- Joined
- Jun 17, 2024
- Messages
- 23
உளமார நேசிக்கிறேன்! 4
வரிகளுக்கிடையே படிக்கச் சொன்னால், வார்த்தைகளுக்கிடையே படித்துப் பதவுரையும் சொல்லும் வல்லமை பெற்ற மனிதர்களின் பார்வைக் கணைகள், மௌனப் போர்வையை
ஊடுருவியது.
தான் ‘அது அவர் வீடு, அவர் இஷ்டம்’ என்றது மட்டும் ரமணனுக்குத் தெரிந்தால், பார்வையாலேயே பொசுக்கிவிடுவான் என்பதை வசுந்தரா அறிவாள்.
‘ஆனால், உண்மையிலேயே அது அவன் வீடுதானா?’
ரேஷன் கார்டில் குடும்பத் தலைவனாக, முகவரியின் முதல் வரியாக இருப்பவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சொந்தம் கொண்டாடி விட முடியுமா என்ன?
வாடகையா, சொந்தமா என்ற கட்டிட உரிமை சம்பந்தப்பட்டதல்ல இது.
மதுரையில் சுந்தரியின் அகம், கும்பகோணத்தில் ஜெயாவின் ஸ்ரீ நிவாஸம், இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு கார்த்திகை மாதத்தில் வாஸ்து புருஷன் கண் விழித்தபோது கிருஹப்பிரவேசம் செய்த சென்னை அபார்ட்மென்ட் சங்கர்- ஹேமாவினுடை ஃப்ளாட்டாக, இத்தனை ஏன், எங்கோ கண்காணாமல் தாலி கட்டிய உஷாவோடே சென்று தங்கி விட்டதில், அது இப்போது பாலாஜி வீடென பெயர் மாறி இருந்தது.
ஆனால், தன் கல்யாணத்திற்கு முன்பிருந்தே, பன்னிரெண்டு வருடங்களாக அவனே வாடகை கொடுத்துக் குடி இருக்கும் இந்த ஒண்டுக் குடித்தன வீடு மட்டும் இன்னும் ரமணனுடையதாக இல்லாமல் பொதுவுடமையாகவேதான் இருக்கிறது.
ராஜம் பாட்டி காலமாகி, ஹேமா, சங்கர் இருவருமே வேலைக்குச் செல்வதால் அவர்களது குழந்தைகளைப் பார்க்கவென அவ்வப்போது சென்னை செல்லும் சாவித்ரியால், சங்கரின் வீட்டில் இப்படி சகஜமாகப் புழங்க முடியுமா?
அவரவர்களது சொந்தமும் ஞாபகங்களும் பிறந்து, வளர்ந்த வீட்டில் உரிமையும் சீராடலும் சரிதான். யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது, கூடாது.
பெற்றோரின் காலத்துக்குப் பின் பிறந்த வீட்டின் சலுகைகளை, நியாயமான உரிமைகளை, ஆதரவை இழப்பது எத்தனை வலி மிகுந்தது என வசுந்தராவை விட நன்றாக யார் அறிவார்?
பிறந்த வீட்டுக்கு வந்து இறங்கியதுமே, உரிமையை நிலைநாட்டவும் கூட திறமை வேண்டுமே!
இங்கிருக்கும் நேரத்தில் கிடைக்கும் வசதிகளுக்குள் தங்கள் இருப்பை உணர்த்தி உடமையை ஊன்றுவதில் எத்தர்கள். இவர்களுக்காவது பிறந்து, வளர்ந்த வீடு. இந்த நாகராஜன்!
ஒவ்வொரு முறை அவர்கள் வரும்போதும் பெருக்குவது, மெழுகுவ,து முறைவாசல் செய்வது, மராமத்து செலவு , கரன்ட்டுபில், வாடகை என பராமரிக்கும் தங்களோடு சேர்ந்து தங்கள் குழந்தைகளும் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்படுவது போல் தான் உணர்வதை ரமணனிடம் சொல்லவா முடியும்? அப்படியே சொன்னாலும்தான் பெரிதாக என்ன நடந்துவிடும், அந்த பார்வையைத் தவிர?
‘வேலை கழுத்தை நெரிக்கறதுல தீபுவையை என்னாலயே சரியா கவனிக்க முடியலை. இதுல அடுத்தவாளைக் குத்தம் சொல்லுவானேன்?’
அப்படியும் ஒருமுறை சும்மா இராமல், ஜெயா பிரசவத்துக்கு வந்திருந்த சமயம். எல்லோரும் கூடி இருந்தனர்.
காலை வேளையிலேயே மிக்ஸர் சம்புடத்தை நடுவில் வைத்துக்கொண்டு இரண்டாம் டோஸ் காஃபியுடன் எல்லோரும் அரட்டையில் இருந்தனர்.
வீட்டில் மிக்ஸி மட்டுமே உண்டு. அதுவும் கரண்ட் பில்லை கணக்கில் கொண்டு அளவான உபயோகத்தில்தான் என்பதால் சாவித்ரி கல்லுரலில் வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தார்.
முந்தைய நாளே பாலாஜியும் சங்கரும் “ஜெயா, நீ ப்ரெக்னென்ட்தானே, இப்பவே ஏதாவது ஸ்பெஷல் ஐட்டமா கேக்கற, நாங்க சாப்பிடறோம்” என்றிருந்தனர்.
‘மெது வடையும் போளியும் கேளு’ என அவர்களே மெனுவும் கொடுத்தனர். தினப்படி சமையலை வசுந்தரா சமைத்துவிட, இப்போது அவர்கள் கேட்டதைத்தான் சிரமேற்கொண்டு செய்கிறார் சாவித்ரி.
ஊரிலிருந்து வந்தவர்களுக்கு அம்மா கையால் விதவிதமாகச் சாப்பிட ஆசை இருக்கும்தான். அதுவும் வளர் பருவம் முழுதும் அதீதக் கட்டும் செட்டுமாய் இருந்தவர்கள் வேறு. இப்போது வாய்ப்பும் வசதியும் வந்தபின் செய்ய வேண்டியதுதான்.
ஜெயாதான் நிறை மாத கர்ப்பிணி. இந்த சுந்தரியும் ஹேமாவும் கூட மாட உதவலாம்தானே?
வயதுக்கு வந்த பெண்ணையும், பிள்ளையையும் ப(க!)க்கத்திலேயே வைத்துக்கொண்டு நாகராஜனுக்கு ஒவ்வொரு வாய் காஃபியாக ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த சுந்தரியைப் பார்க்கப் பார்க்க வசுந்தராவிற்குப் பற்றிக் கொண்டு வந்தது.
இதற்கும் சாவித்ரி ஒன்றும் தான் பெற்ற பெண்களை உட்கார வைத்து ஆராதிக்கும் ரகம் இல்லை. திருமணத்திற்கு முன் ப்ளஸ் டூவில் இரண்டு முறை கோட் அடித்து வீட்டில் இருந்த ஜெயாவை விரட்டி, விரட்டி வேலை செய்ய வைப்பார்.
என்ன, வசுந்தராவிடம் செல்லுபடியான கெடுபிடிகள் எதுவும் ஹேமாவிடம் எடுபடவில்லை. சோம்பல் ஒரு மிகப் பெரியத் தொற்று வியாதி. அதோடு அலட்சியமும் சேர்ந்தால்?
சொல்லிச் சொல்லி சோர்ந்துபோன சாவித்ரி, உதடு தேய்வதற்கு உள்ளங்கால் தேயலாம், என தன்போக்கில் வேலை செய்வார். கூடவே தான் இருக்கும்வரையாவது தன் பெண்கள் அனுபவிக்கட்டுமே என்ற எண்ணம்.
அம்மா, அம்மாவென உருகி ஊற்றும் மகன்கள், அம்மா வேலை செய்வதை, தாங்களே அம்மாவை வேலை சொல்வதை உணரவே இல்லை. இதில் பாலாஜி மட்டும் விதி விலக்காக அவ்வப்போது உதவ முன் வருவான்.
‘கர்ப்பவதி, கைக்குழந்தை என செல்லமும் சலுகையும் கொண்டாட ஆளுக்கொரு காரணம். எனக்கில்லையா இதெல்லாம்?’
மாவை பாத்திரத்தில் வழித்து எடுத்துக் கொண்டு சாவித்ரி வர “சுந்தரி, உங்கம்மாவை தேங்காய், கொத்தமல்லி எல்லாம் வெச்சு ஒரு கொறடா பண்ணச் சொல்லு. உளுந்து வடையோட சூப்பரா இருக்கும்” என்றார், நாகராஜன்.
அலுவலகம் செல்ல சமையல் அறையிலேயே சாப்பிட அமர்ந்த கணவனிடம், என்ன பதில் வரும் எனத் தெரிந்தே புலம்பினாள் வசுந்தரா.
“இன்னும் ஒருத்தரும் குளிக்கல, தெளிக்கல, தோய்க்க அத்தனை துணி கிடக்கு. ஜெயாக்கு எப்பவேணா வலி வரலாம். இதுல கொறடா, புருடான்…”
கோஸ் கறியைப் பரிமாறி விட்டுத் தாழ்ந்த குரலில் பேசிய மனைவியை ஏறிட்ட ரமணன் “இப்ப சாதம் போடுவியா, இல்ல…” என்றபடி விருட்டென எழப் போக, வசுந்தரா வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.
சுந்தரி பரிமாற, சமையலறைக்கு வெளியே சாப்பாடு நடந்தது.
சதுரமாக நறுக்கிய வாழை இலைகளில் தொய்யப் பிசைந்த மேல் மாவுக்குள் பூரணத்தை வைத்து, விரல்களால் மெலிதாகத் தட்டி, முதல் போளியைக் கல்லில் கவிழ்த்துப் போட்டு ஒட்டாமல் இலையை எடுத்த வசுந்தராவிற்கு, ஆயாசமாக இருந்தது.
‘பொறாமைப்படறியா வசு?’
“பொறாமையா, எனக்கா, வேற வேலையில்லை?’
சாவித்ரியே இங்கு இல்லாமல் ‘இதைப் பண்ணேன் வசு/ மன்னி’ என்று யார் கேட்டாலும், நானே செய்வேனே!
இருந்துமே இன்று ஏனோ மனம் முரண்டியது.
‘குறை என்று குறிப்பாக எதுவும் இல்லாதபோது யார் மீது பொறாமை கொள்ள?’
‘கிட்டாத பட்டியலுக்கு ஏங்குவதை விட முட்டாள்தனம் வேறில்லை’ என்பதோடு, கொடுக்கும் இடத்தில் இருக்கும் எனக்கென்ன பொறாமை?’
தட்டத் தட்ட போளி தீர்ந்த வேகத்தில், எடுத்துச் செல்ல உள்ளே வந்த சுந்தரி
“வசு, ரமணனுக்குத் தனியா எடுத்து வை, அப்படியே நீயும் ரெண்டு வாய்ல போட்டுக்கோ. போற போக்குல ஒண்ணும் மிஞ்சாது போல இருக்கு” என்றாள்.
பிறந்த வீட்டில் ஏந்திக் கொள்ள மனிதர்களும் எடுத்துச் செய்ய மனதும் இன்றிப் பணமும் வசதிகளும் இருந்தால் மாத்திரம் சலுகையும் சந்தோஷமும் கிடைத்து விடுமா என்ன? அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அனுபவித்து விட்டுப் போகட்டுமே!
கான்வென்ட் படிப்பு, சைக்கிள், பாட்டு க்ளாஸ், நட்பு வட்டம் என வசுந்தரா வளர்ந்த விதமே வேறு.
‘எப்படியாவது ஒரு பிடிஏ சைட்டை வாங்கி வீட்டை கட்டிடணும்’ என்பது அனைத்து மத்திய தர பெங்களூர் வாசிகளின் கனவு. அதிர்ஷ்டவசமாக வசுந்தராவின் தந்தையின் முதல் முயற்சியிலேயே அவருக்கு ராஜாஜி நகரில் ஒரு 60×40 சைட் கிடைத்துவிட, கையிருப்பைக் கொண்டு இடத்தை வாங்கியவர், மனைவியின் நகை, பி எஃப் லோன் என தக்கி முக்கி சமாளித்து எளிமையாக ஒரு வீட்டைக் கட்டியபோது, வசுந்தராவிற்கு வயது எட்டு.
அவர்களிடம் எந்த வித ஆடம்பரப் பொருளும் கிடையாது. ஆனால், அத்தியாவசியமான பொருள்கள் அனைத்தும் உண்டு. அந்த வீடு தந்த சுதந்திரமும் தன்னிறைவும் அளவிட முடியாதது.
பாரம்பரியத்தையும் நகர வாழ்க்கையின் வசதிகளையும் சமன் செய்து அனுரித்துப் போகும் குடும்பம் வசுந்தராவினுடையது.
ரமணகுமாரின் குடும்பம் சாதாரணமானது என்று தெரியும்தான். தெரிந்துதானே திருமணம் செய்து கொடுத்தனர், ஆனாலும், மூன்று குடித்தனங்கள் இருந்த அந்த வீடும், வீடு நிறைந்த மனிதர்களும்…
அவர்கள் குடி இருந்த அந்த வீடு மாடியும் கீழுமாக, கேட்டுக்குள் திறந்த முன் திண்ணை, அடுத்து நாட்டு ஓடு தரும் குளுமையுடன் சிமென்ட் பால் போட்டுத் தேய்த்து வழவழக்கும் உயரத் திண்ணைகள், சிறிய வழிநடை, ஒரு புறம் முற்றம், மற்றொரு புறம் கிணற்றடி, குழாய், மாடியிலும் ஹால், அறைகள் என வீடு நன்றாகத்தான் இருந்தது.
என்ன, தனித்து இல்லாது, மூன்று குடும்பங்கள் குடி இருந்ததில் எந்நேரமும் ஜகஜ்ஜோதியாக இருந்தது வீடு…
ரமணனுக்கு வாய்த்த பெங்களூர் பெண்ணைப் பார்க்க, கல்யாணம் விசாரிக்க என வந்தனர். தஞ்சை மண்ணின் சிறப்போ அல்லது இயல்போ, சிறியவர் பெரியவர் இல்லாது எல்லோரும் எடைபோடும் பார்வையோடே இருந்தனர்.
‘தமிழ் பேசுவியா, என்ன படிச்சிருக்க?’ என்ற சில நடுத்தர வயதுப் பெண்களின் முகத்திலேயே ‘ரமணனுக்கு இன்னும் கொஞ்சம் அழகான பொண்ணா பார்த்திருக்கலாம்’ என்ற வரிகளை வசுந்தராவால் படிக்க முடிந்தது.
இவர்கள் வீட்டுக்கு வலதுபுறம் இருந்த, பெரிய இரட்டை வீட்டிலிருந்து, மூக்கு காதுகளில் ப்ளூஜாகர் ஜ்வலிக்க வந்த மாமி சகஜமாகப் பேசினார். பேத்தி பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறதாம். கூடவே வந்த ஆறு வயதுப் பெண் பப்பி மாமியின் கடைக்குட்டியாம்.
தன் வயதையொத்த ஜெயாவும் பாலாஜியும், பெரியவனே என்றாலும் ஸ்தானம் கருதி ‘மன்னி’ என்றழைத்த சங்கரும், மாமி என்ற சுந்தரியின் குழந்தைகளும் சேர்ந்து கல்யாண வீடு கலகலத்ததில் பகல் பொழுது முழுதும் மகிழ்ச்சியாகவே சென்றது. என்ன, கணவனைத்தான் கண்ணிலேயே காணவில்லை.
இது போன்ற ஒண்டுக் குடித்தன வீடுகளில், பெரிய குடும்பத்தில் புதுமணத் தம்பதிகளாக இருப்பதைப் போல இக்கட்டான அவஸ்தையான விஷயம் வேறெதுவும் கிடையாது.
இருவரும் சகஜமாக அழைத்துப் பேச வேண்டுமெனில் ஒன்று வயதாகி இருக்க வேண்டும் அல்லது வெட்கத்தைத் துறந்துவிட வேண்டும்.
முன்பே ஜோடியாக தனித்துத் தெரியக்கூடாது என்றவன், தான் பேச முற்படாததோடு, எதிரில் இருந்தால் எங்கே, பேசி சங்கடப் படுத்திவிடுவாளோ என்ற பயமோ என்னவோ, அதிகாலையில் பெங்களூரிலிருந்து வந்து இறங்கியதில் இருந்தே தொலைக்காட்சிதான் (தூர்… தர்ஷன்!)
அவன் சொல்லாது போனாலுமே இருவரும் இயல்பாக இழையக் கூடிய சூழல் அங்கில்லை.
ஒருபுறம் கிணற்றடி, முற்றத்துடன் இணைந்த நீளமான கூடம் நான்கு தூண்களால் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது.
நடுவில் இருந்த கூடம் பொதுவிலும் மற்றொரு பாதியில் ரமணன் வீட்டினரும் இருந்தனர். இதில் மாடி வீட்டின் சமையல், சாப்பாடு எல்லாம் கீழேதான்.
இவர்களின் பகுதியில் தலைமாட்டில் அடுக்களையும் கால்மாட்டில் ஒரு சின்ன அறையும்தான். கூடம், ஹால், டைனிங், முன்னறை, ட்ராயிங் ரூம், படுக்கையறை எல்லாம் அந்த இடைப்பட்ட பகுதிதான்.
அந்த ஒற்றை அறையில் ஒரு மரபீரோ, இரண்டு பழைய ட்ரங்கு பெட்டிகள், மேலே தொங்கிய மரப்பலகை அல்லது ஷெல்ஃபில் சுருட்டி வைக்கப்பட்ட பாயும் படுக்கையும்.
இப்போது கிழவனுக்கு அலங்காரம் செய்தது போல் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோத்ரெஜ் பீரோவும், இலவம் பஞ்சடைத்து வெல்வெட் துணியில் தைக்கப்பட்ட மெத்தைகளும். இவை போக மீதமிருக்கும் இடத்தில் அடக்கமாக மெத்தைகளை விரிக்க வேண்டும்.
வெல்வெட் எல்லாம் பெங்களூர் குளிருக்கு சரிதான், தஞ்சையில் தை மாதத்திலேயே புழுங்கியது. பெண்ணைப் புக்ககத்தில் கொண்டு விட வந்த பெற்றோர், குளுகுளுவென வளர்ந்த வசுந்தராவை எண்ணி சீலிங் ஃபேன் ஒன்றை வாங்கித் தந்துவிட்டுச் சென்றனர்.
அதை கூடத்தில் போட்டு, இவர்கள் உபயோகிக்கும் டேபிள் ஃபேனை பண்டமாற்று செய்யும் நாகராஜனின் ஆலோசனையை நாசூக்காக மறுத்துவிட்டார் சாவித்ரி.
வசுந்தரா அவள் வீட்டிற்கு ஒரே பெண். அவள் கொண்டு வந்த வசதிக்குப் பழகி, நாளை ஜெயா எனக்கும் வேண்டுமென்றால்… பின்னோடே நாகராஜனும் கிளம்பி நிற்பார்.
அதுமட்டுமின்றி, உயரமான பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கையைக் காலை நீட்டி, அவர்கள் மேல் ஃபேன் விழுந்து விட்டால் என்ற பயமும் கூட.
உயரம் குறைவான அந்த அறையில் ரமணன் எழுந்து நின்றாலே ஃபேனில் இடித்துக் கொள்வானோ என்ற கவலை வசுந்தராவிற்கு.
வாகனங்களின் சத்தம், தொலைக்காட்சி, டெலிஃபோன் என எந்த சத்தமும் இன்றி, ஏழு மணிக்கு அடங்கி, எட்டரைக்கு முடங்கி, அநேகமாக ஒன்பது, ஒன்பதரைக்குள் உறங்கி விடும் ஊர்.
விவித் பாரதியில் ஒலிபரப்பாகும் வண்ணச்சுடர் நாடகம் வரை விழித்திருக்கும் வீடுகளே குறைவு.
ஆனால், இங்கே இளையவர்கள் அதிகம் இருந்ததால், வேம்புப் பாட்டியின் ‘ஒரு நாளைப் பார்த்தாப்பல பெரியவா சின்னவான்னு வயசு வித்தியாசமில்லாம ராக்கூத்து அடிக்கறது, வயசானவா தூங்க வேண்டாமா?’ என்ற முனகல் முணுமுணுப்பாகி, உரத்துத் திட்டும் வரை பேச்சும் சிரிப்புமாக இருந்தனர்.
ரமணன், அம்மாவோ, பாட்டியோ சொல்லாது தானே படுக்கை அறையை நோக்கிச் செல்லத் தயங்கி, ஏதாவது ஒரு சஞ்சிகையுடன் தன் குடும்பத்தினர் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பான்.
வசுந்தராவுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றினாலும் கூட அவர்களைத் தாண்டி சட்டென அறைக்குள் செல்வதென்பது இயலாத காரியம்.
உள்ளே போகவும் சொல்லி, தண்ணீர் சொம்புடன் சமையல் அறையில் இருந்து அந்தக் கூடத்தின் நீளத்தைக் கடந்து அவள் உள்ளே சென்று தாளிடும் வரை தொடரும் அந்தப் பார்வைகள்!
அவர்களது குறுகுறுப்பின் பின்னே விரியக்கூடிய கற்பனையும் காட்சியும் தந்த கூச்சத்தில் தவித்தவளை ‘இதென்னடீ மாடு புடிக்கறாப்போல வேடிக்கை’ என்று கிசுகிசுத்து மேலும் சிவக்க வைத்தான் ரமணன்.
உண்மையாகவே கிசுகிசுப்புதான். மனம் விட்டுப் பேசவும், வாய்விட்டுச் சிரிக்கவும் அது ஒலி புகாத கதவா என்ன?
பழ்ழ்ழ்ழைய இரண்டு மரக்கதவுகளைத் தாளிட்ட பிறகும், இடையில் மிகச் சன்னமான இடைவெளியும் அடியில் சிறிதான துளையும்… சற்று பலமாக மூச்சு விட்டாலே வெளியில் கேட்கும்.
வெளியில் பேச்சுக் குரல் அடங்கும் வரை ரமணகுமார் காத்திருக்க, வசுந்தரா உறங்கியே விடுவாள்.
அதைவிட, அறையின் வாயிலில் இருந்தே எல்லோரும் வரிசையாகப் படுத்திருக்க, ‘தூங்கிட்டயா, உங்களுக்குப் போர்வை வேணுமா, தாகமா இருக்குடீ, ரொம்ப வேர்க்கறது இல்ல?’ போன்ற பேச்சுக்கள் கூட அடுத்தவருக்கு அனர்த்தமாகத்தானே தோன்றும்?
தன்னை மறந்த நிலையின் அனத்தலோ அணத்தலோ பிறர் அறியக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வில் இருவரும் பேசும் படத்தை ஓட்ட, அதற்கெதற்கு விளக்கு?
இது எல்லாவற்றையும் விட அவஸ்தை எதுவெனில், இரவில் ஓய்வறையை உபயோகிப்பது. தாழ் நீக்கி, கதவைத் திறந்து, குறுக்கில் நடந்து, முற்றத்தில் இறங்கி இடப்புறம் சென்றால், அங்கே ஒரு க்றீச்சிடும் தகரக்கதவு, தொட்டியில் மொள்ளும் நீர், அதன் உபயோகம் என சப்தஸ்வரங்கள், வழி நடையில் ஒன்று, ஓய்வறையில் ஒன்று என இரண்டு விளக்குகளின் ஒலியும் ஒளியும் இல்லாது ஒன் பாத்ரூம் போக முடியாது.
இதில் மற்றவர் உறங்கினாலும், முற்றத்தின் அருகே விசிறியுடன் படுத்திருக்கும் ராஜம் பாட்டியும், வேம்புப் பாட்டியும் எப்போது ஹை அலர்ட் மோடுதான்.
தான் இயல்பாக எழுந்து சென்றால் கூட மற்றவர்கள் என்ன நினைப்பர் என்ற சங்கோஜம், இருட்டில் தனித்துச் செல்ல பயம், போவதா வேண்டாமா என சோழி போட்டுப் பார்த்து பல நாட்கள் அப்படியே உறங்கி விடுவாள்.
பாரம் நீங்கி, சுத்தமாகாமல் தீராது என்ற உணர்வு மேலோங்கும் நாட்களில்
ரமணனைத் துணைக்கு அழைத்தால் ‘நான் வந்தா இன்னும் மோசம். நம்ம காவல் தெய்வங்கள் ரெண்டு பேரும் என்னைப் பார்த்தா எழுந்து உட்கார்ந்து கேள்வி கேட்பா. துணைக்கு பாட்டீஸே போறும், நானெல்லாம் தேவையே இல்லை’ என நீண்ட விளக்கமளித்துத் திரும்பிப் படுத்துக்கொள்வான்.
********************
இரவு உணவு முடிந்து, அடுக்களை ஒழித்து, கடையைச் சாற்றிவிட்டு வந்த வசுந்தரா, கூடத்துத் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
மைத்துனர்கள் இருவர், சின்ன நாத்தனார், பெரிய நாத்தனார், அவளது குழந்தைகள், மாமியார், மாமியாரின் மாமியார் (பாட்டி) என குடும்பமாக அமர்ந்து, சங்கர், ஹேமாவின் திருமணத்தை விவாதித்தனர்.
பேச்சினிடையே ஏதோ ஒரு ஹிந்தி வார்த்தைக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் அளித்ததில் ஏக சத்தமாக இருந்தது.
கடைசி மச்சினன் பாலாஜி “மன்னி, உங்களுக்குதான் ஹிந்தி தெரியுமே, நீங்க சொல்லுங்கோ”
எனவும் வசுந்தராவையே பார்த்தவர்களின் முகத்தில் ‘இவ என்னத்தை பெருசா சொல்லிடப் போறா?’ என்ற அலட்சியம்.
திருமணமாகி ஐம்பது நாள் கூட நிறையாத தம்பதிகள் அறைக்குள் செல்லக் காத்திருக்க, மணி பத்தாகியும் யாரும் படுக்கப் போவதைப் போல் தெரியவில்லை. பெரியவர்களும் எதுவும் சொல்லவில்லை.
அவர்கள் பேசுவதைக் கேட்டபடி எதிரே இருந்த மற்றொரு தூணில் சாய்ந்திருந்த ரமணகுமார், மறந்தும் மனைவியின் புறம் திரும்பவில்லை.
நடுநிலையான, பொறுப்புகளை உதறாத, தன் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற விரும்பும் ரமணனிடம் அந்தப் பொறுப்பு மிக்க பதவிக்கான இறுக்கமும் அழுத்தமும் இருந்தது.
அக்காவே ஆனாலும் சுந்தரியால் கூட சட்டென அவனை நெருங்கிப் பேசிவிட முடியாது. தங்கை என்றால் உயிர், அம்மா என்றால் அன்பு போன்ற நாடக வசனங்கள் இல்லாத, கண்டிப்பும் கறாருமான தகப்பனைப் போன்ற அண்ணன்.
பேச்சு, சிரிப்பு எல்லாம் அளவோடுதான். அதற்காக ரமணன் ஒன்றும் சிடுமூஞ்சி இல்லை. கடமையின் அழுத்தம் தந்த முகமூடி அது. சற்று சிரித்துப் பேசினால், குடும்பத்தோடு சினிமாவும் ஃபுல் வாயில் தாவணியும் பர்ஸைப் பதம் பார்க்கும் என்ற சமன் பாடு புரிந்தவன்.
கொள்ளுத் தாத்தா காலத்திலிருத்து இருக்கும் ஊர் என்பதால், தஞ்சையில் நடக்கும் திருமணங்கள், விழாக்களில் பேர் பாதி அழைப்பாவது இவர்களுக்கு வந்துவிடும்.
இப்போது வசுந்தராவுடன் தான் செல்கிறான். நட்புகள், தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்தான். அவளுமே நன்றாகப் பழகினாள். அக்கம் பக்கத்தில் பரிச்சயமாகி, நட்பு பாராட்டினாள்.
பட்டுப் புடவையும் ஓரிரு எளிமையான நகைகளும், சாந்து பொட்டிற்கு மேலே விபூதியும், கீழேயும் வகிட்டிலும் குங்குமத்துடன் கண்ணை நிறைக்கும் சிரிப்புடன் வருபவளுக்காக சைக்கிளில் அமர்ந்து காத்திருப்பவனிடம், பாராட்டுதலாக ஒரு வார்த்தை வராது. வசுந்தரா அமர்ந்த மறுகணம், வண்டி கிளம்பிவிடும்.
பெரியவர்களின் கவனம் ஈர்க்காது, இளையோரை சலனப்படுத்தாது, தன் கடமை உணர்ச்சியில் சற்றும் வழுவாது இருக்க விரும்பிய ரமணன், பொதுவெளியில் நெருக்கம் காட்டிக் குழையும் ஜோடிகளைப் போலவே, விலகி நிற்பவர்களும் கவனிக்கப்படுவார்கள் என்பதை அறியவில்லையோ?
கம்பீரமான தோற்றமும் அளவான பேச்சும், சின்னப் புன்னகையும் கூர்மையான பார்வையும் உடைய ரமணனும், ஒல்லியான, கலகலப்பான, வெகுளியான, வெளிப்படையான வசுந்தராவும் ஒட்டாது நிற்பதான அபிப்பிராயத்தை மற்றவர்களுக்குத் தந்தனர்.
அது வீட்டினருக்கு என் மகன், தம்பி, அண்ணா என, ரமணனிடம் முன்னிலும் அதிகமான உரிமையுணர்வையும், அதற்கு நேர்மாறாக வசுந்தராவின் பால் ஒரு வித அசட்டையையும் தந்தது.
இது முதலில் வெளிப்பட்டது ஜெயாவிடம். தன்னை விட இரண்டே வயது மூத்தவளான வசுந்தராவின் ஆங்கிலம் அதிகம் கலந்த பேச்சும், அவளிடம் இருந்த கார்டன், கட்டாவ், மைசூர் பட்டுப் புடவைகளும், அவற்றை நறுவிசாக உடுத்தும் பாங்கும் தானும் அதேபோல் இருக்கும் உத்வேகத்தைத் தருவதற்கு பதில் பொறாமையைத் தர வசுந்தரா எது சொன்னாலும், செய்தாலும் அலட்சியம் செய்ததோடு, முகத்தைத் தூக்கியபடி சாவித்ரியிடம் சென்று குறை சொன்னாள்.
மாமியார் சாவித்ரி இவளிடம் எதுவும் பேசவில்லைதான். ஆம், ஏதோ யோசனையில் சிலமணி நேரங்கள் பேசாமலே இருந்தார்.
மாதங்கள் செல்ல, சங்கரின் திருமண வேலைகளை ரமணகுமார் மனைவியோடு சேர்ந்து செய்ததில்,
பலரும் “பரவால்ல சாவித்ரி, சின்ன வயசா இருத்தாலும் உம் மாட்டுப்பொண்ணு ஒட்டினா மாதிரி, பதவிசா இருக்கா” என்றதை ஜெயா ரசிக்கவில்லை.
தனக்கும் வசுந்தராவிற்கும் போட்டி எதுவுமில்லை, அந்த வீட்டில் வசுந்தராவின் இடம் வேறு, தனது இடம் வேறு என்பது புரியாது அவளிடம் பொறாமையை வளர்த்துக் கொண்டாள் ஜெயா.
இது ஏனென்று புரியாத வசுந்தரா பத்து நாட்களாகப் வாட்டமாகவே சுற்றினாள். ரமணனிடம் கேட்கவும் பயம். அதுவும் அந்த அறைக்குள் ஹஷ் ஹஷ் எனப் பேசுபவனிடம் கேட்டாலும் எங்கே, எப்படி, என்னவென்று சொல்வது? அவள் மேலேயே திருப்பினால்?
இரவில் விளக்கை அணைக்கப் போனவளைத் தடுத்த ரமணன்
“உக்காரு” எனக் கை காட்டினான்.
‘ஒருக்கால் ஜெயா இவர் கிட்ட ஏதாவது சொல்லி இருப்பாளோ, நான் எந்தத் தப்பும் செய்யலையே’
வசுந்தரா என்ன வரப் போகிறதோ என்ற பதட்டத்தில் இருக்க,
தொண்டையை செருமுவதைக் கூட அமர்ந்த ஒலியில் செய்தவன் “இந்த மாசம் இன்னும் நீ குளிக்கலைதானே, ஐ மீன் பீரியட்ஸ்?
வசுந்தரா *%#+?@₹!!”
Author: VedhaVishal
Article Title: உளமார நேசிக்கிறேன்! 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உளமார நேசிக்கிறேன்! 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.