அத்தியாயம் – 18
அன்று காலையில் அவர்கள் வீட்டின் முன்னால் கார் ஒன்று வந்து நின்றது. மாடியில் இருந்து கீழே இறங்கியவாறே காரிலிருந்து இறங்கிய பெண்மணியை வியப்புடன் பார்த்தான் ஆதிநந்தன்.
அப்பெண்மணி பெரிய அரசியல்வாதியின் மனைவி என்று அவனுக்குத் தெரியும். ‘இந்த அதிகாலை வேளையில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்ற யோசனையுடன் அப்படியே வெளிவாயிலில் நின்றுவிட்டான்.
“எங்க அந்த டிராமா குவீன்?” என அவர் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பது அவன் காதில் நன்றாகவே விழுந்தது.
‘டிராமா குவீனா?’ எனப் புருவம் சுருக்க, “என்னை அப்படிக் கூப்பிட வேண்டாம் என எத்தனை தடவை உங்ககிட்டே சொல்லறது?” எனக் கோபத்துடன் சொன்னவாறே அவர் முன்னால் வந்து நின்றாள் நேத்ரா.
“அப்புறம் எப்படிக் கூப்பிடறது? உன் நல்லதுக்குச் சொன்னா எதையாவது கேட்கறியா? ஏதாவது சொன்னா, இங்க வந்து பாட்டிக்கிட்ட நாடகம் போடறது. டிராமா குவீன் இல்லாம வேற என்ன?” என்று அப்பெண்மணி பேச,
“தமிழரசி... எதற்கு வந்ததும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணற?” என்றவாறே அங்கே பங்கஜம்மாள் வந்தார்.
வரவேற்பறையில் நின்று பேசியதால் அவர்கள் பேசுவது அனைத்தும் ஆதிநந்தனின் காதில் விழுந்தன.
‘டிராமா குவீன்’ என்று சொன்னதும் நேத்ராவுக்கு எதற்கு அன்று அவ்வளவு கோபம் வந்தது என்று வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆதிநந்தனுக்குப் புரிந்தது. மிகவும் வருத்தப்பட்டான்.
“அத்தை, நீங்க கொடுக்கிற இடம் தான் இவ இப்படி எல்லாம் ஆடறா. இவ அப்பாக்குத் தெரிஞ்சா அவர் சங்கடப்படுவார்” எனத் தமிழரசி சொல்ல, “அவர் சங்கடப்படலைன்னாலும் நீங்க சங்கடப்பட வச்சிடுவீங்க” என வாய்க்குள் முணுமுணுத்தாள் நேத்ரா.
“தமிழரசி, அவளைக் கொஞ்சம் அவ இஷ்டத்துக்கு விடேன். நான் பார்த்துக்கிறேன்” என பங்கஜம்மாள் சொல்லவும், “அவ இஷ்டதுக்கு விட்டதால் காலேஜ் படிக்கிறப்போ என்ன பண்ணினா அத்தை?” என அடக்கப்பட்ட சீற்றத்துடன் சொன்னார் தமிழரசி.
“அப்போ புரியாத வயசு” என பங்கஜம்மாள் பேத்திக்குப் பரிந்து கொண்டு வர, அதைக் காதில் வாங்காதவாறு,
“இவ பண்ணினதுல இவ அப்பாக்கு தான் சங்கடம் அத்தை. எவ்வளவு வருஷமா கட்டிக் காத்த மானம் மரியாதை எல்லாம் இவளால் கெட்டுடுச்சு. எப்படியோ என் கண்காணிப்புல இருக்கிறதால நல்லபடியா போய்ட்டு இருக்கு. முதல்ல அந்த துருவனை...” என மேலும் சத்தமாகச் பேச ஆரம்பிக்க,
“அதுல துருவ் அண்ணாவோட தப்பு எதுவுமில்லை. அவரைப் பத்திப் பேசாதீங்க” என ஆத்திரத்துடன் சொன்னாள் நேத்ரா. கிட்டதட்ட சீறினாள் என்றே சொல்லலாம். துருவனைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொல்ல விடமாட்டேன் என்கிறாளே என லேசாகப் பொறாமையுணர்வு எட்டிப் பார்த்தது ஆதிநந்தனுக்கு.
“எப்பவோ நடந்து முடிஞ்சதைப் பேசி எதுவும் ஆகப் போறதில்லை தமிழரசி. அவளைத் தனியா விடச் சொன்னா நீயும் கேட்கறதாயில்லை. சும்மா சும்மா அவளைக் குறை சொல்லிட்டே இருக்க. அவளுக்குக் கல்யாணம் பண்ணனும் என அவனுக்கும் அக்கறை எதுவும் இல்லை” என இடையிட்டார் பங்கஜம்மாள்.
“நாங்க சொல்லற மாப்பிள்ளை யாரையும் உங்களுக்குப் பிடிக்கிறதில்லை” எனத் தமிழரசி முணுமுணுக்க, “நான் சொல்லற மாப்பிள்ளையை மட்டும் உங்களுக்குப் பிடிக்குதா என்ன?” எனக் கசப்புடன் பதிலுக்குச் சண்டையிட்டார் பங்கஜம்மாள்.
வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆதிநந்தனின் மனம் தடக்தடக்கென்று அடிக்க ஆரம்பித்தது. இவளுக்குக் கல்யாணம் பேசுகிறார்களா?
“நீங்க என்ன அவளுக்கு மாப்பிள்ளையா பார்க்கறீங்க? உங்க அரசியல் ஆதாயத்துக்கு ஒருத்தனைத் தேடறீங்க.” பங்கஜம்மாள் தொடர்ந்து மனதில் உள்ளத்தை அப்படியே வெளியிட,
“நான் யாரையும் கல்யாணம் பண்ணறதா இல்லை. அதுவும் முக்கியமா நீங்க சொல்லற யாரையும்” என நேத்ரா தமிழரசியிடம் ஆவேசத்துடன் சொன்னாள்.
“கேட்டீங்க இல்லை... நீங்களே பாருங்க இவளோட திமிரை. நான் சொல்லறப்போ எதுவும் நம்ப மாட்டீங்க” என்றவாறே அதுவரையில் கையில் பற்றியிருந்த அலைபேசியைக் காதில் வைத்தார் தமிழரசி.
நேத்ராவுக்குப் புரிந்து போனது. எப்பொழுதும் போல் தன்னைக் கெட்டவளாகத் தந்தையிடம் சித்தரிக்கும் நாடகத்தைத் துவங்கிவிட்டார். இனி தான் என்ன பேசினாலும் எடுபடாது என்று புரியவும் மௌனமானாள்.
“பாருங்க, உங்க முன்னாடி மட்டும் நல்ல பிள்ளையா வாயைத் திறக்கறதில்லை” என அதற்கும் இட்டுகட்டிச் சொன்னார் தமிழரசி.
நேத்ரா, ‘என்னைக் காப்பற்றுங்கள்’ என்பதைப் போல் பாட்டியை இரகசியப் பார்வை பார்க்க, “இங்கே கொடு அவன்கிட்டே நான் பேசறேன்” என அலைபேசியைப் பங்கஜம்மாள் வாங்கினார்.
“எப்படிப்பா இருக்க?” எனச் சம்பிரதாயமாக விசாரித்தவர், “இங்க பாரு... கண்மணிக்கு என்ன விருப்பமோ விடு. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் அவ நாடகம் போடறதில்லை. அவளோட பொறுப்பு என்னோடது. நான் அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளையைப் பார்த்துட்டேன்” எனச் சொல்லி அணுகுண்டு ஒன்றை ஆதிநந்தனின் நெஞ்சில் வீசினார்.
மூச்சு அடைப்பதைப் போலிருந்தது அவனுக்கு. மாப்பிள்ளை பார்த்தாகிவிட்டதா? அப்போ அவன் நிலைமை? சில நாட்களாகத் தான் அவளைப் பற்றிய எண்ணங்கள் அவனுள் மொட்டுவிட ஆரம்பித்திருந்தன. ஆனால் அவளை இவ்வளவு பிடிக்கும் என்று அவனே இதுவரையில் உணர்ந்ததில்லை.
நெஞ்சில் அடித்துப் புரிய வைத்துவிட்டார் பங்கஜம்மாள். அவன் உடனே ஏதாவது செய்ய வேண்டும்.
“பாட்டி” என நேத்ரா பங்கஜம்மாளிடம் செல்ல, “நீ கவலைப்படாம எப்போதும் போல வேலையையும் உன் குடும்பத்தையும் மட்டும் பாரு” என அவர் மகனிடம் சொன்னதில் குற்றம் சாட்டும் தொனி மட்டுமே நிறைந்திருந்தது.
அதற்கு மறுமுனையில் இருந்தவர் என்ன சொன்னாரோ, “கண்மணியை நான் பார்த்துக்கிறேன். அவளைத் தொடர்ந்து வந்து தொல்லை செய்யாதீங்க. இப்போ வைக்கிறேன்” என மகனிடம் சொன்னாலும் பார்வை என்னவோ மருமகளிடம் இருந்தது.
மகனிடம் பேசி முடித்தவர், அலைபேசியை அணைத்துத் தமிழரசியிடம் தர, “நான் கிளம்பறேன்” என வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“நீ இப்போ இந்த இடத்துல நின்னு பேசறதுக்கு முழுக் காரணம் கண்மணியோட அம்மா மட்டும் தான் என்கிறதைப் புரிஞ்சுக்கோ தமிழரசி” எனப் பங்கஜம்மாள் சொல்வதைக் காதில் கேட்காதவாறு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் தமிழரசி.
வாயிலின் அருகே நின்று திரும்பி, “உங்களுக்கு உங்க பேத்தி மட்டும் முக்கியம். பேரனைப் பத்தி ஒரு வார்த்தைக் கேட்டீங்களா?” எனத் தமிழரசி குறைபட,
“அவனை ஒரு தடவையாது இங்க வர்றப்போ கூட்டிட்டு வந்திருக்கியா? பாட்டியோட முகம் அவனுக்கு ஞாபகம் கூட இல்லை” என அவரிடமே ஏவுகணையைத் திருப்பினார் பெரியவர்.
தமிழரசியை எதுவும் பங்கஜம்மாள் உபசரிக்கக் கூட இல்லை என்பது ஆதிநந்தனின் கவனத்தில் பதிந்தது. வெடுக்கெனத் திரும்பி வெளியில் வந்த தமிழரசி அங்கே நின்று கொண்டிருந்த ஆதிநந்தனைப் பார்த்ததும், “நீ யாரு?” என மரியாதையற்று சிடுசிடுத்தார்.
வீட்டினுள் காட்ட முடியாத ஆத்திரத்தை அவனிடத்தில் கொட்டினார். அவன் வாய்திறந்து பதில் சொல்லும் முன்னால், “வேலைக்காரனுக்கு இங்க என்ன வேலை? வீட்டு விஷயத்தை ஒட்டுக் கேட்கறியா? வெளில ஏதாவது சொல்லி நியூஸ் ஆக்கலாம் எனப் பார்க்கிறியா? உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்” என மாமியார் மேலிருந்த கோபத்தை அவன் மேல் கொட்டிக் கவிழ்த்துவிட்டு,
“போய்க் கார் கதவைத் திற” என மேலும் தன் அதிகாரத்தைக் காட்ட, நேத்ரா கோபமாகச் சிற்றன்னையை நோக்கி ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.
அதற்குள், “அவர் என்னோட விருந்தாளி. யார் என்னன்னு தெரியாம மரியாதையில்லாம பேச வேண்டாம் தமிழரசி” என பங்கஜம்மாள் முந்திக் கொண்டார். அவர் குரலிலிருந்தே அவரின் பிடித்தமின்னமையை உணர்ந்து கொண்டார் போலும் தமிழரசி.
நடப்பது எதுவும் ஆதிநந்தனுக்குப் பிடிக்கவில்லை. துருவனை ஒரு சொல் சொல்ல விடமால் இவரிடம் மல்லுக்கு நின்ற நேத்ராவுக்குத் தன்னைப் பற்றிப் பேசுகையில் மட்டும் எதுவும் சொல்லத் தோன்றவில்லையா?
அப்போது மட்டும் எப்படிச் சீறிக் கொண்டு வந்தாள் எனப் பொறாமையுடன் சேர்ந்து வேதனையும் நெஞ்சைக் கவ்வின.
‘அப்படியென்றால் இவளுக்குத் தான் ஒரு பொருட்டல்ல’ என்ற எண்ணம் அவன் நேச நெஞ்சைக் கத்தியால் கீறியது. ஆகையினால் பங்கஜம்மாள் அவனுக்குச் சாதகமாகப் பேசினாலும் அவன் மனம் குளிர்ந்தபாடில்லை.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனை மேலும் கீழும் பார்த்த தமிழரசி பட்டென்று காரில் ஏறிச் சென்றுவிட்டார். புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அனைவருக்கும்.
ஆதிநந்தனுக்கோ, உருவாகிய புயல் கரையைக் கடந்தும் கடக்காமலும் உள்ளுக்குள் பல சேதங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ‘அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளையைப் பார்த்துட்டேன்’ என பங்கஜம்மாள் சொல்லியது விடாமல் அவனுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
அது ஒரு பக்கம் என்றால் நேத்ரா அவனுக்காகப் பரிந்து பேசாதது மறுபுறம் வலியை உண்டாக்கியது. கூடவே நேத்ரா பெரிய அரசியல்வாதியின் மகள் என்றும் புரிந்து போனது. இவள் தனக்குக் கிடைப்பாளா என்ற சஞ்சலமும் உண்டானது.
இதே யோசனையில் உழன்று கொண்டிருந்தவன் உணவு மேஜையில் அமைதியாக அமர்ந்திருக்க, அதைக் கண்ட நேத்ராவுக்கு என்னவோ போலிருந்தது. தமிழரசி அப்படி மரியாதையில்லாமல் அவனிடம் பேசியது சற்றும் பிடிக்கவில்லை.
அவள் வாய் திறக்கும் முன்னரே பங்கஜம்மாள் அவரைக் கண்டிக்கவும் அமைதியாகிவிட்டாள். இல்லையென்றால் அதையும் அவள் தந்தையிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏதோ ஒன்றை வத்தி வைத்திருப்பார் தமிழரசி.
ஆனாலும் ஆதிநந்தனிடம் அவள் மன்னிப்பு வேண்டுவதே நியாயம் என நேத்ரா எண்ணிக் கொண்டிருக்க, அவள் மனதைப் படித்ததைப் போல், “என்ன ஆதி, அமைதியா இருக்க? தமிழரசி பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காத” என பங்கஜம்மாள் பேச்சை ஆரம்பித்தார்.
பெரியவரை ஏறிட்டுப் பார்த்து, மலங்க மலங்க விழித்தான் ஆதிநந்தன். அவனுக்கு அதெல்லாம் மூளைக்கு எட்டிருந்தால் அல்லவா அவன் அதைப்பற்றி வருத்தப்பட? நேத்ராவுக்குத் திருமணம் என்ற வார்த்தைகள் மட்டுமே அவனைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
‘இவள் எனக்கானவள். இவளை வேறு ஒருவருக்கு எப்படி விட்டுக் கொடுக்க முடியும். அவள் இல்லையென்றால் அவனால் மூச்சு விட முடியுமா என்ன?’
சாப்பிட்டு முடித்துக் காரில் ஏறிய பின்னரும் அவன் அமைதியாக வரவும் நேத்ரவுக்குத் தான் மனம் அடித்துக் கொண்டது. காரை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தியவாறே, சற்றுநேரத்தில் அவன் சரியாகிவிடுவான் என எதிர்பார்த்தாள்.
அவனை இயல்பு நிலைக்குத் திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தேவைக்கும் அதிகமாகவே பேசிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
ஆனால் அவள் கூட்டிச் சென்ற மனக்குள விநாயகர் கோவிலாகட்டும், லைட் ஹவுஸ் ஆகட்டும், மகாத்மா காந்தி சிலையாகட்டும், அல்லது, பிரெஞ்ச் போர் நினைவுச் சின்னமாகட்டும் எதுவும் அவன் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.
ஏதோ ஓர் இயந்திரம் போல் அவள் சொன்னதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் மனதில் இருந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். எப்படி இவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவிப்பது என்று.
அப்படியே சொன்னாலும் இவள் தன்னை ஏற்றுக் கொள்வாளா? பயம் பாதி, தயக்கம் மீதி என அவன் நேரம் நரகமாய்க் கழிந்தது.
இறுதியில் அவனைப் பிராமினேட் கடற்கரைக்கு அழைத்துச் சென்ற நேத்ரா நெறுநெறுவென்ற மணலில் கடலைப் பார்த்தவாறு நடந்து சென்றவனின் கையைத் திடுமெனப் பற்றித் தடுத்து நிறுத்தினாள். “ஆதி, ஏன் இப்படி அமைதியாக இருக்கீங்க? ஏதாவது பேசுங்க” என்றாள்.
அவளின் இந்த உரிமையான திடீர் தொடுதலில் திடுக்கிட்டுப் போய் அவளை வியப்புடன் நோக்கினான். குளிர்ந்த அவளின் விரல்களின் தொடுகை அவன் நெஞ்சில் ஒருவித குளுமையைப் பரப்பியது. இந்த நிமிடம் அப்படியே நீளாதா எனத் தோன்ற அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
அது அவளுக்குள் இன்னும் பயத்தைக் கிளப்ப, “சாரி ஆதி! அவங்க பேசினதை மனசுல வச்சுக்காதீங்க” என அவள் இதழ்கள் அசைய அசைய, ‘நீ இப்படிச் சமாதானம் செய்வதானால் அடிக்கடி மௌனம் கொள்வேன் பெண்ணே’ என அவசரமாக நெஞ்சத்து அறைகள் கவிதை வாசித்தன.
“என் அம்மாவோட கணவர் வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்” என அவன் கையை விட்டுவிட்டு எங்கோ வெறித்துப் பார்த்தாள். ‘ஐயோ.. விடாதே.. விடாதே..’ என அவன் நெஞ்சம் கூப்பாடு போடுவது அவளுக்குக் கேட்கவேயில்லை. சாவி கொடுத்த பொம்மையைப் போல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
உண்மையே! நேத்ராவின் தந்தை, சோமசுந்தரம் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள பங்கஜம்மாள் ஒப்புக் கொள்ளவேயில்லை. அவர் காதலுக்கு எதிரி என்றெல்லாம் இல்லை. என்ன சோமசுந்தரம் விரும்பிய பெண்ணான தமிழரசி பெரிய அரசியல்வாதியின் மகளாக இருந்தார்.
மகனும் அரசியலில் நுழையத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்க அதை முறியடிக்க வேண்டும் என்ற ஆவேசம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. சோமசுந்தரம் அரசியலில் நுழைந்து சேவை செய்வதில் அவர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் தமிழரசியின் தந்தையுடன் கூட்டுச் சேர்வதில் சுத்தமாக விருப்பமில்லை. ஏனெனில் அவர் ஒரு கறை படிந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தார் .
பார்க்கப் போனால் சோமசுந்தரத்தை இந்திய குடிமைப் பணிக்குப் பரீட்சை எழுதச் சொல்லி அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்யச் சொன்னார்கள் பங்கஜம்மாளும் அவர் கணவரும். அதிலெல்லாம் சோமசுந்தரத்துக்கு நாட்டம் இருக்கவில்லை.
கல்லூரிக் காலத்தில் இருந்தே விரும்பிய தமிழரசியின் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மேற்படிப்பு படித்து சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் சோமசுந்தரம்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்த பங்கஜம்மாளின் கணவருக்கு தமிழரசியை மகன் விரும்புவது தெரிய வருகையில் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார். எப்படியோ சோமசுந்தரத்தை மிரட்டி, பணிய வைத்து நேத்ராவின் அன்னை, தேவியைத் திருமணம் செய்ய வைத்தார்கள்.
ஆரம்பத்தில் நேத்ராவின் அன்னை, தேவிக்குக் கணவரின் பாராமுகம் ஏனென்று புரியவில்லை. தெரிய வருகையில் அவரது உலகமே இயங்க மறுத்தது. தான் எங்கோ ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார். அன்றிலிருந்து பங்கஜம்மாளிடம் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தார்.
அந்தச் சமயத்தில் தேவிக்குத் தான் தாய்மை அடைந்தது தெரிய வருகையில் துடித்துப் போனார். மனதில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு கணவன் தன்னுடன் வாழ்ந்திருக்கிறான் எனத் தன்னைப் பற்றியே இழிவாக எண்ண ஆரம்பித்தார்.
ஆனாலும் தன் வாரிசு அவர் வயிற்றில் வளர்வது குறித்து அவருக்கு ஒருவித பூரிப்பும் ஒரு மூலையில் பதுங்கியிருந்தது. அதனால் தன் மன உளைச்சலைக் கடாசிவிட்டு, தன் உடல்நலனில் அக்கறை கொள்ள ஆரம்பித்தார் தேவி.
எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. குழந்தைப் பிறப்புக்கு என்று தாய் வீடு சென்ற பின்னர் சென்னைக்குத் திரும்பி வரப் போவதில்லை என்ற முடிவைச் சோமசுந்தரத்திடம் சொன்னார் தேவி.
அவர் தாராளமாகத் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளலாம் என இறுதியாக முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் தேவி. தன் குழந்தையை அவராகத் தனித்து நின்று வளர்க்க வேண்டும் என்ற முடிவுடன் தாய் வீடு சென்றார். ஆனால் விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது போலும்.
குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீடு திரும்புகையில் கார் விபத்தொன்றில் நேத்ராவின் அன்னை, தேவியின் கை நசுங்கி இடது கையை இழக்க நேர்ந்தது.
நின்றிருந்த காரின் மேல் வேறொரு கார் வந்து சரியாக தேவி அமர்ந்திருந்த பக்கம் மோதியதில் அவருக்கு மட்டும் பலத்த காயம். மற்றவர்கள் ஒருவருக்கும் பெரிதாக எந்த அடியுமில்லை.
நேத்ராவின் அன்னை வழிப் பாட்டி, தாத்தா மற்றும் ஓட்டுநருக்கு சிறு சிறு காயங்கள் மட்டுமே. நேத்ராவை அவள் பாட்டி வைத்திருந்ததால் ஒரு சின்னச் சிராய்ப்பு கூட இல்லாமல் தப்பிக்க முடிந்தது.
அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து, நேத்ராவையும், தேவியையும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி நடையாக நடந்தார் பங்கஜம்மாள். ஆனால் தேவி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் பள்ளிப் படிப்பைக் காஞ்சிபுரத்தில் இருக்கும் பாட்டி-தாத்தாவின் வீட்டில் சில நாட்கள் படித்தாள் நேத்ரா.
தான் விரும்பிய தமிழரசியை நேத்ராவின் தந்தை, சோமசுந்தரம் மறுமணம் செய்து கொண்டதால் அது பிடிக்காமல் பங்கஜம்மாள் மற்றும் அவரது கணவர் அங்கிருந்து ஏற்கனவே புதுச்சேரிக்குக் கிளம்பிவிட்டிருந்தனர்.
பங்கஜம்மாள் எவ்வளவோ போராடிப் பார்த்தும் தேவி மசிவதாக இல்லை.
நேத்ராவின் தந்தை, சோமசுந்தரமும், நேத்ராவை வளர்ப்பதற்குப் பணம் தருவதாகப் பலமுறை சொல்லியும் தேவியின் தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவர் தரும் பணத்தைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன்பிறகு சோமசுந்தரமும் பெரிதாக வற்புறுத்தவில்லை.
நாளடைவில் சோமசுந்தரத்தின் அரசியல் வாழ்க்கையும் சூடு பிடிக்க ஆரம்பிக்க, அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
மீண்டும் மீண்டும் தேவியின் வீட்டுக்கு நடையாக நடந்து விடுமுறையில் மட்டுமாவது நேத்ராவை தங்களிடம் அனுப்பி வைக்குமாறு மன்றாடினார் பங்கஜம்மாள்.
தங்களுக்குப் பின்னர் நேத்ராவுக்கு ஆதரவு வேண்டுமே என்ற எண்ணத்திலும், வயதானவர்கள் மேல் எழுந்த பச்சாதாபத்திலும் தங்கள் மகள் தேவியிடம் பேசி இதற்குச் சம்மதிக்க வைத்தனர் பெரியவர்கள்.
ஆகவே நேத்ரா மூன்றாவது படிக்கும் பொழுதிலிருந்து புதுச்சேரிக்கு விடுமுறையில் அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் நேத்ராவுக்கு அவர்களைப் பிடிக்கவேயில்லை. அவர்கள் தான் தன் தந்தைக்கு வேறொரு திருமணம் செய்து வைத்துவிட்டனர் என்ற எண்ணத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.
நாளடைவில் ஓரளவுக்கு விவரம் தெரிய வருகையில் இவர்களால் தான் தன் அன்னைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்ற கோபம் கனன்றது. அவர்கள் முதலிலேயே காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் தான் பிறக்காமலேயே இருந்திருப்போம் என்ற சுயபச்சாதாபம் எழுந்தது.
ஆனால் அங்கே துருவனும் சந்தியாவும் இருந்ததால் போகப் போகப் புதுச்சேரிக்கு வருவது பிடிக்க ஆரம்பித்தது. அப்படி அவளின் பத்தாவது வயதில் விடுமுறையில் வந்தபொழுது தான் அலையில் சிக்கிய மகளைக் காப்பற்றவென்று தேவி தன் உயிரை விட்டார்.
அதன்பிறகு நேத்ரா விடுமுறைக்கு புதுச்சேரிக்கு வருகையில் எல்லாம் அவள் தந்தை சோமசுந்தரத்துடன் தமிழரசியும் அவர்களின் ஒரே புதல்வனும் வந்து இவளைச் சென்னையில் படிக்க வைக்கப் போவதாக அழைப்பார்கள். வருடத்தில் மூன்று முறை மட்டுமே அவளால் தந்தையைப் பார்க்க முடிந்தது.
‘வர முடியாது’ எனத் திட்டவட்டமாக நேத்ரா மறுத்துவிட்டாள். அவள் தாத்தா -பாட்டியின் ஆதரவும் இருந்ததால் சோமசுந்தரத்தால் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. அவள் தந்தை அப்போது அரசியலில் பெரும்புள்ளியாகத் திகழ்ந்தார்.
அவ்வப்பொழுது தன் முதல் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டதாக சோமசுந்தரம் சொல்லி வருத்தப்படுவதைக் கண்ட அவரது இரண்டாவது மனைவி, தமிழரசி அவர் வேதனையைக் குறைக்கவென்று, அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கணவனைச் சமாதானம் செய்தார்.
அதன்படியே நேத்ராவைப் பராமரிக்கும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லாமே கண்துடைப்பு என்று சிறிது நாட்களிலேயே நேத்ராவுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.
அவள் எது செய்தாலும் அது குற்றமே. தந்தையின் பெயரைக் கெடுத்துவிடுவாள் என்று யாருடனும் அதிகம் நெருங்க விட மாட்டார். அதுவும் அவளது அம்மா வழித் தாத்தா பாட்டி ஒருவரின் பின் ஒருவராக இறக்க நேரிட தமிழரசியின் அதிகாரம் இன்னும் தூள் பறக்க ஆரம்பித்தது.
பங்கஜம்மாள் தனித்து இவளைச் சமாளிக்க முடியாது என்று நேத்ராவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தங்களுடன் நேத்ராவை இருக்க விட்டால் சோமசுந்தரத்துக்கு மகள் மேல் பாசம் பொங்கி, அவள் மேல் அன்பைப் பொழியும் அபாயம் இருப்பதால் அவளைப் பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டார்.
அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வதைப் போன்றதொரு பிம்பத்தைக் கணவனிடத்தில் உருவாக்கி, அவரே அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதைப் போல் நடந்து கொண்டார் தமிழரசி. அதுவும் நேத்ராவைக் கெட்டவளாகச் சித்தரித்து.
“தமிழரசி மேடம் சொல்லறபடி கேட்டு நடக்கலைன்னா அவங்க ஆளுங்ககிட்ட சொல்லி என்னை விடாம துரத்தி அவங்க சொல்லறபடி நடக்க வைப்பாங்க, இல்லையா, அவங்க இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் மிரட்டுவாங்க. அப்படித் தான் முதல் தரம் நீங்க என்னைப் பார்த்தப்போ நடந்தது.
அந்தப் பொண்ணுக்கு உதவ நினைச்சேன். ஆனால் அப்பாவுக்கு ஏதாவது பிரச்சனை ஆகிடும்னு என்னை அந்த இடத்தைவிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. அது உங்க கண்ணுக்குத் தப்பாகப் போயிடுச்சு.
அப்புறம் கப்பல்ல அருண் இறந்ததால என்னை இனிமேல் கப்பலில் வேலை செய்யப் போக வேண்டாம் எனத் தமிழரசி மேடம் சொல்லியிருந்தாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்க நினைச்சு இங்கே பாட்டி வீட்டுக்கு வந்தேன். என்னோட நீங்க வந்து மாட்டிக்கிட்டீங்க.”
அதுவரையில் நடந்ததையெல்லாம் கோர்வையாகவும் சுருக்கமாகவும் நேத்ரா சொல்லி முடித்து ஒருவித எதிர்பார்ப்புடன் அவனை நோக்கிப் புன்னகைத்தாள். அவளுக்குத் துக்கமெல்லாம் இல்லை. இது தான் வாழ்க்கை என்று இயல்பாக எடுத்துக் கொள்ளப் பழகியிருந்தாள். அதனால் தான் அவளால் புன்னகைக்க முடிந்தது.
அந்தப் புன்னகையின் ஒளியில் அப்படியே உறங்கிவிட மாட்டோமா என்று ஏங்கினான் ஆதிநந்தன். மடைதிறந்த வெள்ளமெனப் பேசும் இவளிடம் உன்னைக் காதலிக்கிறேன் என்று இப்போது சொன்னால், ‘என்ன பரிதாபமா? அதான் லவ் வந்திடுச்சா?” எனக் கேட்டாலும் கேட்பாள். ‘ராட்சசி’
நேரம் வருகையில் அவளிடம் மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். “நேத்ரா, நீங்க பீல் பண்ணுற அளவுக்கு எல்லாம் இதுல ஒண்ணுமேயில்லை. உங்க சித்தி...” என அவன் மேற்கொண்டு தொடரும் முன்னர்,
“சித்தி இல்ல. தமிழரசி மேடம்...” என அவனைத் திருத்தினாள். அவள் எந்த அளவுக்கு மனதளவில் அடிபட்டிருந்தால் இப்படிச் சொல்வாள் என வருத்தப்பட்டு பேச்சைத் தொடர்ந்தான் ஆதிநந்தன்.
“அவங்க பேசினது எல்லாம் எனக்குப் பிரச்சனையில்லை. எனக்கு வேலை விஷயமா ஒரு யோசனை ஓடிட்டு இருக்கு. அவ்வளவு தான்” என அவளிடம் இயல்பாக வேறு விஷயங்களைப் பேசியவாறே அவனும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தான்.
ஆனாலும் அன்றிரவு படுக்கையில் சரிந்ததும் மீண்டும் அவனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது. ஒருவேளை இவளுக்கும் அவள் பாட்டி பார்த்த மாப்பிள்ளையைப் பிடித்திருந்தால் என்ன செய்வது?
அவன் அவசரப்பட்டு எதையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது சரி என்றாலும் அவசரப்படாமலும் இருக்க முடியாதே. புதுச்சேரியில் இருந்து கிளம்பும் முன்னர் அவளிடம் தன் மனதைத் திறந்து கூறிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட பிறகே அவனால் கண்ணுறங்க முடிந்தது. அவன் மனதைத் திறக்கும் வாய்ப்பு மறுநாளே கிட்டியது.
தொடரும்...
Author: Lavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.