• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
7. சித்திரைச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்


சித்ராவும் சுப்பமாளும் உள்ளே நுழைகையில் கண்களில் கண்ணீர் வடிய, தெய்வமாகி விட்ட தன் தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சத்தியபாமா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தார்.

அவர்களைக் கொண்டுவந்து விட்ட பூபதி வாசலில் நின்றபடியே அப்புறம் வருகிறேன் என்று சொல்லும் விதமாகத் தலையை அசைத்து விட்டு நகர, அவர்கள் சுமார் ஆறடி தூரத்தில் வருகையில் தடார் என்று சுப்பம்மாளின் காலில் விழுந்து இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு கேவிக் கேவி அழுதார் சத்தியமாமா.

பதறிப் போனார் சுப்பம்மாள். இதுவரை ஆசீர்வாதம் வாங்கக் கூட யாரும் அவர் காலில் விழுந்ததில்லை. “அண்ணி! எந்திரிங்க அண்ணி! என்ன ஆச்சு?” என்றவர் தரையில் அமர்ந்து சத்தியபாமாவைத் தூக்கி அமர்த்த, இரண்டு கைகளையும் கூப்பிய சத்தியபாமா, சித்ராவிடம், “நான் மன்னிப்பு கேட்கலாமான்னு தெரியல.. ஆனாலும் மன்னிச்சுக்கோம்மா!” என்று வாய்விட்டுக் கதறினார்.

அவரின் மறுபுறம் அமர்ந்து சித்ராவும் அவரைப் பிடித்துக் கொண்டாள். “அத்தை! அழாதீங்க.. நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு.. அவரை எங்கே?” என்று அமர்ந்தபடியே வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தாள்.‌

எழுந்து அறைக்குள் சென்று எட்டிப் பார்த்து விட்டு வந்தவள், ஒரு சொம்பில் நீர் கொண்டு வந்து சத்தியபாமாவிடம் கொடுத்தாள். கணவன் வந்திருப்பதற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிகிறதா என்று அவனது பர்ஸ் வைக்கும் இடம், சாவி மாட்டும் இடம் எல்லாவற்றையும் பார்த்தாள் சித்ரா.

மருமகன் வீட்டில் இல்லை என்பதும், இது தன் மருமகன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதும் வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பார்த்த சுப்பம்மாளுக்குப் புரிந்து போயிற்று.

கல்லாக இறுகி அமர்ந்தவர், “நான் முன்னமே சொன்னது தான் அண்ணி. நானும் நீங்களும் நிறைய விஷயத்துல ஒரே மாதிரி. கண்ணீரும், கவலையும் நமக்குப் புதுசா என்ன? சொல்லுங்க என்ன நடந்ததுன்னு, அதையும் கேட்போம்” என்றார்.

அவர் குரலில் ஒரு வெற்றுத் தன்மை இருக்க, மீண்டும் அழுதார் சத்தியபாமா. பின் அக்கம் பக்கத்துக்குக் கேட்குமே என்ற எண்ணத்தில் குரலைத் தழைத்துக் கொண்டார். சித்ரா கொண்டு வந்த தண்ணீரை வாங்கிக் கடகடவென்று குடித்தவர், அவளின் கையைப் பிடித்துக் கொண்டார்.

என்ன விஷயம் என்று தெரியாவிட்டாலும் அவர் அப்படிச் செய்தது அவளுக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது. கடந்த இரண்டு வாரங்களாகக் கணவனிடம் நெருங்கியதை விட சத்தியபாமாவிடம் அதிக நெருக்கம் ஏற்பட்டதாக அவள் உணர்ந்தாள். வேறு யாரிடமாவது சொன்னால் இதை ஒத்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் தோழிகளிடம் சொன்னபோது, “சும்மா சீன் போடாத.. புருஷனை விட புருஷனோட அம்மாவைப் பிடிக்குதுன்னு சொல்றவ உலகத்திலேயே இவளாகத் தான் இருப்பா” என்றார்கள்.

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவளுக்கு சத்தியபாமாவைப் பிடித்தது. அதுதான் உண்மை. அவரது கண்ணீர் அவளைப் பாதித்தது. அந்த உண்மை இப்போது அவளுக்கு இன்னும் நன்றாகப் புரிந்தது.

நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டார் சத்தியபாமா.‌ “சொல்றேன்.. ஒருவேளை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இதைச் சொல்லியிருந்தா, தாலி கட்டிட்டு வந்து நின்னாங்களே.. அப்பவே உங்க பொண்ணை அப்படியே கூட்டிட்டுப் போனாலும் போயிருப்பீங்க. அப்படி ஒரு சதவீதமாவது நினைப்பு இப்ப வந்தா என்னை மன்னிச்சிடுங்க.. அப்பவே எனக்கு விஷயத்தைச் சொல்ல வார்த்தை வாய் வரைக்கும் வந்துச்சு.. இதே உண்மைய அப்ப நான் சொல்லி இருந்தா நீங்க நம்பியிருக்க மாட்டீங்க. தான் வாய்ப்பு அதிகம். ஏன்னா பையன் லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்தது பிடிக்காம நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்றேன்னு நினைச்சிருப்பீங்க” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தியவர், தான் சொல்ல வந்த விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார்.

“முதல்ல எங்க வீட்டுக்காரரைப் பத்தி சொல்லணும். நான் இதோ பூவும் பொட்டுமாத் தான் இருக்கேன். அவர் இந்த உலகத்துல எங்கேயோ உயிரோட இருக்கார்னு நம்பிக்கிட்டு இருக்கேன். அவர் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆள் செத்துப் போயிட்டாருன்னு எந்த நியூஸும் வரல. அதனால சுமங்கலியா வேஷம் போட்டுட்டு இருக்கேன். சரி அதெல்லாம் தேவையில்லாத விஷயம்.. முகுந்தனோட அப்பா ஒரு ஒன்னாம் நம்பர் ஃப்ராடு. எப்படா வாய்ப்புக் கிடைக்கும், யாரை ஏமாத்தலாம்னு பார்ப்பார். இதுவரை நாலு ஊர் மாறியிருக்கேன். எல்லா ஊர்லயும் பிரச்சினைன்னு வரும்போது, ‘காசைத் திருப்பிக் குடுக்குறியா, இல்ல உன் பொண்டாட்டியைக் கூட்டி கொடுக்கிறியா?’ அப்படின்னு எல்லாரோட பார்வையும் என் மேல தான் திரும்பும். இது அஞ்சாவது ஊர். நாலாவதா இருந்த ஊர்ல நிறைய பேர் கிட்ட பணத்தை ஏமாத்திட்டு ஊரை விட்டுப் போனவர் தான், அப்ப அவரை வெட்டணும், குத்தணும்னு நிறைய பேர் தேடிட்டு இருந்தாங்க. யாரும் வெட்டிப் போட்டுட்டாங்களான்னு கூட எனக்குத் தெரியாது. ரெண்டரை வயசா இருந்த முகுந்தனைக் கூட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்தேன். வீட்டுக்காரர் வெளியூரில் இருக்காரு, வெளிநாட்டுல இருக்காருன்னு பொய் சொல்லி மூணு நாலு வருஷம் ஒரு ஏரியால இருந்தேன். அப்புறம் அங்க இருக்கிறவங்க சந்தேகமா பாக்கவும் அடுத்து வேறு ஏரியாக்கு மாட்டேன், அப்புறம் இன்னொரு ஏரியா. இந்த ஊர்லயே நான் குடியிருக்குற அஞ்சாவது ஏரியா இது. எங்கே நான் குடியிருந்தாலும், அங்க என்ன பத்தி ஏதாவது கதை கட்டி விட்டுடுவாங்க. தனியா வசிக்கிற ஒரு பொண்ணு எல்லார் கண்ணையும் உறுத்திக்கிட்டே தான் இருப்பா.. அவளுடைய கடந்த கால வாழ்க்கையைப் பத்தி வதந்தி பரப்புவாங்க, அவளோட ஒழுக்கம் சரியில்லம்பாங்க, எல்லாரோட அடி மனசுலயும் அவ ஒழுக்கம் இல்லாதவளா இருந்துட மாட்டாளா அப்படிங்கற எதிர்பார்ப்பு இருக்கும். அதுதான் எனக்கும் நடந்துச்சு. லைன் வீடு மாதிரி குடியிருந்த இடத்துல, இந்த அம்மா என் புருஷன வெச்சிருக்குது, பால்காரனை வச்சிருக்குது, பொட்டிக் கடைக் காரனை வைத்திருக்கிறதுன்னு ஒரு பாட்டம் புரளி வரும். தாங்க முடியாமப் போறப்ப வீடு மாறுவேன். அதுக்கப்புறம் தான் எப்படியோ சொந்த வீடு வாங்கினேன். அப்ப எனக்கு உதவியா இருந்தது என்னுடைய பழைய நகைகள் தான். எவ்வளவு ஏமாந்தாலும் அதை மட்டும் நான் என் புருஷன் கிட்ட கொடுக்கல.

எவ்வளவோ, நல்ல பழக்கங்கள் சொல்லிக் குடுத்துத்தான் வளர்த்தேன், ஆனால் வளர வளர முகுந்தனும் அவங்க அப்பா மாதிரியே வர ஆரம்பிச்சான். பள்ளிக்கூடம் படிக்கறப்ப ஏதாவது சொல்லி பிள்ளைகளோட பென்சில் ரப்பர்னு வாங்கிட்டு வந்துருவான். ஆனா அவன் வாய்ஜாலத்துக்கு எல்லாரும் அவனைப் பார்த்து நம்பிருவாங்க. கொஞ்ச நாளிலேயே அவனைப் பத்தி புரிஞ்சிக்குவாங்க. அவனை நம்பி கல்யாணம் வரை வந்தது நீ தான். ஆனா உன்னை அவன் பார்த்த பார்வையில ஒரு வித்தியாசம் தெரிஞ்சுது, உறுதி தெரிஞ்சுது. உன்னை ஏமாத்த மாட்டான் இனிமேல் திருந்திடுவான்னு நெனச்சேன். இனிமே அது எதுக்குமே வாய்ப்பில்லை சித்ரா!”

“அத்தை, ஏன் அத்தை? அவரை எங்கே? போலீஸ் ஏதும் புடிச்சிட்டு போயிடுச்சா?”

“அப்படி புடிச்சுட்டுப் போனாக் கூட தான் சந்தோஷப்பட்டு இருப்பேனே.. எப்பவும் சின்ன அளவுல ஜோசியம் பரிகாரம் ஏமாத்திக்கிட்டு இருக்கிறவன், இப்ப ஆழம் தெரியாம காலை விட்டுட்டான்.. அடிதடி ஆள் அம்புன்னு இருக்கிற ஒரு பெரிய மனுஷர்கிட்ட பரிகாரம் பண்றேன், காசிக்கு போய் ஏதோ பூஜை பண்றேன்னு சொல்லி அஞ்சு லட்சத்தை வாங்கி இருக்கான். அதை எப்படி செலவழிச்சான்னு தெரியல.. அவர் இவனை தூக்கி வச்சு நாலு நாள் கொடுமைப்படுத்தி இருக்கார்.. அங்கே இருந்து தப்பிச்சு முகுந்தனும் அவங்க அப்பா மாதிரியே ஊரை விட்டுப் போயிட்டான். பெத்த தாய் இல்லையா? எனக்குத் தெரியும்.. அவன் இனிமே இந்த ஊர்ப் பக்கமே வர மாட்டான்”

அப்படியே இடிந்து போய் அமர்ந்தாள் சித்ரா. “அண்ணி அஞ்சு லட்சம் தானே? சித்ராவுக்குப் போட்ட நகைகள் இருக்குல்ல.. அதை வித்து பணத்தைக் கொடுத்துடலாம். மாப்பிள்ளை கிட்ட ஃபோன் போட்டு வரச் சொல்லுங்க.. அப்புறம் எப்படியாவது உழைச்சுப் பொழைச்சுக்கலாம்” என்றார் சுப்பம்மாள்.

“தகுதி இல்லாதவங்களை நம்பி நம்ம வாழ்க்கையோட ஆதாரமாய் இருக்கிற பொருளை இழக்கக் கூடாது.. அந்தப் பெரிய மனுஷனுக்கு பணம் ஒரு விஷயமே இல்லை.. தன்னை ஏமாத்த ஒருத்தன் துணிஞ்சுட்டானே, அப்படிங்கற வெறில தான் போட்டு அடிச்சிருக்காரு.. இங்கே இருந்தா கொன்னே போட்டுருவார்.. இவன் பல ஊர்களுக்கும் போய் வந்து பழக்கம் இருக்குறவன். இந்நேரம் எங்கேயாவது போய் செட்டிலாகி இருப்பான். வரவே மாட்டான்”

“என்று சொல்றீங்க அண்ணி? பொண்ணு வாழ்க்கையை விட நகைங்க தான் பெருசா? நீங்களே மாப்பிள்ளையை வர வேணாம்னு சொல்லிட்டீங்களா? எந்த ஊர்னு தெரிஞ்சா சொல்லுங்க அண்ணி.. அங்கேயே கூட சித்ராவைப் போய் விட்டுட்டு வருவோம்”

“நான் சொன்னேனே.. என் புருஷனை நம்பி நான் என் நகைகளைக் குடுக்கலன்னு.. குடுத்திருந்தாலும் அதையும் தொலைச்சிட்டு இன்னும் கேப் பாரு.. வேறு எதைக் குடுத்தாலும் வேட்டு வச்சிட்டு நின்னிருப்பாரு.. அதே மாதிரி தான் இவனும். இதுவரை நியாயமா சம்பாதிச்சு ஒத்த ரூபாய் கூட அவன் கொண்டு வந்ததில்லை.. அவன் உழைப்புல ஒரு வாய் சாப்பிட்டதும் இல்லை.. குந்தித் தின்னா குன்றும் கரையாதா? அப்படியே அவன் வீட்டோட இருந்து சாப்பிட்டாக் கூட சித்ரா வேலைக்குப் போய் காப்பாத்துவா. ஆனா அவனுடைய டாம்பீக செலவுகளுக்கு அது ஒத்து வராது. அவனால வெளியே போகாம, வார்த்தைகளால் வலை விரிச்சு, மத்தவங்களை ஏமாத்தாம இருக்கவே முடியாது. சித்ரா! வாழ்க்கை உன்னோடது..‌ உன் வாழ்க்கையைப் பத்தி தெளிவா முடிவு எடுத்துக்கோ.. உனக்கு ரொம்பச் சின்ன வயசு”

சுப்பம்மாளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தோற்றத்தைப் பார்த்து முகுந்தன் மீது அவருக்கு மரியாதை வந்திருந்தது. மருமகன் என்றேனும் வந்துவிட மாட்டானா என்று ஆசைப்பட்டார். மகளுக்குத் திருமணம் என்பதை ஏற்றுக் கொள்ளவே நாட்களாயிற்று, அதற்குள் மருமகனைக் காணவில்லை, மகள் திருமண வாழ்வு அவ்வளவுதான் என்றால் எப்படி இருக்கும்.

சம்மந்தி அம்மா இப்படி சொல்கிறார்களே, அவருக்கும் சண்டை பிடித்து பழக்கம் இல்லை. இப்படிக் காலில் விழுந்து அழும் பெரிய மனுஷியிடம் என்னவென்று சண்டை பிடிப்பது? அதுவும் அவரா வந்து பெண் கேட்டார்? இந்தப் பெண்ணே ஓடி வந்து விட்டது, குறைந்தபட்சம் அந்த வரவேற்பாவது வைக்காமல் இருந்திருக்கலாமோ, அடுத்தும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன, மனது வலிக்கிறதே, பேசாமல் எல்லாரும் பூச்சி மருந்து குடித்து விட்டால் என்ன? அப்படியே வெறித்துப் பார்த்தபடி யோசித்த சுப்பம்மாள் சிந்தனையை சத்தியபாமாவின் குரல் கலைத்தது.

“என்ன அண்ணி? செத்துப் போயிடலாம்னு தோணுதா? நம்ம வாழ்க்கை ரொம்பப் பெருசு. வெறுமனே ஒரு மாசம் பழகி இரண்டு வாரம் குடித்தனம் நடத்தின ஒருத்தனுக்காக நாம இத்தனை பேரும் சாகிறது நல்லா இருக்காது. உங்க சின்னப் பிள்ளைங்க ரெண்டு பேரும் என்ன பாவம் பண்ணிச்சுங்க? இப்படி எல்லாம் பொம்பளைங்க கல்லானாலும் கணவன்னு யோசிக்கிறதுனால தான், இந்த ஆம்பளைங்க நம்மளை செருப்பு உதறுற மாதிரி உதறிட்டுப் போறாங்க. நான் சொல்றேன், முகுந்தனை உதறிட்டு நாம வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைப்போம் அண்ணி!” என்றார் கண்களைத் துடைத்துக் கொண்டு.

சித்ரா, “அத்தை! அது உங்க மகன்…!”

“இருக்கட்டுமே.. மகனாவே இருக்கட்டுமே எனக்கு அவன் ஒருத்தன்தான் உறவு. உனக்காவது இத்தனை பேர் இருக்காங்க.. வாழ்க்கையில நான் பட்ட கஷ்டத்தால, எவ்வளவு சொல்லிச் சொல்லி வளர்த்தேன், தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. என் மகன்ங்கறதால என்னால உண்மைகளை மறுக்க முடியாதே, நியாயத்தைச் சொல்லி தானே ஆகணும். இதே நேரம்.. நீ என் மகளாய் இருந்து, முகுந்தன் வேற வீட்டுப் பையனா இருந்தா நான் என்ன முடிவு எடுத்திருப்பேன்? அதையே தான் ஒ
இப்பவும் சொல்றேன்.

கஷ்டம் தான். ஆனா மனசு வச்சா வெளியே வந்துடலாம். மனுஷங்க எனக்கு இதுவரைக்கும் நிறைய ஏமாற்றத்தைத் தந்திருக்காங்க. ஆனால் நடுநடுவுல பாசத்தைக் காட்டாதவங்களும் இல்லை. ஏரியா முழுக்க என்னை விரட்டணும்னு நினைக்கும் போது யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு வாடகைக்கு வீடு கொடுத்திருக்கான். ஏதோ ஒரு பக்கத்து வீட்டுக்காரி உடம்பு சரியில்லாதப்ப கஞ்சி வச்சுக் குடுத்திருக்கா.. அதை கைத்தடி மாதிரி நினைச்சு தான் நான் முன்னேறி வந்திருக்கேன்.. இப்ப கூட யாராவது கை கொடுத்துக்கிட்டே தான் இருக்காங்க.. புருஷன் இல்லேன்னாலும், புள்ளை இல்லேன்னாலும் எனக்குன்னு கடவுள் கொடுத்த வாழ்நாள் இருக்கு.. இது நான் பல முறை யோசிச்சு யோசிச்சு எடுத்துக்கிட்ட தீர்மானம்.. கடந்து போவோம். வா!” என்றார் சத்தியபாமா.

“அத்தை.. இப்ப ஏதோ ஒரு பாட்டி இறந்துட்டாங்கன்னு கிராமத்துக்குப் போனதா சொன்னீங்களே.. அங்க போய் நாம எல்லாம் இருக்க முடியாதா?” ஏனோ இப்படி கடத்தல், தலைமறைவு, ஏமாற்று இதெல்லாம் அவளுக்கு வித்தியாசமாகத் தோன்றியது.

“பாட்டியும் இல்ல.. பேத்தியும் இல்ல..” ஒரு நிமிடம் தாமதித்து கண் மூடி திறந்த சத்தியபாமா,

“அடுத்த உண்மையைச் சொல்றேன். மனசை திடப்படுத்திக் கேளுங்க. சத்தியபாமாங்கிற பேரை எனக்கு பொருத்தம் இல்லாம வச்சிட்டாங்க.. இந்தப் பெயரைக் கொடுத்த கடவுள் வாழ்க்கை முழுக்க மறுபடியும் மறுபடியும் பொய் சொல்ல வச்சுட்டார். அனேகமா இனிமே அதுக்கு அவசியமில்லைன்னு நினைக்கிறேன்..‌ நான் இப்ப ஒரு வாரமும் ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கேன். அந்தப் பெரிய மனுஷன் நானும் அவர்கிட்ட பணம் வாங்கினேன் என்று சொல்லி என் பேரையும் சேர்த்து போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டார். நான் அவரை ரிசப்ஷன் அன்னிக்கு வரை பார்த்ததில்லை. உங்களுடைய ரிசப்ஷன் அன்னைக்கே ராத்திரி முகுந்தன் வீட்டுக்கு வரல.. நினைவு இருக்கா? அவனைத் தூக்கிட்டு போய் அவன் கையில இருக்குற வாட்ச், மோதிரம் எல்லாம் புடிங்கிட்டு தான் விட்டிருக்காங்க.. அன்னைக்கு ராத்திரியும் நான் தான் போய் கெஞ்சிக் கூத்தாடி அவனை மீட்டுக்கொண்டு வந்தேன். அப்பவும் இவன் பணத்தைக் கொடுத்துடுறேன்னு சொன்னான். அடுத்து ஒரு வாரம் டைம் கொடுத்தும் அவன் பணத்தைப் புரட்டலை. அந்த ஆள் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாரு.. நீ வேலைக்கு போயிருந்த நேரம் மஃப்டில வந்த ரெண்டு லேடி போலீஸ் என்னை கூட்டிட்டுப் போயிட்டாங்க. தகவல் தெரிஞ்சு முகுந்தன் ரெண்டு நாள் எங்கேயோ தலைமறைவாயிட்டான்.. அவரோட ஆட்கள் அவனைத் தேடிப் பிடிச்சு அவரோட தோட்டத்துல கட்டிப் போட்டுட்டாரு. நான் ஒரு வாரமா பெண்கள் சிறையில் இருந்தேன். அங்கே ஒரு போலீஸ்கார அம்மாவோட ஃபோனை வாங்கித் தான் உனக்குக் கூப்பிட்டேன். இதோ இப்ப வந்தானே ஆட்டோக்காரப் பையன், பூபதி, அவன் தான் போலீஸ் ஸ்டேஷன்ல என்னை எதேச்சையாப் பார்த்துட்டு, என்னை எதுவுமே விவரம் கேட்டான். வக்கீல் ஏற்பாடு பண்ணி, அவனே ஜாமீன் கையெழுத்துப் போட்டு, இன்னொரு ஆளையும் ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணி என்னை ஜெயில்ல இருந்து வெளியே எடுத்தான். அதைத்தான் சொன்னேன். பெத்த மகன் கைவிட்டாலும் பெறாத பிள்ளைங்க நிறைய உலகத்துல இருக்குதுன்னு.. இதெல்லாம் பார்த்த பிறகும், முகுந்தன் திரும்பி வருவான். அவன் கூட சேர்ந்து வாழலாம்னு நினைச்சுகிட்டு இருக்கியாம்மா? வேண்டாம்மா! அப்படியே அவன் வந்தாலும் நித்தமும் கண்ணீராப் போகும் உன்னோட வாழ்க்கை”

இவ்வளவு மோசமானவனா முகுந்தன்? அம்மா தனக்குப் பதில் கைதாகி சிறையில் இருக்கிறான் என்று தெரிந்த பின்னும் அவன் வந்து சரணடையாமல் இப்படி இருந்திருக்கிறானே.. தான் செய்த குற்றத்திற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டால் என்ன? அவன் மேல் இருந்த கொஞ்ச நஞ்சம் மரியாதையும் விட்டு போயிற்று சித்ராவுக்கும், சுப்பம்மாளுக்கும்.

சற்று நேரம் யாரும் எதுவுமே பேசவில்லை. சுப்பம்மாளின் மனதில் ஏகப்பட்ட ஆதங்கங்கள். சிறைக்குப் போய்விட்டு வந்திருக்கிறாளா தன் சம்பந்தி? சித்ராவுக்குத் தங்கள் மாவட்டத்தில் பெண்கள் சிறை இருக்கிறது என்ற செய்தியே புதிது. அப்படியே ஆனாலும் கொலை செய்தவர்கள், கஞ்சா கடத்தியவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் சிறைக்குப் போவார்கள் என்பது அவள் எண்ணம். சுப்பம்மாளுக்குமே அப்படித்தான். தன்னைப் போல ஒரு குடும்ப பெண்ணை அப்படியா பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்? தான் இப்பொழுது எதைப் பேசினாலும் தவறாகவே போய் விடக்கூடும் என்று நினைத்தார். முதலில் மௌனத்தைக் கலைத்ததும் அவர்தான்.

“சரி அண்ணி! நீங்க சொல்றதை யோசிச்சுப் பார்க்கிறோம்.. எப்படியும் இரண்டு நாள் கழிச்சு குழப்பம் எல்லாம் விலகி ஒரு தீர்வு மனசுல தோணும்னு நம்புறேன். வர்றியா சித்ரா? கிளம்புவோம்” என்று சுப்பம்மாள் சொல்ல,

“அத்தையைத் தனியா விட்டுட்டு நான் எப்படிம்மா வர்றது? அத்தையையும் கூட்டிட்டுப் போகலாம்” என்றாள் சித்ரா.

-தொடரும்
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
மகன் தவறு செய்ய
மறைக்காமல்
மருமகளுக்கு சொல்லி
மகளாக எண்ணி
மறுகி அழும்
மாமியார்....அற்புதம்.....
 
Top