அத்தியாயம்-14
ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றுங்கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை
என்று மெமர்கள் குடிக்கு ஓரேச்சுக் கொலா யிடுங்கொலோ
(*புகுந்த வீட்டில் மகளின் நிலை எப்படி இருக்குமோ என்று தாய் வருத்தப் படுதல்)
அறை வாசலில் இருந்த செக்யூரிட்டி "மேடம் சொல்ல சொல்ல கேட்காம உள்ள போனா என்ன அர்த்தம்? எல்லாருக்கும் தான் கமிஷனர் சாரை தெரியும். அதுக்காக அப்பாயின்ட்மென்ட் இல்லாம உள்ள போய்டுவீங்களா? என் வேலை போயிடும், வெயிட் பண்ணுங்க மேடம்" என்றதும், அதற்கு பதிலாக "சார் எனக்கு மட்டுமில்ல கமிஷனருக்கும் என்னை நல்லா தெரியும், நம்புங்க. என்னை உள்ளே விடலைன்னா உங்களுக்குத்தான் கஷ்டம்" என்று வந்த குரலையும் கேட்டு "போச்சுடா" என்று தலையில் கை வைத்தபடி அமர்ந்தான் சரண்.
"எக்ஸ்கியூஸ் மீ அங்கிள். நான் உள்ள வரலாம் தானே. உங்க செக்யூரிட்டி கிட்ட கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்" என்றவாறு, பிராமில் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்த ஸ்ரீநிதியைக் கண்டு அறைக்குள் இருந்த பெரியவர்கள் அதிர்ந்து பார்க்க அபிமன்யுவோ ‘கொஞ்சம் லேட்டு தான்’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
அவளுக்குப் பின்னால் பதட்டத்துடன் வந்த கௌசல்யா, உள்ளே இருந்த அனைவரையும் கண்டு செய்வதறியாது திகைத்து விழித்தார்.
"இவன் கல்லுளி மங்கனா மாறினாலும் அவ அதிரடி ராணியாவே இருக்கா. ரொம்ப நல்ல ஜோடி தான். கூட இருக்குறவங்களை எல்லாம் சுத்தல்ல விடுறதே பொழப்பா போச்சு. நல்லா வருவீங்க டா டேய்" என்று சத்தமாக புலம்பியபடி ஸ்ரீநிதியின் அருகில் வந்தான் சரண்.
"ஹே லூசு கொஞ்சமாவது அறிவு இருக்கா? குட்டி பேபிஸ தூக்கிட்டு இப்படியா வருவ. எதுக்கு இங்க வந்துருக்க?" அக்கறையுடனும் கேலியுடனும் கேட்ட சரணை பார்த்து முறைத்தாள் ஸ்ரீநிதி.
"ஏன் உனக்கு கடன் வேணுமா? நீ தள்ளு, பொறுப்பான மாமாவா என் பசங்களை பாத்துக்கோ. நான் எதுக்கு வந்தேன்னு இப்ப தெரிஞ்சிடும்" என்று குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தவள், தாயை திரும்பிப் பார்த்து முறைத்து "வேற யாரும் என் பசங்களை தொட வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டு கமிஷனரை நோக்கித் திரும்பினாள்.
அப்போதுதான் அங்கிருந்தவர்களை சரியாக கவனித்தவள், கிருஷ்ணன் அபிமன்யுவோடு இருந்த ஸ்ரீதரனைக் கண்டு திகைத்தாள். 'டெல்லியில் இருக்க வேண்டியவர் எப்படி இங்க இருக்கார்? யாரு இவருக்கு விஷயம் சொன்னது? ஒரு வேளை முன்னாடியே தெரியுமோ? அப்படின்னா ஏன் இதையெல்லாம் தடுத்து நிறுத்தலை? இவர் முன்னால் தான் நினைத்த காரியத்தை செய்துவிட முடியுமா? அப்படி செய்தால் தந்தையின் மனம் என்ன பாடுபடும்' என்ற பல்வேறு குழப்பங்களுடன் சிலையென நின்றாள்.
மகளுடன் கமிஷனர் அலுவலகம் வந்த கௌசல்யா அங்கே இருந்த கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீதரனை ஒரு போதும் எதிர்பார்க்கவே இல்லை என்பதைத் திருதிருவென விழித்தபடி நின்றிருந்த அவரது திகைத்த தோற்றமே காட்டிக்கொடுத்தது. அபிமன்யு இந்த விவகாரத்தை அவர்களிடம் கொண்டு செல்ல மாட்டான் என்று உறுதியாக நம்பியவர், கமிஷனர் தனது கணவரின் நண்பர் என்பதையே மறந்து போனது யார் தவறு.
தந்தையைக் கண்டு ஒருகணம் திகைத்த ஸ்ரீநிதி, மறு நிமிடமே சுதாரித்தவளாய் கமிஷனரை நோக்கி தனது கேள்விக் கணைகளை வீச ஆரம்பித்தாள்.
"இவங்க எல்லாரையும் ஏன் இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா அங்கிள்? மெயில்ல வந்த ஒரு கம்ப்ளைன்ட்ட என்ன ஏதுன்னு விசாரிக்காமலே அரெஸ்ட் பண்ணுவோம்னு பயமுறுத்துவாங்களா?" என்று கேட்டவளை அவசரமாக இடைமறித்த சரண் "கவி பேசினாளா?" என்றான். இல்லையெனில் அரெஸ்ட் பற்றி தெரிய வாய்ப்பு இல்லையே என்ற அவனது எண்ணத்தில் அவன் புறம் திரும்பாமலே ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டவள்,
அவளது மொபைலில் மெயில் பாக்ஸை திறந்து காட்டியபடி "என்ன ரிப்ளை அங்கிள் இது. உங்க இன்ஸ்பெக்டர் ஒரு பொண்ணோட கம்ப்ளைன்ட்னா உடனே ஆக்ஷன் எடுத்துடுவாரா? அந்தளவு ஸ்பீடாவா டிபார்ட்மெண்ட்ல வொர்க் பண்றீங்க? ஏன் ஸ்ட்ரைட்டா பனிஷ் பண்ணிடச் சொல்லுங்களேன். இன்னும் வேலை ஈஸி ஆகும். எதுக்கு தான் மெயில் யூஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போனதால எவ்வளவு பிரச்சினை" என்று எண்ணையில் போட்ட கடுகாய்ப் பொறிந்தாள். அவளது கண்கள் தாயை நெற்றிக்கண்களாய் மாறித் சுட்டெறித்துக் கொண்டு இருந்தன.
"அந்த மெயில நீங்க சரியா படிக்கலை அங்கிள். அப்படி இருந்தால் என் கல்யாணம் எப்படி நடந்தது? என்னோட ஹெல்த்...." என்று மேலும் பேச ஆரம்பித்தவளை தடுத்தாட்கொண்ட அபிமன்யு "சரண், நீ போய் வண்டிய எடு. எல்லாரும் கிளம்பலாம். அப்பா, மாமா, அத்தை எல்லாரும் வண்டிக்கு போங்க. சின்ன குழந்தைகளை எவ்வளவு நேரம் இப்படி வச்சிகிட்டு இருக்க முடியும்? அங்கிள்! வேற எதுவும் ஃபார்மாலிட்டீஸ் இருக்கா? நாங்க கிளம்பலாமா?" என்று ஆளுக்கொரு உத்தரவு போட்டு கமிஷனரின் சம்மதமும் பெற்று "ஸீ யூ லேட்டர் அங்கிள். எதுவானாலும் எனக்கு கால் பண்ணுங்க. ஸ்ரீ! கிளம்பலாம் வா. டாக்ஸில தானே வந்த. நாங்க நம்ம பெரிய வண்டில தான் வந்தோம். குட்டிமாவ என் கிட்ட தா" என்று கிளப்பிக் கொண்டு வந்து விட்டான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல தலையில் கைவைத்து அமர்ந்தார் கமிஷனர் சேகர். அனைவரையும் காருக்கு அனுப்பி வைத்துவிட்டு அவசரமாக உள்ளே வந்த அபிமன்யு, "உங்க டைம் வேஸ்ட் பண்ணதுக்கு சாரி அங்கிள். தப்பா எடுத்துக்காதீங்க" என்று பேச ஆரம்பிக்க "நோ ப்ராப்ளம் அபி! அப்புறம் பேசிக்கலாம் கிளம்புங்க" என்று அனுப்பி வைத்தார் அவர். "இது ஒரு ப்ரெண்ட்லி டாக் தான்" என்று சொல்ல முயற்சித்தவரை கணவனும் மனைவியும் சேர்ந்து வாயைத் திறக்க விடாமல் செய்துவிட்டனர்.
மறுபடியும் ஒரு கார் பயணம், கிருஷ்ணன் குடும்பத்திற்குப் பிடித்தமான அதே இன்னோவா கார், லேட்டஸ்ட் மாடல். இந்த முறை சரண் காரை ஓட்ட, கிருஷ்ணன் அவன் அருகில் அமர்ந்திருந்தார். நடுவில் தனித்தனியாக இருந்த இரண்டு இருக்கைகளில் அபிமன்யு மடியில் மகளுடனும், ஸ்ரீநிதி மடியில் மகனுடனும் அமர்ந்து இருந்தனர். கடைசி வரிசையில் ஸ்ரீதரனும் கௌசல்யாவும், ஆளுக்கொரு திசையில் திரும்பி அமர்ந்து இருந்தனர். உடல் மட்டும் அல்லாமல், அவர்களது உள்ளமும் எதிரெதிர் திசைகளில் பயணித்துக் கொண்டு இருந்தது.
அருகில் அமர்ந்திருந்தவள் தன்னை முறைத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தாலும், மகளுடன் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு. தந்தையின் இதமான வருடலில் சொர்க்கலோகத்தில் நீந்திக் கொண்டிருந்தாள் அவனது இளவரசி. ரோஜாவின் இதழை போன்ற மென்மையான மகளது ஸ்பரிசத்தில், அவனது தற்போதைய கலக்கங்கள் எல்லாம் பறந்தோட முகம் புன்னகை பூசியது. காரை ஓட்டிக்கொண்டிருந்த சரணது கழுகுப் பார்வையில் இது பட்டது. வெகு நாட்களுக்கு பிறகு நண்பனது முகத்தில் தெரிந்த புன்னகை உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அவனுக்கு கௌசல்யாவும் அதே காரில் தான் இருக்கிறார் என்ற நினைப்பே இருக்கவில்லை. நண்பனின் புன்னகை பெருத்த சந்தோஷத்தை தர அவனை கலாய்ப்பது ஒன்று லட்சியமாக கொண்டவனாய் "ஆமாண்டா உன் பொண்டாட்டியும் பிள்ளைகளும் பக்கத்துல இருந்தா தான் உன் மூஞ்சில சிரிப்பே வருது. எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஆறு மாசமா இந்த சிரிப்பை எல்லாம் வாடகைக்கு விட்டு இருந்தியோ? இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சிய வச்சிகிட்டு என்ன பாடு படுத்தினே? ராதாம்மா, என்னையும் என் டார்லிங்கையும் எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணாங்க. ஒண்ணுமே நடக்காதது மாதிரி நீ இப்ப போஸ் கொடுத்துட்டு இருக்க. இதை மட்டும் உன் உடன்பிறப்பு பாக்கணும், உனக்கு இருக்கு டா இன்னைக்கு" என்றான்.
மகளிடம் லயித்திருந்த அபியிடம் அதற்கு எந்த எதிரொலியும் இல்லாமல் போக, இதைக் கேட்டு ஸ்ரீநிதி தான் பொங்கிவிட்டாள். "ஹேய்! என்ட் ஆஃப் தி சாங்! (அதாங்க சரண், அவன் பேருக்கு புது விளக்கம் கொடுக்கிறாங்க இந்த மேடம்) அதென்ன அபிய நீ மங்கின்னு சொல்ற? நீ தான் மங்கி, உன் ஜோடி அந்த மெலடி ஆஃப் தி சாங்கும் (இது ராகவி!) ஒரு மங்க்கி. நல்ல வேளையா மான் & கேஷ் (மானவும் கேசவும் சுருங்கி இப்படி ஆகிட்டாங்க) ஜென் நெக்ஸ்ட் இவாலுஷன் ஆனதால ஹியூமனா பிறந்துட்டாங்க" என்றாள், வேகவேகமாக மூச்சு வாங்கியபடி.
அபிமன்யு அதற்கும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருக்க, சரணும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டே, அவளது வாக்கியத்தை மொழி பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அவள் அப்படி என்ன பாஷையில் பேசினாள்.. எல்லாரும் பேசற தங்க்ளீஷ் தானே.
புரிந்த பின்னரோ "இது உனக்கு தேவையா சரண்? யார் கிட்ட வாய கொடுக்கிறோம் என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?" என்று கிருஷ்ணன் கேட்க, அதே நேரத்தில் சரணும் தன்னைத்தானே அதே கேள்வியை அட்சரம் பிசகாமல் கேட்டுக் கொண்டதில், மாமனார் மருமகன் இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர். இது ஸ்ரீதியை மேலும் பொங்க வைத்தது. அந்த களேபரத்திலும், சரண் மற்றும் ராகவிக்கு மறக்காமல் பட்டப் பெயர் சூட்டியவளைக் கண்டு சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது கௌசல்யாவிற்கு. ஸ்ரீதரனுக்கோ மகள், மிகவும் இயல்பாக மாமனாருடனும் புகுந்த வீட்டு உறவுகளுடனும் பழகுவது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேலாவது அவளது வாழ்வு பிரச்சினைகள் இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டார்.
பெற்றவர்களின் மனநிலையை உணராத ஸ்ரீநிதியோ தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்
"டாடி" என்று கத்தியவள், "நிதி" என்ற சரணின் அழுத்தமான குரலில் குரலைத் தழைத்து "ம்ம், என்ன நான் கொஞ்ச நாள் வீட்டில் இல்லைன்னதும் சப்போர்ட் ஆள் மாறிடுச்சா. நிதி உங்களுக்கு வேண்டாமா. இன்னொரு தடவை இப்படி செஞ்சீங்க, நான் அபியோட எங்கேயாவது கண் காணாமப் போயிடுவேன். நீங்க ஃபீல் பண்ண கூடாது" என்றாள். குரல் தழைந்து இருந்தாலும் சவாலுடன் ஒலித்த வார்த்தைகள் காரில் இருந்த அனைவரின் காதுகளிலும் தெளிவாக விழுந்தன. காரில் இருந்த ஒவ்வொரு உள்ளத்திலும் வெவ்வேறு தாக்கங்களை உருவாக்கியது அந்த வார்த்தைகள்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டபடி, "நிதிமா! எனக்கு ஒரு டவுட்டு. நீயும் அபியும் மட்டும் தானே போவேன்னு சொன்ன? பசங்க எங்களோட தானே இருப்பாங்க? இதை மட்டும் கிளியர் பண்ணிடேன்" என்றார் கிருஷ்ணன்.
அதுவரை மகளிடம் லயித்து இருந்த அபிமன்யு ஸ்ரீநிதியின் கடைசி வார்த்தைகளில் பல்வேறு உணர்ச்சி போராட்டங்களுக்கு ஆளானான். "ஜஸ்ட் ஸ்டாப் இட் ஸ்ரீ" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான். "என்ன உங்க அம்மாவோட பொண்ணுன்னு ப்ரூஃப் பண்ண பார்க்கிறியா? இன்னொரு தடவ இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது... நீ வேற மாதிரி அபிமன்யுவை பார்க்க வேண்டி வரும். பீ கேர் ஃபுல்" என்றான் வேகமாக.
அபி குரலெடுத்துக் கத்தியதில் சரண் திடுக்கிட்டுத் திரும்பினான். அவனது கைகளில் கார் தடுமாறியதில், சாலையின் ஓரமாக காரை நிறுத்தி விட்டான். கிருஷ்ணனோ, மகனை நினைத்து மிகவும் வேதனை அடைந்தார். அவருக்குத் தெரிந்து அவரது மகனுக்கு கோபம் வந்ததே இல்லை. அப்படிப்பட்டவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் அவனது மனம் புரிந்தது. என்னென்ன குழப்பங்களை தனி ஒருவனாய் தாங்கியிருக்கிறானோ என்று வேதனையுற்றவராய் கண்களை மூடி, இருக்கையில் சாய்ந்தார்.
ஸ்ரீதரன் மற்றும் கௌசல்யாவின் நிலைமையோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத வண்ணம் இருந்தது. முதல்முறையாக கௌசல்யா அடுத்தவர் முன் தனது செயல்களை, அதிலுள்ள குறைபாடுகளை உணர ஆரம்பித்தார். தனது குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் பெஸ்ட் வேண்டும் என்று தேடித் தேடி கொடுக்கும் நானா என் பெண்ணுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தார். இதில் ஏதேனும் நன்மை பிறக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஸ்ரீதரனுக்கு அப்படியே மண்ணுக்குள் புதைந்து போய் விட மாட்டோமா என்று தோன்றியது. பழகிய நாள் முதல் தங்களுக்கு நன்மையே செய்த குடும்பத்திற்கு தாங்கள் காட்டிய பதில் மரியாதை இதுதானா என்று கூனிக் குறுகிப் போனார்
அபியின் கைகளில் இருந்த அவனது இளவரசி தூக்கம் கலைந்தவளாய் அவனது முகத்தை உற்று நோக்கினாள். 'இந்த வார்த்தைகளை நீயா பேசினாய்? என் தாயைப் பார்த்தா?' எனக் கேட்பது போல் இருந்தது அந்தப்பார்வை. இத்தனை சத்தத்திலும் அவர்களது இளவரசன் அன்னையின் மடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீநிதியின் கை மேல் தனது கையை வைத்தவன் "ஐயாம் சோ ஸாரி ஸ்ரீ!" என்று சொல்லி விட்டு, மகளை அணைத்தவாறு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான்.
அவனது வேதனைகளை உணர முடிந்தவள், எப்படியாவது இன்று அவனுடன் தனது மாமியார் வீட்டுக்குச் சென்று விட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டாள். ஆனால் அந்த மாப்பிள்ளையோ அவனது மாமனார் வீட்டில் தங்கும் பிளானில் வந்திருப்பதை அறிந்தால் என்ன செய்வாளோ??
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.