• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சலன பருபவம் -4

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
சலனபருவம் - 4



ஞாயிறு மாலை ஐந்து மணி. நவிமும்பையின் கடலோரப் பகுதியில் இருந்த அந்த நவீன அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடி. அங்கே இருந்த தனது மூன்றரை படுக்கையறை ஃப்ளாட்டைக் கால்களால் அளந்து கொண்டிருந்தான் குருபிரசாத். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு செய்ய வேண்டிய வேலைக்கு இப்பவே ஒத்திகை பார்க்கிறானோ??



முதல் நாள் பார்ட்டி நடந்ததற்கான அடையாளங்கள் ஆங்காங்கே மிச்சம் இருக்க, அதைத் தன் போக்கில் சுத்தம் செய்தவனின் மனமோ குழம்பிக் கிடந்தது.



'நல்ல மச்சான் வந்து வாய்ச்சான் டா நமக்கு.. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படின்னா.. அதுக்கு அப்புறம்… என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கானோ.. நினைச்சாலே தலை சுத்துதே… பேசாமல் கல்யாணம் முடிஞ்சதும் கயலை எங்கேயாவது நாடு கடத்திருவோமா.. இல்லேன்னா இவன் நிச்சயம் நம்ம நிம்மதியையும் சேர்த்து ஒரு வழி பண்ணிடுவான்'



காளிதாஸால், எதிர்காலத்தில் தன் வாழ்க்கையில் வரப் போகும் பிரச்சனைகளையும் இன்றே ஆராய்ச்சி செய்து தீர்த்துவிடத் துடித்தான்.



'மச்சான் எக்கேடு கெட்டால் என்ன? உனக்குக் கயல் வேணும்.. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்.. அதான?' என்று உள்ளே இருந்து இன்னொரு குரல் எழும்ப அதை அப்படியே விழுங்கினான்.



'ஒரு வேளை வீட்டில் உள்ள யாருக்காவது விவரங்கள் எதுவும் தெரியுமா? கயலிடம் இதைப் பற்றிக் கேட்கலாமா?' என்று கூட ஒரு யோசனை தோன்றியது.



இவன் அலைபேசியை வைத்துக்கொண்டு இங்க்கி பிங்கி போட்டுக் கயலிடமாவது சொல்லி விடலாம் என்று முடிவெடுத்த வேளையில் அவனது எண்ணங்கள் டெலிபதியில் சென்று சேர்ந்தது போலக் கயல்விழியே அவனை அழைத்து விட்டாள்.



ஆஹா என்று மகிழ்ந்து போய் அவசரமாக அலைபேசியை காதில் வைத்தான்.



"ஹலோ மை டியர் ராங் நம்பர்!" மொபைல் ஃபோன் வழியாக வந்த பாடலில் அதிர்ந்து விழித்தாள் கயல்விழி. ஒரு முறை காதில் இருந்து ஃபோனை எடுத்துத் தான் அழைத்த எண்ணைச் சரிபார்க்க வேறு செய்தாள்.



அவளது செய்கையைச் சரியாக ஊகித்தவன், "ஹா ஹா ஹா" என்று சத்தமாகச் சிரித்தான். சிரிப்பினூடே, "நம்பர் சரிதானான்னு செக் பண்ணியாச்சா?" என்றான்.



"போங்க..‌நீங்க.. என்னை பயமுறுத்தறதே வேலையா வச்சிருக்கீங்க" என்று சிணுங்கினாள் அவள்.



"அது சரி.. நான் தான் நீ எப்போ எதுக்கு அழுது பஞ்சாயத்தைக் கூட்டுவியோன்னு பயந்து பயந்து பேச வேண்டியதா இருக்கு. இதுல இவங்க பயப்படறாங்களாம். யார் கிட்ட காது குத்தற?" அவன் பாயிண்டைப் பிடிக்க, சட்டென்று வேறு பேச்சுக்கு மாறினாள் அவள்.



"ம்ச். அதை விடுங்க.. இப்போ எதுக்கு என்னை ராங் நம்பர்னு சொன்னீங்க.. அதைச் சொல்லுங்க முதல்ல."



"எப்படியும் நான் கேட்கிற எதுக்கும் நான் யாருன்னே தெரியாத மாதிரி சம்பந்தம் இல்லாத பதிலாத் தான் சொல்லப் போற. அப்போ நீ ராங் நம்பர் தானே"



"நீங்க ஏடாகூடமா கேள்வி கேட்டா அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என்ன? முடியாது போங்க." அவள் குரலில் இதுவரை இல்லாத ஓர் உரிமையும் சந்தோஷமும் இருப்பது போலத் தோன்றியது அவனுக்கு.



"ஏடாகூடமா? நான் இன்னும் எதையும் ஏடாகூடமா ஆரம்பிக்கவே இல்லை தெரியுமா? புருஷன் பொண்டாட்டி கிட்ட பேசற பேச்சுல எதுவுமே ஏடாகூடம் கிடையாது தெரியுமா?"



இப்படிப் பல தெரியுமாக்கள் போட்டு அவன் பேசி முடித்த போது அவள் அப்பாடா நிறுத்தினானே என்று பெருமூச்சு விட்டாள். ஆனால் அவளது வழக்கப் படி மௌனமே அவனுக்கு பதிலாகக் கிடைத்தது.



இருவரும், அடுத்தவரிடம் எதைப் பேச நினைத்தார்களோ அதைப் பேசாமலே,

வழக்கம் போல அர்த்தம் இல்லாத எதையெதையோ பேசி மொபைல் ஃபோனில் சார்ஜ் தீர்ந்து போகும் வரை பேசி முடித்தனர்.



அழைப்பின் முடிவில், குருபிரசாத்தின் மனமெல்லாம் நீக்கமற நிறைந்து அங்கே இருந்த குழப்பத்தை எல்லாம் எங்கோ ஓர் மூலையில் தள்ளி விட்டுச் சென்றிருந்தாள் கயல்விழி.



அதே இனிய நினைவுகளுடன் உற்சாகப் பந்தானவன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். "ஷாப்பிங்கா.. நானா.. நோ.. " என்று அக்காவிடம் சொல்லி விட்டு வந்தவன், அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயைக் காலி செய்து விட்டு வந்தான். வீட்டுக்கு வந்த பின்பே, வாங்கியவற்றை வைக்க ஒரு பெட்டியும் வாங்கியிருக்க வேண்டும் என்று தெரிந்தது(!?)



என்ன வாங்கினான்னு நாம, கொஞ்சம் வெயிட் பண்ணினால் வழக்கம் போல அவங்க அக்கா ஆனந்தி சொல்லிடுவாங்க. ஆனந்திக்கு மட்டும் இல்ல, ஊருக்கே அவன் எந்தெந்த கடையில வாங்கி இருக்கான்னு இந்த நேரம் தெரிஞ்சிருக்கும். என்ன வாங்கி இருக்கான்னு அப்கோர்ஸ் அவன் தான் சொல்லணும்..



சந்தோஷமாகத் தூங்கி எழுந்தவன், காலைக் கடனை முடித்துக் கொண்டு விமான நிலையம் புறப்பட்டான். ஒன்பதரை மணியளவில் வீட்டை அடைந்தவனை அவனது வீட்டு வரவேற்பறையில் இருந்த மனிதத் தலைகள் ஆச்சர்யப்படுத்தின. விரிந்த புன்னகையுடன் அவர்களை நோக்கி முன்னேறினான். ஆனால் அவனது புன்னகைக்குப் பதிலாக அத்தனை முகங்களும் கடுமையான கோபத்தை எதிரொலித்தன.



எதுவும் புரியாமல் திகைத்து நின்றவனது முகம், அந்தக் கோப முகங்களின் ஊடே அவனருமை மச்சான் காளிதாஸைக் கண்டதும் தெளிவடைந்தது. கூடவே, இகழ்ச்சிப் புன்னகை ஒன்றைச் சுமந்து நின்றது.. யாருக்கும் தெரியாமல் சட்டென்று அதை மறைத்துவிட்டவனின் எண்ணங்கள் சென்ற சனிக்கிழமை இரவை நோக்கிப் பயணித்தது.



ஆனால் அவன் உள்ளே நுழைந்தது முதல் இந்த நொடி வரையிலான அவனது முக பாவங்களை இரு ஜோடிக் கண்கள் கூர்மையாக நோக்கிக் கொண்டு இருப்பதை அவன் அறியவே இல்லை.



—----



"யெஸ்.. பெர்ஃபெக்ட்.. குட் டு கோ!" தனக்குத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான் குருபிரசாத். பாச்சிலர்ஸ் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இருந்தது வீடு. இரவு உணவிற்கான ஏற்பாடுகளுடன் கூடவே பாச்சிலர்ஸ் பார்ட்டியின் முக்கிய அங்கமான கலர் கலரான மதுக் குடுவைகளும், அதைப் பரிமாறவென்றே பிரத்யேகமான பயிற்சி பெற்றவரும் தயாராக நின்றனர்.



குருபிரசாத்தின் நண்பர்கள் என வரப் போகும் அனைவரும் சமுதாயத்தில் தனக்கென ஒரு இடத்தில் இருப்பவர்கள். அதனால் மது அருந்துவதிலும் நாகரீகம் பார்த்து அளவோடு உட்கொள்பவர்கள் தான். அதனாலேயே, அவர்களின் ப்ரைவஸி கருதியே விருந்தைத் தன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தான்.



இன்னும் விருந்தினர் வருவதற்கு நேரம் இருக்க, அதற்கு முன்பே தான் தயாராகி விடலாம் என்று உடை மாற்றிக் கொள்ள சென்றவனை, விடாது ஒலித்த அழைப்பு மணி ஓசை

"யெஸ், கமிங்" என்ற குரலோடு அவசரமாக வாசலுக்கு இழுத்து வந்தது.



வந்தது காளிதாஸ், ஒரு பெண்ணோடு நின்றிருந்தான். "ஸாரி மச்சான்! கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன். இது எங்க பெரியம்மா பொண்ணு தீபா. எனக்கு இவளும் தங்கச்சி தான், அம்மா வழியில" என்றான் அவசரம் அவசரமாக.



அப்போது தான் இன்னும் அவர்களை வீட்டுக்குள் அழைக்காமல் வாசலில் நிற்க வைத்திருக்கிறோம் என்பதையே உணர்ந்து கொண்ட குருபிரசாத், "சாரி! ப்ளீஸ் உள்ள வாங்க. திடீர்னு பார்த்ததும் ஒன்னும் தோணலை. அதான்" என்று அவர்களுக்கு வழிவிட்டான்.



"உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க?" என்று உபசரித்தான் வீட்டு உரிமையாளனாக.



'அப்போ அன்னைக்கு பார்த்தது யார்? அதுவும் அவங்க இருந்த போஸ்' என்று மண்டைக்குள் குடைந்தது. ஆனாலும்,



உடனே இயல்பாகிவிட்டான். ஆனால் வந்தவர்களால் அப்படி ஆகமுடியவில்லை போலும். காளிதாஸின் அறிமுகப் படலம் மேலும் தொடர்ந்தது.



"தீபா, கயலுக்கு ஒரு வயசு பெரியவ. எம்.ஈ. முடிச்சிட்டு இங்கே தான் வொர்க் பண்றா. வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கி இருக்கா. கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பம். இவ அவங்களுக்கு ஒரே பொண்ணு. பெரியம்மா ஊர்ல இருக்காங்க. நான் இங்கே வரும் போது இவளைப் பார்த்துட்டுத் தான் போவேன்."



எதற்காக இத்தனை பெரிய முன்னுரை, முகவுரை என்று தெரியாத போதும் சம்பிரதாயமாகச் சிரித்து வைத்தான் குருபிரசாத்.



"இவளுக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ணனுமாம் மச்சான். நான் பார்ட்டில ஃபுல்லா இருக்க முடியாது. அதான், ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் இருந்துட்டு போகலாம்னு வந்தேன். நீங்க தனியா தான் வர சொன்னீங்க. எனக்கு புரியுது, இவ்ளோ தூரம் வந்துட்டு உங்களைப் பாக்காம போனா அதுவும் தப்பாகிடும். அதனால தான் ஜஸ்ட் ஒரு இன்ட்ரோக்காகத் தான் கூட்டிட்டு வந்தேன். இவளை பக்கத்து பார்க்குல கொண்டு போய் விட்டுட்டு வந்துடறேன்" இவனைப் பேச விடாமல் அவனே பேசி முடித்தான்.



"அட.. இருங்க மச்சான்.. ஒரு அஞ்சு நிமிஷத்துல ஒன்னும் ஆகிடாது. ரிலேடிவ்ஸ் வீட்டுக்கு வரது வேற, பார்ட்டி வேற. இரண்டையும் குழப்பவே வேண்டாம். ஃப்ரீயா இருங்க. முதல் முறையா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க என்ன சாப்பிடறீங்க? நீங்க என்ன சாப்பிடறீங்க தீபா?"



என் வரைக்கும் நான் தெளிவாகத் தான் இருக்கிறேன் என்று பேச்சிலும் செயலிலும் காட்டிய குருபிரசாத் அவர்கள் சொன்ன குளிர் பானத்தை எடுத்து வரச் சென்றான்.



அங்கே இருந்து பார்க்கும் பொழுதும் அவர்கள் இருவரும் அருகருகே நெருங்கி அமர்ந்து கொண்டு பேசும் விதத்தையும் கைகோர்த்துக் கொண்டு இருப்பதையும் காணக் காண சகோதர உறவென்று நினைக்கத் தோன்றவில்லை. அப்படியே இந்தக் காலத்தில் அது மற்றவர்களுக்கு இயல்பான ஒன்றாக இருந்தாலும் கயல்விழியின் குடும்பத்தில் இப்படி அமர்வது இயல்பான ஒன்றா என்பதும் அவனது உள்ளத்தில் தோன்றாமல் இல்லை.



கஷ்டப்பட்டு முகத்தைச் சாதாரணமாக வைத்தவன், வந்தவர்களை மனமார உபசரித்தான். அங்கே அடுக்கி இருந்த பாட்டில்களைப் பார்த்து தீபா ஏகத்துக்கும் ஆச்சர்யப்பட்டாள்.



"மச்சான்! நீங்க குடிப்பீங்களா? இந்த விஷயம் ஊர்ல எல்லாருக்கும் தெரியுமா? அண்ணா எல்லாம் குடிக்க மாட்டாங்க தெரியுமா?" நாகரீகம் என்ற ஒன்றே தெரியாதது போல் அவள் போட்ட எக்ஸ்ட்ரா பிட்டுகளை நம்ப முடியாத குருபிரசாத் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்க, "அப்போ, நாங்க கிளம்பறோம் மச்சான்" என்று காளிதாஸ் எழுந்தான்.



புரியாமல் பார்த்த குருவிடம், "ஐ மீன் இவளைக் கொண்டு போய் பார்க்ல விட்டுட்டு நான் வரேன் மச்சான்" என்று தங்கையைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.



"மச்சான்! வரலாறு ரொம்ப முக்கியம் பாருங்க. நாம மீட் பண்ணினோம்னு சொன்னா கயல் நம்பவே மாட்டா. அதனால ஒரேயொரு செல்ஃபி ப்ளீஸ்" கிளம்பும் நேரத்தில் தீபா செல்ஃபி எடுக்க வேண்டும் என்று குருபிரசாத்தின் அருகில் வந்தாள்.



'அய்யோ! கயல்! என்னைக் காப்பாத்து' என்று அவன் மானசீகமாக அவளிடமே சரணடைய, "பெரியப்பாக்கு தெரிஞ்சா தொலைச்சிடுவாங்க. நீ வா தீபு" என்று காளிதாஸ் அவளை அழைத்து, இல்லை இல்லை இழுத்துச் செல்ல, "ஹப்பாடா! தப்பிச்சேன்" என்று சத்தமாகப் பெருமூச்சு விட்டான் நமது ஹீரோ.



தீபாவை பார்க்கில் விடப் போன காளிதாஸ் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பார்ட்டிக்கு வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அன்றிரவே ஊர் திரும்பியவன் வீட்டில் என்ன சொல்லி வைத்தான் என்று தெரியவில்லை. ஏதோ பஞ்சாயத்தைக் கூட்டி இருக்கிறான், விஷயம் ரொம்ப பெரிசு என்பது மட்டும் குருபிரசாத்துக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போனது.



இரண்டே நிமிடங்களில் இருபது நிமிடம் கொசுவர்த்தி சுருளைச் சுற்றி முடிந்தவனை, "வாங்க மாப்பிள்ளை! என்ன அங்கேயே நின்னுட்டீங்க? உள்ளாற வாங்க!" என்று வாயாற வரவேற்றவர் சோமசுந்தரம்.



'என்ன டா நடக்குது இங்க? இது வரைக்கும் இவர் பண்ண அலும்பு என்ன? இப்போ மாப்பிள்ளைன்னு கூப்பிட்டு உபசரிக்கிறது என்னன்னு ' அங்கே இருந்த ஒவ்வொருவரும் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்க்க, அவரோ தெளிவாகப் பேசினார்.



"இவரு என் வீட்டில இருந்து என்னை வரவேற்கிறாரேன்னு பார்க்கிறீங்களா மாப்பிள்ளை. எல்லாம் நேரம் தான். நாங்க முன்னாடி வந்துட்டோம். அதான் அப்படி. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க வேண்டாம்."



பேச்சு மாப்பிள்ளையிடம் இருக்க, பார்வை தம்பி மகனிடம் இருந்தது. அவர் "நேரம்" என்ற வார்த்தைக்குக் கொடுத்த அழுத்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய இருவரும் நன்றாகவே புரிந்து கொண்டார்கள். அவரது வரவேற்புக்குப் பிறகு மற்றவர்கள் சகஜமானார்கள்.



"பேசிட்டு இருங்க மாமா. நான் இதையெல்லாம் ரூம்ல வச்சிட்டு வந்துடறேன்" என்றவன் தான் கொண்டு வந்த பைகளைத் தூக்கிக் கொண்டு நகர, அங்கே ஆனந்தி நமக்காக என்ட்ரி கொடுத்தாள்.



"ஹேய்! நில்லு மேன்! நில்லு! இதெல்லாம் என்ன புதுசா இருக்கு? தனிஷ்க், டைடன், ஹைடிசைன்.. பிரமாதம்.. யாருக்கு வாங்கி இருக்க? என்ன வாங்கி இருக்கன்னு கேட்கிற அளவுக்கு நாங்கல்லாம் டீசன்ஸி இல்லாதவங்க இல்ல.. ஆனால் இங்கே இருந்து கிளம்பும் போது ஷாப்பிங்கா அப்படின்னா என்னன்னு யாரோ கேட்டாங்களே அவங்களை உனக்குத் தெரியுமா? கயல் உனக்காவது தெரியுமா?" என்று ஏகத்துக்கும் கலாய்த்தவளை அசடு வழிய சிரித்துச் சமாளித்தவன் அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகளில் வேகமாக ஆனந்தியின் பின்னே பார்வையைச் செலுத்தினான்.



"ஹேய் கயல்!" என்று முகம் முழுவதும் பல்லாக அருகில் சென்றவனிடம் இரண்டே வார்த்தைகளைச் சொல்லி தள்ளி நிறுத்தி விட்டாள் அவள்.



சுற்றி இருந்த அனைவரும் மறுபடியும் முதல்ல இருந்தா என்று தலையில் கை வைக்க குருபிரசாத்தோ எதுவும் புரியாமல் நின்றான்.
 

Author: SudhaSri
Article Title: சலன பருபவம் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom