• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr.மாமியார் 2

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
10
Mr.மாமியார் 2

லிதா தன் அறையில் Wi-fi சரியாக வராததால் ஹாலுக்கு வந்து டீ டேபிளில் லேப்டாப்பை வைத்து, சார்ஜரை இணைத்து, தண்ணீர் பாட்டில் சகிதம் அவளது ஆஸ்தான குஷனில் வசதியாக சம்மணமிட்டு அமர்ந்தவள் எதிரே பார்க்க, புன்னகை விரிந்தது.

அவளது அம்மா லக்ஷ்மி மகள் வந்தது கூடத் தெரியாதபடி
அகதா கிறிஸ்டியின் தி மர்டர் இன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸிஸ் மூழ்கி இருந்ததும், கூடவே மடியில் இருந்த கிண்ணத்திலிருந்து ஒரு ரிதத்தோடு நிலக்கடலையைத் தின்றதும்தான் அந்தப் புன்னகைக்குக் காரணம்.

“அம்மா”

“மா”

“ஆயி”(மராத்தி)

“யம்மோவ்”

அன்னை சுற்றுப்புறம் குறித்த நினைவின்றி பய்ரட் (Poirot) டின் புத்திசாலித்தனமான யூகங்களிலும், அவை நிரூபிக்கப்படுவதிலும் ஆழ்ந்திருந்தது புரிந்தாலும், தன்னைக் கண்டு கொள்ளாததில் மெலிதான எரிச்சல் மேலிட, லக்ஷ்மியின் மேல் பேனா மூடியைத் தூக்கி எறிந்தாள்.

தொண்ணூறு வருடங்கள் பின்னே சென்றிருந்த லக்ஷ்மி திடுக்கிட்டு நிமிர, லலிதா “நான் வந்ததைக் கூடப் பாக்காம அப்டி என்ன படிப்பு?”

“நானே எப்பவோ படிக்கறேன், அது பொறுக்கலையா உனக்கு, இன்னும் சின்னப் பொண்ணாடீ நீ?”

“ஏன், உன் மேரேஜ் ஸ்கௌட்டிங் (marriage scouting) , அதாம்மா மாப்பிள்ளை பாக்கற உத்யோகம் என்னாச்சு?”

“ராஜிநாமா பண்ணிட்டேன்”

“ஒய்,ஒய், ஒய்?”

“நீ கேக்கற மாதிரி பையனை செய்ய ஆடர்டர் குடுத்துக்கலாம்னுதான்”

“ம்மா”

“நிஜமாதான்டீ. அழகான, ஃபேமஸான இஸ்டிடியூட்ல ப்ரொஃஷனல் கோர்ஸ் படிச்ச, நல்ல வேலையில் உள்ள, நிறைய சம்பளம் வாங்கற, ஹிந்தி தெரிஞ்ச, சசி தரூர் மாதிரி இங்கிலீஷ் பேசற, வசதியான, சிடிராமா (Cdrama - Chinese drama) பாக்கற, ஷெர்லக் ஹோம்ஸ், ஹார்ப்பர் லீ படிக்கற, சீட்டியடிக்கறதுல இருந்து சிம்பொனி மியூஸிக் வரை கேக்கற, அவனுக்கு அம்மா, அப்பா, பிரதர், சிஸ்டர் யாரா இருந்தாலும் ஆசீர்வாதம் செய்யவும், பர்த்டே விஷ் பண்ணவும் மட்டுமே உபயோகிக்கற, நீ காலால் இட்ட வேலையை தலையால் செய்யற ஒரு ஆம்பளை…”

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரன்களைப் பற்றிப் பேசும் அதே தொனியில் நீளமாகப் பேசி, சற்றே மூச்சு வாங்குவது போல் நடித்த லக்ஷ்மி “ஈ லோகத்தில் இல்லை” என்று கையை விரித்து ஆட்ட, முறைத்த லலிதாவை பதில் பேச விடாது, க்ளையன்ட்டிடமிருந்து கால் வந்தது.

அம்மாவின் முன்னே பேசுவதில் சங்கடம் ஏதுமின்றி, தனது வேலையின் முன்னேற்றத்தை ஆங்கிலத்தில் விவரித்த மகளையே பார்த்த லக்ஷ்மிக்கு மகளின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் புரியத்தான் செய்தது. நகையா, உடையா செய்து வாங்க, நிறைவேற வேண்டுமே?

உறவுகள் அதிகமின்றி, பிறந்தது முதல் மும்பையில் வளர்ந்த லலிதா, சிறு வயதிலேயே, அவளது தந்தைக்கும் அவளது நண்பர்களில் சிலரது தந்தைகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாள்.

தாத்தா ரத்னத்தை தங்களோடு அழைத்து வரும் வரை லலிதா படித்த பள்ளியிலேயே லக்ஷ்மியும் ஆசிரியையாக வேலை பார்த்தாள்.

ரங்கராஜன் தினமும் காலையில் காய்கறி நறுக்குவது, பால் காய்ச்சுவது, வாஷிங்மெஷின் போடுவது போன்ற வேலைகளை தானே செய்வார்.

ரங்கராஜனுக்கு சனிக்கிழமைதான் வார விடுமுறை. தாயும் மகளும் பள்ளிக்குச் சென்று வருகையில், மிஷின் போட்டு, மதியத்திற்கு சமைத்து, வேலையாளிடம் வேலை வாங்கி, மனைவி, மகளுக்காகக் காத்திருப்பார்.

கோபம், சண்டை எல்லாம் வரும்தான். ஆனாலும், இருவருமே சிறிது நேரத்திலேயே மன்னிப்பை வார்த்தைகளில் சொல்லாது, யாரிடம் சண்டையோ, அவரிடம்
சமாதானம் பேசி விடுவர். இரவைத் தாண்டி சண்டை நீடித்ததாக சரித்திரமே கிடையாது. லலிதாவும் அப்படியே பழகி இருந்தாள்.

தாத்தா ரத்னம் இவர்களோடு வந்த புதிதில் மூவரும் குடுமியைப் பிடித்துக் கொள்வதைக் கண்டு ‘ இப்படி வார்த்தைகளை வீசறாங்களே, ‘இது எதுல கொண்டு போய் விடுமோ, இந்த லக்ஷ்மியும் சும்மா இல்லாம என்ன பேச்சு பேசறா நான் இங்கே வந்தது தப்போ?’ என்று சங்கடப்பட்டவருக்கு, சற்று நேரத்திலேயே சமாதானமும் கேலியும் கொஞ்சலுமாக கலகலப்பவர்களைக் கண்டு ஆச்சரியமாக இருக்கும்.

விருந்தினர் போல எப்போதாவது பார்ப்பதற்கும், கூடவே இருப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

ஒரு முறை மாமனாரிடமே எதற்கோ வாதம் செய்த ரங்கராஜன், அவரிடமும் அதே போலத் தானே வந்து பேசவும் ஜோதியில் கலந்தார் தாத்தா.

வீடு இப்படி இருக்கையில், லலிதாவின் நண்பர்களின் வீட்டில், அக்கம்பக்கத்தில் என பலர் வீடுகளில் அந்த ஆண் எந்த வேலையும் செய்யாது, உட்கார்ந்த இடத்தில் ஏவுவதைக் காண ஆச்சரியமாக இருக்கும்.

வளர, வளர சமூகத்தின் கட்டமைப்பும், குடும்பத்திற்குள் தென்னிந்தியப் பெண்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச உரிமை கூட சில மாநிலங்கள், சில இனத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, பெரும்பாலான வட இந்தியப் பெண்களுக்கு இல்லை என்பது புரிந்தது.

இது குறித்தான ஆண் நட்புகளின் மனோபாவங்கள், பெண்களின் ஏற்கும் தன்மை, வேலைக்கு சென்ற இடத்தில் திருமணமான பெண்கள் விவரிக்கும் கடினமான காலை, மாலை அழுத்தங்கள், புகுந்த வீட்டு உறவுகளின் எழுதப்படாத சட்டங்கள், சமூக ஊடகங்கள் என எல்லாம் சேர்ந்த பல்முனை தாக்குதலின் விளைவாக, லலிதாவிற்கு தன் எதிர்கால இணை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர் அவளது திருமணப் பேச்சை எடுத்ததுமே நிபந்தனைகளாக மாறியது.

லலிதாவின் லிஸ்ட்டின் படி, தொடக்கத்தில் இருபத்தி ஏழாக இருந்த வரனின் குணங்களும் தகுதிகளும் தற்போது நாற்பதைத் தாண்டி நிற்கிறது.

அவளது எதிர்பார்ப்பின் சாரம், தந்தையிடம் அவளுக்குப் பிடிக்காத சில குணங்கள் நீங்கலாக, அவளது பேச்சைக் கேட்டு, சலுகையுடன் கேட்டதையும் கேளாததையும் பார்த்துப் பார்த்து செய்யும் தந்தையின் பிரதி.

க்ளையன்ட்டுடன் பேச்சை முடித்த லலிதா “ஏம்மா, நான் எதிர்பார்க்கறதுல என்ன தப்பு?”

“தப்பே கிடையாது லலிதா, அதையே கண்டிஷனா போடற பாரு, அதுதான் தப்பு. ஆசைப்படலாம், ஆனா பேராசை படக்கூடாது. ஒரு கதை சொல்லட்டுமா?”

எழுந்து போய் ஃப்ரிட்ஜில் இருந்து எலுமிச்சை, வெள்ளரிக்காய் மற்றும் புதினா நறுக்கி ஊறப் போட்டிருந்த தண்ணீரை (detox water) கண்ணாடி தம்ளரில் ஊற்றி எடுத்து வந்து பருகியவள், “இப்ப சொல்லு உன் கதையை”

“ஒருத்தன் தன் மகளுக்கு முப்பத்திரெண்டு கல்யாண குணங்களும் இருக்கற மாப்பிள்ளைதான் வேணும்னு கேட்டானாம். ஒருத்தர் வந்து பக்கத்து ஊர்ல ஒரு பையன் இருக்கான். நீங்க கேக்கறதுக்கு ரெண்டே ரெண்டு குறைச்சலா முப்பது குணங்களும் பொருந்திய அயனான வரன்னு சொன்னாராம்”

“சூப்பர், பாரு, அந்தக் காலத்துல அப்பாவே கண்டீஷன் போட்டுருக்காரு. நீ என்னமோ…”

“சுப்… கதையைக் கேளுடீ. பொண்ணெல்லாம் பார்த்து கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே பொண்ணு அழுகையோட அப்பா வீட்டுக்கு திரும்ப வந்துட்டா. அவங்கப்பா பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டார். கிடைச்ச பதில்ல தான் முட்டாளா இருந்ததை நினைச்சு நொந்து போனார். ”

“ஏன்?”

“அந்தப் பையன் கிட்ட இல்லாத ரெண்டு குணங்கள் : சொல்புத்தியும், சுயபுத்தியும்”

லலிதா “அதுக்குதாம்மா சொல்றேன், நாப்பதுல ஒன்னு கூட குறையக் கூடாது”

“கடவுளே, நான் என்ன நினைச்சு கதையை சொன்னேன்…. நீ என்னடான்னா… போடீ”

“உனக்கென்னம்மா, எங்கப்பா ஹஸ்பண்டா இருக்கார்,
நீ ஏன் பேச மாட்ட”

“அடிப்பாவி, அதுக்காக அப்பாவையா…”

“வாட் நான்சென்ஸ், புரியாத மாதிரி நடிக்காதம்மா. அப்பா மாதிரி பர்ஃபெக்ட்டான ஒரு ஆள்…”

“உங்கப்பா பர்ஃபெக்ட்னு உனக்கு யார் சொன்னது?”

“யார் சொல்லணும், இல்லைன்னு சொல்லிடுவியா நீ?”

“என்னோட எதிர்பார்ப்பு வேறயா இருக்கலாம் இல்லையா?”

“இதெல்லாம் டூமச் மா”

“அப்படி இல்லைடீ, உங்கப்பா நல்லவர், வல்லவர்தான். ஆனா, இந்த இணக்கம் முதல் நாளே வந்துடாது, வரவும் இல்லை. பரஸ்பரம் அட்ஜஸ்ட் ஆக நேரமும் பொறுமையும் முக்கியமா நம்பிக்கையும் தேவை. அதைவிட்டு, நான் இந்தக் கேள்வி கேட்டா, அவன் என்ன பதில் சொல்லணும்ங்கற வரை நீயே முடிவு செஞ்சா எப்டி”

“நாளாகியும் எனக்கு செட் ஆகலைன்னா விட்டுட்டு வந்தா பரவாயில்லையாம்மா?”

“லலிதா…”

என்று கத்திய லக்ஷ்மி ஆத்திரம் மீற காலியாக இருந்த கடலை கிண்ணத்தை 'ணங்' என்று ஓசை எழ கீழே வைத்தாள்.

“இதென்ன ஒத்து வராது, செட் ஆகாது, சரிப்பட்டு வராதுன்னு எப்பப் பாரு நெகடிவ் பேச்சு, நல்லதே யோசிக்க மாட்டயாடீ?”

“நான் உண்மையைதானேம்மா சொல்றேன். என் ஃப்ரெண்ட் அதிதியோட ஹஸ்பண்ட் …”

“ஸ்டாப் இட் லலிதா. மராத்தி சடங்கு சம்பிரதாயத்தை பக்காவா ஃபாலோ பண்ற குடும்பத்துப் பையனை அவனோட பொறுப்புகள் தெரிஞ்சும் புடிவாதமா கல்யாணம் பண்ணிக்கிட்டு, வீட்டை விட்டு வா, எனக்கு மட்டும் புருஷனா இருன்னு நச்சரிச்சு அம்மா வீட்ல போய் உக்கார்ந்துகிட்டா, அவனும்தான் எத்தனை நாளைக்கு பொறுமையா இருப்பான்? இனிமேலாவது அவன் நிம்மதியா இருக்கட்டும்”

“நீ என்னம்மா அவனுக்கு சப்போர்ட் பண்ற?”

“நான் நியாயத்தை பேசறேன். ஒண்ணு சொல்றேன், காது குடுத்துக் கேளு. கண்டீஷன் போட்டுக் கட்டப்பஞ்சாயத்து வேணா பண்ணலாமே தவிர, கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்த முடியாது”

“...”

“ஒரு விஷயம் யோசிச்சியா, நமக்கு இருக்கற அத்தனை ஆசைகளும் எதிர்பார்ப்பும் அவங்களுக்கும் இருக்கும் இல்லையா? அதுக்கு நீ எந்த அளவுல தயாரா இருக்க?”

“முதல்ல அந்த ‘அவன்’ வரட்டும்மா, அப்புறம் பேக் பண்ணலாம்”

“வரட்டும், வரட்டும், எத்தனை நாள்தான் நானே இம்சை படறது? இந்த ஜட்டி, ப்ரா வாங்கற செலவாது குறையும். வர வர சொத்தையே கேக்கறான்”

“ம்மாஆஆஆஆ”

“ஐ’ம் வெயிட்டிங் லலிதா”

*******************

“ஐ’ம் வெயிட்டிங் டா” என்று கத்திய அக்கா பவித்ராவைப் பார்த்து நக்கலாகச் சிரித்த வாமனமூர்த்தி

“எதுக்கு அல்லது யாருக்கு?”

“உன் தர்மபத்னிக்கு. உன்னை ஆட்டிவைக்கற மாதிரி ஒரு பொண்ணு வரணும், நீ தலையால தண்ணி குடிச்சு, கண்ணு முழியெல்லாம் பிதுங்கி நிக்கறதைப் பார்த்து நான் ஆனந்தப்படணும்”

“நோ சான்ஸ்”

“நானும் பாக்கதானே போறேன்”

“என்னை என்ன ஸ்ரீராம்னு நினைச்சியா?”

“பாரு பாட்டீ, இவனை…”

பாட்டி ஜானகி “மரியாதை இல்லாம மாப்பிள்ளையை பேர் சொல்லாதடா…”

இவர்களது சண்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த பவித்ராவின் கணவன் ஸ்ரீராம் “அவனும் நானும் எல்கேஜில இருந்து ஃப்ரெண்டு பாட்டி”

“நானும்தான் எல்கேஜில இருந்து உன் ஃப்ரெண்டு” என்று வேகமாக கணவனின் அருகில் சென்ற வாமனமூர்த்தியின் இரட்டையைப் பார்த்து நண்பர்கள் இருவரும் சிரித்தனர்.

“என்ன சிரிப்பு?”

“நான்தான் பவி அவனோட ஃப்ரெண்டு. நீ மூணாங் கிளாஸ்ல இருந்தே அவனோட லவ்வர்”

பாட்டி “லவ்வாஆஆ…”


‘ஏன்டா?’ என்று நண்பனை முறைத்தவன், மனைவியின் பார்வையில் “என்னடா?” என்று தோளில் கை போட, வெட்கத்தில் சிவந்த பாட்டியின் முகத்தில் மூவரும் உரத்துச் சிரித்தனர்.

கதவு திறந்திருந்ததில் லிஃப்ட் சப்தம் கேட்க, ஸ்ரீசைலமும் சீதளாவும் உள்ளே நுழைந்தனர்.

ஸ்ரீசைலம் “வாப்பா ஸ்ரீ, பவிக்குட்டீ எப்டிடா இருக்க, எப்ப வந்த?”

வாமனமூர்த்தி “இங்க இருக்கற அண்ணாநகர்ல இருந்து நுங்கம்பாக்கம் வந்ததுக்கா இத்தனை வரவேற்பு?”

“அவன் கிடக்கான், நீ வாடா” என ஸ்ரீசைலம் மகளைத் தன் அறைக்கே அழைத்துச் செல்ல, நண்பர்கள் இருவரும் வாமனனின் அறைக்குள் சென்றனர்.

இரவு உணவிற்குப் பின் “பிரவுன் ரைஸ், மலாய் கோஃப்தா, ருமாலி ரொட்டி ஆல் சூப்பர் பவி” என்ற வாமனனை பவித்ரா நம்பாமல் பார்க்க, சம்பிரதாயமாகச் சொன்னால், மற்றவர்கள் திகைப்பூண்டை மிதித்திருந்தனர்.

“என்ன பார்வை?”

“உடன்பிறப்பே, நீயா பேசியது?”

“போனா போறது, குட் நியூஸ் சொல்லி இருக்கியேன்னு பாராட்டினா, கிண்டலா பண்ற?”

ஸ்ரீராம் “அதை விடுடா, ப்ரெக்னென்ட்டா இருக்கான்னுதான் பேரு. ஆனா, தலைசுத்தல், வாந்தி, மயக்கம்…. ம்ஹும் ஒன்னு கிடையாது. எனக்கு அப்பா ஆகப்போற ஃபீலே வரலைடா”

“அடடா, என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலை. பவி, ஸ்ரீக்காக தொண்டைல விரலை விட்டாது ஒரு தரம் வாமிட் பண்ணேண்டீ”

“வாமனா” என்று தொடங்கிய சீதளாவை நிறுத்தியது ஸ்ரீசைலத்தின் அலைபேசி அழைப்பு.

“பீ கொயட், ஹலோ மிஸ்டர் கிருஷ்ணன்” என்றபடி சென்று எட்டு நிமிடங்களில் திரும்பியவர் “சிடி பேங்க் கிருஷ்ணன்தான் பேசினான.. அவனோட கஸினோட பொண்ணோட…
டீட்டெயில்ஸ் அனுப்பி இருந்தான் இல்லையா, ஜாதகம் பொருந்தி இருக்காம். நம்ம சைட்லயும் போருந்தி இருக்குன்னு சொன்னேன். பையனோட ஃபோட்டோ வேணுமாம்”

வாமனன் “எவ்ளோ பேர் ஓடறா பாரு”

பவித்ரா “அப்ப பொண்ணோட ஃபோட்டோ இருக்காப்பா?” என்றாள் ஆர்வமாக.

“இல்லை டா…”

வாமனமூர்த்தி “எதுக்கு ஃபோட்டோ? உள்ளூர் பொண்ணுதானே, நேர்லயே பாக்கலாம். ஃபோட்டாஷாப் செஞ்ச படமெல்லாம்

வேண்டாம். பொண்ணை முதல்ல நேர்லதான் நான் பார்க்கணும்”

பவித்ரா “உனக்கு வேணாம்னா பார்க்காத, அந்தப் பொண்ணு உன்னைப் பார்க்கணும்னா குடுத்துதானே ஆகணும்? சப்போஸ் பிடிக்கலைன்னா, யாருக்கும் சங்கடமில்லாம ஃபோட்டோவோட போயிடுமே”

சீதளா “பவி ஈஸ் ரைட்”

“உனக்கும் அப்பாவுக்கும் ஃபோட்டோ பார்த்துதான் கல்யாணம் ஆச்சாம்மா?”

பாட்டி “என்னைக் கேளு சொல்றேன், உங்கப்பா லவ்வுன்னா பண்ணினான்”

“சும்மா இரேம்மா, வாமனா, அவங்க சம்மதிச்சா பொண்ணை பார்க்க போகலாமா, உனக்கு டீடெயில்ஸ் அனுப்பவா?”

சீதளா “ஒண்ணும் தேவையில்ல,
கடைசி நிமிஷத்துல இது சரியில்ல, அது சரியில்லைன்னு வரமாட்டேன்னு கழுத்தை அறுக்கறத்துக்கு அவன் நேர்ல பார்த்தே விசாரிச்சுக்கட்டும்”

“என் மேல எத்தனை நல்ல அபிப்பிராயம்மா உனக்கு”

“உன் வரலாறு அப்படி”

“இருபத்தெட்டு வயசாச்சு. முப்பதுன்னா மாமான்னு முத்திரை குத்திடுவான். பொண்ணு கிடைக்கறதே குதிரைக் கொம்பா இருக்கு. சும்மா பாக்கற பொண்ணை எல்லாம் குத்தங்குறை சொல்லாம, உன் புள்ளையை ஒழுங்கு மரியாதையா இந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு” - ஸ்ரீசைலம்.

“அதுக்காக… எனக்குப் புடிச்சாதானே….”

ஸ்ரீராம் “பீ பிராக்டிகல் வாம்ஸ். லவ்வும் வரலை, பாக்கற எந்தப் பொண்ணையும் புடிக்கலைன்னா எப்படி? ஜாதகத்திலயும், பயோ டேட்டாலயும், ஃபோட்டோலயுமே வேணாம்னு சொன்னா எப்படி?”

“நீ ஏன்டா சொல்ல மாட்ட, நீ உன் பப்பி லவ்வையே கன்டினியூ பண்ற”

பவித்ரா “அப்பா, நீங்க பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்யுங்கப்பா. நாங்க இவனை குண்டுக் கட்டா தூக்கிட்டு வரோம்”

மகனைப் பற்றி நன்கறிந்த சீதளா அவனையே பார்க்க “உங்க இஷ்டம் எப்படியோ, அப்படி”

ஸ்ரீசைலம் “பொண்ணோட படிப்பு, வேலை இதெல்லாம் கூட தெரிய வேண்டாமா?”

பாட்டி “சைலா, பொண்ணோட பேரென்ன?”

பவித்ரா “அதானே, பேரென்ன?”

ஸ்ரீசைலம் “இரு, பார்த்து சொல்றேன். இமெயில்ல இருக்கு” என்றவர் தன் மொபைலைத் தேட…

“நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். பாட்டீ, பொண்ணு பேரு லலிதா பரமேஸ்வரி” என்ற வாமன மூர்த்தி கையில் பைக் சாவியுடன் வெளியேற, ஏனையோர்…

“%₹@#?!?@!?”

*******************

“ஏம்மா, உனக்கே நியாயம் வேணாமாம்மா? என்பேரே லலிதா பரமேஸ்வரின்னு பழசா இருக்குன்னா, இவனை எங்கம்மா புடிச்ச?”

லக்ஷ்மி “நான் புடிக்கல, உங்கப்பா புடிச்ச மாப்பிள்ளை”

தாத்தா ரத்னம் “முன்னப் பின்ன தெரியாதவங்களை இப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசக் கூடாதுமா”

“முன்னப் பின்ன தெரியாதவனை கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாமா தாத்தா?”

லக்ஷ்மி “லலிதா…”

“ஓகே, ஓகே. ஸாரி தாத்தா”

“அதை விடு மா. ரங்கா, பையன் என்ன படிச்சிருக்கான், எங்க வேலை?”

“சிஏ, எம்பிஏ படிச்சிருக்கார் மாமா. (சிறிது தயங்கியவர்) சொந்தமா பென்சில் ஃபேக்டரி வெச்சிருக்காங்க”

“பிஸினஸ் பண்ற பையனா?”

லலிதா “அதனால என்ன தாத்தா, பையனோட ஃபோட்டோ எங்கப்பா?”

ரங்கராஜன் “நேர்லதான் பார்ப்பேன், ஃபோட்டோவெல்லாம் வேணாம்னு சொல்றானாம். நல்ல இடம் லலிதா. நல்லா விசாரிச்சுட்டேன். உனக்கும் புடிக்கும் பாரேன். அப்பா சொன்னா கேப்பதானே?”

“ஏன், இடுப்புல தூக்கி வெச்சுக்கோங்களேன்” - லக்ஷ்மி.

“பொறாமைம்மா உனக்கு”

மனைவியைத் திரும்பிப் பார்த்து கண்சிமிட்டிய ரங்கராஜன், மகளிடம் “அவ கிடக்காடா தங்கம். உன்னோட செக் லிஸ்ட்டுல இருக்கற நிறைய கண்டிஷனுக்கு இந்த வரன் ஒத்து வரும்னு தோணுது. நான் அவங்களை வரச் சொல்லட்டுமா, சரின்னு சொல்லுடா”

லக்ஷ்மி “விழுந்தே விட்டாரடா”

ரத்னம் “பேசாம இரு லக்ஷ்மி”

ரத்னம் “அம்மாடீ லலிதா, இதுவரை நீ சொன்னபடி இந்தக் காலம் மாதிரி மாடர்னாதானே எல்லா மீட்டிங்கும் நடந்தது. உனக்கு ஒன்னு சரின்னு பட்டாப்போல அந்தப் பையனுக்கும் ஒரு கருத்து இருக்கலாம்தானே? ஒரு சான்ஸ் கொடுத்தாதான் என்ன?”

“நீங்க சொல்றதும் சரிதான் தாத்தா, சரிப்பா, வரச் சொல்லுங்க. இருந்தாலும், ஒரு ஃபோட்டோ அனுப்ப எத்தனை நக்ரா(அலட்டல், fussy)? ஃபோன் நம்பராவது தருவானா, அதுக்கும் ஏதாவது சொல்லுவானா?”

“கேட்டுப் பாக்கறேன் மா”

“டாடீ, அவனை எனக்குப் புடிக்கலைன்னா…”

ரங்கராஜன் “நிச்சயமா கட்டாயப்படுத்த மாட்டோம்டா”

லக்ஷ்மி “அதே சமயம், எங்க எல்லாருக்கும் புடிச்சிருந்தா, நியாமான காரணம் இல்லாம நீயும் இந்தப் பையனை வேணாம்னு சொல்லக்கூடாது”

“நானா வேணும்னே வேண்டாம்னு சொன்னேன். நிறைய ஆப்ஷன் இருக்கறப்போ அவசரப்பட்டு, அடுத்து வர பெஸ்ட் சாய்ஸை மிஸ் பண்ணிடுவோமோ, இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாமேன்னுதான்…”

நோகாமல் தலையில் அடித்துக் கொண்ட லக்ஷ்மி “லேட்டஸ்ட் வர்ஷனுக்கு வெய்ட் பண்ண அவன் என்ன ஆப்பிள் ஃபோனா, ஆன்ட்ராய்ட் மொபைலா… உசுரோட, உணர்வோட இருக்கற ஆம்பளைடீ”

“ஆஹ்..ஹா, பஞ்ச் டயலாக் பிரமாதம் போ. இதேயே அவங்களுக்கும் சொல்லி வை. ஆனாலும் அதென்னமா பேரு வாமன மூர்த்தின்னு… என் இடுப்பு உசரத்துக்கு வருவானா?”

நக்கலடித்த லலிதாவிற்குத் தெரியவில்லை, அந்த வாமனமூர்த்தி, வெகு விரைவில் இவள் தலையிலேயே கால் வைத்து அழுத்தம் கொடுக்கும் திரிவிக்ரமனாக வியாபித்து நிற்பான் என.

******************

பவித்ரா “வாமனா, உனக்கு எப்படிடா பொண்ணோட பேர் தெரியும்?”

ஸ்ரீராம் “என்ன, அங்கிளோட இ மெயிலை பார்த்திருப்பான். ஆனாலும் செம ஸ்பீடுடா மச்சான்”

ஸ்ரீசைலம் “அந்த பொண்ணு இவனை விட வேகமா இருப்பா போல. பையனோட மொபைல் நம்பர் வேணுமாம். அவங்கப்பா அவளோட நம்பரை அனுப்பி இருக்கார்”

வாமனமூர்த்தி “எனக்கு அனுப்புப்பா”

பாட்டி ஜானகி “கலிகாலம். நான் இன்னும் என்னென்ன பாக்கணுமோ?”

வாமன மூர்த்தி “வேறென்ன, பிக்பாஸ் சீஸன் 9 தான்”

சீதளா கணவரிடம் “நம்ம புள்ளையைப் பத்தி நமக்குத் தெரியாதா , யாரும் யாரோடயும் பேச வேண்டாம். நாம நேர்லயே போய் பார்க்கலாம். கல்யாணம் நடந்தா சரி”

ஸ்ரீராம் “வாம்ஸ், உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்னு இப்பயாவது சொல்லேன்டா”

“எப்போதும் சொல்றதுதான். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது ஸ்ரீ. வர்ற பொண்ணை நான் மோல்ட் பண்ணிப்பேன். நான் நேர்ல பார்க்கற பொண்ணை நிராகரிக்கக் கூடாதுன்னு நினைக்கறேன். லெட்’ஸ் ஸீ”

நண்பனை அணைத்து விடுவித்த ஸ்ரீராம் “ஆல் த பெஸ்ட் டா மச்சான்”

****************

அந்த வார வெள்ளிக்கிழமை மாலையில் லலிதா பரமேஸ்வரியை பெண் பார்க்கப் போவதாக முடிவானது.

இடைப்பட்ட நாள்களில் தந்தை அனுப்பிய லலிதாவின் பொபைல் எண்ணை குறுந்தகவலாகவே பார்ப்பதும், வைப்பதுமாக இருந்தான்.

வெள்ளிக்கிழமை காலை லலிதாவை கான்டாக்ட் லிஸ்ட்டில் இணைத்துப் பார்த்தான்.

வாட்ஸ்ஆப் டிபியில் ஆர்க்கிட் சிரிக்க,
‘My love language is Acts of service’ என்றது ஸ்டேட்டஸ்.

( சேவை செயல்களே என் காதலின் மொழி )

அழைப்பு விடுக்க, ‘என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்’ என்றார் நித்யஸ்ரீ.

“இன்ட்ரெஸ்ட்டிங்” என்று முறுவலித்தான் வாமனமூர்த்தி.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr.மாமியார் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

amirthababu

New member
Joined
Jun 19, 2024
Messages
1
வாமனன் in general விஷ்ணுவின் அவதாரம். இன்னொரு பெயர்காரணம் பிரபஞ்சத்தை தாங்கும் எட்டு யானைகளில் ஒன்று.
லஷ்மி தன் மேல் ஏற்றி தாங்குவானா?? திரிவிக்கிரமனாய் தலையில் காலை வைப்பானா??
 

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
128
இன்ட்ரஸ்டிங், திரிவிக்ரமானா அவதாரம் எடுப்பானா? இல்லை லலிதா சஹஸ்ரநாமம் வாசிப்பானா?
 

saki

New member
Joined
Nov 8, 2024
Messages
3
அப்படியே இந்த கால கட்ட நிதர்சனங்களை பிரதிபலிக்கிறது. சக்தி ( லலிதா) வா ? இல்லை மூன்றடி மன்னனா என்று பட்டி மன்றம் வைக்கலாம் போல. அடுத்த ஆர்பாட்டம் ( அத்யாயம்) எப்போ?
 
Joined
Jun 19, 2024
Messages
4
அப்ப வாமன மூர்த்தி திருப்பி ஶ்ரீநிவாஸ் பாடுற இந்த ரிங்க் டோனை வைக்க வேண்டியது தானே? 😜😜

என் மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

 
Top Bottom