீ அபூ?”என்று உலுக்கினாள் ஹேமா.

“அப்பா…”

“சொல்லும்மா”

“ஹி ஈஸ்…இவன்… இவன் லண்டன்ல இருந்து ஃபாலோ பண்றான்னு நினைக்கறேன் பா”

ஹேமா “அபூ, is he stalking you?”

சீதா “என்னடீ சொல்ற, உனக்கு முன்னாலயே தெரியுமா, எங்கள்ட்ட சொல்ல மாட்டயா?”

“அப்படி இருக்குமோன்னு இப்ப தோண்றது மா, நான் பாடுவேனா, ஒவ்வொருத்தர் மூஞ்சியா பார்ப்பேனா?”

“இப்ப சொல்றதை அப்பவே சொல்லி இருந்தா…”

“சொல்லி இருந்தா மட்டும்? யாருன்னே தெரியாம நீ எப்படிடா என் பொண்ணோட பாட்டைக் கேக்க வரலாம்னு சண்டைக்குப் போவியாம்மா?” என்ற ஹேமா, வாகாக சீதாவின் கைக்கு அருகில் இருக்கவும், நச்சென்று தொடையில் அடி வாங்கினாள்.

பாட்டி “அவளை ஏன் சீதா அடிக்கற, அவ கேட்டது சரிதானே? இப்ப பேப்பர்லயே வந்தாச்சு, உன்னால போய்க் கேட்க முடியுமோ?”

சீதா “இல்லம்மா, இத்தனை நாளா இப்படின்னு தெரியாமலே இருந்திருக்கோம். இவ இருக்கலாம்னு சொன்னதும் பகீர்ங்கறதும்மா, பெரிய இடம், சென்ட்ரல் மினிஸ்டரோட பையன். ஏதானும் தப்பா…”

பாட்டி ராஜலக்ஷ்மி “அந்தக் காலத்துலதான் பொண்கள் படிக்கறதும், வேலைக்குப் போறதும் கஷ்டமா இருந்ததுன்னா, என் பேத்திகள் காலத்துலயும் அப்படியே இருக்கு பாரேன்”

“அபூ, ஏன் பாட்டி நீ கச்சேரி பண்ணலைன்னு ஒரு தரம் கேட்டியே, எங்கப்பா என்னை நவராத்திரிக்குக் கோவில்ல தேங்காமூடிக் கச்சேரிக்குக் கூட பாட அனுமதிக்கல”

“கம்ப்யூட்டர், இன்டர்நெட்டுனு என்னென்னமோ வந்துடுத்து, ஆனாலும் இன்னமும் பொண் குழந்தைகளை வெளில அனுப்பவே பயப்பட வேண்டியிருக்கு. சொல்லப்போனா, இப்ப நிலமை இன்னுமே மோசமா இருக்கு”

ஸ்ரீநிவாசன் “இப்படி நியூஸ்ல போட்டு ஊரெல்லாம் சிரிக்கற மாதிரி பண்ணிட்டானே. இனிமே தெரிஞ்சவன், தெரியாதவன் எல்லாம் நம்மைப் பத்திப் பேசுவான். நெருப்பில்லாமப் புகையுமான்னு பழமொழியத் தூக்கிண்டு வருவான்”

ஹேமா “நம்ம மேல தப்பு இல்லாதபோது, நாம ஏம்ப்பா பயப்படணும், கேட்டா சொல்ல வேண்டியதுதான்”

ராஜலக்ஷ்மி “நீ குழந்தைடீ ஹேமு, இந்த செய்தியை படிக்கற அத்தனை பேர்கிட்டயும் போய் சொல்லத்தான் முடியுமா, சொன்னா நம்புவாளா?”

ஸ்ரீநிவாசன் “அதாம்மா பயமா இருக்கு. அபூ பாட ஆரம்பிச்சதுல இருந்து இன்னி வரைக்கும். ஒருத்தர் கிட்ட போய் நின்னு சான்ஸ் கூட கேட்டதில்ல. இதைப் படிக்கறவா எப்படியெல்லாம் யோசிப்பா? ஏன், நாமே எத்தனை பேரைப் பத்திப் பேசறோம்?”

“பெருமாளே, நாராயணா”

சீதா “இவ கச்சேரி பண்ணின வரைக்கும் போறும். ஒத்துண்ட கச்சேரியைக் கேன்ஸல் பண்ணுங்கோ. ஆச்சு, இன்னும் ஒரு வருஷப் படிப்பு. இப்பவே வரனைப் பார்க்க ஆரம்பிச்சா, சரியா படிப்பு முடியும்போது கல்யாணம் பண்ணிக் குடுத்துடலாம். அப்பதான் நிம்மதி. அபூ, இனிமே நீ தனியா எங்கயும் போக வேண்டாம்…”

“ஏம்மா, யாரோ வாய்ல வந்தபடி நியூஸ் போட்டா, அதுக்கு பயந்துண்டு அபூ வெளில போகாமலே இருக்க முடியுமா, காலேஜை விட முடியுமா?”

“காலேஜ் வேற, கச்சேரி வேற”

“டிஸம்பர் மியூஸிக் சீஸன்ல ப்ரைம் ஸ்லாட் சிங்கர் மா அபூ. அவ இப்ப கச்சேரிக்குப் போகலைன்னா, இதனாலதான்னு, அதுவுமே நியூஸ் ஆகும்” என்று படபடத்தாள் ஹேமா.

பாட்டி “சீதா, ஹேமா சரியாத்தான் சொல்றா. இதைக் கண்டுக்காம நம்ம வேலையைப் பார்க்கறதுதான் நல்லது”

ஸ்ரீநிவாசன் “இப்ப அபூ வெளில ..போன மறுநிமிஷம் பேட்டி எடுக்கறேன்னு எவனாவது வருவான். வயசுப் பொண்ணு. நல்லபடியா கல்யாணம் ஆகணும். ஒண்ணும் புரியலம்மா”

சீதா “என்ன புரியல, அந்தப் பையன் எதேச்சையா கச்சேரிக்கு வந்த மாதிரி எனக்குத் தோணல. நம்மால பெரிய இடத்தோட மோத முடியாது. நமக்கு எது நல்லதோ அதைத்தான் நாம செய்யணும்”

சீதாவும் ஸ்ரீநிவாசனும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து பேசிப் பேசி மாய்ந்தனர். மாய்ந்து மாய்ந்து பேசினர்.

நெருங்கிய உறவுகளும் நட்புகளும் தொலைபேசியில் விசாரித்ததில் அக்கறை, ஆர்வம், பொறாமை, மெலிதான திருப்தி என பலவகை உணர்வுகள் வெளிப்பட்டன.

மறுநாள் நங்கநல்லூரில் இருந்து சீதாவின் தாயும், தமையனும் அவன் மனைவியும் வந்தனர்.

பத்திரிகையில் காற்றில் இருப்பதாகச் சொன்ன கற்பனைக் காதலை காத்திருப்பேன் என்ற முகுந்தனின் பெற்றோர்கள் வந்து விவாதிப்பதின் அபத்தமும் முரணும் அபர்ணாவைத் தின்றது.

‘இந்தச் செய்தி முகுந்தனுக்குத் தெரியுமா, அவன் இதை எப்படி எடுத்துக்கொள்வான்?’

மாமா “நீ பேசாம நங்கநல்லூர்ல இருந்து காலேஜுக்குப் போயேன்” என்றார்.

“ஒரு வேளை நிஜமாவே அவன் உன்னோட பாட்டைக் கேட்க வந்திருந்தா, அவங்க வீட்ல இதைப்பத்தி என்ன நினைப்பாங்க, பெரிய மினிஸ்டர் வேற, பத்திரிகை மேல கேஸ் போடுவாங்களோ?” என்றாள் ஹேமா.

**************

“ஏன்டா அன்பு இப்படி அவசரப்பட்ட, நாங்கதான் பேசறோம்னு சொன்னோமே? இப்ப பாரு, அநாவசியமா எதுவும் உறுதியாகற முன்ன ஊருக்கே படம் புடிச்சு காட்டியாச்சு”

மனைவி துளசியின் பேச்சை ஆதரித்த புருஷோத்தமன் “நீ ஆசைப்பட்டன்ற ஒரே காரணத்துக்காகதான் சம்மதிச்சோம். அந்தப் பொண்ணு கிட்டயும் பேசாம, அவளைப் பெத்தவங்களையும் கேட்காம ரெண்டு பேரோட வீட்டு மானத்தையும் காத்துல பறக்க விட்டுருக்க. போதாக் குறைக்கு இங்கிலீஷ் எடிஷன்ல வேற போட்டு, தலைவரே என்னைக் கூப்பிட்டு கேள்வி கேக்குற அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்க”

“அப்பாஆ”

“என்ன அப்பாஆஆஆ, அவங்க மிடில் கிளாஸ். இது போல தடாலடிக்கு எல்லாம் பழக்கம் இல்லாதவங்க. நீ செஞ்சு வெச்சிருக்கற வேலைக்கு, இப்ப அந்தப் பொண்ணு உன்னைப் பார்த்தாலே ஓடும். இதுல உன்னைக் கட்டிக்க எப்படி ஒத்துக்கும்?” என்றார் துளசி.

“ஏம்மா, நீ எனக்கு அம்மாவா, அவளுக்கு அம்மாவா?”

துளசி “நான் அம்மாங்கறதை விட ஒரு பொண்ணு, ஒரு டாக்டர், சைக்காலஜி ஸ்டூடன்ட். அந்தப் பொண்ணும் அவங்க வீடும் இப்ப என்ன மனநிலைல இருப்பாங்க, எப்படி யோசிப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு இது சும்மா தட்டி விட்டுக் கடந்து போற விஷயமில்ல. It will be a nightmare, trauma for them”

புருஷோத்தமன் “அன்பு, நீ அவசரப்பட்டு கோளாறு செஞ்சுட்டு அம்மா கிட்ட கத்தினா ஆச்சா? எல்லா விஷயத்துலயும் முரட்டுத்தனம் உதவாது. அவங்க வீட்ல இனிமே அவளை வெளிய அனுப்பவே யோசிப்பாங்க. காலேஜ், கச்சேரின்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு கிடைச்ச பையனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படறத்துக்கு இல்ல”

“எக்ஸாக்ட்லி! நீங்க சொன்ன அதே காரணத்துக்காகதான் இந்த நியூஸை பேப்பர்ல வர வைச்சேன். இப்ப நான் காதல் கல்யாணம்னு அவ கிட்ட போய் பேசினா சரியா வராது. அப்பவும் நீங்க சொன்னதுதான் நடக்கும்”

அன்புநேசன் சொல்வது புரியாமல் துளசி “என்னடா சொல்ற, இவன் என்னங்க சொல்ல வரான்?”

“இன்னுமாம்மா புரியல, இப்ப, அவங்க வரன் தேடினா, ஃபோட்டோவோட வந்த இந்த கிசுகிசு இவங்களுக்கு முன்னாலயே அங்க போயிடும். சந்தேகம் பாதி, நம்ம கூட மோதறதான்ற சங்கடம் பாதின்னு யாரும் அவளை கல்யாணம் செஞ்சுக்க முன் வர மாட்டாங்க”

“அடப்பாவி, எவனாவது ஆசைப்பட்டவளுக்கு அவமானத்தை தேடிக் குடுப்பானாடா?”

“இதுல அவமானம் எங்க வருது, இது ஒரு பேப்பரஸி நியூஸ். அவ ஒரு பாடகி, எனக்குப் புடிச்ச பாடகி. நான் பாட்டைக் கேக்க போனேன். அதை அவங்க செய்தி ஆக்கிட்டாங்க. அவ்வளவுதான்”

“அன்பு…”

“பின்ன என்னம்மா, அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு எங்கேயிருந்தாவது எவனாவது ஒரு தயிர்சாதம் வந்து அவளைக் கட்டிக்கிட்டுப் போறதை, விரல் சூப்பிக்கிட்டு வேடிக்கை பார்க்கச் சொல்றியா, நோ சான்ஸ். அவ
கிட்ட நெருங்கறதுக்கே இனி எவனும் யோசிப்பான். ஆனாலும்,அவங்க வேற எதுவும் செய்யும் முன்னால நீங்க போய் அவ வீட்ல பேசுங்க. மத்ததை நான் பாத்துக்கறேன்”

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தனக்கே காய் நகர்த்தக் கற்றுத் தருபவனைக் கவலையோடு பார்த்தார் புருஷோத்தமன்.

செல்வமும் செல்வாக்குமாக வளர்ந்ததன் விளைவாக மகனிடம் சிறிது அலட்சியமும் நிறைய பிடிவாதமும் உண்டு உண்டு என்று தெரியும்தான்.
ஆனால், அன்புநேசனால் பெண்கள் விஷயமாக இதுவரை எந்தப் பிரச்சனையும் எழுந்தது கிடையாது.

இருபத்தி நாலு வயதுதான். இங்கேயே சட்டமும், லண்டனில் மேலாண்மையும் படித்திருக்கிறான். தொழில் தொடங்கவும் அரசியலுக்கு வரவும் ஆர்வம் இருப்பதாகச் சொன்னவனுக்கு கோர்ட்டுக்குப் போய் வாதாடுவதில் விருப்பம் இல்லை.

உறவுகளில் மறைமுகமாக ‘இந்தப் பொண்ணைக் கேட்கலாமே, தனசேகர் மக நம்ம தம்பிக்கு செட் ஆவா” என சிபாரிசு செய்கின்றனர். மாப்பிள்ளை ஐயாரப்பன் தன் தங்கையை மைத்துனனுக்குக் கொடுத்து, மாமனார் வீட்டில் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் எண்ணம் இருப்பதைத் தெளிவாகவே கோடி காட்டி விட்டான்.

புருஷோத்தமனும் துளசியும் அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால், மகனின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க இருவருமே விரும்பவும் இல்லை.
இனம், அந்தஸ்து என எதையும் பொருட்படுத்தவும் இல்லை.

துளசி அந்தப் பெண் அபர்ணாவின் திரைப் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறார். இதுவரை
நேரில் இல்லை என்றாலும், பத்திரிகைகளில் அவளது புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். பொம்மை போல் எத்தனை அழகு என வியந்தும் இருக்கிறார்.

அழகென்றால் ‘சித்திரத்தில் வரைஞ்சு பாக்கலாம் போல’ என தஞ்சை ஜில்லாவில் உதாரணம் சொல்லுவர். அதுபோல் பெண்ணுக்குப் பெண்ணே பொறாமை கொள்ளும் அழகு அபர்ணாவினுடையது.

அதனாலேயே, மகனின் படித்த, திறமையான, மற்றவர் வியக்கும்படி அழகும் திறமையும் வாய்த்த மனைவி வேண்டும் என்ற ஆவலும், அபர்ணாவை தேர்ந்தெடுத்து இருப்பதாகச் சொன்னது புரிந்தாலும் இத்தனை தீவிரமும், திட்டமிடலும் கவலையைத் தந்தது.

புருஷோத்தமனுக்கு மகன் செய்த வேலையால் தனது கேபினெட் மந்திரி பதவிக்கும் கௌரவத்துக்கும் இழுக்கு வந்துவிடுமோ என்ற டென்ஷன் வேறு.

அன்பு நேசன் அந்தப் பெண்ணை நாடு விட்டு நாடு போய் விடாது பின் தொடர்ந்திருக்கிறான் என்பது அவருக்கு நெருடலாக இருந்தது.

அந்தக் கவலையில்தான் செய்தியைப் பார்த்ததுமே அடுத்த ஃபிளைட்டில் சென்னை வந்து இறங்கி விட்டார்.

“துளசி, இத்தனை வருஷமா கட்சில, மந்திரியா இருக்கற துறைல பிரச்சனை வந்திருக்கு, கேள்வி கேட்டுருக்காங்க. ஊர்ல ஒரு இடம் விடாம நமக்கு சொத்து இருக்குன்னு எழுதுவாங்க. எங்கேயோ ஒரு கிராமத்துல ரயில் கவுந்தா, அந்த லைன் மேன், இஞ்ஜினீயர், ரீஜினல் இன்சார்ஜ்னு வேலை பார்க்காம சம்பளம் வாங்கறவங்களை எல்லாம் விட்டு ‘மத்திய ரயில்வே மந்திரி தார்மீகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்யணும்’னு சொல்லுவான்”

“ஆனா, இதுவரைல என்னைப் பத்தி இதுபோல பர்ஸனலா எந்த நியூஸும் வந்தது கிடையாது. நான் சொல்லி இருக்கேன்ல, எந்தந்த அரசியல்வாதிக்கு எந்தந்த நடிகையோட அல்லது செலிபிரிட்டியோட தொடர்பு இருக்குன்னு பக்கத்துல நின்னு விளக்கு புடிச்ச மாதிரியே பேசுவானுங்க. நம்ம ஆந்திரா காரன், அதான் அந்த ****** வனுக்கு ராத்திரி எந்நேரமானாலும் ஒரு குட்டி வேணுமாம். என்னிக்கு யாருன்னு அந்தாளோட சாய்ஸாம். அந்த ****** பழம்பெரும் நடிகைதான் நிலைய வித்வானாம்…”

துளசி “என்னங்க இதெல்லாம், யாரோ என்னவோ செஞ்சுட்டுப் போகட்டும், என் கிட்ட ஏன்?”

“அதுக்கில்லடீ, அந்தப் பொண்ணு பேரென்ன… ஹான் அபர்ணா, அவளும் ஓரளவு பிரபலமான பொண்ணுதான். யாராவது சொல்லி, இவன் மேல stalking, ஈவ் டீஸிங் னு கேஸ் போடறதுக்கு முன்னால ஏதானும் செய்யணும். அதுவரைக்கும் உம்புள்ளை திரும்பவும் திருகுதாளம் எதுவும் செய்யாம இருக்கணும்”

“கண்ணை மூடிக்கிட்டா கூட அவ அழகும்மா” என்ற அன்பு நேசனின் வார்த்தைகளில் ‘அவளை வேறு யாரும் பார்ப்பதை நான் விரும்பவில்லை’ என்பது தொனித்ததில், துளசிக்குமே அந்த பயம் இருக்கவே, மௌனமாக இருந்தார்.

‘இது என்ன ஊரான் வீட்டுப் பெண்ணை உரிமை கொண்டாடறதும் உடமைப் படுத்த நினைக்கிறதும்’

புருஷோத்தமன் தொடர்ந்தார்.

“துளசி, இதையுமே சமாளிக்கறது பெரிய விஷயமில்லை. ஆனா, கொஞ்ச நாள் அவனை அமைதியா தள்ளி நிக்கச் சொல்லு” என்றவர் துளசியின் பார்வையில் “என்னடீ, எங்கிட்ட எதையானும் மறைக்கிறியா?”

“நான் மறைச்சு என்ன செய்யப் போறேன்? இந்தப் பய இதுவரைக்கும் வேற ஏதாவது செஞ்சு வெச்சிருக்கானான்னு தெரியலையே. இவனுக்கு படிப்பு முடிஞ்சுதா, இல்ல டிஸம்பர்ல சங்கீத சீஸன்னு அந்தப் பொண்ணுக்காகக் கிளம்பி வந்துட்டானா?”

“???”

துளசியின் சந்தேகத்தை மெய்ப்பித்திருந்தான் அன்பு நேசன். நண்பர்களுடன் யதேச்சையாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து லண்டன் நகருக்கு வந்தவனை, தமிழ்ச் சங்கத்தில் கச்சேரி, நம்ம ஊரு டிஃபன் கிடைக்கும் என அழைத்துச் சென்றனர்.

கர்நாடக இசையில் பெரிய நாட்டமில்லாதவன் இசைத்தவளைக் கண்டு மயங்கினான். அவளை, அவளது பாடலை நண்பர்கள் விமரிசித்ததை அவன் ரசிக்கவில்லை.

இங்கிலாந்தில் அபர்ணாவின் நிகழ்ச்சி நிரல் செய்திப் பலகையில் பதியப்பட்டிருந்தது, மறுநாளே மற்றொரு குழுவில் அவளது கச்சேரி இருக்க, தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி பின்தங்கினான், பின் தொடர்ந்தான்.

நடுவில் அவளது பின்னணி, படிப்பு, நட்பு, அமெரிக்காவில் கச்சேரி செய்தது, அங்கே ஒரு முறைப்பையன் இருப்பது வரை தகவல் சேகரித்தான். யாருடைய நல்லகாலமோ அல்லது கெட்ட காலமோ, முகுந்தன் அபர்ணாவிடம் பேசியதும், அவளுக்குப் பரிசளித்ததும் அன்பு நேசனுக்குத் தெரிய வரவில்லை.

அபர்ணாவின் பிரபலம் கருதி, ஒரு மாருதி ஜென் காரில் டிரைவருடன் கல்லூரிக்குச் சென்று வருகிறாள்.

அன்பு நேசனையோ, அவனது பின்தொடர்தலையோ நெல்முனையளவும் எதிர்பார்க்காத அபர்ணாவுக்கு தெரியாது அவளது, தினசரி நடவடிக்கைகளும் நட்புவட்டமும், அவனுக்கு அத்துபடி என்று.

இப்போது செமஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து அபர்ணாவைக் கல்லூரிக்கு அனுப்பவே வீட்டினர் யோசித்தனர். ஓரிரு நாட்கள் தவிர வீட்டில்தான் இருந்தாள்.

இடையில் தியாகராஜ ஆராதனைக்குக் குடும்பத்தோடு திருவையாறு சென்று வந்தனர்
ஆராதனை முடிந்து, தஞ்சையில் பங்காரு காமாக்ஷியையும், புன்னைநல்லூர் மாரியம்மனையும் தரிசித்து விட்டு, ஒரு உறவினர் வீட்டில் இரவு உணவை முடித்துக்கொண்டு ரயில்நிலையத்துக்கு வந்தனர்.

ஹேமா தந்தையிடம் “அப்பா, அங்க கொஞ்ச தூரத்துல ரெண்டு பேரு, மத்தியானத்துல இருந்து நம்மை ஃபாலோ பண்ற மாதிரி இருக்கு, ஒருவேளை இவங்க அன்புநேசன் அனுப்பிய ஆளா இருப்பாங்களோ?”
என்று பீதியைக் கிளப்பினாள்.

ஸ்ரீனிவாசனும் கவனித்திருந்தாலும் அவர்களை சட்டென அன்புநேசனுடன் தொடர்பு படுத்திப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை.

உண்மையில், அந்த பத்திரிகைச் செய்தியின் பின் நடந்த அபர்ணாவின் நிகழ்ச்சிகளில் அவனைக் காணவில்லை, அல்லது இவர்கள் கண்களில் அவன் படவில்லை.

அபர்ணாவை யார் வாயிலும் விழாது, எந்த வம்பு தும்பிலும் சிக்காது, பாதுகாப்பாகத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என பெரியவர்கள் ஏக மனதாகத் தீர்மானித்தனர்.

வரன் என்றதும் ஸ்ரீநிவாசனுக்கு முகுந்தனின் நினைவு வர, வீட்டில் கலந்து கொண்டு தை பிறந்தவுடன் மைத்துனருடன் பேசி விட வேண்டும் என்று தீர்மானித்ததும்தான் சிறிது நிம்மதியானது.

“தை பொறந்தவுடனே வர முதல் நல்ல நாள்ல, நாம அபூவுக்கு முகுந்தனைக் கேப்போம். நல்ல பையன், தங்கமா பாத்துப்பான், நீங்க என்ன சொல்றேள்?” என அம்மாவிடமும் மனைவியிடமும் கேட்க, தை மாதம் ஐந்தாம் தேதி, ஞாயிற்றுக் கிழமை கடுமையான முஹூர்த்த நாள் என்பதால், அன்று மதியம், சீதாவும் ஸ்ரீனிவாசனும் மட்டும் நங்கநல்லூருக்குப் போவதாகத் தீர்மானித்தனர்.

அபர்ணா, ஹேமாவிடம் அங்கு முதலில் பேசிய பிறகு சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தனர். மகளுக்கு எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இரண்டுமே தேவையில்லை என நினைத்தனர்.

மேலும், ஏனோ இதை இரண்டாம் பேர் அறியாமல் ரகசியமாக முன்னெடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஸ்ரீநிவாசன் வெற்றிலை பாக்கு, பூ, பழங்கள் என காலையிலேயே வாங்கி வந்திருக்க, சீதா மைசூர்பாகு கிளறினாள்.

ஹேமா “இன்னிக்கு என்னம்மா ஸ்பெஷல்?”

“சும்மாதான், போகியன்னிக்கே ஸ்வீட் எதுவும் பண்ணலை, பாயசம் வெச்சதோட சரி, அதான்”

சாப்பாடு ஆன சிறிது நேரத்திற்கெல்லாம் ஸ்ரீனிவாசன் சலவை வேஷ்டி, சட்டையில் தயாராகி நிற்க, சீதா புடவை மாற்றச் சென்றிருந்தாள்.

விடுமுறை என்பதால், அபர்ணாவும் ஹேமாவும் ஹவுஸ்கோட்டில், கஃப்தானில் தளர்வாக அமர்ந்து அரட்டையில் இருக்க, சர்சர்ரென நான்கு கார்கள் வந்து நிற்க, தன் மனைவி துளசி, மகள் பொன்னி, மருமகன் ஐயாரப்பன் சகிதம், தன் மகன் அன்பு நேசனுக்கு அபர்ணாவைப் பெண்கேட்டு வந்து நின்றார். மத்திய தொழில்துறை அமைச்சர் புருஷோத்தமன்.
 
Last edited:

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
75
அது சரி, மகனுக்கு பிடித்தவுடனே தை பிறந்தவுடன் பொண்ணு கேட்டு வந்துட்டாங்க. ஆனால் பெண்ணுக்கும் பிடிச்சிருக்கான்னு தெரியணும்ல. இவங்க காதல் திருமணம் செய்திருந்தா, மகன் ஒருதலை காதலுக்கு சம்மதம் சொல்வார்களா. எல்லாம் அரசியல் பின்புலம் இருக்கிற நம்பிக்கை. 🥰

அன்பு நேசன்னு அழகான பெயரை இந்த கதாநாயகனுக்கு கொடுத்திருக்கீங்களே. அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்குமா???😜😂 இப்படி பக்காவா யோசித்து ஸ்கெட்ச் போட்டு பிடிச்சிருக்கானே, இது வெறும் மயக்கமா?🤔 உண்மை நேசமா?🤔

சூழ்நிலையை அழகாக விளக்கியிருக்கீங்க. அருமை 🥰 🥰🥰
 
Joined
Jun 19, 2024
Messages
8
😍😍😍

இந்த அன்பு அழகா ப்ளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கான்..😏😏
 
Top