• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் - 21

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
விழிகள் தீட்டும் வானவில் - 21

செப்டம்பர் மாதத்து சூரியன் குழந்தையைத் தொட்டு அணைப்பது போன்ற இளஞ்சூட்டில் இதமாக ஒளி வீசிக் கொண்டிருந்தான். மழை வரப்போவது மாதிரியான காற்றும் கூடச் சேர்ந்து கொள்ள, அந்தக் காலைப் பொழுது ரம்யமாக விடிந்திருந்தது.

சோம்பலாகக் கண் விழித்த நேத்ரா, மெல்ல நகர்ந்தபடி டேபிளில் கைகளைத் துளவி மொபைலை தேடினாள்.

‘மணி என்ன ஆச்சோ..?’ அறைக்குள் நுழைந்திருந்த வெளிச்சக் கதிர்கள் ‘எந்திரி, எந்திரி... ’ என்று அதட்டினாலும், மனசு கொஞ்சம் கூட எழுந்து கொள்ளும் உத்தேசமே இல்லாமல் நெட்டி முறித்தது.

“ப்ச்.. எங்க போச்சு….?” தேடிய போன் கையில் சிக்காமல் போக, படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள முயன்றவளை ஆகாஷின் கரங்கள் தன்னுடன் இழுத்து அணைத்துக்கொண்டன.

“டைம் ஆச்சு ஆகாஷ்....” இவளுடைய முணுமுணுப்பு எல்லாம் அர்த்தமற்றுக் காற்றில் தேய, “நீங்க இருக்கீங்களே...” நேத்ரா அந்த மாயவலைக்குள் விரும்பியே அகப்பட்டுக் கொண்டாள்.

“உம்முன்னு மூஞ்சியை வைச்சுகிட்டு சரியா நிமிர்ந்து கூடப் பார்க்காத ஆளா இது...? எப்ப இருந்து இப்படி ரொமாண்டிக்கா மாறுனீங்க...?” அவன் மீசைமுடிகளை இழுத்து அவள் விளையாட,

“எல்லாப் புருஷனும் அவன் அவன் பொண்டாட்டிகிட்ட ரொமாண்டிக்கா தான் இருப்பான்.. இதுக்குன்னு அந்நியன் ரெமோ மாதிரி ஸ்ப்லிட் பர்சனாலிட்டியாவா மாற முடியும்...?” அவன் செல்லமாக அவள் மூக்கை நிமிண்டினான்.

இந்த உரிமையான ஆகாஷை, தன்னிடம் செல்லம் கொஞ்சும் ஆகாஷை, அபரிதமான அன்பை, கட்டுக்கடங்கா காதலை தன் மேல் வர்ஷிக்கும் ஆகாஷை அவளுக்கு இன்னும் இன்னும் பிடித்திருந்தது.

திருமணம் முடிந்து இன்றோடு ஐந்தாம் நாள். ஆலம் கரைத்துப் புதுப் பெண்ணாக இந்த வீட்டுக்குள் நுழைந்தபோது நேத்ரா என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை.

இத்தனை நாள் இங்கு வரும்போதெல்லாம் ‘இது தன் வீடாக வேண்டும்’ என்ற அளவில்லா ஆசையிலும், ‘அது நடக்குமா?’ என்ற சிறு கவலையிலும் வந்து சென்றவள் அவள்.

உரிமையாக ஆகாஷின் கைப்பற்றி நுழைந்தபோது அந்தச் சின்னஞ்சிறு வீடு கூட ஆயிரம் விளக்குகள் போட்ட அரண்மனையாகக் காட்சி அளித்தது. பூஜை அறையில் விளக்கேற்றி, அரிசி, பருப்பு தொட்டு எடுத்தவளை மேடிட்ட வயிற்றுடன் இருந்த சௌமி இறுக அணைத்துக்கொண்டாள். அவள் முகத்தில் அப்படி ஆனந்த பரவசம்.

“எங்கண்ணன் போன ஜென்மத்துல நிறையப் புண்ணியம் பண்ணியிருக்கணும், நீ கிடைக்க... ஏன்.. நாங்களும் தான்... ஆல் தி பெஸ்ட்டி...” என்றவள் நேத்ரா தன்னை முறைப்பதை பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.

“சரி... சரி.. முறைக்காத தாயே... நீயும் தான்... போதுமா...?” கிண்டலடித்தபடி நேத்ராவின் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தவள்,“ அவன் முன்ன பின்ன இருந்தாலும் நீ பார்த்து போயிக்கோ... என்ன...?” தன் மனதில் தோன்றியதை சொல்லவும் தவறவில்லை.

தன் அண்ணனுடைய கோபத்தையும், நொடியில் சிடுசிடுத்து போகும் அவன் இயல்பையும் அறிந்தவள் என்பதால் சௌமிக்கு தோழியின் வாழ்க்கையை எண்ணி கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

“உங்கண்ணன் மட்டும் அப்படி ஏதாவது வம்பு பண்ணினா பிச்சுப்புட மாட்டேன் பிச்சு...” நேத்ரா ஜம்பம் காட்டியபடி சௌமியின் தோளைத் தட்டினாலும், கணவனுடைய கோபம் பற்றியெல்லாம் அவள் துளி அளவு கூடக் கவலைப்படவில்லை.

“ஐ க்நோ ஹிம் இன் அண்ட் அவுட்....” அவளுடைய ஆழ் மன நம்பிக்கைக்கு ஏற்ப தான் ஆகாஷும் அவளை அன்பில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

‘இவனா ‘வேண்டாம், வேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான்?’ அவளுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது.

என்னதான் மருத்துவத் துறையிலேயே உழன்று கொண்டிருந்தாலும், மனித உடற்கூறு குறித்துக் கரை கண்ட அறிவு இருந்தாலும் முதன்முதலாக அவனைத் தனியே சந்திக்கும் தருணம் அவள் வியர்த்துப் போனது நிஜம்.

“என்ன திடீர்னு வெக்கம் அது இதுன்னு உனக்கு வராததை எல்லாம் ட்ரை பண்ணிட்டு இருக்க....?” தயங்கி தயங்கி வந்தவளின் தோள் பற்றி அவன் சீண்ட, அவளுக்கு இருந்த பதட்டத்தில் நிமிர்ந்து முறைக்க வேண்டும் என்று கூடத் தோணவில்லை.

“ஓய்... எதுக்கு இவ்வளவு டென்ஷன்...? இன்னிக்கு தான் என்னை நீ புதுசா பார்க்குறியா, என்ன...?”

தன் நெருக்கத்தில் காதுமடல்கள் எல்லாம் சிவந்து போயிருந்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன், “கொஞ்ச நேரம் வெளில இருக்கலாமா...? இவங்க பண்ணி வச்சிருக்கிற செட்டப்பை பார்த்தா எனக்கே பயமாத்தான் இருக்கு...” விளையாட்டாக அழைக்க, அவர்கள் இருந்த மாடி அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

வெட்டவெளி ஆகாயத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் ஓய்வு எடுக்கச் சென்றிருக்க, பால் போன்ற நிலவு மட்டும் குளிர்ச்சியைப் பொழிந்து கொண்டிருந்தது.

சுற்றிலும் எந்தச் சந்தடியும் இல்லாமல் வீடு பூரண அமைதியில் இருந்ததில் இயல்பான மூச்சு வந்தது என்றால் அவன் சகஜமாக எதைப் பற்றியோ பேச, இவள் பதில் சொல்ல, கொஞ்சம் தேவலாம்.

அந்த இதமான காற்றும், அரையிருளும், கீழே இருந்த மல்லிகை பந்தலில் இருந்து வந்த மலர்களின் நறுமணமும் ஒருவித பரவச மனோ நிலையைப் பரிசளித்ததில் தன்னை அணைத்து நின்றிருந்த ஆகாஷின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

என்னவோ அந்த நிமிடம் அவளுக்கு எல்லாப் படபடப்பும், பரபரப்பும் அடங்கிப் போய் மனசு முழுசும் நிறைந்திருக்க, ‘இவன் என் புருஷன்...’ என்ற உரிமை அலைகள் மட்டும் உடலெங்கும்.

அதை உணர்ந்தார்போல அவன் கரங்களும் அவளை இறுக்கிக் கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்களுக்கே தங்களுக்கான உலகத்தில் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

நழுவி கொண்டே ஆழம் செல்லும் மோனநிலை; வெளியே வரவே அனுமதிக்காத மாயவலை; ஒரே நேரத்தில் கடலின் ஆழத்தையும், கரையின் எல்லைகளையும் தேடும் நீண்ட பிரயாசை;

ஏதோ காலம் காலமாகக் காதல் செய்தவன் போல ஆழ்மழையாய் அவன் ஆகர்ஷிக்க, நேத்ரா அவனுடைய அளவு கடந்த நேசத்தில் கொஞ்சம் திகைத்துத் தான் போனாள். அதே திகைப்பும் மலைப்பும் தான் இப்போதும்.

“நான் ஒண்ணு கேப்பேன்... ஒழுங்கா பதில் சொல்லணும்....” இந்த நான்கைந்து நாட்களாக அவள் மனதின் ஓரம் சிறிதாய் நமைத்துக் கொண்டிருக்கும் ஆர்வம் அதற்கு மேல் முடியாது என்று வெளியே வர, அவள் கேட்டே விட்டாள்.

“நீங்களும் என்னை டீப்பா லவ் பண்ணினீங்க தானே.. வீணா எதுக்குப் பிரச்சனைனு தானே ‘வேணாம், வேணாம்’னு மல்லு கட்டுனீங்க.....?”

“ஹ ஹ ஹா....” அவளுடைய ஆவல் மிகு வதனத்தில் முத்தமிட்டவன், சத்தமாகச் சிரித்தான்.

“மெடிக்கல் ஜர்னல் படிக்காம மில்ஸ் அண்ட் பூன்ஸ் படிச்சா இப்படித் தான் யோசிக்கத் தோணும்...” அவள் தலையில் முட்டியபடி அவன் கலாய்க்க,

“ப்ச்.. போங்க..”

“சும்மா பேச்சுக்குனாச்சும் ‘ஆமா’ன்னு சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க...” அவன் கன்னத்திலேயே ஒரு இடி இடித்தாள்.

“ஏய்... வலிக்குதுடி...” அவள் கையைப் பற்றித் தன்னுள் அடக்கிக் கொண்டவன்,

“இப்பன்னு இல்ல, எப்பயுமே உன்னை ரொம்பப் பிடிக்கும், மத்தபடி.... டீன் ஏஜ்ல இருக்கும்போது உன்னை சைட் அடிச்சது உண்மை தான். ஒருதடவை ஆட்டோல இருந்து ஓடி வந்து என் வாய்ல கை வச்சு “ப்ளீஸ்.. ப்ளீஸ்...”னு கெஞ்சுனீல்ல... ஞாபகம் இருக்கா... அப்ப கல்யாணம் பண்ணினா உன்னைத் தான் பண்ணிக்கணும்னு நினைச்சிருக்கேன், தெரியுமா...?”

கண்கள் மின்ன அவன் சிரித்ததில் பனிமலையைத் தூக்கி தலையில் வைத்தது போலக் குளிர்ந்து போனது.

“ரியல்லி.... உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா....!?” காதல் மிகு முத்தம் ஒன்றை அவன் கன்னத்தில் பதித்தாலும், அவன் அடுத்து சொன்னதைக் கேட்டு கொதித்துத்தான் போனாள்.

“அதெல்லாம் லைப்னா என்னன்னு தெரியறதுக்கு முந்தி.. பேண்டசி பீலிங்க்ஸ்.... பட் வென் மை ட்ரீம்ஸ் வேர் ஷேட்டர்ட்... அந்த நினைப்பெல்லாம் வெறும் கனவு கண்ட மாதிரி ஆயிடுச்சு... அது தான் நீ சொன்னப்ப எல்லாம் வேணாம்னு சொன்னேன்.”

“உள்ளுக்குள்ள ரொம்பக் கஷ்டமா தான் இருக்கும். அதுக்கென்ன பண்றது? ஐ வான்ட்டட் டூ பி ப்ராக்டிகல்... நீ எங்கயோ இருக்க வேண்டியவ... உன்னைக் கொண்டு வந்து இந்தச் சின்ன....” அவளது உள்ளங்கை வேகமாக அவன் உதடுகளை அடைத்தது.

அவன் சொல்ல சொல்ல பூரிப்பும், அதைத் தாண்டிய ஊடலும் ஒருங்கே தோன்றினாலும், “நோ சேம் ராமாயணம் ப்ளீஸ்... அதுவும் இப்பிடி அட்டைக் கணக்கா ஒட்டிக்கிட்டு...” சிறு கோபம் தொனிக்கச் சொன்னபடி எழுந்து அமர்ந்தாள்.

“ஒரு பேச்சுக்கு கூட ‘என்னன்னாலும் சரி, உன்னைத் தூக்கிட்டு வந்தாச்சும் தாலி கட்டியிருப்பேன்.. நீ தான் என் உலகம்..’ அப்படி இப்படின்னு சொல்ல தோணுதா...? எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு...” தன் தலையில் தட்டியபடி அவள் வெகுவாகச் சலித்துக் கொள்ள,

“எதுக்கு வீணா வாய் வலிக்கப் பேசணும்..? ஒன்லி ப்ராக்டிகல்...” அவன் குறும்பாகக் கண் சிமிட்டினான்.

“ம்க்கும்... இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல....” சிரித்தவளின் கண்களில் இப்போது மொபைல் அகப்பட, அனிச்சையாக எடுத்துப் பார்த்தவள் ஒரு நொடி துள்ளியே விட்டாள்.

“அச்சோ.. மணி ஒன்போதரை.... இவ்வளவு நேரம் கழிச்சு...” அவள் அவசரமாக விலகி செல்ல முயல, எங்கே, அவன் விட்டால் தானே...?

“ப்ச்... விடு.... லேட் ஆனது ஆகிப் போச்சு...” அவள் மடியில் வைத்த தலையை நகர்த்திக் கொள்ளாமல் அவன் அடம் செய்ய, “ப்ளீஸ் மா... எல்லோரும் என்ன நினைப்பாங்க...?” அவள் விரல்கள் அவன் நெற்றி முடியை வருடிக் கொடுத்தன.

“என்ன நினைப்பாங்க.... பொண்ணு ரொம்ப முரடு.... பாவம் நம்ம பையன், நகரவே விட மாட்டேங்குது போலன்னு நினைச்சுப்பாங்க...” அவன் பாவம் போலச் சொன்னதில் வெறியாகிப் போனாள்.

“சை.... உ...ங்களை.... என்ன செஞ்சா ஆகும்?”

வந்த ஆத்திரத்தில் அவனைப் புரட்டித் தள்ளியவள் தலையணையால் அவன் முதுகில் மொத்தி எடுக்க, “ம்ம்... இங்க அடி.. ஆ... இங்க கொஞ்சம்... ஹப்பா... நல்ல மசாஜ் பண்ணுற மாதிரி இருக்கு...”

அதற்கும் அடங்காமல் அவன் தன் விளையாட்டைத் தொடர, சிரிப்புடன் எழுந்தவள் அவிழ்ந்து கிடந்த முடியை கேட்ச் கிளிப் கொண்டு அடக்கியபடி ஸ்க்ரீன்களை இழுத்து விட்டாள். உள்ளே பாய்ந்த சூரிய ஒளி கண்களைக் கூச வைத்தது.

‘சீக்கிரம் கீழே போய்க் குளித்துத் தயாராக வேண்டும்’ மனசு வேகமாய் உந்தித் தள்ளினாலும் ஏதோ சொல்ல விளங்கா தயக்கம் அவள் கால்களைத் தடுமாற வைத்தது. எவ்வளவு நேரம் கழித்து சென்றாலும் யாரும் எதுவும் சொல்ல போவதில்லை தான். இருந்தும்....

“ஆகாஷ்... இந்த ரூமுக்குப் பக்கத்திலேயே சின்னதா ஒரு டாய்லட் பாத்ரூம் போட்டுக்கலாமா...? கீழ இறங்கி போய்க் குளிச்சு கிளம்ப என்னமோ மாதிரி இருக்குடா... அதுவும் இவ்வளவு லேட்டா....?”

இலகுவாக கேட்டபடி தன் மாற்று உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், தன் காதில் விழுந்த பதிலை நம்ப முடியாத தினுசில் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“இது நம்ம சொந்த வீடு இல்லீங்க மேடம்.. எங்க அத்தை வீட்டுல வாடகைக்கு இருக்கோம்.. நம்ம இஷ்டத்துக்கு அதெல்லாம் செய்ய முடியாது.” குப்புறப் படுத்திருந்தவன் அதே நிலையில் இருந்தவாறு சொல்ல, அவன் சொல்வது உண்மை தான். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால்...

“ஏன்...? இதெல்லாம் உனக்கு இப்பதான் தெரியுதா...? இந்த வீட்டுக்கு இதுவரைக்கும் நீ வந்ததில்லையா என்ன?” அவனுடைய குரலின் ஸ்ருதியே மாறிப் போயிருந்தது எனில்,

“இதுக்குத் தான் நான் ‘வேணவே வேணாம்’னு தலைகீழா நின்னு பார்த்தேன்.. நீ தான் கேக்கல... ப்ச்.... இப்ப பாரு... இதெல்லாம் உனக்குத் தேவையா...? பிடிச்சாலும் பிடிக்கலேன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்குற மாதிரி....?” அவன் மேலே மேலே சிடுசிடுத்து சென்றதை அவளால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

‘சற்று முன்பு வரை சுகித்துச் சுகித்துக் காதல் செய்தது இவன் தானா?’ தவிப்பும் திகைப்புமாக அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.

**********************

“பழத்தட்டே மொத்தம் பண்ணெண்டு வந்திருச்சா...? அப்புறம் வெத்திலை பாக்கு தேங்காய் ஒண்ணு, புடவை இரண்டு, நகை மூணு மொத்தம் பதினைஞ்சு ஆச்சுல்ல....”

தேங்காயை துருவியபடி கீழே அமர்ந்திருந்த சுகந்தி நேத்ராவிடம் கேட்க, “இரு... இரு,, நான் ஒரு தடவை எண்ணி பார்த்துக்குறேன்... இங்க கொடும்மா.....” நேத்ரா எழுதிக் கொண்டிருந்த லிஸ்ட்டை வாங்கினார் விஸ்வம்.

அவரிடம் கையிலிருந்த தாளை கொடுத்துவிட்டு எழுந்த நேத்ரா, “கடைக்கு எப்ப போறது அத்தே...? நீங்க தேதி பார்த்து சொன்னீங்கன்னா நான் ஹாஸ்பிடல்ல சொல்லி வச்சுருவேன்...” அவர் துருவிய தேங்காயை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொண்டே கேட்டாள்.

இன்னும் இரண்டு வாரத்தில் சௌமியாவுக்கு வளைகாப்புச் செய்வதாக இருந்தார்கள். இப்போது ஒன்பதாம் மாதம் நடப்பதால் அப்படியே வீட்டுக்கு அழைத்து வந்து விடுவதாகத் திட்டம்.

சௌமி இங்கே வந்து இருக்கப் போவது சந்தோஷம் தான். ஆனால் அதையும் தாண்டி நேத்ரா மனமெங்கும் வேறு வித யோசனை .

நவம்பரிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கியிருக்க, வீடு இப்போதே புழுங்க ஆரம்பித்து விட்டது. ஏதோ இவர்களுடைய ஏரியாவில் கொஞ்சம் மரங்கள் இருப்பதால் சற்றுத் தேவலாம். அறைகளில் மாட்டியிருந்த அதரபழசான ஏர் கண்டிஷனரில் சத்தம் தான் அதிகம் வந்ததே ஒழிய, காற்று வரவில்லை.

கீழே இருப்பது ஒரு பெரிய அறை. இன்னொரு குட்டி ரூமில் விஸ்வம் பகலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும் இரவில் தாத்தா, பாட்டி படுத்துக் கொள்ள அது தான் உபயோகப்பட்டது.

அதனால் கீழே ஒரு சென்ரலைஸ்ட், மேலே ஒரு ஸ்ப்ளிட் மாடல் என இரண்டு இடத்திலும் புதிதாக ஏஸி போட்டால் தான் வரும் வெயில் காலத்தைச் சமாளிக்க முடியும். சௌமிக்கும், குழந்தைக்கும் அது தான் வசதி. இந்த இரண்டு வாரத்தில் வளைகாப்புக்கு முன்னாடி அந்த வேலைகளைச் செய்து வைத்தால் தான் உண்டு.

இங்கே பணமும் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால்...?

எங்கே இந்தப் பேச்சை எடுத்தால் அன்று மாதிரி ஆகாஷ் எதையாவது பேசி மனதை உடைத்து விடுவானோ என்ற பயமே நேத்ராவின் வாயை கட்டிப் போட்டு வைத்திருந்தது.

இந்தக் குழப்பத்திலேயே அவள் மிக்ஸியை ஓட விட, ஆகாஷ் குளித்துக் கிளம்பி தயாராக வந்து அமர்ந்தான்.

“இது தான்பா லிஸ்டு... நீயும் ஒரு பார்வை பாரு...” விஸ்வம் கொடுக்க, தன் முன் நீண்ட ஸ்லிப்பை வாங்கி ஒரு முறை பார்த்தவன், “எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க... கொஞ்ச கொஞ்சமா ஏடிஎம்ல எடுத்து வச்சா தான் ஆகும்.... இல்லேன்னா பேங்க்ல போய் க்யூல காத்துக்கிட்டு நிக்கணும்..”

அவன் சாக்ஸை அணிந்தபடி டைனிங் டேபிளில் அமர, தோசைக் கல்லை அடுப்பில் வைத்த சுகந்தி ஹாலிலேயே கண்ணாக இருந்தார்.

இப்போது எல்லாம் விஸ்வம் முன்பு போல மகனிடம் பேச தயங்குவதில்லை. அவன் கேட்கிறானோ, இல்லையோ தன் எண்ணங்களைச் சொல்லவே செய்கிறார்.

‘எங்க இந்தப் பையன் எதுவும் மூஞ்சை காண்பிச்சுட கூடாதே...?’ சுகந்தி தான் பதட்டத்தில் காய்ந்திருந்த கரண்டியை தொட்டு விட்டு கையை உதறிக் கொண்டார்.

இதையெல்லாம் கவனிக்காத நேத்ரா தட்டை கழுவி அவன் முன் வைத்து விட்டு ஏற்கனவே தயாராக டேபிளில் இருந்த மதிய உணவை அவனுக்கு பேக் செய்து கொண்டிருந்தாள்.

“நீ தூங்கி ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ணுற...?” அவளது உறக்கம் இல்லா சிவந்த விழிகளைக் கவனித்தவாறு அவன் கடிந்து கொள்ள, “ம்ம்... நீங்க கிளம்பினவுடனே போய்ப் படுக்குறேன்...” அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

கல்யாணத் தேதி முடிவானதுமே செங்கல்பட்டில் இருந்த வேலையைத் தான் யுஜி படித்த கல்லூரி மருத்துவமனைக்கே மாற்றிக் கொண்டு வந்து விட ஏற்பாடுகளைச் செய்திருந்தாள்.

இங்கு போஸ்டிங் கிடைக்கும் வரை ஒரு மாத விடுமுறையில் இருந்தவள், மூன்று வாரங்களுக்கு முன்பு தான் இங்கே ஜாயின் செய்தாள். இந்த வாரம் முழுக்க இரவு ட்யுட்டி. ஆகாஷ் தான் காலையில் ஹாஸ்பிடல் போய் அழைத்து வந்திருந்தான்.

‘அந்த அக்கறைக்கு எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்ல... ஆனா எப்ப முருங்கை மரம் ஏறும், எப்ப இறங்கும்னு தான் தெரியாது...’ அவள் தன்னை மீறிய புன்னகையுடன் மனதுக்குள் சீராட்டிக் கொள்ள, “என்ன சிரிப்பு...?” ஆகாஷின் ரகசிய கிசுகிசுப்பைத் தடை செய்தது அவள் மாமனாரின் குரல்.

“அப்புறம் கண்ணா.... இன்னொரு விஷயம்....” என்று தொடங்கிய விஸ்வம் நேத்ரா இவ்வளவு நேரம் மனதில் யோசித்துக் கொண்டிருந்ததையே ஆகாஷிடம் கூற, அவன் அசுவராஸ்யமாய் ‘உம்’ கொட்டினான்.

“ஏஸி வாங்கிப் போட்டுடலாமாப்பா.... அம்முவும் பாவம்.... அதுக்கும் கஷ்டமா இருக்கும்..” என்று அவர் தொடர, “பார்க்கலாம்... பார்க்கலாம்...” அசட்டையாக வந்தது அவன் பதில்.

“அப்புறம்.. அப்படியே மேலே ஒரு கிளாசட் போட்டுடலாமா, கண்ணா...? வைஷு கூடச் சரின்னுச்சு... குருகிட்ட நான் பேசுறேன். ஒரு வார்த்தை சொல்லிட்டோம்னா வேலையை ஆரம்பிச்சுடலாம்...”

அவர் தயங்கி தயங்கி பேசினாலும், சொல்ல வந்த விஷயங்களை முழுமையாகச் சொல்லிவிட்டு ஆர்வமுடன் மகனின் முகத்தைப் பார்க்க,

“இதெல்லாம் உன் வேலையா?” நேத்ராவை ஒரு முறை முறைத்தவன்,

“ஒரு மண்ணும் வேணாம். இது என்ன நீங்க கட்டி வச்ச வீடா, உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்றதுக்கு..? வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம எதையாவது கேட்டு வச்சு, இருக்கிற மரியாதையைக் கெடுத்துக்காதீங்க, அவ்வளவு தான் சொல்லுவேன்.....”

சுள்ளென்று எரிந்து விழுந்தபடி எழுந்து சென்றவனின் முதுகையே கோபமும், ஆதங்கமுமாகத் தொடர்ந்தன நேத்ராவின் விழிகள்.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் - 21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
107
ஆகாஷ் எப்போ நல்லா பேசுவான், எப்போ கோவப்படுவான்?
 
Top Bottom