• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
344
இதயமே! இதயமே!

மனிதர்களில், விலங்குகளில் அவர்தம் குணங்களைப் பொறுத்து எத்தனையோ வகைகள் இருப்பது போல நோயாளிகளிலும் சில குறிப்பிட்ட வகைகள் உண்டு. 'எனக்கு எதுவும் வராது, நான் எந்த மாத்திரையும் சாப்பிட மாட்டேன், ஜிம் பாடியாக்கும் எனக்கு' என்று கூறுபவர்கள் ஒரு வகை. சின்னச் சின்ன அறிகுறிகளையும் மிகப்பெரியதாகக் கற்பனை செய்பவர்கள் மற்றவகை.
இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளுக்கும் நடுப்பட்ட வெவ்வேறு நிலைகளில் பல நோயாளிகள் உண்டு.

இந்த மாதம் பத்தாம் தேதியன்று ஒரு மாதத்திற்கான மாத்திரைகளைக் கொடுத்து விட்டு அடுத்த பத்தாம் தேதியன்று மாத்திரை வாங்க வரவேண்டும், அன்று சர்க்கரை நோய், யூரியா இவற்றைப் பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினால் ஒன்பதாம் தேதியே எல்லாப் பரிசோதனைகளையும் முடித்துவிட்டு வந்து விடுபவர்கள் உண்டு. வேறு சிலரோ முப்பது நாள் மாத்திரையை நடுநடுவே விட்டுவிட்டு 40, 45 நாட்கள் வரை இழுத்தடித்து அதன் பின்பும் நான்கு நாட்கள் கழித்தே வருவார்கள். 'ஏன் இவ்வளவு தாமதம்?' என்று கேட்டால், 'அதான் மாத்திரை இருந்துச்சே.. எனக்கு ஒண்ணுமே செய்யல.. நான் நல்லா இருக்கேனே' என்பார்கள். இதில் இதய நோயாளிகளும் அடக்கம்.

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பாக மாரடைப்பு அல்லது இதய நோய் வந்துவிட்டாலே சீக்கிரம் வாழ்நாள் முடிந்து விடுவது தான் நிதர்சனமாக இருந்தது. தற்போதைய மருத்துவ வசதிகளும், பரிசோதனைகளும், அறிவியல் அற்புதங்களான மாத்திரைகளும் வந்தபிறகு பலரின் வாழ்நாள் நீடிக்கப்பட்டிருக்கிறது.

"எனக்கு நாற்பது வயதில் மாரடைப்பு வந்தது, இப்பொழுது எழுபது வயதாகிறது. தவறாமல் மாத்திரை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகிறேன். எந்த தொந்தரவும் இல்லை" என்பவர்கள் இங்கு அதிகம். மூத்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில், "நான் என் மருத்துவப் பணியை ஆரம்பித்த புதிதில் இதயத்தின் செயல்திறன் 45 க்குக் குறைந்தாலே அந்த நோயாளிக்கு அடுத்து சில வாரங்களோ மாதங்களோ தான் வாழ்நாள். ஆனால் இப்போது 15 சதவீத செயல்திறனுடன் கூட என்னிடம் எண்ணற்ற நோயாளிகள் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

எந்தக் காலத்திலும் மனிதனை பயமுறுத்துவதில் முதலிடம் பிடிப்பது இதய நோய் தான். அதற்குக் காரணம் மனிதனின் இதயம் உறக்கத்திலும் சரி, விழிப்பிலும் சரி இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதயத்திற்குப் போகும் ரத்தம் தடைபட்டால் அதன் செயல்திறன் வெகுவாகக் குறைகிறது. இதயத்திற்கு மூன்று முக்கிய ரத்த குழாய்கள் (coronary arteries) இரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. உடல் முழுவதுமே ஊட்டம் கொடுக்க ரத்தத்தை அனுப்பும் இதயத்திற்கு இந்த மூன்று ரத்த நாளங்களும் நன்றாக இருப்பது அவசியம்.

வயது முதிர்வினாலோ புகை, மது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்ற பிற காரணிகளாலும், மரபணு, உணவு போன்ற காரணங்களாலும் இந்த ரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். அதில் ஏதாவது ஒன்றுக்கு அடைப்பு ஏற்பட்டால் அந்தக் குறிப்பிட்ட ரத்தநாளத்தால் பயன்பெறும் இதயத்தசை (cardiac muscle) செயலிழக்கும் அபாயம் இருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டால் மார்பில், கையில் வலி, சில சமயங்களில் மேல் வயிற்றில் வலி, வியர்வை, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்றி நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்குள் சென்றுவிடவேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு தசைநார் செயலிழக்கும். இதை மருத்துவ உலகினர், "மினிட்ஸ் மீன்ஸ் மஸில்" (Minutes means muscle) என்பார்கள். அறிகுறிகளையும், ஈஸிஜி போன்ற பரிசோதனைகளையும் செய்து பார்க்கும் மருத்துவர் உடனடியாக ரத்த நாளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பைக் கரைப்பதற்கான ஊசியை செலுத்தி விடுவார். அந்த ஊசியை செலுத்தி ஓரிரு நிமிடங்களிலேயே இதய வலி குறைந்து, துடிப்பும் உடல்நலமும் சீரடைவதைப் பார்க்கமுடியும்.

ஏற்கனவே இதய நோய் ஏற்பட்ட நோயாளிகளில் அல்லது எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம் என்ற அபாயம் உள்ளவர்கள் நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைக்குப் போகும் முன்பே அதை முதலுதவியாக பயன்படுத்த அவருக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும்.


சில சமயம் இதயத்தில் துடிப்பை உற்பத்தி செய்யக்கூடிய பவர் ஹவுஸ் போன்ற Sinoatrial node பகுதிக்கு வரும் மிகச் சிறிய இரத்த நாளங்கள் அடைத்துக் கொள்ளக் கூடும். அப்போது இதயத் துடிப்பில் சீரற்ற நிலையும் அதனால் தலைசுற்றலும் ஏற்படும். மார்பு வலி இல்லை என்பதால் அதை சாதாரணமாக நினைத்துக்கொண்டு சிலர் கைவைத்தியம் செய்ய முயல்வார்கள்.

இதயத்தின் கீழ்ப்பகுதி (inferior wall) பாதிக்கப்படும் போது அது மார்பில் வலியை ஏற்படுத்தாமல் வயிற்றின் மேற்புறத்தில் வலி உருவாகும். அதனால் நோயாளி வயிற்று வலி என்று நினைத்து அல்சர் மாத்திரையோ டானிக்கோ விழுங்கித் தாமதப்படுத்துவதும் நடக்கும். ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை வலியின் தன்மை குறித்துக் கேட்டால், "யானை ஏறி மார்பில் அழுத்தியது போன்ற ஒரு உணர்வு இருந்தது" என்று சொல்வார். 'அழுத்துவது‌‌ போன்ற' என்ற வார்த்தை மிகவும் முக்கியம். அப்படி இருந்தால் அது மாரடைப்பாக இருப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. எதுவாக இருந்தாலும் ஒரு சந்தேகம் என்று தோன்றி விட்டால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவரையும் மருத்துவமனையும் நாடி விட வேண்டும். என் குடும்ப மருத்துவரைத் தான் பார்ப்பேன். அவர் நாளை மாலை தான் வருவார் என்றோ, வெளியூரில் இருக்கிறேன் ஊருக்குப் போய்ப் பார்த்துக் கொள்கிறேன் என்றோ விட்டு விட்டால் நாம் திட்டமிட்டுக் காத்திருக்கும் கணங்கள் வராமலேயே போய் விடக் கூடும்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல சுற்றுலா தலத்தின் அருகிலுள்ள சிறு நகரத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தேன். அந்த சுற்றுலா தலத்திற்கு வரும் வெளியூர் வாசிகள் பலரும் விபத்து, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளால் மருத்துவமனைக்கு வருவது உண்டு. ஒரு ஞாயிறன்று மாலை கல்கத்தாவிலிருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் ஒரு 65 வயது பாட்டியைக் கொண்டு வந்திருந்தனர். அவர் தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் இருந்தார். இதயத் துடிப்பே இல்லாத நிலை. 'நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்க' என்பதை உடைந்த ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாகக் கூறினார்கள். உறவினர்கள் நன்கு படித்த வசதியானவர்கள் என்பது தோற்றத்திலும் பேச்சிலும் தெரிந்தது.

"எத்தனை மணியிலிருந்து அறிகுறிகள் இருந்தது?" என்று கேட்டதற்கு அந்த உறவினர் மென்று விழுங்கினார், பதில் கூறவில்லை. அவர்களை அழைத்து வந்த ஆட்டோகாரர், "அதை ஏன்மா கேக்குறீங்க.. நாலு மணி நேரமா இவங்கள வச்சுக்கிட்டு ஒவ்வொரு ஹாஸ்பிடலா போனோம்.. அந்த அம்மா அப்ப எல்லாம் நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க.. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, இந்த ஊர்ல பிரைவேட் டாக்டர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க, கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் போகலாம்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.. கேக்கவே இல்ல.. இப்பக் கூட இங்க கட்டாயப்படுத்தி தான் கூட்டிட்டு வந்தேன், இந்த காம்பவுண்ட்குள்ள நுழையும் போது ரொம்ப முடியாமப் போயிட்டாங்க" என்றார் உள்ளார்ந்த வருத்தத்துடன்.

முதன் முதலில் அவர் சென்ற மருத்துவமனை ஒன்றில் அவருக்கு ஈசிஜி எடுத்திருந்தனர். ஆனால் மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் ஈசிஜி எடுத்து அவரும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாகப் போக வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த ஈசிஜியைப் பார்க்கையில் ஓரளவு ஆரம்பநிலை தான். அந்த நிலையில் வந்திருந்தால் சிகிச்சைக்கான அத்தனை வசதிகளும் எங்களிடம் இருந்தன. அரசு மருத்துவமனைக்கு வர அவர்களுக்கு மனமில்லாமல் போனதுதான் பெரும் சோகம். 'எங்க ஊர் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இவ்வளவு வசதிகள் இருக்காது, இங்கே இவ்வளவு இருக்கும்னு தெரியாமப் போச்சு. எப்படியாவது ஊருக்கு அனுப்புறதுக்கு எங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்து, ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணி அனுப்பி வைங்க' என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். அந்த நிலையில் அதற்கு மேல் எங்களாலும் எதுவும் செய்ய இயலாது என்பது தான் உண்மை.

ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதை ஆணித்தரமாகக் கூறிய மற்றுமொரு தருணம் அது. ஆஸ்பிரின் போன்ற மாரடைப்பைத் தடுக்கக்கூடிய மாத்திரைகளை எடுத்தால் பெரும்பாலும் மாரடைப்பைத் தடுக்க முடியும். மாரடைப்பு வரும் வாய்ப்புள்ள சூழ்நிலையில் இருக்கும் High risk நோயாளிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது ஒன்றைத் தான், இதயப் பகுதியில் வலி என்றாலே பயம் வேண்டாம், அருகில் கிடைக்கும் மருத்துவ உதவி எதுவோ அதைப் பற்றிக் கொள்ள வே
ண்டும் என்பதுதான் அது.
 

Author: SudhaSri
Article Title: இதயமே இதயமே
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top