அத்தியாயம் – 21
“என்ன ஆச்சு பாட்டி?” கதவைத் திறந்த ஆதிநந்தன் பங்கஜம்மாளை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. நேத்ராவுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ எனக் கருதியே அவனது வார்த்தைகள் பதட்டத்துடன் வெளிவந்து குதித்தன.
கண்கள் சுருக்கி அவனைக் கூர்மையாகப் பார்த்தவர், “அதை நான் கேட்கணும்” எனத் தீவிரமான முகப்பாவனையுடன் பேசினார்.
திகைத்த விழிகளுடன் எதுவும் புரியாமல் நின்றிருப்பவனைப் பார்த்து, “கண்மணி கிளம்பிட்டா” என்றதும் தான் சற்றுமுன்னர் விர்ரென்று கிளம்பிய காரின் சத்தம் நேத்ராவினது என்று புரிந்தது. ஆனால் ஏன்?
“ஏன் பாட்டி?” விடை தெரியாத குழப்பத்துடன் அவன் வார்த்தைகள் வெளிவர, “என்ன நடந்தது நேத்து? கோபத்தில கிளம்பிட்டா” என அவனையே ஊடுருவினார்.
“அது பாட்டி...” ஒரு நொடி தயங்கியவன், இவரிடம் மறைத்துப் பயனில்லை எனப் புரிய அவன் மனதில் தோன்றிய பிடித்தத்தை அவளிடம் சொல்லிவிட்டதாகச் சொன்னான்.
“ஆனா அப்போ கூடக் கோபப்படலையே?” தன் யோசனையில் உழன்று கொண்டிருந்தவனை இன்னுமே ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் பங்கஜம்மாள்.
“அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?” இதுவரையில் அவன் கண்ட பங்கஜம்மாள் இவரில்லை எனக் கேள்வி வெளியில் வந்து விழுந்த தொனியில் புரிந்து கொண்டான்.
“எல்லா விஷயமும் தெரியும் பாட்டி. நேத்ரா சொல்லிட்டா.” ஒருவித தெளிவுடன் அவன் உரைக்க, பங்கஜம்மாளுக்குக் குழப்பமே மிகுந்திருந்தது.
இவனிடம் அனைத்தையும் சொல்வதென்றால் அவனைப் பிடித்திருப்பதாக அல்லவா அர்த்தம்? பின்னே ஏன் கோபத்தில் கிளம்பிவிட்டாள்? அதுவும் உடன் அழைத்து வந்தவனை இங்கேயே விட்டுவிட்டு.
நேற்றிரவு மாடியில் இருந்து இறங்கி வந்தவளின் முகத்தையும் உடல் மொழியையும் அளவிட்டுக் கொண்டிருந்தார் பங்கஜம்மாள். அவளிடம் எப்போதும் குடிகொண்டிருக்கும் துள்ளலைச் சற்றும் காணவில்லை என்பதை உடனே புரிந்து கொண்டார்.
குழப்ப ரேகைகள் அவள் முகத்தில் நன்றாக ஓடின. எனினும் அப்போதைக்கு அவர் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. காலையில் பேசிக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
‘ஒருவேளை கேட்டிருக்க வேண்டுமோ?’ பங்கஜம்மாள் யோசனையில் ஆழ்ந்தார்.
****
காரைச் செலுத்திக் கொண்டிருந்த நேத்ராவுக்கு நேற்றிரவு நடந்தது அனைத்தும் நினைவில் ஆடியது. நேற்றிரவு ஆதிநந்தனிடம் கோபமாகப் பேசிவிட்டுத் திரும்ப நினைத்தவளை முற்றுகையிட்டு முதல் முத்திரையைப் பதித்துவிட்டான். இப்போது நினைத்தால் கூட அவள் கன்னங்கள் சூடாகி, சிவப்பேறின.
கோபமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் இவன் தன்னை உண்மையில் விரும்புகிறானோ என்று மனம் குழம்ப ஆரம்பித்திருந்தது அவளுக்கு. மாடியிலிருந்து குழப்பத்துடன் சென்றவளை, “என்னாச்சு கண்மணி, தூங்கலையா?” என்ற கேள்வியுடன் பங்கஜம்மாள் எதிர்கொண்டார்.
உள்ளுக்குள் திடுக்கிட்டவளாக, “அது பாட்டி.. நீங்க தூங்கலையா?” என அவரையே கேள்வி கேட்க, “மருந்து சாப்பிட மறந்துட்டேன். என்கிட்ட இருக்கிறது தீர்ந்திடுச்சு. புதுசு வாங்கிட்டு வந்தது சமையலறையில இருக்கு” என்றார்.
“இருங்க, நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என அவருக்கு வேண்டிய உதவியைச் செய்தவள் “நாளைக்குக் கிளம்பணும் பாட்டி. போய்த் தூங்கறேன்” எனச் சொல்லிவிட்டு உடனே தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
மேலும் அங்கேயே இருந்தால் எங்கே அவள் மனதில் இருப்பதைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயம் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அதுவும் மாடியில் இருந்து இறங்கி வருவதை வேறு பார்த்திருப்பார்.
அறைக்குள் சென்று அவள் எதையும் யோசிக்கும் முன்னரே தமிழரசியின் அழைப்பு குறுக்கிட்டது. அவள் இருக்கும் வேதனையில் இவர் வேறா என்றிருந்தது அவளுக்கு.
‘எவ்வளவு நாளைக்குத் தான் இப்படி ஓடிட்டு இருப்ப நேத்ரா?’ ஆதிநந்தனின் குரல் செவிகளில் உரச, தொடர்ந்து அவன் சொன்ன, ‘நானும் உன்னோட வரட்டுமா?’ என்பதும் ஒலித்தது. அழைப்பை எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவள் படக்கென்று எடுத்துவிட்டாள்.
“இப்போ நிம்மதியா? சொன்ன மாதிரியே என் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்திட்ட இல்ல?” என்ற தமிழரசியின் குரலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை.
“என்ன சத்தத்தைக் காணோம். எல்லாம் உன்னோட வேலைன்னு எனக்குத் தெரியும். அங்க வந்து உன்னோட தங்கிட்டு இருக்கிற அந்தப் பரதேசி என் மகனைப் பிடிச்சு ஜெயில்ல போடறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கானாம்” என்றதும்,
“மரியாதையாப் பேசுங்க” என அவளையுமறியாமல் குரல் வெளிவந்துவிட்டது.
“என் மகனைக் கஷ்டப்படுத்தற அவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு? இன்னைக்குச் சாயந்திரம் அவனோட நகைக் கடையில ரெய்டு போயிருக்காங்க. இன்னும் அவன் வீட்டுக்கு வரலை. நீ தானே எல்லா விஷயத்தையும் அந்தப் பரதேசிகிட்ட சொன்ன?”
‘அவனோட அடுத்த டார்கெட் வானவில் நகைக்கடை’ என மாலையில் துருவன் சொன்னது அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. பேச்சற்று நின்றிருந்தாள்.
தமிழரசி அவள் காதுகள் புளித்துப் போகும் வரையில் திட்டிவிட்டு அழைப்பை வைத்துவிட்டார்.
அப்போ ஆதிநந்தன் அவளுக்காக வரவில்லையா? அவளை வைத்து அவள் தந்தை சார்ந்த விசயங்களையும் அவர் குடும்பம் சார்ந்த விஷயங்களையும் திரட்டியிருக்கிறான். நொறுங்கியே போனாள். அவள் குடும்பத்தை வலையில் சிக்கி வைக்கத் தன்னைப் பகடைக்காயாக்கி இருக்கிறான் அவன்.
நேற்றிரவு நடந்தது மீண்டும் நினைவுக்கு வர கோபமும் ஜிவுஜிவு என்று எகிறியது. முகமெல்லாம் சிவந்து போக, காரிலுள்ள ஏசியின் அளவைக் கூட்டி முகச் சிவப்பைக் குறைக்க முயன்றாள். ம்கூம்.. இயலவில்லை.
அவன் முகத்தைப் பார்த்து நறுக்கென்று கேள்விகள் கேட்க வேண்டும் என்று நாவும் மனமும் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் யாரிடமும் அப்படி அடாவடியாகப் பேசுபவள் அவளில்லை. அவளின் இயல்பும் அதுவல்ல.
அங்கேயே இருந்தால் தன் இயல்பையும் மீறி அவனிடம் போய் வார்த்தைகளை விட்டுவிடுவாளோ என்ற அச்சத்தினாலேயே புதுச்சேரியில் இருந்து கிளம்பிவிட்டாள்.
வந்துவிட்டாளே ஒழிய சிந்தனைகளை முழுவதையும் புதுச்சேரியில் அம்போவென்று விட்டுவிட்டு வந்த ஆதிநந்தனிடமே குடி வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
‘இந்நேரம் அவள் அங்கிருந்து கிளம்பியது அவனுக்குத் தெரிய வந்திருக்கும். எப்படி உணர்ந்திருப்பான்? உடனே கிளம்பித் தன்னைத் தேடி வருவானோ? இல்லை, அழைத்துப் பேசுவானோ?’
சிந்தனையில் எதிர்பார்ப்புகள் கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்க, அவளது சிந்தனையைப் படித்தவன் போல் ஆதிநந்தன் அவளைக் கைபேசியில் அழைத்திருந்தான். ஒளிர்ந்த அவன் எண்ணை பார்த்ததும் அவளின் மனம் திருப்திப்பட்டுக் கொண்டது.
ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்தில் முகத்தைச் சுழித்தவள், அழைப்பை நிராகரித்தாள். அது அடித்து ஓயும் வரையில் ஒருவித குரூர திருப்தியுடன் காரை செலுத்திக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு முறை அழைத்தான் எனக் கணக்கிட்டுக் கூற இயலாத அளவுக்கு அழைத்துக் கொண்டே இருந்தான் ஆதிநந்தன். எனினும் பாறையாய் இறுகி போயிருந்த மனம் சற்றும் இளகி கரையவில்லை.
சிறிதுதூரம் சென்றதும் அவனது அழைப்புகள் நின்றிருக்க, ‘அதற்குள் சலித்துவிட்டது போலும்’ என அதற்கும் குறை கண்டுபிடித்தாள். காரில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு கூட எரிச்சலை வரவழைக்க அதையும் நிறுத்திவிட்டாள்.
காரணம் அதுவல்ல என்று அவள் நெஞ்சுக்குத் தெரியும். எங்கே பாட்டுச் சத்தத்தில் கைப்பேசி அழைப்பு கேட்காதோ என்றே அணைத்துவிட்டாள். காரின் அமைதியைக் கிழித்துக் கொண்டு கைப்பேசி இசைக்க, உதட்டோரத்தில் நெளிந்த புன்னகையுடன் அழைப்பை எடுத்தாள்.
அவள் பாட்டியிடமிருந்து வந்த அழைப்பு. “சொல்லுங்க பாட்டி” என அவளின் போராட்டதை வெளியில் காட்டாதவாறு பேச ஆரம்பித்தாள்.
“நேத்ரா.. என்ன ஆச்சு? ஏன் என்னை விட்டுட்டு போய்ட்ட?” வெளிவந்த ஆதிநந்தனின் உருக்கமான குரல் அவள் செவிகளைத் தீண்ட சற்றுநேரம் அவளுக்குப் பேச்செழவில்லை.
உயிர்தொடும் சொற்கள் கற்சுவர் சூழ்ந்த அவளது நெஞ்சின் வேர் வரையில் ஊடுருவிச் சென்றன. பாட்டியின் அலைபேசியிலிருந்து அழைக்கிறான் என்றால் பாட்டியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டானா? பாட்டிக்கும் சம்மதமா?
‘அவனுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது?’ என அன்றே அவர் சொன்னாரே. அப்படியென்றால் இவன் உண்மையாகவே தன்னை விரும்புகிறானா? மனம் குழம்பித் தவித்தது.
அவளுக்கு யோசிக்க அமைதியான சூழ்நிலை வேண்டும். அதுவும் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு யோசிக்க வேண்டும். இவனிடம் பேசினால் ஒன்று கோபம் கொள்ள நேரிடும், இல்லை, அவன் பேச்சில் இளகிவிடக் கூடும். இரண்டுமே நல்லதல்ல.
தன் யோசனையில் சுழன்று கொண்டிருந்தவளை, “ஏன் அமைதியா இருக்க? மனசுல என்ன இருக்குன்னு சொன்னா தானே எனக்குத் தெரியும். பேசு நேத்ரா...” என்ற ஆதிநந்தனின் குரல் அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.
அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை. அழைப்பை படக்கென்று கத்தரித்து, கைப்பேசியை முழுவதும் அணைத்துவிட்டாள்.
****
சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆதிநந்தனின் மனம் அடித்துக் கொண்டது. நேத்ரா ஏன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாள் எனப் புரியவில்லை. அழைத்தாலும் அழைப்பை நிராகரித்துவிட்டாள். போதாதென்று பாட்டியின் அலைபேசியில் இருந்து பேசினால் அதையும் கத்தரித்துவிட்டாள்.
ஆனால் ஒன்று மட்டும் அவனால் உறுதியாகச் சொல்ல முடியும். அவளுக்கு அவன் மேல் தான் கோபம். ஆனால் ஏன்? மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்றிருந்தது அவனுக்கு.
சில மாதங்களுக்கு முன்னர் ஸ்வப்னா அவனை உணவக வாயிலில் அம்போவென்று விட்டுச் செல்கையில் கூட அவன் மனம் எந்த உணர்வுகளையும் பொழியவில்லை. ‘போகிறாயா போ’ என்று அடுத்த நிமிடமே தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.
‘என்னை, என் பணியைப் பற்றிப் புரிந்து கொள்ளவில்லையா? அதனால் எனக்கு என்ன வந்துவிட்டது?’ என்ற மனோபாவமே ஆட்கொண்டிருந்தது அவனிடத்தில்.
ஆனால் இன்று நேத்ராவின் கோபம் அவனை வெகுவாய்ப் பாதித்தது. அவனைத் தன் வசமிழக்கச் செய்தது. எதனால் அவளுக்குக் கோபம் என்று அறிந்து கொள்ளவில்லை என்றால் அவன் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது.
அவளிடம் அவனை விளக்கிவிட வேண்டும் என்ற துடிப்பு அவளைப் பார்க்கும் வரையில் அடங்காது. அவனைப் புரிய வைக்கும் வரையில் அவன் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும் என்று எண்ணினான். இதற்குப் பெயர் தான் காதலா? தெரியவில்லை.
ஆனால் அவள் வேண்டும் என மனம், உடல், நாடி, நரம்பு, அணுக்கள் என அவனுள் இருக்கும் மொத்தமும் துடியாய்த் துடித்தது. அவளை உடனே பார்க்க வேண்டும் என்ற தவிப்புக் கூட பங்கஜம்மாளிடம் சொல்லிவிட்டுக் துரிதமாகக் கிளம்பிவிட்டான்.
நேராகச் சென்னையில் உள்ள அவளது அடுக்குமாடி குடியிருப்பின் முன்னால் இறங்கியவன், மின்தூக்கிக்காகக் காத்திராமல் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறிப் போய் வாயில்மணியை ஒலிக்கவிட்டான்.
வீட்டில் அவள் இருப்பதற்கான சுவடே இல்லை. சற்றுநேரம் அங்கேயே நின்று கதவைத் தட்ட, பக்கத்து வீட்டில் இருந்து வாட்டசாட்டமாக ஒருவன் வெளியில் வந்து “யார் வேணும்...” என எட்டிப் பார்த்தான்.
“அது.. நேத்ரா..” என்றதும் அந்தப் புதியவனின் முகம் மலர்ந்து போனதோ என்று தோன்றியது ஆதிநந்தனுக்கு.
“அவங்க ஊருக்குப் போயிருக்காங்க. இன்னும் வரலை” என்றான்.
“இல்லை.. அவங்க கிளம்பிட்டாங்க” என ஆதிநந்தன் சொல்லவும், அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைக் கூர்ந்து பார்த்தவாறே, “இப்போ தான் நேத்ரா ஃபோன் பண்ணினாங்க. வர்றதுக்குச் சாயந்திரம் ஆகிடுமாம்” எனத் தகவல் தந்தான்.
‘இவனிடம் மட்டும் அவளால் பேச முடிந்ததா?’ என்ற பொறாமையுணர்வு தோன்றியது. எதுவும் சொல்லாமல் ஆதிநந்தன் நின்று கொண்டிருக்க, “நீங்க யாருன்னு சொல்லிட்டுப் போங்க. அவங்க வந்ததும் நான் தகவல் சொல்லிடறேன்” எனத் தொடர்ந்து சொல்லவும், ஆதிநந்தனின் பொறாமையுணர்வு பன்மடங்காக உயர்ந்தது.
‘இவன் யார் அவளுக்குத் தகவல் சொல்வதற்கு?’ என்ற வீம்பு கூட, “இல்லை.. நான் அவளோட ஃபோன்ல பேசிக்கிறேன்” என வேண்டுமென்றே ஒருமையில் அவளைக் குறிப்பிட்டுச் சொன்னவன், “தேங்க்ஸ்” என அதற்குமேல் நிற்காமல் கிளம்பிவிட்டான்.
வீம்பாகப் பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய, நேத்ரா எங்கே சென்றுவிட்டாள் என அவனுக்குத் தெரியவில்லை. அவன் அழைத்தாலும் அழைப்பு எடுக்கப்படவில்லை. பங்கஜம்மாளை அழைத்துப் பேசியவன், தன் வீட்டுக்குச் சென்றான்.
அவன் வீட்டுக்குச் சென்ற வேளையில் ஸ்வப்னாவின் தந்தை அங்கே இருந்தார். அவனைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக, “வாங்க மாப்பிள்ளை..” என அவன் வீட்டில் அமர்ந்து கொண்டு அவனை வரவேற்க, அவன் கடுப்பாகிப் போனான்.
இவருக்கும் இவர் மகளுக்கும் எத்தனை நாசூக்காகச் சொன்னாலும் புரியாதா? முகத்தில் அடித்ததைப் போல் நேரடியாகச் சொன்னால் தான் புரியும் போல.
“வாங்க அங்கிள். எப்படி இருக்கீங்க?” என அவரிடம் வினவினாலும் பார்வை என்னவோ தந்தையிடம் நிலைத்திருந்தது.
அவரோ, ‘நான் என்ன செய்யட்டும்? இவர் இப்படி அடாவடியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்’ எனப் பரிதாபமாக மகனைப் பார்த்தார். ஆதிநந்தனின் தந்தை ஒன்றும், ‘நான் பார்த்த பெண். கட்டினால் இவளைத் தான் கட்ட வேண்டும்’ என்றெல்லாம் பிடிவாதம் பிடிப்பவர் அல்ல.
மகனுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை. அதற்கு அவர் எதுவும் செய்ய முடியாது.
தந்தையை ஒரு பார்வை பார்த்தவன், “அப்புறம் அங்கிள் உங்க பிசினஸ் எல்லாம் எப்படிப் போகுது? இப்போதைக்கு உங்களுக்கு வெளிநாடு போற பிளான் எதுவுமில்லையே?” எனப் பொடி வைத்துப் பேசியவன்,
“அப்பா சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன். எனக்குக் கல்யாணம் முடிவாகியிருக்கு” என்றான்.
‘எப்போடா? என்கிட்டே சொல்லவேயில்லை’ என்பதைப் போல அவன் தந்தை, தாமோதரன் திகைத்து விழிக்க, ஸ்வப்னாவின் தந்தையும் அதிர்ந்து போனார்.
“என்ன மா..ப்... சொல்லறீங்க?” என அவர் சொற்கள் கிடைக்காமல் திணற, “அது கொஞ்ச நாளாவே பேச்சுவார்த்தை போயிட்டு இருந்ததுங்க அங்கிள். இப்போது திடீர்னு முடிவு பண்ணிட்டோம்” என விஷயம் அத்தோடு முடிந்தது என்பதைப் போல் அவன் பேசி வைக்க, அதற்குமேல் அவர் அதிகநேரம் அங்கே இருக்கவில்லை. விரைவாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும், “என்ன ஆதி இது? இப்படியா பொய் சொல்வ?” என தாமோதரன் மேற்கொண்டு பேசும் முன்னர், “எனக்குப் பொய் பேசி பழக்கமில்லைனு உங்களுக்குத் தெரியும்ப்பா. எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு” என மனதில் இருப்பதை வெளியில் சொல்லிவிட்டான்.
அதைக் கேட்டவர் திகைத்துப் போய் மகனைப் பார்க்க, அவன் அன்னை விடுவிடுவென்று உணவறையில் இருந்து வெளியில் வந்தார்.
“என்ன ஆதி சொல்லற? இப்படித் திடீர்னு வந்து குண்டை போடற. பொண்ணு யாரு?” என அனைத்தையும் தெரிந்து கொள்வதில் முனைய, “பொண்ணு பேர் நேத்ரா” என்றான்.
மேலே சொல்லு என்பதைப் போல் தாமோதரன் மகனைப் பார்க்க, அவன் சுருக்கமாக நேத்ராவைப் பற்றிச் சொன்னான். இறுதியாக அவள் அரசியல்வாதி சோமசுந்தரத்தின் மகள் என்று சொன்னதும், “இது நமக்குச் சரி வராது” என்று தன் முடிவைத் தெரிவித்தார்.
“அப்பா.. என்னப்பா இது?” என ஆதிநந்தன் சலிப்புடன் ஆரம்பிக்க, “உனக்கே தெரியும் நான் காதலுக்கு எல்லாம் எதிரியில்லைன்னு. இல்லைன்னா, உன் அண்ணனை அவன் விரும்பின பொண்ணைக் கல்யாணம் பண்ண விட்டிருக்க மாட்டேன். ஆனா அரசியல்வாதியோட சம்மந்தம் எல்லாம் நமக்குச் சரிபட்டு வராது. அதுவும் அவங்க கை சுத்தமில்லை” என்றார் தாமோதரன்.
“தெரியும்பா... அவர் மகனோட கடையில ரெய்டு போக நான் நிறைய ஆதாரம் சேகரிச்சுக் கொடுத்தேன். ரெய்டு நடந்துட்டு இருக்கு. ஆனா நேத்ரா இவங்க பொண்ணுன்னு இப்போ தான் தெரியும். அதுக்காக அவளை மறக்க முடியாதுப்பா.
அதுவுமில்லாம நேத்ரா இவங்களோட இல்லை. அவங்களுக்கும் அவளுக்கும் பெருசா எந்தப் பந்தமும் இல்லை” என அவன் புரிய வைக்க முனைந்தான்.
மனதில் வேறு சஞ்சலம் கூடிக் கொண்டே போனது. அவள் எங்கே சென்றிருப்பாள்? சென்னை வந்தடைந்துவிட்டதாக அவள் பாட்டிக்கு அழைத்துச் சொல்லியிருக்கிறாள். பங்கஜம்மாள் அவனுக்கு அழைத்துப் பேசினார். ஒருவேளை அவன் கிளம்பிய பிறகு அவள் தன் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றிருப்பாளோ?
அவளை உடனே பார்த்தாக வேண்டும் என அவன் தாகம் கொண்ட நெஞ்சம் தவிக்க, தந்தையிடம் பேசிச் சம்மதிக்க வைத்துவிட்டு கிளம்பிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான்.
“ஆதி, எனக்கு இது சரி வரும்னு கண்டிப்பா தோணலை. முக்கியமா உன் வேலைக்கு” என நிதர்சனத்தை அவனுக்குப் புரிய வைக்க முயன்றார் தாமோதரன். அவர் சொல்வது அவனுக்குப் புரிந்தது. ஆனால் அதற்காக அவன் நேத்ராவை மறக்க முடியுமா? அதற்கு அவன் செத்துப் போகலாம்.
இந்த எண்ணம் தோன்றிய அடுத்தக் கணமே தலையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான். இப்படியொரு உணர்வை அவன் இதுவரையில் உணர்ந்ததில்லை. மகனை இப்படியெல்லாம் பெற்றோர்களும் பார்த்ததேயில்லை.
சோர்ந்து போய்த் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை நெருங்கி, “என்னாச்சுப்பா ஆதி?” என தாமோதரன் கனிவுடன் கேட்க, “அப்பா பிளீஸ் பா... எனக்கு நேத்ரா வேணும்” எனச் சிறுவனாக மாறி அவரிடம் இறைஞ்சினான்.
“ஆதி...” எனப் பெற்றோர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். ஆதிநந்தன் அப்படி ஒன்றும் பிடிவாதம் பிடிப்பவனல்ல. இப்படிக் கேட்கிறான் என்றால் அவளை அவ்வளவு விரும்புகிறானா? வாயடைத்துப் போனார்கள்.
“நான் இப்போ அவசரமா வெளியில கிளம்பணும். நீங்க கொஞ்சம் யோசிங்க அப்பா. பிளீஸ்ம்மா” என அவர்களிடம் சொன்னவன், தன் காரை எடுத்துக் கொண்டு மீண்டும் நேத்ராவின் வீட்டுக்குச் சென்றான். அவள் இன்னும் அங்கே வந்திருக்கவில்லை. அவள் எங்கே சென்றிருப்பாள்?
தொடரும்...
Author: Lavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.