• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார்! 3

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
5
Mr. மாமியார்! 3


வா
மனமூர்த்தியின் வருகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகம் ஒளிர்ந்தது ‘லலிதாலயம்.’ ஜன்னல்கள், குஷன்கள், சோஃபா எல்லாம் தலைதீபாவளி மாப்பிள்ளை போல் புத்தாடையில் பளபளக்க, தூசியைக் கண்டு பிடிக்க வேண்டுமெனில் போலீஸில் புகார் அளிக்கும் அளவிலான தூய்மையில் மிளிர்ந்தது வீடு.

கண்ணாடிக் குவளைகளில் பலவண்ண ரோஜாக்களும், டெரகோட்டா உருளியில் மல்லிகையும், அவை மிதந்த நீரில் பச்சைக் கற்பூரமும் மணத்தன.

வீட்டின் சுவருக்குப் போட்டியாக முடி முதல் அடி வரை வெண்ணிற வேந்தராகக் காட்சி அளித்தார் தாத்தா ரத்னம்.

சந்தன நிறத்தில் கருநீலக் கரையும், சிவப்பும் நீலமும் கலந்த ப்ரிண்ட்டும் போட்ட சிங்கப்பூர் சில்க் புடவையில் பாந்தமாகத் தயாராகி வந்தது… ஆம்,
லக்ஷ்மியேதான்.

“பேசாம வேஷ்டிக்கு பெல்ட் போட்டுக்கவாடீ லக்ஷ்மி, நிக்கவே மாட்டேங்குது” என்றபடி வந்த கணவரை முறைத்தவள் “நீங்களே இப்படி இருந்தா உங்க பொண்ணு என்ன செய்யறாளோ, ரூமுக்குள்ள போய் ரெண்டு மணி நேரமாகுது. முதல்ல அவளைப் போய் கிளப்புங்க”

ரங்கராஜன் ‘ஏன், நீ போறது?’என்ற பார்வையுடன் மகளது அறையை நோக்கி நடந்தார்.

“லலிதம்மா”

மூன்று நிமிடக் காத்திருப்புக்குப் பின் “உள்ள வா டாடீ” என்ற மகளின் குரலில் அறைக்குள் நுழைந்தவர் ஏமாற்றமும் ஆத்திரமும் தாக்க “லக்ஷ்மீ….” என அலறினார்.

வீடும் பெற்றோரும் எந்த அளவு தயார் நிலையில் இருந்தனரோ, அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தாள் லலிதா.

கையில்லாத இரவு உடையில், இடது காலை மடித்து சோஃபாவில் வைத்துக்கொண்டு, கீழே இருந்த வலது கால் நகத்திற்குக் குனிந்து(!) நெயில் பாலீஷ் போட்டபடி வினோதமான போஸில் இருந்தவளின் எதிரே கையைக் கட்டிக்கொண்டு ஆத்திரத்தை அடக்கியபடி அமைதியாக நின்றிருந்த ரங்கராஜன், அரவம் உணர்ந்து திரும்பி மனைவியிடம் ‘வா’ என்பதாகத் தலையசைத்தார்.

‘என்னவாம்?’

‘நீயே கேளு’

ஜாடை பேசிய மகளையும் மகனையும் பொருட்படுத்தாத ரத்னம் “ஏம்மா லலிதா, நேரமாயாச்சு, பளிச்சுனு தயாராகாம இப்படி அங்கியோடவே நின்னா எப்படி?”

அலட்சியமாக “இது சரியா வரும்னு எனக்கு தோணலை தாத்தா” என்ற மகளின் பதிலில், லக்ஷ்மிக்கு கோபம் எகிறியது.

“இன்னொரு அரை மணில அவங்க வந்துடுவாங்க. இன்னும் இப்படியே உக்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?”

“எனக்கென்னவோ இது ஒர்க் அவுட் ஆகும்னு தோணலைமா”

லக்ஷ்மிக்கு வந்த கோபத்தில் சட்டென கையில் இருந்த கிச்சன் டவலை முறுக்கிக் கையை ஓங்கி விட்டாள்.

“என்னதான் நாங்க பார்த்த வரனாவே இருந்தாலும், வீட்டுக்கே வராம, பெரியவங்க நாங்க அதிகமா பேசிக்காமலே, ஒரே நேரத்துல மூணு, நாலு பையன்களோட பேசி, ரசனை சரியில்லை, பட் பட்டுனு பதில் பேசத் தெரியலை, சத்தம் போட்டு சாப்பிடறான்னு உப்பு பெறாத காரணத்தை சொல்லி ஒவ்வொருத்தனா கழட்டி விட்டபோது, நாங்க சும்மாதானே இருந்தோம்?”

“..ம்ம்மா…, நான் என்னவோ வேணும்னே ஊரை சுத்தினா மாதிரி பேசற, பாரு டாடி”

“கொஞ்சம் பொறுமையாதான் பேசேன் லக்ஷ்மி”

“இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாதுங்க. நாமும் எத்தனை நாள்தான் இன்னும் நேரம் வரலை, வியாழ நோக்கம் வரலைன்னு நம்மையே ஏமாத்திக்கறது, சொல்லுங்க. வந்த நல்ல நல்ல பையனெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிட்டாங்க. அந்த வக்கீல் பையனுக்கு குழந்தையே பொறந்தாச்சு…”

“...”

“இப்பவே எந்த மேட்ரிமோனி க்ரூப்புக்கு போனாலும், இந்த ஜாதகமா, ஏற்கனவே பார்த்தாச்சேன்றாங்க. ஏதோ இப்ப பொண்ணுங்களுக்கு டிமாண்ட் அதிகமா இருக்கறதால இன்னும் வரன் வருது”

“லக்ஷ்மீ, போதும். லலிதம்மா, அம்மா சொல்றதும் சரிதானேடா, நீ சரின்னு சொன்ன பிறகுதானே அப்பா அவங்களை வரச் சொன்னேன்”

“ம்ப்ச்… போ டாடி, எனக்கு இது போல பொண்ணு பாக்கன்னு வீட்டுக்கு வர்றதும், பழைய காலம் மாதிரி பஜ்ஜி, சொஜ்ஜி பண்றதும் சுத்தமா புடிக்கலை”

லக்ஷ்மி “ஏன், நீ வாங்க பழகலாம்னு ஊர்ல இருக்கற காசு புடுங்கற கஃபேயா பார்த்து தேடிப் போனபோது எதுவும் சாப்பிடாமலா வந்த? அதோட வீட்டுக்கு வரவங்களை சும்மா எப்படி அனுப்பறது?”

லலிதா “ஒரு வேளை இந்தப் பையனும் செட் ஆகலைன்னா…?”

லக்ஷ்மி படு நக்கலாக “பஜ்ஜி, சொஜ்ஜி, காஃபி பிளேட்டுக்கு இவ்வளவுன்னு பில்லை நீட்டி பைசா வசூல் பண்ணிடலாம்”

“ம்மா…”

“பின்ன என்னடீ, ஒன்னு ஃபடா ஃபட்னு ரெடியாகு. இல்லையா, நீயே ஃபோன் பண்ணி அவங்களை வர வேணாம்னு சொல்லு. எனக்கும் நல்லதுதான். ராத்திரிக்கும் சேர்த்து டிஃபன் ரெடி. அப்புறம் உன்னிஷ்டம்” என்று வெளியேறினாள்.

ரங்கராஜன் அழுத்தமான குரலில் “கெட் ரெடி லலிதா, க்விக்” என்று தன்பின்னே அறைக் கதவை முடிவிட்டு மனைவியைத் தேடி சமையலறைக்கு வந்தவர், லக்ஷ்மியின் தோளில் கை போட்டு உரக்கச் சிரித்தார்.

லக்ஷ்மி “என்ன சிரிப்பு, என்ன சொல்றா உங்க பொண்ணு”

“அவளை விடு, என்ன போடு போடறடீ, பில் குடுக்கறதாம், பைசா வசூலாம்”

“ஷ்… ஹால்ல அப்பா. சரியா இருக்கான்னு பாருங்க” என ஒரு வாய் கேசரியை அவருக்கு ஊட்டினாள்.


“உங்ஹ அஹ்ஃபா இஹை மஹ்ஹும் ஃபாஹ்க்ஹ ம்ஆட்டாரா?”

****************

கப்போர்டைத் திறந்து வைத்துக் கொண்டு, உடைகளை ஆராய்ந்த லலிதாவின் மனம் இரண்டில்லை, இருபதாகப் பிரிந்து குழம்பி நின்றது.

‘வரச் சொல்லுங்க’ என்று சொன்ன அடுத்த நொடி முதல் தான் அநாவசியமாகக் கமிட் செய்து கொண்டுவிட்டோமோ என்ற எண்ணம் அவளைப் பிடித்துப் பேயாய் ஆட்டுகிறது.

ஏதோ அந்த வாமனமூர்த்திக்கு தன்னை கல்யாணம் முடிக்கவென்றே பெற்றோர் திட்டம் போட்டு வேலை செய்வதைப் போல் தோன்றியது.

ஸ்ரீசைலம் தயாரிக்கும் பென்சில்களை அவளே உபயோகித்தாலுமே, லலிதாவிற்கு பென்சில் கம்பெனி என்பது குடிசைத் தொழில் போல்தான் தோன்றியது.

சமூக வலைத்தளங்களில் வாமனமூர்த்தி, V மூர்த்தி, வாமன், வாமனன் என பல விதமாகத் தேடியும் லிங்க்ட் இன்னில் கூட அவனைக் காணவில்லை.

‘இவனுக்கு என் ஃபோட்டோவைப் பாக்க வேணாம்னா, நான் ஏன் சும்மா இருக்கணும்? ஒருவேளை, எனக்கு அவனோட மூஞ்சி புடிக்கலைன்னா?’


ரங்கராஜன் கடந்த பத்து நாள்களில் தன் கட்டளையே சாஸனம் என தீர்ப்பளித்து விட்டது போல் எதுவும் பேசாமலிருக்க, தனக்குள்ளேயே குழம்பித் தவித்தவளுக்கு, லக்ஷ்மி ‘பெண் பார்க்க வரும்போது அடக்க ஒடுக்கமாக இருப்பது எப்படி?’ என தன் க்ராஷ் கோர்ஸை சின்னச் சின்ன அட்வைஸ் கேப்ஸ்யூல்களாகத் திணித்ததில், நொந்து போன லலிதா, ஒர்க் ஃப்ரம் ஹோமை கேன்ஸல் செய்துவிட்டு அலுவலகத்திற்கே ஓடி விட்டாள்.

எத்தனையோ வரன்களைப் பார்த்திருந்தாலும், பெண் பார்க்கவென வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை என்பதால், ஆளுக்கொரு பக்கம் சற்று பதட்டமாகவே திரிந்தனர்.

லக்ஷ்மியிடம் ‘கிரி சித்தப்பாவையும், சித்தியையும் வேணா கூப்பிடலாமா?’ எனக் கேட்க நினைத்த ரத்னத்திற்கு பேத்தியின் ஒட்டாரத்தில்,
‘பேதையே, நீ அவமானப்பட்டுத் திரும்பப் போகிறாய்’ என காதுக்குள் வந்து உறுமினார் சிவாஜி.

லலிதாவை புதுயுக ஜோசியங்களான Enneagram, MBTI போன்ற பர்ஸனாலிடி க்விஸ் டெஸ்ட்டுகளும், தம்பதிகளுக்கு இடையே பொருந்தக்கூடிய இயல்புகள் என (நம்ம ஊரு நட்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம் மாதிரிங்கோவ்) அவைகள் இட்ட பட்டியலும் வேறு குழப்பின.

ஒவ்வொரு உடையாகத் தவிர்த்தவள், கண்ணைப் பறிக்கும் மிட்டாய் ரோஸ் கலரில் பஃப் கை வைத்துத் தைத்த ஒரு சல்வார் சூட்டை எடுத்து அணிந்து கொண்டு, தலை முடியை இறுக்கமாகப் பின்னி, (மொத்தமே மூன்றே கால்தான்!) அதே நிற பொட்டும் லிப்ஸ்டிக்குமாக ஹாலுக்கு வந்தாள்.

லலிதாவிற்கு அந்த நிறமும் நன்றாகவே இருந்தாலும், இது அவளது ரசனையோடு சேர்ந்ததில்லை என்பதை நன்கறிந்த ரங்கராஜனின் கண்களில் ‘இந்த கலர்லயெல்லாமா இவ கிட்ட ட்ரெஸ் இருக்கு?’ என்ற கேள்வி தெரிந்தது.

கடைசி நிமிடத்தில் கோபத்தைக் காட்டாது அடக்கி வாசித்த லக்ஷ்மி, உடுப்பை மட்டுமாவது மாற்றச் சொல்லலாமா என்று மனதில் ஒத்தையா ரெட்டையா போடுவதற்குள், வாசலில் மஹிந்திரா ஸ்கார்பியோ வந்து நின்றதில், மகளை முறைக்கக் கூட நேரமில்லாது போனது.

‘உள் அறையில் தனியாக இருப்பது, நாடகம் போல் கூப்பிட்டதும் அடக்கமா வெளில வரது, காபி குடுக்கறது… நோ மெலோ ட்ராமா, சம்ஜய்?’ என்று முன்பே சொல்லி இருந்தத லலிதா அங்கேயே நிற்க, பெற்றோர் வாசல் வரை சென்று வரவேற்றனர்.

பாட்டி ஜானகி, ஸ்ரீசைலம், சீதளா, வாமனமூர்த்தி, பவித்ரா, ஸ்ரீராம், சீதளாவின் தம்பி என மொத்தம் ஏழு பேர்.

ஸ்ரீராம், வாமனன் இருவரில் யார் வாமன மூர்த்தி எனத் தெரியாது விழித்தாள் லலிதா.

அறிமுகம் நடக்க, பெயருக்குக் கொஞ்சமும் பொருந்தாது ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நின்றான் வாமனமூர்த்தி.

ரங்கராஜன் “இங்க வாடா” என மகளை முன்னே அழைத்துச் சென்றார்.

பாட்டி “உக்காரும்மா”

‘எத்தனை வயதானாலும், என்ன படித்திருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் அவஸ்தையான, சங்கடமான, லூஸு போல் ஒட்ட வைத்த சிரிப்புடன், வேஷத்தைக் கலைத்துவிட்டு, காலைத் தூக்கி சோஃபாவில் வைத்துக் கொள்ளும், உரக்கச் சிரிக்கும், இருமும், வறட், வறட்டென்று கண்டபடி சொரியும் உந்துதலை அடக்கியபடி நிற்கும் இந்தத் தருணத்தைக் கடப்பதைப் போன்ற இம்சை வேறில்லை’

வரன்களை வெளியில் தனியே பார்த்துப் பேசியபோது, முதல் கட்டத் தயக்கத்தை மீறி, ஒரு நண்பனிடம் அல்லது கொலீகிடம் பேசுவது போன்ற இயல்பு வந்துவிட்டது.

தன் வாழ்நாளில் முதன்முறையாக முகத்தை எப்படி வைத்துக்கொள்வது, எங்கே, யாரைப் பார்ப்பது, கைகளைக் கோர்க்கவா, பிரிக்கவா, தொங்க விடவா, கட்டிக் கொள்ளவா என்ற ஆலோசனையில் இருந்தவளிடம்,
பவித்ரா “ஹாய் ” எனவும், அதை ஸ்ரீராம் எதிரொலிக்க, லலிதாவுக்கென, மீண்டும் ஒருமுறை “இது என் மாப்பிள்ளை ஸ்ரீராம். இதான் என் பையன் வாமனமூர்த்தி, இது என் டாட்டர் பவித்ரா” என்றார் ஸ்ரீசைலம்.

இதில் பவித்ரா கிட்டத்தட்ட வாமன மூர்த்திக்குப் பெண் வேடமிட்டது போல் இருக்க, இரட்டை என்றனர்.

‘இது வேறயா, கூடப் பொறந்தாலே கஷ்டம், இது கூடவே பொறந்திருக்கே?’

எல்லோரும் எல்லோரிடமும் தங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க, அமைதியாக வேடிக்கை பார்த்த வாமனமூர்த்தியை ஆராய்ந்தாள் லலிதா.

‘என்ன இவ்வளவு அமைதியா இருக்கான், என்னால அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாம இருக்க முடியாதே’

‘அவன் கலருக்கு லெமன் யெல்லோ ஷர்ட் நல்லாதான் இருக்கு’

‘கால் நகமெல்லாம் சீரா வெட்டி, க்ளீனா இருக்கு. பார்லர் போவானோ?’

பவித்ரா “ஆன்ட்டீ, லலிதா ரொம்ப அமைதியோ?”

லக்ஷ்மி கணவரைப் பார்க்க, பரவசத்துடன் வாமனமூர்த்தியை பார்த்துக்கொண்டிருந்த ரங்கராஜனின் முகத்தில் ‘இவனை நம்பி என் பொண்ணை கொடுக்கலாமா?’ என்ற கேள்வி ஸ்க்ரோலிங் மெஸேஜாக ஓடியது.


“அதெல்லாம் இல்லம்மா, இந்த மாதிரி ஃபார்மலா… இன்னைக்குதான்… லலிதா நல்லாவே பேசுவாம்மா” என குறிப்புகளால் வாக்கியங்கள் அமைத்த லக்ஷ்மி, இந்தியன் தாத்தா போல் மகளின் முதுகில் விரல்களால் வர்மக்கலை பயில. சடாரென உடலைச் சிலிர்த்து எழப்போன லலிதா, கடைசி நிமிடத்தில் சுதாரித்தாள்.

ஸ்ரீராம் முணுமுணுப்பாக “டேய் மச்சான், பொண்ணு உன்னை ஸ்கேன் பண்றாடா”

“தெரியும், முழுசா பார்த்து முடிக்கட்டும்னுதான் அசையாம இருக்கேன்” என்ற வாமனமூர்த்தியின் உதடுகள் துளிக்கூட அசையவில்லை.

அறிமுகம், இருபக்கமும் பரிச்சயமான உறவினரை, நண்பர்களைக் கண்டறியும் முயற்சி, பூர்வீகம், குலதெய்வம், பவித்ராவின் ப்ரெக்னென்ஸி என பேச்சோடு பேச்சாக வயிற்றுக்கும் ஈந்தனர்.

மகனையும் மனைவியையும் ஒரு முறை பார்த்த ஸ்ரீசைலம் “எங்க எல்லாருக்கும் சம்மதம். நீங்க லலிதாவைக் கேட்டு சொல்லுங்க”

ரங்கராஜன் “ரொம்ப சந்தோஷம் ஸார்” எனவுமே, லலிதாவின் முகத்தில் டென்ஷன் ஏற, கவனித்த சீதளா “ரெண்டு பேரும் பேசிட்டு வந்து அவங்களே முடிவை சொல்லட்டும்”

*******************

நேரம் மாலை ஐந்தை நெருங்கியும் சித்திரை மாதச் சூரியனின் சூடு குறையாதிருக்க, கீழே வெம்மை தெரியாது இருப்பதற்கென போடப்பட்டிருந்த பச்சை நிற பிளாஸ்டிக் ஷெட்டுக்குக் கீழுமே கொதிக்கத்தான் செய்தது.

லலிதா மாடிப்படியின் கதவருகிலேயே நின்றாள். மாமரத்தில் கிளிகளின் சத்தம். பெஸன்ட் நகர் கடல்காற்று தலையைக் கலைத்தது.

சில நிமிடங்கள் தொடுவானத்தை, கடலை, சத்தமில்லாமல் மெயின் ரோட்டில் நகரும் போக்குவரத்தை, முன்கூட்டியே கூடு திரும்பும் பறவைகளை (early birds!) வேடிக்கை பார்த்த வாமனமூர்த்தி, திரும்பி லலிதாவை பார்க்க, தும்பப் பூ மல் வேட்டியில், தொடை தெரிய தான் ஆடுவதான கற்பனை விரிய தலையை உலுக்கி, தொண்டையை செருமினான்.

ஏறிட்டவளிடம் “இந்த ஏற்பாடா, கல்யாணமா, நானா - எது உங்களுக்குப் புடிக்கலை?”

சற்றும் எதிர்பாராது, சடாரென வந்து விழுந்த கேள்வியில் ஓரிரு நொடிகள் மாட்டிக் கொண்டதுபோல் முழித்தவள்,

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை”

“அப்ப இந்தக் கல்யாணத்துல இஷ்டமா?”

“....”

”ஸோ, என்னோட கெஸ்தான் சரி, ரைட்?”

வழக்கமான லலிதா வெளியில் வர “என்ன சரி, நீங்களே முடிவு செய்வீங்களா?”

“அப்புறம் ஏன் இந்த கலர்ல ஒரு ட்ரெஸ்ஸு?”

தன் உடை குறித்தான நேரடி விமரிசனத்தில் வெகுண்டவள் “ஏன், இந்த கலருக்கென்ன குறைச்சல், மோர் ஓவர், என் ட்ரெஸ், என் இஷ்டம்”

“அப்ப வேணும்னேதான் இதை ச்சூஸ் பண்ணி இருக்க, அப்படித்தானே?”

“...”

“ஐ காட் தி ஆன்ஸர்” - தோள்களைக் குலுக்கியவன் தன் வேடிக்கையைத் தொடர,
அன்று வரை நிராகரிப்பது அவளாக இருந்திருக்க, வாமன மூர்த்தியின் அலட்சியம் லலிதாவை வெகுவாக இம்சித்தது.

வாமனமூர்த்தி வீட்டினரின் சம்பிரதாயமான வருகையும் நவ நாகரிகமான மாமியாரும், நட்பான நாத்தனாரும், அவர்களோடு நண்பனைப் போல் பழகும் ஸ்ரீராமும், இவற்றையெல்லாம் விட, வாமனமூர்த்தியின் தோற்றமும் இருப்பும் தன்னைக் கவர்ந்திருப்பதை உணராத லலிதா, ஒரு வித பிடிவாதத்துடன் நின்றிருந்தாள்.

‘என் வீட்டுக்கு வந்து, ரெண்டு கரண்டி கேசரியும் அஞ்சு பஜ்ஜியும் முழுங்கிட்டு, எங்கிட்டயே என் ட்ரெஸ்ஸை கலாய்ப்பியா, யார்றா நீ?’

“எக்ஸ்க்யூஸ் மீ, கொஞ்சம் வழி விட்டா நான் கீழ போவேன், நுங்கம்பாக்கம் வரை போகணும் பாரு”

சற்றுத் தள்ளி மொட்டைமாடி கைப்பிடி சுவரருகே நின்றிருந்தவன் அருகில் வரவும் நகர்ந்து நின்றாள்.

‘போயேன், எனக்கென்ன?’

அவன் அவளைக் கடக்கையில், கீழே எல்லோரும் தங்கள் பதிலுக்காகக் காத்திருப்பது நினைவு வந்து அவளும் அவசரமாகத் திரும்ப, இருவரும் இணைந்து முதல் படியில் நின்றிருந்தனர்.

வாமனமூர்த்தி ‘போ’ என்பதாக கையைக் காட்ட, நிமிர்ந்து அவன் கண்களை சந்தித்தாள்.

“என்ன?”

“இல்ல, கீழ போய்…”

“கீழ போய்?”

‘ டேய், நான் என்ன இங்க வில்லுப்பாட்டாடா பாடறேன்?’

“ப்ச்.. நத்திங்” என்றவள் இரண்டு படி கீழிறங்க…

“நான் கீழ போய் பொண்ணை எனக்குப் புடிச்சிருக்குன்னுதான் சொல்லப் போறேன்”

க்ஷண நேரம் ஒளிர்ந்த கண்களைத் தாழ்த்தியவள் “எனக்குப் புடிக்க வேணாமா?”

“ஹலோ, மிஸ். லலிதா பரமேஸ்வரி மேடம், உங்களைப் பத்தி எனக்கு தெரியாது, ஆனா, கல்யாணத்துக்காக நான் பாக்கற முதல் பொண்ணு நீங்கதான். பாக்கற பொண்ணை வேணாம்னு சொல்லக் கூடாது, எந்த முன் அபிப்பிராயமும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் ஃபோட்டோ கூடப் பார்க்கலை. சோஷியல் மீடியால தேடலை. ஸோ, நான் வரும்போதே எனக்கு எஸ்தான், நீங்க உங்க விருப்பம் என்னவோ தாராளமா சொல்லலாம்”

“...”

“எக்ஸ்க்யூஸ் மீ, போகலாமா?”

இருவரும் இணைந்தே இறங்க, கடைசி மூன்று படிகள் மீதம் இருக்கையில், வீட்டினரின் கண்களுக்குத் தெரியாத உயரத்தில், லலிதா “நானும் யெஸ்”என்றாள்

“ஷ்யூர்?”

“ம்”

வாமனமூர்த்தி தன் வலது கையை நீட்டினான். கேள்வியாகப் பார்த்தவளிடம்,

“நமக்கு கல்யாணம், இவ்வளவு மாடர்னான பொண்ணு நீ, ஒரு ஹேண்ட்ஷேக், ஒரு ஹக் கூட இல்லைன்னா எப்டீ?”

‘ஹக்கா, அடப்பாவி!’

“சரி, விடு, வா”

லலிதா மெதுவே கையை நீட்ட, அழுத்தமாகப் பற்றிக் குலுக்கியவன், ‘லலிலலி லலா…’ என்ற ஹம்மிங்குடன் இறங்கிச் செல்ல, பாட்டைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் லலிதா.

******************

வாமனமூர்த்தியின் பிடிவாதத்தையும், சம்மதம் சொன்ன பிறகும் தெளிவில்லாத லலிதாவையும் நன்கறிந்த அவர்களது வீட்டினர், நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாவற்றையும் ஒன்றாக, சீக்கிரமே நடத்த முடிவு செய்தனர்.

“இப்ப சித்திரை முதல் வாரம். வைகாசில நாள் பார்க்க வேண்டியதுதான்” என்றார் ரத்னம்.

லலிதா ‘இத்தனை சீக்கிரமா?’

ரங்கராஜன் “மண்டபம் கிடைக்கணுமே, முஹூர்த்த மாசம் வேற”

ஸ்ரீசைலம் “கல்யாணம் எங்க பொறுப்புதானே, நான் பார்த்துக்கறேன்”

வாமனமூர்த்தி “அப்பா, ரொம்ப நெருங்கின உறவுகளோட நம்ம பென்ட்ஹவுஸ்லயே கல்யாணத்தை வெச்சுக்கலாம். நல்ல ஸ்டார் ஹோட்டல் பான்க்வெட் ஹால்ல ரிஸப்ஷன் வெச்சுக்கலாம்”

“சூப்பர் டா வாமனா” என்றாள் பவித்ரா.

மே பதினெட்டு திருமணம் என்று முடிவானது. இடையில் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இரண்டாவது டோஸ் காஃபியுடன் ஐயர், கேட்டரிங், நாதஸ்வரம், ரிஸப்ஷன் ஹால், பத்திரிகை வாசகங்கள் என என எல்லாவற்றையும் முடிவு செய்து, வரும் வியாழக்கிழமை புஷ்ய நட்சத்திரம் வருவதால் அன்றே மூஹூர்த்தப் புடவையும் தாலியும் வாங்கத் தீர்மானித்தனர்.

(வியாழக்கிழமையன்று புஷ்ய (பூச) நட்சத்திரம் சேர, தங்கம் வாங்கினால் பெருகும் என்பது ஐதீகம். இதை குஜர்த்தி மற்றும் மராத்தியர்கள் பெரிதும் நம்புகின்றனர்)

**********************

இடையில் இருந்த ஆறு நாட்களும் பறந்து விட, வாமனமூர்த்தியும் லலிதாவும் மொபைல் எண்களைப் பரிமாறிக்கொண்டதோடு அமைதியாகி விட, அவர்களின் பெற்றோர்கள்தான் அதிகம் பேசினர்.

வியாழனன்று காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் ஸ்ரீராம் மற்றும் வாமனனைத் தவிர, ஏனையோர் நகைக் கடைக்கு வந்து விட்டனர்.

முதலில் தாலி செய்யக் கொடுத்து, இருவருக்கும் மோதிரங்கள் வாங்கி என பரஸ்பரம் தர வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு புடவைக் கடைக்குச் சென்றனர்.

மகளின் முக வாட்டத்தைக் கவனித்த லக்ஷ்மி, “மாப்பிள்ளை வரலையா?” எனக் கேட்டே விட்டாள்.

“அவனுக்கு ஏதோ அவசர வேலை வந்ததால வரலை” என்றார் ஸ்ரீசைலம்.

லலிதா பவித்ராவிடம் “அண்ணாவும் வரலையா?”

“ஸ்ரீராம் ரெண்டு வாரத்துக்கு ஃப்ரான்ஸ் போய் இருக்கார்”

“ஓ…”

‘வர முடியாதுன்னு ஒரு ஃபோன் இல்லாட்டி மெஸேஜ் போட்டாதான் என்ன, யூஸ்லெஸ் ஃபெலோ’

‘ஊர்ல ஒவ்வொருத்தரும் கோர்ட்ஷிப் பீரியட்ல என்னல்லாம் பண்றாங்க, இங்க ஒரு ஃபோன் காலுக்கே வழியைக் காணும்’ என்றவள், தானும் அழைக்காததை வசதியாக மறந்துவிட்டாள்.

லலிதாவின் ஸ்ருதி குறைந்ததில், லக்ஷ்மி “ராகு காலம் வர முன்ன நமக்கு, சொந்தக் காரங்களுக்கு முதல்ல எடுத்துடலாம். லலிதாவோட புடவைகளை பின்னால பார்க்கலாம்” என்றாள்.

சீதளா முதலில், அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மல்விகாவிற்கு நாலாயிரத்துக்கு ஒரு பட்டுப் புடவை எடுக்கவும், மகன் ஸ்ரீசைலத்தை அருகே அழைத்த பாட்டி ஜானகி

“பாத்தியா சைலா, எனக்கு முன்னால வேலைக்காரிக்கு புடவை வாங்கியாச்சு”

“அவளை விடும்மா, நான் உனக்கு புடவை செலக்ட் பண்றேன், வா” என்றவர், மனைவியைத் தொந்திரவு செய்யாது தாயை அழைத்துச் சென்றார்.

ரங்கராஜனிடம் லக்ஷ்மி “இவங்க பிரச்சனையே இன்னும் முடியல போல, லலிதா எஸ்கேப் ஆயிடுவா” என்றாள் குதூகலமாக.

“ஏன்டீ, எங்கம்மாவைக் கண்ணால கூட பார்த்ததில்லை நீ , ஏதோ முப்பது வருஷம் மாமியார் கிட்ட மொத்து பட்டவளாட்டம் பேசற?”

லக்ஷ்மி வேண்டுமென்றே “ஏன், உங்கக்கா ஒருத்தர் போறாதா?”

ரங்கராஜன் மௌனத்தைக் கைகொள்ளவும், லக்ஷ்மி “ஸாரி. ஆனாலும், நீங்க இப்டி அநியாயத்துக்கு நல்லவரா இருந்தா நானும் யார் கிட்டதான் சண்டை போடறது?” எனவும் பக்கெனச் சிரித்து விட்டார்.

ஒருவழியாய் ராகுகாலம் முடிந்து, அம்மா, வருங்கால பாட்டி மாமியார், மாமியார், நாத்தனார் எல்லோரும் ஆளுக்கொரு ஆலோசனை தர, முடிவெடுக்க முடியாது, புடவை சாகரத்துக்கு மத்தியில் முழுதாகக் குழம்பிய நிலையில் அமர்ந்திருந்த லலிதா, “வர மாட்டேன்ன?”, “பார்றா!”, “வாங்க மாப்பிள்ளை” என பலமான வரவேற்புக் குரல்கள் கேட்டு நிமிர, சாக்ஷாத் வாமனமூர்த்தியேதான்.

லலிதாவின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டு “ஹாய்” என்றவாறு அமர்ந்தவன், குவிந்திருந்த புடவைகளைப் புரட்டித் தீவிரமாக எதையோ தேடினான்.

லலிதா “என்ன தேடறீங்க?”

“மிட்டாய் ரோஸ் புடவையைத்தான்”
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார்! 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
127
சூப்பர்👌👌👌👌, லலிதா உனக்கு மிட்டாய் ரோஸ் புடவை தான் 😜😜😜😜
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
3
ரைட்டரே உங்க எழுத்துகளை யாராலும் வெல்ல முடியாது 😍 "தூசிய தேட போலீசில் புகார்", "பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கு பில், வசூல்" .....🤣🤣 🤣
மிட்டாய் ரோஸ் நிறத்தில் ட்ரெஸ் அணிந்த பொண்ணையும் ஓகே சொன்ன ஹீரோ, ...
வேதாமா கதைனாலே வேற லெவல்தான் 🥳🥰🤩
 
Top Bottom