• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -20

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
விழிகள் தீட்டும் வானவில் -20

வரிசையாக நான்கு கார்கள் வந்து நிற்க, முதலில் இறங்கினார்கள் மாலதியும் சோமசுந்தரமும்.

பின்னால் வந்து நின்ற வண்டிகளில் இருந்த தங்கள் உறவினர்களை வரவேற்றபடியே சாமான்களை அவர்கள் இறக்கி வைக்க, எல்லோரும் இறங்கி வந்தாலும், முன்சீட்டில் அமர்ந்திருந்த ரவி மட்டும் சட்டமாக உள்ளேயே உட்கார்ந்திருந்ததில், “என்னம்மா இது?” சோமசுந்தரம் மருமகளை வருத்தமாகப் பார்த்தார்.

எல்லோர் முன்னாடியும் ஒன்றும் காட்டிக் கொள்ள முடியாத மாலதி, “என்னங்க... இறங்கி வாங்க... எல்லோரும் காத்திருக்காங்க” சாதாரணமாகச் சொல்வது போலிருந்தாலும் கணவரை மறைமுகமாக இறைஞ்சிய கெஞ்சல் பார்வை அவரிடம்.

“ம்ம்....” சலிப்பாகச் சொன்ன ரவியின் முகத்தில் அழுத்தமான கடுமையும், மனதில் எல்லையில்லா கவலையும்.

நாலு கார் வந்து நின்றதிலேயே முழுவதும் அடைத்துக்கொண்ட அந்தக் குறுகலான தெருவைப் பார்க்கும்போதே அவருக்குக் கண்ணில் நீர் வந்து விடும் போலிருந்தது. அவரைச் சொல்லியும் குறையில்லை.

எல்லையில்லாத சொத்து, வசதி வாய்ப்பு, படிப்பு, தொழில் என்று எல்லாம் இருந்தாலும் தன் ஒரே ஒரு செல்லமகளை நடுத்தர நிலையில் இருக்கும் ஒருவனுக்குக் கட்டித் தரவேண்டும் என்றால் யாராக இருந்தாலும் மனசு ஒத்துக் கொள்ளாது தான்.

மகளின் மனதை மாற்ற அவரும் ஆன பாடு பட்டுவிட்டார். பெண்ணைக் கெஞ்சிப் பார்த்தார், மிரட்டினார், மாதக்கணக்கில் அவளிடம் பேசாமல் இருந்தும் பார்த்து விட்டார்.

ஒருவேளை நேத்ரா தானும் தன் பங்குக்கு விடைத்துக் கொண்டு ‘என் வாழ்க்கை, என் இஷ்டம்’ என்று சொல்லியிருந்தால் இப்போது கூட மனசு இறங்கி இங்கு வந்திருக்க மாட்டாரோ என்னவோ?

அவள் இவருடைய ஒவ்வொரு அஸ்திரத்திற்கும் ‘ப்பா... உங்க கோபம் புரியுதுப்பா.. பட் ப்ளீஸ்... என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. ம்மா... நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்...” என்று ஒரே ப்ளீஸாகப் போட, ஒரு கட்டத்திற்குப் பின் அவருக்கு வேறு வழி இருக்கவில்லை.

அவருடைய மகள் சின்னதிலிருந்தே ‘ப்ளீஸ்’ கொஞ்சியே நினைத்ததைச் சாதித்து விடுவாள். இப்போதும் அதே மந்திரம் தான் வேலை செய்தது.

மாலதிக்கும் ஆரம்பத்தில் வருத்தம் தான். இருந்தும் வாழப் போகிறவளுடைய சந்தோஷம் தான் முக்கியம் என்ற முடிவுக்கு அவர் சீக்கிரமே வந்துவிட்டார்.

“ஆகாஷ் நல்ல பையன் தானேங்க.. இத்தனை வருஷம் அந்தக் குடும்பத்தைப் பார்க்கிறோம்.. ஏதோ நடுவுல அவங்க நிலைமை கொஞ்சம் சரியில்லாம போயிடுச்சு.. இப்ப பையன் தலையெடுத்து நல்லா தானே இருக்காங்க... நீங்களே ஒரு தடவை சொல்லலையா... நல்ல திறமைக்காரன்.. சீக்கிரமே பெரிய ஆளா வந்துடுவான் பாருன்னு...” மாலதி பேசி பேசி கணவரை கரைக்க முயல, அப்போதும் ரவியின் மனம் சமாதானமாகவில்லை.

“என்னவோ சின்னப் பொண்ணு.. திடீர்னு புத்தி சரியில்லாம உளறிக்கிட்டு இருக்கா.. “ என்று ஜோசியம், ஜாதகம், பரிகாரம் என்றெல்லாம் கூட அலைந்து பார்த்தார். ஒருவேளை விட்டுப் பிடித்தால் அவளே உணர்ந்து தன் வழிக்கு வருவாள் என்று அவர் மௌனம் சாதிக்க, ம்ஹுகும்.. ஒன்றும் வேலைக்காகவில்லை.

“நீங்க எப்ப பண்றீங்களோ பண்ணுங்க... எங்களுக்கு ஒண்ணும் அவசரமில்லை...” சொல்லாமல் சொன்ன நேத்ரா பி.ஜியையும் முடித்துவிட்டு தான் சொன்ன மாதிரியே செங்கல்பட்டை ஒட்டிய ஒரு கிராமத்தில் போஸ்டிங் வாங்கி அங்குச் சென்று உட்கார்ந்து கொள்ள, நாட்கள் அதுபாட்டுக்கு ஓடி சென்றன.

எவ்வளவு நாட்கள் தான் பிடிவாதத்தை இழுத்துப் பிடித்துப் பொறுத்திருக்க முடியும்?

‘நம்ம பொண்ணுக்கு தான் வயசு ஆகுது, கேக்குறவங்களுக்குப் பதில் சொல்ல முடியல...’ மனைவியும் தந்தையும் மாறி மாறி செய்த நச்சு பொறுக்காமல் “ம்ம்..” என்று விட்டார்.

இப்போது முறையாகப் பேசி நிச்சயம் செய்து கொள்ளத்தான் நெருங்கிய சொந்தங்களோடு ஆகாஷ் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

‘எங்க அந்தஸ்துக்குக் கோடீஸ்வரன் எல்லாம் வரிசைல நிக்குறான், பொண்ணைக் கொடுன்னு.. என் நேரம், இந்த முட்டுச் சந்துக்குள்ள தட்டைத் தூக்கிட்டு போகணும்னு இருக்கு..’ என்னதான் சமாதானம் செய்துகொண்டாலும் அவருக்கு ஆறவேயில்லை.

கார்க்கதவை திறந்து வைத்து மாலதி திரும்பவும் அழுத்தி அழைக்க, “ம்ம்.. வரேன்.. வந்து தானே ஆகணும்...” சலித்துக் கொண்டே இறங்கிய ரவி எல்லோருக்கும் பின்னால் நடந்து வர, அதற்குள் வண்டி சத்தம் கேட்டு விஸ்வமும் ராமநாதனும் தெரு வாசலுக்கே வந்து வரவேற்றார்கள்.

வீட்டு வாயிலில் பார்வதி, சுகந்தி, வைஷ்ணவி, கூடவே அளவுகொள்ளா மகிழ்ச்சியுடன் சௌமி என பெண்கள் படை.

எல்லோர் முகத்திலும் சந்தோசமும் பூரிப்பும் ஒளியிட, வந்தவர்களை மலர்ச்சியுடன் வரவேற்று அமர வைத்தார்கள்.

இவர்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து சுற்றிலும் உட்கார, இடம் தான் நெருக்கடியாக இருந்தது. கூட வந்த உறவினர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன சௌம்யா.. உன் பிரண்ட்டு என்ன சொல்றா...? அவளுக்குத் தான் லைவ் டெலிகாஸ்ட் பண்ணுறியா...?” போனில் கிசுகிசுத்தபடி இருந்தவளை மாலதியின் தங்கை கிண்டலடிக்க,

“இல்ல ஆன்ட்டி... இது என் வீட்டுக்காரருக்கு... அண்ணனும் அவரும் தான் வந்துட்டு இருக்காங்க... கொஞ்சம் முக்கியமான வேலைன்னு வெளில போயிருக்காங்க.. இப்ப வந்துடுவாங்க...” சந்தடிசாக்கில் சொல்ல வேண்டிய தகவலையும் சேர்த்து சொன்னவள்,

“இனிமே நானெல்லாம் என்னத்த லைவ்வா சொல்லுறது..? அதுக்குத் தான் ஆளு வந்தாச்சே..” விளையாட்டாகச் சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள். ரவியைத் தவிர.

சற்று நேரத்தில் ஆகாஷும் நரேனும் வந்துவிட, எல்லோரும் ஆர்வமாக நிமிர்ந்து அமர்ந்தார்கள்.

“சாரி.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு...” புன்னகையுடன் உள்ளே வந்த ஆகாஷ் எல்லோரையும் வரவேற்றுத் தாமதத்திற்கு உரிய காரணத்தைச் சொல்லியபடி அமர்ந்தான்.

மாலதி, அவர் தங்கை, சோமசுந்தரம் இவர்களிடம் எல்லாம் கூடுதலாக ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரித்தவன், ரவியிடம் மட்டும் “வாங்க” என்பதுடன் நிறுத்திக் கொள்ள,

நல்ல உயரம், அதற்கேற்ற திண்மையான உடல்வாகு, மாநிறத்தில் கட்டை மீசையுடன் களையான முகம், நேர்த்தியான பார்மல் உடையில் இருந்தவனின் நாகரீகமான பேச்சு, அசட்டுக் களையில்லாத சிரிப்பு என மாப்பிள்ளையின் தோற்றம் பாந்தமாக இருந்ததில் அனைவருக்கும் ஒருமனதாக மனதுக்குப் பிடித்துப் போனது போலும்.

திருப்தியுடன் ஒருவரையொருவர் பார்த்து தலையசைத்துக் கொண்டார்கள். அதைக் குறிப்பாகப் பார்த்துக் கொண்ட மாலதிக்கும் சுகந்திக்கும் அப்போது தான் ‘ஹப்பாடா’ என்று இருந்தது.

அந்தச் சந்தோசத்தோடு வந்திருந்தவர்களை அருமையாக உபசரிக்க, “நல்ல இடம் தம்பி... நல்லா பழகுற மனுஷங்களா இருக்காங்க... நம்ம அம்மு இங்க சந்தோசமா இருப்பா....” சோமசுந்தரத்திற்கு அண்ணன் முறையில் இருக்கும் பெரியவர் திருப்தியாகச் சொன்னார்.

“என்ன ரவி...? எதுவும் பேசாம அமைதியா இருக்கே... பேச வேண்டியதை நீ தானப்பா பேசணும்...” என்று அவர் எடுத்துக் கொடுக்க, ரவி எங்கே அவர் பேச்சைக் கவனித்தார்?

நிமிடத்திற்கு இரண்டு முறை ஓரக்கண்ணால் ஆகாஷையே பார்த்துக் கொண்டிருந்தார். அவனுடைய தோற்றத்தின் கவர்ச்சி, பேச்சின் ஆளுமை எல்லாமே திருப்தியாக இருக்க, சில நிமிடங்களுக்கு முன்பு அவர் மனதில் இருந்த ஆற்றாமை கூடக் கொஞ்சமாய்ச் சூடு ஆறிப் போயிருந்த மாதிரி தோன்றியது.

“ஏம்பா... அப்பா தாத்தா சொத்தை வச்சிக்கிட்டு நானும் பணக்காரன்னு பெருமை பேசிக்குறதுல என்ன இருக்கு..? நம்ம தாத்தா மாதிரி ஆகாஷும் தன் கால்ல தானே நின்னு முன்னுக்கு வந்து காண்பிப்பாங்க, பாருங்க...”

இப்படி நேத்ரா சொல்லும்போதெல்லாம் அவள் ஏதோ சப்பைக்கட்டு கட்டுவது போல ‘கபகப’வென ஒரு எரிச்சல் வரும் அவருக்கு.

என்னவோ இப்போது, ‘எப்படியோ அவங்க இரண்டு பேரு வரைக்கும் சந்தோசமா இருந்தா சரிதான்...’ ஆகாஷ் தான் தன் மாப்பிள்ளை என்று தன் மனதுக்குப் பதிய வைக்கும் முயற்சியோ, என்னவோ பாசிடிவ்வாக நினைத்துக் கொண்டவர்,

திருமணத் தேதி, மண்டபம் பற்றி எல்லாம் பேச்சு செல்ல, பட்டும் படாமல் தான் என்றாலும் பெண்ணின் தகப்பனாய் கலந்து கொள்ள முயற்சித்தார்.

“எங்க வருணுக்கும் நிச்சயம் ஆகி இருக்குல்ல.. உங்களுக்குத் தான் தெரியுமே. அவங்க கல்யாணம் இன்னும் இரண்டு மாசத்துல இருக்கு. அதனால இவங்க கல்யாணத்தை நாலஞ்சு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்னு நாங்க நினைக்குறோம்... நீங்க என்ன சொல்றீங்க? ” ராமநாதன் கேட்க, ரவியின் முகம் ஒரு நொடி இருண்டு மீண்டது.

வருணிற்கும் பெண் பார்த்து முடிவாகி இருந்தது. வருண் டெல்லியிலேயே வேலையைத் தொடர்ந்து கொண்டு இருக்க, அவனுக்குப் பார்த்திருக்கும் பெண் மதுரையில் எம்டிஎஸ் பண்ணிக் கொண்டிருந்தாள்.

அணைந்திருந்த தீயை மீண்டும் ஊதி விட்டது போல இந்தச் செய்தி இருக்க, “இந்த கல்யாணத்துல எங்க இஷ்டம்னு எதுவுமே இல்லீங்க... உங்களுக்கு எப்படி சவுகரியமோ அப்படியே செய்யுங்க..” விட்டேற்றியான தொனியில் வெடுக்கென்று ரவி பேசியதில், அவ்வளவு நேரம் இருந்த சிரிப்பை மறந்து ஆகாஷின் முகம் இறுகிப் போனது.

*************************

கூடமே சிரிப்பிலும் சத்தத்திலும் இரைந்து கொண்டிருந்தது. நேத்ரா வீட்டினர் கொஞ்சம் முன்னால் தான் கிளம்பி போயிருந்தார்கள். வந்தவர்களை மரியாதையாக வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்தவர்கள் அங்கங்கே சாய்ந்தபடி விச்ராந்தியாகக் கதை அளந்து கொண்டு இருந்தார்கள். பேச்சு வார்த்தை எல்லாம் நல்லபடியாக முடிந்த சந்தோஷம்.

ரவி கொஞ்சம் முன்னே பின்னே நடந்து கொண்டாலும் யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. வீட்டில் ஒன்றுக்கு இரண்டாகக் கல்யாணங்கள் கூடி வந்திருக்க, திருமண நிகழ்வுகளை எப்போது நடத்தலாம், எப்படி நடத்தலாம் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சந்தோஷம், பூரிப்பு, எதிர்பார்ப்பு, அதையும் தாண்டிய சிந்தனை என்று கலவையான உணர்வுகளுடன் இருந்த ஆகாஷ் எழுந்து உள்ளறைக்கு வந்தான்.

‘இந்நேரம் மூக்கு வேர்த்திருக்குமே...... என்ன இன்னும் போனை காணோம்?’ கிண்டலாக அவன் மனதுக்குள் நினைத்து முடிக்கவில்லை. மொபைல் சத்தமிட்டு அழைத்து விட்டது.

உள்ளே வந்த சௌமி திரையில் தெரிந்த ப்ரொபைல் போட்டோவை எட்டி பார்த்து விட்டு “ம்ஹ்கும்’ தொண்டையை வேண்டுமென்றே செருமி சிரித்தபடி பாயாச கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

‘இவ ஒருத்தி..’

‘முன்னாடி பார்த்து நட... இங்கயே திரும்பிட்டு அங்க கதவுல போய் முட்டிக்காதே...” வயிற்றில் குழந்தையுடன் அவள் துள்ளி துள்ளி நடப்பதை பார்க்கும்போதே பயமாக இருந்தது இவனுக்கு.

அதற்குள் பொறுமையில்லாத அழைப்பு நின்றுவிட்டு மீண்டும் ஒலிக்க, “என்ன சொல்லு...?” சாவகாசமாகக் கேட்டபடி தனிமை நாடி மாடிக்கு நடந்தான்.

“என்ன சொல்லா...? வந்துட்டு போனாங்கல்ல.. ‘என்ன ஆச்சு? எப்படிப் பேசினாங்க’ன்னு நானே டென்சனா உட்கார்ந்துட்டு இருக்கேன். நீங்க என்ன ‘கூலா’ என்ன சொல்லுன்னு இழுக்குறீங்க...?” கடுகாக வெடித்துச் சிறுத்தாள் நேத்ரா.

“என்ன சொல்லணும்..? வந்தாங்க.. பேசினாங்க.. கிளம்பிட்டாங்க...” அவன் அமர்த்தலாகச் சொன்னாலும் கடைசியில் ஒலித்த சிரிப்பு, குறும்பைக் காட்டிக் கொடுத்தது.

“என்ன வேணும்னே வெறுப்பேத்துறீங்களோ...?”

“சரி, அதெல்லாம் இருக்கட்டும். எங்கப்பா எப்படி இருந்தாங்க..? மத்தவங்களைப் பத்தில்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல...” அளவு கிடந்த ஆவலில் அவள் பரிதவிப்பதை பார்க்க ஒருபக்கம் பாவமாக இருந்தது.

“ம்ம்... நல்லா தான் இருந்தாரு... என்ன.. என்னையே வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சிட்டு இருந்தாரு பாரு, அதுல தான் எனக்கு ரொம்பக் கூச்சமா போச்சு...” அவன் நக்கலாகச் சொல்ல, “நீங்க இருக்கீங்களே...?” கலகலவென அவள் சிரித்தாள்.

“ஒழுங்கா பேசினாரா?... இல்லை எதையாவது முறைச்சு வச்சாரா?” தந்தையைப் பற்றி நன்கு புரிந்தவள் என்பதால் தோண்டி துருவிக் கேட்டாள்.

“நோ மொறைப்பு.. ஒன்லி காதல் பார்வை...” அதற்கும் அவன் இடக்கு பேச, இப்போது அவளுக்குப் புரிந்தது என்ன நடந்திருக்குமென்று.

“சாரிப்பா... என்ன ஏதாவது கோபமா பேசிட்டாரா...? அப்படி ஏதாவது இருந்தாலும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...” அவள் குழைவாகச் சொன்னதில், “அதெல்லாம் ஒண்ணுமில்ல... விடு.. அவருக்கு அவரோட கவலை. இதெல்லாம் தெரிஞ்சுது தானே” என்றான்.

“ம்ம்ம்...” என்றபடி அரை நிமிடம் முனகியவள், திடீரென நினைவு வந்தவளாய்,

“ஆமா.. நான் உங்களை அந்த க்ரீம் வைட் ஷர்ட் தானே போட சொன்னேன். நீங்க என்ன க்ரே கலர் போட்டுருந்தீங்க...?” நாட்டின் தலையாயப் பிரச்சனைக்குத் தாவ, “ஆமா... அது தான் இப்ப ரொம்ப முக்கியம்...” அவன் போனிலேயே முறைத்தான்.

“அதான் உன் பிரண்டு போட்டோ முதற்கொண்டு அனுப்பி அப்டேட் பண்ணிட்டாள்ல... அப்புறம் எதுக்கு என்கிட்டயும் ரிவைண்ட் பட்டனை அழுத்திக்கிட்டு இருக்க...?”

“ஹ.. அது வேற.. இது வேற.. சம்ஸ் கிட்ட பேசினேன். அப்புறம் அத்தைகிட்ட.. அப்புறம் எங்கம்மா கிட்ட.. எல்லாருகிட்டயும் ஸ்டேட்டஸ் ரிபோர்ட் வாங்கியாச்சு.... இப்ப உங்ககிட்டையும் கேட்டா தானே எனக்கு ஒரு கம்ப்ளீட் பிச்ஷர் கிடைக்கும்...” அவள் கொடுத்த விளக்கத்தில் அவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“எல்லாப் பொண்ணுங்களுமே இப்படித் தானா..? இல்ல நீ மட்டும் தான் இப்படியா?”

“ப்ச்.... என் டென்சன் உங்களுக்கு எங்க தெரிய போகுது? காலைல இருந்து எந்த வேலையும் ஓடல... இப்பதான் கொஞ்சம் ஓகேவா இருக்குது.“

“அதனால தான் உங்க வீட்டு ஆளுங்க கிளம்பினவுடனே உனக்குப் பண்ணினேன்... உன் போன் தான் என்கேஜ்டா இருந்துச்சு...” அவள் எந்த அளவுக்குத் தவித்துக் கொண்டிருந்திருப்பாள் என்று புரிந்தவன் மென்மையாகச் சொன்னான்.

“ம்ம்....” என்றவள், “ஆகாஷ்... அப்புற ம்... வந்து....” கொஞ்சலாக இழுக்க,

“என்ன அப்புறம்..... ரொம்ப இழுக்குற... என்னன்னு சொல்லு...”

“ஏன் கல்யாணத்தை ரொம்பத் தள்ளி வச்சுட்டாங்க... நடுவுல வருண் கல்யாணம் வந்துச்சுன்னா அதுக்கென்ன? அந்தத் தேதிக்கு முன்னாடியே பார்த்து வைக்க வேண்டியது தானே...” அவள் சிணுங்க, அவன் சத்தமாகச் சிரித்தான்.

“அடிப்பாவி.. நீ இருக்கியே... சரியான லங்கிணிடி நீ... ஆக்சுவலா இந்த டயலாக்கை எல்லாம் நான் சொல்லணும்.... நீ வெட்கப்படணும்...” அவன் சீண்டியதில்,

‘ப்ச்.. ஆமா.. ஆகாஷ்.. எனக்கும் வெக்கம் வெக்கமா தான் வருது..’ இப்படிச் சொன்னால் அவள் நேத்ரா அல்லவே!?

“அதான் நீ சொல்ல மாட்டேங்குறியே.... என்னமோ போடா ஆகாஷா..... உன்னை கரெக்ட் பண்ணி உன் கழுத்துல ஒரு தாலியை கட்டுறதுக்குள்ள எனக்குத் தலையெல்லாம் நரைச்சு முதுகுல கூன் போட்டுடும் போல...”

அவள் வெகுவாக அலுத்துக் கொள்ள, “அடிங்... ரொம்ப வாய் ஆகிப் போயிடுச்சு.. நேர்ல வா.. தைச்சு வைக்கிறேன்...” அவன் சிரித்தபடியே மிரட்டினான்.

“அப்படியா.. தோ... இப்பயே நேர்ல வரேன்... அப்புறம் எப்படிடா என் வாயை தைப்பே...?” நேத்ரா கொஞ்சலாக மிழற்ற, அவள் படுகுஷியான மூடில் இருப்பதை அவனால் பார்க்காமலேயே உணர முடிந்தது.

இந்த நாளுக்காகத் தானே அவள் வருடக்கணக்கில் தவமெனக் காத்திருந்தது!

“ம்ம்.. ஊசி நூலை வச்சு தான்.. ஆமா.... நீ என்னன்னு நினைச்ச... ஆனாலும் ரொம்ப மோசமான பொண்ணுடி நீ...” ஒரு மார்க்கமாகச் சிரித்தபடி அவளைக் கலாய்த்துக் கொண்டிருந்தாலும், தன்மேல் அவள் கொண்டிருக்கும் கரை காணா காதலில் வெல்லமென அவன் கரைந்து கொண்டிருந்தான்.

***********************

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.


“வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் நான் கண்டேன் தோழி!”

உண்மையில் கனவில் மட்டுமே கண்டு கொண்டிருந்த நிகழ்வு நிதர்சனத்தில் நடக்கும்போது அதை சட்டென நம்பமுடியாத பிரமிப்பும், படபடப்பும், ஒரு வித ஆனந்த திகைப்புமாக இனம்புரியா உணர்ச்சி வசத்தில் இருந்தாள் நேத்ரா.

கைகள் சற்றுமுன் கழுத்தில் ஏறியிருந்த மஞ்சள் கயிற்றை தடவிக் கொடுத்து உடலெங்கும் இன்பமான சிலிர்ப்பை ஓடவிட, கண்கள் தன் அருகில் அமர்ந்திருந்தவனை நேராக பார்க்கமுடியாமல் நாண சிவப்பை பூசிக் கொண்டன.

‘நானா இது? என் ஆகாஷை பார்க்க எனக்கு வெக்கமா?’ அவளுக்கே அந்த விநாடி ஆச்சரியமாக இருக்க, பூரித்த முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“பொறுமையாவே போங்கண்ணே... ஒண்ணும் அவசரமில்லை... இன்னும் ஒன் அவர் கழிச்சு எங்கயாவது நல்ல இடமா நிறுத்துங்க..... கொஞ்சம் ரெப்ரஷ் ஆகிட்டு போகலாம்....” ட்ரைவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆகாஷ்,

“நீங்க கொஞ்சம் பார்த்துங்கோ மாமா... அவரு கொஞ்சம் ஸ்பீடா போற மாதிரி இருக்கு...” முன்னால் அமர்ந்திருந்த அனுவின் கணவன் சந்துருவிடம் மெதுவாகச் சொன்னான்.

“அடிக்கிற காத்துக்குச் செமையா தூக்கம் வருது... நான் தூங்க போறேன்.. டீ குடி.. அது இதுன்னு என்னை டிஸ்டர்ப் பண்ணிடாதீங்க.... ஊரு வந்ததும் எழுப்புங்க....” கல்யாண அலுப்பில் அசந்திருந்த அனு சந்துருவிடம் சொல்லியவாறு அப்படியே தலைசாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள். அவள் மடியில் இருந்த குழந்தை ஏற்கனவே உறங்கிப் போயிருந்தது.

எதிர்காற்றுச் சுகமாக வீச, அந்த டவேரா வண்டியில் இருந்த எல்லோருக்குமே தூக்கம் சொருகிக் கொண்டு வந்தது, புது மணமக்களைத் தவிர.

நேற்று மாலை கிராண்டான ரிஷப்ஷன், இன்று காலையில் திருமணம் என ரவி தன் செல்வாக்கிற்கு ஏற்ப ஆடம்பரமாகச் செய்திருந்தார். மண்டபம் நிரம்பி வழிந்த கூட்டம், அருமையான சாப்பாடு, கர்நாடக இசைக் கச்சேரி என எல்லாமே ராயல் ரிச்.

மாங்கல்ய தாரணம் ஆனதும் மண்டபத்திலேயே மறுவீட்டு நடைமுறைகளை முடித்துக் கொள்ள, மதிய விருந்துக்குப் பிறகு திருப்பூரில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்கள். பின்னால் ஒரு காரும் வேனும் ஆகாஷ் வீட்டினரை, உறவினர்களைச் சுமந்தபடி டவேராவை தொடர்ந்து கொண்டிருந்தது.

திருமணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் உடனே கிளம்பும் இந்த ஏற்பாட்டில் நேத்ரா வீட்டினருக்குக் கொஞ்சம் குறை தான்; ஆகாஷ் ஆரம்பத்தில் இருந்தே இதில் பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல் தலையசைத்து இருந்தார்கள்.

அவன் இந்த விஷயத்தில் அழுத்தமாக இருந்ததில் நேத்ராவுக்குமே வருத்தம் தான்;

‘அது தான் அப்பா இவ்வளவு தூரம் இறங்கி வந்து எல்லாம் செய்யுறாங்க இல்ல. அப்படியும் வீட்டுக்கு வந்து தங்காம...? அப்படி என்ன ரோஷம்.....?’ எந்தப் பெண்ணுக்கும் தோன்றுகிற ஆற்றாமை தான் அவளுக்கும் தோன்றியது.

தாய் வீட்டை பிரிந்து புகுந்த வீடு கிளம்பும் வருத்தமும், இனம் விளங்கா பரபரப்பும் சேர்ந்து கொள்ள, சந்தோசமான மனநிலையையும் தாண்டி ஒருவித பாரம் நெஞ்சை அழுத்தியது. அம்மாவும் அப்பாவும் உடன் வர இயலவில்லை.

அங்கே எல்லாவற்றையும் செட்டில் பண்ண வேண்டி இருந்ததால் மாலதியின் அக்கா, அக்கா கணவரை மட்டும் இவர்களுடன் அனுப்பி வைத்திருந்தார்கள்.

“சுகந்தி... உங்ககிட்ட நான் சொல்ல வேணாம்... ஒரே பொண்ணு. செல்லமா வளர்ந்துட்டா.. பார்த்துக்குங்க..” கிளம்பும் வேளையில் கண்களில் நீருடன் மாலதி சொல்ல, சுகந்தி தன் கண்களைத் துடைத்தபடியே அவர் கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்.

நேத்ராவை விட மாலதியின் கண்ணீரை பார்த்து சுகந்தி தான் அதிகமாக அழுதார்.

“என்ன அத்தை.. அவங்க பெண்ணைப் பெத்தவங்க.. அழுகுறாங்க சரி.... நீங்க இப்ப மாமியாரு.. நீங்க எதுக்கு அழுகுறீங்க...?“ அவர் கண்கள் கசிவதைப் பார்த்த வருண் ஓட்டி எடுக்க.

“ஒருவேளை அம்மு நம்ம வீட்டுக்கே பெர்மனென்டா வர போறதை நினைச்சு பீல் பண்ணி அழறீங்களோ...” பிரிவுத் துயரில் சமைந்திருந்த நேத்ராவின் முறைப்பையும் வாங்கிக் கொள்ள அவன் தவறவில்லை.

“போடா.. உனக்கென்ன தெரியும்.. பொண்ணுங்க கல்யாணம் ஆகி ஒரு வீட்டுல இருந்து இன்னொரு வீட்டுக்கு போறப்ப எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு...? உங்களுக்கெல்லாம் என்ன...? ஆம்பிளை மகராசனுங்க..” அவன் கன்னத்தை இடிக்காத குறையாக இடித்த சுகந்தி,

“மாலு.. அம்மு எப்பயுமே எங்க வீட்டு பொண்ணு தான். இப்ப எங்க வீட்டு பொண்ணு எங்க வீட்டுக்கே வரா... அவ்வளவு தான். அவ எப்படின்னு நான் உங்களுக்குச் சொல்ல வேணாம். அப்படியே நூத்துல ஒரு பங்கா அவளுக்கு எதுலயாவது குத்தம் குறைன்னு இருந்துச்சுன்னா நாங்க எல்லோரும் விட்டு கொடுத்து போயிடுவோம்.. சரியா...? நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க...” என்று சொல்ல,

அதைக் கேட்ட மாலதி மட்டுமல்ல. அருகே நின்றிருந்த ரவி கூட மொத்தமாக உருகித்தான் போனார்.

‘இதை விடவா நல்ல மனுஷங்களா கிடைச்சிருக்கப் போறாங்க...?’ அவர் மனதின் மூலையில் அதுநேரம் வரை ஒட்டிக் கொண்டிருந்த மழைத்துளி அளவு வெற்றிடம் கூட நிறைவில் நிரம்பிப் போனது.

“அவங்ககிட்ட தனியா சொல்ல என்ன இருக்கு மாலு..? நம்மளை விட அவங்க நல்லா பார்த்துப்பாங்க....” அந்த நெகிழ்ச்சியில், அவரே அறியாத அந்த அற்புத கணத்தில் தன் முழுமனதான சம்மதத்தைச் சொல்லியிருந்தார் ரவி.

“ப்பா... “ என்றபடி நேத்ரா தடுமாற, விஸ்வம் அவர் கரங்களை அன்போடு பற்றிக் கொண்டார்.

‘இத பாருடா... கல்யாணமே முடிஞ்சு கிளம்புற நேரத்துல தான் இவருக்குக் கொஞ்சமாச்சும் நம்பிக்கை வந்துருக்கு போல....’ மனதுக்குள் சிரித்த ஆகாஷ் வெறுமனே புன்னகைத்துக் கொண்டான். அதற்குப் பிறகு செய்ய வேண்டிய பிற முறைகளை எல்லாம் செய்து எல்லோரும் சந்தோசமாகவே வழியனுப்பி வைத்தார்கள்.

ஆனாலும் கூட....

என்ன தான் தெரிந்த மனிதர்கள், தன் நேசத்தில் அமைந்திருந்த திருமணம், பக்கத்தில் காதல் கணவன் என்று ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தாலும் புதுப்பெண்ணுக்கு பிரிவுத்துயர் என்பது இருக்கத்தானே செய்யும்...?

கலங்கி கலங்கிப் போகும் கண்களின் ஈரம் அடித்த காற்றின் வேகத்தில் காய்ந்து கொண்டிருக்க, அவள் வெகு மும்முரமாக வேடிக்கை பார்ப்பது போலப் பார்வையை ஜன்னலுக்கு வெளியே பதித்திருந்தாள்.

“என்ன இல்லாத மூளையைக் கசக்கிட்டு இருக்க..?”

அவளை நெருங்கி அமர்ந்த ஆகாஷின் வலதுகை தோளை சுற்றி படர, காரின் பின்ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள், “நம்ம வேன் பின்னாடி தான் வருது.. ” முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் கண்களால் காட்டி அவன் கையை எடுத்து விட்டாள்.

அவளுடைய குரலில் வெட்கத்தை மீறி சிறு ஊடல் தொனித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த ஆகாஷ் இம்மியளவும் கையை விலக்கிக் கொள்ளவில்லை. இன்னும் அவளை நெருங்கி உட்கார்ந்து கொண்டான்.

“ஆமா.... அதுக்கும் பின்னாடி நம்ம கார் வருது. இங்க முன்னாடி ஒரு பஸ்.. அந்தப் பக்கம் லாரி... எதிர்த்தாப்புல ஒரு ட்ரைலர்... ரோடுன்னா இந்த மாதிரி நூறு வண்டி போகத் தான் செய்யும்...” அசால்ட்டாகப் பேசினாலும் அவன் கரம் இப்போது பாதை மாறி அவள் இடையை அணைத்துக் கொண்டது.

“ஆமா... விட்டா மடியிலேயே வந்து உட்கார்ந்துக்குங்க....” உதட்டுக்குள் முணுமுணுத்தவள், “ப்ச்.. கையை எடுங்க..” மனதில் துளிர்த்திருந்த கோபத்தை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் விடைக்க,

“கத்தி பேசி தூங்குறவங்களை எழுப்பி விட்டுடாதே....” அவன் இதழ்கள் அவள் காதோரம் உரசி சென்றன.

“உனக்குள்ள இப்படி ஒரு ஆசையா...? இப்ப வேணாம்... எல்லோரும் இருக்காங்க...” அவளது மடியைக் காட்டி அவன் கிசுகிசுத்ததில், “ஆ...காஷ்... உங்களை...” நிமிர்ந்து பார்த்தவள், சிரிப்பும் சிணுங்கலுமாக முறைத்தாள்.

சில நிமிடம் முன்னால் அவன் மேல் தோன்றிய செல்ல கோபம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

சிரித்தபடி அவள் விழிகளுக்குள் பார்த்துக் கண்களைச் சிமிட்டியவன், “ரொம்ப யோசிச்சிக்கிட்டு வராம கொஞ்ச நேரம் அப்படியே தூங்கு” அவள் தலையைத் தன் மேல் சாய்த்துக் கொள்ள, அதற்குமேல் அவளுடைய சிணுங்கல்களுக்கு வேலையில்லாமல் போனது.

அந்த நெருக்கத்தில், அவன் அணைப்பு தந்த இதத்தில், அதற்கு மேல் அவளுக்கு வேறு ஒன்றுமே பே சத் தோணவில்லை.

“ஓவர் சாமர்த்தியம் தான்...” பேருக்கு முறுக்கிக் கொண்டாலும் அவனுடைய தோள் வளைவில் சாய்ந்தவாறு நேத்ரா விழிகளை மூடிக்கொள்ள, ஆகாஷ் அவளறியா பெருமூச்சுடன் உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டான்.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
175
செம செம சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
 
Top Bottom