• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சலன பருவம் -5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
சலனபருவம் - 5



அமைதியாக கைகளைக் கட்டியபடி வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான் குருபிரசாத். அவனுக்குக் காலையில் இருந்து நடந்த சம்பவங்களைத் திரும்பவும் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு ரிவைண்ட் பட்டனோ இல்லை டைம் மெஷினோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. திரும்பவும் இன்று காலையில் இருந்து நாள் தொடங்கினால் நன்றாக இருக்கும் போலிருந்தது.



எதிர்பாராத அதிர்ச்சிகளுடன் ஆரம்பமான அந்த நாளின் முடிவில் அதுவே இனிய அதிர்ச்சியாக மாறிப் போனதில் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதனாகத் தன்னை உணர்ந்தான் அவன்.



மனம் காலையில் கயல்விழியைத் தன் வீட்டில் கண்ட நேரத்தை நோக்கிப் பயணித்தது.



அவளைக் கண்ட நொடியில் மற்றவர்கள் எல்லாம் மறந்து போக,

"ஹேய் கயல்!" என்று அவளை நோக்கிப் பாய்ந்தான்.



அவனது உற்சாகத்தையும் வந்த வேகத்தையும் கண்ட மற்றவர்கள் பார்வையைத் திருப்பிக் கொள்ள, கயல்விழியோ பதட்டமானாள். "அச்சோ! அண்ணி!" என்று ஆனந்தியின் பின்னர் ஒளிந்து கொள்ள முயன்றவளை மற்றவள் விடவில்லை, இழுத்துத் தன் முன்னே நிறுத்தினாள்.



குருபிரசாத்தின் முகபாவனைகள் முதல் நாள் நினைவுகளைத் தூண்டியதோ? இத்தனை பேருக்கு மத்தியில் என்ன செய்து விடுவான் என்றெல்லாம் நம் மகாராணி யோசிக்கவே இல்லை கைகளால் அவளைத் தடுத்து நிறுத்தியவள், "எல்லாரும் இருக்காங்க" என்றாள் ரகசியக் குரலில்.



"வாட்? கம் அகையின்?" என்றவனுக்கு இரு வீட்டார் முன்னிலையில் மீண்டும் ஒரு பெரிய பல்பு கிடைத்தது.



"எல்லாரும் இருக்காங்க, அடக்கி வாசிங்கன்னு சொன்னேன்" என்று விம் போட்டு விளக்கினாள். அவளது கைகள் இரண்டும் கன்னத்தைத் தாங்கி இருக்க, அவள் சொல்வது புரியாமல் குருபிரசாத் நிற்கும் வேளையில் சுற்றி இருந்த அனைவரும் "அடப்பாவி! பார்த்த முதல் நாளே வா?" என்ற ஆச்சரியத்துடன் கொல்லென்று சிரித்தனர்.



அது வரைக்கும் பார்த்த விழி பார்த்த படி அசையாமல் நின்றவன், இப்போது தலையைக் கோதியபடி அசடு வழிந்தான். யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் அடுத்திருந்த அறைக்குள் புகுந்து கொண்டான்.



"லூசு கயல்விழி… இப்படியா உளறி வைப்ப" என்று கையால் நெற்றியில் கொட்டியபடி பல்லைக் கடித்தவனுக்கு அசரீரியாக ஒரு பதில் வந்தது.



"நான் என்ன செஞ்சேன்.. நீங்க எதுவும் செஞ்சிடக் கூடாதேன்னு தானே சொன்னேன்.. அதுவும் மெதுவா தான் சொன்னேன்.. நீங்க தான் ஊருக்கே தெரிய வச்சிட்டீங்க.."



அவசரமாக அறையில் லைட் சுவிட்ச்சைத் தட்டியவனுக்குக் குரலுக்கு சொந்தக்காரியான கயல்விழியும் காட்சி தந்தாள், கையில் இவன் வாங்கி வந்த பைகளுடன்.



"உட்காரு கயல். கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க வீட்டுக்கு எப்படி உன்னையும் கூட்டிட்டு வந்தாங்க? ஒன்பதாவது உலக அதிசயமால்ல இருக்கு? நேத்து பேசும் போது கூட நீ சொல்லலையே."



"அது தான் எனக்கும் தெரியலை. அண்ணி முந்தாநாள் பேசினாங்க. கடைக்கு போகணும்னு சொன்னாங்க. அப்போ கூட என்னை விட்டு எல்லாரும் போறதா தான் சொன்னாங்க. நேத்து எங்க அண்ணண் ஊர்ல இருந்து வந்ததும் ஏதேதோ வாக்குவாதம் நடந்துச்சு. எனக்கு எதுவும் தெரியாது. ராத்திரி கிளம்பும் போது என்னையும் கிளம்பச் சொன்னாங்க. நானும் வந்துட்டேன். சிம்பிள்" என்றாள் ரொம்பவே சிம்பிளாக. கேட்டவனுக்கு அவ்வளவு சிம்பிளாக இல்லை.



"அங்கே ஏதாவது பிரச்சனையா? உங்க அண்ணன் என்னைப் பத்தி ஏதாவது சொன்னாரா? ஏதாவது புதுசா பஞ்சாயத்தா? நீ வாயைத் திறக்கும் போது, நான் கூட கல்யாணத்தை நிறுத்துன்னு சொல்லப் போறேன்னு நினைச்சேன் தெரியுமா? நீ என்னடான்னா என் மானத்தை மொத்தமா கப்பலேத்தி விட்டுட்ட"



ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனிடத்தில். பேசிக் கொண்டே அருகில் வந்தவனை அவள் கவனித்தே இருந்தாள்.



"எதுக்கும் ஒரு இரண்டு அடி தள்ளி நின்று பேசுங்க பார்ப்போம். பக்கத்தில வந்தீங்கன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்."



"எது நல்லா இருக்காது?" என்று அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே கையில் காப்பியுடன் ஆனந்தி உள்ளே வந்தாள்.



"எதுவுமே நல்லா இருக்காது தம்பி. நீ கேட்டியேன்னு கல்யாண ஷாப்பிங்னு காரணம் சொல்லி இவளை இங்கே வரவச்சிருக்கேன். ஒழுங்கா இன்னைக்குள்ள அதை முடிக்கிற வழியைப் பாரு. இன்னும் ஒரு மணி நேரத்தில கிளம்பினா சரியா இருக்கும். காஞ்சிபுரம் வரைக்கும் போகணும். இரண்டு பேருக்கும் அஞ்சு நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள பேசிட்டு வெளியே வாங்க."



கயலுக்கு ஏதோ சைகை காட்டி விட்டு ஆனந்தி வெளியே செல்ல, சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. காஃபியை இருவருக்கும் பங்கு போட்டுக் கொண்டே "என்ன கேட்கணுமோ கேளு கயல். உன் கிட்ட பார்ட்டி பத்தி சொல்லிட்டு தானே போனேன்" என்று அவனே பேச்சை ஆரம்பித்து வைத்தான்.



"பார்ட்டிக்கு யார் யார் வந்தாங்க?"



"நேரடியா என்ன தெரியணுமோ கேளு கயல். இந்த மாதிரி சுத்தி வளைச்சு பேசறதெல்லாம் எனக்குப் பிடிக்காது."



"அது.. வந்து.. "



"என் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் நான் கூப்பிட்டேன்.‌ ஃப்ரண்ட்ஸ்னு நான் சொல்றது ஆண் நண்பர்கள் மட்டும் தான். போதுமா. ஏன்னா அது ஒரு தண்ணீ பார்ட்டி. லேடீஸ் கூட உட்கார்ந்து தண்ணி அடிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளறல, போதுமா?" அவனது கோபம் ஏற ஆரம்பித்ததில் வார்த்தைகள் வேகமாக வந்தது.



"கோவிக்காதீங்க.. ப்ளீஸ்.. நான் அதைத் தப்பா நினைக்கலை.. ஆனா

அங்கே அண்ணன் எப்படி வந்தான்?"



"ஹூம்.. என் தலையெழுத்து.. வேறென்ன சொல்ல.. உங்க அண்ணன் வேலை பார்க்கிற கம்பெனிக்கு ட்ரைனிங் கொடுக்கத் தான் நான் மும்பை போனேன். அங்கே உங்க அண்ணனைப் பார்க்கிற வரைக்கும் அவர் அந்தக் கம்பெனில தான் வேலை பார்க்கிறாருன்னு கூட எனக்குத் தெரியாது. அவ்வளவு தூரம் வந்துட்டு தெரியாத மாதிரியா போக முடியும். வீட்டுக்கு வரச் சொன்னேன். அப்போ கூட அவர் கழட்டி விடத் தான் பார்த்தார். நான் தான் பார்ட்டி பத்தி சொல்லி இன்வைட் பண்ணேன். அப்போ கூட தெளிவா சொன்னேன், தனியா வான்னு. ஆனா அவர் பார்ட்டிக்கு வரலைன்னு வந்த போதே நான் உஷாராகி இருக்கணும்.. என் தப்பு தான்.. " படபடவென்று பேசிவிட்டு தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.



"யார் கூட வந்தாங்க?"



"அது யாரோ உங்க பெரியம்மா பொண்ணு… பேர் கூட…"



"தீபாவா…." ஏகப்பட்ட அதிர்ச்சி கயல்விழியின் கண்களில்.



"நீங்க அவ கூட பேசினீங்களா? செல்ஃபி எடுத்திருப்பாளே, போஸ் கொடுத்தீங்களா?" அடுத்த கேள்வி தன்னவனுக்கான உரிமையாக மாறி இருந்தது. அவனது அலைபேசியைப் பிடுங்கி ஆராய முயன்றாள்.



"ஹா ஹா ஹா.. இந்த ரணகளத்திலயும்.. உனக்கு வர சந்தேகம் இருக்கு பாரு. ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிற? அவங்க உனக்கு அக்கா இல்லையா?"



"ஆமா அக்கா தான்.. யார் இல்லேன்னா.. " வாய் சொல்ல மனமோ 'அவளெல்லாம் எனக்கு அக்காவா இல்லேன்னு யார் அழுதா?' என்று நொடித்துக் கொண்டது. ஏதோ சரியில்லை என்று தெரிந்தாலும், அந்த விஷயத்தில் மேலும் மூக்கை நுழைக்க குருபிரசாத் விரும்பவில்லை.



அதுவும் அபூர்வமாக அவனுக்கே அவனுக்காகக் கிடைத்திருக்கும் பொன்னான சில நிமிடங்களை உருப்படாத விஷயங்களைப் பேசி வீணடிக்க அவன் தயாராக இல்லை.



"ம்ச். அவங்க பேச்சை விடு கயல்… நமக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம் கொடுத்து இருக்காங்க. உனக்கு என் கிட்ட நேர்ல பேச வேறெதுவும் இல்லையா? அட்லீஸ்ட் நான் என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பார்க்க வேண்டாமா?" அவனது குரலில் வந்து சேர்ந்திருந்த குழைவு அவளை என்னென்னவோ செய்தாலும் இன்று கயல்விழி உஷாராகவே இருந்தாள்.



"வேண்டாம்.. வேண்டாம்.. எதுவும் வேண்டாம்.. என்னை ஞாபகம் வச்சு வாங்கிட்டு வந்ததுக்கு தாங்க்ஸ். நான் ஊருக்குப் போய் தனியாஆஆஆஆ பார்த்துக்கிறேன். தாங்க் யூ ஸோ மச்" என்று அவன் எதிர்பாராத விதமாக கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு இச்சுக் கொடுத்து விட்டு வெளியே ஓடிவிட்டாள்.



அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்த குடும்பமும் கிளம்பி காஞ்சிபுரம் சென்றது. முதலில் ‌முகூர்த்தப் புடவை செலக்ஷனில் அமர்ந்த குருபிரசாத் ஐந்தே நிமிடங்களில் நல்ல கரும்பச்சையில் செல்ஃப் டிசைன் செய்யப்பட்ட ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்து கயல்விழியைப் பார்க்க, அவளுக்கும் அதுவே பிடித்திருந்தது. இவ்வளவு சீக்கிரம் கல்யாணப் புடவை எடுத்த ஜோடி வாழ்க என்று கடைக்காரர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க, அவர்களது மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் கல்யாணத்துக்கு தேவையான மற்ற பட்டு வகையறாக்களை அலசி ஆராய்ந்து சில மணி நேரங்களைக் கரைத்தனர் மற்ற பெண்கள்.



ஆண்கள் அனைவரும் வழக்கம் போல காத்திருக்கும் வேளையில் சோமசுந்தரம் மெதுவாக குருபிரசாத்தை அழைத்தார்.

"வாங்க தம்பி. இவங்க எல்லாம் வாங்கி முடிக்க லேட் ஆகும். நாம போய் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு வரலாம்" என்று ஆண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.



"சொல்லுங்க மாமா. என்ன கேட்கணும் என் கிட்ட?" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டவனை சோமசுந்தரம் மெச்சுதலாகப் பார்த்தார்.



"கேட்கிறதுக்கு என்ன இருக்கு தம்பி? எங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். மும்பைக்கு நீங்க என்ன விஷயமா போனீங்க?"



தந்தையும் உடனிருக்க, பதில் சொல்ல சற்றுத் தயங்கினாலும் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பது புரிந்தது போல அவனது மும்பை பயணத்தின் மொத்த சாராம்சத்தையும் விளக்கி விட்டான்.



"உங்களுக்கு அங்கே ஒரு வீடு இருக்கா தம்பி? மாப்பிள்ளை சொல்லவே இல்லையே" என்று வருங்கால மாமனார் ஆச்சர்யப்பட, "இதுல என்ன இருக்கு மாமா? நான் ஆரம்பத்தில மூணு வருஷம் அங்கே தான் தொடர்ந்து வேலை செஞ்சேன். வாடகை வீடோ, ஹோட்டலோ கட்டுப்படி ஆகல. அதுல படிச்ச பாடம் தான். என் சம்பாத்தியத்தில ஒரு வீட்டை வாங்கி இருக்கேன். இப்பவும் மாசம் ஒரு வாரம் அங்கே போக வேண்டிய அவசியம் இருக்கும். அதான், நமக்குன்னு வீடு இருந்தா ஈஸி பாருங்க. முடிஞ்ச அளவுக்கு சமையல் கூட நானே செஞ்சு சாப்பிடுவேன்."



"நல்லது தம்பி.. ரொம்பவே நல்லது… அப்புறம் இன்னொரு விஷயம்….அதை எப்படி கேட்கிறதுன்னு தான்…."



"மாமா… நீங்க பெரியவங்க. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். சில நேரங்களில் நாம இருக்கிற இடத்திற்கு ஏத்த மாதிரி நடத்துக்கணும். அதே சமயம் நம்ம லிமிட்டும் தெரியணும். எனக்கு அது நல்லாவே தெரியும். இதுக்கு மேல நான் எப்படி சொல்றதுன்னு எனக்கும் தெரியலை."



அவர் கேட்க வருவது புரிந்து நேரடியாகவே உடைத்துப் பேசிவிட்டான் அவன். அவனது தந்தையிடம் இப்படித் தான் பேசிப் பழக்கம், அதே பழக்கத்தில் மாமனாரிடமும் பேசிவிட்டான்.



"அதை விடுங்க தம்பி. நீங்க போய் விளக்கம் கொடுத்துக்கிட்டு" கேட்டது தாங்கள் தான் என்பது தெரியாமலே மாமனார்கள் மூவரும் ஆளாளுக்கு சமாதானம் சொன்னார்கள் அவனுக்கு.



"சொல்லுங்க தம்பி. உங்க மச்சான் அந்த ஊர்ல என்ன செஞ்சான்?" சோமசுந்தரம் சரியாக அடுத்த பாயிண்டைப் பிடித்தார்.



குருபிரசாத் சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்தான் இப்போது. கயல்விழியிடம் சொன்ன மாதிரியே வேலை விஷயத்தை மட்டுமே சொன்னாலும் சோமசுந்தரம் அதை நம்பியது போலத் தெரியவில்லை. இதை வேறு விதமாக அணுக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் என்பதை குருபிரசாத் அறியவில்லை.



தன்னை அறியாமல் தன் பார்வையால் அவருக்குத் தேவையான குறிப்பை ஏற்கெனவே கொடுத்துவிட்டான் என்பதையும் மேலும் மேலும் குறிப்புகளைத் திருமண நிகழ்ச்சிகள் முழுவதிலும் கொடுக்கப் போகிறான் என்பதையும் கூட அவன் அறியவே இல்லை.



மதுரையில் ஏகப்பட்ட சலம்பல் செய்த காளிதாஸ், சென்னையில் வந்து முதலைக்கு நீரில் தான் பலம் என்ற நினைப்பில் அமைதியாக அலுவலக வேலையைக் காட்டி ஒதுங்கி விட்டான். வீட்டுப் பெண்களுக்கோ எப்போதும் இந்த பஞ்சாயத்துகளில் விருப்பம் இருந்ததில்லை. அவர்கள் கடைசிப் பெண்ணின் கல்யாணம் என்று சில பல லட்சங்களைக் கரைத்து விட்டு, ஒரு பெரிய ஹோட்டலுக்கு மதிய உணவுக்காகச் சென்றனர்.



உணவுக்குப்பின் மீண்டும் திருமண பர்ச்சேஸ் என்று இரவு வரை ஒன்றாக ஊர் சுற்றி விட்டு கயல்விழியின் வீட்டினர் ஊருக்குத் திரும்ப குருபிரசாத் இங்கே நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறான்.



எப்போது அறைக்குள் வந்தானோ எப்போது தூங்கினானோ தெரியாது.. காலையில் அலாரம் வைத்தது போலக் கயல்விழியே அழைத்து எழுப்பி விட்டாள்.



"ஏங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடுவீங்களா?" என்ற கேள்வியுடன்.
 

Author: SudhaSri
Article Title: சலன பருவம் -5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom