• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
அத்தியாயம் - 1



"கயல்விழி!" என்று மெல்ல முணுமுணுத்தபடி கையில் இருந்த ஃபோட்டோவையும் மொபைல் கேலரியில் இருந்த ஃபோட்டோவையும் உற்று நோக்கி குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் குருபிரசாத்.



எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருந்தது.

பார்த்தாலே தெரிந்தது, ஏதோவொரு குடும்ப ஃபோட்டோவில் இருந்து எடுக்கப்பட்டது என்று. குறைந்தது எத்தனை பேர் இருந்தார்களோ தெரியவில்லை, இவளுக்கு ஜூம் போட்டு தனியே எடுத்துக் கொடுத்து இருந்தார்கள். அதைப் பார்த்த போது அவனால் ஒரு விஷயத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.



நினைத்தவனால், சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சத்தமாகச் சிரித்து விட்டான். அதன் பிறகே அர்த்த ஜாமத்தில் சிரித்ததை நினைத்து நொந்து கொண்டான். ஆனால், வீட்டில் இருந்த மற்றவர்கள் அவனது முடிவுக்கு காத்திருந்ததால் அந்த அர்த்த ஜாமத்திலும் அவனது அறை வாசலில் ஆஜர் ஆனார்கள். ஒவ்வொரு முகத்திலும் தெறித்த ஆர்வம் அவனை இன்னும் சிரிக்கக் தூண்டியது.



சத்தம் இல்லாமல் ஜூம் செய்திருந்த ஃபோட்டோவை அவர்கள் புறம் திருப்பினான்.



"ஹா…ஹா…ஹா… யாருடா இது? ஊர்க்காவலன் படத்தில வர்ற ராதிகா மாதிரியே இருக்குடா" என்று அவனது தாய் மீனாட்சி சிரிக்க அவன் முறைத்தான்.



"எல்லாம் உங்க மருமகன்னு ஒரு ஃபோட்டோ கொடுத்தீங்களே அவ தான்!" என்றான் சிரிப்பினூடே.



"ஓ மை காட்! யாருடா இந்த வேலையை பார்த்தது.. நான் அவங்க ஃபுல் ஃபேமிலி ஃபோட்டோ தானே கொடுத்தேன்" என்று அவனது அக்கா ஆனந்தி சொல்ல,



மீனாட்சி, "நான் தான் மருமகளை மட்டும் கட் பண்ணி கொடுத்தேன்" என்று அசடு வழிந்தார்.



"அம்மாஆஆஆ… மீனாட்சி தாயே.. தெய்வமே… இது நீ பத்து மாசம் சுமந்து பெத்த மகனோட வாழ்க்கை தாயே.. வாழ்க்கை. கும்மி அடிச்சிடாதீங்க. எங்க அந்த கயல்விழியோட முழு விழியையும் காட்டுங்க.. நான் தைரியமா பார்க்கிறேன்."



பார்த்தவன் மனதில் திருமணம் பற்றிய ஏகப்பட்ட கேள்விகள் தோன்றினாலும் வாயில் இருந்து, "என்னைக்கு எங்க கல்யாணம்? டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சா?" என்ற கேள்வி மட்டுமே வெளிப்பட்டது.



"டேய்! எடுத்த எடுப்பிலேயே கல்யாணமா? அது பெரிய ப்ராசஸ் டா. பொண்ணை நேர்ல பார்க்கணும். உனக்கு பொண்ணைப் பிடிக்கணும், முக்கியமா பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கணும்." ஆனந்தி அடுக்க,



"ஹி… ஹி… காமெடி பண்ணிட்டதா நினைப்பா… சிரிப்பு வரல… மேல சொல்லு…" இவன் எகிறினான்.



"அப்புறம் என்ன பெரியவங்களோட டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் ஒத்து வரணும். தென் நம்ம வசதிக்கேற்ப மண்டபம் கிடைக்கணும்… அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ணனும்… எப்படியும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல ஆகும்" என்று தம்பியின் வயிற்றில் தாராளமாக அரைக்கிலோ புளிக்காய்ச்சலுக்குத் தேவையான புளியைக் கரைத்தாள் ஆனந்தி.



"அது எதுக்கு அவ்வளவு வெயிட்டிங் பீரியட். எனக்கு கிராண்ட் வெட்டிங் எல்லாம் வேண்டாம் பா. சிம்பிளா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி ஒரு ரிஷப்ஷன் அரேன்ஜ் பண்ணா கூட போதும்"



"ரெஜிஸ்டர் கல்யாணமா?? சோமு அண்ணா என்ன சொல்லுவாங்களோ?" என்று மீனாட்சி கவலைப்பட்டார். மணப்பெண் கயல்விழி அவர்களது சொந்தம். பெரிதான போக்குவரத்து இல்லையயே தவிர கொஞ்சம் நெருங்கிய சொந்தம் தான்.



"நீயும் என்ன மீனா.. பசங்களோட சேர்ந்துட்டு.. " என்று மனைவியை கடிந்தவர்,



"குரு! ஆனந்தி! இரண்டு பேரும் மாத்தி மாத்தி பேசறதைக் கொஞ்சம் நிறுத்துங்க. கல்யாணம்கிறது விளையாட்டு காரியம் இல்லை. நல்ல நாள் பார்த்து பெரியவங்க பேசுவோம். இப்போ எல்லாரும் போய்த் தூங்குங்க" என்று சபையைக் கலைத்தார் வீட்டின் தலைவர் சுந்தரேசன்.



குடும்ப சபை கலைந்தவுடன் ஆனந்தி கயல்விழியின் தனிப்பட்ட புகைப்படம் ஒன்றைத் தம்பியின் வாட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்து விட்டு "ஸ்வீட் ட்ரீம்ஸ் ப்ரதர்!" என்று சொல்லி விட்டு போனாள்.



புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குருபிரசாத்தின் மனம் சுய அலசலில் ஈடுபட்டது.



"நான் எல்லா வகைலயும் கல்யாணத்துக்கு தயாரா? நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். இப்போ, புதுசா எனக்கே எனக்குன்னு ஒரு உறவு, அதன் மூலமா வர்ற புது உறவுகள், என்னைப் பத்தி எனக்கு என்ன தெரியும்? வரப் போறவளுக்கு என்னைப் புரிய வச்சு அவளை நான் புரிஞ்சு… ஹூம்.."



இப்படித் தூங்காத இரவாகிப் போனது அவனுக்கு.

—--



இவர்கள் குடும்பம் தூங்கச் சென்ற அதே நேரம் மதுரைக்கு அருகில் இருந்த அந்த ஊரில் அரண்மனையை ஒத்த அந்த வீட்டிலும் இதே கல்யாணத்தைப் பற்றிய விவாதம் தான் நிகழ்ந்து கொண்டு இருந்தது. அதே ஃபோட்டோ பற்றிய விவாதம் தான், சற்றே மாறுபட்ட கோணத்தில். அவர்களது சற்றே பெரிய கூட்டுக் குடும்பம். குடும்ப உறுப்பினர்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம்.



சாப்பிட்டு முடித்ததும் குடும்பத்தின் தலைமகன்கள் உறங்கச் சென்றுவிட, பெண்கள் சமையலறையில் வேலையாக இருக்க, எத்தனை மணியானாலும் பரவாயில்லை என்று மகன்களை எல்லாம் அமர வைத்து வீட்டின் மூத்த பெண்மணியாய் விசாரித்துக் கொண்டிருந்தார், திருமதி. அங்கையற்கண்ணி சோமசுந்தரம். கயல்விழியின் பெரியம்மா.



"மாப்பிள்ளை தம்பி சூப்பரா இருக்காங்கம்மா."



"அவங்க ஜனம் எல்லாம் கூட தன்மையா இருக்காங்க.பணம் இருந்தாலும் மனுஷங்கள மதிக்க தெரிஞ்சிருக்கு."



"எல்லா வகைலயும் நம்ம கயலுக்குப் பொருத்தமா இருப்பாரு."



"கலர் கூட கயல விட ஜாஸ்தியா தெரியுதுன்னா பாத்துக்கோங்க."



"நிச்சயமா, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும் மா. அதுக்கு நாங்க காரண்டி" ப்ரீத்திக்கு நாங்க கேரண்டி என்பது போல உத்தரவாதம் கொடுத்தான் அங்கையற்கண்ணி பெற்ற பிள்ளை.



"நீங்க அண்ணன்மார் எல்லாம் இவ்வளவு சொல்றீங்க. அப்போ, அந்த தம்பியோட ஃபோட்டோவ நம்ம கயல் கிட்ட காட்டினால் தான் என்ன? ஏன் தான் உங்க அப்பா இப்படி பண்றாங்களோ? இவர் தான் மாப்பிள்ளைன்னு முடிவு செஞ்சாச்சில்ல.. இந்தப் பொண்ணு எதுவும் வாய் விட்டு சொல்றவளா இருந்தாலும் பரவாயில்ல.." என்று புலம்பினார் அங்கையற்கண்ணி.



"அதைச் சொல்லுங்க அக்கா. மத்த விஷயத்தில எல்லாம் வாய் எட்டு ஊருக்கு நீளும். இந்த விஷயத்தில வாயைப் பிடுங்கி ஒவ்வொரு எழுத்தா வார்த்தையை வாங்க வேண்டியதா இருக்கு" என்று அலுத்துக் கொண்டார் கயல்விழியின் தாயார் கோகிலா.



"என் பொண்ணக் குறை சொல்லலேன்னா உனக்குத் தூக்கம் வராதே கோகிலா?"



"அட போக்கா.. போன வாரம் இப்படி தான். உன் பொண்ணு என்ன செஞ்சா தெரியுமா?" என்று அந்த நாளுக்கு போனார் அவர். அன்று வீட்டில் அனைவரும் எங்கோ சென்றிருக்க வீட்டில் கயல்விழி மற்றும் அவளது தாயார் மட்டுமே இருந்தனர். தனியே சமையல் செய்து கொண்டிருந்த கோகிலா மகளை உதவிக்கு அழைக்க அவளோ வர மறுத்தாள்.



"இப்போவே சமையல் நல்லா கத்துக்கோ இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படுவேன்னு தினமும் சொல்றேன், என் பேச்சு கேட்டு எப்போதான் சமையல் படிச்சுக்கப் போறியோ தெரியல. நீயெல்லாம் மாமியார் கிட்ட இடி வாங்காமல் எதையும் கத்துக்கப் போறதில்லை."



"கவலையே படாதே மா, நான் கல்யாணத்துக்கு அப்புறமா கண்டிப்பாசமையல் கத்துக்கிறேன்"



"எப்படி? கல்யாணம் ஆகி நீ போன பிறகு நான் செல் ஃபோன்லயே சமையல் சொல்லிக்கொடுத்து என் புருஷன் சொத்தைக் கரைக்கவா??"



"அட.. அம்மா.. நீ கூட தேறிட்ட பாரு.. செல் ஃபோனுல சமையல் சொல்லித் தர போறியா? ம்ம்… ஆனா.. நான் கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் படிக்கிறேன்னு தான் சொன்னேன்..... உன் கிட்டன்னு சொல்லவே இல்லையே"



"புருஷன சமைக்க வைப்பேன்ன்னு மொக்கையா பதில் சொல்லாம, யார் கிட்ட சமையல் கத்துக்குவேன்னு கொஞ்சம் சொல்றியா?" கோகிலா பல்லைக் கடிக்க,



"என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்கப் போறேன்" என்றாள் கயல்விழி.



"அடிப்பாவி........ ஏன்????"



"அப்படிக் கேளு.. நான் இப்போ நல்ல சமையல் தெரிஞ்சுக்கிட்டு போய் சமைச்சாலும், அது சரி இல்ல, இது சரி இல்லன்னு தான் வரப் போறவரு சொல்லப் போறாரு. அவரோட அம்மா கிட்டவே சமையல் கத்துக்கிட்டு சமைச்சா.. அவர் என் சமையல்ல என்ன குறை சொன்னாலும், உங்க அம்மா இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்லி தப்பிச்சுக்குவேன். அப்புறம் மாமியார் கிட்ட சமையல் கத்துக்கிற நேரத்துல

உங்க மகனுக்கு என்னென்ன பிடிக்கும்? அதெல்லாம் எனக்கு சமைக்கச் சொல்லித் தாங்க அப்படின்னு மாமியார் கிட்ட சொன்னா ஐஸ் மாதிரி உருகிட மாட்டாங்களா???



"அடிப்பாவி….. நீயெல்லாம்… நல்லா வருவ டி"



"ஷாக்க குறைங்க, ஷாக்க குறைங்க இந்தாங்க தண்ணி குடிச்சுட்டு சமையல் பண்ணுங்க, ரெடி ஆனதும் கூப்பிடுங்க சாப்பிட வரேன்......இப்போ என் ரூமுக்குப் போறேன் என் செல்ல மம்மி"



அம்மா மகளின் உரையாடலைக் கேட்ட அண்ணன்மார் அனைவரும் தங்கையின் புத்திசாலித்தனத்தை நினைத்து சிலாகிக்க தாய்மார்கள் முகத்தில் பெருமிதம் தோன்றினாலும் மனதுக்குள் ஓர் ஓரத்தில் ஒரு கவலையும் இல்லாமல் இல்லை.



இதையெல்லாம் ஒட்டுக் கேட்ட கயல்விழியோ ஒரு வித கலவையான எண்ணங்கள் சூழ இருந்தாள். தனக்குத் திருமணம் எனும் மகிழ்ச்சியும் இல்லை, பிறந்த வீட்டில் இருந்து போகப் போகிறோம் என்ற வருத்தமும் இல்லை. ஏதோவொரு திரிசங்கு நிலையில் இருந்தாள் அவள்.



மணமக்கள் இருவரும் இப்படி இருக்க, இருவீட்டாரும் பேசிப் பெண் பார்க்கும் அன்றே தட்டு மாற்றி வீட்டளவில் ஒரு நிச்சயம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு முடிவு செய்திருந்தார்கள். ஒரு வழியாக அந்த நாளும் வந்து சேர்ந்தது.

—-



"வாங்க! வாங்க! எல்லாரும் வாங்க! எம்புட்டு நாளாச்சு உங்களை எல்லாம் பார்த்து? வாங்க மாப்பிள்ளை. வாம்மா தங்கச்சி. வாங்க தம்பி." என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் சோமசுந்தரம்.



"அததுக்கு நேரம் காலம்னு ஒன்னு வரணுமில்ல மாமா. அது இப்போ என் பையன் காலத்தில தான் அமைஞ்சிருக்கு." பணிவாக பதிலளித்துக்கொண்டே அந்தப் பெரிய வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரேசன். இரண்டு தலைமுறைகளாக வெளியூரில் வாழக்கை நடத்தினாலும் நல்லது பொல்லாது என்று ஊருக்கு வந்து செல்பவர்கள் தான்.



"பொழைக்கறதுக்கு வெளியூருக்குப் போனாலும் வீட்டுல ஒரு நல்லது நடக்கணும்னு வரும் போது ஊரு உங்கள இழுத்துட்டு வந்துடுச்சு பாத்தீங்களா மாப்பிள்ளை"



நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு சந்தித்தாலும் இருவரும் இயல்பாக "நீ மாமா" "நீ மாப்ளே" என்று எம்.ஆர்.ராதாவாக சிவாஜி கணேசனாக மாறிப் பாடாத குறையாத அழைத்துக் கொள்வதை அவர்களின் மனைவிமார்களே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.



"இப்போ தான் உங்களுக்கு ஊர் ஞாபகம் வந்ததுன்னு சொல்லுங்க. என்ன இருந்தாலும் எங்க பேராண்டிக்குத் தான் நம்ம ஊரு பெருமை எல்லாம் தெரிஞ்சிருக்கு" என்று நையாண்டி செய்து பேச ஆரம்பித்தார்கள் அங்கிருந்த வயதான மூதாட்டிகள்.



யாரும் அறியாமல் தன் கையைத் திருப்பி மணியைப் பார்த்தான் அவன். பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றமும் நட்புமாக ஐம்பது பேர் சூழ அமர்ந்து இருந்தான். குருபிரசாத். இதைப் போன்ற ஒரு நிகழ்வை அவன் ஏதோ ஒரு பழைய படத்தில் தான் பார்த்த ஞாபகம்.



அவன் இன்னும் கயல்விழியை நேரில் பார்க்கவில்லை. அதற்கு முன்பே, சுற்றி இருந்த சொந்தங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி வாயெல்லாம் வலித்தது அவனுக்கு.



அவனது பதவி காரணமாக மிகுந்த பொறுமைசாலி தான் அவன். ஆனால் இப்போது, அவனது பொறுமை எப்போதும் எல்லையைக் கடந்து விடலாம் என்ற நிலையில் இருந்தது. அதனைத் தனதருகில் இருந்த அவனது அக்காவிடம் பலவிதமான செய்கையில் உணர்த்தும் முயற்சியில் இருந்தான்.அவளெங்கே இவனைக் கண்டு கொண்டாள். பக்கத்தில் இருந்த பாட்டியிடம் குழிப் பணியாரம் செய்ய எத்தனை அடி ஆழத்தில் எவ்வளவு நீளத்தில் குழி வெட்ட வேண்டும் என்று தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தாள்.



இவர்களைப் பெற்றவர்களோ நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் காலடி வைத்த சந்தோஷத்தை ஆனந்தக் கண்ணீரோடு கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.



இந்த சீனை எல்லாம் எந்தப் படத்தில பார்த்தேன் என்று அவன் மண்டையை உடைத்து 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' என்று ரோஜா திரைப்படம் என்பது ஞாபகம் வந்த வேளையில் ஆபத்பாந்தவனாக அவனது வருங்கால மாமனார் சோமசுந்தரம் குரல் கொடுத்தார்.



"இந்தா அங்கை! போய் கயல் கையில காப்பித் தண்ணியக் கொடுத்து கூட்டிக்கிட்டு வா."



நல்லவேளையாக கயல்விழியின் வீட்டில் பெண்பார்க்க என்று குடும்பப் பாட்டு என்று எதுவும் இல்லாததால் குருபிரசாத் தப்பித்து விட்டான் என்றே சொல்லலாம். இல்லையென்றால் கல்யாணம் என்ற ஒன்றை வெறுத்து சாமியார் ஆகி இருப்பான். அந்த அளவுக்கு அங்கிருந்த அனைவரும், "நாங்க எல்லாம் அந்த காலத்தில" என்று அவனை வெறுப்பேற்றி இருந்தார்கள்.



அடுத்து நிச்சயதார்த்த சம்பிரதாயங்கள் ஆரம்பித்தன. இரண்டு பக்கமும் முதற்கட்ட சொந்தங்கள் எல்லாம் குழுமி இருக்க, எதற்கு இப்படி அவசரமாக தட்டு மாற்ற‌வேண்டும் என்ற அனாவசிய கேள்விகள் எல்லாம் அங்கே எழவில்லை.



குருபிரசாத் வீட்டில் கயல்விழிக்கென வாங்கி வந்திருந்த புடவை மற்றும் நகைகளை அவளிடம் கொடுக்க, அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். பின்னே நல்ல அரக்கு நிறத்தில் தகதகவென தங்கமாக ஜொலிக்கும் பட்டுப் புடவையும் அதற்கு மேட்ச்சாக கெம்பு செட் ஒன்றும் அந்த தட்டில் இருந்தது. அத்தனையும் அணிந்து கொண்டு வந்து அனைவரையும் வணங்கினாள் கயல்விழி. குருபிரசாத்தின் கண்களோ அவளை விட்டு நகர்வேனா என்றது.



அருகில் இருந்த ஆனந்தி தம்பியின் தொடையில் பலமாகத் தட்டி அவனைக் கனவில் இருந்து தரையிறக்கினாள். அங்கிருந்த படியே ஜாடையாக தனது தாயைப் பார்த்தவன் 'எப்பூடி?' என்று கண்களால் வினவினான். பின்னே, மதுரையில் பிறந்த மீனாட்சி தனது மதுரை மருமகளுக்கு பச்சைப் பட்டு தான் வாங்க வேண்டும் என்று இரண்டு கால்களில் பிடிவாதமாக நிற்க, முடியவே முடியாது என்று அரக்கு நிறத்தைத் தேர்ந்தெடுத்தான் குருபிரசாத்.



ஜவுளிகள் கடையில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்த வாக்குவாதத்தில் குருபிரசாத் தான் வென்றான். நகைகளை சர்ப்ரைஸாக வாங்கி வந்தவன் இன்று காலையில் தான் பெற்றோருக்கே காட்டி இருந்தான். அதைத் தான் இப்போது பெருமிதத்துடன் பார்க்கிறான்.



தாய்மாமன் இருவரும் சபையில் அமர்ந்து சம்பிரதாயமாகத் தட்டு மாற்றிக் கொண்டனர். மண்டபம் அமைவதைப் பொறுத்து விரைவில் திருமணத்தை மதுரையில் நடத்துவது என்று முடிவாயிற்று.



மாப்பிள்ளைக்கும் பெண் வீட்டார் புதுத் துணிகளைக் கொடுத்து பிரேஸ்லெட் அணிவிக்க அங்கே மகிழ்ச்சி பொங்கியது. குருபிரசாத் இப்போது கயல்விழியைப் பார்க்கும் பார்வையில் ஒரு உரிமை வந்து சேர்ந்திருந்தது.



பெரியவர்களின் எதிர்ப்புகளைச் சமாளித்து இருவரையும் அருகில் நிற்க வைத்து இளையவர் பட்டாளம் புகைப்படங்கள் எடுக்க குருபிரசாத்தின் நிலைமை தான் அந்தோ பரிதாபமாக இருந்தது.



சம்பிரதாயங்கள் முடிந்து அனைவரும் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில்

கயலிடம் தனியே பேச வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த குருபிரசாத், முதல் பாலிலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினான். அவனைத் தவிர அவனது குடும்பத்தில் அனைவரும் வருங்கால மருமகளைச் சுற்றி அமர்ந்து கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தனர்.



ஒரு வழியாக உடன்பிறப்பின் உதவியுடன் கயல்விழியைத் தனியே சந்தித்தான் அவர்களது வீட்டு மொட்டை மாடியில்.



பொதுவான விஷயங்களை ஆர்வத்துடன் பேசியவள் திருமணம் மற்றும் அதைப் பற்றிய பேச்சுக்களைப் பேசும் போது அதீதமாக வெட்கப் பட்டாள்.



"அது சரி. நீ படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ் காலேஜ், பார்க்கிற வேலை என்னவோ பெரிய வேலை. ஆனால் கஸ்டமர்ஸ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீ பார்க்கிற முதல் அந்நியன் நான் தான் அதனால தான் வெட்கப் படறேன்னு சொல்லிடாதம்மா."



"சே ..சே.. அப்படி இல்லை.. அண்ணா எல்லாம் இருக்காங்களே" என்றாள் எழும்பாத குரலில்.



"அவங்க எல்லாம் உன் உடன் பிறப்புகள் இல்லையா? இது வேற கேட்டகரி."



"ம்ம்…"



"அப்புறம்.. உங்க வீட்டுல சாரி தான் யூனிஃபார்ம் ஆ? சுடிதார்னு ஒரு டிரஸ் இப்போ பட்டி தொட்டி எல்லாம் கூட போடறதா சொல்றாங்களே, உங்க ஊருக்கு இன்னும் வரலையா?"



"நான் போட்டுப்பேன். இன்னைக்கு ஃபங்ஷனுக்கு சாரில தான் இருக்கணும்னு பெரியப்பா…"



"ஓ… ஓகே.. ஓகே…"



இப்படியே பேசி சற்று நேரத்தில் அவளது கையோடு கை கோர்த்துக் கொண்டான். மேலும் பேசிப் பேசி அவளை இயல்பாக்கியவன், (ஒரு வேளை அவளை இயல்பாக்கியதாக அவன் நினைத்தானோ) அவளை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் சேர்த்தான்.



அடுத்த நிமிடம் என்ன
நடந்தது என்றே அவனுக்குப் புரியவில்லை. மொத்த குடும்பமும் கூடி நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தது.
 

Author: SudhaSri
Article Title: சலனபருவம் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top