அத்தியாயம்-16
அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல்,
பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே.
(*பெற்றதாய் சீறிச் செல்வது குறித்து மகளின் வருத்தம்)
இரண்டு நிமிடம் போதும் என்று கேட்டுவிட்டு, பதிலுக்காகத் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரை இமைக்காமல் பார்த்தான் அபிமன்யு. அவனுக்குத் தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.
கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பழகிய குடும்பம். இதுவரை நேரடியாக அதிகம் பேசியதில்லை என்றாலும், நிறையப் பேசிய ஃபோனில் அவர் பேசியது எல்லாம் விஷம் தோய்ந்த வார்த்தைகளே.
'அவனை கம்பி எண்ண வைக்கும் அளவு அவன் மீது காரணமில்லா வஞ்சத்துடன் இருந்தவருக்கு இவ்வளவு பணிவாகவும் பேச வருமா?' என்று அவன் தீவிர யோசனையில் இருந்த போது, அவனது அந்த மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் கௌசல்யா.
என்ன பேசிவிட போகிறார் என்று யோசித்தாலும் கேட்டுத்தான் பார்ப்போமே என்று தோன்றியதால் அரைகுறை கவனத்துடன் அவர் பேசுவதை கேட்பதற்கு தயாரானான். சொன்னபடி இரண்டே நிமிடத்தில் கௌசல்யா பேசி முடித்துச் சென்றுவிட, அபிமன்யுவோ மந்திரித்து விட்டது போல் அமர்ந்திருந்தான்.
மறந்து போயிருந்த பசி மீண்டும் 'உள்ளேன் ஐயா' என்று அட்டென்டன்ஸ் போட என்ன செய்யலாம் என்று யோசித்தவன் கைகளில் இருந்த மொபைல் போனில் சில வேலைகளை பார்த்துவிட்டு வைத்தான். டிவியில் பாடும் நிலா பாலுவின் இன்னிசை மழை பொழிந்து கொண்டு இருக்கையில், பத்ரகாளி போல வந்து நின்ற மனைவியைக் கண்டு திருதிருவென விழித்தான்.
'இவ நல்லா தூங்கிட்டு தானே இருந்தா? எப்படி எழுந்தா? நாம ஒன்னும் டிவியை அவ்வளவு சத்தமா வைக்கலயே? கோபமா வேற இருக்கா போலவே? திடீர்னு என்ன கோபம்? ஒரு வேளை அத்தையோட பேசியதைக் கேட்டுட்டாளோ?' என்று தீவிரமாக மூளையைக் கசக்கி யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் முன்னே வந்து அவனது மொபைலை நீட்டியவள், 'என்ன இது?' என்று கண்களால் வினவினாள். "ஓ..மை.காட்! அபிஈஈஈஈ மாட்டினடா இன்னிக்கு" என்று தலையில் கை வைத்தபடி அவளைப் பாவமாகப் பார்த்தான். அதே நேரம் வாசலில் மணி ஒலிக்க, அவனுக்கு முன்னால் சென்ற ஸ்ரீநிதி டெலிவரி வந்த பார்சலைக் கையில் வாங்கினாள்.
அதீத பசியில் இருந்த அபிமன்யு ராத்திரி வேளையிலே யாரையும் தொந்தரவு செய்ய பிரியம் இல்லாமல் ஃப்ரிட்ஜையும் திறந்து பார்க்க இஷ்டம் இல்லாமல் கையில் இருக்கும் மொபைலும் அதில் இருக்கும் ஸ்விகி ஆப்புமே துணையென முடிவு செய்தவன் தனக்கு தானே பெரிய ஆப்பைத் தேடிக் கொண்டதை அப்போது அறியவில்லை.
அவனது பேங்க் எஸ்எம்எஸ் எல்லாம் அவனது பர்சனல் மொபைல் எண்ணுக்கு வரும் என்பதோடு அந்த மொபைல் படுக்கை அறையில் இருந்ததையும், வழக்கமாக இரவில் அதை ஆஃப் செய்து விடுபவன் இன்று சைலண்ட் மோடில் கூட போடவில்லை என்பதையும் மறந்து போனான்.
வழக்கமாக ஆமை, இல்லை இல்லை நத்தை வேகத்தில் வேலை பார்க்கும் நெட்வொர்க் இன்று சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அபிமன்யுவின் வயிற்றில் மண் அள்ளிப் போட மனைவி ரூபத்தில் வந்து நின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஸ்ரீநிதி அருகில் ஒலித்த எஸ்எம்எஸ்ஸின் ஒலியில் தூக்கம் கலைந்து அபிமன்யுவைத் தேடினாள்.
அவனைக் காணாமல் திகைத்தவள் மொபைலில் தொடர்ந்து வந்த நோட்டிஃபிகேஷன் ஒலியில் என்னவென்று பார்த்தவள் அடுத்து நின்றது அபிமன்யுவின் முன்னால் தான், அதுவும் வேகமாக வந்ததால் தலைவிரி கோலமாக இருந்ததில், நைட்டி போட்ட பத்ரகாளி போலவே இருந்தாளோ??
"என்ன சார் எத்தனை நாளா நடக்குது இது? ஏதோ கன்ட்ரோலா இருப்பேன்னு சொன்ன. இப்போ என்ன ஆச்சு? நீயும் எல்லா ஹஸ்பண்ட் மாதிரி தான். ப்ராமிஸ் பண்றதெல்லாம் காத்துல தான் எழுதி வைக்கணுமா? டைம் என்ன ஆச்சு தெரியுமா இந்த நேரத்தில் ஐஸ்கிரீம் கேட்குதா உனக்கு? பக்கத்தில ஆளைக் காணோமேனு பார்த்தால் இங்கே வந்து உக்கார்ந்து, ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணி இருக்கே. அதுவும் எனக்கு பிடிச்ச சாக்கோ கேரமல் ஃப்ளேவர். நீ எப்பவும் பிளாக் கரன்ட் தானே வாங்குவ. காலைல இருந்து எவ்வளவு டென்ஷன் தெரியுமா எனக்கு? என்னைக் கன்வின்ஸ் பண்ணி தூங்க வச்சுட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க இப்போ? உனக்கு டென்ஷனே இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதே" இடையிடையே பேச முயன்றவனைக் கண்டு கொள்ளாமல் மூச்சு வாங்க நீண்ட பிரசங்கம் செய்தவள் தானே சோர்ந்து போய் அமர்ந்தாள்.
"அப்பாடா! முடிச்சிட்டியா. இந்தா ஐஸ்கிரீம் ஜூஸ் குடி. அப்போதான் அடுத்த ரவுண்ட் கச்சேரிக்கு தயாராக முடியும்" என்று கண்ணடித்தவனை முறைத்தவாறே அவன் கொடுத்த டம்ளரைக் கையில் வாங்கியவள், அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
"பின்னே, நீ தான் ஐஸ்கிரீம் சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டியே. எனக்கு கேட்கலன்னாலும் அந்த ஐஸ்கிரீமுக்கு கரெக்டா கேட்டுருச்சாம். அதான் அதுவே ஜூஸாஆஆ போயிடுச்சு" என்றவன் ''உன் சூடு தாங்காம" என்று முணுமுணுத்தான்.
'கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ' என்று யோசித்தவள் அவனிடம் இருந்த ஐஸ்கிரீம் ஜூஸை வாங்கியபடி "உனக்கு" என்றாள். "நானும் ஜூஸ் தான் குடிக்கப் போறேன். போதுமா? இருந்த பசிக்கு ஐஸ்கிரீம் ஃபில்லிங்கா இருக்குமேன்னு ஏதோ நினைப்புல இருந்த ஃப்ளேவர ஆர்டர் பண்ணி வச்சேன். இது ஒரு தப்பா? என்னைக்கு உன்னை ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுன்னு கிரிஜா ஆன்ட்டி சொன்னாங்களோ, அதுல இருந்து நானும் சாப்பிடவே இல்லை. உனக்குத் தெரியாதா? இல்லை, ஃப்ரூவ் பண்ணனுமா ஸ்ரீ? சொல்லு" என்று அந்த நாளில் இரண்டாம் முறையாக சீரியஸ் மோடுக்குப் போனான்.
அவன் சொன்ன பசி, ஏதோ நினைப்பு என்பது போன்ற வார்த்தைகள் ஸ்ரீநிதியின் கோபத்தையும் தூக்கத்தையும் தூர விரட்டியது. அபிமன்புவிடம் சில விஷயங்களை உடனடியாகப் பேசியாக வேண்டும் என்று முடிவெடுத்தவள் அவனது பசி போக்க ஏதாவது செய்ய முடியுமா என்று ஆராய்ந்தாள்.
ஃப்ரிட்ஜில் தோசை மாவு இருக்க, அபியைப் பார்த்தாள். அவனோ சிரிப்பை அடக்க முடியாமல் கையெடுத்துக் கும்பிட்டு அவனே தோசை சுடத் தயாரானான். பின்னே, அவளது கைவண்ணம் அப்படி. வெந்நீர் மட்டுமே சமைக்க (!) தெரிந்த சமையல் மேதை அவள்.
ஒரு முறை தோசை சுடுகிறேன் என்று உலக வரைபடத்தை தோசைக் கல்லில் வரைய முயற்சி செய்ததில் தோசைக்குப் பதிலாகக் கையைச் சுட்டுக் கொண்டாள். அன்றிலிருந்து அவளுக்கு சமையல் அறைக்குள் மெனு சொல்வதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மனைவிக்கும் சேர்த்தே தோசைகளைச் சுட்டுக்கொண்டு வந்தவன், மாமியார் வீட்டில் இருக்கும் பொடி வகைகளோடு டைனிங் டேபிளில் அமர்ந்தான். இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் மனைவியின் பசி எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை உணர்ந்தவன் போல முதலில் தோசையை அவளுக்கு ஊட்டியவன், அவள் போதும் என்று சொன்ன பிறகே தான் உண்ண ஆரம்பித்தான்.
தோசைக்குப் பின் இருவரும் தங்களது அறைக்கு வந்தார்கள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு "இப்போ ஸ்டார்ட் மியூசிக்" என்று அவனே எடுத்துக் கொடுக்க, "ஏதோ நினைப்புல இருந்ததா சொன்னயே? என்னதான் பிரச்சனை? உனக்கே கோவம் வர்ற அளவுக்கு அம்மா ஏதோ பேசி இருக்காங்கனு தெரியுது. ஆனால் இப்படி போலீஸ் கேஸ்னு எதிர்பார்க்கலை. நாமளும் சில விஷயங்களை அவங்ககிட்ட இருந்து மறைச்சிருக்கோம். அதையும் சொல்றது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அப்போதான் நான் அவங்களால எந்த மாதிரி சீரழிய இருந்தேன். இப்போ எப்படி ஒரு சொர்க்கத்தில் இருக்கேன்னு அவங்களுக்கு புரியும்" என்றாள் கண்களில் நீர் வழிய.
அவளது கண்ணீரைத் துடைத்தவன், கண்களில் முத்தமிட்டபடி "ஹேய்! ஸ்ரீ, நீ என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க? வாய மூடு. முதல்ல லூசு மாதிரி உளர்றதை நிப்பாட்டு. சில விஷயங்கள் எல்லாம் அவங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நீயும் மறக்க முயற்சி பண்ணு. அவங்களுக்கே சில விஷயங்கள் தெரிய ஆரம்பிச்சு இருக்கு போல. என்கிட்ட வந்து சாரி சொல்லிட்டு போறாங்க" என்றான்.
"வாட்?" என்று அதிர்ந்தவள் இருக்கும் இடம் அறிந்து, "ஹேய்! ஸ்டாப்! ஸ்டாப்! அப்போ இவ்ளோ நேரமா மாமியாரும் மருமகனும் கொஞ்சி குலாவிட்டு இருந்தீங்களா. அதுக்கு தான் இந்த ஐஸ்கிரீம் செலிபிரேஷனா?" என்று மீண்டும் பத்ரகாளி அவதாரம் எடுத்தாள்.
அதைக் கேட்டு வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தான் அபிமன்யு. ஊர் தூங்கும் அந்த ராத்திரி வேளையில் அவனது சிரிப்புச் சத்தம் தனியாகக் கேட்க, அதே அறையில் உறங்கும் குழந்தைகள் விழித்துக் கொள்ளும் அபாயம் இருப்பதால் உடனடியாக தன் இதழ் கொண்டு நிறுத்தினாள் அவன் மனைவி.
அபிமன்யு அவளை இறுக்கி அணைத்த பின்பே தான் செய்த காரியம் விளங்க, அவனும் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதை உணர்ந்தாள். அவனது அணைப்பில் இருந்தவாறே "உங்க மாமியார் அப்படி என்ன சொன்னாங்க? விட்டா ஒரு ஃபேன் கிளப் ஸ்டார்ட் பண்ணிடுவீங்க போல இருக்கே?" என்று கேலி பேசிப் பேச்சை மாற்றியதுடன் அவனையும் தரை இறக்க முயன்றாள்.
அவனோ தனது காரியத்தில் கண்ணாக, அவளது கன்னத்தில் நீண்ட முத்திரை பதித்தபடி "இப்போ எதுக்கு என்னை டைவர்ட் பண்ற?" என்றான். அவளும் விடாமல் "நீ தான் இப்போ பேச்சை மாத்தற. நாம அம்மாவைப் பத்தித் தானே பேசிட்டு இருந்தோம்.ஆனா இப்போ.." என்று கன்னத்தை துடைத்து விட்டு தள்ளி அமர்ந்தாள்.
"ஹேய் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு? எப்போ பாரு இதே வேலையா வச்சிருக்க? இது தான் நல்லதுக்கே காலம் இல்லை போல. இத்தனை நாளும் பாட்டி உனக்கு பாடிகார்ட் வேலை பார்த்தாங்க. இன்னிக்கு உங்க அம்மா அந்த வேலையைப் பண்ணுவாங்கன்னு நினைச்சேன். அவங்க இருந்த டென்ஷன்ல மறந்துட்டாங்கன்னு சந்தோஷப்பட்டா, நீ என்னடான்னா அவங்களுக்கு மேல பண்ற. என் பசங்க பாரு எவ்வளவு சமர்த்தா டிஸ்டர்ப் பண்ணாம தூங்கறாங்க. இனிமேல் நான் கொடுக்கிறதை எல்லாம் பசங்களுக்கே கொடுத்துக்கிறேன். அப்புறம் நீ ரொம்பவே ஃபீல் பண்ண வேண்டியது இருக்கும், சொல்லிட்டேன்".
"ம்ச் விளையாடாத அபி. பி சீரியஸ். எனக்கு மட்டும் லெக்சர் குடுத்தியே, நாமெல்லாம் மெச்சூர்டுன்னு" என்று குரலில் எரிச்சலைக் காட்டினாள் ஸ்ரீநிதி.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னை மீட்டுக் கொண்டவன், அவளைத் தன் மடியில் அமர்த்தி "ஓகே. ஓகே. அதுக்கு ஏன் இப்படி தள்ளிப் போற. இப்படியே இரு. அப்போ தான் என்னால் பேச முடியும். ஐ நோ மை லிமிட்ஸ்" என்றவன், அந்த இரண்டு நிமிட உரையாடலைக் பகிர்ந்து கொண்டான்.
"குழந்தைங்களுக்கு அட்டென்ஷன் சீகிங்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி தான், நிறைய விஷயம் பண்ணியிருக்காங்க உங்க அம்மாவும். அவர்களுக்கு நிறைய ஏக்கங்கள் இருக்கு ஸ்ரீ. சின்ன வயசுல படிப்பு வரலேன்னு வீட்டில ரொம்ப ஒதுக்கி இருக்காங்க. படிப்பு வரலேன்னாலும் நிறைய ஸ்கில்ஸ் இருந்திருக்கு அவங்க கிட்ட. ஆனால் யாரும் அதைப் பெரிசா கண்டுக்கல. அது தான் எல்லாத்துக்கும் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்"
"இப்போ ஷி சீம்ஸ் டு பி இன் சீரியஸ் டிப்ரஷன். பியூட்டி என்னன்னா, அதையும் அவங்களே ரியலைஸ் பண்ணி ஒரு டாக்டரைப் போய் பாத்திருக்காங்க. அந்த டாக்டர் ஹிஸ்டரி எல்லாம் கேட்டுட்டு நீங்க டாக்டர்.வத்ஸனோட அம்மா தானேன்னு கேட்டு இருக்கார். இவங்க ஷாக்காகி, ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு வந்திட்டாங்க போல. அடுத்த சிட்டிங் எல்லாம் வேற டாக்டரோட இருக்காம். வெளியூர்ல இருந்து வராறாம்"
"எல்லாத்தையும் விட, நான் தெரிஞ்சும் தெரியாமலும் செஞ்ச எதிலும் என் பொண்ணுக்கு சம்பந்தம் இல்லை அபிமன்யு. என் பொண்ணுன்னு அவளைத் தண்டிச்சிடாதீங்க. ஐயாம் சாரின்னு முடிச்சிட்டு போனாங்க ஸ்ரீ. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே புரியலை" என்று முடித்தான்.
இப்போது ஸ்ரீநிதி பேசா மடந்தையாகிப் போனாள். கௌசல்யா நல்லவர் தானோ??
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.