• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
24
பீடிகை

எந்தையும் தாயும்


கபிலனை உங்களுக்கு நினைவிருக்கிறதா?


விவாகரத்தான சாரநாதன், மாளவிகா இருவருக்குமே தங்கள் மகன் கபிலனின் மீது கொண்ட அளவு கடந்த அன்பு, அக்கறை, பாசத்தைத் தாண்டி அவரவருக்கான வாழ்க்கை அமைகிறது.

சாரநாதன் தன் வீட்டிலேயே வளர்ந்த, விதவை அக்கா காவேரியின் மகளை சூழல் காரணமாக மணந்து கொள்கிறான்.

சிறார் பள்ளி நடத்தும் மாளவிகாவும் மனைவியை இழந்து நிலா எனும் மகளுடன் தனியே இருக்கும் ஜெயச்சந்திரனும் விரும்பியே மறுமணம் செய்து கொள்கின்றனர்.

வாரம் முழுவதும் தாயுடனும் ஞாயிறானால் தந்தையுடனும் என பங்கீட்டு முறையில் சென்ற சிறுவனின் வாழ்வில் பெற்றோர்களின் பிரிவு மறுமணம், அதன் மூலம் கிடைக்கும் சகோதரி, உடன்பிறப்புகள், உறவுகள், சமூகத்தின் பார்வையை, கேலியைப் புரிந்து கொண்டதில் வரும் தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் அளவிலான மன அழுத்தம், ஏக்கம், என உணர்வுகளின் கலவை அவன்.

இதையெல்லாம் மீறி, தன் தாயை மணந்தவரின் மகளிடம் நட்பு பாராட்டும், அவர்களுக்குப் பிறக்கும் தன் தம்பியிடம் அவன் காட்டும் , தந்தைக்கும் சித்திக்கும் பிறந்த மகளை ‘நுங்குக்குட்டி’ என வாஞ்சையுடன் அழைக்கும் அண்ணன்.

தொடக்கத்தில் கண்டிப்பு நிறைந்தவராக தாயின் கணவரிடமிருந்து விலகி நின்றாலும், நாளடைவில் அவரது அக்கறையும் நியாயத்தன்மையும் புரிய வர, ‘நிலாப்பா’ என தானாகவே அழைக்கத் தொடங்கியவன்.

தந்தைக்கு சங்கடம் தர மனமின்றி, அங்கு செல்லாதவன், ஒரு இக்கட்டான சூழலில் அவர்களது தோட்டத்திற்குச் செல்பவனிடம், அவனது அப்பத்தா, அத்தை, சின்னம்மா என யாரிடமும் ஒட்டாத விலக்கம்.


பரம்பரையாக மூலிகைத் தோட்டம் வைத்திருக்கும் தந்தையின் கோரிக்கையை, ஆசையை நிறைவேற்றவென
NEET தேர்வில் போதிய சதவீதம் மதிப்பெண் எடுத்தும், தாய் மாளவிகா தடுத்தும் அலோபதி மருத்துவத்தை விடுத்து ஆயுர்வேதம் படிக்கவென திருவனந்தபுரம் செல்கிறான்.

இனி…

கபிலன் 2.0



குறுநகை போதுமடி 1

‘நலம் ஆயுஷ் ஹெல்த்கேர்

Nalam AYUSH Healthcare’

எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிர் சந்தனப் பின்னணியில் இலைப் பச்சை நிறத்தில் எழுதப்பட்ட அந்த எளிமையான பெயர்ப் பலகையின் பின்னே, இயற்கை எழிலும் மலையின் குளிர்ச்சியும் மிகுந்த சிறுமலையில் (திண்டுக்கல்) மரங்களும் செடிகளும் சூழ அதே நிறக்கலவையில் அதன் உரிமையாளனைப் போலவே அமைதியும் கம்பீரமுமாக நின்ற அந்த வளாகத்திற்கு வயது நான்கு.

நடுவில் நின்ற கட்டிடத்தில் வரவேற்பும், நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்களின் அறைகளும் இருக்க, முதல் மாடியில் மஸாஜ், தெரபி போன்ற மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் நேரடி சிகிச்சைக்கான அறைகளும் அதற்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் அடங்கிய அறையும் ஓய்வறை மற்றும் குளியலறைகளும் இருந்தன.

பரிசோதனைக் கூடமும், மருந்து விற்பனையும் தனிக் கட்டிடத்தில் இருக்க, இரண்டுக்கும் நடுவே பின்புறமாக வளைந்து சென்ற பாதை வழியே நடந்தால் வேண்டுமென்றே சீரின்றி அமைக்கப்பட்ட செடிகொடிகளினூடே, சிகிச்சை பெறுபவர்கள் தங்குவதற்கான ஏழு குடில்கள் (Cottages) அரைவட்டமாக சூழ்ந்து நின்றன.

தவ்விக் குதிக்கும் அணில்களும் முயல்களும், அவ்வப்போது வந்து செல்லும் மயில்களும் அமைதியைக் குலைக்காது பேசும் பறவை இனங்களும், ஏதோ ஒரு முற்கால ஆசிரமத்திற்குள் நுழைந்தது போல், எந்த நேரமும் நீண்ட வெண்தாடியுடன் ஒரு வயதான ரிஷி அங்கே தோன்றக்கூடும் என்ற உணர்வையும் கொடுத்தால் வியப்பில்லை.

இன்று புதன் கிழமை. புதன், வியாழன் இரண்டு தினங்களும் இலவச மருத்துவம் என்பதால் பிசுபிசுத்த மழையைப் பொருட்படுத்தாது நசநசத்தது கூட்டம்.

அதிலும் இன்று புதன், முதல் தினம் என்பதால், எப்பொழுதும் நிலவும் அமைதியை மீறி இதற்கெனவே போடப்பட்டிருந்த பெரிய ஷாமியானா கொள்ளாத அளவு கூட்டம் இன்று. நிறைய பேர் இருக்கைகளைத் தாண்டி நிற்க, உதவியாளர்கள் மர பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டனர்.

அன்றைய திட்டமிட்ட நிகழ்வான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு வேலைகளைக் கவனிப்பதற்கென அலோபதி, ஆயுர்வேத மருத்துவர்களான கிரிதரன் மற்றும் சுபாஷிடம் பணியைத் தொடரச் சொல்லி சைகை செய்து, சித்த மருத்துவரான அனுபமாவிடம் ‘போகலாம்’ என்று தலையசைத்தபடி விறுவிறுவென நடந்தவனைத் தொடரத் திணறினாள் அவள்.

Dr. கபிலன் சாரநாதன் BAMS, MD என்ற பெயர் தாங்கிய அம்புக்குறியிட்ட பலகை தலைமை மருத்துவரின் அறைக்கு வழி காட்ட, தன் இருக்கையில் சென்று அமர்ந்தான் கபிலன்.

மணியை அடித்ததில் வந்து நின்ற கணேஷிடம், கபிலன் “கால் லெட்டர் அனுப்பின எல்லாரும் வந்துட்டாங்களா?”

“இன்னும் நாலஞ்சு பேர் வரணும் ஸார்”

“சரி, வந்திருக்கறவங்களுக்கு தண்ணி, பானகம்னு எது வேணுமோ குடுங்க கணேஷ், கொஞ்ச நேரத்துல தொடங்கிடலாம்”

“ஓகே ஸார்”

தன் மடிக் கணினியில் நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தவர்களின் பட்டியலையும் முதல் சுற்றில் அவர்கள் பெற்ற மதிப்பீடுகளையும் சரிபார்த்துக் கொண்டிருந்தவனிடம்
வழக்கமான அவனது உற்சாகம் சிறிது குறைந்ததாகத் தோன்றவே, அனுபமா கபிலனின் முகத்தை முகத்தைப் பார்த்தாள்.

கபிலன் முகத்தைத் திருப்பாமலே “அனுபமா, உங்களுக்கு என் கிட்ட ஏதாவது கேட்கணுமா?”

“இ..இல்..இல்ல ஸார், அதெல்லாம் இல்லவே இல்ல ஸார்”

“குட், அப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” எனவும் அனுபமா ‘எப்புட்றா’ என விழித்தாள்.

பிறந்தது முதல் மற்றவர்களின் பார்வைகளை, விமரிசனங்களைத் தாங்கியே வளர்ந்தவனுக்கு, அதை இனங்காணத் தெரியாதா என்ன?

“ஓகே, லெட்’ஸ் கெட் டவுன் டு ஒர்க்” என்ற கபிலன் வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக இன்டர்வ்யூ செய்யத் தொடங்கினான்.

முதல் நபரை அழைத்ததுமே அலைபேசியில் வந்த அழைப்பு ‘அம்மா’ என ஒளிர, அதைத் தவறிய அழைப்பாக்க, அழைப்பு தொடர்ந்தது. காலை கட் செய்து ‘பிஸி, கால் யூ லேட்டர்’ என புலனத்தில் செய்தி அனுப்பியவனின் முகத்தில் இல்லாத சலிப்பு அகத்தில்.

அம்மா மாளவிகா மகனுக்குக் கல்யாணம் செய்வதில், குறிப்பாகத் தான் பார்க்கும் பெண்ணோடுதான் அவனுக்குத் திருமணம் என்ற பிடிவாதத்தில், கபிலனை விடாது நச்சரிக்கிறாள்.

“முப்பத்தோரு வயசு முடியப்போவுது. சொன்னது எதையும் கேட்கறதில்ல. இங்கயும் இல்லாம, அங்கேயும் இல்லாம பழனியாண்டி மாதிரி அந்த மலைல போய்த் தனியா இருந்துக்கிட்டு ரொம்பத்தான் பண்றடா. கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டி எதுவும் வேணாம்னா சொல்லிடு, ரெண்டு காவி வேட்டிய வாங்கி அனுப்பறேன்” என காலையில் ஏற்கனவே ஒரு சுற்றுப் பிரசங்கத்தைக் கேட்டாயிற்று. அதற்குள் மீண்டும் என்ன?

இதையேதான் சாரநாதனும் சற்று இணக்கமாக “ஏனப்பு இப்புடி புடிவாதம் புடிக்கற? நீ மட்டும் ‘ம்’னு ஒரு வார்த்த சொல்லு, அப்பா எப்புடிப்பட்ட பொண்ணைக் கொண்டு வந்து நிறுத்தறேன்னு பாரு” என்கிறார்.

இந்த நீலவேணி அப்பத்தா…

மூலிகை எண்ணெயை கால் முட்டியில் தேய்த்துப் பிடித்து விட்டு வெந்நீர் ஊற்றுகையில்

“ஏய்யா, உம் பொண்டாட்டியைப் பாத்துட்டுதான்யா நான் போகணும். சாரநாதா, சட்டுபுட்டுனு பொண்ணைப் பாருப்பா” என்பதும்

என்னைக் கண்டாலே நகர்ந்துவிடும் காவேரி அத்தை கூட அதை ஆமோதிப்பதும்…

இந்த நுங்கம்மா…

“சீக்கிரமா அப்பத்தா காலை விட்டு அண்ணி காலைப் புடிண்ணா. இம்சை தாங்கலை”

‘என்ன பேச்சு பேசுறா’ என நினைத்தவன் ஒரு புன்னகையுடன் வேலையைத் தொடர்ந்தான்.

எந்த நேரத்திலும், எந்த மனநிலையிலும் கபிலனை நெருங்குவது அவனது தங்கை ‘நுங்கு’ எனப்படும் குந்தவை மட்டுமே.

பி.காம் கடைசி வருடத்தில் இருக்கிறாள். சி.ஏ இன்டர் பாஸ் செய்திருக்கிறாள். தனியாகத்தான் வசிப்பேன் என்ற அண்ணனின் பிடிவாதத்திற்காக, பதினைந்து வயதிலேயே சமைக்கக் கற்றுக்கொண்டவள்.

‘பிக் அப் தி ஃபோன்’ என்றொரு தகவல் வர, மாளவிகாவிற்கு அழைத்து சற்றே கெஞ்சுதலாக. “நானே கூப்பிடறேம்மா, ப்ளீஸ்” என்றவனிடம் நீண்டதொரு ஆயாசப் பெருமூச்சு.

நல்லவேளையாக லஞ்ச் பிரேக் என்பதால் அனுபமா அங்கில்லை. சாப்பிடச் செல்லும் எண்ணமே இல்லாது அமர்ந்திருந்தான்.

கபிலனுக்குத் திருமணம் பிரச்சனையில்லை. அது குறித்தான சிந்தனையும் தற்சமயம் அவனுக்கு இல்லை. அதைச் சார்ந்து முன்னும் பின்னும் எத்தனை கேள்விகளை, கேலிகளை, சூழல்களை, மனிதர்களை சந்திக்க, சமாளிப்பதில் விருப்பமும் இல்லை. அதைவிட, துருவங்களை இணைக்கும் பொறுமை சுத்தமாக இல்லை.

இருப்பவர்களின் இ(ச்)சைக்கு ஆடுவது போதாதெனப் புதிய தாளம் வேறா?

ஒரு பொம்மை, எத்தனை கைகள்?

***************

திருவனந்தபுரத்தில் ஐந்தரை வருடங்கள் BAMS முடித்த கையோடே, மேற்படிப்புக்கான NEET தேர்வு எழுதி கோட்டக்கல் வைத்யரத்னம் கல்லூரியில் MD மூன்று வருடம் என,
பதினேழு வயதில் கல்லூரி விடுதிக்குச் சென்றவன் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுப்பின் இருபத்தாறு வயதில் முழு இளைஞனாக, பயிற்சி பெற்ற மருத்துவனாக வீடு திரும்பினான்.

வருடமும் வயதும்
கடந்திருந்ததில் அம்மா, அப்பா இருவரது வீட்டிலுமே தம்பி, தங்கைகள் வளர்ந்திருந்தனர். அவர்களோடு கூடவே பெற்றோரிடத்தில் அவர்களது உறவும் உரிமையும் வளர்ந்திருந்தது.

நிலாவிடமும் ஆதியிடமும் கபிலன் அண்ணாவின் வருகையும் இருப்பும் விடுமுறைக் கொண்டாட்டமென்ற மனநிலை அவர்களே அறியாது வெளிப்பட்டது.

யாரும் எதுவும் சொல்லவில்லைதான். மாளவிகாவும் ‘நிலாப்பா’ ஜெயச்சந்திரனும் எப்போதும் போல் இயல்பாக இருந்தனர்தான்.

ஆனால், கோர்ட், டே கேர் சென்ட்டர், பள்ளி, கல்லூரி என அந்த வீட்டின் நீரோட்டத்தில் மீண்டும் கலக்க கபிலனால் முடியவில்லை. பத்து நாள்கள் கூடத் தாக்குப் பிடிக்க இயலாது தவித்தான்.

அநேக விடுமுறைகள் பயிற்சியிலேயே கழிய, விடுதியே வீடாகிப் போனதில், வீடு இன்னுமே அந்நியமாகிப் போனது.

முன்பு போல் அல்லாது, கடந்த வருடங்களில் விடுமுறைக்கு வரும் சமயங்களில் எல்லாம் சிறுமலையில் இருந்த தந்தை சாரநாதனின் வீட்டிற்கும் ஓரிரு நாட்கள் சென்று தங்குவது வழக்கமாகி இருந்தது.

அப்பாவும் தங்கையும் தன் இருப்பைக் கொண்டாட, மற்றவர்கள் விருந்தாடியாகப் பார்ப்பதான உணர்வு கபிலனுக்கு.

சென்னை, பெங்களூர், கேரளா போன்ற இடங்களில் பெயர்பெற்ற ஆயுஷ் மருத்துவர்களின் மருத்துமனைகளில் வேலைக்கு விண்ணப்பித்தவனை தாய் மாளவிகாவின் கண்ணீரும், தந்தை சாரநாதனின் வலி சுமந்த பார்வையும் இங்கேயே நிறுத்தியது.

“இந்த மூலிகைப் பண்ணை, ஃபேக்டரி, சுத்துப்பட்டுல வாங்கிப் போட்டிருக்கற நிலம் எல்லாத்தையும் கூட நின்னு பாக்க ஆளில்லாம, நான் ஒருத்தன் இங்க ஒண்டியா கெடந்து அல்லாடுறேன், இன்னும் எத்தினி நாளுக்குடா என்னை விட்டுத் தள்ளி நிப்ப?”

“...”

“நான் இருக்கையில நீ போய் ஏன்டா யார் கீழயோ வேலை செய்யணும், உனக்கு என்ன மாதிரி ஆஸ்பத்திரி கட்டணும்னு சொல்லு, இங்கேயே கட்டிப்புடுவோம்”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா. நான் திண்டுக்கல்லுல…”

“நான் சொல்றதை காதுலயே வாங்காம திண்டுக்கல்லு, குண்டுக்கல்லுன்னா என்னப்பு அர்த்தம்?”

“இல்லப்பா… இடம் பார்க்கணும், ஒரு பத்து பன்னண்டு பேராவது வந்து தங்கி வைத்தியம் பார்த்துக்க்கறாப்பல கட்டிடம் கட்டணும். டாக்டருங்க தங்க வசதி செஞ்சு குடுக்கணும். ஆயுஷ் ஹாஸ்பிடல்ல வேலை செய்ய இந்த ஊருக்கு யாருப்பா வருவா?”

“வரவங்க வரட்டும். நம்ம மூலிகையை வெச்சு வேறென்ன செய்யலாம், உனக்கு ஏதாவது தேவைன்னா அதை பயிரிடலாம். அதைப்பத்தி யோசி”

“...”

“இஷ்டமில்லையா, அதை விடு. நீ வர வழில பாக்கலையாப்பு? இந்த ஏரியாவுலயே இப்போ எத்தினி சித்தா, ஆயுர்வேதா டாக்டருங்களோட க்ளீனிக் இருக்கு தெரியுமா? நீ வேணா பாரு, குளுகுளுனு காத்தடிக்கற சிறுமலைல ஹாஸ்பிடல் கட்டினா ரிஸார்ட் மாதிரி ஆளுங்க வராங்களா இல்லையான்னு? வேலைக்கு ஆளுங்களைக் கூட்டிட்டு வர நானாச்சு”

தந்தை இதைத்தான் சொல்லுவார் எனப் புரிந்திருந்த கபிலனால் அதை முழுமனதோடு ஏற்கத்தான் முடியவில்லை. அப்பா அவனுக்குச் செய்யாமல் இல்லை. ஆனால், அத்தை காவேரியும் சித்தி செண்பகாவும் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள், என்ன சொல்லுவார்கள் என்ற கவலை அவனை அரித்தது.

அப்பாவிற்குப் பிரச்சனையும் பெருஞ்செலவும் இழுத்துவிட விரும்பாதவனின் பிடிவாதம் சாரநாதனிடம் செல்லுபடி ஆகவில்லை. அதோடு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் தந்தையின் ஆசையை மறுக்கவும் மனதில்லை.

புகார் சொல்ல மனமின்றி “அப்பா, அத்தை…” என்று இழுத்தவனிடம் “எம் புள்ளைக்கு நான் செய்ய, எனக்கு யாரோட சம்மதமும் அனுமதியும் தேவையில்லப்பு. உனக்கு என்னென்ன வசதி வேணும்னு லிஸ்ட் போடுற வேலையை மட்டும் நீ செய்” என்ற சாரநாதன், மகனைப் பேசவே விடவில்லை.

யாரை எப்படி, என்ன சொல்லிச் சாமாளித்தான் என்பது சாரநாதனுக்கே வெளிச்சம். எத்தனை கேட்டும் தந்தையிடமிருந்து ஒற்றை வார்த்தையைக் கூட கபிலனால் வாங்க முடியவில்லை.

சொன்னதோடு மட்டுமின்றி,
அடுத்த இரண்டே வாரங்களில் ஊருக்கு வெளியே சற்றுத் தொலைவில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த அவர்களது இடம் ஒன்றில் மருத்துவமனைக்கான கட்டுமானமே தொடங்கிவிட்டது.

சாரநாதனின் மறுப்புகளை மீறி மருத்துவமனைக்குத் தேவையான பொருட்கள், உபகரணங்களை வாங்க கபிலன் வங்கியில் கடன் பெற்றான்.

“ஏன்டா, கபிலா, ஆரம்பிக்கறதுதான் ஆரம்பிக்கற. இங்க மதுரைல கட்டினாத்தான் என்ன?” என்ற அம்மா மாளவிகாவை, நல்லவேளையாக ஜெயச்சந்திரன்தான் தடுத்தாட்கொண்டு புண்ணியம் கட்டிக்கொண்டார்.

ஒரு சுப நாளில் காலையில் முன் கட்டிடத்தை தங்கை குந்தவை விளக்கேற்றித் தொடங்கி வைக்க, இரண்டு மணி நேர இடைவெளியில் மாளவிகா ரிப்பன் வெட்டிக் குடில்களைத் திறந்து வைத்தாள்.

திறப்பு விழாவிற்கு ஒருநாள் இருக்கையில் இந்த ஏற்பாடு தெரிய வர “லட்ச லட்சமாக் கொட்டுறவன் ஒருத்தன், இதுல ஒங்காத்தாக்காரி வந்து நோகாம நோம்பு கும்பிடுவா, அதுக்கு நீங்க கொடி பிடிப்பீகளோ?”

என்ற காவேரியின் ஆக்ஷேபணைகளை, அப்பத்தா மற்றும் செண்பகாவின் முணுமுணுப்புகளை நேரிடையாகவே எதிர்கொண்ட கபிலன், செண்பகாவைக் கை காட்டி

“எப்படி எங்கப்பாக்காக இவங்களோ, அதேமாதிரி எங்கம்மாக்கு நிலாப்பா. கபிலன்னா அவங்களும்தான்” என்றதை சாரநாதனே எதிர்பார்க்கவில்லை.

ஜெயச்சந்திரன் தனது பரிசாக இரண்டு லட்சரூபாய் கொடுத்தது கபிலனை நெகிழ்த்தியது.

ஆரம்பத்தில் சோதித்து, மருந்து எழுதிக் கொடுப்பதை மட்டுமே செய்தான்.

“இங்கிலீஷு டாக்டரு இல்லீங்களா?’ என்றவர்களுக்கு ஆயுஷ் என்பது, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி, சித்தா, ஹோமியோபதி, யோகா என அனைத்தும் ஒருங்கிணைந்த இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிங்கப்பட்ட ஒரு மருத்துவமனை, தேவையெனில், கபிலனால் அடிப்படை ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவே ஒரு வருடத்திற்கு மேல் அவகாசம் தேவைப்பட்டது.

மருத்தவமனையின் வசதிகளைப் படம் பிடித்து பத்திரிகைகள், சமூக வலைத் தளங்களில் விளம்பரம் செய்ததில், தங்களை Detox செய்து கொள்ள, முட்டி வலி, சர்க்கரை, உடற்பருமன், ஸ்ட்ரெஸ், நீண்ட நாள் சுவாசப் பிரச்சினை, வயிற்று உபாதைகள், மன அழுத்தம், உள்ளார்ந்த இயற்கை அழகு இவற்றிற்கென பணம் படைத்தவர்கள் வரத்தொடங்கினர்.

காலடியோசை பலத்துக் கேட்க, கபிலன் தன்னை மீட்டுக்கொண்டான்.

இலவச மருத்துவ நேரம் முடிந்த வந்த மருத்துவர்களுடன் தேர்வானவர்களின் இறுதிப் பட்டியலை ஆலோசித்திருக்க,
மெலிதாகக் கதவு தட்டப்படும் ஒலி கேட்டு நிமிர்ந்த கபிலன், சாரநாதன் உள்ளே நுழையவும்

“வாப்பா “ என்று வரவேற்க, மற்றோர் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர்.

சாரநாதன் “எல்லா போஸ்ட்டுக்கும் சரியான ஆள் கிடைச்சிட்டாங்களா?”


“அட்மின், ஆஃபீஸ் ஸ்டாஃப், கிடைச்சிட்டாங்கப்பா. லேடி கைனகாலஜிஸ்ட் வாரத்துல மூணு நாள் திண்டுக்கல்லுல இருந்து வந்துட்டுப் போவாங்க. இந்த டயட்டீஷியன், காஸ்மெடாலஜிஸ்ட்டுதான்…”

“ஏன், யாருமேவா வரல?”

“வந்தாங்க. எனக்குதான்பா திருப்தியா இல்லை. யாரையாவது தற்காலிகமா அப்பாயின்ட் பண்ணலாமான்னு யோசிக்கிறேன்””

பஞ்சகர்மா ஸ்பெஷலிஸ்ட்டான டாக்டர் அனுபமா “இங்க வரவங்கள்ல முக்கால்வாசிப் பேர் வெய்ட் குறைக்கறதுக்கும் அழகு படுத்திக்கவும்தான் ஸார் வராங்க. வரவங்க எல்லாருமே ஸ்பெஷலிஸ்ட் யாரும் இல்லையான்னு கேட்கறாங்க. அதனாலதான் ஸார் யோசிக்கறார்”

“ம்…. நீ கேக்குற எல்லாத் தகுதியோடயும் ஒருத்தங்க வந்து ரொம்ப நேரமா வெளில வெய்ட் பண்றாங்க. கூப்பிடவாப்பு?”

இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “சரிப்பா” என்ற கபிலனுக்கு, தந்தையுடன் உள்ளே நுழைந்தவளைக் கண்டதில், தன் திகைப்பை, கோபத்தை மறைக்க அதி சாமர்த்தியம் தேவைப்பட்டது.

நல்லவேளையாக “பார்த்துக்கப்பு” என்றபடி
சாரநாதன் புறப்பட்டுவிட, “ஓகே கைஸ், நீங்க போய் செலக்ட் ஆனவங்களை அனௌன்ஸ் பண்ணிட்டு, நம்ம கண்டிஷன்ஸை சொல்லுங்க. ஒத்துக்கிட்டா மெயில்ல அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் அனுப்பலாம். வர திங்கள் கிழமையே ஜாய்ன் செய்யணும். கெட் பேக் டு யுவர் ஒர்க் ” என மருத்துவர்களுக்கு விடை கொடுத்தவன், அவர்கள் வெளியேறிய பின்பும் சில நிமிடங்கள் வரை மௌனம் காத்தான்.

பிறகு “எங்க வந்த, நான்தான் உனக்குக் கால் லெட்டரே அனுப்பலையே?”

“வாட் ஈஸ் திஸ் மேன், கபீஷ் இடக்குமிடம்தானே சியாமளிக்கு சிறுமலை?” என்ற அந்தப் பெண் உரக்கச் சிரித்தாள்.
 
Last edited:

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
75
மிக்க மகிழ்ச்சி மீண்டும் கபிலனை சந்திப்பதில் 🤣 🤣 🤣.

அரசியல் குடும்பத்தை பார்த்தவுடன் சரி கபிலன் இப்போதைக்கு இல்லைன்னு நினைச்சேன் 😔 ஆனால் அவனை திரும்பவும் கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி மா 🙏

கபிலன் சித்தா மருத்துவரா நல்ல கெத்தோட வந்திருக்கான் 😜 அருமையான ஆரம்பம் 💖

குறு நகை எங்களுக்கு போதாது 😜 அவன் நல்லா மனம் திறந்து சிரிக்கணும்😂, சந்தோஷமா வாய் விட்டு சிரிக்கணும்😂, அந்த ஓசை எங்களுக்கு கேட்கணும் 🥰🥰🥰
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
24

மிக்க மகிழ்ச்சி மீண்டும் கபிலனை சந்திப்பதில் 🤣 🤣 🤣.

அரசியல் குடும்பத்தை பார்த்தவுடன் சரி கபிலன் இப்போதைக்கு இல்லைன்னு நினைச்சேன் 😔 ஆனால் அவனை திரும்பவும் கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி மா 🙏

கபிலன் சித்தா மருத்துவரா நல்ல கெத்தோட வந்திருக்கான் 😜 அருமையான ஆரம்பம் 💖

குறு நகை எங்களுக்கு போதாது 😜 அவன் நல்லா மனம் திறந்து சிரிக்கணும்😂, சந்தோஷமா வாய் விட்டு சிரிக்கணும்😂, அந்த ஓசை எங்களுக்கு கேட்கணும் 🥰🥰🥰
ஆயுர்வேத மருத்துவர்
 
Joined
Jun 19, 2024
Messages
8
😍😍😍

அப்ப "ராமர் இருக்கும் இடம் தானே சீதைக்கு அயோத்தி" ங்கிறதை மாத்திட்டாங்களா? 🤔🤔🤷🤷
FB_IMG_1635059665579.jpg



 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
68
பல்லாயிரக்கணக்கான நேய ரசிகர்களுக்காக விருப்பத்திற்கிணங்க, பேரவலைத்தீர்க்க முயற்சித்த மாமணியே நீவீர் வாழ்க. உங்களுடைய மனம தளராத முயற்சிகள் வெற்றி அடைய எல்லாம் இறைவனை நான்(அனைத்துலக ரசிகர் சார்பாக) பிராத்தனை செய்கிறேன/ வாழ்த்துகிறேன்
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
68
குறுநகை புன்னகையை மாறி பேரானந்தமாக ஆக கபிலனுக்கு வாழ்த்துகள்
 
Top