• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -15

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
விழிகள் தீட்டும் வானவில் -15

நுங்கம்பாக்கத்தின் நெரிசலான தெருக்களுக்கு நடுவே உயர்ந்து நின்று இருந்தது அவ்வெள்ளை நிற பிரம்மாண்ட காம்ப்ளெக்ஸ். பல்வேறு தனியார் நிறுவனங்களும் அலுவலகங்களும் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அக்கண்ணாடி கட்டிடத்தின் லிப்டில் நுழைந்த ஆகாஷ் எண் நான்கை அழுத்தி விட்டு நின்றான்.

யாரும் உடன் இல்லா சுதந்திரத்தில் எதிரே இருந்த கண்ணாடியில் முகவாயை தடவி அழகு பார்த்தவன், ‘நாளைக்காவது ஹேர் கட் பண்ண போகணும்...’ தலைமுடியை ஒருமுறை கலைத்து ஒதுக்கிக் கொள்வதற்குள் அவன் இறங்க வேண்டிய தளம் வந்திருந்தது.

இடது புறம் வளைந்த ‘ட’ண காரிடாரில் நடந்து ‘விஎப்எக்ஸ் க்ரியேஷன்ஸ்’ என்று பெயரிடப்பட்ட ஸ்டுடியோவிற்குள் நுழைய, அவன் வந்த சமயம் முன்னறையில் யாரும் இல்லை. சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த டிவி மட்டும் ஏதோ ஆங்கிலத் திரைப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

“டிவியைப் போட்டு விட்டுட்டு எல்லோரும் எங்கடா போனீங்க...?” முணுமுணுப்புடன் ரிமோட்டை தேடி தொலைகாட்சியை அணைத்தவன், ‘எல்லாம் சரியாக இருக்கிறதா..?’ என்று முன்னறையை ஒருமுறை ஆராய்ந்து கொண்டான்.

அளவான அந்த வரவேற்பறை கண்ணுக்கு இதம் தரும் இருக்கைகளாலும், பூந்தொட்டிகளுமாக அழகான இன்டீரியரில் மிளிர்ந்தது.

நடுவில் மர வேலைப்பாடுகளுடன் இருந்த பெரிய கண்ணாடி அலமாரி கலைவண்ணம் கொண்ட ஷோ பீஸ்களுக்கு அடைக்கலம் வழங்கி இருக்க, அங்கே வரும் பார்வையாளர்கள் நேரத்தை உபயோகமாகக் கழிக்கும் வகையில் திரைப்படம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இரு பக்கமும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தன.

மனதில் பூத்த பெருமிதத்துடன் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்ட ஆகாஷ், கலைந்து கிடந்த சில மேகஸின்களை நிமிர்த்தி ஒழுங்காக வைத்து விட்டு உள்ளே போனான்.

உள்ளே இருந்த இரு அறைகளில் ஒன்று மீட்டிங் ஹாலாகவும், மற்றொன்று ஐந்தாறு கம்யூட்டர் சிஸ்டம்களுடன் டெக்னிகல் உபகரணங்கள் சூழ்ந்த வேலை இடமாகவும் இருக்க, இரண்டு அறைகளுக்கு இடையே இருந்த சின்ன கேபின் அவனுடைய அலுவலக அறையாக இருந்தது.

தன் அறைக்குள் போவதற்கு முன்பு அவன் மீட்டிங் ஹாலை எட்டிப் பார்க்க, “வாடா...”, “ஹலோ ஆகாஷ்...” “ஹை ப்ரோ....” விதவிதமான உற்சாக குரல்கள் வந்தன பிரவீன், ஸ்வேதா மற்றும் நான்சியிடம் இருந்து....

“ஹாய்.... க்ரேட் நூன் யார்...” பதிலுக்குக் கைகளை ஆட்டி புன்னகைத்த ஆகாஷ், “த்ரீ’ஓ கிளாக்.....” தன் கைக் கடிகாரத்தைத் தட்டி காண்பித்தான்.

“ஷ்யூர்... ஷ்யூர்... அதுக்குத் தான் இனிஷியல் டிஸ்கஷன் போயிட்டுருக்கு....”

அந்தப் பதிலில் திருப்தியானவன், அடுத்த அறைக்குள் செல்ல, செல்வா மட்டும் சிஸ்டம் முன்பு அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான்.

இவனைப் பார்த்ததும் ‘ஹர்ஷா....’ என்று அவன் உதடசைக்க, ஹர்ஷாவிடம் சொல்ல வேண்டிய சில குறிப்புகளை எழுதி காண்பித்து விட்டு தன்னறைக்குள் வந்தான்.

தூக்கம் சரியாக இல்லாமல் கண் எல்லாம் எரிந்தது. விடிய விடிய ஒரு ஹிந்தி படத்துக்கு சப்டைட்டில் வேலைகளைச் செய்து முடித்து இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தவன், அங்கிருந்து கான்டீனுக்கு சென்று சில வேலைகளை நரேனிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் இங்கே.... இங்கு முடித்து விட்டு தான் தாங்கள் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தும் மருத்துவமனை உணவு விடுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

எல்லாப் பக்கமும் வேலைகள் தலைக்கு மேல் இருக்க, அவனுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை. அயராத உழைப்பில் உடல் வேண்டுமானால் சமயங்களில் களைத்து போகும். ஆனால் மனதுக்குக் கொஞ்சமும் சோர்வு தோன்றுவதே இல்லை.

உழைக்கவேண்டும், இன்னும் இன்னும் உயர வேண்டும் என்ற உள்மன வேகம் அவனை உந்தி தள்ளியது என்று தான் சொல்ல வேண்டும். உள்ளத்தில் இருக்கும் உத்வேகத்தையும் தாண்டி துளி அலுப்பு தோன்றினாலும் கூட, திருப்பூரில் இருந்து ஒரு அகதி போல இங்கு வந்து சேர்ந்த நினைவு அவன் மனதில் தோன்றி சுளீரென்று சொடுக்கும்.

பிறகு, களைப்பாவது, ஒண்ணாவது...?

நான்கு அவுன்ஸ் ரத்தம் உடம்பில் ஊறியது போன்ற புத்துணர்வில் எழுந்து அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

இருந்த வீடு போய், படித்துக் கொண்டிருந்த படிப்பு கைவிட்டு நழுவி, சுற்றம் நட்பு என அது நாள் வரை காத்து வந்த கௌரவம், மதிப்பு மரியாதை எல்லாம் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்க, கையில் சொற்ப தொகையுடன் அத்தை குடும்பத்தில் வந்து அடைக்கலமான நாளை மறக்க முடியுமா, என்ன?

“போதும், நீங்க வாழ்க்கையை வாழ்ந்து காமிச்ச அழகெல்லாம் போதும்.... இதுக்கு மேல உங்களை நம்புறதா இல்ல....” பெற்றோரை வெறுத்துப் போனவனாக இவனே எல்லாப் பொறுப்புகளையும் தன் தோளின் மேலே ஏற்றிக் கொண்டான்.

தாத்தாவின் பென்சனும், கையில் இருந்த சில லட்சங்களின் வட்டித் தொகையும் அன்றாடச் சாப்பாட்டுக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் குடும்ப வண்டியை குடைசாயாமல் நகர்த்துவதே பிரம்மபிரயத்தனமாக இருந்தது தான் நிஜம்.

‘இந்த நிலைமைல மெடிசனை கன்டினுயு பண்ணி படிப்பை முடிக்கிறது எல்லாம் இனிமே கற்பனைல கூட நடக்காது...’ நிதர்சனத்தை வலியுடன் ஏற்றுக் கொண்டவன், வலிக்க வலிக்கத் தன் கனவுகளை விட்டுக் கொடுத்தான்.

“இரு.... கொஞ்சம் பொறு... எப்படியாவது எங்கயாவது உதவி வாங்கிடலாம்...” என்று அலைபாய்ந்த வீட்டு மனிதர்களைச் சமாதானம் செய்வது இன்னும் பெரிய பாடாக இருந்தது.

வைஷ்ணவியும் குணாவும் கூட ஆகாஷ் படிப்பு விஷயத்தில் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று பரபரக்கத்தான் செய்தார்கள். ஆனால், எங்கே?

ஏற்கனவே பெரிய சுமையாக அழுத்தும் வருணின் படிப்புச் செலவு, சென்ற வருடம் நடந்த மகள் அனுவின் திருமணக் கடன் என்று அவர்களே முழி பிதுங்கி கிடந்ததால் அண்ணன் குடும்பத்தைத் தங்கள் வீட்டின் ஒரு போர்ஷனில் அமர்த்தி அரவணைக்க மட்டுமே அவர்களால் முடிந்தது.

“நான் எதுவுமே பீல் பண்ணல.... ஐயம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்... இது ஒண்ணு தான் படிப்பா....?” அலட்சியம் போலக் காட்டிக்கொண்ட ஆகாஷ் ஒரு ஈவினிங் காலேஜில் மீடியா தொடர்புடைய படிப்பில் சேர்ந்து கொண்டான். வேலை கொடுத்துக் கை தூக்கி விட்டது பிபிஓ வேலை.

அங்குத் துவங்கிய நட்புகள் மூலம் தான் சப் டைட்டில் அமைத்துக் கொடுக்கும் பணியைச் செய்ய ஆரம்பித்தான். இயல்பாகக் கை வந்திருந்த ஆங்கிலப் புலமையும், பிளஸ் டூ வில் எடுத்திருந்த பிரெஞ்ச் வகுப்புகளும் இப்போது கை கொடுத்தன. யாருக்கு என்ன திறமை, அது எந்த நேரத்து அவசிய தேவைகளுக்கு உபயோகப்படும் என்பது கூட ஒரு வகை பிரபஞ்ச ரகசியம் தான் அல்லவா !?

அடுத்த இரண்டாம் ஆண்டு கொரட்டூரில் டிரைவர் வேலை பார்த்துக் கொண்டு குடும்பமாகச் சென்னை வந்து சேர்ந்த சதாசிவம், மீனாட்சி மற்றும் நரேன் மூலமாக அடுத்த ஆரம்பம் ஆனது.

வீட்டு பக்கத்தில் இருந்த சின்னச் சின்ன லேடீஸ் ஹாஸ்டல்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கக் கூடிய நல்ல வாய்ப்பு கண் எதிரே தெரிய, மீனாட்சி ஆன்ட்டியின் சமையல் திறமையை நம்பி அந்தச் சந்தர்ப்பத்தைச் சிக்கென பற்றிக் கொண்டான், ஆகாஷ்.

நரேனும் சதாசிவமும் துணை இருக்க, அடுத்தடுத்த வருடங்களில் சில பல மருத்துவமனை கேண்டீன்களின் காண்ட்ராக்ட்டுகளைக் கைப்பற்ற முடிந்தது. இதற்குள் மீடியாவில் யுஜி முடித்து வெளியே வந்திருந்தவன், விஎப்எக்ஸ் ஆர்டிஸ்ட்டாகப் பணியைத் தொடர்ந்து கொண்டே, ‘அனிமேஷன் அண்ட் விஷுவல் எபெக்ட்ஸ்’ துறையில் பிஜி செய்தான்.

இப்போது விஎப்எக்ஸ் சூப்பர்வைசராகவும் கோ-ஆர்டினேடராகவும் சினிமாவின் பின்னணியில் உழைக்கும் அதி நுட்பமான பணியில் தன் சுவட்டை பதித்துக் கொண்டிருக்கிறான்.

நேரத்தையும் உழைப்பையும் ஸ்ட்ரா போட்டு உறுஞ்சும் இந்த துறையில் வேலையும் பணி அழுத்தமும் மிக மிக அதிகம் தான். எனினும், மனதுக்குப் பிடித்ததாக இருந்ததால், உடன் வந்த சவால்களையும் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆறு மாதத்துக்கு முன்பு தான் இந்த அலுவலகத்தை அமைத்து அவனுக்கெனப் பிரத்யேகமான ஒரு டெக்னிகல் டீமை உருவாக்கி இருந்தான்.

இந்தத் துறையில் திறமைக்கேற்ற பெயரும், உழைப்புக்கேற்ற அடுத்தடுத்த வாய்ப்புகளும் வந்து சேர, அதற்குரிய ஊதியமும் நிறைவாக இருந்ததில் நன்றாகவே கால் ஊன்றி ஆகி விட்டான்.

அதே நேரம், என்னதான் சக்கையாய் பிழியும் ஆயிரம் வேலைகள் வெளியே வரிசை கட்டி நின்றாலும், வீட்டின் நிதி நிர்வாகம் முழுக்க முழுக்க அவன் கையில் தான்.

வந்ததை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போலச் செலவழிக்கும் பெற்றோரை பார்த்து அடிபட்டு இருந்தவன் அவன். அதனாலேயே தன் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைக்கும் கவனம் மூச்சு விடுவது போல மூளையில் இயல்பாகக் கலந்து விட்டிருந்தது.

அந்த எச்சரிக்கை உணர்வு தான், தன்னுடைய உழைப்பு, சேமிப்பு என எல்லாவற்றையும் ஒரே புள்ளியில் குவிக்காமல் ‘டைவர்சிபைட்’ ஆக இருக்குமாறு பல தொழில்களைக் கையில் எடுத்துக் கொள்ள வைத்தது.

ஆனால் ஒன்று! என்னதான் ஸ்டெபிலைஸ் ஆகி, காசும் பணமும் கையில் சேர்ந்திருந்தாலும் அவனுடைய ஆதிநாள் கலகலப்பும் பேச்சும் சிரிப்பும் மீளவே இல்லை. தன் பெற்றோரிடம் சொல்லத் தெரியாத ஊமைக் கோபம் ஒன்று உள்ளுக்குள் கனன்று கொண்டு தான் இருக்கிறது. அம்மாவிடம் கூடச் சமயத்தில் சகஜமாகப் பேசுவான். விஸ்வத்திடம்... ஹுஹும்...

சிங்கம் போல வலம் வந்த தந்தையும், ராணி போல அரசாண்ட தாயும் நொடிந்து போய் இருப்பது பார்க்க பரிதாபமாக இருந்தாலும் அவர்கள் மேல் அவனுக்கு இருந்த எரிச்சல், ஏமாற்றம், வருத்தம் என அனைத்தும் அடிமணல் கனலாக உள்ளே கொதித்தபடிதான் இருந்தது.

தான் கடந்து வந்த அழுத்தமெல்லாம் வெறுப்பாக மாறி நிற்க, தனக்குள்ளேயே வெம்பி வெம்பி இறுகிப் போயிருந்தது அவன் இதயம். விஸ்வம் வேறு தனக்குள்ளேயே சுருங்கி எல்லோரிடம் இருந்தும் ஒதுங்கி போய் இருக்க, சுகந்தி தான் பாவம்.

தங்களுடைய சாமர்த்தியமின்மையால் மகனை சிலுவை சுமக்கவிட்ட சூழ்நிலையை எண்ணி அவனிடம் பணிந்து நயந்து நடந்து கொள்ளும் நிலைமை அவருக்கு.

சௌமி கூடச் சமயங்களில் அவனுடைய சிடுமூஞ்சித்தனத்தைப் பொறுக்க முடியாமல் கடுப்படிப்பது உண்டு. ”அண்ணன் பாவம்டா... அவனுக்கு இருக்கிற டென்ஷனை நம்மகிட்ட காட்டாம வேறு யாருகிட்ட காட்டுவான், சொல்லு..?” என்று பெண்ணைச் சமாதானப்படுத்தி அடக்கி வைப்பதும் சுகந்தியே.

வீட்டில் நடப்பது எல்லாம் தெரியாதவன் அல்ல ஆகாஷும். என்னவோ அவனே ஆசைப்பட்டால் கூடப் பழையபடி இருக்க முடியாதபடி மனசு கெட்டிப்பட்டுப் போயிருக்க, வீட்டில் நிகழும் சலசலப்புகளைப் பற்றி யோசிக்கவோ, சீர் தூக்கி பார்க்கவோ மற்றபடி அவனுக்கு நேரமும் இல்லை.

‘தேர் ஆர் மைல்ஸ் டூ கோ பிபோர் ஐ ஸ்லீப்....’ இந்த வாசகம் தான் அவனுடைய ஸ்க்ரீன் சேவர். போக வேண்டிய பாதை நீண்டு கிடந்தாலும் வாழ்க்கை மீதான பாஸிடிவ் எண்ணங்களும், தன்னம்பிக்கையும் அவனிடம் அதிகரித்து இருந்தன.

‘விட்டதைப் பிடிக்கணும்... எங்களைக் கேவலமா பார்த்தவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்’ இந்த வெறி மட்டுமே விரட்டியதில் எப்போதும் போல இப்போதும் சகலமும் மறந்து தன் வேலைக்குள் புதைந்து கொண்டிருந்தவனைக் கலைத்தது அவனுடைய அலைபேசி.

************************************

“எங்கப்பா இப்படித் திடீர்னு வந்து ஸீன் கிரியேட் பண்ணுவாருன்னு நான் நினைக்கவே இல்லடி சுஜி.... நேரா அங்க போயி உட்கார்ந்துகிட்டு ‘நீ இங்க வா’ன்னு சொல்லுறாரு....”

தன் கல்லூரி வாசலில் நின்றிருந்த நேத்ரா அழாத குறையாகப் புலம்பிக் கொண்டிருக்க, அவளுடைய டென்ஷனை கண்ட சுஜியும் சௌமியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

“இப்ப என்னங்கிற? மாமா நம்ம வீட்டுக்கு தான வந்துருக்குறாரு... அம்மா போன் பண்ணி சொன்னாங்கன்னு தான் உன் கூடயே சேர்ந்து போயிடலாம்னு என் காலேஜ்ல இருந்து இப்படியே வந்துட்டேன். சட்டுபுட்டுன்னு கிளம்பி வா அம்மு... அப்புறம் ட்ராபிக் ஜாஸ்தி ஆயிடும்....”

சௌமி விரட்டினாலும், தன் தந்தையின் திட்டம் புரிந்தும் புரியாத நிலையில் இருந்த நேத்ரா பேயடித்த தினுசில் மிரண்டு கொண்டிருந்தாள்.

“அதுக்கேண்டி நேத்ரு புலம்புற....? உங்கப்பாவா வந்து வலைல விழுறாருன்னு உன் மேட்டரை அவுத்து விட்டுடு.... அலறி அடிச்சிக்கிட்டு அவரு ஓடியே போயிடுவாரு....” சுஜி ரகளையாகச் சிரிக்க,

இன்னும் ஜெர்க்கான நேத்ரா “சனியனே.... வாயை மூடி தொலை.... எதையாச்சும் உளறி வைக்காத” சௌமியை கண்களால் காட்டி முறைத்தாள்.

“உயிர் தோழிகளுக்குள்ள இப்படி ஒரு ரகசியமா? நம்ப முடியவில்லை.... நம்ப முடியவில்லை” சுஜி பாட்டாகவே பாடிக் காட்ட, தானும் உடன் சிரித்த சௌமி நேத்ராவை ஒரு மார்க்கமாக பார்த்தாள்.

அந்த லுக்கில் ஒரே ஒரு சதவீதம் தான் கிண்டல் இருந்தது. மீதி தொண்ணுத்தொன்பது சதமும் முறைப்பு, முறைப்பு, முறைப்பு மட்டுமே.

“பூனை கண்ணை மூடிகிச்சின்னா உலகமே இருண்டு போச்சு நினைச்சுக்குமாம் சுஜி.... உனக்குத் தெரியாதா?” அவள் நக்கலாகச் சுஜியிடம் கேட்க, நேத்ரா ‘நெளிகிறேன்’ என்ற பெயரில் அஷ்டகோணலாக வளைந்து கொண்டிருந்தாள்.

என்னதான் மிக நெருங்கிய நட்பாக சௌமி இருந்தாலும், ஆகாஷை பற்றித் தானாக எதுவும் பகிர்ந்து கொண்டதில்லை நேத்ரா. தன் மனதில் இருப்பதைச் சௌமி புரிந்து கொண்டிருப்பாள் என்று தெரியும். இருந்தாலும், ஏனோ இருவருமே வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசிக் கொண்டது இல்லை.

“ம்ம்.. ம்ம்... நடத்துங்க.. நடத்துங்க.... “ சுஜி கேலியாகத் தூண்டில் போட, நேத்ரா சங்கடமும் சிரிப்புமாகச் சௌமியைப் பார்த்தாள்.

ஒருவேளை சௌமி ‘அப்படியா?’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்று சொல்லிவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவளை வேண்டுமென்றே எதுவும் கேட்காமல் இதுநாள் வரை காய விட்டுக் கொண்டிருந்த சௌமி,

“சில பேருக்கு தாங்க என்னமோ ரொம்ப ரகசியமா எல்லாத்தையும் செய்யற மாதிரி நினைப்பு சுஜி....” இன்று ஏதோ மனம் வந்து சமிஞ்சை கொடுக்க, ‘கிடைத்தது சாக்கு’ என்று நேத்ரா ஒரே பாயாகப் பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.

“பட்டுக்குட்டி.... உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும்டா...” ரோடு என்றும் பார்க்காமல் சௌமியை கன்னம் கிள்ளி அவள் செல்லம் கொஞ்ச,

“அடச் சீ... விட்டு தொலைடி எருமை மாடே....” அவள் அணைப்பில் இருந்து சிலிர்த்துக் கொண்டு வெளியே வந்தாள் சௌமி.

“ஏண்டி.... என்னை என்ன அவ்வளவு பேக்குன்னு நினைச்சியா? நீ விடுற லுக்கு எல்லாம் புரியாத அளவுக்கு நான் சின்ன பப்பாவாக்கும்...? சரி, ஏதோ ஷோ காண்பிக்கிற... காமிச்சிட்டு போன்னு நானும் சைலென்ட்டா பார்த்துகிட்டு இருக்கேன்... நல்லா ஓட்டுறீங்கடி படத்தை....” அவள் முறைக்க, “ஹி... ஹி...” பயங்கரமாக அசடு வழிந்தாள் நேத்ரா.

“எப்புடிடி செல்லம் கண்டுபிடிச்ச....?” அவளுடைய முகவாயை பற்றி நேத்ரா தாஜா செய்ததில், “ஆமா... இதைக் கண்டுபிடிக்கிறது பெரிய ராக்கெட் சயின்ஸ் பாரு.... மொச புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாது....?” அவள் கன்னத்திலேயே ஒரு இடி இடித்தாள் சௌமி.

“உன் காதல் காவியத்தை எல்லாம் ரொம்ப நாளா கவனிச்சிகிட்டு தான் வரேன். அது எப்படிடி? அவன் சள்ளுபுள்ளுன்னு விழுவானாம்... இவ கை காயத்தைப் பார்த்தவுடனே குடுகுடுன்னு போய் மருந்து வாங்கிட்டு வருவானாம்... நீ எங்க வீட்டுக்கு ‘வர மாட்டேன், வர மாட்டேன்’னு அடம் பிடிப்பியாம்... அவன் ஒரு வார்த்தை சொன்னதும் உடனே படக்குன்னு ஓடி வந்து ஆட்டோவுல உக்காந்துக்குவியாம்....”

“அதை விடக் கஷ்டம்... பக்கத்துல ஒருத்தி கல்லுகுண்டு மாதிரி உட்கார்ந்திருக்கான்னு கூட நினைப்பு இல்லாம ரிவர் வியூ மிரர் வழியா வச்ச கண்ணு வாங்காம அவனை சைட் அடிச்சுக்கிட்டு வந்தியே.....? தெய்வமே... இந்தக் கொடுமையெல்லாம் என்னைப் பார்க்க வைச்சு படுத்துறியே.... உனக்குக் கண்ணே இல்லையா...?”

மேலே பார்த்துக் கொண்டு சௌமி புலம்ப, சுஜி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“சீ... போடி... எனக்கு வெக்க வெக்கமா வருது...” இல்லாத வெட்கத்தில் நேத்ரா நாணிக் கோண, “ம்க்கும்... வரும் வரும்... அங்க உங்கப்பா வந்து உட்கார்ந்து இருக்காரு.. அங்க வந்து இப்படி நெளிஞ்சு காமி....” கிடைத்த சான்சை விட்டு விடாத சௌமி இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

“ப்ச்.... எங்கப்பா ஏதோ பிளானோட தான் உங்க வீட்டுக்கு வந்துருக்குறாரு.... போன தடவை ஊருக்கு போனப்ப நான் பிஜி இங்க தான் பண்ணுவேன், கோயம்புத்தூர்ல பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்ல... அப்ப இருந்தே ஒரு மாதிரி தான் பொடி வச்சு பேசுறாரு சம்ஸ்....” நேத்ராவின் முகத்தில் தைரியத்தையும் தாண்டி திகில் அடித்தது.

“திடீர்னு கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சம்பந்தமா வேலை இருக்குனு சொல்லிட்டு இன்னிக்கு காலைல ஹாஸ்டல் வந்தாரு...” “

“‘ஈவினிங் நீ விஸ்வம் வீட்டுக்கு வா... அவங்களையெல்லாம் பார்த்து எத்தனையோ வருஷமாச்சு.... அப்படியே ஆகாஷ் நம்பரையும் கொடு... உன் அட்மிஷன் சமயத்துல பார்த்தது, அதுக்கப்புறம் அவனைப் பார்க்கவே இல்ல’ ன்னு உங்க அண்ணன் நம்பரையும் வாங்கிட்டு போனாரு...”

“எதுக்குடி எங்கப்பாக்கு அவரு நம்பரு....? என்னவோ மாதவா....? ஒண்ணுமே புரியல....” அவள் மண்டையைக் குடைந்து கொள்ள, சௌமியும் ஒன்றும் புரியாதவளாய் உதட்டை பிதுக்கி காண்பித்தாள்.

“சரி... சரி... போயிட்டு வா... பார்த்துக்கலாம்... எவ்வளவோ பண்ணிட்ட.. இதைப் பண்ண மாட்டியா...?” சுஜி விளையாட்டாகத் தைரியம் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தாள்.

*********************

“இந்தாளு என்னத்துக்கு என்னைப் பார்க்கணும்? சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு வந்தா இருக்கிறவங்களைப் பார்த்துட்டு போக வேண்டியது தானே.. இந்த அம்மா வேற ‘வீட்டுக்கு வா, வா’ன்னு ஒரே நச்சு...” ஆகாஷ் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய வேகத்திலேயே சுகந்திக்கு அவனுடைய எரிச்சல் புரிந்தது. ஆனாலும் விடுவாரா, அவர்!?

“தம்பி வந்துட்டான்.. நீங்க வர்றீங்கன்னு சொன்னவுடனே ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டான். அப்படியும் ட்ராபிக்ல பாருங்க.... இவ்வளவு நேரம் ஆயிடுச்சு...”

கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ரவியிடம் அவர் அளந்து வைக்க, அவஸ்தையான சிரிப்புடன் அதை ஆமோதித்த விஸ்வம் ரவியின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

தம்பதிகள் இருவரின் முகத்திலும் சொல்ல முடியாத புளங்காகிதமும் பெருமையும். வராது வந்திருந்த பழைய நாட்களின் நண்பர் என்பது ஒரு காரணம் என்றால், தங்கள் ஊரின் பெரிய மனிதர் தங்கள் வீடு தேடி வந்திருப்பது மிகப்பெரிய கௌரவமாக இருந்தது அவர்களுக்கு.

“பரவால்ல இருக்கட்டும்.. இருக்கட்டும்...” பெருந்தன்மையாகத் தலையாட்டிக் கொண்ட ரவி, “வாப்பா..” உள்ளே வந்த ஆகாஷை பார்த்தார்.

அந்தோ பரிதாபம், அம்மா கொடுத்த பில்ட்-அப்பிற்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமே இல்லாமல் உதட்டளவு புன்னகையைக் கொடுத்த ஆகாஷ், “வாங்க...“ ஒரு வார்த்தையுடன் முடித்துக் கொண்டு அமர்த்தலாக சோபாவில் அமர,

“என்ன ஆகாஷ்.. அப்புறம் உன் வேலையெல்லாம் எப்படிப் போகுது?” சம்பிராதயமான கேள்வி பதில்கள் அங்கே.

அவருடைய வினாக்கள் அனைத்துக்கும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துக் கொண்டிருந்த ஆகாஷை டீ கொடுக்கிற சாக்கில் தனியே தள்ளிக் கொண்டு போன சுகந்தி, “ஏன்டா...? நல்லா கலகலன்னு தான் பேசேன்...?” அவன் காதில் முணுமுணுத்து மகனை பரிதாபமாகப் பார்க்க,

“அதெல்லாம் வர்றது தான் வரும். சும்மால்லாம் என்னால ஆக்ட் பண்ண முடியாது” விடைத்துக் கொண்டவன், “என்னத்துக்கு இப்படி ஓவரா கவனிக்குறீங்க... அந்தாளு என்ன பெரிய ராஜ பரம்பரையா...? நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க...”

அம்மாவிடம் கடுப்படித்திவிட்டு அந்தக் கொதிக்கும் தேநீரை ஒரே வாயாக அவன் தொண்டையில் ஊற்றிக் கொள்ள, ‘இவனை வச்சுக்கிட்டு...’ சுகந்தி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டார்.

ரவியின் முன்னால் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்த தட்டுகளும், பெற்றோர் அவருக்குத் தந்த அபரிதமான உபசாரமும் அவன் உள்ளே இருந்த ஆத்திரத்தை விசிறி விட்டுக் கொண்டிருந்தது.

‘இந்த நேரம் பார்த்து இவங்க தாத்தா இல்லாம போயிட்டாரே... இவனை அடக்க அவரு தான் லாயக்கு..’ சுகந்தி தனக்குள் நொந்து போனார். ராமநாதனும் பார்வதியும் வீட்டில் இல்லை. வைஷ்ணவியுடன் மாங்காடு வரை சென்றிருந்தார்கள்.

“சௌமி என்ன மேல படிக்கப் போகுதா? இல்ல கல்யாணத்துக்குப் பார்க்குறதா இருக்கீங்களா?” ரவியின் கேள்வியில் விஸ்வம் நெளிந்தார். அந்த வீட்டில் அவர் முடிவு எடுத்துக் கொண்டிருந்தது எல்லாம் மலையேறி குறையக் காலம் ஆகி விட்டதே.

“கல்யாணத்துக்குத் தான் பார்க்கணுங்க அண்ணா... இந்த வருஷ கடைசியோட படிப்பு முடியுதுல்ல... போதுங்க... நம்ம கடமையை நாம முடிக்கணும் இல்லீங்களா? ” சுகந்தி இடையில் வந்து உதவி செய்ய, “ஆமாங்க...” விஸ்வமும் தலையை அசைத்து வைத்தார்.

“ஆமாமா... நீங்க சொல்றது தான் கரெக்ட். எங்க அம்முக்கு கூட அடுத்த வருஷம் முடிச்சிடலாம்னு இருக்கோம். அங்கேயே கோயம்புத்தூர்ல நமக்குத் தக்க வரன் இருக்கு. அவரும் டாக்டர் தான். நீங்க கூடக் கேள்விப்பட்டு இருப்பீங்களே, ஆர் ஆர் மல்டி ஸ்பெஷலாட்டி ஹாஸ்பிடல், அதுல ஒன் ஆப் தி பார்ட்னர்.”

தான் இங்கு வந்த காரணத்தை மெதுவாக எடுத்து வெளியே விட்டார் ரவி.

“பிஜி கூட இங்க வேணாம், அங்கேயே பிஎஸ்ஜில பண்ணிக்கலாம்னு அவங்க சொல்லுறாங்க... கல்யாணம் ஆன பின்னாடி பொண்ணும் மாப்பிள்ளையும் ஒண்ணா இருக்கிறது தானங்க நல்லது...” அவர் மெல்ல நூல் விடுவதை அறியாத விஸ்வம்,

“ஆமாங்க... அது தான் சரி, அம்மு எங்க இருந்தாலும் அருமையா படிக்குற பிள்ளை” ரவி சொன்னதைக் கேட்டு உண்மையான சந்தோசத்துடன் விஸ்வம் ஆமோதிக்க, சுகந்தியின் மனதில் தான் மெல்லிய ஏமாற்றம்.

‘எல்லாம் நல்லா போயிருந்துச்சுன்னா இன்னிக்கு நாமளே உரிமையா பொண்ணு கேக்கலாம்... ம்ஹ்ம்... இப்ப இதெல்லாம் யோசிச்சு என்ன பிரயோஜனம்?’ தன் மனதுக்குள் மறுகிக் கொண்ட அடுத்தக் கணம்,

‘ப்ச்.. என்ன இது தேவையில்லாதத நினைச்சுக்கிட்டு? அம்மு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.. நல்ல வசதியான இடமா, பெரிய இடமா அவளுக்கு வாழ்க்கை அமையட்டும்.’ அவருள்ளம் பாசத்தில் பரிதவித்துப் போகவும் தவறவில்லை.

“பெரியவங்க நமக்கு இருக்கிற கவலை எல்லாம் இதுங்களுக்கு எங்க புரியது... இங்க தான் படிப்பேன்னு இவ பிடிவாதம் பண்ணுறா... ஏன் ஆகாஷ் நம்ம ஊருல இல்லாத மெடிக்கல் காலேஜ் பெசிலிட்டிஸா இங்க இருக்குது? நீதான் அவளுக்குச் சொல்லேன்”

தன் வார்த்தைகளைக் கேட்டு அவனுடைய முகம் அடையும் ரியாக்ஷனை அணு அணுவாகக் கவனித்துக் கொண்டிருந்த ரவிக்கு... ஓ மை கடவுளே.... மிகப் பெரிய்ய்...ய்ய ஏமாற்றம்.

“இதுல நான் சொல்ல என்னங்க இருக்கு...? நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவங்க ஜஸ்ட் ஸ்கூல் ஸ்டுடென்ட். இப்ப அவங்களே ஒரு டாக்டர். எங்க படிக்கணும், என்ன பண்ணணும்னு அவங்களுக்குத் தான் தெரியும். ப்ளஸ் எனக்கும் இந்த ப்ரொபஷனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு...? ஆனா பிஎஸ்ஜி மெடிக்கல் ஒன் ஆப் தி பெஸ்ட் இன்ஸ்டிட்யூஷன்ஸ் தான... அதுவரைக்கும் தெரியும்...“

அவன் பட்டுக் கொள்ளாமல் சொன்ன பதிலில், ரவியின் கண்களில் மெல்லிய நிம்மதி தோன்றி மறைந்தது. மகளை ‘பார்த்தியா...?’ என்பது போலக் குறிப்பாகப் பார்த்து வைத்தார்.

அவர் தன்னை ஆழம் பார்ப்பதை உணர்ந்தே இருந்த ஆகாஷ் கல்லுளிமங்கனாகப் பதில் சொல்லிவிட்டு ரவியின் பார்வையைத் தொடர, அவனுக்கு அந்தத் தர்ம சங்கடமான சூழ்நிலையிலும் சிரிப்பு வந்து விட்டது.

எந்தச் சலனமும் இல்லாமல் அந்தக் குட்டி அறையின் சுவரில் சாய்ந்து ஜன்னல் திட்டில் அமர்ந்து இருந்த நேத்ரா, “அதைக் கொடுடி... நான் இது மேலேயே ட்ரை பண்ணி பார்க்கிறேன்...“ சௌமியின் நெயில் பாலிஷை பிடுங்கி தன் கால் விரல்களில் மும்முரமாக இட்டுக் கொண்டிருந்தாள்.

அங்கே நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லை, இந்த நெயில் பாலிஷ் வைக்காவிட்டால் நாளையே உலகம் அழிந்து விடும் என்பது போன்ற அதி தீவிர பாவனை அந்த முகத்தில்.

‘இவங்கப்பாவுக்கு ஹை பிபி வர வைக்காம விட மாட்டா போல இருக்கு...’ அவன் உதடுகளுக்குள் சிரித்துக் கொள்ள, இனி முடுக்கி திருத்த வேண்டியது தன் பெண்ணை மட்டும் தான் என்று முடிவு செய்துகொண்ட ரவி “சரி.. அப்ப நான் கிளம்புறேன்...” எழுந்து விடைபெற்றுக் கொண்டார்.

“காரை தெரு முனைலயே நிறுத்தி வைக்க சொல்லியிருக்கேன். குறுகலா இருந்ததுல உள்ள நுழைய முடியல... ஒரே இடைஞ்சலு... ஒரு வண்டி வந்தா இன்னொண்ணு போக முடியாது போல.... சரி... அப்ப நான் கிளம்புறேன்” ஷூவை அணிந்து கொண்டே அவர் எதார்த்தமாகச் சொன்னாரோ, இல்லை பதார்த்தமாகச் சொன்னாரோ?

ஆனால் ஏற்கனவே சுருதி ஏறிப் போயிருந்தவனுக்கு மெல்லிய ஊசியை இறக்கிய மாதிரி இருக்க,

“ஆமா... இந்த ஸ்ட்ரீட்ல உங்க கார் எல்லாம் நுழைய முடியாது தான். பட் எங்க லெவலுக்கு இது ரொம்பவே டீசண்டான இடமாத்தான் இருக்கு ” நறுக்கென்று சொல்லி வைத்தான்.

‘பரவாயில்லையே... உன் மதிப்பு உனக்கு தெரிகிறதே...!?’ என்கிற மாதிரி அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவர், அமைதியாகக் கிளம்பி விடச் சுகந்தி, ‘ஏன்டா இப்படி?’ என்கிற கண்டன பார்வையோடு அவனை ஏறிட்டார்.

ரவி எப்போதும் இந்த மாதிரி வந்து போகிற மனிதர் இல்லை. என்ன தான் ஒரே ஊரில் அருகருகே வருடக்கணக்கில் வசித்தாலும் கூட, மாலதி, நேத்ரா நெருங்கிய அளவிற்கு நூறில் ஒரு பங்கு கூட அவர் பழகியது இல்லை. பரம்பரை பணக்காரர்கள் என்ற ஹோதா எப்போதுமே அவரிடத்தில் உண்டு.

“என்னப்பா இது..? பார்த்து பேசணும்யா...” எப்போதும் எதையும் மௌனமாகக் கடந்து விடுகிற விஸ்வம் கூட வாய் திறந்து மகனை கண்டிக்க,

“நான் பார்த்துப் பேசுறது எல்லாம் இருக்கட்டும். நீங்க முதல்ல இப்படிக் கூனி குறுகி நின்னு அவருகிட்ட பேசுறதை முதல்ல நிப்பாட்டுங்க.. அந்தாளு என்ன பெரிய மைசூர் மகாராஜாவா? அப்படிக் குழையுறீங்க...“ அவன் அதற்கும் வெடுக்கென்று விழுந்து கடிக்க, விஸ்வத்தின் முகம் அப்படியே சுருங்கிப் போனது.

“போதும்.. ரொம்பப் பண்ணாத...” தந்தையிடம் இருந்து ஒதுங்கி ஒதுங்கி நிற்பவளாக இருந்தாலும் அண்ணன் அப்படி சுள்ளென்று பேசுவது உறுத்தியதில் ஆகாஷிடம் சண்டைக்குக் கிளம்பினாள் சௌமி.

“அவரு காதுல விழ போகுது. அப்புறம் பேசிக்கலாம். வாங்க... அவரை அனுப்பிட்டு வந்திடலாம்...” சுகந்தி குரலை தணித்துக் கொண்டு கிசுகிசுக்க, “வாங்கப்பா.. பெரிய இவன்.. அவன் கெடக்குறான்...” சௌமி தந்தையை அழைத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த நேத்ராவையும் ரவியையும் நோக்கி போனாள்.

“நீயும் கிளம்பு அம்மு.. நான் போறப்ப ட்ராப் பண்ணிட்டு போறேன்...” வந்த வேலை நல்லபடியாக முடிந்த திருப்தியில் இருந்த ரவி மகளை அங்கிருந்து கிளப்பப் பார்க்க, “இல்லப்பா... நான் நாளைக்குப் போய்க்கிறேன்... நாளைக்கு லீவ் தானே...” அவள் விலாங்கு மீனாக நழுவிக் கொண்டிருந்தாள்.

“இங்க எதுக்குத் தங்கணும் அம்மு..? நீ முதல்ல கிளம்புற வழியைப் பாரு..” அவர் கண்டிப்பாகச் சொல்லியதில், “ப்பா.. ப்ளீஸ்பா...” அவள் செல்லம் கொஞ்சுகிற சாக்கில் மல்லுக்கட்ட, ரவி மகளை மேலும் கடிந்து கொள்ள முடியாத கோபத்தில் பல்லைக் கடித்தார். அதற்குள் மற்றவர்கள் அவர்கள் அருகில் வந்து விட்டார்கள்.

அதற்குமேல் அவர்கள் முன்னால் வாக்குவாதம் செய்ய இயலாத ரவி மகளை ஒரு மறைத்த முறைப்போடு பார்த்துவிட்டு விலகி நடந்தார். விஸ்வம் ரவியுடன் பேசிக் கொண்டே தெரு முனைக்கு நடக்க, சுகந்தியும் சௌமியும் வழியனுப்ப பின்னே சென்றார்கள்.

கூடப் போனால் அப்பா இன்னும் வற்புறுத்துவாரோ என்று வாசலோடு நின்று விட்ட நேத்ரா, உள்ளே உம்மென்று அமர்ந்திருந்த ஆகாஷின் எதிரே சென்று நின்றாள்.

“அது என்ன கோபம் அப்படியே மூக்குக்கு மேல வந்து உட்கார்ந்துடுமா...? முதல்ல மாமா கிட்ட ‘வெடுக்கு வெடுக்கு’னு பேசுறதை நிறுத்துங்க.. அப்புறம் அது என்ன... எங்க அப்பா கிட்ட... ? என்ன இருந்தாலும் வருங்கால மாமனாரு... கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படித் தான் பட்டுன்னு பேசுறதா...?”

உரிமையோடு அவள் ஆகாஷை கடிந்து கொள்ள, ஏற்கனவே எரிச்சலாக இருந்தவன் உச்சக்கட்ட கடுப்புடன் அவளை முறைத்தான்.

“சின்னபுள்ளைத்தனமா பழசையே நினைச்சுக்கிட்டு... இப்படி இருந்தா நம்ம கல்யாணம் எப்படிச் சுமூகமா நடக்கும்...? கொஞ்சம் சவுண்டை குறைங்க பாஸ்...” ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த எண்ணையின் தீயை அதிகப் படுத்துகிற மாதிரி அவள் முணுமுணுத்துக் கொண்டே செல்ல,

“வாயை மூடிக்கிட்டு அந்தப் பக்கம் போடி... லூசு மாதிரி ஏதாச்சும் உளறிக்கிட்டே இருந்தீன்னா அந்த வாய் மேலயே போடணும் போல இருக்கு... நடக்காத கதையையே பேசுறியே... உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா? ”

எகிறிக் கொண்டே வந்தவன், நிஜமாகவே அடித்து விடுவான் போன்ற ஆத்திரத்தில் தகித்துக் கொண்டிருந்தான்.

“உன்னால தான் எல்லாப் பிரச்னையும். உங்கப்பா ஒண்ணும் பழைய பாசத்துல இங்க வந்துட்டு போகல. இன்டைரக்டா தன்னோட செல்வாக்கை காட்டிட்டு போறாரு. நீ முதல்ல இங்க இருந்து கிளம்புற வழியைப் பாரு...

“அவருதான் உன்னை அவ்வளவு வற்புறுத்தி கூப்பிடுறாரு இல்ல... அதுக்கப்புறம் உனக்கென்ன இங்க வேலை.? அதுக்கும் அந்தாளு என்னைத் தான் ஒரு மாதிரியா முறைச்சிட்டு போறாரு... இவ்வளவு சொல்றேன்ல... உனக்கெல்லாம் கொஞ்சம் கூட ரோஷமே இல்லையா..?”

“ஏற்கனவே நிறைய பட்டாச்சு... இதுக்கு மேலயும் எங்களை அவமானப்படுத்திப் பார்க்கிறதுக்கே வந்து சேருதுங்க பாரு... சரியான தொல்லை...”

வந்த வெறுப்பில் வாயில் தோன்றிய வார்த்தைகளை அவன் சிந்த, அவனுடைய அந்நியப்படுத்தும் வார்த்தைகளில் அப்படியே உடைந்து போனாள் நேத்ரா.

தான் உயிரென நினைப்பவன் உண்மையாகவே தன்னை விட்டு விலகிதான் நிற்கிறானோ என்ற பயம் முதன் முறையாகத் தோன்ற, ஒரு வினாடி அப்படியே நின்று விட்டாள்.

“நான் உங்களை அவமானப்படுத்திப் பார்க்குறேனா..? நான்... என்னையா சொல்றீங்க...?” அவன் வீசிய சொற்களின் கூர்மை அவள் மனதை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.

ஒரு நொடி.. ஒரு நொடி தான்.. அடுத்த ஷணமே அவன் உச்சிமுடியை பற்றி இழுத்து நறுக்கென்று நாலு கேள்வி கேட்கவேண்டும் என்கிற மாதிரி பற்றிக் கொண்டு எரிந்தது நேசம் கொண்டவளின் உள்ளம்.

தான் என்ன செய்கிறோம் என்றே புரியாத வேகத்தில் அவனருகே சென்றவள், “ஹோ... அப்ப நான் உனக்குத் தொல்லையா ஆகாஷ்.... சொல்லு... நான் உனக்குத் தொல்லையா...?” அவனுடைய சட்டைக் காலரை பற்றியபடி அவன் கண்களைப் பார்த்துக் கேட்டவளின் விழிகள் தன்னாலேயே பொங்கியது.

“எங்கப்பாக்கு புரிஞ்சுது கூட உனக்குப் புரியலியா....? ம்ம்ம்... உனக்கா புரியாது? ப்ச்.... உனக்கு நல்லா புரியும்... ஆனா.. ஆனா... நீ நடிக்கிற... தூங்குறவங்களை எழுப்பலாம்... உன்னை மாதிரி எல்லாத்தையும் மறைச்சுகிட்டு தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது...”

கோபத்தில் உயர்ந்திருந்த அவள் குரல் ஸ்ருதி குறைந்து, நடுங்கி, பின் கிசுகிசுத்து, திடுமென உடைந்து போய் விசும்பலாகத் தொடர,

“ஏய்... இப்ப நீ என்னத்துக்கு அழுகிற...? நான் சொல்றது தான் ப்ராக்டிகல்... புரிஞ்சுக்க முயற்சி பண்ணு” எப்போதும் வீராவேசமாகச் சவால் விடுபவள் இப்போது கண்ணீருடன் தத்தளிப்பது அவன் மனதை கொல்லாமல் கொன்றது.

அந்த நிமிடம் அவளைச் சமாதானப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை உந்த, அவள் தோள் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,

“ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் அம்மு... உங்கப்பா கோபப்படுறதிலயும் நியாயம் இருக்கு... இந்த மாதிரி லவ்வெல்லாம் சினிமா கதைக்கு வேணும்னா நல்லா இருக்கும். நம்ம பாமிலி சிச்சுவேஷனுக்கெல்லாம் கண்டிப்பா ஒத்து வராது...”

கண்ணீருடன் தத்தளிக்கும் கருவிழிகள் ஏறிட்டு தன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்தச் சங்கடமான கணத்திலும் சொல்லத் தெரியாத இதமான உணர்வு ஒன்று ஆகாஷின் மனமெங்கும் வியாபித்தது.

தன்னைத் தானே கட்டிவைக்காத அந்தத் தேவ நொடியில் அவள் முகத்தில் படிந்த முடிக்கற்றைகளை அவன் காதோரம் ஒதுக்கி விட, தன் காது மடல்களைப் பட்டும் படாமல் வருடிய அவன் விரல்களைப் இறுக பற்றிக் கொண்டாள் நேத்ரா.

இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்த அந்த ஆழ் நயனங்களில் அச்சம் காணாமல் போயிருக்க, அங்கே அளவற்ற நேசம் மட்டுமே.

‘இது தான் நீ.. இது தான் என்னோட ஆகாஷ்... என்னதான் ஒளிச்சு ஒளிச்சு வச்சாலும் உனக்குள்ள இருக்கிறது வெளில வந்து தான தீரும்...’ அவள் விழிகளில் தன் காதல் மீதான நம்பிக்கை மீண்டிருந்தது.

“ஒத்து வரும் ஆகாஷ்.. நீங்க மட்டும் என் கூட நின்னா போதும்.. எல்லாமே ஒத்து வரும்...” அவன் விரல்களை இதழ்களில் ஒற்றி தன் கன்னத்தில் இருத்திக் கொண்டவள்,

“ஐ லவ் யூ... அண்ட் ஐ க்நோ யூ க்நோ இட் வெல்.. உங்க கோபத்தை மட்டும் கொஞ்சம் மூட்டை கட்டி வைங்க. எங்க வீட்டை கன்வின்ஸ் பண்றது என் பொறுப்பு.” கட்டுக்கடங்கா காதலுடன் ஆகாஷின் நெஞ்சில் சாய்ந்தபடி அவன் இடையை உரிமையாக அவள் கோர்த்துக் கொள்ள,

“உனக்கு எப்படிப் புரிய வைக்குறதுன்னே தெரியல.... உன் ஸ்டேடஸ் வேற... எங்க நிலைமையே வேற.... நடக்காத விஷயத்தைப் பிடிச்சுக்கிட்டு தொங்கற...“

ஏதோ புரியாத பரிபாஷையின் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாலும், அவன் உதடுகள் தான் வீம்பான சொற்களை உதிர்த்துக் கொண்டிருந்தன. அவன் கரங்களோ !?

முத்தம் என்ற மின்சாரத்தை அவன் விரல்களில் கடத்தியது போதாது என்று மெல்லிய பூங்கொத்தாய் மார்பிலும் தலை சாய்ந்திருந்தவளை அந்த நிமிடம் தானே அறியாமல் தன் தோள் சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தான் அவன்.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom