அத்தியாயம் – 20
“என்ன நடக்குது அங்க? ஆதி அங்கே இருக்கானாம்... பாட்டி சொன்னாங்க...” ஆரம்பமே கைதியை விசாரிக்கும் பாவனையில் துருவன் பேச, நடந்ததை மறைக்காமல் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் நேத்ரா.ஆனால் அவள் மனதில் முளைத்திருந்த இனம் புரியாத உணர்வுகளை மட்டும் வெளியிடவில்லை. அவன் சும்மா விடவில்லை.
“கண்மணி உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா? பாட்டிக்கிட்ட இப்போ தான் பேசினேன். எதையும் மறைக்காத.” துருவன் மீண்டும் அதே விசாரிக்கும் பாவனையில் பேச, “ஆதி நல்லவர் அண்ணா” என அவனுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாள்.
அந்த ஒற்றை வாக்கியத்தில் அவளின் மனம் புரிந்து போனது எதிர்முனையில் இருந்தவனுக்கு.
“அவன் நல்லவன் இல்லைன்னு நான் சொல்லலையே. ஆனா அவனுக்கும் உன்னை நிஜமா பிடிச்சிருக்குன்னு எப்படித் தெரியும்?” விசாரிக்கும் தோரணையை விடவில்லை.
“கொஞ்சம் போலீஸ் மூளையை விட்டுட்டு எனக்கு அண்ணனா பேசுங்க.”
நேத்ராவின் வெளிப்படையான சலிப்பில், “கண்மணி, ஓர் அண்ணனா இருக்கப் போய்த் தான் எனக்கு இந்தச் சந்தேகமே வருது. ஆதி என்ன புதுசாவா புதுச்சேரிக்கு வர்றான் ஊரைச் சுத்திப் பார்க்க? அதுவும் நாலு நாளா?” என நறுக்கென்று கேட்டான்.
அதுவரையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த நெஞ்சத்தின் தித்திப்பெல்லாம் குறைந்து போக, அவ்விடத்தில் கசப்பு குடியேறியது. துருவன் தேவையில்லாமல் எதையும் சொல்ல மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். அதுவரையில் ஆட்கொண்டிருந்த படபடப்பெல்லாம் மெல்லக் குறைய ஆரம்பித்தது.
“நான் உன்னைக் குழப்பறதுக்குச் சொல்லலை கண்மணி. சட்டென முடிவு செஞ்சு நீ ஏமாந்திடக் கூடாது என்கிற அக்கறையில சொல்லறேன். நாங்க காலேஜ்ல ஹாக்கி விளையாட நிறையத் தடவை புதுச்சேரிக்குப் போயிருக்கோம். அவனும் நல்லா விளையாடுவான்.”
துருவன் பேசப் பேச அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. பின்னே எதற்காக இங்கேயே தங்கிக் கொண்டான்? ‘ஒருவேளை... ஒருவேளை... தனக்காக இங்கேயே தங்கிக் கொண்டானோ?’ மீண்டும் நெஞ்சத்தின் படபடப்பு அதிகரித்தது. தித்திப்புக் கூட ஆரம்பித்தது.
அவனுக்காக அவளே நெஞ்சில் வாதாடுகிறாள் என்றால் அவனை இழக்க அவள் விரும்பவில்லை என்று அவளுக்குத் தெளிவானது. பழகிய இந்தக் குறுகிய காலத்தில் அவள் மனதை இவ்வளவு ஆக்கரமித்துக் கொண்டானா? அவள் மேலேயே ஆத்திரம் பொங்கியது.
“ஆதி சும்மா நாலு நாளையெல்லாம் வேஸ்ட் பண்ணற ஆளு கிடையாது. அவன் இப்போ தீவிரமா ஒரு கேஸைப் பார்த்துட்டு இருக்கான். அவனோட அடுத்த டார்கெட் வானவில் நகைக்கடை.”
அதுவரையில் பந்தயத்தில் ஓடும் குதிரையைப் போல் தடதடத்துக் கொண்டிருந்த இதயம் அதைக் கேட்டதும் கோபத்தில் எரிமலையைப் போல் கொந்தளிக்க ஆரம்பித்தது.
பின்னே கல்லைப் போல் பறந்து வந்த சொற்கள் பதுக்கி வைத்திருந்த நேசக் கூட்டின் மீது மோதினால் அவளால் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலுமா என்ன? அவளின் நேசமணிகள் சில்லுச் சில்லாகச் சிதறி அவளைச் சின்னா பின்னமாக்கியது.
மயக்கம் வரும் போலிருந்தது அவளுக்கு. அப்படியே காரை ஓரம் கட்டிவிட்டாள். கட்டுப்பாட்டை இழந்து விழிகள் கரையுடைந்தன. வெகுநாட்கள் கழித்துக் கண்ணீர் சிந்துகிறாள். கண்ணீர் கன்னம் வழியே வழிந்து கீழிறங்கியது.
“அண்ணா என்ன சொல்லறீங்க?” அவளின் கமறிய குரலில் அவள் அழுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் துருவன். அவளுக்கு ஆதிநந்தனை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டான்.
“கண்மணி, அழறியா?” அவனது கேள்விக்கு அவளிடமிருந்து பதிலில்லை.
“அவசரப்படாம நிதானமா முடிவு செய். நான் பாட்டிக்கிட்ட எதுவும் சொல்லலை. நீயும் இப்போதைக்கு எதுவும் சொல்லாத... அதுவுமில்லாம...” அவன் தயங்கி நிறுத்த,
“அண்ணா, சொல்லுங்க. அதுவுமில்லாம என்ன ஆனாலும் அதைத் தாங்கிக்கிற மனப்பக்குவம் எனக்கு இருக்கு. அது உங்களுக்கு நல்லாவே தெரியும்” என அவனைப் பேசுமாறு ஊக்குவித்தாள்.
“ஆதிக்கு ஸ்வப்னா என்கிற பொண்ணோட கல்யாணம் முடிவாகியிருக்காம். பொண்ணோட அப்பா பெருமையாப் பேசிக்கிட்டு இருந்ததை நானே கேட்டேன்” என்றதும் தலையெல்லாம் கிறுகிறுவென்று சுத்த ஆரம்பித்துவிட்டது அவளுக்கு.
ஸ்வப்னா யாரென்று அவளுக்குத் தெரியுமே. கப்பலில் கூட அட்டையாக ஆதிநந்தனை ஒட்டிக் கொண்டு இருந்தாளே. இவனும் எதுவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் துருவன் சொல்வது எல்லாம் உண்மையோ?
அவளது குணமறிந்து மேலும் ஐந்து நிமிடங்கள் ஆறுதலாகப் பேசிவிட்டு அழைப்பை வைத்தான் துருவன். அழைப்பை வைத்தது கூட அறியாமல் சற்றுநேரம் அழுது தீர்த்தவளுக்கு நாழிகைகள் விரைந்தோட மெள்ள நெஞ்சம் தீயாய் தகிக்க ஆரம்பித்தது.
பின்னே சிவனே என்று தன் வழியில் சென்று கொண்டிருந்தவளிடம் அவனாக வந்து நட்பு பாராட்டினான். நூல் பிடித்துக் கொண்டு அப்படியே தொடர்ந்து அவள் மனதையும் குழப்பி அவளை இப்படி ஒரு இக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டானே? மூளை இயங்க மறுத்தது.
ஒருவேளை அவன் தன் காரில் வந்து அமர்ந்ததே திட்டமிட்டுச் செய்த செயலோ? மனம் வேண்டாத சிந்தனைக்குள் சிக்கிக் கொள்ள, காரை விருட்டென்று கிளப்பிக் கொண்டு போய் வீட்டில் நிறுத்தியவள் பெயருக்கு எதையோ உண்டுவிட்டுப் பாட்டியிடம் தூக்கம் வருகிறது என விரைவிலேயே தன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மேலிருந்து கீழிறங்கும் நீருடன் அவள் கண்ணீரும் பயணம் செய்தது. தண்ணீரால் மேனியின் அழுக்கு நீங்கியதைப் போல் கண்ணீரால் அவள் மன வேதனையும் தீர்ந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படியே சற்றுநேரம் நீரில் நின்றிருந்தவளுக்குச் சிந்திக்கும் திறன் மீண்டிருந்தது.
இவனை எவ்வளவு நாளாகத் தெரியும்? இவனிடம் ஏமாறுவதற்கு அவள் ஒன்றும் முதுகெலும்பு இல்லாதவள் அல்ல. மடமடவென்று உடையை மாற்றிக் கொண்டவள், பாட்டியின் அறையை எட்டிப் பார்த்தாள்.
அறையில் இரவு விளக்கின் வெளிச்சம் மட்டும் பரவியிருக்க, மெள்ளச் சத்தம் செய்யாமல் வெளிவாயிலுக்கு வந்து மாடி அறையை ஏறிட்டாள். ஆதிநந்தன் வந்துவிட்டதற்கு அடையாளமாக அவன் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, விடுவிடுவென்று மேலே ஏறிச் சென்றாள்.
தட் தட்டென்று மெதுவாக அவன் தங்கியிருக்கும் அறையின் கதவைத் தட்டினாலும் அதில் அவசரம் பொதிந்திருப்பதை உள்ளிருந்தவனால் உணர முடிந்தது.
பங்கஜம்மாளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று தான் முதலில் அவனுக்குத் தோன்றியது. விரைந்து சென்று அவன் கதவைத் திறக்க, கோப பெருமூச்சுகளுடன் நேத்ரா நின்றிருப்பதைக் காண முடிந்தது.
“என்ன நேத்ரா, என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” அவன் அக்கறையுடன் வினவ, ‘உன்னை விட வேறு பிரச்சனை எனக்கு என்ன இருக்கக் கூடும்?’ என அவள் விழிகள் குற்றம் சாட்டின.
“புதுச்சேரிக்கு ஏற்கனவே வந்திருக்கிறதை ஏன் சொல்லலை?” அதட்டலாக வெளிவந்த கேள்வியில்,
“நீ கேட்கவே இல்லையே?” என இதழ் வளைத்துச் சிரித்தான்.
அவன் புன்னகையில் உள்ளம் கொதிக்க ஆரம்பிக்க, “ஏற்கனவே வந்த ஊரை எதுக்குச் சுத்திப் பார்க்கணும்னு என்னைக் கூட்டிட்டுப் போய் என் டைமை வேஸ்ட் பண்ணினீங்க ?” என முறைத்தாள்.
“ஏற்கனவே பார்த்த ஊர்னா திரும்பவும் சுத்திப் பார்க்கக் கூடாதா என்ன?” அவன் கேலியைக் கைவிடவில்லை.
“அதுக்கு ஏன் என்கிட்ட வரணும். நீங்களே போயிருக்க வேண்டியது தானே? என்னமோ நல்லவன் மாதிரி சீனைப் போட்டு ஏமாத்திட்டு.” அவள் பேசிக் கொண்டே செல்ல, அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளது வலது கையைப் பிடித்து தன்னருகே இழுத்தவன், படபடக்கும் விழிகளையும், துடிக்கும் இதழ்களையும் ஆழ்ந்து போய்ப் பார்த்தான்.
அவளைச் சாந்தப்படுத்தவே அப்படி அருகில் இழுத்தான். ஆனால் அவளது அருகாமையில் அவன் தன் அமைதியை இழந்து நின்றான். மதியையும் சேர்த்து. மேற்கொண்டு இருவரும் யோசிக்கும் முன்னரே அவளைத் தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தவன்,
“ஏன்னு உனக்கு இன்னுமா புரியலை நேத்ரா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதை மறந்துட்டியா? நானே ஞாபகப்படுத்தறேன். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உன்னோட நேரம் செலவழிக்க ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான்.
அவள் செவிகளை அவனின் இதழும், சொற்களும் ஒரே நேரத்தில் தீண்ட, தீடிரென்று பெருமழையாய் அடித்துக் கொட்டியதில் பேச்சற்று நின்றாள். சில கணங்களில் அவன் அணைப்பு மேலும் இறுக, அவளுக்கு மூச்சு முட்டியது.
மெள்ள அவளை விட்டு விலகியவன், அவள் கன்னங்களைப் பற்றினான். அவன் தொடுகை குளிர்ந்த அவள் கன்னங்களில் ஜிவ்வென்று வெப்பதைக் கூட்டியது. அவள் எதிர்பார்க்காத நேரத்தில் படாரென்று குனிந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
‘உனக்காகத் தான் இங்கே வந்தேன். உன்னுடன் நேரம் செலவழிக்கவே இங்குத் தங்கினேன்’ என்று புரிய வைத்துவிடும் வேகத்தில் அப்படி நடந்து கொண்டான்.
அவன் கையைப் பட்டென்று உதறித் தள்ளியவள், அவன் மார்பின் மேல் கை வைத்து தன்னைவிட்டுத் தள்ளினாள். “இதுக்கு என்ன அர்த்தம்?” என அவள் கோபத்துடன் சீற,
“புரியலையா? மிச்சமிருக்கும் வாழ்நாளை உன்னோட கழிக்கணும்னு அர்த்தம்” என அவளை நெருங்கி அவள் கன்னங்களை மீண்டும் பற்றி விழிகளுள் ஊடுருவினான். விழிகளாலேயே அவளது இதயப் பாசறையைத் திறக்க முற்பட்டான்.
மனம் விரும்பினாலும் மூளை முட்டுக்கட்டை போட, “இதை நான் நம்பணும்... நீங்க சொல்லறதையெல்லாம் நம்ப காத்துட்டு இருக்கிற உங்க சொப்பன சுந்தரிகிட்டப் போய்ச் சொல்லுங்க” என ஒரே தள்ளாக அவனைத் தள்ளிவிட்டாள்.
“நீ தானே என் சொப்பன சுந்தரி...” அவன் விடுவதாகயில்லை. அவளை நோக்கி எட்டுகள் வைக்க, “அப்படியே நில்லுங்க. கிட்ட வராதீங்க... ” என வலது கையை முன்னால் நீட்டி அவனைத் தடுத்து நிறுத்தியவள்,
“விடிஞ்சதும் ஊர் போய்ச் சேர்ற வழியைப் பாருங்க. என் கண்ணுல மட்டும் பட்டுடாதீங்க” என வலது கை ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்துவிட்டுத் திரும்பி நகர ஆரம்பித்தாள்.
“நீ தானே கூட்டிட்டு வந்த. நீயே கூட்டிட்டுப் போ...” அவன் குரல் குழைந்து ஒலித்தது.
“முடியாது...” எனச் சிலுப்பிக் கொண்டவாறே படிகளில் இறங்க எத்தனிக்க, “என்னாச்சு நேத்ரா... நான் என் மனசுல இருக்கிறதைச் சொல்லிட்டேன். உனக்கு யோசிக்கவும் டைம் கொடுத்தேன்” என ஒரு நொடி நிறுத்தியவன், “ஒருவேளை யோசிக்க டைம் கொடுத்திருக்கக் கூடாதோ?” எனக் குறுஞ்சிரிப்புடன் வினவினான் ஆதிநந்தன்.
அவனைத் திரும்பப் பார்த்தவளுக்கு அவனின் புன்னகையில் மற்றதெல்லாம் மறந்து போனது. அதில் கட்டுண்டவளாகச் சில நொடிகள் அவனையே பார்த்திருந்தாள்.
“பார்க்க ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கேனா?” அவன் இடது கண்ணை அடித்து அவளைச் சீண்டவும், ‘வேண்டாம்.. வேண்டாம்.. அவனைப் பார்க்காத’ எனத் திரும்பிக் கொண்டாள்.
அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது. இவனைப் பார்த்தால் அவளைக் குழப்பிவிடக் கூடும். அதற்குமேல் நிற்காமல் விடுவிடுவென்று கீழே இறங்கிச் சென்றுவிட்டாள்.
பட்டாம்பூச்சியாய்ப் படபடத்துவிட்டுச் செல்லபவளை இதழோரப் புன்னகையுடன் பார்த்திருந்தவன், ‘என்ன ஆகிவிட்டது இப்போது? ஒருவேளை தான் ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்த விஷயத்தைத் துருவன் சொல்லியிருப்பானோ?’ என எண்ணிச் சிரித்துக் கொண்டான்.
அதனால் சிணுங்குகிறாள் என்று ஆதிநந்தனும் சற்று மெத்தனமாக இருந்துவிட்டான்.
மறுநாள் விடியலில் வெளியில் கேட்ட பேச்சுச் சத்தத்தைத் தொடர்ந்து காரொன்று விர்ரென்று கிளம்பும் ஓசையில் துயில் கலைந்தான் ஆதிநந்தன். இரண்டு தினங்களுக்கு முன்னர் புயலைக் கிளப்பிவிட்டுச் சென்ற நேத்ராவின் சித்தியாக இருக்குமோ என எண்ணிக் கொண்டான்.
சில நொடிகளில் தட்தட்டென்று யாரோ அறையின் கதவைத் தட்டவும் புருவத்தைச் சுருக்கியவாறே போய்த் திறக்க, பங்கஜம்மாள் நின்று கொண்டிருந்தார்.
அவர் சொன்னதைக் கேட்ட பிறகே நேற்றிறவு நேத்ரா உண்மையான கோபத்தில் கொந்தளித்திருக்கிறாள் என்று புரிந்தது.
தொடரும்...
Author: Lavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.