• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -2

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
13
விழிகள் தீட்டும் வானவில் -2


“உள்ள வருண் அசந்து தூங்கிகிட்டு இருக்கான். கொஞ்சம் மெதுவா தான் பேசுங்களேன்...” தணிந்த தொனியில் வைஷ்ணவி வேண்ட, “ஆமா.... உன் வீட்டு ஆளுங்களைப் பத்தி எதையாச்சும் சொன்னா உடனே என் புள்ளைங்களைக் காட்டி பேச்சை மாத்திடுவியே....” எரிச்சலாகச் சொன்னாலும் தன் மகன் படுத்திருக்கும் அறையை ஒருமுறை எட்டிப் பார்த்தபடி குரலை குறைத்துக் கொண்டார் குணசீலன்.

உள்ளே படுத்திருந்த வருண் இவர்களின் பேச்சுச் சத்தத்தில் புரண்டு படுத்தான். நேற்று நள்ளிரவு போல வீடு வந்து சேர்ந்தவன் விடியற்காலை தான் கொஞ்சம் அசந்திருந்தான்.

இப்போது இவர்களுடைய சந்தடியில் முழுசாக முழிப்பு வந்து விட, ’சரி.... எந்திருச்சுடலாம்.... இதுக்கு மேல படுத்திருந்தா அப்பா டெசிபலை ஏத்தினாலும் ஏத்திடுவாரு... ’ மேலும் படுக்கையிலேயே உருண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட்டான்.

தயாராகிச் சட்டையைப் போட்டு வெளியே வந்தவனின் காதில் சமையல் அறையில் தொடர்ந்த பெற்றோரின் விவாதம் விழத்தான் செய்தது. அதை லட்சியம் பண்ணவெல்லாம் அவனுக்கு மனமில்லை. நேரமுமில்லை.

“இவங்க இரண்டு பேருக்கும் வேற வேலை இல்ல.... என்னத்தையாவது புடிச்சு வெட்டியா பேசிக்கிட்டு.... இந்த அப்பா தான் வம்பு பண்றதே....” சலிப்பாய் முனகியபடி கீழே இறங்கி போனான்.

’லைட் எரியுது.. முழிச்சுட்டு தான் இருப்பாங்க... ’ சமையலறை வழி கசிந்த விளக்கின் ஒளி கண்களில் பட, கீழ் வீட்டின் அழைப்புமணியை அடித்தவன், ஒரு நொடி கூடக் காத்திருக்கப் பொறுமை இல்லாமல் கதவை கைகளால் தள்ளிப் பார்த்தான்.

வெறுமனே தான் சார்த்தி வைக்கப்பட்டு இருந்தது போல.. வெளிக் கதவு திறந்து கொள்ள, “கீச்”சென்ற அந்த அரவத்தில் எட்டிப் பார்த்த ஆகாஷ் யாரெனப் புரிந்த நிமிடம் முகமெல்லாம் மலர படுக்கையில் இருந்து எழுந்து வந்தான்.

“வாடா... வா... வா... எப்படி இருக்க மச்சி....?” அவன் வேகமாக முன்னால் வந்து வருணை அணைத்துக் கொள்ள,

“நான் நல்லா இருக்கேன்டா... நைட் வந்தப்பயே பார்த்தேன். உன் பைக் இல்ல.... காலைல எந்திரிச்சதும் வாசலை தான் எட்டிப் பார்த்தேன். வண்டியை பார்த்ததும் உடனே இறங்கி வந்துட்டேன்...” வருணும் ஆகாஷிற்குச் சற்றும் குறையாத மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“ம்ம்... இப்ப தான் கொஞ்சம் முன்னால வந்தேன்...” தன் தோளை பற்றியிருந்த வருணை ஒரு அடி பின்னால் நகர்த்திய ஆகாஷ், அவனை மேலும் கீழுமாகப் பூரிப்புடன் ஆராய்ந்தான்.

“சூப்பர்டா....... ஒரு சர்ஜனுக்கு உண்டான களை வந்திருச்சு உன் முகத்தில....” என்றபடி மீண்டும் அவனை அணைத்துக் கொள்ள, வருண் ஒன்றும் பேசாமல் பெரிதாகப் புன்னகைத்தான். இப்போது அவன் புன்னகையில் துளியே துளி வருத்தமும் கலந்திருந்தது.

அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கை போட்டபடி நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருக்க, அப்போது தான் எழுந்து பின்னால் பல்லை விலக்கிக் கொண்டிருந்த நேத்ரா இந்தக் காட்சியைப் பார்த்து ‘ஈஈ...’ என்று அத்தனை பல்லையும் காட்டி சிரித்து வைத்தாள்.

கண்முன்னால் தெரிந்த பிம்பம் முழுச் சந்தோசத்தையும் கொடுத்ததோ இல்லையோ, அந்தக் கணம் அவளுடைய மனசு நெகிழ்ந்து போனது நிஜம். கண்கள் வேறு கலங்குவது போல இருக்க,

“போதும் டூத் பேஸ்ட் விளம்பரத்துக்கு போஸ் கொடுத்தது.... பார்க்கவே பயமா இருக்கு. சீக்கிரம் வாயை கொப்புளிச்சிட்டு உள்ள வா....” ‘இது எப்போதும் நடப்பது தான்’ என்கிற மாதிரி சௌமி அவளை அதட்டி விட்டு உள்ளே சென்றாள்.

“வா வருண்.... எப்ப வந்தே....?” சௌமி அவனை வரவேற்க, “மிட்நைட் தான்.... அப்புறம் நீ எப்படி இருக்க சம்ஸ்....?” அவளை நலம் விசாரித்த வருண் பின்னாலேயே வந்த நேத்ராவை பார்த்து கிண்டலாகச் சிரித்தான்.

“அப்புறம் அம்மு பாப்பா..... நீ இங்க என்ன பண்ணுற...?” அவளைப் பார்த்த நிமிடம் அவன் சீண்ட ஆரம்பிக்க, “ம்ம்ம்... சட்டியும் பானையும் பண்ணலாம்னு வந்தேன் சீனியர்.... வர்றீங்களா... சேர்ந்து மண்ணைக் குழைக்கலாம்...” நேத்ராவா சும்மா விடுவாள்...!?

“நான் ஊரை விட்டுப் போனதும் உனக்கு ரொம்ப தான் துளிர் விட்டு போச்சு போல....” அவளை முறைத்தான் வருண்.

“கரெக்ட்..... கரெக்ட்..... உன் தத்தக்கா பித்தக்கா நடைக்கு மண்ணு மிதிக்கிறது தான் சரிப்பட்டு வரும்..” விடாமல் அவன் வெறுப்பேற்ற,

“ஹலோ.... யாரோட நடையைப் பத்தி பேசுறீங்க....? உங்க வாத்து நடைக்கு என் நடை எவ்வளவோ தேவலை....” வரிந்து கொண்டு நேத்ரா பதில் கொடுக்க, அங்கே இருவருக்கும் இடையில் ஒரு குட்டி போர்க்களமே உருவாகிக் கொண்டிருந்தது.

தோழிக்கு சப்போர்ட்டாக சௌமி இடையிட்டு பேசினாலும் ஆகாஷ் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒரு சிரிப்புடன் மட்டும் அமர்ந்திருந்தான்.

“ஏன் வருண்..... வந்த அலுப்புக்கு நல்லா தூங்கி எந்திரிக்காம எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்த....?” கேட்டபடியே காபி டம்ளர்களை எடுத்து வந்த சுகந்தி நால்வருக்கும் கொடுக்க, “ஏன் அத்தே.... நான் வர்றவரைக்கும் தூங்காம முழிச்சிக்கிட்டு இருந்த நீங்களும் அம்மாவுமே எனக்கு முன்னாடி எந்திரிச்சு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டீங்க..... பிளைட்லயும் தூங்கிட்டு வந்த எனக்கு என்ன....?” வருண் பாந்தமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

’வருண் நல்ல அனுசரணையான பிள்ளை... ’ சுகந்தி நினைத்த மறுகணம் ‘அப்ப என் பையன்... என் புள்ளையை விடவா...!?’ மனதில் பொங்கிய உணர்வலையில் ஒரே நேரத்தில் இன்பமும் துன்பமும் பெருகி தொண்டையை அடைக்குமா, என்ன!?

அருகருகே அமர்ந்து இருந்த இரு இளைஞர்களையும் பார்த்தவருக்கு, ’கடவுளே.... எப்படி இருக்க வேண்டியவன்...? இப்ப இப்படி... எல்லாம் எங்களால.... இல்ல... என்னால தானே....’ என்ன முயன்றும் அவரால் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

’இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலையெழுத்து.... ’

’இதுக்கா.... இந்தக் கொடுமையெல்லாம் பார்க்கிறதுக்கா இன்னும் உயிரோடு இருக்கேன்... !? ’

வரிசையாக வந்த எண்ணங்களின் தாக்கத்தில் கனத்த தலையை உதறிக் கொண்டார்.

’போதும்... ஒருமுறை விபரீதமா யோசிச்சு நான் இழுத்து வச்ச வினையெல்லாம் போதும்.... அந்த மாதிரி நினைக்கவே கூடாது...’ பட்டுத் தெளிந்திருந்த மனம் மேலும் மேலும் சுழலுக்குள் மூழ்க விடாமல் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

“அனுவும் ராத்திரி வந்துடுவா இல்ல... நைட்டு எல்லோரும் இங்க சாப்பிட வந்துடுங்கப்பா... அம்மாகிட்ட நேத்தே சொல்லியிருக்கேன்....” வருணிடம் சொல்லிவிட்டாரே தவிர, நேற்று மாதிரி மகன் எதையாவது சுருக்கென்று பேசி விடுவானோ என்ற கவலையில் ஆகாஷைப் பார்த்தார்.

அப்படியே எதையாவது கடித்து வைத்தாலும் தனிமையில் தான் கடுப்படிப்பான், அதுவும் வருணைப் பற்றி அப்படியெல்லாம் நினைக்கக் கூட மாட்டான் என்று நன்றாகத் தெரியும்.

இருந்தும் கூட இப்போதெல்லாம் அவருக்கு எல்லாவற்றிலும் அச்சம் தான். பெற்ற மகனிடம் பேசவே ஒரு வித பீதி. அந்தளவுக்கு உள்ளும் புறமும் கலங்கிப் போய் நிற்கும் காலத்தின் கோலம்.

‘பெத்தவ நானே இப்படி நினைச்சேன்னா மத்தவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க....? ஏன் தான் இப்படி இருக்கானோ...?’ அவர் மனதில் பிள்ளையைப் பற்றிய ஆதங்கமும் சரிவிகித சமானமாகப் பொங்கியது.

ஆனால், அவர் பயந்த மாதிரி இல்லாமல் கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்த ஆகாஷ், “நான் மதியம் தான் ஆபீஸ் போவேன். நைட் என்ன வேணும்னு இப்பயே சொல்லிடுங்க... வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு போறேன்.... “ என்று கேட்டு அவர் வயிற்றில் பாலை வார்த்தான்.

“அப்புறம் அது இல்ல இது இல்லன்னு புலம்ப வேணாம்...” கடைசியில் அவன் வெடுவெடுத்து விட்டு சென்றாலும் கூட, அதைத் திருஷ்டி பரிகாரம் என்று ஒதுக்கி விட்ட சுகந்தியின் முகத்திலும் மனதிலும் அப்படி ஒரு நிறைவு!

‘என்னதான் மூஞ்சில முள்ளை கட்டிக்கிட்டு பேசினாலும் என் பையன் பாசக்காரன் தான்...’

அவர் பூரிப்புடன் பார்க்க, “உங்க பாசக்கார புள்ளய இதே மூஞ்சோட இன்னும் இரண்டு நாளு இருந்துக்கச் சொல்லுங்க... இல்லேன்னா நம்ம மானம் ஊர் ஊரா பறக்கும் சொல்லிட்டேன்... சே... என்ன மாதிரி ஆளும்மா இவன்...? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா....?” சௌமி அழாத குறையாகக் கடுகடுத்தாள்.

அதே வருத்தம் அவருக்கும் தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய முடியும்?

“வாயை மூடுடி.... அங்க அம்மு தனியா இருக்கா... காலங்கார்த்தால அனாவசியமா பேசிக்கிட்டு நிக்காம போய் வேலையைப் பாரு...” தன்னால் செய்ய முடிந்த காரியமாய் மகளை ஒரு அதட்டல் போட்டு உள்ளே அனுப்பி வைத்தார் சுகந்தி.

*****************************

“அது தான் இரண்டு வருஷமா உங்களுக்கு வாடகைக்குனு பணம் கொடுத்துடுறான் இல்ல... அப்புறம் என்ன....?” கோபம் அடங்காமல் பொரிந்த வைஷ்ணவி, “எப்ப பாரு.. பணம்.. பணம்னு... மாசா மாசம் சுளையா பணத்தை வாங்கிகிட்டே எப்படித் தான் இப்படிப் பேச மனசு வருதோ தெரியல.... எப்ப பாரு புலம்பலு... இந்த வீட்டுல மனுஷங்க இருக்கிறதா இல்ல உங்க தொல்லை தாங்காம எங்கயாச்சும் ஓடுறதா...?” ஆத்திரத்தில் நடுங்கிய குரல் அவரே அறியாத வேகத்தில் உயர்ந்து கொண்டு போனது.

“என்னடி ரொம்பத் தான் பேசுற....? இந்த இரண்டு இரண்டரை வருஷமா சரி.... அதுக்கும் முன்னாடி... இத்தனை வருஷமா நான் என் வீட்டை விட்டுக் கொடுக்கல. அந்தக் காசு இருந்தா நான் இன்னிக்கு முழிச்சிக்கிட்டு நிக்க மாட்டேன்ல.... அதையெல்லாம் கணக்கு வச்சு உங்க அப்பனா வந்து கொடுப்பாரு... இல்ல உங்க அ....” குணசீலன் தன்னை மறந்து கத்த,

“இங்க பாருங்க.... உங்களுக்கு இவ்வளவு தான் மரியாதை.... தேவையில்லாம எங்கப்பாவை எல்லாம் இழுத்தீங்க.... நல்லாருக்காது சொல்லிட்டேன்.....” வைஷ்ணவி வள்ளென்று விழுந்து வைத்தார்.

எந்தப் பெண்ணுக்கு தான் பிறந்த வீட்டை பற்றிச் சொன்னால் வாயை மூடிக் கொண்டு நிற்க முடியும்...!? நூற்றில் ஒரு பங்கு, அது உண்மையாக இருந்தாலும் கூட....

காலையில் ஆரம்பித்த சண்டை இதுவரை ஓயவில்லை. வீட்டில் பிள்ளைகள் இருந்தால் கூடக் குணசீலன் கொஞ்சம் அமைதியாகப் போவார். இப்போது யாருமில்லாத தனிமையும் இடம் கொடுக்க, அவருடைய கூச்சலை அந்த ஆண்டவனே இறங்கி வந்து வேண்டாமென்றாலும் கூட அடங்கிப் போகாத மாதிரி ஒரு முசுட்டுச் சுபாவம்.

“பேச மாட்டே பின்ன.... நான் ஒண்ணும் ஒவ்வொருத்தன் மாதிரி அடுத்தவன்கிட்டயிருந்து அடிச்சு பிடுங்கல.... ஒவ்வொரு பைசாவையும் கஷ்டப்பட்டுச் சேர்க்கிறேன்..... நான் கணக்கு பார்க்க தான் செய்வேன்....” இன்னும் என்ன என்னவெல்லாம் சொல்லியிருப்பாரோ, வாசலின் அழைப்பு மணி ஒலித்து அவர் வாய்க்குத் தடா போட்டது.

ஏற்கனவே விரிய திறந்திருந்த கதவை ஒதுக்கி எட்டிப் பார்த்த வைஷ்ணவி சுருங்கிய தன் முகத்தை நொடியில் சரி செய்து கொண்டார்.

“வா.. வா..டா... உள்ள வா....” என்றவர், “என்னங்க... ஆகாஷ் வந்திருக்கான்.....” ஓங்கி குரல் கொடுத்தார். இல்லையென்றால் ‘இன்னும் என்ன என்ன உளறி வைப்பாரோ இந்த மனுஷன்?’ என்ற பதட்டம் அவருக்கு.

‘எப்ப வந்தோனோ தெரியலையே.... எது எதெல்லாம் காதுல விழுந்துச்சோ....?’ அவருக்கு நெஞ்சு எல்லாம் படபடவென்று வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் வந்தவனிடம் சகஜமாகப் பேச ரொம்பவே சிரமப்பட்டுப் போனார். ஆனால் உள்ளே வந்த ஆகாஷ் எப்போதும் போலவே இயல்பாகத் தான் இருந்தான்.

“என்ன அத்தை.... பையன் ஊரில இருந்து வந்தது சந்தோஷம் தாங்கலையா? மூஞ்சில லைட் போட்ட மாதிரி சுத்திட்டு இருக்கீங்க...?” எப்போதும் போலவே அவன் சிரித்தபடி பேச,

’அட ஏன்டா நீ வேற....? உங்க மாமாவை வச்சுக்கிட்டு நான் குண்டு பல்பை தான் கட்டிக்கிட்டு திரியணும்.... ’ மனதுக்குள் அலுத்துக் கொண்டாலும், “ஹ...ஹா... ஆமாம்ப்பா..... இன்னிக்கு ராத்திரி அனுவும் வர்றால்ல...” சிரித்தபடி எதையோ பேசி சமாளித்தார்.

“மாமா வீட்டில தானே இருக்காரு...?” ஒன்றுமே அறியாதவன் போல ஆகாஷ் வைஷ்ணவியிடம் கேட்டான். அவர் தான் அவன் குரல் கேட்டவுடனே உள்ளே போய் விட்டாரே....

என்ன பேசுகிறோம் என்ற நினைவே இல்லாமல் தன் போக்கில் கத்திக் கொண்டிருந்தவருக்கு அவனைத் திடீரென்று அங்கே பார்த்ததும் வெகு சங்கடமாகப் போய் விட்டது.

‘என்ன கேட்டானோ?’ என்று வைஷ்ணவிக்கு எழுந்த பதட்டம் அவருக்கும் எழாமல் இல்லை. சூழல் தர்மசங்கடமாக இருக்க, அவனை நேருக்கு நேர் பார்க்க தயங்கி சட்டென்று அவர் தன் அறைக்குள் நுழைந்து விட்டார்.

“எங்கம்மா அப்பா...?” ஆகாஷ் கேட்டதைத் காது கொடுத்துக்கொண்டே உள்ளே வந்த வருணும் அதே கேள்வியைக் கேட்டான். கீழே நின்று நேத்ராவிடமும் சௌமியிடமும் கதை அடித்துக் கொண்டிருந்தவன், கொஞ்சம் தாமதித்து மேலே வந்திருந்தான்.

“உங்கப்பா உள்ள தான்டா இருக்காரு...” வைஷ்ணவி சொல்ல,

“மாமா ப்ரீயா இருந்தா கொஞ்சம் கூப்பிடுங்களேன்...” திரும்பவும் வந்த ஆகாஷின் அழைப்பை தவிர்க்க முடியாமல் குணசீலனே “வா ஆகாஷ்....” உள்ளறையில் இருந்து அசடு வழிந்தபடி வந்தார்.

“குட் மார்னிங் மாமா.... ” அவரிடம் புன்னகைத்தவன், அவர் தன் அருகில் வந்து அமர்ந்ததும், “மாமா.... இது இந்த மாச பணம்....” கையில் தயாராக வைத்திருந்த தொகையை எடுத்துக் கொடுத்தான்.

“என்னப்பா இன்னும் ஒண்ணாம் தேதியே பொறக்கல... அதுக்குள்ள என்ன அவசரம்...?” சமத்காரமாகப் பேசியபடி அதை வாங்கித் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவரின் முகத்தை வைஷ்ணவியின் நெருப்புப் பார்வை பொசுக்காமல் இருந்தது தான் ஆச்சரியம்.

மனைவியின் கண்களைச் சந்திக்காமல் அவர் தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ள முயல, ஆகாஷ் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு கவரை எடுத்து அவரிடம் நீட்டினான்.

“சாரி மாமா... தப்பா எடுத்துக்காதீங்க...” லேசாகத் தயங்கியவன், “இந்த செக்கை கலெக்ஷனுக்குப் போட்டுக்குங்க... ஒண்ணா சேர்த்து ஒரு அமௌன்ட்டா கொடுக்கலாம்னு இவ்வளவு நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நாளா வர்ற வேண்டிய பேமென்ட் இப்ப தான் வந்துச்சு... அது தான்” அவன் சொல்லிக் கொண்டிருக்க,

வருணுக்கு அந்தப் பண விஷயங்களை எல்லாம் கேட்டுக் கொண்டு அங்கு நிற்கவே என்னவோ மாதிரி இருந்தது. எதிலும் இடையிடாமல் கறுத்துப்போன முகத்துடன் அவன் உள்ளே சென்று விட்டான்.

குணசீலன் அந்தக் காசோலையைப் பிரித்துப் பார்க்க, மூன்று லட்சத்திற்கு நிரப்பப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் இந்தளவு தொகையை அவரும் எதிர்பார்க்கவில்லை.

“எதுக்குப்பா இதெல்லாம்....? வேணாம்... நீயே வை....” கண்ணில் கண்ட தொகை கருத்தை கவர்ந்தாலும் அவர் குரல் தடுமாறவே செய்தது.

அவர் மட்டும் என்ன.... சினிமாவில் வருகிற மாதிரி மீசையை முறுக்கிக் கொண்டு பழி வாங்கவே பிறப்பெடுத்து நிற்கும் வில்லனா, என்ன? ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு பெருகி வரும் பணத் தேவைகளைச் சமாளிக்கும் சராசரி சம்சாரி.

காசு தேவை கையைக் கடிக்க, ஆதங்கம் தாங்காமல் சர்புர்ரென்று கத்திக் கொண்டிருப்பாரே தவிர, அவனை வருத்தி அவனிடம் இருந்து பணம் வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கும் கிடையாது.

வேறு யார் யார் மேலோ இருக்கிற எரிச்சலை இந்தச் சின்னப் பையன் மேல் காட்டுகிறோமோ என்ற குற்றவுணர்வு குடைய, “வேண்டாம் ஆகாஷ்... வேண்டாம்ப்பா..” குணசீலன் அவனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

வைஷ்ணவி வேறு ஒரே சமயத்தில் கணவரை பார்த்து முறைத்துக் கொண்டும், ஆகாஷை பார்த்து மறுத்துக் கொண்டும் நின்றார். ஆனால் ஆகாஷ் தீர்மானமாக இருந்தான்.

“இல்ல... இல்ல... நீங்க வைங்க... எங்களுக்கு நீங்க செய்யுறதுக்கு எல்லாம் காசு கணக்கே பார்க்க முடியாது.... சோ... ப்ளீஸ் வேணாம்னு சொல்லாதீங்க....” கெஞ்சலாகவே அவன் வறுபுறுத்த, குணசீலன் வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார்.

அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து குணசீலனிடம் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். ‘நல்ல வேளை.. நான் பேசின எதுவும் இவன் காதில விழல...’ குணசீலன் பெருமூச்சு விட, அதே எண்ணத்தில் நிம்மதியான வைஷ்ணவியும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுக்காமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு சிரித்த முகத்துடன் விடை பெற்று வெளியே வந்தவனின் மனம் மட்டும் அடங்காத எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vidya Prasad

New member
Joined
Jun 19, 2024
Messages
1
Hello hema mam How are you. Ungha stories ellamume rombha virumbhi rasitchu paditchutu iruken. Best wishes. Adi penne, milir, thazhampoo story ellam rombha super. Epadi ungala contact panradhu nu theriyala. So using this platform. Looking forward to read many of your stories. Hearty congratulations and best wishes once again.
 
Top Bottom