அத்தியாயம் – 25
சோமசுந்தரம் கிளம்பவும், “ஆதி, எப்போ வீட்ல வந்து பேசறதுன்னு சீக்கிரம் சொல்லு” என ஆதிநந்தனிடம் சொன்ன பங்கஜம்மாள், “நீங்க பேசிட்டு இருங்க. இதோ வரேன்” என இருவருக்கும் தனிமையைத் தந்து அங்கிருந்து விலகிச் சென்றார்.
அவர் செல்லும் முன்னர் அறையின் கதவைச் சாத்திவிட்டுச் செல்ல, “நேத்ரா...” என அவளை அவசரமாக நெருங்கி தன் வயிற்றோடு அவளை அணைத்துக் கொண்டான் ஆதிநந்தன்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “என்னை விடுங்க.. விடுங்க” எனத் திமிற ஆரம்பிக்க, “ம்ஹூம்... மாட்டேன்” என மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன உனக்குப் பரிசு வேண்டாமா?” எனக் குனிந்து அப்படியே அவள் தலையில் முத்தமிட, உச்சியிலிருந்து பாதம் வரையில் சிவ்வென்று குருதி பாய்ந்தோடியது அவளுக்கு.
“தமிழரசி மேடத்தை வெறுப்பேத்தறதுக்குத் தான் அப்படிச் சொன்னேன். போங்க... போய் உங்க சொப்பன சுந்தரிக்கு முத்தம் கொடுங்க” என அவனைத் தள்ள முனைய, அவளால் முடியவில்லை.
அவனின் பிடி இரும்பைப் போல் உறுதியாக இருந்தது ஒரு காரணமென்றால் அவளால் முழுப் பலத்தையும் திரட்டி அவனைத் தள்ள முடியாதது வேறு அடுத்த காரணமாக இருந்தது.
“அன்னைக்கே சொன்னேனே நீ தான் என் சொப்பன சுந்தரின்னு” என ஆதிநந்தன் அவளை விடாமல் இறுக்கிப் பிடித்திருக்க, “பொய்... அந்த ஸ்வப்னாவோட கல்யாணம் பேசிட்டு என்கிட்டே எதுக்கு வந்தீங்க?” என்றாள்.
பட்டென்று அவளை விட்டு விலகியவன், அவளைக் கூர்ந்து பார்த்தான். “ஸ்வப்னா எனக்குச் சரிபட்டு வரலைன்னு அப்போவே அந்தப் பேச்சை முடிச்சுட்டேனே. உனக்கு யார் சொன்னா?” என அவன் வினவ, “துருவ் அண்ணா” என்றாள்.
“அவன் வாழ்க்கைக்கு நல்லது பண்ணினா அவன் என் லவ் ஸ்டோரிக்கு வெடிகுண்டு வச்சு தகர்க்கப் பார்க்கிறானா அந்த ஹரிச்சந்திரன்?” என எரிச்சலாகச் சொல்ல, “அவர் பொய் சொல்ல மாட்டார்” என ரோசத்துடன் முகத்தை வைத்துக் கொண்டாள்.
“பொய் சொல்ல மாட்டான். ஆனால் என்ன உண்மைன்னு சரியாவும் விசாரிக்க மாட்டான். அவசரக்குடுக்கை” எனச் சத்தமாக முணுமுணுத்தவனின் முகம் மெல்லக் கனிவைப் பூசிக் கொண்டது.
அவனுக்குப் புரிந்துவிட்டது. “ஓ மேடம் இதுக்குத் தான் என் மேலே கோபமா இருந்தீங்களா? அதான் பாட்டி வீட்டில் தனியா விட்டுட்டு ஓடி வந்துட்டீங்களா?” என மீண்டும் அவளை நெருங்கி அவளைத் தன்னோட அணைக்க முயல, “இல்ல... இன்னும் இருக்கு” என்றாள்.
“இன்னுமா?” என அவன் அவளைப் பரிதாபமாகப் பார்க்க, “வானவில் நகைக்கடையில ரெய்டு போகப் போறதா ஏன் என்கிட்டே சொல்லலை?” என முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வினவினாள் நேத்ரா.
“வேலைல சீக்ரட்டா வச்சுக்கிறதை எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டு இருக்க முடியுமா என்ன?” எனப் பாவமாகக் கேட்டான்.
“அப்போ, நீங்க திட்டம் போட்டு என்னோட பழகி அபினவ் பத்தின விஷயங்களை என் மூலமா தெரிஞ்சுக்கிட்டீங்க” என அவள் மேலும் குற்றம் சுமத்த,
“எனக்கு என் திறமை மேலே நம்பிக்கையே இல்ல பாரு. உன்னை வச்சுத் தான் எல்லாக் கெட்டவங்களையும் பிடிக்கப் போறேன். நல்லா ஐடியா” என அவளைப் போலியாகச் சிலாகித்துக் கொண்டான்.
பின்னர், “அப்படின்னா ஒவ்வொரு கேஸ் விஷயமா ஒவ்வொரு வீட்லேயும் இருக்கிற பொண்ணோட பழகி, லவ் பண்ணி இனிமேல் கேஸை முடிக்கிறேன்” என அவன் சொல்ல, அவன் இடுப்பில் ஒரு அடி வைத்தாள்.
கலகலவென்று சிரித்தவன், “ஒருத்தனை பீலிங்க்ஸோட உருப்படியா லவ் பண்ண விடுதா இந்த உலகம்?” எனச் சலித்துக் கொண்டவன், “ஆமா, இதையும் உன்னோட மூளையுள்ள அண்ணன் துருவ் சொன்னானா?” எனக் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நேத்ரா, என்னால எல்லாத்தையும் முழுசாச் சொல்ல முடியாது. அபினவ் குடிச்சுட்டு எல்லாத்தையும் உளறிட்டான். அவ்வளவு தான் இப்போதைக்குச் சொல்ல முடியும்” என்றதும், அவளுக்கு அதுவரையில் ஒட்டிக் கொண்டிருந்த சிணுங்கல் முற்றிலும் காணாமல் போய்விட்டது.
“அப்படியா? ஹ ஹா” எனச் சிரிக்க, “என்ன என் மேலே இருந்த கோபமெல்லாம் போயிடுச்சா?” எனக் கேட்க,
“தெரியலை... ஆனா என்னைச் சந்தோஷத்துல தள்ளியிருக்கீங்க” என மீண்டும் சிரித்தவள், “ஒரு நிமிஷம்” எனப் படுக்கைக்கு அருகிலிருந்த மேஜையின் மேலிருந்த தன் பாட்டியின் அலைபேசியைக் கண்டுபிடித்து உடனே தமிழரசிக்கு அழைத்தாள். அவளது அலைபேசி நடந்த விபத்தில் சில்லுச் சில்லாக உடைந்து போயிருந்தது.
மறுமுனை எடுக்கப்பட, “என்ன தமிழரசி மேடம், பத்திரிக்கைக்காரங்க, டீவிக்காரங்க எல்லாம் உங்களைத் தொடர்றாங்க போல? இப்போ எப்படி இருக்கு?” எனக் கேலியாக வினவ, “ஏய்...” எனத் தமிழரசி சீறியது அருகிலிருந்த ஆதிநந்தனுக்குத் தெளிவாகக் கேட்டது.
“ப்ச் என்னைத் தொடர்ற நேரத்தை உங்க பையனைப் பார்த்துக்கிறதுல செலவழிச்சிருக்கலாம். கொஞ்சமாவது உருப்பட்டிருப்பான். இனியாவது பார்த்துக்கோங்க” எனக் குதூகலமாகப் பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட்டாள். கண்டிப்பாக அவரின் இரத்தக் கொதிப்புக் கூடியிருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.
புன்னகையுடன் அவனை ஏறிட்டவளைப் பார்த்து, “நீ நல்லவளா, கெட்டவளா?” என ஆதிநந்தன் குறும்பாக வினவ, வலது கை விரல்களை ஒன்று சேர்த்து வைத்து, “கொஞ்சம் கெட்டவ...” என்றவள், இரு கைகளையும் அகல விரித்து, “நிறைய நல்லவ” என்றாள்.
அவள் சொன்னதில் அவனுக்குச் சிரிப்பு வர இரண்டடிகள் முன்னால் நகர்ந்து நெருங்கிப் படுக்கையில் அமர்ந்தான்.
“அபினவ் மேல எனக்குப் பாசமில்லையா என நீங்க நினைக்கலாம் ஆதி. ரெண்டு பேருக்கும் பிணைப்பு ஏற்படற மாதிரி எந்தச் சந்தர்ப்பமும் இதுவரைக்கும் அமையலை. அதுவுமில்லாம செஞ்ச தப்புக்குத் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும். அது யாரா இருந்தாலும்” என நிறுத்தினாள்.
தொடர்ந்து, “உங்களை எந்நேரமும் யாராவது தொடர்ந்து வந்திட்டு இருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும் ஆதி? அப்படி யாராவது என்னைத் தொடர்ந்து வந்துட்டு இருந்தா நம்ம செய்யறது ஏதோ சரியில்லை என மனசுல ஒரே உறுத்தலா இருக்கும். பார்க்கப் போனா அதுனாலேயே நிறையத் தப்புச் செஞ்சிருக்கேன்.
அதான் இப்போ ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஒருவிதமான சாடிஸ்ட் மாதிரி இருக்கு இல்ல. ஆனா நான் அனுபவிச்சதுக்கு இது ஒண்ணுமேயில்லை. அபியை எப்படியும் சீக்கிரம் வெளியில கொண்டு வந்திடுவாங்க. அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும்” என்றாள்.
ஆதிநந்தனுக்கு அது நன்றாகத் தெரியும். ஆனாலும் அவன் துறையினரிடம் வலுவான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. அதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதையெல்லாம் இவளிடம் இப்போது சொல்ல முடியாது.
அதுவுமில்லாமல் இது அவர்களுக்கான நேரம். அவர்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டிய நேரம். அதை விட்டுவிட்டு மற்ற விஷயங்களையெல்லாம் பேசி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?
“துருவ் அண்ணா என் மேலே காட்டற பாசத்தைக் கூட இவங்களுக்கு என்மேலே காட்ட முடியலை. என் அப்பாவையும் சேர்த்துத் தான் சொல்லறேன்” என் நிறுத்தினாள்.
ஆண்களே சந்தர்ப்பவாதிகள் என்ற எண்ணத்தில் ஊறிப் போயிருந்தவளை மாற்றியது துருவன் தான். சிறுவயதில் தோழனாக, பருவ வயதில் அண்ணனாக, இப்போது ஒரு வழிகாட்டியாக இருக்கிறான் என்றாள்.
துருவனை இவளுக்கு ஏன் இத்தனை பிடித்திருக்கிறது என்று ஆதிநந்தனுக்குப் புரிந்தது. அவள் மிகவும் எதிர்பார்த்த சமயத்தில், ஏங்கிய பொழுதில் தன்னலமற்ற அன்பை பொழிந்திருக்கிறான். அப்படிப்பட்டவனை மித்ரா விரும்பியதில் வியப்பேதும் இல்லை.
“அதுவும், மித்ராவை காதலிச்சு எல்லாக் கஷ்டத்துலேயும் அவர் எதையும் தட்டிக் கழிக்கலையே. எனக்கு அவரோட அந்த நேர்மை பிடிக்கும். அவரோட பொறுப்புணர்வு பிடிக்கும்.” தொடர்ந்து பேசினாள்.
அப்படிப்பட்ட ஒருவன் ஆதிநந்தனைப் பற்றி எச்சரித்தால் அவளால் எப்படிக் கேட்காமல் இருக்க முடியும்? இப்போது ஆதிநந்தன் தன்னைத் தன் சுயநலத்துக்காக நெருங்கவில்லை என்று தெளிவாகப் புரிந்தது.
மனதில் இருந்த சந்தேகங்களை எல்லாம் ஆதிநந்தனிடம் கொட்டிவிடவும் அவள் மனம் அமைதியடைந்தது. ஆதிநந்தன் அதை நன்றாகப் புரிந்து கொண்டான்.
அந்தப் பேச்சை மாற்ற எண்ணி, “என்னை மன்னிச்சிடு நேத்ரா” என இடையிட்டான் ஆதிநந்தன்.
“நீங்க எந்தத் தப்பும் பண்ணலை. உங்க கடமையைத் தான் செஞ்சீங்க” என அவனைப் பார்த்துப் புன்னகைக்க,
“அதுகில்ல நேத்ரா. ஆரம்பத்துல உன்னைப் பத்தி எதுவும் புரிஞ்சுக்காம ரொம்பவும் ஹர்ட் பண்ணிட்டேன். அப்படியிருந்தும் பழகின கொஞ்ச நாள்லேயே நீ என்னை எவ்வளவு உயர்வா நினைச்சிருக்க. ஒருத்தரைப் பிடிக்கலைன்னா அதற்காக அவங்களை மதிக்காம இருக்கக் கூடாதுன்னு புரிஞ்சிடுச்சு” என்றான்.
அவள் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்க்க, “அதுவுமில்லாம உனக்குள்ள இருக்கிற வெற்றிடத்தைப் போக்கறேன்னு சொன்ன. ஆனா அதுக்கு நான் தகுதியானவனா என எனக்குத் தெரியலை” என அவன் உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.
அவனை அருகில் வருமாறு சொன்னவள், அவன் நெருங்கியதும் அவன் இரு கன்னங்களையும் பற்றி, “என்ன பேச்சு ஆதி இது? அப்போ நானும் என்னோட ஹெல்த்தைக் காரணம் காட்டி, உங்களுக்கு நான் தகுதியானவளான்னு கேட்கட்டுமா?” என்றாள்.
அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன், “நேத்ரா, உன்னைவிட எனக்குப் பொருத்தமானவ இப்ப மட்டுமில்ல எப்பவும் யாருமே இருக்க முடியாது. கார்காலத்துப் பனித்துளி நீ எனக்கு” என்றதும், விழிகளை மட்டும் உயர்த்தி அவனை ஏறிட்டுப் பார்த்து, “கார்காலத்துல பனித்துளியா?” என வியப்புடன் வினவினாள்.
“எனக்கு நீ அப்படித் தான். ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்” என்றான்.
“இப்போது அவளது கைகள் உயர்ந்து மெள்ள அவன் முதுகைச் சுற்றிப் படர்ந்து அவனை அணைத்துக் கொண்டன.
“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லு” என அவள் சம்மதம் கேட்க, “உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா?” என அதுவரையில் மனதைப் பிசைந்து கொண்டிருந்த பயத்தை வெளியிட்டாள்.
“உன்னைப் பத்தி வீட்ல சொல்லிட்டேன். உன் அப்பாவை நினைச்சு பயப்படறாங்க” என உண்மையை மறைக்காமல் சொன்னவன், “என்ன ஆனாலும் நான் உன்னை விட முடியாது நேத்ரா. வீட்ல பேசிக்கிறேன். நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் வேணும்” என்றான்.
அவள் முகம் சற்று கலவரமடைய, முன்னால் சாய்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுத் தைரியம் தந்தான். “அப்பா-அம்மா ரொம்பப் பிடிவாதம் பிடிக்க மாட்டாங்க. கவலைப்படாத” என இப்போது சற்று முன்னால் சரிந்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டான்.
“நிஜமா நீங்க எனக்கே எனக்கா?” எனச் சிறுபிள்ளையென வினவ, “ப்ரூவ் பண்ணனுமா என்ன?” எனக் குறும்பாக வினவியவன், “பண்ணட்டா...?” என அவள் பதில் சொல்லும் முன்னரே அவள் இதழ்களில் முத்தமிட்டிருந்தான்.
என்ன நடந்தது என அவள் புரிந்து கொள்ளும் முன்னரே அவளை விட்டு விலகியும் விட்டான். அவன் தன் ‘பேண்ட் பாக்கெட்’டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அதிலிருந்த பிரேஸ்லெட் ஒன்றை கையிலெடுத்து அவள் முன்னே நீட்டினான்.
“சாரி நேத்ரா... உன்னோட பிரேஸ்லெட் என்னால கடல்ல விழுந்திடுச்சு. அப்போவே மனசு கஷ்டமா இருந்தது” எனச் சொல்லி அந்த பிரேஸ்லெட்டை அவளது வலது மணிக்கட்டில் அணிவித்துவிட்டு, குனிந்து அதன் மேல் முத்தமிட்டான்.
கைகளில் பட்ட அவனது இதழ் ஸ்பரிசம் மெள்ள ஊடுருவி அவள் அணுக்கள் வரையில் குறுகுறுக்கச் செய்தது.
அவனை விழியுயர்த்திப் பார்க்க, ‘என்ன?’ என்பதைப் போல் இடது புருவத்தை உயர்த்தினான்.
அவள் எதுவும் சொல்லாமல் குனிந்து கொள்ள, அவள் முகத்தின் அருகே நெருங்கி, “இதை வாங்கறதுக்குத் தான் நேத்து உன்னைக் கடற்கரையில விட்டுட்டுப் போனேன்” எனக் குறுஞ்சிரிப்புடன் சொன்னான்.
அப்போது யாரோ கதவைப் படாரென்று திறக்க, திகைத்துப் போய் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
“என்கிட்ட ஏன் உடனே சொல்லலை. எப்படி இருக்க கண்மணி?” எனக் கேட்டவாறே துருவன் நுழைந்தான்.
“வந்துட்டான்டா கரடி” என ஆதிநந்தன் வாய்க்குள் முணுமுணுக்க, அப்போது தான் அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்திருப்பது துருவனின் கவனத்தில் பதிந்தது.
“அது வந்து.. கண்மணி...” என துருவன் அசடு வழிய, “இப்படி என் வாழ்க்கையில குறுக்கும் மறுக்குமா போவேன்னு தான் மித்ரா குடும்பத்தோடு உன்னை ஒண்ணு சேர்த்து வச்சேன். அதை விட்டுட்டு இங்கே என்ன வேலை உனக்கு?” என்றான் ஆதிநந்தன் பரிகாசத்துடன்.
“நேத்ராவை நீ நல்லாப் பார்த்துக்கறியா, இல்லையா எனப் பார்க்க வந்தேன்” என துருவன் சமாளிக்க, “நல்லாத் தான் பார்த்துட்டு இருந்தேன். நீ வந்து கெடுத்துட்ட. அதனால நீங்க இப்போ..” என ஆதிநந்தன் அறையின் வாயிலைக் காட்டினான்.
“எல்லாம் என் நேரம்” என அவனைப் பார்த்துப் போலியாக முறைத்த துருவன், “எப்படி இருக்கக் கண்மணி? பாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னாங்க” என்றான்.
“எனக்கு ஒண்ணும் இல்ல அண்ணா. நல்லா இருக்கேன். ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். சீக்கிரம் ஒரு நல்ல நாள் பாருங்க... கல்யாண சாப்பாடு போடலாம்” என ஆதிநந்தனைப் பார்த்து சிறு புன்னகைப் பூத்தாள்.
அந்தப் புன்னகையில் துருவனின் மனம் நிறைந்து போனது. ஆதிநந்தன் அவளைக் காதலுடன் கண்ணிமைக்காது நோக்கினான்.
முகப்பை வைத்து ஒரு புத்தகத்தை மதிப்பிடாதே என்பதைப் போல் ஒருவரின் தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக் கூடாது என்பதை நன்கு புரிய வைத்துவிட்டாள்.
“Don't judge a book by its cover” - George Eliot.
***முற்றும்***
Author: Lavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.