அத்தியாயம் – 19
நேற்று மாலையில் பகிர்ந்து கொண்ட தனிமையின் மிச்ச சொச்ச ஏகாந்தம் இன்னுமே தழுவிக் கொண்டிருந்ததால் ஆதிநந்தன் மற்றும் நேத்ராவுக்கு மறுநாள் பொழுது இனிதாக விடிந்தது. காலையில் பங்கஜம்மாளிடம் பேசியவாறே சாப்பிட்டவர்கள் சீக்கிரமே கிளம்பிவிட்டனர்.
நாளை மதியம் போல் அவர்கள் கிளம்பவேண்டி இருக்கும். அதனால் கிடைக்கும் இந்தத் தனிமையை முழுதாக இரசிக்க வேண்டும் என்று இருவரும் மனதுக்குள் தனித்தனியாக முடிவு செய்திருந்தனர்.
அன்று பிரெஞ்ச் காலனி, ஓல்ட் போர்ட் பியர், சன்ரைஸ் வியூ, தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் எனப் பார்த்துவிட்டு சற்று இளைப்பாறவென்று கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் இயல்பாகப் பெயர் சொல்லி அழைக்கப் பழகியிருந்தனர். அதுவும் ஆதிநந்தன் மேலும் ஒரு படி போய் அவளை ஒருமையில் அழைக்க ஆரம்பித்திருந்தான். எப்போது இது நிகழ்ந்தது என்று இருவருக்கும் தெரியவில்லை. அது ஒரு பொருட்டாகவும் அவர்களுக்குப் படவில்லை.
சிலுசிலுவென்ற கடல் காற்று இருவரையும் தொட்டு ஏதோ சேதி சொல்வதற்கு அவர்களையே சுற்றிக் கொண்டிருந்ததைப் போல் உணர்ந்தனர். அவள் வீட்டைப் பற்றி அக்கறையாய் விசாரித்துத் தெரிந்து கொண்டான்.
தன் தந்தையைப் பற்றி, அவரின் குடும்பம் பற்றி என நிறையப் பகிர்ந்து கொண்டாள். அவனை மேலும் அறுத்தது போதும் என்ற முடிவில் துருவனைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தாள் நேத்ரா. துருவனைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவளால் நிறுத்தவே முடியாது என்பதை புரிந்து கொண்டான் ஆதிநந்தன்.
“ஆதி, ஒருவகையில உங்க அத்தை பொண்ணு, மித்ரா துருவன் அண்ணாவை மீட் பண்ண நானும் ஒரு காரணமாகிட்டேன் என நினைக்கிறேன்” என்றதும், ‘நீ என்ன சொல்கிறாய்?’ என்பதைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“அது நான் பண்ணின கலாட்டாவால பயந்து போய் துருவ் அண்ணனுக்கு மித்ரா ஃபோன் பண்ணினா” என்றதும்,
“காதல் எங்கே எப்போ யாருக்கு வரும் எனச் சொல்ல முடியாது நேத்ரா. அது திடீர்னு நிகழ்ந்திடும்” என உணர்ந்து சொன்னவனைக் குறுகுறுவென்று நோக்கினாள். ஆரம்பத்தில் இருந்ததைப் போல் இவனுக்கு இப்போது கோபமெல்லாம் இல்லை போலும் என எண்ணிக் கொண்டாள்.
“அவங்க ஒண்ணு சேரணும்னு இருந்தா உன்னால இல்லைனாலும் வேற எங்காவது எப்படியாவது மீட் பண்ணியிருப்பாங்க.” மீண்டும் ஆழ்ந்து போய்ச் சொன்னவனை அதற்கு மேல் அவளால் பார்க்க முடியவில்லை. பார்வையை விலக்கிக் கொண்டாள்.
“அம்மா இல்லைன்னு எனக்குள்ள இருக்கிற அந்த வெற்றிடத்தை யாரும் உணர மாட்டாங்க ஆதி. இவ்வளவு ஏன் அதை அறிய கூட மாட்டாங்க. அம்மா இருந்திருந்தா அவங்ககிட்ட போய் என் கஷ்டத்தையெல்லாம் பேசி அழவாவது செஞ்சிருக்கலாம் என நான் நினைக்காத நாளே இல்லை. எனக்கு அதற்கும் கொடுத்து வைக்கலை.”
திடீரென்று தன் அந்தரங்கத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தவளை இமைக்காமல் நோக்கினான். அவன் கண்களில் அவள் வேதனையின் வலி தெரிந்தது. அவள் பேச பேச நெஞ்சின் மேல் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதைப் போல் உணர்ந்தான் ஆதிநந்தன். அவளை இப்படி ஒரு கோலத்தில் அவனால் பார்க்கவே முடியவில்லை.
அவளை அணைத்து ஆறுதல் கூறு என மனமும் மூளையும் ஒருசேர கட்டளையிட, நிராயுதபணியாக நின்றான். அதற்கு மேல் அவளைப் பார்த்தால் கட்டுப்பாட்டை மீறிவிடுவோமோ என்ற பயத்தில் உடனே தலையைத் திருப்பிக் கடலை வெறித்தவாறே, “சாரி.. நேத்ரா.. நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப என நான் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை” என உரைத்தான்.
“நீங்க கூட என்னைப் பத்தி எதுவும் தெரியாம ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க இல்ல... என்கிட்ட கேட்கணும்னு கூடத் தோணலை... ஏன்னா நான் யாரோ ஒரு பெண். அப்படித் தானே? எனக்கு அது தான் ரொம்ப வலிச்சது ஆதி.” சற்றும் நாசுக்குப் பார்க்காமல் மன வருத்தத்தைக் கொட்டினாள்.
அவள் சொற்கள் அவன் மனதை சுரீரென்று பதம் பார்க்க, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தான். ஆரம்பத்திலிருந்தே அவளிடம் தேவையில்லாமல் கோபம் கொண்டு எதை எதையோ பேசிவிட்டான். அதற்கு வருந்தவும் செய்தான்.
ஆனால் அது வாழ்நாள் முழுமைக்கும் அவனைத் தொடர்ந்து வந்து நிம்மதியை வேட்டையாடுவது உறுதி.
“இதே உங்க வீட்டுப் பெண்ணா இருந்தா அப்படியே டக்கென ஒரு முடிவுக்கு வந்திடுவீங்களா? எனக்குன்னு வரிஞ்சு கட்டிட்டு வர யாருமே இல்லைன்னு உங்களை மாதிரி நிறையப் பேர் ஃபீல் பண்ண வச்சிருக்காங்க...” மீண்டும் சாட்டையைச் சுழற்றினாள்.
“நேத்ரா..!” அவனுக்குப் பேசுவதற்கு நா எழவில்லை.
“யாரோ வீட்டுப் பெண் இல்லையா? அப்படித் தான் பேசத் தோணும்...” அவளை முடிக்க விடவில்லை.
இடையிட்டு, “நேத்ரா நான் செஞ்சதுக்கு எவ்வளவு சாரி சொன்னாலும் நான் சொன்னது, செஞ்சது எல்லாம் இல்லைன்னு ஆகாது. அதனால் உன் பிரச்சனையை இப்போ சொல்லேன். நான் கேட்டுக்கிறேன்” எனக் கரகரத்தக் குரலில் சொன்னான்.
மீண்டும் மடை திறந்த வெள்ளமென அவனிடம் கொட்டிவிட்டாள்.
கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் நேத்ராவை பீர் வாங்கிக் கொண்டு வரச் சொன்னதாகச் சொல்லித் துருவனிடம் சென்று அழுதாள். அவன் கோபத்தில் தைய தக்க என்று குதித்தான். அவர்களை ஒரு கை பார்த்துவிடப் போவதாகக் கொதிக்க,
“அண்ணா, உங்களுக்குத் தமிழரசி மேடம் பத்தித் தெரியுமே. நான் பிரச்சனை செய்யாமலேயே அப்பாகிட்ட சொல்லித் திட்டுவாங்க. அப்பாவுக்கு என்னைப் பிடிக்க விடாம செய்யணும் என்கிறதை மட்டும் ஒரே குறிக்கோளா வச்சுட்டு இருக்காங்க.
இப்போ இந்தப் பிரச்சனை அவர் காது வரைக்கும் போச்சு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க” என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல, துருவனின் கோபம் மட்டும் குறையவில்லை, உடன் சேர்ந்து அவன் மனமும் உருகிப் போனது.
“அதுவுமில்லாம, நீங்க இப்போ போலீஸ் ஆகணும்னு படிச்சுட்டு இருக்கீங்க. வேற காலேஜ் பசங்களைப் போய் மிரட்டினா அது உங்களுக்குப் பிரச்சனையில முடிய வாய்ப்பிருக்கு” என மேற்கொண்டு அக்கறையாய் பேசவும், ‘அடடா, இந்த அன்புத் தங்கைக்குத் தன் மேலே எவ்வளவு பாசம்?’ என அதில் வீழந்துவிட்டான்.
“சரி... அவங்ககிட்ட இது தான் கடைசின்னு சொல்லிடு. அதற்குமேல தொந்தரவு செஞ்சா அப்பா பேரைச் சொல்லு” என அவன் அறிவுரை வழங்க, “என்னைத் தன் பொண்ணுன்னு எங்கேயும் வெளியில சொல்லிக்காத அவர் பெயரை எல்லாம் நானும் சொல்ல மாட்டேன்” என்றாள் வீராவேசத்துடன் நேத்ரா.
“சரி சரி, ரொம்பவும் டயலாக் பேசாத. இந்த ஒரு தடவை தான் வாங்கித் தருவேன்... சொல்லிட்டேன்” என அவள் கேட்ட மதுபானமான பீர் பாட்டிலை வாங்கித் தந்தான் துருவன்.
நேத்ராவோ அதை வாங்கி மடமடவென்று அருந்திவிட்டுத் தன் தந்தை மற்றும் தமிழரசி வசிக்கும் வீட்டுக்குச் சென்று அவர்களைத் திட்டித் தீர்த்துவிட்டாள்.
பார்க்கும் இடங்களில் எல்லாம் சோமசுந்தரமும் தமிழரசியும் அவர்களின் புதல்வன் அபினவ் மட்டுமே புகைப்படங்களில் காட்சியாளித்தனர். அவர்கள் மட்டுமே சோமசுந்தரத்தின் குடும்பம் என்று பேசினார்கள்.
என்ன தான் அவளுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றாலும் தன் தந்தைக்கு அவளைப் பற்றிய எண்ணம் சிறிதும் இல்லையா? அவருக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள் என்று தோன்றவில்லையா என்று மறுகினாள். நாளடைவில் அவளது ஏக்கம் கோபமாக உருமாறிப் போயிருந்தது.
அவள் சோமசுந்தரத்தின் மகள் என்று ஊருக்குத் தெரியப்படுத்தப் போவதாகவும் அவரை ரோட்டுக்கு இழுக்கப் போவதாகவும் வார்த்தைகள் முற்றிப் போய்த் தமிழரசியிடம் சவால் விட்டிருந்தாள் நேத்ரா.
அதன் தாக்கமே இப்படி மது அருந்திவிட்டு அவள் மனதில் உள்ளதையெல்லாம் வெளியில் கொட்ட வைத்தது. குடியின் போதையில் அவர்களுக்குத் தன் மேல் அக்கறையில்லை என்றும் பாசம் இல்லை என்றும் புலம்பித் தள்ளிய நேத்ரா, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
அவள் செய்தது சோமசுந்தரத்துக்குப் பெருத்த தலையிறக்கமாகிப் போனது. செய்திதாள்களில் ‘மகளை ஒதுக்கிவிட்டாரா?’ என அவரைப் பற்றி எதிர்மறையாகச் செய்திகள் வந்தன. அது இன்னுமே சோமசுந்தரத்துக்கு அவமானமாகிப் போனது.
நேத்ரா நினைத்தது நிறைவேறியது என்றாலும் அவள் மயக்கம் தெளிந்ததும் அவளைத் திட்டித் தீர்த்துவிட்டார் சோமசுந்தரம். கிடைத்தது சந்தர்ப்பம் என்று தமிழரசியும் கணவனை உசுப்பேத்திவிட்டார்.
“இந்த மாதிரி குணம் இருக்கிறவளை யார் தான் பிள்ளை என ஏத்துக்குவாங்க?” என வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் கணவனின் மனதில் பிடித்தமின்மையை ஏற்றினார்.
இறுதியாக அவளைத் தன் பெண் இல்லை என்றும் எக்காலத்திலும் அவளைத் தன் பெண்ணாகக் கருதப்போவதில்லை என்றும் கோபத்தில் படபடத்தார் சோமசுந்தரம். அந்தப் பதின் வயது பெண்ணின் மனம் பெரிய அடியைச் சந்தித்தது.
“நானும் பாவம் பார்த்துச் சின்னப் பொண்ணுன்ணு அமைதியா இருந்தா என்னவெல்லாம் பண்ணி வச்சிருக்க? இனி உன்னை விடமாட்டேன்” எனக் கிட்டிய வாய்ப்பைத் தமிழரசி விடவில்லை.
அதிலிருந்து அவளைத் தொடர்ந்து கண்காணிக்க ஆட்களை நியமித்தார் தமிழரசி. துருவன் தான் அவளுக்கு மதுபானம் வாங்கித் தந்தான் என்பதை அறிந்ததும் சோமசுந்தரம் அவனை அழைத்துப் பேசி அவனை எச்சரித்தார்.
அதிர்ந்து போன துருவன் அவன் மதுபானம் வாங்கித் தந்த உண்மையான காரணத்தைச் சொல்லிவிட்டான். அதற்கும், “பொய்க்காரி.. டிராமா குவீன்” என்ற திட்டுகள் தமிழரசியிடம் இருந்து நேத்ராவுக்குக் கிடைத்தன.
விஷயமறிந்ததும் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று நேத்ராவின் செவிகள் புளித்துப் போகும் வரையில் அவளைத் திட்டித் தள்ளிய துருவன், அவளுடன் சில மாதங்களுக்குப் பேசவேயில்லை.
அதுமட்டுமில்லாமல் அந்தச் சமயத்தில் அவன் தீவிரமாக இந்தியக் குடிமைப் பணிக்குத் தயாராகி முதல் கட்டத் தேர்வை எழுதுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு அழைப்பு ஒன்று வர, அவசரமாக அவன் எடுத்துப் பேசினான். எதிர்முறையில் இருந்த பெண், “சாரி.. நான் கண்மணியோட.. ஐ மீன் நேத்ராவோட ஃப்ரெண்ட் மித்ரா பேசறேன். சந்தியாவுக்குக் கூப்பிட்டேன். அவ ஃபோன் எடுக்கலை. அதான் உங்களுக்குக் கூப்பிட்டேன். பிளீஸ் கொஞ்சம் இங்க வர முடியுமா? எனக்குப் பயமாயிருக்கு” என்றாள் மித்ரா.
துருவனுக்கு ஏதோ சரியில்லை என்று புரிய, “சொல்லுங்க மித்ரா.. என்ன ஆச்சு?” எனப் பேசியவாறே கிளம்பிவிட்டான்.
“அது.. இந்த ஒரு வாரமா கொஞ்ச மூட் அப்செட்டா இருந்தா கண்மணி. இன்னைக்குக் காலையில் இருந்து அழுதுட்டு இருக்கா. இப்போ தான் பார்த்தேன். அவ அழறப்போ கண்ணீருக்குப் பதிலா ரத்தமா வருது” என்றதும், “வாட்?” எனப் பதறிப் போனான் துருவன்.
விடுதியின் முன்னால் தன் இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு நேத்ராவுக்காகக் காத்திருந்தான் துருவன். அங்கே தான் மித்ராவை முதன் முதலில் பார்த்தான் அவன். அவன் வந்தது தெரிந்தும் நேத்ரா கீழே இறங்கியே வரவில்லை. எப்படியோ மித்ரா கெஞ்சிக் கூத்தாடி அவளை மனமிறங்க வைத்தாள். மாடியை விட்டும்.
அழுது ஓய்ந்து போயிருந்த நேத்ராவை எதிர்கொண்ட துருவன் அவள் கண்ணீரைப் பற்றிக் கேட்க, “கொஞ்ச மாசமாவே இப்படி இருக்கு” என முறைத்துக் கொண்டு பதில் சொன்னாள்.
“அப்போவே ஏன் சொல்லலை?” என அவன் கோபத்துடன் கேட்க, “யார்கிட்ட சொல்லறது? எனக்குன்னு சொல்லறதுக்கு யார் இருக்காங்க? பாட்டிகிட்டே சொன்னா பயந்துடுவாங்க” எனப் படபடவென்று பொரிந்தாள்.
அவனுக்கு அவள் நிலைமை புரிய, “என்கிட்ட சொல்லி இருக்கலாமே கண்மணி” என்றவனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. சிறுவயது முதல் நேத்ராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் எதற்கும் உடைந்து போய்ப் பார்த்ததில்லை.
இதுவரையில் அவள் திடமாக இருக்கிறாள் என அவன் நினைத்தது தவறோ? அவள் தன் உள்ளத்துக் குமுறல்களை வெளியில் கொட்டவே மதுபானம் அருந்தியிருக்கிறாள் என்றும் புரிந்தது. உடன்பிறப்பாக இருந்து அவளுக்கு அவன் தான் வேண்டியதைச் செய்ய வேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டான்.
“நீங்க என்னோட பேசறதே இல்லை. நான் எதுக்கு உங்ககிட்டே என் விஷயம் பத்திப் பேசணும்?” என ரோசத்துடன் பொரிந்தாள் நேத்ரா.
அவளின் பிடிவாத குணத்தைப் பற்றி நன்கு அறிவான் துருவன். நீ என்னுடன் பேசவில்லை, கண்டுகொள்ளவில்லை என்றால் நான் ஏன் என் விஷயம் பற்றி உன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் உடையவள்.
இதையே அவள் தந்தையிடம் கடைப்பிடிக்கிறாள் என்று புரிந்தவனுக்கு அவனிடமும் அதைச் செயல்படுத்துவாள் என்று ஏன் புரியாமல் போனது. அதற்குமேல் துருவன் தாமதிக்கவில்லை.
அவன் அன்னையை வரவழைத்து அவள் கேட்டுக் கொண்டவாறே பங்கஜம்மாளுக்குத் தெரிவிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் அனைத்துப் பரிசோதனைகளும் செய்து பார்த்தார். இறுதியில் ஹிமோலாகிரியா (haemolacria) என்ற அரிய வகை மருத்துவ நிலை அவளுக்கு இருப்பது தெரிய வந்தது.
இரண்டு மூன்று மாதங்களாகத் தான் முதல் முறையாக அவளுக்கு அப்படி ரத்தம் போன்ற கண்ணீர் வெளியேறியது. உடலில் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தனர் மருத்துவர்கள்.
இது போன்ற சிவப்புக் கண்ணீர் மாதவிடாய் நாட்களில் மட்டும் வெளியேறுகிறது எனப் பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தது. அதற்கு ஆங்கிலத்தில் ‘ஆக்குலர் விகேரியஸ் மென்சுரேஷன்’ என்று சொல்வார்கள்.
உயிருக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று அவளுக்குத் தைரியமளித்த மருத்துவர்கள் அவளுக்குக் கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைத்தனர். அவள் அதை எடுக்க ஆரம்பித்த பின்னர் மூன்று மாதங்கள் கழித்து அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்குச் சிவப்புக் கண்ணீர் வருவது நின்றுவிட்டது என்பதை உறுதி செய்தனர்.
ஆகவே அவள் விரும்பினால் தொடர்ந்து கருத்தடை மாத்திரையைச் சாப்பிடலாம் என்று சொல்லவும் அதன்படி இதுவரையில் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். இடையில் விட்டுவிட்டால் மீண்டும் சிகப்புக் கண்ணீர் வந்துவிடுமோ என்ற பயத்தில் அதை நிறுத்தவேயில்லை.
நேத்ரா இதையெல்லாம் ஏன் அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. அவளுக்குச் சொல்ல வேண்டும் போலிருந்தது. மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே அவனிடம் கொட்டிவிட வேண்டும் என்று துடித்தாள்.
அவளுக்கு இருக்கும் பிரச்சனையால் தான் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கருத்தடை மாத்திரையைச் சாப்பிட நேரிட்டது. உண்மையைச் சொன்னவளுக்குக் கண்களில் கண்ணீர் அப்படி இப்படி என்று வெளியில் சிந்துவதற்குத் தயாராக இருந்தது.
“பாட்டிகிட்ட இதையெல்லாம் சொல்லவே பயமா இருந்தது. எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அவங்களும் பயந்திடுவாங்க. நல்லவேளை கருத்தடை மாத்திரையைத் தந்தாங்க.”
அதைப் பார்த்துத் தான் அருண் அவளைத் தவறாக எடை போட்டுவிட்டான். ஆதிநந்தனின் கோபத்துக்கும் தூபம் போட்டுவிட்டான்.
மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் இன்னுமே அவளுக்கு மற்றவர்களின் முன்னால் அழுகை வரவே வராது. எங்கே தான் கேலிக் கூத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்கிற தயக்கத்தில் அழவேமாட்டாள்.
‘சரியான கல் நெஞ்சுக்காரியாக இருப்பாள் போல’ எனச் சில மாதங்களுக்கு முன் தான் நினைத்துக் கொண்டது ஆதிநந்தனின் நினைவில் வந்து போனது. அக்கணத்தில் ஒருவித வெறுப்பு அவன் மேலேயே தோன்றியது.
ஒருவரை நோகடிப்பதே தவறு. இதில் துன்பத்தில் உழன்று கொண்டிருந்தவளுக்கு மேலும் வேதனையை அல்லவா கூட்டிவிட்டான். அவனுக்கு மன்னிப்பே கிடையாது என்ற குற்றக் குறுகுறுப்பு அவனை ஆட்கொண்டது.
இப்படியெல்லாம் பிரச்சனை ஒரு பெண்ணுக்கு வரும் என்று கூட அவனுக்குத் தெரியாது மெத்தப் படித்தவன், பெரிய வேலையில் இருக்கிறவன் என இறுமாந்திருந்தவனுக்கு அவள் பேசியதும் மண்டையில் ஓங்கி ஒன்று அடித்ததைப் போலிருந்தது.
“இதைப் பத்தி யார்கிட்டே பேசறதுன்னு கூட எனக்கு அப்போ தெரியலை. ஆரம்பத்துல எங்கே என் அம்மாவைப் போலவே நானும் செத்துப் போகப் போறேனோ என ரொம்பவும் பயந்திருக்கேன் ஆதி. அதனால அழவே பயப்படுவேன்.”
சொற்கள் அவள் உதடுகள் தாண்டி வெளியில் வந்த அடுத்தக் கணம் அவள் அப்போது துடிப்பதைப் போலிருக்க, அதற்குமேல் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் மூளை என்ன ஏது என்று பகுத்தறிந்து செயல்படும் முன்னால் கைகள் அவளைச் சட்டென இழுத்து அணைத்திருந்தன.
சற்றுநேரம் இருவருக்கும் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற சுரணைக் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். அவன் செய்கை அவளின் மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிட்டிருந்ததை அவன் உணரவேயில்லை.
அவளே தன்னுணர்வு பெற்று மெல்ல அவனை விட்டு விலக, அவனும் தடை செய்யவில்லை. விலகி எதுவும் நிகழாதது போல் அமர்ந்திருந்தான்.
“கூடவே பழகின நிறையப் பேர் என் மேலே அன்பு வைக்கலை. என்னைத் தப்பான கண்ணோட்டத்துல பார்த்தாங்க. ஃப்ரெண்ட்டா பழகின அருண் கூட என்கிட்ட எந்த விளக்கமும் கேட்கலை. ஆனா நீங்க செஞ்சது, பேசினது தப்புன்னு உணர்ந்ததும் என்ன ஏதுன்னு விசாரிக்காம உடனே என்கிட்டே மன்னிப்பு கேட்டீங்க ஆதி. தேங்க்ஸ்”
அவள் பேசப் பேச, இவனுக்குக் கண்களின் விளிம்பில் நீர் தேங்க ஆரம்பித்தது. “ஐயம். ரியலி சாரிமா...” என அவன் கமறலான குரலில் சொல்ல,
“ஆதி, எனக்கு இந்த உலகத்தை விட்டு யாருமே தொடாத எல்லை வரைக்கும் ஓடணும் என அடிக்கடி தோணும். இதையெல்லாம் விட்டு யார் கையிலேயும் அகப்படாம... எந்தத் தளைகளும் என்னை இறுக்காம... யாரும் என்னை ஜட்ஜ் பண்ணாம...” அவளை அவன் முடிக்க விடவில்லை.
“உன்னால எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடிட்டே இருக்க முடியும் சொல்லு ?” என அவள் கண்களை ஊடுருவ, “எவ்வளவு நாளைக்கு முடியுமோ அவ்வளவு நாளைக்கு” எனத் தோள்களைக் குலுக்கி கொண்டாள்.
“அந்த எல்லை வரைக்கும் நானும் உன்னோடு வரட்டுமா?” மனதில் தோன்றியதை வடிகட்டாமல் அவளிடம் துணிந்து கொட்டிவிட்டான் ஆதிநந்தன். வசீகரமாகப் புன்னகை ஒன்றை அவளை நோக்கி வீசியவாறே.
அவன் புன்னகையின் வீச்சில் பாவை அவள் தடுமாறிப் போனாள். வசீகரிக்கப்பட்டவளாக அவனையே இமைக்காது நோக்கியவள், “அது லாலி பாப் சாப்பிடற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லைங்க சார்” என்றாள்.
“ஆனா எனக்கு லாலி பாப் சாப்பிடறது ரொம்பக் கஷ்டம் தெரியுமா? ரொம்ப நேரம் கையில தூக்கி வச்சுட்டு இருக்கணும் இல்ல?” எனக் கேலியாகப் பதிலுரைக்க, அவளது இதயத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ட்ரம்ஸ் வாசித்தார்.
உள்ளே ஒரு கச்சேரியே ஓடிக் கொண்டிருக்க, எதையும் வெளிக்காட்டாமல், “அப்போ அடி வாங்கத் தயாரா இருக்கீங்க?” எனச் சிரித்தாள்.
“அடி என்ன பெரிய அடி, உயிரையே கொடுக்கிறேன்” என அவன் கண்சிமிட்டிச் சிரிக்க, “உண்மை தெரியாம என்னைத் திட்டினதுக்கு ரொம்பவும் எக்ஸ்ட்ராவா வாக்குறுதி கொடுக்காதீங்க” என அவள் கலகலவென்று சிரித்தாள். சிரித்து அவள் உள்ளத்துப் படபடப்பை மறைக்க முயன்றாளோ?
அவனின் இதழ் சிரிப்பு அப்படியே உறைந்து போக அவளையே வெறித்துப் பார்த்தான்.
“தப்புப் பண்ணினதுக்குத் தர்ற வாக்குறுதி மாதிரியா உனக்குத் தெரியுது?” நறுக்கென்று வெளிவந்த அவனது கேள்வியில், அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். இதுவா, அதுவா என்ற கேள்விக்கு அந்தக் கணத்தில் அவளுக்கு விடை கிட்டிவிட்டது.
நாழிகைகள் மௌனமாகக் கரைந்து கொண்டிருக்க, அலைகள் மட்டும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டிருந்தன.
“என்ன ஆச்சு நேத்ரா? என்னைப் பிடிக்கலையா?” சொற்களுக்கு வலிக்குமோ என மெல்ல வார்த்தைகளை அவன் உச்சரிக்க, இவன் உண்மையில் தன்னிடம் மனதைத் திறந்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. பெண்ணவளின் தேகமெங்கும் சிலிர்த்தது.
‘இவனைப் பிடித்திருக்கிறதா?’ இதே இடத்தில் வேறு யாராவது இப்படிப் பேசியிருந்தால் உடனே எழுந்து சென்றிருப்பாள் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிடுவாள் . இவனை ஏன் பிடித்தது? எதற்குப் பிடித்தது என்றெல்லாம் அவளுக்குப் புரியவில்லை. புரியவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
மனம் தித்திப்பில் மிதந்தது. அவள் ஒருவித மயக்கத்தில் அமர்ந்திருக்க, "நேத்ரா...” என அவனது கரகரவென்று ஒலித்த குரலில் ஏக்கம் இழையோடியது புரிந்தது.
‘தனக்காக இவ்வளவு ஏங்குகிறானா?’ அவள் மனம் குலுங்கியது. அவனுக்குத் தன்னைப் பற்றிய உண்மையும் தெரிந்துவிட்டது. இனியும் அவளுக்கு என்ன தயக்கம்? அவள் மனமும் இனிமையில் தத்தளிக்கிறது என்பதைச் சொல்லிவிடலாமா?
அவள் எண்ணங்களுக்குத் தடையாக அவளது கைப்பேசி இசைத்தது. கைப்பேசியை எடுத்துப் பார்க்க, ‘துருவ் அண்ணா’ என்ற பெயர் ஒளிர்ந்தது. ஆதிநந்தனும் விழிகளை நகர்த்தித் திரையைப் பார்த்தான்.
“நான் சொன்னதை யோசி நேத்ரா... இப்போ எனக்கு வேலையிருக்கு. முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு வந்திடறேன்” என எழுந்து பேண்ட்டில் ஒட்டியிருந்த மணலைத் தட்டினான்.
நெறுநெறுவென்று இருந்த மணல் துகள்கள் சிப்பியின் உள்ளே நுழைகையில் உறுத்தலை தாங்கிக் கொள்ள இயலாமல் எவ்வாறு தனது திசுக்களை அந்த மணல் துகள்களின் மேலே பரப்பி விடுகிறதோ அதே போன்றதொரு உணர்வை தோற்றுவித்தன அவனது வார்த்தைகள்.
அவன் பேசிய வார்த்தைகள் உறுத்தலைத் தந்தாலும் அதில் அவள் இதயத்தைப் பதிய வைத்துத் தாக்கத்தைக் குறைக்க முயன்றாள். ஆனால் நாளடைவில் அதுவே முத்தாக உருப்பெறப் போகிறது என்பதை உணர்ந்தாளா? அவ்வாறே ஆனது அவளது நிலையும்.
அவள் மோனநிலையில் இருந்து விடுபடுவதற்குள் துருவனின் அழைப்பு நின்று போயிருந்தது. ஆதிநந்தனுடன் சேர்ந்து அவளும் எழுந்து கொண்டாள்.
இருவரும் கார் நின்றிருக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பிக்க, மீண்டும் துருவனின் அழைப்பு வந்தது.
“நீ பேசு நேத்ரா... அப்புறம் பார்க்கலாம்” என அங்கிருந்து கிளம்பிவிட்டான். மனதை திறந்து விட்டாலும் எங்கே எதிர்மறையாக எதையாவது சொல்லிவிடுவாளோ என்று தான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டான் ஆதிநந்தன்.
அவளிடம் ஒரு வேகத்தில் மனதை திறந்துவிட்டாலும் ஒருவேளை அவள் மறுப்பைத் தெரிவித்துவிட்டால் எப்படி இயங்க வேண்டும் என்று அவனுக்கு யோசிக்க வேண்டியிருந்தது. அதனால் மின்னலென நகர்ந்துவிட்டான்.
செல்லும் அவனையே பார்த்தவாறு காரினுள் ஏறியவள், அழைப்பை எடுத்து, “துருவ் அண்ணா” என உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.
அதன்பிறகு அவன் சொன்ன விஷயங்களைக் கேட்டு அப்படியே வாயடைத்துப் போனாள். அவன் சொன்ன விஷயங்கள் அவள் மொத்த உலகையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. கடந்து சென்ற நான்கு நாட்களையும் அப்படியே கலையச் செய்துவிட்டானே அந்த இராட்சசன்?
தொடரும்...
Author: Lavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.