அத்தியாயம்-15
சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக்
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே.
(*தலைவனின் பேச்சில் தலைவி மெய்மறந்து நிற்கும் நிலை)
வாழ்க்கையில் முதன் முறையாக வந்த கோபத்தின் கனலைத் தன்னாலேயே தாங்க முடியாத அபிமன்யு, கார் நிறுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து, சில்லென்று வீசிய மாலை நேரக் காற்று முகத்தில் மோத, மகளை மார்போடு அணைத்தவாறு காரிலிருந்து இறங்கி நின்றான். அதனைக் கண்ட சரணும் கீழே இறங்கி அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். அதன் முடிவில், அங்கிருந்து கிளம்பிய கார் நேராக ஸ்ரீதரனின் வீட்டில் வந்து நின்றது.
ஸ்ரீநிதி அங்கே இறங்க மறுத்த போதும், அபிமன்யு அவளைக் கண்டு கொள்ளாமல் மகளுடன் முதலில் உள்ளே சென்று விட்டதால் வேறு வழியின்றித் தொடர்ந்தவள், வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தைகளுடன் நேராகத் தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். ஏற்கனவே குற்ற உணர்வுடன் இருந்த கௌசல்யா அனைவருக்கும் காபி, டீ என்று தயாரிக்க வேண்டி சமையல் அறைக்குள் செல்ல, ஆண்கள் அனைவரும் ஹாலில் ஆளுக்கு ஒரு இருக்கையில் அமர்ந்தனர். அனைவருக்குமான டீ, காபியை மேசை மேல் வைத்து விட்டு கௌசல்யாவும் அறைக்குள் சென்று மறைந்தார். சிறிய மௌனத்திற்குப் பின்னர் கிருஷ்ணன் ஸ்ரீதரனின் அருகில் அமர்ந்து அவரது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு பேசினார்.
"கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ஸ்ரீதரன். எல்லாம் சரி ஆகும். அபி, நிதி இரண்டு பேரும் நல்ல பசங்க. அவங்களுக்கு இடையில பிரச்சினை எதுவும் இருக்காது. பெரியவங்க வரட்டும். நல்ல நாள் பார்த்து கூட்டிட்டு போயிடறோம். அபி கிட்ட பேசுங்க. பார்ப்போம். நாம நல்லதையே நினைப்போம்" என்றபடி சரணுடன் கிளம்பினார்.
என்ன தான் சம்மந்தி என்றாலும், சம்மந்தி ஆவதற்கு முன்பே நட்பாகப் பழகி இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிக் கருத்து கூறவோ, அறிவுரை சொல்லவோ கிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை. இவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திய பின்னும் இங்கிதமாக நடந்து கொள்பவர் முன் தலைகுனிந்து நிற்பதை தவிர ஸ்ரீதரனாலும் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை.
தொடர்ந்த பயணமும் மன உளைச்சலும் காரணமாக உடலும் உள்ளமும் ஓய்வுக்கு கெஞ்சியது. யாரிடமும் எதுவும் பேசும், ஏன் தானாக எதையும் யோசிக்கும் மனநிலையில் கூட ஸ்ரீதரன் இல்லை. ஓய்வுக்குப் பின் யோசிக்கலாம் என்று முடிவெடுத்து, தாய் தந்தையரின் அறையில் சென்று படுத்துக்கொண்டார்.
தந்தை கிளம்பியதும் அறைக்குள் சென்ற அபிமன்யு, தூய்மைப் படுத்திக் கொண்டு வந்தவன் அமைதியாக மனைவியின் மடியில் படுத்துக் கொண்டான். அறையில் மெல்லிய இசை தாலாட்டிக் கொண்டு இருந்தது. அதில் குழந்தைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவி இருந்தார்கள். இதுவரையில் எங்கும் அழைத்துச் செல்லாமல் இன்று குழந்தைகளையும் சேர்த்து அலைக்கழித்ததற்கு எங்கே தூங்காமல் படுத்துவார்களோ என்று பயந்து போய் இருந்த ஸ்ரீநிதி, அவர்கள் எப்போதும் போல இசையில் மயங்கி தூங்கியதில் நிம்மதியானாள்.
வழக்கமாக மூன்று மாத குழந்தைகள் குறைந்தது பதினான்கு முதல் பதினெட்டு மணி நேரம் தூங்குவார்கள் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் அவ்வாறு இருப்பதில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து பகலில் தூங்கும் குழந்தைகள் ஏராளம்.
அதுவும் பல குழந்தைகள் தாய் தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில் அலாரம் அடித்தது போல் சரியாக விழித்து குஷியாக விளையாட ஆரம்பிப்பார்கள். தாயான பெண்களுக்கு, அம்மா வீட்டில் தூக்கத்தை அனுபவிக்கும் சுதந்திரம் மாமியார் வீட்டிலும் கிடைக்கும் என்பதற்கு எந்த கியாரண்டியும் இருப்பதில்லை.
ஸ்ரீநிதி மிகவும் சமர்த்துப் பெண் என்பதாலா இல்லை அபிமன்யுவின் குணத்தைக் கொண்டு இருந்ததாலா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், குழந்தைகள் எப்போதும் சரியான தூக்கம் கொள்கிறார்கள். அந்த வகையில் நிதி இரண்டு குழந்தைகள் இருந்தாலும் நன்றாகவே உறங்கினாள்.
அடுத்து ஒலித்த பாடலில் மனைவியின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்த அபிமன்யு, அவளைத் தன் மடியில் சாய்த்து, அவள் மேல் தலை வைத்து குழந்தைகளைப் பார்த்தான். இல்லை.. இல்லை… மகளைப் பெருமையாக பார்த்தான. அப்படியே காற்றில் மிதந்து வந்த பாடல் "ஆனந்த யாழை மீட்டியது தான்" காரணம்.
"அபி! உங்க பொண்ணுக்கு எப்படித் தான் இது அப்பா பொண்ணைப் பத்தின பாட்டுனு தெரியுமோ, முழிச்சு இருந்தான்னா சுத்தி சுத்தி பாத்துட்டு தையா தக்கானு குதிப்பா தெரியுமா?" என்றாள், ஸ்ரீநிதி.
"பின்னே, அவளுக்கு அப்படி ட்ரெயினிங் கொடுத்திருக்கேனாக்கும். அப்பாவை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். தெரியுமா? உன்னை மாதிரியா? அம்மாவை எப்படி சரி பண்ணனும்னு யோசிக்காம இப்போவே கிளம்பணும்னு அப்பாவையும் சேர்த்தா படுத்துவாங்க?" என்றபடி அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் அபிமன்யு.
நெற்றியை அழுத்தித் துடைத்து கொண்டவள், அவனை முறைத்தபடி படுக்கையில் இருந்து எழுந்தாள். அமைதியாக தலையைக் குனிந்து இருந்தவளின் முகத்தை நிமிர்த்தி, கண்ணோடு கண் நோக்கி "ஸ்ரீ! நாம வளர்ந்தாச்சு யூ நோ? நமக்குன்னு சில எப்படி சொல்றது… ஹா…பொறுப்புகள், கடமைகள் இருக்கு. அதை நாம நம்மளோட ஆக்டிவிட்டீஸ்ல தான் காட்ட முடியும். பேசித் தெரிய வைக்க முடியாது. உங்க அம்மாவுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. இதுவே லேட். இன்னும் மோசமான நிலமைக்கு போற முன்னால் அவங்க ஏன் இப்படி இருக்காங்கன்ற காரணத்தையாவது தெரிஞ்சிக்கணும். அப்போதான் அவங்களை சரி பண்ண என்ன வழின்னு பார்க்க முடியும். அதுக்கு எல்லாரும் சேர்ந்து வொர்க் பண்ணனும்" என்று பெரிய லெக்சர் கொடுத்தான்.
அவனது பேச்சில் குறுக்கிடாமல் அமைதியாக கேட்டவள், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். "அபி சொல்ற எல்லாத்தையும் ஸ்ரீ கேட்பா. பட் ஆன் ஒன் கண்டிஷன். இந்த சிக்ஸ் மன்த்ஸா மாமியாருக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில் நடந்த எல்லா விஷயமும் ஸ்ரீக்கு தெரிஞ்சாகணும். அதர்வைஸ் டோன்ட் எக்ஸ்பெக்ட் எனி சப்போர்ட் ஃப்ரம் மீ" என்றாள் அழுத்தமாக.
இப்போது அமைதி காப்பது அபிமன்யுவின் முறையானது. "ஸ்ரீ! அதை எல்லாம் நீ கண்டிப்பா தெரிஞ்சுப்ப. ஆனால் நான் சொல்ல மாட்டேன். உங்க அம்மாவே உன்கிட்ட சொல்லுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணு, ப்ளீஸ்" என்று அந்த பேச்சுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்தான்.
எப்படியோ ஸ்ரீநிதியைக் கெஞ்சிக் கொஞ்சி மிஞ்சி அவளது தாய் வீட்டில் இன்னும் சில நாட்கள் தங்குவதற்கு ஒப்புதல் வாங்கி விட்டான். கூடவே, இந்த நாட்களில் அவள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பட்டியலோடு. அபிமன்யு சொன்ன அத்தனைக்கும் ஓகே என்ற ஒரு ஆப்ஷன் மட்டுமே பதிலாக இருந்ததால், ஸ்ரீநிதி வேறு வழியின்றி அவனது அறிவுரைகளை தீவிரமாக மூளையில் ஏற்றிக் கொண்டாள்.
அந்த மாபெரும் வேலையை செய்து முடித்ததில் அவனது வயிறு என்னைக் கவனி என்றது. வீடிருந்த நிலையில், அவனது அடுத்த டாஸ்க்காக, வீட்டில் இருந்த மற்ற மூவருக்கும் உணவின் அவசியத்தைப் பற்றிய பாடம் நடத்தி அவர்களை உண்ண வைத்ததில் சாப்பிட்ட உணவு உடனே ஜீரணம் ஆகி, மறுபடியும் பசித்தது அவனுக்கு. இந்த சேவையை அவன் தனது குடும்பத்திற்காவே செய்து இருந்தாலும், வயிறு ஏகத்துக்கும் சத்தம் போட்டதில் தூக்கம் வராமல் போனதில், சத்தம் போடாமல் டிவியின் முன் வந்து யோசனையாக அமர்ந்தான்.
மாமியார் வீட்டில் ஃப்ரிட்ஜில் என்ன இருக்கும் என்பது தெரியாத காரணத்தால், நிம்மதியாக தூங்கும் ஸ்ரீநிதியைத் தொந்தரவு செய்ய மனமில்லாமலும் ரிமோட்டுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். அருகில் யாரோ அமர்வது போல் இருக்க, ஸ்ரீநிதி தான் உறக்கம் கலைந்து வந்துவிட்டாளோ என்று புன்னகையுடன் பார்வையைத் திருப்பியவன், அங்கே இருந்த கௌசல்யாவைக் கண்டு ரிமோட்டைக் கீழே தவற விட்டு, அவசரமாக எழுந்து நின்றான்.
ஆனால் அவனை அமரச் செய்த கௌசல்யா, அவனிடம் இரண்டே நிமிடங்கள் பேச அனுமதி வேண்டினார். மனம் திறந்து அவர் பேசிய அந்த வார்த்தைகளில் 'இவர் கூட கொஞ்சமே கொஞ்சம் நல்லவர் தான் போல' என்று நினைக்க ஆரம்பித்த அபிமன்யு அவர் பேசி முடித்த போதோ மாமியாரின் தீவிர ரசிகனாகி விட்டான்.
இரண்டே நிமிடங்களில் என்ன பேசிவிட போகிறார் என்று நினைத்தவனுக்கு, கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையையே சொல்லிவிட்டது போல தோன்றியது. ஸ்ரீநிதியிடம் தான் பேசியது போல நிறைய கஷ்டப்பட வேண்டியது இருக்காது என்று ஒரு புறம் இருக்க, மறுபடியும் அவனது தலையில் பாரமேற்றி, கௌசல்யா சென்று விட்டார். ஆனால் இப்போது சுகமான பாரமோ என்று தோன்றியது,.
கைகள் ரிமோட் பட்டன்களில் விளையாடிக் கொண்டிருக்க, கண்கள் டிவியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சிந்தனை எங்கோ இருக்க, வீட்டின் ஹாலில் இருந்த அந்த சோபாவில் ஃபிசிகல்லி பிரசெண்ட், மென்டலி ஆப்சென்ட் என்ற நிலையில் அமர்ந்து இருந்தான் அபிமன்யு.
அவனது மாமியார் வீட்டில் இருந்த அவனது குழந்தைகள் பொம்மைகள் வைத்து விளையாடும் அளவு வளரவில்லை என்பதால் கீழே விழுந்த டிவி ரிமோட்டை சரியாக எடுத்து வைத்துக் கொண்டான். இதுவே, அவனது வீடாக இருந்திருந்தால் மானவ் மற்றும் கேசவின் பல ரக பொம்மைகளின் ரிமோட்டுகளும் வலம் வரும் நிலையில், எந்த ரிமோட்டை எடுத்திருப்பானோ, அவன் ஒரு நிலையில் இல்லை என்று பார்த்த நொடியிலேயே தெரிந்திருக்கும். இப்போது அருகில் வந்து பேசிப் பார்த்தால் ஒழிய தெரிய வாய்ப்பே இல்லை.
சற்று முன் நடந்த உரையாடல் நிஜமா என்று மனம் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தது. அவரது செயல்களுக்கான காரணங்களாக கௌசல்யா குறிப்பிட்ட எதையும் கூறவில்லை என்றாலும் அவரது சிறிய வயதில் பல ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார் என்பது புரிந்தது.
அதனாலேயே தான் ஆசைப் பட்டுக் கிடைக்காத விஷயங்கள், தன் பிள்ளைகளுக்கு அவர்கள் நினைக்கும் முன்பே கிடைக்க வேண்டும் என்று அனைத்திலும் பெஸ்ட் வேண்டும் என்று தேடித் தேடி அலைந்த ஒரு தாய், மிகவும் தாமதமாகவே என்றாலும், அந்த விஷயங்கள் அவர்களுக்கு பிடித்ததா இல்லையா என்பதை யோசிக்க ஆரம்பித்து இருப்பதே நல்லது என்று நினைக்கத் தோன்றியது.
அதை எந்தவித (யாருடைய) உந்துதலும் இன்றி, அவரே உணர ஆரம்பித்து இருப்பதும் ஆச்சரியப் படுத்தியது. 'ஏதோ சரியில்லை, மாற வேண்டும், மாறினால் எல்லார்க்கும் நல்லது' என்று நினைப்பதே நல்ல விஷயம் தானே. எல்லாம் நன்மைக்கே என்று மனம் நிம்மதியாக உணர்ந்தது.
அடுத்தது என்ன என்று யோசித்தவன் பார்வையில் சுவற்றில் இருந்த காலண்டர் பட்டது. அன்றைய தேதியை பார்க்கவும் ஏதோ நினைவு வர, ஒரு பெருமூச்சுடன் 'காட் இஸ் கிரேட்! வத்ஸ் வில் பி ஹியர் பை ஃப்ரைடே. ஹி வில் டேக் கேர் ஆப் எவ்ரிதிங்' என்று சொல்லிக் கொண்டான்.
விட்டால் மாமியாருக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடும் நிலையில் இருந்தவனை நிகழ்காலத்துக்கு இழுத்து வருவதற்கு என்றே அவனது மனையாள் அங்கு வந்து சேர்ந்தாள் பத்ரகாளி அவதாரத்தில்.....
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.