• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
24
கல்யாண மாலை

ன்று ரஞ்சனியின் வீடு இருக்கும் பெசன்ட் நகரிலேயே சந்திப்பது அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை முறித்துக் கொள்ள.

இனி ஓவர் டு சூப் ஜோடி.

" உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டியா ரஞ்சனி?"

" சொல்லியாச்சு. எங்க அம்மா உங்களோட லைஃப் ஸ்டைலைப் பார்த்துட்டு முன்னாடியே நினைச்சாளாம். எனக்கு சரிப்பட்டு வராதுன்னு."

"......"

"நீங்களே சொல்லுங்கோ, உங்களை மாதிரிதானே, நானும் படிச்சிருக்கேன் வேலைக்குப் போறேன். உங்கம்மா வந்து எங்கிட்ட " உனக்குச் சமைக்கத் தெரியுமா? முரளிக்குக் கீரை மசியல், கத்திரிக்காய் ரசவாங்கின்னா ரொம்பப் பிடிக்கும்னு" சொல்றா. எனக்குப் பிடிச்சதெல்லாம் நான் லிஸ்ட் போட்டா உங்களால சமைக்க முடியுமா?"

"'எத்தனை மணிக்கு எழுந்திருப்ப? நாங்கள்லாம் அஞ்சரை மணிக்கு மேல படுக்கைல இருக்க மாட்டோம்னு' சொல்றா?"

" உங்காத்துல எல்லாரும் சேர்ந்துவிஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுவேளாமே?"

" எனக்கு இந்த மடி, விழுப்பு, தீட்டு, இதை மாதிரி கன்சர்வேட்டிவ் (பழமையான) ஐடியாவெல்லாம் ஐ ஹேட் முரளி. உங்க தங்கை சின்னப் பொண்ணு எப்படி இதுக்கெல்லாம் ஒத்துக்கறா?. நான் எங்கம்மா கிட்ட, "உன் ஐடியாஸை எங்கிட்டத் திணிக்காதேன்னு சொல்லிடுவேன்."

முரளி, "இதெல்லாம்தான் நீ இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்குக் காரணமா?"என்றான்.

"........"

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, "ஓகே, ரஞ்சனி. ஆல் தி பெஸ்ட்" என்றவன் சட்டென்று எழுந்து பில் கவுண்டருக்குச் சென்று இரண்டு கோல்ட் காஃபிக்கும் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியில் நடந்து விட்டான்.

முரளிக்கு மனம் வெறுமையாக இருந்தது. இந்த மணமுறிவுப் பேச்சு ஒருவாரமாக ஓடுவதால் வருத்தப்படும் ஸ்டேஜைக் கடந்துவிட்டான். அவனுக்கும் ரஞ்சனிக்கும் காதல் இல்லைதான். ஆனால் நிச்சயமாக ஈர்ப்பு இருந்தது. வார்த்தைகளோ, செய்கைகளோ தங்கள் மதிப்பைக் கெடுத்து விடக்கூடாது என்பதில் இருவருமே கவனமாக இருந்தனர். ஆனாலும் ரஞ்சனியின் பேச்சில் அவளது அன்னை சுபத்ராவும், அக்கா சஞ்சனாவுமே வியாபித்திருந்தனர். அவர்களால் புரோக்ராம் செய்யப்பட்டதுபோல் பேசுவாள். முரளி, ' எங்கம்மா' என்று ஏதாவது ஆரம்பித்தால் மட்டும் , ' மம்மாஸ் பாய்' என்று கிண்டல் செய்வாள்.

கண்களால் பேசுவதோ, உரிமையான பார்வைகளோ, கண்டதும் காதலோ இல்லாத, பெரியவர்களால், படிப்பு, வேலை, அந்தஸ்து, பின்புலம், தோற்றம், ஜாதகம், லைஃப்ஸ்டைல், GATE ஸ்கோர் முதல் பிளட் குரூப் வரை அலசி ஆராயப்பட்டு, "என் பொண்ணு இப்படி, என் பொண்ணு அப்படி, அவ எப்பவுமே ஸ்கூல் ஃபர்ஸ்ட். காம்பஸ் இண்டர்வியூல அவ காலேஜ்லயே இவளுக்குதான் அதிக சம்பளத்துல வேலை தெரியுமோ?" என்று ரஞ்சனியின் தாய் சுபத்ரா அலட்டலாகக் கூறியதை ரசிக்காவிட்டாலும், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, எந்த இனமாக, மதமாக இருந்தாலும் பெண் கிடைப்பதும், கிடைத்தாலும் சம்மதிப்பதும் கடினமாக இருப்பதால் முரளியின் பெற்றோர் இந்த சம்பந்தத்திற்கு ஒத்துக்கொண்டனர்.

முரளியின் கண்களில் ரஞ்சனியைப் பார்த்ததும் வந்த வெளிச்சமும் ஒரு காரணம். ரஞ்சனிக்கும் முரளியைப் பிடித்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேல் இருபத்தெட்டு வயதில் இவளை விடப் பெரிய கம்பெனியில் டீம் லீடராக இருப்பதும், வருடத்திற்கு அறுபது லட்சரூபாய் பே பேக்கேஜும், ஃபாரின் டிரிப்புகளும் கண்ணைப் பறித்தன.

முரளியின் தாய் துளசி அணிந்திருந்த புடவை, வைரத்தோடு, கெம்பு நெக்லஸ், வைரமுகப்பு எல்லாவற்றையும் எடை போட்ட சுபத்ராவுக்குப் பிடிக்காமல் இருந்தது இரண்டு. ஒன்று அவரது ஆசாரமும், பூஜை புனஸ்காரங்களும். சுபத்ராவும் இதையெல்லாம் கடைபிடித்தாலும், தன் பெண்களை அதற்குப் பழக்கவில்லை. சஞ்சனா பிடுங்கலின்றிக் கல்யாணமாகிக் கலிஃபோர்னியாவுக்குச் சென்று வருஷம் மூன்றாகிறது. இன்னும் ஒருமுறை கூட இந்தியா வரவில்லை.

இரண்டாவது , முரளியின் தங்கை, ப்ரியா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நிஜமாகவே வெள்ளிக்குத்து விளக்குதான். நன்றாகப் பாடுகிறாள். அம்மாவிற்கு உதவினாள். ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாம். காமர்ஸ் படிக்கிறாளாம். ஆங்கில இலக்கியம் படிப்பதுதான் ஆசை என்றாள். இன்டர்நெட்டில் இருக்கும் கதைத் தளங்களில் கதை எழுதுகிறாளாம். அமேசான் லிங்க்கைக் கொடுத்தாள். பெற்றோரின் கண்மணியாகவும், முரளியின் 'ப்ரீத்'தாகவும் இருந்தாள்.
சுபத்ராவிற்கு ஏனோ முதல் பார்வையிலேயே அவளைப் பிடிக்கவில்லை.

முரளியின் தந்தையைப் பெற்ற பாட்டி நல்ல ஆரோக்கியத்துடன் பேத்தியுடன் 'லயன் கிங்' பார்க்கிறார். 'காபாலிகா' பாடும்மா' என்று கூடவே பாடுகிறார். 'யூ என்ஜாய் மை பாய்' என்கிறார் முரளியிடம் (இதென்னடி இந்தக் கிழம் இப்படித் துள்றது?). ஆனால் சீர், பட்சணம், சடங்கு, சம்பிரதாயம் என்று வந்தபோது பிரித்து மேய்ந்து விட்டார். துளசியும், கிருஷ்ணனும் (முரளியின் தந்தை) பெரியவரைப் பேசவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெற்றோரின் சம்மதத்தோடு மொபைல் நம்பர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுப் பேச ஆரம்பித்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த மறுவாரம் முரளி, ரஞ்சனியின் தந்தை சுவாமிநாதனிடம் அவளை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதி கேட்க, அவர் மனைவியின் முகத்தைப் பார்த்தார். அந்த வீட்டின் மெயின் ஸ்விட்ச் எங்கே என்று முரளிக்குப் புரிந்துவிட்டது.

முதன்முதலில் கோ எட் காலேஜுக்குப் பெண்ணை அனுப்புவது போலவும், இவன் என்னவோ ரஞ்சனி மேல் பாயத் தயாராக இருப்பது போலவும் பேசிய சுபத்ரா, ரஞ்சனியைப் பார்த்துக்கொள்ள ஒரு மேனுவல் புக்லெட் மட்டும்தான் கையில் கொடுக்கவில்லை.

முரளியின் பாட்டியும், தங்கையும்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தவர்கள்.
முதலில் தயங்கியவனுக்கு ரஞ்சனியின் அழகும் அருகாமையும் பிடித்துதான் இருந்தது. பிறகு வாரக்கடைசிக்குக் காத்திருக்க ஆரம்பித்தான். என்ன? ஒன்றும் காட்டிக்கொள்ள மாட்டான். கல்லுளிமங்கன்.


எல்லாம் நன்றாகத்தான் சென்றது, இரண்டு குடும்பமும் சேர்ந்து மாப்பிள்ளை பெண்ணுக்கு ஜவுளி வாங்கப் போகும்வரை.
முரளி யோசித்துக்கொண்டே பைக்கை எடுத்தவன், திருவான்மியூரில் உள்ள தன் வீட்டுக்கு வந்தான். அவனது பாட்டிக்கு அவன் இரண்டு நாட்களாக சரியில்லை என்பது புரிந்தது.

அன்று துளசி, கிருஷ்ணன், ப்ரியா மூவரும் ஒரு ரிஸப்ஷனுக்குச் சென்றிருக்க, பாட்டி தனியே இருந்தார்.

"காபி தரட்டுமா முரளி?"

"வேண்டாம் பாட்டி."

" ஏண்டா, உனக்கும் ரஞ்சனிக்கும் சண்டையா?"

"அதெல்லாம் இல்லை" என்றவன் இரண்டே நிமிடத்தில்," ஆமாம் பாட்டி" என்று அவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையையும், அவள் அவளது அம்மாவின் கிளிப்பிள்ளை மாதிரி பேசுவதையும், இந்தக்கல்யாணம் நடக்காது என்பதையும் சொன்னான்.

"இத உங்கம்மாட்ட சொல்லிட்டயோ?"

"இல்லை".

"நான் சொல்றதைக் கேளு. இதை நீயா சொல்லாத. அவாத்துல இருந்து எப்படி தெரிவிக்கறான்னு பார்ப்போம். சித்த பொறுமையா இரு."

"இனிமே மறைச்சு என்னாகப்போறது?"

"உனக்கு ரஞ்சனியைப் பிடிச்சிருக்கோனோ? அவ வேணுமா இல்லையா?"

"ம்ப்ச்.. என்ன பாட்டி நீ? நான் என்ன சொல்லிண்டு இருக்கேன். நீ வேற படுத்தற."

பாட்டி பேரனின் பேச்சைப் பொருட்படுத்தாது, "ரஞ்சனிக்கு உன்னைப் பிடிச்சிருக்கா?"

" அப்படித்தான் நினைச்சிண்டு இருந்தேன். ஆனா, நான் கேட்டதில்லை".

"நாலு மாசமா என்னத்தைடா பேசினேள்? இதுல வாரம் ஒரு ஒஸ்தி ஹோட்டல், கிஃப்ட் வேற."

"பாட்டி" என்று பல்லைக்கடித்தான் முரளி.

" ஓகே, ஓகே. ஆனா நான் சொன்னா மாதிரி அமைதியா இரு. கை கால அலம்பிண்டு வா. தோசை வார்த்துப் போடறேன். மிளகாய்ப்பொடி கிடையாது. சட்னிதான் ."

"அப்ப எனக்குத் தோசையே வேண்டாம்."

"இருக்குடா சும்மா சொன்னேன். ஆமா ரஞ்சனிக்கு தோசை மொளகாப்பொடி பண்ணத் தெரியுமோ?"

"உன்னை…" என்று கோபத்துடன் தொடங்கியவன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான்.

ரஞ்சனியின் வீட்டில், ரஞ்சனி பக்கவாட்டு வராண்டாவில் இருந்த ஜூலாவில் உட்கார்ந்து இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள். கல்யாணத்துக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்க பிளவுஸ், ரிஸப்ஷன் லெஹங்கா, நகைகள் எல்லாம் ரெடி. ஒருசில பேரைத் தவிர எல்லோரையும அழைத்தாயிற்று.

சுபத்ராவும், மூன்று நாட்கள் முன்பு வந்த சஞ்சனாவும் கல்யாணத்தை நிறுத்துவதைப் பற்றிப் பேச சுவாமிநாதனை முரளியின் வீட்டுக்குப் போகச் சொல்லி, நிச்சயப்புடவை, நகை, கூரைப்புடவை (ரவிக்கை தைக்க வந்தது) எல்லாவற்றையும் திருப்பிக்கொடுக்க எடுத்து வைத்தார். ஆனால் நாட்கள் நான்கு கடந்தும் சுவாமிநாதன் அமைதியாக இருந்தார்.

ரஞ்சனிக்கு முரளியைப் பிடித்திருந்தது என்பதையே, அவள் இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருந்தாள். 'என்னதான் முரளி பெற்றோரின் தேர்வாக இருந்தாலும், என் சம்மதத்தையும்தானே கேட்டனர்' என எண்ணிக்கொண்டாள். கடைசி சந்திப்பில் அவனது தீர்க்கமான பார்வையும், தான் சொல்லிய எதற்கும் பதில் தராமல் எழுந்து போனதுமே கண்ணில் நின்றது. படித்து, இஞ்சினீயராகி, இரண்டுமுறை தனியாக அமெரிக்கா கூட சென்று வந்தவள் தன் மனதையே புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள்.

தனக்கு முரளியைப் பிடித்திருக்கிறதா என்பதைவிட அம்மா என்ன சொல்லுவாளோ என்று பள்ளிக் குழந்தையைப்போல் பயந்தாள்.

"ரஞ்சு" என்று அழைத்துக்கொண்டே வந்த தந்தையின் குரல் கேட்டதும் எழுந்து முன் ஹாலுக்குச் சென்றாள்.

"அம்மா எங்க?"

"சஞ்சுவும், அம்மாவும் ஷாப்பிங்."

,"நீ ஏன் டல்லா இருக்க? அழுதியா?"

".........."

"ரஞ்சும்மா நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"சொல்லுங்கோப்பா."

"இந்த மடி, விழுப்பு பாக்கறது, பூஜை பண்றது, ஸ்லோகம் சொல்றது எல்லாம் ஒரு ப்ராக்டிஸ். அது ஒரு சுய ஒழுக்கத்துக்காகதான். இப்ப உங்கம்மா தினமும் விளக்கேத்திக் கோலம்போட்டு, சஷ்டி கவசம் சொல்றாளா இல்லையா? அதுபோல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பழக்கம் இருக்கும்."

"....."

" இப்போ குக்கரி க்ளாஸ்க்கு போனா ஹைஜீன்ங்கற பேர்ல சொல்லிக் குடுக்கறதெல்லாம் காலங்காலமா மடி, ஆச்சாரம்ங்கற பேர், நம்ம பெரியவாள்லாம் கடைபிடிச்சதுதான். சுத்தம்னு ஆரம்பிச்சது சம்பிரதாயமாப் போய் வெறுப்பு வந்துடுத்து."

"......."

"நம்மாத்துல இன்னிக்கு என்ன சமையல்?"

" முருக்கைக்காய் வத்தக்குழம்பும் கீரை மசியலும்."

"ஏன்?"

"சஞ்சுக்குப் பிடிக்கும்னு."

" அதேதான்மா. யாருக்கு என்ன பிடிக்கும்னு பாத்து சமைக்கறதுல அம்மா எக்ஸ்பர்ட். இப்போ எனக்குப் புடிக்கும்னு சிலது சமைக்கறா இல்லையா? அது போல முரளிக்குப் புடிச்சதை நீ கத்துண்டா என்ன தப்பு?"

"....."

"நீ அவனுக்குச் சமமா சம்பாதிக்கறே, சரி. நீங்க வெளில போனபோதெல்லாம் யார் செலவு பண்ணினா?"

"முரளிதான்."

"ஏன் அப்ப மட்டும் நீ சம்பாதிக்கலையா? அது ஒரு உரிமை. வாங்கிக்க உரிமை இருக்கற உனக்கு செய்யறத்துக்கு மனசும் இருக்கணும்."

"....."

"அது போலதான் அந்தப் பொண்ணு ப்ரியாவும். நீ நம்மாத்துல எப்படிச் செல்லமா இருக்கியோ, அவளும் அப்படித்தான். முரளியை விட கிட்டத்தட்ட பத்து வயசு சின்னவ. உனக்கும் அவளைப் பிடிக்கும். ஷி வில் பீ ஏ குட் ஃப்ரெண்ட் ஃபார் யூ தேர்.. அதோட அந்தப் பொண்ணுக்கு வர அந்த மடி, பாட்டு, வேலையெல்லாம் உனக்கு வராதா? கமான், மை ரஞ்சு ஈஸ் வே டூ ஸ்மார்ட்" என்றார்.

"இப்ப நீ ஆபீஸ் போக எத்தனை மணிக்கு எழுந்திருக்கற?"

" ஆறுமணி. அப்போதான் ஏழரை மணிக்கு ஆபீஸ் பஸ்ஸைப் பிடிக்க முடியும்."

"அங்கயும் அதேதான். ஆபீஸ்ல உனக்குப் பிரமோஷன் வந்தா பொறுப்பு கூடறது இல்லையா? அதேபோலதான் கல்யாணமும். மனைவி, நாட்டுப்பெண், மன்னின்னு மூணு போஸ்ட்டு. Be flexible to be successful ரஞ்சு.

"அம்மா?"

"அம்மாக்கு நீ கஷ்டப்படப் போறயோன்னு பயம். அவளை நான் பார்த்துக்கறேன். நீ முரளியைப் பாரு." என்றவர் முரளியின் பாட்டி தன்னிடம் பேசியதை யாரிடமும் சொல்லவில்லை.

ஐந்து நாட்களுக்குப் பிறகு ரஞ்சனியிடமிருந்து ஃபோன், அதுவும் வீடியோ கால். உடனே எடுத்த முரளி ரஞ்சனியைக் கண்ணீருடன் பார்த்து டென்ஷனாகிவிட்டான்.

"ஏய், என்னாச்சு? ஆல் வெல்?"

"ஸாரி முரளி. நாம மீட் பண்ணலாமா?"

" நிஜமாவா? உனக்கு தோசை மொளகாப்பொடி பண்ணத் தெரியுமா?" என்று சிரித்தான்.

ரஞ்சனி " கத்துக்கறேன்" என்றதும் முரளி அடித்த விசிலைக் கேட்ட பாட்டி, சிரித்துக் கொண்டார்.
 

Author: VedhaVishal
Article Title: கல்யாண மாலை
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
75
வீட்டுக்கு இப்படி ஒரு பாட்டி வேணும் 😍🤩
"Be flexible to be successful" superb.
சாதாரண சம்பவங்கள கூட அருமையா உங்க touchla குடுத்திருக்கீங்க. 😛😄😄
 

Anuradha GRSR

New member
Joined
Nov 20, 2024
Messages
17
Thanks....
சின்ன கதை...சிறப்பான கருத்து....
சுஜாதா sir சொல்லற style ல் ..குறைந்த conversation ல ...super narration...
அவருடைய சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் எந்த வித advising tone...dialog இருக்காது...
ஆனா message நச்சென மறக்க முடியாததாக இருக்கும்...

அப்பா பேசியது அருமை....
 
Top