• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
23
உளமார நேசிக்கிறேன்! 1




இடம்: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை

வருடம் : 1988

நேரம் : காலை ஏழரை மணி

தஞ்சையில் டாக்ஸி என்பதே அரிதான காலம். ஆட்டோக்களும் இன்னும் அதிகம் உபயோகத்திற்கு வந்திருக்கவில்லை. தஞ்சை மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் ஒரு வெள்ளை நிற அம்பாஸடர் டாக்ஸி வந்து நிற்க, அதற்குள் இருந்த கணவனை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மருத்துவமனையின் உள்ளே ஓடினாள் வசுந்தரா.

ஸ்ட்ரெச்சருடன் வேகமாக வெளியில் வந்த இருவரும், டாக்ஸி டிரைவரும் சேர்ந்து வலியில் துடித்துக் கொண்டிருந்த ரமணகுமாரை சற்று சிரமத்துடன் ஸ்ட்ரெச்சரில் கிடத்தி, உள்ளே கூட்டிச் செல்ல, கையில் கிடைத்த பணத்தை அவசரமாக டிரைவரிடம் நீட்டிய வசுந்தரா கணவனைப் பின்தொடர்ந்து ஓடினாள்.

மாயம்போல் அடுத்த பத்து, பன்னிரெண்டு நிமிடங்களில், காட்சிகள் மாறிவிட, இன்டன்சிவ் கேர் யூனிட்டின் அறையொன்றில், திரை போட்டனர். எக்ஸ் ரே, ஈஸிஜி மெஷின் வந்தது.

சுற்றிலும் பச்சையும் சிவப்புமாய் கண் சிமிட்டும் கருவிகளும், நானாவித குழாய்களும் மருத்துவர்களும் சூழப் படுத்திருந்தவனை திரை இடுக்கு வழியே கண்ட வசுந்தராவிற்கு தொண்டை உலர்ந்து வயிறு சுருண்டு எழும்பி நெஞ்சை வந்து அடைப்பதுபோல் இருந்தது.

மருத்துவர்களும், மருத்துவம் பயில்பவர்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர். சுற்றி நின்று விவாதித்தனர்.

அவசரமாய் வந்து ரமணகுமார் இருந்த அறைக்குள் நுழைந்த இருதயநோய் நிபுணர், நாலைந்து நிமிடங்களிலேயே வெளியே வந்து, இரண்டு கத்துக்குட்டிகள் பின்தொடர, அந்த வார்டின் ஓரத்தில் இருந்த மருத்துவரின் அறைக்குச் சென்றார்.

உடன் வந்த ஒரு செவிலி
“இந்த பேஷன்ட் கூட வந்தது யாருங்க?”

வசுந்தரா “நான்” என பள்ளிச் சிறுமிபோல் கை உயர்த்தினாள்.

“போய் டாக்டரை பாருங்க மா, விவரம் சொல்லுவார்”

குட்டையாய், சிவப்பாக, நிறைய நரையுடன் பார்த்தாலே டாக்டராக இருந்தவர், தலையசைத்து அமரச் சொல்லி சைகை செய்தார்.

சிறுவயதாக, ஒல்லியாக, இளமையாக, சோகமாக, கவலையாக, தொலைந்த பார்வையுடன் நின்ற
வசுந்தராவை பயமுறுத்தாமல் இருக்க எண்ணிய டாக்டரின் இறுக்கமான ஒரு பக்கச் சிரிப்பும், ‘நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா?’ வும், வார்த்தைகளைத் தேடியதில் ஆன கால தாமதமுமே அவளிடம் பதற்றத்தை விளைவித்ததை உணர்ந்து கொண்டவர்போல், தீடீரென

“உங்க கணவருக்கு… கணவர்தானே, ஹார்ட் அட்டாக். முப்பத்தேழு வயசுன்னு சொல்லி இருக்கீங்க. இந்த சின்ன வயசுலயே ஹார்ட் அட்டாக்… பிறவிக் குறைபாடு ஏதாவது இருக்கா? குடி, சிகரெட் உண்டா?”

அவர் சொன்ன ‘ஹார்ட் அட்டாக்’ கிலேயே மூளை மரத்து நின்று விட, அவர் கேட்டது எதுவுமே வசுந்தராவின் மனதில் பதியவில்லை.

அதே செவிலி வந்து வசுந்தராவின் தோளைத் தொட, விலுக்கென நிமிர்ந்து விழித்தவள் “அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது டாக்டர். பண்டிகை, கல்யாணம், ஹெவி சாப்பாடுன்னா வெத்தலை போட்டுப்பார். அதுவும் ரெண்டே ரெண்டு”

“இங்க பாரும்மா, மனசை தைரியப் படுத்திட்டு, நான் சொல்றதைக் கேளுங்க. உங்க கணவருக்கு இதயத்துல ரெண்டு இடத்துல அடைப்பு இருக்கு. உடனடியா பை பாஸ், அதாவது ஆபரேஷன் செய்யறது நல்லது. பணம் கட்டினீங்கன்னா ஒரு ஸ்கேன் எடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்”

நம் எல்லைக்கு வெளியே புழங்கும் வரை பணம் படைத்ததாக, பரிதாபச் சொற்களுக்கு உரியதாக இருக்கும் கார்டியாலஜிஸ்ட், ஹார்ட் அட்டாக், ஆஸ்பிரின், பிளாக், பை பாஸ் சர்ஜரி, ஸ்கேனிங் போன்ற வார்த்தைகள் அனைத்தும் இப்போது எமலோகத்தின் பாஷையாகத் தோன்றியது.

நாற்பது வயதில் நெஞ்சுவலி என்ற மாமனார், நிமிடங்களில் உயிரை விட்டதாகக் கேட்ட வரலாறு வேறு நினைவில் வந்து தொலைக்க, என்ன முயன்றும் மனதில் தோன்றி மறைந்த எதிர்மறை சிந்தனைகளை, காட்சிகளைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது போக, வசுந்தராவின் கண்களில் கலக்கம் நிறைந்தது.

இதற்கிடையில் ‘வசு, நான் சொன்ன மனக்கவலை மாற்றல் அரிதுங்கறது இதான்’ என்றார் திருவள்ளுவர்.

‘பை பாஸ்னா நிறைய பணம் வேணுமே?’

‘இவரோட பணமெல்லாம் எங்க இருக்குன்னு எனக்கு முழுசாத் தெரியாதே, அப்படியே தெரிஞ்சாலும் பெருசா எத்தனை இருந்துடப் போறது?”

‘ஊருக்குப் போய் இருக்கும் மாமியாருக்கு, மச்சினர்களுக்கு, நாத்தனார்களுக்கு… இதை எப்படி, என்னன்னு சொல்லுவேன்?’

‘இதுக்கும் என்னைத்தான் குறை சொல்லுவா’

‘மாடியில் குடியிருப்பவர்களிடம் விட்டு வந்த எட்டு வயசு தீபாகிட்ட என்ன சொல்றது?’

‘ஐயோ, இப்பவே மணி எட்டே முக்கால். ஒம்போதே காலுக்கு ரிக்ஷாக்காரன் வந்துடுவான்… இனிமே போய் தீபுவை கிளப்பி, ரெண்டு சிண்டு போட்டு, சமைச்சு, ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள உயிரே போயிடும்”

உயிர் என்றதுமே உதித்த பயமும் சந்தேகமும் கவலையாக, கேள்வியாக உருப்பெற்றது.

“டாக்டர்…”

“சொல்லுங்க மிஸஸ் ரமணகுமார்”

“ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யற வரைக்கும் அவர்… அவருக்கு… அவரோட….”

கணவனின் உயிருக்கு ஆபத்து என்று உச்சரிக்கக் கூட விரும்பாதவளை இரக்கமாகப் பார்த்தவர்

“இப்போதைக்கு ஸ்டேபிளா இருக்கார். எத்தனை சீக்கிரம் சர்ஜரி செய்யறமோ அத்தனை நல்லது”

“...”

“பை பாஸ் சர்ஜரி செய்யணும்னா நீங்க சென்னைக்கோ, திருச்சிக்கோதான் போகணும். ஸோ, ரெண்டு, மூணு நாள் இங்கதான் ஆப்ஸர்வேஷன்ல இருக்கணும். ட்ராவல் பண்ண தெம்பு வேணுமே”

“ம்… டாக்டர், ஆபரஷனுக்கு எத்தனை பணம் தேவைப்படும்?”

“ஒன்னுல இருந்து ஒன்னரை லட்ச ரூபா வரை ஆகும்”

**********************

மறுநாள் காலை ஆறு மணி…

எதிர் சந்தில் தொலைபேசி வைத்திருக்கும் காலேஜ் லைப்ரரியன், தானே நம்பரையும் டயல் செய்து, ஸ்டாப் வாட்ச்சில் எண்பத்தி மூன்று வினாடிகளைக் கணக்கிட்ட நேரத்தில், சென்னையில் இருக்கும் மூத்த மச்சினன் சங்கரை அழைத்து விஷயத்தைச் சொன்னதில் இதோ, கடைசி மச்சினன் பாலாஜியைத் தவிர நேற்று இரவுக்குள் எல்லோரும் வந்து விட்டனர்.

ரமணகுமாரின் நெருங்கிய நண்பனும் போலீஸ் இன்ஸ்பெக்டருமான சிவமணி “ராத்திரி நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்” என்றதில் வசுந்தரா வீட்டில்தான் இருந்தாள்.

ஒருபுறம் குக்கர் விசிலடிக்க, மறு அடுப்பில் பொங்கிய பாலை அணைத்த வசுந்தரா, தலையை எண்ணி, டவரா தம்ளர்களை வரிசையில் வைத்து, கலந்த காஃபியை ஊற்றினாள்.

இரண்டிரண்டாக எடுத்துச் சென்றவள், முதலில் திருமணமாகி பதினாறு வருஷமான பிறகும், பெண் பார்க்க வந்த தோரணையிலேயே மடக்கு நாற்காலியில் அமர்ந்து, நாளைத் துவக்கிய பெண்களை அடிக்கண்ணால் பார்த்தபடி இருந்த பெரிய நாத்தனாரின் கணவர் நாகராஜனிடமும்
சமையலறையின் வாயிலில் அமர்ந்து புதிதாய் வாங்கிய பூசணிப் பத்தைகளை நறுக்கிக் கொண்டிருந்த மாமியார் சாவித்ரியிடமும் கொடுத்தாள்.

வசுந்தரா காஃபியுடன் இரண்டாவது நடை வந்தபோது, சாவித்ரி “ஜெயா, ஹேமா நீங்களும் போய் கொண்டு வந்து தரலாமே” என தன் இரண்டாவது பெண் மற்றும் மாட்டுப் பெண்ணிடம் சொல்ல, பலன்தான் பூஜ்யம்.

இது வழக்கமான ஒன்றுதான் என்பதால், வசுந்தரா தன் வேலையைத் தொடர, சங்கர் போய் தனக்கு காஃபியும், தன் மகனுக்கென வைத்திருந்த போர்ன்விடாவையும் எடுத்து வந்தான். பெரிய நாத்தனார் சுந்தரியின் பிள்ளைகள் இருவரும் வரவில்லை.

வற்றல் குழம்புக்கு மணத்தக்காளியைப் போட்டு புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, குழம்பு பொடியோடு சிட்டிகை காரப்பொடியையும் போட்டு தீயைக் குறைத்து விட்டு வெளியே வந்த வசுந்தரா, தீபாவை எழுப்பி, குளிக்க அனுப்பியவள், தூணோரமாக அமர்ந்து தலையை அவிழ்த்து வாரிப் பின்னிக் கொண்டாள்.

தீபா வந்ததும் அவளையும் தயார் செய்தவள், கணவனுடன் உடன்பிறந்தோர் ஏதோ, விடுமுறைக்கும் விசேஷத்திற்கும் வந்த விருந்தைப் போல் கலகலப்பதும், இடையிடையே அண்ணாக்கு ஹார்ட் அட்டாக் என உச்சுக் கொட்டி வருந்துவதுமாக இருப்பதையும் ஏற்க முடியாமல் சமையலறைக்குள் சென்றவளுக்கு சிக்கலான இந்த வலையத்திலிருந்து (Maze runner) தப்பும் வழி தெரியாது மூச்சு முட்டியது.

ஓடு இறக்கிய சமையலறையின் மேற் கூரையில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியே வரும் வெளிச்சம்தான்.
அரக்கப் பரக்க சமைக்கும் காலையிலும், பின் மாலையிலும் இருள் சூழ்ந்திருக்க, வேலை ஏதுமில்லாத மதிய நேரத்தில் பாயும் ஒளி வெள்ளம்.

ரமணகுமாரின் அப்பாவைப் பெற்ற பாட்டி இருந்தவரை காலை ஆறு மணிக்கு மேல் விளக்கு போடக்கூடாது. முடிந்தவரை வெளிச்சத்தோடே சமைத்து, அடுப்பைத் துடைத்து, அடுக்களையை சுத்தம் செய்து விட வேண்டும்.

“அதென்ன, இருட்டினப்புறம் வெளக்குப் போட்டுண்டு சமைக்கறதுக்கு சம்பந்தியா, மாப்பிள்ளையா யார் வந்து இறங்கி இருக்கா?” என்று நொடிக்கும் பாட்டி போய் வருஷம் மூன்றாகிறது. அவரோடு, சேர்த்து அவரது சட்டங்களையும் எரித்தாயிற்று.

ஃப்ளாஸ்க்கில் காஃபியும், ரசம் சாதமும் தயிர்தாதமும், தண்ணீரும், கணவனுக்கு மாற்றுடையும் எடுத்துக் கொண்டவள், ஹாலுக்கு வந்து தயங்கி நின்று மாமியாரின் முகத்தை ஏறிட்டாள்.

நேற்றிரவே அறுவை சிகிச்சைக்கான அவசியத்தையும் அதற்குத் தேவைப்படும் தொகையையும் சொல்லியாகிவிட்டது.

கணவனின் கை இருப்பும், வசுந்தராவின் ஹிந்தி க்ளாஸ் வருமானத்திலும் மளிகை சாமான் வாங்கியது போக மிச்சம் பிடித்ததும் சேர்த்து ஒன்பதாயிரத்து சில்லறை தேறியது. இது கூட தீபாவளிக்கு முந்தைய காலம் என்பதால்தான்.

இப்போதே மாதக்கடைசி வேறு. இதில் ஆஸ்பத்திரி, ஆள் போக்குவரத்து, பால், காஃபி பொடி, மளிகை, காய்கறி…

மகனும் மகள்களும் சாதித்த மௌனத்தை வசுந்தரா அளவிற்கு சாவித்ரி புரிந்து கொள்ளவில்லை. எதிர்மறைச் சொற்களைக் கேட்க விரும்பாத தயக்கமும் தன் மக்களின் மீதான நம்பிக்கையுமாக, மாப்பிள்ளை வேறு எதிரேயே இருக்க, யார் எப்படி, என்ன பதில் சொல்வார்களோ என்று பயந்தார்.

ரமணகுமாரின் பதினைந்து வயதில் கணவரை இழந்தது முதல், எதற்கும் அவனையே கேட்டுப் பழகியவருக்கு, இப்போது இந்தப் பணமே அவனுக்காகத்தான் என்பதே பாரமாக அழுத்தியது.

“சங்கரா, வசு ஆஸ்பத்திரிக்கு கிளம்பறா. ரமணனோட ஆபரேஷ…”

அம்மா தன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே பாய்ந்த ஜெயா “இவர் அங்க பணம் தேவையா இருக்கும். தேவைன்னா கேட்கட்டுமேன்னு வெய்ட் பண்ணாம, நீ முன்னாலயே குடுத்துடுன்னு சொல்லித்தாம்மா அனுப்பினார்” என்றவள், ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து வசுந்தராவிடம் நீட்டினாள்.

ஜெயாவின் பாவனையில் திகைத்த வசுந்தரா அதை மறுப்பதற்கு முன்பே நல்லவேளையாக சுந்தரி குறுக்கிட்டாள்.

“அவசரப்படாதடீ ஜெயா, எல்லாரும் பேசி ஒரு தீர்மானத்துக்கு வருவோம்”

சங்கரும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் கண்களால் எச்சரித்தபடி அமுக்கு துமுக்கு என்றிருந்தனர்.

வசுந்தரா சுவற்றில் இருந்த சிறிய இரண்டடுக்கு ஷெல்ஃப், அலமாரி, ஷோ கேஸ், பிறை என பல பெயர்களால் அழைக்கப்படும் இடத்தில் இருந்த சிறிய அலாரம் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு இருபது. மெடிகல் காலேஜ் செல்ல அவர்கள் தெருவழியாக போகும் பஸ் அநேகமாக சரியாக ஏழரை மணிக்கு வந்துவிடும். நல்ல வேளையாக, இரண்டாம் வீட்டு வாசலில்தான் நிறுத்தம். இதை விட்டால் பஸ் ஸ்டான்ட் வரையோ, கொடிமரம் வரையோ நடக்க வேண்டும்.

வசுந்தரா அறைக்குள் சென்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து சிறிய பர்ஸில் வைத்து, ரவிக்கைக்குள் சொருகி, பஸ்ஸுக்கான சில்லறையைக் கையில் வைத்துக்கொண்டு பீரோவைப் பூட்டி வெளியே வந்தாள்.

வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்ட சில நொடிகளில்

“வாங்கோ” என்ற ஏகோபித்த வரவேற்புக்கிடையே, சாவித்ரியின் நாத்தனாரும் அவரது கணவரும் உள்ளே பிரவேசித்தனர். அவர்கள் சங்கரின் மனைவி ஹேமாவின் பெற்றோரும் கூட.

“என்னடீ சாவி இது, ரமணனுக்கு ஹார்ட் அட்டாக் வர வயசா இது, டாக்டர் என்ன சொல்றாராம்?” எனத் தொடங்கியவர்களிடமும் ஆபரேஷனைப் பற்றிக் கூறினர்.

“ஏ யப்பா, ஒன்னரை லட்சமா.. ஏழைக் குடும்பமும் ராஜ வைத்தியமும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு போ” என்ற அத்தையின் பார்வை மகளிடம் நிலைத்து ‘பணம் பத்திரம்’ என்றது.

“அம்மா, பஸ் வந்துடும், கிளம்பலாமா?” என்ற வசுந்தராவுடன் சாவித்ரி, சங்கர், தீபா மூவரும் புறப்பட்டனர்.

சுந்தரி “நாங்க எப்ப வரலாம்?”

“நாலுலேர்ந்து ஆறு விஸிட்டிங் ஹவர்ஸ். ஆனா, ஐஸியுல எல்லாரையும் பாக்க விடுவாளான்னு தெரியலை” என்ற வசுந்தரா, செருப்பை மாட்டிக்கொண்டு கடைசி படியில் இறங்குகையில்,

மாப்பிள்ளை நாகராஜன் “ஒரு லட்சம்ங்கறது சின்ன தொகையா என்ன, அதோட அத்தனை பணம் யார் கிட்ட இருக்கு? திரும்ப வராட்டாலும் பரவாயில்லைன்னு ஏதோ ஆளுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ குடுக்கலாம்” என்றதும்…

அதற்கு அத்தை “சரியாச் சொன்னேள், அப்படியே நாம குடுத்தாலும், ரமணனால அதை உடனே திருப்பி குடுக்க முடியுமா, முதல்ல இந்த ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு உத்தரவாதம் இருக்கா?” என்றதும்…

ஹேமா “வசுந்தரா மன்னியோட அண்ணா, தம்பிகளுக்கெல்லாம் இதை சொல்லியாச்சா?” என்றதும் அட்சரம் பிசகாமல் காதில் விழுந்தது.

*******************

திருச்சி சிங்காரத் தோப்பில் இருந்த அந்தத் தனியார் மருத்துவமனையின் தனியறையில், ஆண் செவிலியர்கள் இருவர் ரமணகுமாரை அறுவை சிகிச்சைக்காக ஆயத்தப்படுத்த, கூச்சத்தில் நெளிந்தவன், சுவர் ஓரமாக நின்றிருந்த மனைவியைப் பார்த்து அவஸ்தையாய், கவலையாய், கொஞ்சமே கொஞ்சம் பயமாய்ப் புன்னகைத்தான்.

அன்று வசந்தராவுடன் அம்மாவையும், மாலையில் தன் குடும்பத்தினரையும் பார்த்து பெரும்பாலும் தன்னை இயல்பாய் காட்டிக்கொள்ள முயன்ற ரமணனை மீறி வெளிப்பட்டது சோர்வு.

“தீபு, ஸ்கூலுக்குப் போகாம இங்க என்ன பண்ற?”

“ ம்மாஆ.., இப்ப என்னத்துக்கு அழற, எனக்கு ஒண்ணும் ஆகலை, ஆகாது”

“அக்கா, ஜெயா, நான் சரியாதான் இருக்கேன், சொல்லேன்டா சங்கர்… நீயும் ஏன்டா அழற?” என்றவன்

“உன்னை யாரு அவசர அவசரமா எல்லாருக்கும் ஃபோன் பண்ணச் சொன்னது?” என வசுந்தரா மீது பாய்ந்தான்.

அவன் உணர்ச்சி வசப்படுவதையும், ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் ஓயாமல் பேசுவதையும் பார்த்த வசுந்தரா கையைப் பிசைந்தாள்.

“அவரை அதிராம, அதிகம் அலட்டாம பார்த்துக்கங்க மேடம்” என்று வலியுறுத்திய மருத்துவரின் வார்த்தைகள் கலக்கத்தை கொடுக்க, “கொஞ்சம் அமைதியா இருங்…” என்றவளின் வாய் அவனது பார்வையில் தானாகவே பூட்டிக்கொண்டது.

சாவித்ரி சற்றே அதட்டலும் ஆதங்கமுமாக “அவளை ஏன்டா காயற, அவளால தனியா என்ன செய்ய முடியும், இதுல தீபு வேற. ஏன், எங்கிட்ட சொன்னது கூட தப்புங்கறியா?” எனவும்,

இரங்கிய குரலில்.
“அதுக்கில்லம்மா… இப்ப பாரு, எல்லாரும் வீடு, ஆஃபீஸ், ஸ்கூலை விட்டுட்டு தீடீர்னு வரணும்னா சிரமம் இல்லையா?” என்ற ரமணன் ஆபரேஷன் என்றதும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்.

“என்ன விளையாடறேளா, ஒன்னறை லட்ச ரூபா யார்கிட்ட இருக்கு? இன்னும் ரெண்டு நாள் இங்கேயே இருந்து மருந்து, மாத்திரை வாங்கிண்டு போய் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாப்போகும்”

ரமணனின் குரலில் அவன் சொல்வதுதான் சரி என்று ஆமோதித்துவிடும் அளவிலான உறுதியும் தீர்மானமும் தெரிய, வசுந்தரா மறுப்பாகத் தலையசைத்ததை யாரும் கவனிக்கவில்லை.

நாகராஜன் வேறு “ரமணனுக்குத் தெரியாதா அவன் உடம்பைப் பத்தி?” என ஆதரவு தெரிவித்தார்.

ட்யூட்டி டாக்டர் போட்ட சத்தத்தில் கூட்டம் கலைந்தது.

மருத்துவரும் நண்பன் சிவமணியும் அறுவை சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்திப் புரிய வைக்க, ஒரு வழியாக சம்மதித்தான்.

எல்லோரும் சென்றதும் ரமணகுமார் “வசு, அத்தனை பணத்துக்கு எங்க போறது?”

“பார்த்துக்கலாம்னா”

ரமணகுமாரை பெட்டில் இருந்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, அறைக் கதவைத் திறக்கவும், வெளியில் காத்திருந்த குடும்பம் முழுவதும் உள்ளே பிரவேசித்தனர். வசுந்தராவின் பெரிய அண்ணாவும் மன்னியும் வந்திருந்தனர்.

தலைக்குத் தலை தைரியமும் ஆறுதலும் சொல்லி, ரமணனை சூழ்ந்துகொள்ள மகளின் கைபிடித்து நின்ற வசுந்தரா பின்னுக்குத் தள்ளப்பட்டாள்.

ஸ்ட்ரெச்சர் நகர, நகர உணர்ச்சிமிகு அமைதி சூழ்ந்து கொள்ள, வசுந்தராவின் கண்களைச் சந்தித்த ரமணனின் பார்வையில் அவளுள் பனிக்குமிழ் ஒன்று உடைந்து உடலெங்கும் அதன் ஜில்லிப்பு பரவியது.

‘என்ன பார்வை அது, கல்யாணமான இந்த ஒம்போதரை வருஷத்துல இது வரை பார்க்காத பார்வை!!

சாவித்ரி “வைத்யநாதா, தைலாம்பா, துள்ளு மாவு இடிச்சு மாவிளக்கு போட்டுப் புடவை சாத்தறேன். எங் கொழந்தைக்கு நீதான் துணையா இருக்கணும்” என குல தெய்வத்திடம் உரக்க மனு போட்டார்.

தலமைச் செவிலியின் “இங்க என்ன திருவிழாவா நடக்குது, கூட்டம் போடாதீங்க” என்ற அதட்டலில், ஆண்கள் அனைவரும் மருத்துவ மனையின் வாசலில் பிள்ளையார் இருந்த மரத்தடிக்குச் செல்ல, பெண்கள் அறையிலேயே நாற்காலி, உதவியாளருக்கான கட்டில், என கிடைத்த இடத்தில் அமர்ந்துகொண்டனர்.

சாவித்ரி உள்பட யாருமே ரமணகுமார் படுத்திருந்த கட்டிலில் அமர முற்படாத நிலையில். வசுந்தரா மகளுடன் அதில் அமர்ந்து கொண்டாள்.

ஆபரேஷன் முடிய குறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் ஆகுமாம்.

அத்தை “என்னவோடீம்மா, ரேடியோ பொட்டியை திறந்து ரிப்பேர் பண்றாப்போல மனுஷா உடம்பையும் திறந்து போட்டு ரிப்பேர் பண்ற காலமா இருக்கு!”

மருத்துவம் கண்ட முன்னேற்றம், அவரவர்கள் அறிந்த, தெரிந்தவர்களின் நோய்களும் சிகிச்சைகளும் என உரையாடல் தொடர்ந்தது.

பிறப்பு, இறப்பு, குற்றம், விபத்து என எந்த செய்தியுமே கண்டு, கேட்டு, உள்வாங்கிய அடுத்த நொடியில் வரலாறாக மாறி விடுகிறது.

நிகழ்வின் பலாபலன்களை அனுபவிப்பவரைத் தவிர, ஏனையோருக்கு அது வெறும் விவாதப் பொருள் மட்டுமே.

தீபா உறங்கி விட, சிறிது நேரத்தில் ஃப்ளாஸ்க்கில் காஃபியுடன் சங்கர் வந்தான்.

உயிர்ச்சூட்டைப் பாய்ச்சும் சூடான திரவத்தை நிதானமாக ஊதிக் குடித்த வசுந்தராவை உலக அதிசயம் போல் வேடிக்கை பார்த்தனர்.

சுந்தரியும் ஜெயாவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொள்ள, வசுந்தராவின் மன்னியின் கண்களில் அத்தனை எள்ளல்.

அத்தை தன் மகள் ஹேமாவிடம் “உன் ஓர்ப்படிக்கு இருக்கற திண்ணக்கம்… புருஷன் உசிருக்குப் போராட எமலோகத்தோட வாசல்ல நிக்கும்போது கூட ரசிச்சு, ருசிச்சு எத்தனை நிதானமா காஃபியைக் குடிக்கறா பாரு. ஒரு அழுகை, ஒரு விசும்பல், ஒரு புலம்பல்… ம்ஹும்! ஒன்னு கிடையாது. அத்தனை ஆழ்மை!”

அத்தையின் நொடித்த குரலில் வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட வசுந்தர, ஏனைய பெண்களிடம் அதற்கான ஆமோதிப்பைக் கண்டாள்.

மாமியார் சாவித்ரியின் முகம் ‘இவ கொஞ்சம் அழுதாத்தான் என்ன, ஊருக்காகவாவது பால் குடிக்க வேண்டாமா?’ என்றதோடு, மருமகள் அழாததில் ஆதங்கம், அழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு என பாவங்களை வாரி இறைத்தது.

அழலாம்தான். அழுதால் பாரம் குறைவதோடு, அடுத்தவர்களின் அனுதாபம் கூடக் கிடைக்கலாம்தான். அதற்கு முதலில் அழுகை வர வேண்டுமே?

இந்த மூன்று நாட்களை இதுபோல் அழுது புலம்பிக்கொண்டே கடந்திருந்தால், ஆபரேஷனுக்குப் பணம்?

ஆறுதல் சொல்ல ஆட்களும் பொறுப்பேற்க சுற்றமும் பக்கபலமாக இருந்திருந்தால் ஸ்வரம் போட்டுக் கூட அழலாம்.

பதின் பருவத்திலிருந்து ரமணகுமாரின் உழைப்பை, இளமையை, இனிமையை இருபது வருடங்களாக உறிஞ்சி அனுபவித்தவர்கள் அவனது உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் செய்தது என்ன?

சகோதரிகளும் தம்பியும் சேர்ந்து இதை நீ திருப்பித் தர வேண்டாம்’ என்று சொல்லிப் பெரிய மனதுடன் நீட்டிய ஐயாயிரம் எங்கே, டாக்டர் கேட்ட ஒன்னரை லட்சம் எங்கே?

இதில் அன்று மாலை ரமணகுமாரை பார்க்க வந்த ஜெயாவின் கணவன் எல்லோருக்கும் ஒருபடி மேலே சென்று,

“எதுக்கும் இந்த ஆபரேஷன் செய்யறது அவசியமா, அதனால உயிருக்கு கியாரண்டி உண்டான்னு விசாரிச்ச பிறகு இதுக்கு செலவு செய்யணுமா, வேண்டாமான்னு ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை ஆபரேஷன் சக்ஸஸ் ஆகலைன்னா…”

“மாப்ளை”

“ரவி…” என்ற குரல்களை மீறி ஒலித்தது

“நீங்க யாரும் பணம் தர வேண்டாம். எது நடந்தாலும் பகவான் விட்ட வழி. ஆனா, என்னால ஆன முயற்சியை செய்யலைன்னா, என்னை என்னாலயே மன்னிக்க முடியாது” என்ற வசுந்தராவின் குரல்.

வருவதை ஏற்று கடந்து செல்லும் வசுந்தராவிடம் வெளிப்பட்ட திடமும் உறுதியும் மற்றவரை வாயடைக்கச் செய்யது.

பெற்றுக் கொள்கையில் அண்ணனின் கடமையாக, பொறுப்பாக, பாசமாகத் தெரிந்தது,அவர்களைக் கேட்டவுடன் பணமாக மாறி விட்ட மாயம்!

அவர்களது உதவியை “எப்படியும் இது போதாது. பின்னால வேணும்னா நானே கேட்கறேன்” என தன்மையாகவே மறுத்தவள், மறுநாள் முழுதும் அலைந்து திரிந்து எதையெதையோ வைத்து, விற்று அறுபதாயிரம் ரூபாயைத் தேற்ற, மீதிப் பணத்திற்கு சிவமணியும் இரண்டு வீடு தள்ளி இருக்கும் சுரேஷும் உதவ, ஒன்னே கால் லட்சத்துடன் திருச்சி வந்து, இதோ ரமணகுமார் இப்போது ஆபரஷன் தியேட்டரில்.

சிந்தனையின் தொடர்ச்சியாக ஆபரேஷன் தியேட்டர் என்றதும் வசுந்தராவிற்கு போகுமுன் ரமணன் பார்த்த பார்வை நினைவுக்கு வர, கலர் சோடாவைக் குடித்ததும் புளிப்பு, தித்திப்பு எல்லாம் சேர்ந்து தொண்டை மூக்கு, காது என நுரையாகப் பரவும் வாயுவின் புல்லரிப்பை உணர்ந்தாள்.

“கடங்காரா, இங்க எங்கடா வந்த, ரமணனுக்கு இப்படி ஆனதே நீ செஞ்ச காரியத்தாலதான். வெக்கம், கூச்சம்னு எதுவுமில்லாம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கன்னே இதையும் வேற இழுத்துண்டு வந்து நிக்கறான் பாரு” என்ற சுந்தரியின் குரலில் வசுந்தராவைச் சுற்றியிருந்த பெரிய நீர்க்குழி உடைய, நிமிர்ந்து பார்த்தாள்.

அறை வாயிலில் ஐந்து எட்டில் உயரத்தில் பொசுக்கென்ற உடம்போடு பாலாஜி நின்றிருக்க, அவனது உயரத்தை இன்னும் குறைத்துக் காட்டியபடி அவன் அருகில் ஆறடிக்கு ஒரு அங்குலம் கூட குறையாத உயரத்தில் ஓங்கு தாங்காய் உஷாவும் நின்றிருந்தனர்.

இருவரின் முகத்தில் இருந்த விசனமோ, விண்ணப்பமோ இறைஞ்சும் பார்வையோ அங்கிருந்த யாரையும் இளக்கவில்லை.

“மன்னி, வசு மன்னி, அண்ணாக்கு என்னாச்சு மன்னி?”

“...”

“ஒரு ஆத்திரம் அவசரம்னா கூட எங்களை எதுவும் கேக்க மாட்டியா வசு?” - உஷா.

சாவித்ரி “ஏன், உன்னைச் சேர்த்துண்டு வருஷக்கணக்கா தாயா புள்ளையா பழகினதுக்கு நீ எங்களுக்கு செஞ்சதெல்லாம் போறாதா, வந்துட்டா பெரிய்ய இவளாட்டமா… படகாமணி”

“எல்லாம் உம் மாட்டுப் பொண்ணு குடுத்த இடம்…” - சுந்தரி.

பதட்டமோ பச்சாதாபமோ சிறிதுமின்றி சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்த அத்தை, ஹேமா, வசுந்தராவின் அண்ணன் மனைவி…

பாலாஜி மீண்டும் “மன்னி, ப்ளீஸ்” என்றான் கெஞ்சுதலாக.

‘எங்களை மீறி அவனோட பேசிடுவியா நீ?’ என மௌனத்திலும் உரத்து ஒலித்த கேள்வியைச் சுமந்த பார்வைகள் வசுந்தராவைத் துளைத்தது.

மனிதர்களை அவர்களது குற்றம் குறைகளோடு ஏற்றுக் கொள்ளும் இயல்புடைய வசுந்தரா, திருமணமாகி வந்த நாளாய் மன்னி, மன்னி என்று தன்னைச் சுற்றி வந்த குட்டி மச்சினன் பாலாஜியை “உள்ள வாடா” என்றாள்.

 

Author: VedhaVishal
Article Title: உளமார நேசிக்கிறேன்! 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
67
அருமையான ஆரம்பம் 👏

உளமார நேசிக்கிறேன் - இந்த உள்ளம் வசுவா??🤔

கஷ்டத்தின் போது கை கொடுக்கும் சொந்தமெல்லாம் ஏதோ புராண இதிகாச காலம் மாதிரி முடிந்து விட்டது. 1988ல் இல்லை, இப்போவும் இப்படித்தான்.

குடும்பத்தில் நடப்பதை யதார்த்தமாக, அதையும் கவித்துவமான வார்த்தை நடையில் அழகாக சொல்லி இருக்கீங்க வேதாமா.
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
67
நான் கபிலனை எதிர் பார்த்தேன். சீக்கிரம் கூட்டி வாங்க.
 
Joined
Jun 19, 2024
Messages
8
😍😍😍

இவ்வளவு சொந்த பந்தங்களுக்கு நடுவுல எங்க, எப்படி நேசிக்க போறாங்களோ? 🤷🤷🤷
FB_IMG_1641052048108.jpg
 

Kayes12

New member
Joined
Aug 20, 2025
Messages
2
Another good novel coming up. Thanks to your dear Vedha mam, we love love love your write up.

mam, how often the episodes are posted? weekly ?
 
Top