• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விழிகள் தீட்டும் வானவில் -1

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
13
விழிகள் தீட்டும் வானவில் -1

இளம் தீயில் நெய் முறுகிய மணமும், கூடவே முந்திரி திராட்சை பதமாய் வறுபட்ட வாசமும் காற்றைச் சுகந்தமாய் நிறைத்திருக்க, கலகலவென்ற பேச்சு சத்தத்திலும் சிரிப்பொலியிலும் அந்தச் சிறிய வீடு அதிர்ந்து கொண்டிருந்தது.

“ஏய்... மரியாதையா கையை விடு... நான் தான் போடுவேன்.... அப்புறம் என் திறமையெல்லாம் எப்ப தான் காண்பிக்கிறது...?” கூந்தலை தூக்கிக் கட்டிக் கொண்டு, கைகளை மடித்துவிட்டு என்னவோ யுத்தத்திற்கு ஆயுத்தமாவது போல அங்கு நின்றிருந்தாள் அந்த இளம்பெண்.

“எங்கிட்ட கொடு அம்மு... அம்மா வேற திட்டுறாங்க....” பக்கத்தில் இலகுவான நைட்டியில் உயரமாக நின்றிருந்த சௌமி அவளிடமிருந்து சப்பாத்தி குழவியைப் பிடுங்கப் பார்க்க, சட்டமாக முழு இடத்தையும் அடைத்தபடி அடுப்பு மேடையில் சாய்ந்து கொண்ட அம்மு “ம்ஹும்.... முடியாது...“ அவள் உதடுகள் சிரித்தாலும் தலை இடம் வலமாக ஆடியது.

அவள் ஆடும் திசைகளுக்கேற்ப அவள் இடுப்பிலிருந்த லாங் ஸ்கர்ட் புரண்டு தரையைப் பெருக்கிக் கொண்டிருக்க, கொண்டையில் இருந்து பிரிந்து தொங்கி தொந்தரவு செய்த முடிக்கற்றையைக் காதோரம் இழுத்து சொருகிக் கொண்டன, இருவிரல்கள்.

“நீ இப்ப கொடுக்கப் போறியா, இல்லையா?”

சௌமி முறைக்க, அவளா மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுவாள்!? சராசரி உயரத்தை விட கொஞ்சம் குட்டியாய் இருந்தவள், சௌமியின் கைகளுக்கு அகப்படாமல் கீழே குனிந்து நழுவியதும் அல்லாமல் அவள் இடுப்பை நிமிண்டி வேறு வைத்தாள்.

“அட குரங்கே... என்னடி பண்ற?” சௌமி துள்ளிக் குதித்து விலக, “ஹஹஹா...” பெரிதாக நகைத்தவளின் ஓவல் வடிவ முகத்தில் மின்னிய துறுதுறுப்பும், கண்களில் மிளிர்ந்த குறும்பும் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அழகாக்கிக் கொண்டிருந்தன.

“ப்ளீஸ்டா சம்ஸ்.. வீட்டுலயும் அம்மா விட மாட்டாங்க.. இங்க ட்ரை பண்ணி பார்த்துக்கிறேனே ப்ளீஸ்...” அம்மு கண்களைக் குறுக்கிக் கொண்டு கெஞ்ச, “என்னமோ பண்ணித் தொலை...” சிரிப்போடு சௌமி தலையில் அடித்துக் கொண்டாள்.

“சம்ஸ்... இது என்ன ஷேப்னு சொல்லு பார்க்கலாம்.... உன்னால கண்டுபிடிக்க முடியாது... இதுக்கெல்லாம் மண்டைல கொஞ்சமாச்சும் கிரியேட்டிவிட்டி வேணும்...” தான் திரட்டி வைத்திருந்ததைப் பெருமையாகக் காட்டி அம்மு கேட்க,

“ஷேப் தானே..? இது அமீபா மாதிரி இருக்கு.. இது ஆக்டோபஸ் வாயை திறந்திருக்கிற மாதிரி இருக்கு.... சகிக்கல.... நீயும் உன்னோட கிரியேட்டிவிட்டியும்.... நீ முதல்ல நகரு தாயே....” கண்கள் பளபளக்க ‘லுக்’ விட்டவளை சௌமி கேவலமாக காலி செய்தாள்.

“ஓய்..... என்ன நக்கலா !? ” விளையாட்டாகக் கண்களை உருட்டி முறைத்த அம்மு, “இப்ப பாருடி....” பேச்சு மும்முரத்தில் கன்னாபின்னாவென்று திரட்டியிருந்த மாவை எடுத்தவள், கொதிக்கும் எண்ணையில் தொப்பென்று போட,

“ஸ்..ஸ்..... அம்ம்ம்மா.......”

அதி சூட்டில் தெறித்த எண்ணெய் துளிகள் நொடியில் அந்த மென்மையான கரத்தை பதம் பார்த்து விட்டன.

“ஹ.. ய்..யோ.. என்ன பண்ணி தொலைச்ச?.” சௌமி பதற,

“ஐயையோ... என்னம்மா ஆச்சு...?” அதுநேரம் வரை பின்தரையில் அமர்ந்து கோதுமை மாவை உருட்டியபடி, இவர்களின் சண்டையைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த சுகந்தி அடித்துப் பிடித்து எழுந்து வந்தார்.

“முதல்ல தண்ணியில காட்டு.. என்னம்மா நீ? வேணாம்.... வேணாம்னு சொன்னா கேக்குறியா?” அவள் கையை வேகமாக இழுத்து பைப் நீரில் காட்டியவர், “உங்க அப்பா, தாத்தாவுக்கு மட்டும் உன்னை எண்ணெய் சட்டி முன்னாடி நிக்க வச்சோம்னு தெரிஞ்சுச்சுனா அவ்வளவு தான்... அடுத்த முறை இங்க அனுப்பவே மாட்டாங்க... என்ன புள்ள போ...?”

அவர் கவலையில் புலம்பித் தள்ளி விட்டார். வீட்டுக்கு வந்த விருந்தாளி பெண் வந்ததும் வராததுமாக காயம் பட்டுக் கொண்டால் யாருக்குத்தான் மனசு கேட்கும்?

“ஒண்ணும் இல்ல அத்தே.... சின்ன விஷயத்துக்குப் போய்.. விடுங்க...” அவள் மறுத்தும் சௌமி எடுத்து வந்த மருந்தை சிவந்திருந்த இடங்களில் போட்டுவிட்டவர்,

“இரண்டு பேரும் பேசாம ஹால்ல உட்கார்ந்து டிவி பாருங்க.... நீங்க எனக்கு உதவி பண்ணவும் வேண்டாம்.... இப்படிச் சுட்டுக்கிட்டு பயமுறுத்தவும் வேண்டாம்...” அவர்களை வலுக்கட்டாயமாக நகர்த்திவிட்டு அடுப்பு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.

சௌமி டிவியில் ஏதோ ஒரு படத்தை வைத்து விட, அம்முவால் கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கே பொருந்தி உட்கார முடியவில்லை. பத்து நிமிடங்களுக்கு மேல் அவளால் சும்மா இருக்க முடிந்தால் என்ன ஆவது? அப்புறம் இந்தப் பூமி திரும்பி எதிர்பக்கமாகச் சுற்ற ஆரம்பித்து விடுமே....!?

“நான் ஒண்ணும் செய்யல.. சும்மா உங்க பக்கத்துல நிக்கிறேன் அத்தே....” என்றபடி சுகந்தி அருகில் சென்று நின்றவள் அவரிடம் எதை எதையோ பேசி தொணதொணத்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க தேச்சிங்கன்னா மட்டும் எப்படி இப்படி ரவுண்ட் ரவுண்டா வருது... கும்முனு உப்பி வருது பாருங்க..... நான் போட்ட பூரி எல்லாம் அப்பளம் மாதிரி நொறுங்குது....” அவர் பொரித்தெடுக்கும் பொன்னிற பூரிகளை ரசித்தவள், தான் போட்ட ஒண்ணு இரண்டை தேடி எடுத்து தொட்டுப் பார்த்தாள்.

“எல்லாம் பழக்கம் தான்டா... உனக்கும் செய்யச் செய்ய வந்துடும்....” சுகந்தி சிரிக்க, பக்கத்து வாணலியில் மினுமினுத்துக் கொண்டிருந்த பைனாப்பிள் கேசரியில் ஒரு கரண்டி அவள் உள்ளங்கைக்கு இடம்பெயர்ந்து வாய்க்குள் ஸ்வாகா ஆனது.

“சூப்பரா இருக்கு, அத்தே... அதே ஆதென்டிக் (Authentic) டேஸ்ட்.... கொஞ்சம் கூட ருசி மாறல.... உங்க கைல மட்டும் ஒரு ஸ்பெஷல் மாயாஜாலம் இருக்கு...” நாக்கில் ருசித்த இனிப்பை சப்புக் கொட்டிக் கொண்டு சுவைத்தாள்.

அவள் என்னமோ உண்மையாகத்தான் அந்த வார்த்தைகளை உணர்ந்து சொன்னாள். ஆனால், அந்தச் சின்னப் பாராட்டு கூடச் சுகந்தியின் கண்களைக் கலங்க வைத்தது.

“நல்லாருக்கா...? உனக்காகத்தான் செஞ்சேன்... இல்லேன்னா யாரு இங்க ஸ்வீட்டெல்லாம் சாப்பிடுறாங்க சொல்லு...” புன்னகையுடன் அலுத்தவர், “இந்தா... பொறுமையா உட்கார்ந்து சாப்பிடு....” ஆசையாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தார்.

“இல்ல... வேண்டாம்....”

“இப்ப பசியில்ல....”

“இட்ஸ் ஓகே .... அப்புறம் சாப்பிடுறேன்...”

இப்படியெல்லாம் ஒரு பேச்சுக்கு கூட அவள் மறுக்கவில்லை. “குடுங்க... குடுங்க...” எந்தப் பிகுவும் இன்றி உடனே வாங்கிக் கொண்டவள், சௌமி அருகில் சென்று தொம்மென்று உட்கார்ந்தாள்.

“உனக்கு வேணுமாடி... வேணாமா...? சரி... போ...“ பக்கத்தில் அமர்ந்திருந்தவளின் தோளை இடித்தவள், அதற்குப் பின் உடல், பொருள், ஆவி என முழுவதுமாக அந்தக் குட்டிக் கிண்ணத்துக்குள் மூழ்கிப் போனாள். ஒவ்வொரு ஸ்பூனாக ரசித்து ருசித்தவள், அந்த இனிப்பை முழுமூச்சாகக் காலி பண்ணிவிட்டுத்தான் நிமிர்ந்தாள்.

சாப்பிடுபவர்கள் ரசித்து உண்பதை கண்ணார காண்பது தானே சமைப்பவர்களுக்குக் கிடைக்கும் முழுதான சந்தோஷம், சன்மானம் எல்லாம்... சுகந்தி அகலமான புன்னகையுடன் இவளை பார்த்துக் கொண்டே தன் கைவேலையைத் தொடர்ந்தார்.

“தினமும் ருசியா வீட்டு சாப்பாடு சாப்ட்டா இப்படித் தான் லொள்ளு பண்ண சொல்லும்... என்னை மாதிரி ஹாஸ்டல்ல இருந்து காஞ்சின்னா தெரியும், அத்தையோட அருமை...” அம்மு சௌமியின் முகவாயில் செல்லமாக இடிக்க,

“அது சரி... இங்க படிப்புக்கே எப்ப மூடுவிழான்னு தெரியலையாம்... இதுல ஹாஸ்டல் ஒண்ணு தான் குறைச்சல்...” முனகிய சௌமி அதை அடுத்தவள் உணர்வதற்குள்ளேயே, “அம்மா... ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு உங்க சாப்பாடு தேவலையாம்... மத்தபடி ரொம்பச் சுமார் தானாம். இவ என் காதில வந்து சொல்றா...” தன் அம்மாவிடம் கோள் மூட்டி விட்டாள்.

“நான் எங்க பேயே அப்படிச் சொன்னேன்...?” அம்மு அவளை அடிக்கத் துரத்த, சௌமி சோபாவில் ஏறி மறுபுறம் குதித்து ஓட, “வேணாம்டி... சொன்னா கேளுங்க... கீழ விழுந்து பல்லை உடைச்சுக்காதீங்க...” அதட்டியபடி சுகந்தி நகைக்க, வெளியே ‘தடதட’வென்ற பைக் சத்தம் கேட்டது.

அவ்வளவு தான்...

அடுத்த ஷணம் சௌமியின் ஓட்டம் பட்டென்று நின்றது. தன்னைப் பிடித்து முதுகில் குத்திய அம்முவின் அடிகளைக் கூட எதிர் பேச்சுப் பேசாமல் எந்தச் சுரணையில்லாமல் வாங்கிக்கொண்டவள், பூமிக்கு வலிக்குமோ எனும்படி மென்மையாக நடந்து முன்னறைக்குப் போனாள்.

அவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த சுகந்தியின் சிரிப்பு சுவிட்ச் போட்டது போல நின்று விட, கடமையே கண்ணாய் எரியும் அடுப்பை கவனமாகப் பார்த்தபடி அவர் பாலை பிரித்துக் காய்ச்ச ஆரம்பித்தார்.

சௌமி வெளிக்கதவைத் திறந்து வைக்க, சில நொடிகளில் காம்பவுண்டின் சின்ன கேட் திறக்கும் ஒலியும், வாகனம் உள்ளே வரும் அரவமும் கேட்டது.

தலையைக் கலைத்துக் கொண்டே உள்ளே வந்தவனைக் கண்டு அம்மு அனிச்சையாக எழுந்து நிற்க, அவன் கையிலிருந்த ஹெல்மெட்டை டேபிளில் வைத்து விட்டு சாவியை அங்கேயே போட்டபடி உள்ளே போய் விட்டான்.

‘இவளை பார்த்தானா? இல்லையா..?’ சௌமிக்குச் சங்கடமாக இருந்தது.. அம்முவை பார்க்க அவள் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் தன்பாட்டுக்கு உட்கார்ந்து இயல்பான பாவத்தில் ரிமோட்டை அழுத்திக் கொண்டிருந்தாள்.

“அம்மு வந்திருக்கா.. நீ பார்க்கல...!?” சட்டையின் பட்டன்களை நீக்கிக் கொண்டிருந்தவன் அறை வாசலில் வந்து நின்ற சௌமியை திரும்பி பார்த்தான். ‘சரி.. அதுக்கு என்ன இப்ப?’ அலட்சியமாக உயர்ந்த அவன் பார்வை கேளாமல் கேட்ட விதத்தில் சௌமிக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

‘அம்முவை கவனிக்கலையான்னு கேட்டேன்...’ பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அவள் மீண்டும் அதையே வினவ, “எந்த அம்மு...?” என்றான் அவன் கூலாக.....

‘ஓ... உனக்கு எத்தனை அம்முவை தெரியும்...?’ முதலில் இருந்த சௌமியாக இருந்தால் இப்படிப் பட்டென்று கேட்டு ஒரு பிடி பிடித்து விட்டிருப்பாள். இப்போது அவள் குரல் மட்டுமல்ல, வீட்டில் உள்ள எல்லோருடைய குரலும் நசிந்து போய்த் தானே வருகிறது இவன் முன்பு...

“நேத்ரா தான்.... வேறு யாரு...?” அவள் பல்லைக் கடித்தபடி முனக, “தம்பி.... இந்தாப்பா....” மகனுக்குக் காபியை கலந்து கொண்டு வந்து நீட்டினார் சுகந்தி.

“ம்ம்...” என்றபடி வாங்கிக் கொண்டு ஒரு வாய் பருகியவன், “என்ன விருந்து ஏற்பாடெல்லாம் தடபுடல் படுது போல...!?” கேலியாகச் சுளித்த அவன் உதடுகளில் ஏளனப் புன்னகை.

‘ஆமா... இதெல்லாம் மட்டும் சொல்லாமயே தெரிஞ்சிருமே...’ சௌமி மனதுக்குள் பொருமிக் கொண்டாள். வீட்டை நிறைத்திருந்த நெய் வாசமும் பட்டை சோம்பு மணமும் தான் எட்டுத்தெருவுக்கு அடிக்கிறதே... இந்த அறிவாளிக்கா கண்டுபிடிக்க தெரியாது...!?

“இல்ல... வராத புள்ள வந்திருக்கு... அது தான்...” முகம் சுண்டிப் போனாலும் சுகந்தி பம்மி பம்மி பதில் சொல்ல, “அது சரி.. ஊரான் வீட்டு நெய்யு என் பொண்டாட்டி கைய்யுன்னு விட்டு அடிக்கிறவங்க தானே நீங்க..?” சத்தமாகவே முனகியவன், “இப்ப நான் ஸ்டுடியோ கிளம்பறேன்... நைட்டு எனக்குச் சாப்பாடு வேண்டாம்...” காபி டம்ளரை வைத்து விட்டுத் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினான்.

அவன் சொன்ன வார்த்தைகள் காதில் விழவில்லையா, இல்லை கேட்டு கேட்டு மனசு மரத்திருந்ததோ, சுகந்தி அவன் முன்னால் சொன்ன சொற்களை அப்படியே காற்றில் கரைய விட்டார்.

“எல்லாம் ரெடியா இருக்குடா.... ஒரு வாய் சாப்ட்டுட்டு போயேன்...” அவன் திரும்பவும் வெளியே செல்கிறான் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டவர்,

“உனக்குன்னு இட்லி ஊத்தி அடுப்புல ஏத்திட்டேன்.... நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள ரெடியாயிடும்...” கிட்டத்தட்ட கெஞ்சிவிட்டு, எங்கே இன்னும் கொஞ்சம் தாமதித்தால் பிடிவாதமாக மறுப்பானோ என்று வேகமாக கிச்சனுக்குள் சென்று விட்டார்.

எதுவும் சொல்லாமல் குளியலறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டவனைக் கண்டு காரணமேயில்லாமல் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது சௌமிக்கு... வெளியே தனியே அமர்ந்திருக்கும் அம்முவின் நினைவு வர, அவசரமாக ஹாலுக்கு வந்தாள்.

“அவன் உன்னைக் கவனிக்கல, அம்மு... வெளில இருந்து வந்ததுக்கும், அதுக்கும் வீடு இருட்டா இருக்குல்ல... அதுதான்....” எதையோ சொல்லி சமாளிக்க முயன்ற தோழியைக் கேலியாகப் பார்த்த நேத்ரா, ‘இத பாருடா... உருட்டி வச்ச பிள்ளையார் கணக்கா ட்யூப்லைட்டுக்கு கீழ நான் நிக்கிறேன்... இருட்டுல தெரியலையாமில்ல.....’ தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அவள் காதுகளிலும் இவ்வளவு நேரம் உள்ளே நடந்த பேச்சுகள் எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்கத்தானே செய்தன. தன் உணர்வுகள் எதையும் வெளியே காண்பித்து அங்கு இருக்கும் மற்ற அன்பான மனிதர்களைக் காயப்படுத்த அவள் விரும்பவில்லை.

“ஹே.... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக்கும்...!?.” சௌமியைப் பார்த்துக் கள்ளமில்லாமல் புன்னகைத்தவள், டிவி நிகழ்ச்சியைக் காண்பித்து வேறு விஷயம் பேச ஆரம்பிக்க, தனக்குள் நிம்மதியாக உணர்ந்த சௌமி அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அவன் தயாராகி வெளியே வர, அதற்குள் பறந்து பறந்து வேலையை முடித்திருந்த சுகந்தி விரைந்து வந்து மகன் முன் தட்டை நீட்டினார்.

“இந்த வயசுல ஸ்வீட் வேணாம், எண்ணெய் பலகாரம் வேணாம்னு.... என்னவோ போ... எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்....” அவர் புலம்பிக் கொண்டே டம்ளரில் தண்ணீரை நிரப்ப, அவன் எதுவுமே காதுகளில் விழாத ரீதியில் நின்று கொண்டே சாப்பிட்டான்.

உள்ளே சென்ற சௌமி தன் அம்மாவுக்கு உதவி கொண்டிருக்க, நேத்ராவால் கொலு பொம்மை மாதிரி அங்கேயே உட்கார முடியவில்லை. ஹாலோ குட்டி ஹால். இதில் ஒரு மூலையில் அவன், அடுத்த மூலையில் இவள்;

ஒன்றும் பேசாமல் கம்மென்று இருக்க அவளுக்கு ரொம்பவே அசவுகரியமாக இருந்தது. தன் பின்னே பக்கவாட்டில் நின்றிருந்தவனைப் பாராதது போலத் திரும்பிப் பார்த்தாள்.

முன்பு பார்த்ததை விட இன்னும் இளைத்துக் கருத்திருந்தான். அயர்வாக இருந்தாலும் இப்போது தான் குளித்து விட்டு வந்திருந்தவனின் முகத்தில் களைப்பையும் மீறிய புத்துணர்ச்சி சுடர் விட, சரியாகத் துவட்டாத தலைமுடி துவண்டு அவன் முன்நெற்றியில் சரிந்திருந்தது.

ஒருகையால் டேபிளில் இருந்த நியூஸ் பேப்பரை புரட்டிக்கொண்டு கால்களை அகட்டி நின்றிருந்தவனின் தோற்றம் கவர்ச்சியாகக் கண்களைக் கட்டி இழுக்க.... அதுவும் அவன் அணிந்திருந்த அந்த கிரே நிற டிஷர்ட்டும், கருநீல நிற ஜீன்சும் அவன் கலருக்கு....

‘அட ராமா... என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன் நான்...!?’ தன் பார்வையைக் கஷ்டப்பட்டுத் தழைத்துக் கொண்டவள், அதற்கு மேல் அங்கே உட்காரமுடியாமல் எழுந்து விட்டாள்.

ஓடிக் கொண்டிருந்த டிவி திரையை வெறுமனே ஒரு பார்வை பார்த்தவன் அந்த நேரம் பார்த்து இவள் பக்கம் திரும்ப, இப்போது நேர் எதிராக மோதிக் கொண்டன இருவரின் விழிகளும்.

நேத்ரா அவனைப் பார்த்து புன்னகைக்க, அவனும் கஷ்டப்பட்டு உதடுகளை இழுத்து வைத்தான். ‘அடேங்கப்பா..... எவ்.வ்...ளோ பெரிய ஸ்மைல்.....!? இதுக்குச் சிரிக்காமயே இருந்திருக்கலாம்...’ அவன் மேல் கோபம் கோபமாக வந்தாலும் அவளால் அவனைப் போல ‘உம்’மென்று இருக்க முடியவில்லை.

“எப்படி இருக்கீங்க ஆகாஷ்....? நல்லா இருக்கீங்களா....?” அவள் எந்தத் தயக்கமும் சுணக்கமும் காட்டாமல் நேருக்கு நேராகக் கேட்டு விட, “ம்க்கும்....க்க்....” அவனுக்குப் புரையேறியது.

அருகில் இருந்த நீரை எடுத்து அவசரமாகப் பருகியவன், “ம்ம்ம்.... நல்லா இருக்கேன்...” என்று இழுத்தான். பிறகு என்ன நினைத்தானோ, மரியாதை கருதி “நீ....?” என்றான். அவனது ஒற்றையோ ஒற்றை எழுத்துக் கேள்வியில் நேத்ரா புளங்காகிதப்பட்டுப் போனாள்.

“ம்ம்... எனக்கென்ன....? சூப்பரா இருக்கேன்....” அவள் தன்னுடைய பாராமுகத்தைக் கொஞ்சம் கூடப் பெரிது பண்ணாமல் சிரித்தபடி பேச, அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

“அப்புறம் படிப்பெல்லாம் எப்படிப் போகுது...?” பேச வேண்டாம் என்று நினைத்தாலும் தன்னை மீறி கேட்டுவிட்டவன், அவள் உற்சாகமாகச் சொன்ன பதிலை ஒன்றும் அவ்வளவு உற்சாகமாக காது கொடுத்து கேட்டு விடவில்லை.

அசுவராஸ்யமாக ‘ம்...ம்ம் “ கொட்டியபடி, அவள் பேச்சை பாதிக் காதில் வாங்கியும் மீதி வாங்காமலுமாக வேகவேகமாகச் சாப்பிட்டு முடித்தவன், கை கழுவ கிச்சனுக்குள் சென்று விட, அவன் கவனம் தன்னிடமில்லை என்று உணர்ந்த நேத்ரா தன் வளவளப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.

என்னவோ அவனுடைய அலட்சியம் கொஞ்சமும் பாதிக்கவில்லை அவளை. அவன் இவ்வளவு தூரம் முகம் கொடுத்து பேசியதே போதும் என்கிற மாதிரி ஒரு சந்தோச புன்னகை அவள் இதழ்களில்.

அறைக்குள் சென்று கொஞ்ச நேரம் எதையோ குடைந்தவன், “சரி..... நான் கிளம்புறேன்....” எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு பைக்கை கிளப்பிப் புறப்பட்டு விட்டான்.

வாசல் வரை மகனை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த சுகந்தி, “சரிம்மா.... நீங்க இரண்டு பேரும் சாப்பிட வாங்க....” இவர்களை அழைக்க, “கொஞ்ச நேரம் ஆகட்டும்மா....” சோம்பலாக உடல் முறித்த சௌமி,

“பெரிய இவன்... எருமை.... மாடு...” வாய்க்குள்ளேயே எதையோ மென்று கொண்டிருந்தாள். அது அவள் அருகில் அமர்ந்திருந்த நேத்ராவின் செவிகளிலும் விழத் தவறவில்லை.

“என்னடி..?” இவள் கேட்க, “ப்ச்.. ஒண்ணுமில்ல... விடு..“ சலிப்பாகச் சொன்ன சௌமி நேத்ரா மடியில் தலையணையைப் போட்டு உரிமையாகத் தலை சாய்த்துக் கொள்ள, மகள் மகனை மனதுக்குள் வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருப்பதை அறியாத சுகந்தி, “ஹப்பாடா” என்றபடி வந்து அமர்ந்தார்.

“சூடா இருக்கும்போது சாப்ட்டுடுங்களேன்... பொரிச்சவுடனே சாப்பிடாம எல்லாம் ஆறி அவலா போச்சு போ.... சரி.. எட்டரைக்கா எந்திருச்சு போட்டு கொடுக்குறேன்...“ என்றவர், மனதில் எழுந்த அலுப்பில் அப்படியே தரையில் படுத்துக் கொண்டார்.

“இந்தாங்க அத்தே...” அருகில் கிடந்த இன்னொரு குஷனை தூக்கி நேத்ரா குடுக்க, அதை வாங்கித் தலைமாட்டில் வைத்துக் கொண்டவரின் முகத்தில் அவ்வளவு கனம் தெரிந்தது. அதற்குச் சற்றும் குறையாமல் அவர் அகத்தில் மண்டிக்கிடக்கும் அயர்ச்சி கொஞ்சநஞ்சமா என்ன?

டிவியில் ஓடிக் கொண்டிருந்த பாடல் சத்தத்தைத் தவிர, சிறிது நேரம் முன்பு இருந்த கலகலப்பின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் அந்தக் கூடம் ஒரு சங்கடமான அமைதியின் பிடியில் இருந்தது.

‘மழை அடிச்சு ஓஞ்ச மாதிரி...’ என்று பொதுவாகச் சொல்லுவார்கள். இங்குப் புயல் கரை கடந்து போனதால் வீட்டின் அமைதி திரும்பிய மாதிரி, எல்லோரும் அழுத்தம் குறைந்து இயல்பாக மூச்சு விடுவது போல விரும்பத்தகாத ஆழ்ந்த நிசப்தத்தில் ஒன்றி போய் இருக்க, வெறும் பார்வையாளராக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த நேத்ராவுக்குத் தாளவே முடியவில்லை.

‘ஏன் ஆகாஷ் இப்படி மாறி போயிட்ட....?’ சௌமியின் கூந்தலில் விரல் நுழைத்து இதமாக மசாஜ் செய்து கொண்டிருந்தவளின் நெஞ்சம் பாரமேறிப் போக,

‘நான் முதல் முதல்ல பார்த்த ஆகாஷுக்கும், இப்ப இப்படி வள்வள்ளுன்னு விழுந்து பாயறவனுக்கும் இடையில தான் எவ்வளவு வித்தியாசம்.....?’ நினைக்க நினைக்கக் கவலையும் ஆயாசமும் பெருகியதில் அவளுக்கு நீண்ட நெடிய பெருமூச்சு தான் வந்தது.
 

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom