• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சலன பருவம் -12

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
சலனபருவம் - 12



குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக இரு விட்டாரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். கயல்விழியின் தாய்மாமன்மாருக்கும் முக்கிய நிகழ்வான அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டி கோகிலாவின் தமக்கை என்ற முறையில் தீபாவின் அன்னை மல்லிகாவும் அங்கே இருந்தார்.



தீபாவின் விடுமுறை முடிந்திருந்தாலும் இப்போதைய வசதியாக இன்னும் ஒரு மாதத்திற்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வாங்கி இருந்தாள். அமெரிக்க நேரத்தில் வேலை செய்தால் போதும் என்பதால் அவளும் கோவிலுக்குக் கிளம்பி விட்டாள். அவள் கிளம்பி நின்ற விதம் தான் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது என்றால் அவள் அடுத்து செய்த செயல் அங்கே ஒரு பிரளயம் உருவாகக் காரணமாக அமைந்தது..



அவளும் இதே மதுரை மண்ணில் தான் பிறந்து வளர்ந்தாள் என்பதையே மறந்து விட்டவளாக ஜீன்ஸ் பேண்ட்டும் ஒரு ஷார்ட் டாப்புமாக வந்து காளிதாஸின் அருகில் நின்றதோடு மட்டும் அல்லாமல் அவனது கையோடு கை கோர்த்து, "தாஸ்! நான் ரெடி. ஷால் வி மூவ்" என்றவளைக் குத்தவா வெட்டவா என்று எல்லாரும் பார்த்து வைத்தனர்.



சோமசுந்தரம் தம்பி மகனைப் பார்த்த பார்வையில் அவன் சாம்பலாகாமல் இருந்ததே பெரிய விஷயம் தான். காளிதாஸின் பெற்றோருக்கும் ஏதோ ஒன்று தப்பாக இருக்கிறதே என்று முதன் முறையாக ஒரு நினைப்பு வந்தது.



மயில் கழுத்து வண்ண மைசூர் சில்க் புடவையில் கிளம்பி ஒயிலாக நடந்து வந்த கயல்விழியின் அழகில் மயங்கி, வேறொரு உலகத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்கிய குருபிரசாத் திடீரென ஹாலில் வீசிய அனல் காற்றில் காரணம் புரியாமல் திரும்பினான். புரிந்த போதோ, அமைதியாக சோமசுந்தரத்தைப் பார்த்தவன் மனைவியுடன் காருக்குச் சென்று விட்டான்.



கோகிலாவின் தமக்கை மல்லிகாவுக்கு தங்கையின் குடும்பம், அதன் பாரம்பரியம்,அதற்கு ஊரில் இருக்கும் பெயர் இதையெல்லாம் தாண்டி அவர்களிடம் இருக்கும் பணத்தையும் கண்டு ஏகப்பட்ட பொறாமை. அதை எப்போதுமே ஏதோ ஒரு வகையில் சொல்லவும் செய்வார். அவரது புகுந்த வீட்டில் இந்த அளவுக்கு வசதி இல்லாவிட்டாலும் அவர்களும் லட்சாதிபதியாக இருந்தவர்கள் தான். மல்லிகா குடும்பம் நடத்திய லட்சணத்தில் தான் அவர்கள் பிச்சாதிபதியாக மாறி விட்டதை அவர் அவ்வப்போது மறந்து விடுவார்.



அப்படிப்பட்ட மல்லிகாவிற்கு மகளாகப் பிறந்த தீபாவும் சில விஷயங்களில் தாயைக் கொண்டு பிறந்திருந்தாலும் படிப்பில் கெட்டியாக இருந்தாள். அவர்களையும் அரவணைத்து அடுத்த தலைமுறை முன்னேற சோமசுந்தரம் தான் வழி வகுத்துக் கொடுத்தார். தீபாவின் படிப்பிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்தார். இப்போது தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் வேலையை தாயும் மகளுமாகச் சேர்ந்தே செய்தனர்.



இப்போதும் மல்லிகா, மகளைக் கண்டிக்காமல் அவளின் நவநாகரீக தோற்றம் குறித்த பெருமையுடன் தங்கை வீட்டாரைப் பார்க்க சோமசுந்தரம் நேரடியாகப் பேசிவிட்டார்.



"இங்க பாரு மல்லிகா! இது மதுரை, மும்பை இல்லை. உன் மகளைக் கொஞ்சம் அதுக்கேத்த மாதிரி நடந்துக்கச் சொல்லு" என்று அவர் ஆரம்பிக்க, மல்லிகா பதில் பேசுவதற்கு முன் தீபா வாயைத் திறந்து மாட்டிக் கொண்டாள்.



"மதுரைன்னா என்ன பெரியப்பா? உங்க வீட்டுல யாரும் இப்படி டிரஸ் போடுறதில்லையா என்ன? கயல் கூட வேலைக்குப் போகும் போது போடறாளே? எனக்கு எது வசதியோ அதைத் தான் நான் போட முடியும். அடுத்தவங்க இஷ்டத்துக்கு. எல்லாம் நான் டிரஸ் போட முடியாது. நான் எப்படி நடந்துக்கணும்னு அடுத்தவங்க சொல்லித் தெரிஞ்சிக்கிற அளவுக்கு இப்போ நான் இல்லை. கல்யாண வீடுன்னு உங்க வீட்டுக்கு வந்தேன்.. இந்த நிமிஷம் உங்க வீட்டுல இருக்கேன்னு என்னை இஷ்டத்துக்கு அதிகாரம் பண்ணாதீங்க. உங்க அதிகாரம் எல்லாம் உங்க வீட்டு மனுஷங்களோட நிறுத்திக்கோங்க. அவங்க தான் பூம் பூம் மாடு மாதிரி நீங்க சொல்றது எல்லாத்துக்கும் தலையாட்டுவாங்க. அதெல்லாம் என் கிட்ட செல்லாது. மைன்ட் இட்."



சோமசுந்தரம் பேசினால் அங்கே யாரும் மறுவார்த்தை பேசிப் பழக்கம் இல்லை. அதற்காக அவர் தேவையில்லாத எதையும் பேசிவிடுபவரும் இல்லை. நியாயத்தைத் தான் பேசுவார், அடுத்தவர் பேசுவதில் இருக்கும் நியாயத்தையும் கேட்டுக் கொள்வார். அப்படிப்பட்டவரை, தீபா பேசப் பேச குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்று விட, காளிதாஸ் அவளிடம் இருந்து மெதுவாகத் தன் கைகளை உறுவிக் கொண்டு நகர்ந்து நின்று விட்டான். அவனுக்குமே தீபாவின் பேச்சு அதிர்ச்சி தான்.



இதே தீபா படிப்பிற்காகவும் வேலைக்காகவும் பெரியப்பாவிடம் எத்துணை பணிந்து பேசி இருக்கிறாள் என்பதை அவன் அறிவான். அவளது தாயுமே புதுப் பணக்காரராக புது அவதாரம் காட்டினார். காளிதாஸைப் 'புரிந்து கொண்டாயா?' என்பது போலத் தீவிரமாக ஒரு பார்வை பார்த்த சோமசுந்தரம் தனது மனைவியிடம் திரும்பினார்.



"நான் மதுரைல இப்படி உடுப்பு போடக்கூடாதுன்னு சொல்லலை.. அப்படிச் சொன்னால் அது அவங்கவங்க சுதந்திரம்னு கொடி தூக்குவீங்க. ஆனால், இடம் பொருள் ஏவல்னு ஒன்னு சொல்லுவாங்க. அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்கன்னு தான் சொல்றேன். நாம போறது கோவிலுக்கு, நம்ம நடை உடை பாவனை எல்லாம் அதை ஒட்டித் தான் இருக்கணும். அப்படி நடந்துக்க இஷ்டம் இல்லாதவங்க எங்க வீட்டுல, எங்க குலதெய்வம் கோவில்ல, எங்க பொண்ணு வைக்கிற பொங்கல்ல கலந்துக்க வேண்டிய அவசியமே இல்லை. இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு." படபடவென்று பேசிவிட்டு மல்லிகாவை ஒரு தீப்பார்வை பார்த்தார்.



"பெரியவங்களுக்கே நல்லது கெட்டது தெரியலேன்னா சின்னவங்களைச் சொல்லி பிரயோசனமில்லை" என்றவர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.



காளிதாஸ் உட்பட ஆண்கள் அனைவரும் அவர் பின்னால் போய் விட, வீட்டுப் பெண்களுக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மாப்பிள்ளை வீட்டார் இங்கே இல்லை என்பதே நல்ல வேளையாக இருந்தது. குருபிரசாத்தின் குடும்பத்தில் அனைவரும் அவர்களின் பூர்வீக வீட்டில் இருந்ததால் இங்கே நடந்த களேபரம் எதுவும் அவர்களை எட்டவில்லை.



இத்தனை நடந்த பின்பும் தீபா உடையை மாற்றத் தயாராக இல்லாததால் மல்லிகாவும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. அவரது அண்ணன் தம்பி இருவரும் அவரது செயலைக் கண்டிக்க, அனைவரிடமும் கோபித்துக் கொண்டு மகளுடன் தன் வீட்டிற்கு சென்று விட்டார்.



"உங்க வீட்டு விசேஷத்துக்கு வந்ததுக்கு நல்ல மரியாதை பண்ணிட்ட கோகிலா" என்று போகிற போக்கில் தங்கையின் குற்ற உணர்வைத் தூண்டி விட்டுச் சென்றார் மல்லிகா.



"நீ இதுக்கெல்லாம் கவலைப்படாமல் இரு கோகிலா. இந்த மல்லியும் அவ மகளும் ஆடுற ஆட்டம் தாங்க முடியல. தங்கச்சி மகளாச்சேன்னு என் மகனுக்குக் கேட்டேன். அவங்க தாயும் மகளுமா வேற ஏதோ சொல்றாங்க. எதுவும் கேட்கிற விதமா இல்லை. எதுக்கும் நீ கொஞ்சம் சூதானமா இருந்துக்கோ."



"என்னண்ணே! என்ன சொல்ல வரீங்க? எனக்கொன்னும் விளங்கலையே?" பயந்து போனார் கோகிலா.



"நான் ஒரு கூமுட்டை. எந்த நேரத்தில எதைப் பேசணும்னு தெரியாமல் பேசிட்டேன். அதையெல்லாம் மனசில வச்சிக்காத. இப்போ, உன் மகளோட மறுவீடு முடிஞ்சு அவளைப் புகுந்த வீட்டுக்கு நல்ல படியா அனுப்பி வைக்கிறது தான் முக்கியம். மத்ததை எல்லாம் மறந்துட்டு மகளைக் கவனி" என்று அவரது அண்ணன் சமாதானம் சொன்னதில் சற்றுத் தெளிவடைந்தார் கோகிலா.



கோவிலுக்குத் தேவையான பூஜைச் சாமான்களைச் சரிபார்த்து எடுத்துக் கொண்டு அடுத்த பத்து நிமிடங்களில் குருபிரசாத் மற்றும் கயல்விழியின் நலம் விரும்பிகள் அனைவரும் பதினெட்டாம் படி கருப்பசாமியின் கோவிலுக்குக் கிளம்பிச் சென்றனர்.



இருவீட்டாரின் முன்னிலையில் தாய் மற்றும் மாமியாரின் உதவியுடன் குலதெய்வத்திற்குப் பொங்கல் வைத்து மனதார வேண்டிக் கொண்டாள் கயல்விழி.



பின்னர் குடும்பத்தோடு கீழே குடியிருந்த அழகரைத் தரிசித்து விட்டுப் பெரியவர்கள் எல்லாம் ஓய்வெடுக்க, சிறியவர்கள் மலைமேல் பழமுதிர் சோலையில் குடியிருந்த அழகரின் மருமகனைத் தரிசிக்கச் சென்றனர்.



"ஹேய் கயல்! அங்கே பாரு. உன்னோட முன்னோரெல்லாம் உன்னை ஆவலா வரவேற்கிறாங்க." குருபிரசாத் மனைவியைக் கலாய்க்க, அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த கயல்விழி அவனை ஒட்டிக்கொண்டு நடந்தாள். எதிரே ஒரு குரங்குக் கூட்டம் அவளது கையில் இருந்த பழக் கூடையைக் குறி வைத்துக் காத்திருந்தது. விட்டால் அழுது விடுபவள் போல நின்று கொண்டிருந்த கயல்விழியைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.



"ஹா ஹா ஹா…" என்று சிரித்தவாறே அவள் கையில் இருந்த பழங்களை எல்லாம் குரங்குகளிடம் கொடுத்து விட்டு வெறுங்கையுடன் நடந்தான்.



"அதெப்படி இந்த பொண்ணுங்க எல்லாம் பயம்னு வந்தால் மட்டும் புருஷன் கூட ஒட்டிக்கிறீங்க?" என்று சந்தேகம் கேட்டவனைக் கொலை வெறியோடு பார்த்து வைத்தாள் கயல்விழி.



"இப்படியெல்லாம் பார்த்தா உன் முன்னோர் வேணும்னா பயப்படுவாங்க. நான் பயப்படமாட்டேன். ஸோ.. நீ வேற ஏதாவது ட்ரை பண்ணு.." என்று அதற்கும் அவளைச் சீண்டினான்.



"ம்ச்.. போங்க.. நீங்க.. எதுக்கெடுத்தாலும் கேலி பண்ணிட்டு.." என்று சிணுங்கியவள் அவனை விட்டுத் தனியாக நடக்க ஆரம்பித்தாள். லேசான தூறல் போட்டுக் கொண்டு இருந்தது.



"ஹேய்.. ஹேய்.. இந்த இடத்தைச் சுத்திப் பாரேன். வொன்டர்ஃபுல் லொகேஷன் அன்ட் க்ளைமேட். இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனை புதுசா கல்யாணம் ஆன எந்த மாங்கா மடையனாவது மிஸ் பண்ணுவானா? இந்த சின்ன லாஜிக் கூட தெரியாமல் நீ என்ன எல்லாத்துக்கும் சிணுங்கிற?" என்று சீரியஸாகச் சொன்னவன் உடனே பேச்சை மாற்றினான்.



"அப்படி நீ சிணுங்கறது கூட நல்லா தான் இருக்கு.. ஆனால் சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது கை வாய் எல்லாம் கட்டிப் போட்டது போல இருக்கே.. நாம மட்டும் தனியா போயிட்டா நல்லா இருக்கும்.." என்று கண்சிமிட்டியபடி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.



"நல்லா தான் இருக்கும்.. நாம கோவிலுக்கு வந்திருக்கோம்.. ஒழுங்கா பேசுங்க" என்று மிரட்டியவள் அவன் காட்டிய திசையில் கண்களைத் திருப்ப அங்கே கண்ட காட்சியில் கணவனைப் பார்த்து நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.



அழகர் மலையின் மரங்களின் நடுவே ஆங்காங்கே மந்திகள் தங்கள் இணையோடு கொஞ்சிக் கொண்டு இருக்க, அவற்றிற்குப் போட்டியாக சில மனிதப் பிறவிகளும் ஜோடி ஜோடியாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்.



"ஷ்ஷ்.. சே.. மானங் கெட்ட ஜென்மங்கள்" என்று அவர்களைத் திட்டிய கயல்விழி அமைதியாகக் கணவனின் அருகில் நாகரீகமான இடைவெளியில் அமர்ந்து கொண்டாள்.



"கயல்! இதெல்லாம் இயற்கையான விஷயங்கள். மதுரைல பீச், பார்க்னு இல்லேல்ல.. அதான் இப்படிக் கிடைச்ச இடத்தை யூஸ் பண்றாங்க. சென்னைல வந்து பாரு.. சில்ரன்ஸ் பார்க்ல கூட இப்படி ஜோடிகளைப் பார்க்கலாம். நாம கோவில்னு வந்திருக்கோம். அவங்க வேற வேலைக்கு வந்திருக்காங்க. அவ்வளவு தான். நீ கோபப்படறதுல அர்த்தமே கிடையாது" என்று அவளது பார்வைக்குப் புது விளக்கம் கொடுத்தான் கயல்விழியின் கணவன்.



"நீங்க என்ன ஒரு புது தியரி சொல்லிட்டு இருக்கீங்க. இப்படி எல்லாம் நடந்துக்கணும்னா அந்த நாலு கால் பிராணியாவே இருந்திருக்கலாமே.. எதுக்கு இப்படி ஒரு பரிணாம வளர்ச்சி.. அதுல காலத்துக்கு தகுந்த நாகரீக வளர்ச்சி.. ம்ம்.. " அவளும் விட்டேனா பார் என்று பதிலுக்கு பதில் பேச குருபிரசாத் உற்சாகமானான். முதல் முறையாக மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுகிறாள். அதை அப்படியே தொடரச் செய்து விடவேண்டும் என்ற ஆசையில் அவன் பேச்சை வளர்த்தான்.



"ஓ.. நீ அப்படிச் சொல்றியா. வெளி உலகம் தெரியாமல் கேர்ள்ஸ் மட்டுமான உலகத்துலேயே வளர்ந்ததால நீ இப்படி பேசுற. ஆனால் சொசைட்டி இதெல்லாம் சகஜமப்பான்னு சொல்ற அளவுக்கு எப்பவோ மாறியாச்சு.. நீயும் அதுக்கேத்த மாதிரி மாறிக்க வேண்டியது தான்."



அவன் பேசியதைப் பொறுமையாகக் கேட்டவள், "அப்படி எல்லாம் நான் ஒன்னும் மாறிட மாட்டேன். அதுக்கு அவசியமும் வராது. கேர்ள்ஸ் உலகத்திலேயே வளர்ந்தா பக்கத்தில இருக்கிறது அண்ணனா அத்தானான்னு கூடவா தெரியாது. எனக்கு நல்லாவே தெரியுது. நீங்க சொல்ற உலகத்தில இருக்கிறவங்களுக்கு தான் தெரியல" என்றாள் ஒரு மாதிரியான குரலில். 'நீ நினைக்கும் அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல.. எல்லாம் புரிந்தே இருக்கிறேன்' என்றது அக்குரல்.



அவள் எதையோ பூடகமாகச் சொல்வது புரிந்து குருபிரசாத் திகைத்து நின்று விட்டான். அவனை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவள், "அதுக்காக எதுவும் தெரியாமல் பேசறேன்னு அர்த்தம் இல்லை. காலைல பெரியப்பா சொன்னதை நீங்களும் காத்து வாக்கிலே கேட்டீங்க தானே.. இடம் பொருள் ஏவல் சேவல்னு.. அதை ஃபாலோ பண்ணனும்னு சொல்றேன்.. அம்புட்டு தான்" என்று கண்ணடித்தாள்.



"அட.. நீ சொல்றது சரிதான் போல. மனைவி சொல்லே மந்திரம்னு இந்த செகண்ட்ல இருந்து மாறிட்டான் இந்த குரு.. இப்போ நீங்க சொல்லுங்க மேடம்.. நமக்கே நமக்கான அந்த இடம். எங்க போகலாம்? எப்போ போகலாம்?"



அவன் கேட்டது புரியாமல் விழித்தவளுக்கு, "அதாங்க மேடம். கல்யாணம் ஆன புது ஜோடி எல்லாம் போவாங்களே.. தேன் நிலாவுக்கு.. நீங்க சொல்றதை வச்சுப் பார்க்கும் போது உங்களுக்கும் அப்படி ஒரு ஐடியா இருக்கும் போலத் தெரியுது.. அதான் எங்க போகலாம்னு சொன்னீங்கன்னா உடனே கிளம்பிடலாம்" என்று விம் போடாத குறையாக விளக்கினான். இதைக் கேட்ட அவள் முகம் சிவந்து போனதைத் தனது மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டான்.



அவள் எதுவும் பேசாமல் எழுந்து விட்டாள். கயல்விழி அங்குமிங்கும் பார்த்தபடி அமைதியாக நடந்து வர, "இதைச் சொல்றதுக்கும் இடம் பார்க்கணுமா.. தேவுடா.. காப்பாத்த ப்பா" என்று மேல் நோக்கிக் கும்பிடு போட்டான் குருபிரசாத்.



அவன் முதுகில் ஒன்று போட்டவள், "சே.. ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்க? கொஞ்சம் பேசாமல் தான் வாங்களேன்" என்று கெஞ்சினாள்.



"நீ எனக்கு ஒரு பதிலைச் சொல்லிட்டா.. நான் ஏன் உன் மானத்தை வாங்கப் போறேன்"



"எனக்கு.. எனக்கு…" திக்கித் திணறியவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.



"உனக்கு.. ம்.. மேல சொல்லு.. ஸ்விஸ்ஸா.. வெனிஸா" என்று பெரிய அளவில் திட்டம் போட்டவனுக்கு



"எனக்குக் கொடைக்கானல் போகணும்" என்று சொல்லி பெரிய பல்பை பரிசாக அளித்தாள்.



காதுகளை நன்றாகத் தேய்த்தவன்

"வாட்.. கம் அகையின்.." என்றான் சத்தமாக.



"ஷ்ஷ்.. எதுக்கு இவ்வளவு சத்தமா கேட்குறீங்க? நான் பக்கத்துல தானே இருக்கேன்?"



"அது சரி கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லு.."



"ஏன் உங்க காதுல சரியா கேட்கலையா? கொடைக்கானல் போகணும்னு கேட்டேன்"



"மதுரைல இருக்கிறவ கொடைக்கானல் போனதில்லையா நம்ப முடியலையே!"



"நான் கொடைக்கானல் போனதில்லைன்னு உங்க கிட்ட சொன்னேனா.. அதெல்லாம் போயிருக்கேன் ஆயிரம் தடவை. இப்போ எல்லாரும் சேர்ந்து போகலாம்னு தான் கேட்கிறேன் "



"என்னாதூ…" என்று ஜெர்க் ஆனவன், "குடும்பமா போனா அதுக்கு பேரு டூர் மா.. ஹனிமூன் இல்லை"



"ஐய.. எங்களுக்கும் தெரியும். நான் உங்க கூடவும் போகணும்னு தான் கேட்கறேன்"



"ஓ.. நான் பெரிசா ப்ளான் போட்டா.. நீ என்ன இப்படி முடிச்சிட்ட.. கொடைக்கானல் இன்னொரு தடவை கண்டிப்பா போகலாம். இல்லேன்னா நாளைக்கே கூட போயிட்டு வரலாம். பட் ஒன்னு நல்லா மனசுல ஏத்திக்கோ நம்ம ஹனிமூன் அங்கே கிடையாது. சொந்த பந்தங்கள் எல்லாம் காணாத அளவுக்கு தள்ளிப் போயிடணும். ஓகே.." என்றவன், அடுத்த பாயிண்ட்டைச் சரியாகப் பிடித்தான்.



"ஆமா… என் கூட கொடைக்கானல் போகணும்னு உனக்கு ஏதாவது வேண்டுதலா? சம்திங் டெல்ஸ் மீ.. இதுல வேற ஏதோ விஷயம் இருக்கு போல இருக்கே"



"அது… வந்து…"



"வந்தாச்சு.. வந்தாச்சு.. சொல்லு சொல்லு.."



"அது வந்து.. எனக்கு அங்கே போட்டிங் போகணும்னு ஆசை…"



'கொடைக்கானலுக்கு ஆயிரம் தடவை போனவ, போட்டிங் போனதில்லையா? நம்ப முடியலையே?' என்று அவன் பார்வையாலேயே கேட்டான்.



"போவோம்.. எல்லாரும் கும்பலா பெரிய போட்ல.. ஆனால் எனக்கு.. இந்த சினிமால எல்லாம் காட்டுவாங்களே.. அது போல நாம இரண்டு பேர் மட்டுமே பெடல் பண்ணிட்டு போகணும்னு…" என்று சொல்லி விட்டு வேகமாக முன்னே நடந்து விட்டாள்.



"குடும்பமா கொடைக்கானல் போகணும்.. போட்டிங் மட்டும் தனியா போகணும்.. நல்லா இருக்கு மா உன் நியாயம் " என்று அவளைக் கலாய்த்தவன்,



அங்கேயே நின்று 'வெனிஸ் போகலாமா? இல்லை இந்தியாவில் தான் நினைத்த இடங்களில் அது போன்ற வசதி இருக்கிறதா?' என்று சிந்தனையில் ஆழ்ந்து போனான். அவனது நண்பர்கள் வேறு திருமண அன்பளிப்பாக சில பேக்கேஜ்களைத் தேர்வு செய்யச் சொல்லி வற்புறுத்தி இருந்தனர்.



அதிகபட்சமாக இன்னும் இருபது நாட்கள் தான் புது மாப்பிள்ளை அவதாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அவனுக்கு இருக்கிறது. அதன் பிறகு இருவரையுமே வேலை அழைத்து விடும்.



தீவிரமாக யோசித்தவனுக்கு ஓர் இடம் இருவரது விருப்பத்திற்குரிய இடமாகத் தோன்ற, 'யுரேகாஆஆ' என்று மனதுக்குள் கூவியபடி கயல்விழியை நோக்கி நடந்தான்.



மறுவீட்டு சம்பிரதாயங்கள் முடிந்து, கயல்விழியின் ஆசைக்காக குடும்பத்துடன் ஒரு நாள் கொடைக்கானல் சென்றார்கள்.



மொத்த குடும்பமும் கேலி செய்ததைக் கண்டு கொள்ளாமல் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து அதிகாலையில் மதுரையில் இருந்து கிளம்பினார்கள். வெள்ளி அருவியில் நூலாக விழுந்த நீரைக் கண்டு வருந்திய பெரியவர்கள் பழைய நினைவுகளுக்குப் போனார்கள்.



"உனக்கு ஞாபகம் இருக்கா மீனாட்சி? நம்ம கல்யாணம் முடிஞ்சு இங்கே தான் வந்தோம். அப்போ எல்லாம் வெள்ளிய உருக்கி ஊத்தின மாதிரியே கொட்டும் இந்த அருவி. இப்போ பாரு.. நூலாட்டம் விழுது.. " என்று சுந்தரேசன் அவரது மலரும் நினைவுகளுக்குப் போனார் என்றால் சோமசுந்தரமும் அவரது தம்பியும் கூட அதையே தத்தம் மனைவிகளிடம் கூறிக்கொண்டு இருந்தார்கள்.



சிறியவர்கள் எல்லாம் பெரியவர்களைக் கேலி செய்ய, "நாங்களும் உங்க வயசைத் தாண்டி வந்தவங்க தான்" என்றவர் சோமசுந்தரம்.



எல்லாரும் வாய்க்குள் நுழைவது தெரியாமல் "ஆ" வென்று பார்க்க, "அப்படிப் போடு" என்று கயல்விழியைப் பார்த்துச் சிரித்தான் குருபிரசாத்.



அடுத்து போட்டிங் சென்ற போது பெரியவர்கள் எல்லாம் ஓய்வெடுக்க, குருபிரசாத் பெடல் போட்டை நோக்கிப் போனான். எல்லாரும் சேர்ந்து செல்லலாம் என்று அழைத்தவர்களை மறுத்து விட்டு மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைத்தான். இவர்களைக் கண்டு மற்ற ஜோடிகளும் பெடல் போட்டுக்கு மாறி இருந்தனர்.



பெடல் செய்வது கயல்விழிக்குச் சற்றுச் சிரமமாக இருந்த போதிலும் ஆசை நிறைவேறிய உற்சாகத்துடன் செயல்பட்டாள். கணவன் என்று ஒருவன் அருகில் இருந்ததைக் கண்டு கொள்ளவே இல்லை.



"அடிப் பாவி! நான் கூட ரொமாண்டிக்கா டூயட் பாடத் தான் நாம இரண்டு பேர் மட்டுமே போகலாம்னு சொல்றேன்னு பார்த்தேன். நீ என்னடான்னா நான் ஒருத்தன் இருக்கிறதையே கண்டுக்காம உன் வேலைல குறியா இருக்க. இதுக்கு தான் நல்லதுக்கு காலம் இல்லேன்னு சொல்றாங்க போல" என்று புலம்பித் தீர்த்து விட்டான்.



அசடு வழிந்த போதும் கயல்விழி தனது போக்கை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளை அப்படியே விட்டு விட்டால் அது குருபிரசாத் கிடையாதே.



"ஆஹா இன்ப நிலாவினிலே.. ஓஹோ ஜெகமே ஆடிடுதே" என்று சத்தமாகப் பாட்டி காலத்துப் பாட்டைப் பாடி அவளைக் கேலி செய்து அவளது முறைப்பைப் பெற்றுக் கொண்டான். அதைத் தவிர வேறு சிலவற்றையும் பெற்றுக் கொள்ள அவனுக்கு ஆசை தான். சுற்றிலும் கரடிகள் கூட்டத்தை வைத்துக் கொண்டு இடம் பொருள் என்று பேசும் மனைவியையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய.



அதற்கெல்லாம் சேர்த்து வைத்து அவளைப் பதினைந்து நாட்கள் தனிமையில் கடத்திக் கொண்டு போனான். விளைவு மனைவியின் மனதை முழுமையாக அறிந்து கொண்டவனாகத் திரும்பி வந்தான் குருபிரசாத்.
 

Author: SudhaSri
Article Title: சலன பருவம் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom