விழிகள் தீட்டும் வானவில் - இறுதி அத்தியாயம்
“ஆகாஷ்.... என்னைப் பார்த்தா பாவமா இல்லையா...? ரொம்பப் பசிக்குதுப்பா.. எங்கயாவது நிறுத்தி சாப்ட்டுட்டு போலாமே... இப்படி என்னை பட்டினியாவே கூட்டிட்டு போறீயே.. உனக்கே நியாயமா இருக்கா...?” நேத்ரா புலம்பிக் கொண்டிருக்க, நெடுஞ்சாலையில் காரை விரட்டிக் கொண்டிருந்த ஆகாஷ் திரும்பி முறைத்தான்.
“ப்ளீஸ்...” அவள் முகத்தை சுருக்கி பாவமாகக் கெஞ்சுகிற அழகை யாராவது பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ நிச்சயம் ஆகாஷின் மேல் கொலை வெறி வரும்.
‘பொண்டாட்டி இவ்வளவு கெஞ்சியும் பட்டினியா கூட்டிட்டு போறானே, இவன்லாம் ஒரு மனுஷனா?’ வெகுண்டு எழுந்து சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை. அந்தளவுக்குப் பத்து நாள் பசியில் கிடந்தது போலப் பரிதாபமாகப் பார்த்தன நேத்ராவின் விழிகள்.
“பின்னாடி அம்மா என்ன என்னத்தையோ வச்சு அனுப்பி இருக்காங்கல்ல.. வாயை மூடிக்கிட்டு அதை எடுத்து தின்னு... வண்டியை எடுத்து இன்னும் இரண்டு மணி நேரம் கூட ஆகல... இதோட ஒன்போது இடத்துல நிறுத்தியாச்சு...” இரவு வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் கவலையில் அவன் கடுப்படிக்க,
“அதெல்லாம் சுத்த போர்டா... எனக்குப் பயங்கர க்ரேவிங்கா இருக்கு.... இந்த மாதிரி நேரத்துல ஆசைப்படுறத வாங்கிக் கொடுத்துடணுமாம். என்னவோ போ, எனக்கு கொடுத்து வச்சது இவ்வளவு தான்...?”
அவனுடைய வீக் பாயின்டில் ஒரு போடு போட்டவள், பதுமை போல முகத்தை வைத்துக் கொண்டு கண்களைக் கொட்ட, அவனுக்கு நிஜமாகவே ஆயாசமாக இருந்தது.
“ஏண்டி.. புரிஞ்சுக்கவே மாட்டேங்குறே...? கண்ட இடத்துல சாப்ட்டு உடம்புக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா... இப்ப தானே அந்த தாபால உக்காந்து மொக்கிட்டு வந்த... நிஜமாவே நீயெல்லாம் டாக்டர் தானா...?” அவன் சலித்தான் எனில்,
“வொர்க் லைப் பேலன்ஸ் வேணும் ஆகாஷ்.. பெர்சனல் லைப்ல நம்ம வேலையைக் கொண்டு வரக் கூடாது.. நீயெல்லாம் என்னத்த படிச்சியோ போ...” அதற்கும் அவள் வியாக்கியானம் பேசியதில், “முடியல...” அவன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டான்.
“நிறுத்தி தொலைக்கிறேன்... நடுவுல பழக்கடை ஏதாச்சும் இருந்தா மட்டும் தான் வாங்கித் தருவேன், இதுக்கப்புறம் அங்க நிறுத்து, இங்க நிறுத்துன்னு சொன்னீனா பேசாம காரை ஒரு ஓரமா போட்டுட்டு படுத்துடுவேன்....”
“உன்னை இழுத்துக்கிட்டுப் போறது இருக்கே, அது திருவாரூர் தேரை தள்ற மாதிரி இருக்கு.. நகர மாட்டேங்குற....” திட்டிக் கொண்டிருந்தாலும், வழியில் தென்பட்ட இளநீர் கடையைப் பார்த்து அவன் ஓரம் கட்ட,
“யு ஆர் மை செல்லம்டா..” சீட்டிலிருந்து ஒரு எழும்பு எழும்பியவள் அவன் கன்னத்தைக் கிள்ளி இழுத்து தன் விரல்களைக் குவித்துக் காற்றில் முத்தமிட்டாள்.
“அறிவு கெட்டவளே... ஒழுங்கா உக்காந்து தொலை... வர வர யூ ஆர் பிகமிங் எ ஹைபர்...”
அவளது காதலான செயல் கொடுத்த கிறக்கத்தை விட, பூரித்திருந்த வயிறோடு அவள் செய்யும் தடால் புடால் காரியங்கள் அச்சத்தையே அதிகம் கொடுத்ததில், அவனும் அலறாமல் என்ன செய்வான், பாவம்!?
நான்கு மாத கர்ப்பிணிக்கு உரிய கவனங்களை மற்றவர்களுக்குப் படித்துப் படித்துச் சொல்பவள், தன்னிடம் மட்டும் செல்ல சேட்டைகள் செய்து கொண்டு வர, இவனுக்குத்தான் பயமாக இருந்தது.
“என் புருஷன் மாதிரியே ஏன் புள்ளையும் வெரி அண்டர்ஸ்டாண்டிங்... போத் ஆர் சமத்துக் குட்டீஸ்... சோ, யூ டோண்ட் வொர்ரி மேன்...”
அசால்ட்டாகச் சொல்லியபடி இறங்கி சென்றவள், கடைக்காரரிடம் இளநீரை இருவருக்குமாக வெட்ட சொல்ல, தானும் இறங்கிய ஆகாஷ் அங்கிருந்த தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவி கொண்டான்.
“எனக்கு வேணாம்.. நீ ஒண்ணு குடிச்சிட்டு இன்னொண்ணை பாட்டில்ல வாங்கிக்கோ... இதோட நேரா வீடு தான். எங்கயும் நிறுத்த மாட்டேன்... பார்த்துக்கோ....” இளநீர் வெட்டுபவரிடம் காரிலிருந்த காலி பாட்டிலை அவன் எடுத்துக் கொடுக்க,
“தாத்தா... நீங்க வெட்டி வச்சிருக்கிறதை அவருகிட்ட கொடுத்துட்டு இன்னொண்ணு இளசா பார்த்து வெட்டி அதுல ஊத்திடுங்க..” அவனுடைய அதட்டலை எல்லாம் எப்போது சட்டை செய்திருக்கிறாள் நேத்ரா?
“எனக்குத் தான் வேணாம்னு சொல்றேன்ல...” அவன் மறுப்பிற்கு எல்லாம் அசராத அழுத்தம் அவளிடம் இருந்து.
“ஒழுங்கு மரியாதையா வாங்கிக் குடிங்க.. பெரிய தியாகச் செம்மல்னு நினைப்பு....” பற்களுக்குள் அவள் கடிக்க, “வேண்டாம்னு சொன்னா விட்டுடாத... எல்லாமே உன் இஷ்டப்படி நடக்கணும்...”
கடுப்படித்துக் கொண்டே அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டவன் ஸ்ட்ரா போட்டு உறுஞ்ச, உண்மையிலேயே தண்ணீர் கல்கண்டு போல இனித்தது.
“டேஸ்டா இருக்குல்ல... இது நல்லா இருக்கு.. நீ குடி..” அவன் தன் கையில் இருந்ததை அவளிடம் கொடுக்க முயல, “இதுவும் நல்லா தான் இருக்கு.. பேசாம உங்களுதை குடிங்க..” பக்கத்தில் இருந்தால் நொச்சு பண்ணுவான் என்று திரும்பி நின்று கொண்டாள்.
“இந்த நாற்பது ரூபாயை வச்சு தான் கோட்டை கட்ட போறீங்களா..? ஆசைப்பட்டதை ஆசைப்பட்ட நேரத்துல வாங்கிச் சாப்பிடாம....” அவள் முணுமுணுக்க,
“நான் ஒண்ணும் பணத்துக்குப் பார்க்கல... ஏதாச்சும் உளறாதே...” அவள் உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னதை ஒத்து கொண்டால் அவன் கெத்து என்னாவது?
“நீங்க பணத்துக்குப் பார்க்குறீங்கன்னு நானும் சொல்லல.. எங்களுக்கெல்லாம் ஆசை ஆசையா வாங்கிக் கொடுப்பீங்களே தவிர, உங்களுக்குனு எதையும் செஞ்சுக்க மாட்டீங்க... அதைத் தான் மாத்திக்குங்கன்னு சொல்றேன்...”
மெழுகுவர்த்தியாகத் தன்னைக் கரைத்துக் கொள்ளும் அவன் இயல்பை நன்றாகப் புரிந்து வைத்திருந்த நேத்ரா, இப்படித்தான் அதட்டியும் உருட்டியும் மிரட்டிக் கொண்டிருந்தாள் எனில், யார் பேச்சையும் சட்டை செய்யாத ஆகாஷ் மனைவியின் உரிமையான நொடிப்புகளை வாங்கிக் கொண்டு மெல்ல அவள் வழிக்கு வந்து கொண்டிருந்தான்.
‘இவ சொல்றமாதிரி நமக்குன்னு செஞ்சுக்கணும்னா மனசு வர மாட்டேங்குது தான்... இதைச் சொன்னா அதுக்கும் லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சுடுவா...’ மனதுக்குள் புன்னகைத்தவன், அவள் என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்க்க, நேத்ரா இளநீர் வழுக்கையை ரசித்துச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
‘எதையும் ருசிச்சு ரசிச்சு அனுபவிக்க இவகிட்ட தான் கத்துக்கணும்’ சிரிப்புடன் அவளருகே நெருங்கி வந்து நிற்க, “ஆகாஷ்... என் செலக்ஷன் நல்லா இருக்குல்ல... ஐ லைக் திஸ் ப்ளேசிங் ரெட்...” கண்களால் சுட்டிக் காட்டியவளின் முகத்தில் டன் டன்னாகப் பெருமை வழிந்தது.
“ம்ம்.. நல்லா இருக்கு.. உன் செலக்ஷன் எல்லாமே பெஸ்ட் தான்...” தன்னைச் சுட்டிக்காட்டி அவன் தோளை குலுக்கிக் கொள்ள, “ம்ஹ்க்கும்.. ரொம்பத் தான்...” அவளும் மலர்வுடன் சிரித்தாள்.
இருவரின் விழிகளும் தங்கள் முன் நின்றிருந்த ‘செலாரியோ’ காரை ரசிக்க, “எப்படியோ அடம்பிடிச்சு வாங்கிட்ட...” அவன் ஒற்றைக் கரம் அவளது மேடிட்ட வயிற்றைக் காதலுடன் வருடிக் கொடுத்தது.
“நானா இந்தப் பேச்சை ஆரம்பிச்சேன்...? ‘நீங்க தான் இந்த மாதிரி நேரத்துல பைக்ல போறது சேஃபா?’ ன்னு ஓவரா புலம்பி வான்ட்டடா வந்து வண்டியில ஏறுனீங்க... வந்த சான்சை மிஸ் பண்ணுவாளா இந்த அம்மு? ‘கஷ்டம்தான், என்ன பண்ணுறது?’னு பாவமா மூஞ்சியை வச்சுகிட்டு ஒரு பிட்டை போட்டேன். விழுந்துட்டீங்க....” அவள் கிண்டலாகச் சிரிக்க,
“அது தானே... நீ யாரு...?” அவள் விளக்கம் சொல்லும் அழகில் அவன் முறைத்தான்.
“பின்ன என்ன...? ஊருல இருக்கிற லேடீஸ் எல்லாம் இந்த மாதிரி நேரத்துல பைக்ல, பஸ்லன்னு போறதில்லையா...? ‘சரி, புள்ள ரொம்ப உருகுது.. இதை விட்டா இவரு கார் வாங்க சான்சே இல்ல’ன்னு தான் இழுத்து போட்டுட்டேன்...” என்றவள்,
“நிஜமா சொல்லுங்க... இல்லேன்னா நீங்க வாங்கியிருப்பீங்க..? ஜென்மத்துக்கும் லொங்கு லொங்குன்னு பைக்லயே ஊரை சுத்தி இருப்பீங்க...” அவள் சொன்னது ஒருவகையில் உண்மை தான். அவன் யோசித்துத் தான் இருப்பான்.
இதற்கு முன்பு எத்தனையோ முறை நேத்ரா “ஒரு கார் வாங்கிடலாம்பா..... இந்த வெயில்ல நீங்க ஓயாம அலையுறதை பார்த்தா கஷ்டமா இருக்கு...” என்று கெஞ்சியிருக்கிறாள்.
“எதுக்குத் தேவையில்லாம...? அதெல்லாம் லக்ஸுரி.. அப்படில்லாம் சொகுசு பார்த்துட்டு இருந்தா உருப்பட முடியாது” என்ற ஒரே போடாகப் போட்டு அவள் வாயை அடைத்து விடுவான்.
என்னதான் கையில் காசு தாராளமாகப் புரண்டாலும், ‘கவனமாக இரு, ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வை...’ என்ற அடிமனக்குரல் உள்ளுக்குள் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்க, ஆகாஷ் அப்படித்தான். தானாகவே விழுந்து எழுந்து வந்தவர்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு. ஆழ்மனதின் ஜாக்கிரதை உணர்ச்சி.
“இப்பயும் அதையே தான் சொல்றேன்... பேசாம மாருதி ஆல்டோ போதும்னு சொன்னேன்.. கேட்டியா..? இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்...? அதை வாங்கியிருந்தா ஒண்ணுல இருந்து ஒண்ணரை லட்சம் மிச்சமாயிருக்கும்...” அவன் இப்போதும் புலம்ப, நேத்ரா திரும்பி முறைத்தாள்.
“ஆரம்பிச்சுட்டீங்களா....? உங்களை..?” அவன் இடுப்பிலேயே ஒரு கிள்ளு கிள்ளியவள்,
“நீங்க யாரு.. ஹனிமூனுக்கு எங்க போலாம்னு கேட்டா ‘எதுக்கு அதெல்லாம் வீணா... அப்புறம் போயிக்கலாம்’ னு சொன்ன ஆளு தானே நீங்க...?” அவள் ஆதியிலிருந்து தொடங்க,
‘கல்யாணமாகி இரண்டு அனிவெர்சரி கொண்டாடிட்டாலும்... இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு ஞாபக சக்தியோ...?’ அவன் சிரித்துக் கொண்டான்.
“அதை நீ மறக்கவே மாட்டியா....?” ஆகாஷ் வண்டியை எடுக்க, அந்தப் பக்கம் ஏறி அமர்ந்த நேத்ரா, “அதெப்படி மறப்பேன்...? ‘இப்ப டூர்னு போய் ஊரையா சுத்தி பார்க்க போறோம்.. அப்புறம் போய்க்கலாம்’ன்னு அதையும் இதையும் சொல்லி சின்ன பொண்ணு என்னை ஏமாத்தி, இன்னிக்கு வரைக்கும் எங்கயும் கூட்டிட்டு போகாம மிச்சம் பிடிக்குற ஆளு தானே நீங்க...?”
அவள் இடிக்கும் இடியில், “ஹ..ஹா ஹா...” வாய் விட்டு சிரித்தவன், “நான் சொன்னது கரெக்ட் தானே. அப்ப போயிருந்தா வேஸ்ட்.. இப்ப பாரு... நீ பீல் பண்ணிட கூடாதுன்னு உன்னை செகண்ட் ஹனிமூன் கூட்டிட்டு போறேன்...” புருவத்தைப் பெருமையாக உயர்த்திக் காட்ட,
“ஹலோ பாஸ்... ஒண்ணுக்கு அப்புறம் தான் இரண்டு வரும்... செகண்ட் ஹனிமூனாமில்ல...” உதட்டை சுளித்தவள்,
“அது சரி என்ன சொன்னீங்க...? ஹனிமூன் கூட்டிட்டு போறீங்களா...? இரண்டரை வருஷம் கழிச்சு மனசு வந்து எங்கம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க. ஞாபகம் இருக்கட்டும்...” அவனை முறைக்க, அதற்கும் அவனிடம் இருந்து உல்லாசமான சிரிப்பு தான் பதிலாக வந்தது.
வாய் சண்டை போட்டுக் கொண்டே வந்தவள், ஒரு கட்டத்தில் களைப்பினால் உறங்கிப் போய் விட, தன் தோளில் இருந்து சரிந்தவளை இழுத்து ஒழுங்காகச் சாய்த்துக் கொண்டான் ஆகாஷ்.
பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண் துணையிருக்க, மஞ்சள் வெயில் மாலைப் பொழுதில் ஒரு நீண்ட நெடிய நெடுஞ்சாலைப் பயணமும், அந்த இனிமைக்கு இனிமை சேர்க்கும் இனிய கானங்களும் என அந்த கணம் அவனுடைய இதயம் சொக்கிப் போய் இருந்தது.
பாரதியார் மாதிரி “காணி நிலம் வேண்டும்” என்று பாடல் ஒன்று எழுதாதது தான் குறை.
உன்னை காணும் வரையில், எனது
வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில், ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்...
எனதுயிரே.. எனதுயிரே ..
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
பெண் குரலில் ஒலித்தாலும் இந்தப் பாடல் வரிகள் தனக்கே தனக்காக எழுதப்பட்டது போல இருக்க, முகம் விகசிக்க புன்னகைத்த ஆகாஷ் தன் தோளில் சாய்ந்திருந்தவளின் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தம் பதித்தபடி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
**************************
“மாலு... என்ன பண்ணுற கீழ...? தம்பிக்கு காபி எடுத்துட்டு வந்து கொடு.... எந்திருச்சுட்டாரு பாரு....” ரவியின் குரல் மனைவியை அதிகாரம் செய்தது எனில்,
“ஆகாஷ்... இந்தாங்க பேப்பர்... இப்படி உக்காருங்க... இங்க தான் ஃபேன் காத்து நல்லா வரும்“ அவருடைய கவனிப்பு ஒரேயடியாக மருமகனை பாச மழையில் நனைத்து பிழிந்து காய வைத்துக் கொண்டிருந்தது.
நேற்றிரவு இங்கு வந்ததில் இருந்து மாமனார் பொழியும் அன்பு ஊற்றில் மூழ்கி மூச்சு முட்டிப் போய் இருந்தான் ஆகாஷ். ஒரு பக்கம் அவருடைய பரிதவிப்பு புன்னகையைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் தர்மசங்கடமாக இருந்தது.
“என்னை எப்பயும் போல வா, போன்னே கூப்பிடுங்க அங்கிள்.. இதென்ன புதுசா மரியாதை கொடுத்துக்கிட்டு...” அவர் தன்னிடம் சுமூகமாகப் பேச ஆரம்பித்த ஆதி நாளில் இருந்து சொல்லி சலித்து விட்டான். “அதெப்படி... இப்ப நீங்க வீட்டு மாப்பிள்ளை...” என்று அவர் முடித்து விடுவார்.
இந்தப் பக்கம் விசேஷம், கல்யாணம் என்றால் கூட, நேத்ராவும், ஆகாஷும் காலையில் வந்து எட்டி பார்த்து விட்டு இரவு கிளம்பி விடுவார்கள், அது கூட மூன்று நான்கு முறைகள் தான் இருக்கும். மற்றபடி மாலதியும் ரவியுமாகச் சென்னை சென்று மகளைப் பார்த்தால் தான் உண்டு.
இத்தனை நாட்கள் இங்கு வந்து தங்கியிராத பெண்ணும் மாப்பிள்ளையும் இப்போது நான்கைந்து நாட்கள் இருக்குமாறு வந்திருக்க, ரவி தரையில் கால் பாவாமல் நடந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
“என்ன பண்றா இவ..? மாலு...” மீண்டும் ரவி குரல் கொடுக்க, “அங்கிள்... நீங்க கொஞ்சம் இப்படி உக்காருங்களேன்... இவ்வளவு சீக்கிரத்துல எதுக்கு ஆன்ட்டியை எழுப்பித் தொந்தரவு பண்ணுறீங்க...?”
“நான் தூக்கம் வரலேன்னு எந்திருச்சு வந்தது தான் தப்பா போச்சு போல... எனக்கு உடனே காபி குடிக்கணும்னு எல்லாம் ஒண்ணுமில்ல...” ஆகாஷ் தான் அவரைப் பிடித்துப் பக்கத்தில் அமர்த்திக் கொள்ள வேண்டி இருந்தது.
“மணி ஏழாகப்போகுதே... எப்பயோ எந்திருச்சுட்டா.. என்ன பண்ணுறாளோ தெரியல...” வந்த ஆதங்கத்தில், ‘தான் இதுவரை அடுப்பை பற்ற வைக்கக் கூட கற்றுக் கொள்ளவில்லையே’ என்று ரவி கவலைப்பட ஆரம்பித்து இருந்தார்.,
‘தெரிஞ்சுருந்தா நானே போய் என் மருமகனுக்குக் காப்பிப் போட்டுக் கொடுத்திருப்பேன்..’ என்று பொருபொருத்துக் கொண்டிருந்தவரை அமைதிப்படுத்த, நல்லவேளை செல்வி வந்து விட்டார்.
“அக்கா குளிக்குறாங்க சார்.. இந்தாங்க எடுத்துக்குங்க..” தான் கொண்டு வந்த டம்ளர்களை இருவரிடமும் நீட்டியவர், “நல்லா இருக்கீங்களா...? வீட்டுல எல்லோரும் சவுக்கியமா..?” என்று ஆகாஷிடம் நலம் கேட்க, அவனும் அவரை விசாரிக்க, உற்சாகமாகப் பதில் சொன்னார்.,
“எங்க இந்த அம்மு? எப்பயும் போல இழுத்து போட்டுட்டு தூங்குதாக்கும்... கல்யாணம் ஆனா கூட இதுக்குப் பொறுப்பு வரலை பாருங்க....” உரிமையாக அலுத்துக் கொண்டே ‘அம்மு....’ என்று குரல் கொடுத்தபடி அறைக் கதவைத் தட்டப் போக,
“அவ நைட் தூங்கவே ரொம்ப லேட்டாயிடுச்சு... அதான்..” அவசர அவசரமாகச் சொன்ன ஆகாஷின் குரலில் ‘அவளை தொந்தரவு செய்யாமல் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்களேன்..’ என்ற மறைமுக வேண்டுகோள் இருந்தது.
அவன் சொன்ன வேகத்தில் செல்வி சிரித்து விட, ரவியும் பூரிப்புடன் புன்னகைத்தார்.
“ஏனுங்க... இது உங்களுக்கே ஞாயமா இருக்கா? எங்க வீட்டுப் பொண்ணைக் கட்டிக்கிட்டு போய் மெட்ராஸ்லயே வச்சுக்குறீங்க.. அத்திப்பூத்த மாதிரி கூட்டிட்டு வந்துட்டு அப்பயும் எங்க கண்ணுல காட்ட மாட்டேன்னு சொன்னா எப்புடிங்க...?” செல்வி கன்னத்தில் கை வைத்தபடி அங்கலாய்க்க,
ஆகாஷ் லஜ்ஜையுடன் சிரித்தான் எனில், ‘நான் கேக்க நினைக்குறதை நீயாவது கேக்குறியே..’ என்கிற மாதிரி ரவி முறுவலுடன் நிமிர்ந்து அமர்ந்தார்.
ஓரக்கண்களில் அவரைக் கவனித்த ஆகாஷ், “இனிமே அடிக்கடி வந்து தங்குறோம்ங்க..” மாமனாரை குறிப்பாகப் பார்த்தபடியே செல்விக்குப் பதில் கொடுக்க, ரவியின் முகம் மலர்ந்து போனது.
“என்ன செல்விக்கா.. வந்ததும் வராததுமா என் வீட்டுக்காரரை மிரட்டிக்கிட்டு இருக்கீங்க? அவரே பாவம், வாயில்லாத பூச்சி...” அதற்குள் இவர்களின் பேச்சுச் சத்தத்தில் எழுந்து வந்திருந்த நேத்ரா, ஆகாஷை நமட்டு சிரிப்புடன் பார்த்தபடி செல்வியிடம் வம்பு வளர்க்க,
“பின்ன... உன் வாய்க்கு அவரும் கூடச் சேர்ந்து பேசினா வீடு என்னத்துக்கு ஆகும்? அதுக்குப் பயந்தே அவரு கம்முன்னு ஆயிருப்பாரு....” இடக்கிய செல்வி, “எப்படி இருக்கக் கண்ணு...? உடம்பெல்லாம் தேவலையா..?” அவள் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“என்னப்பா, காபி குடிச்சுட்டீங்களா..? குளிச்சிட்டு வந்துடுங்க.. டிபன் சாப்டுடலாம்...” ஈரத் தலையில் முடிந்த துண்டுடன் மாடி ஏறி வந்த மாலதி ஆகாஷிடம் கேட்க, கொஞ்ச நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மணியாவதை கவனித்த மாலதி, “நீ கீழ வந்து குளிடி..” என்று மகளிடம் சொல்லிவிட்டு சமையலை கவனிக்க இறங்கி செல்ல, தன் துணிகளை எடுத்துக்கொண்ட நேத்ரா செல்வியுடன் வளவளத்துக் கொண்டே கீழே போனாள்.
அதோடு சரி... அவ்வப்போது அவன் கண்களில் பட்டாளே தவிர அவள் வந்திருப்பது தெரிந்து பார்த்து போக வந்திருந்த நட்பு, அக்கம் பக்கம் என்று விருந்தினர்களுடனேயே வெகு பிஸியாக இருந்தாள்.
இவனும் எவ்வளவு நேரம் தான் ரவியிடம் பிசினஸ் பற்றிப் பேசுவது? தாத்தாவிடம் நாட்டு நடப்புகளை விவாதிப்பது..? பழகிய ஊராக இருந்தாலும், நேத்ரா இல்லாமல் வெளியே போகவும் பிடிக்கவில்லை. மாலதி கவனித்த கவனிப்பில் வேளாவேளைக்கு நன்றாகச் சாப்பிட்டு தூங்கி தூங்கி எழுந்தான்.
காலை ஒரு தூக்கம், மதியம் ஒரு தூக்கம் என்று உறங்கி எழுந்ததில் உடம்பெல்லாம் நெட்டி முறித்தது போல இருக்க, பால்கனியில் நின்றபடி தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இத்தனை வருடங்களில் ஊர் வெகுவாக மாறிப் போயிருந்தது தெரிந்தது. அங்கங்கே காலி காலியாக இருந்த கிரௌண்ட்டுகள் எல்லாம் கான்க்ரீட் கட்டிடங்களுடன் காட்சி அளிக்க, நிறையத் தனி வீடுகள் கூட அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறி இருந்தன.
இதே வீதிகளில் தான் ‘பைக் கற்றுக்கொள்கிறோம்’ என்ற பெயரில், வண்டியை உறும விட்டு வருணுடன் அலைந்திருக்கிறான். பள்ளித் தோழர்களை இணைத்து கிரிக்கெட் கிளப் ஒன்றை துவங்கி, சனி ஞாயிறு எல்லாம் வீணாகக் காய்ந்த வெயிலை மண்டையில் வாங்கிக்கொண்டு,
“என் பையன் கலரே போச்சு.. ஏன்டா இப்புடி... லீவுன்னா வீட்டுல இருக்காம...” என்று அம்மாவை புலம்ப வைத்திருக்கிறான். வருண் கொஞ்ச நாள் சைட் அடித்துக் கொண்டு திரிந்த மலையாள மோகினியின் வீடு கூட அதோ தெரியும் அந்தப் பச்சை கட்டிடம் தானே...
வருணின் நினைவு வந்தவுடன், “ப்ரீயா இருக்கியா..? டைம் இருந்தா கால் பண்ணு..” அவன் விரல்கள் வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை தட்டி விட்டது.
“அந்த மீரா விஷயம் மட்டும் லாவண்யாவுக்குத் தெரிஞ்சது, அவ்வளவு தான்..” அவர்கள் பார்த்தவரை வருணின் மனைவி லாவண்யா பயங்கர பொசஸிவ் குணம். “அரசல் புரசலா தெரிஞ்சா கூட அவ்வளவு தான், பயபுள்ளையைச் சுளுக்கு எடுத்துடும்...” தனக்குள் எண்ணி சிரித்தவனுக்கு, தன்னவளைப் பற்றிய எண்ணமும் கூடவே வந்தது.
ஒருவேளை காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்து, நேத்ராவை தவிர வேறு யாராவது அவன் வாழ்க்கையில் வந்திருந்தால் அவன் என்னவாகி இருப்பான்?
உண்டிருப்பான், உறங்கியிருப்பான், கண்டிருப்பான், களித்திருப்பான், ஆனால், இந்த மாதிரி அனுபவித்து வாழ்ந்திருப்பானா..? உயிர்ப்போடு இருந்திருப்பானா? அவனுக்குத் தெரியவில்லை.
சாதாரண இளைஞர்களை ஒதுக்கி ஓரமாக நிற்க வைத்து விட்டு மில்லியினர்களையும் பில்லியினர்களையும் மட்டுமே ‘டிக்’ அடிக்கிற அளவுக்கு அப்டேட் ஆகியிருக்கும் இளம்பெண்களின் உலகம். மனைவியைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் பசங்களையே, ‘நீ வேஸ்ட்டு, என் டேஸ்ட்டுக்கு ஒத்து வர மாட்டேங்குற...’ என்று விவாகரத்து செய்யும் காலம் இது.
‘வேலண்டைன்ஸ் டே’ யை நியாபகம் வைத்து வெளியே டின்னர் அரேன்ஜ் செய்யவில்லை என்று லாயரை அணுகிய பெண் தோழியை அவனுக்கு பெர்சனலாகத் தெரியும். தன் நண்பர்கள் வட்டத்தில் இந்த மாதிரி நிறைய விவகாரங்களை அவன் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறான்.
நார்மலான பசங்களே ‘ததுங்கின தோம்’ போடும்போது, சட்டென்று சூடேறிப் போகும் தன் குணத்துக்கு நேத்ராவைத் தவிர வேறு யாராக இருந்தாலும், ஒத்துப் போய் வாழ்வது இலகுவான காரியமா?
‘சிடுமூஞ்சி’ என்றோ, ‘பிசுனாரி’ என்றோ, ‘வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத வொர்க்கஹாலிக்’ என்றோ ஈஸியாகப் பட்டம் சூட்டி கட்டம் கட்டி இருப்பார்கள் என்று தோன்ற,
“என்கிட்ட என்ன இருக்குதுன்னு அவ்வளவு பிடிவாதம் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளோ தெரியல...” எப்போதும் தோன்றுகிற அவள் காதலின் மீதான பிரமிப்பு தான் இப்போதும் அவனை ஒரே சுருட்டாகச் சுருட்டி அவள் காலடியில் வீசியது.
இதையே கேள்வியாகக் கேட்டால், எதையாவது சொல்லி நக்கலடிப்பாளே தவிர இருவருக்குமே புரிந்த காரணங்களை ஒருநாளும் காவியமாக அவள் பிரஸ்தாபித்ததில்லை.
அவனுடைய இயல்புகளை, நிறை குறைகளை நேத்ரா முழுதாகப் புரிந்து வைத்திருப்பதாலேயே அவர்களின் வாழ்க்கை வண்டி சுமூகமாக ஓடுவதை உணர்ந்து வைத்திருப்பவன், அவளளவுக்கு வெளிப்படையாக நேசத்தைக் காண்பிக்கிறானா என்று தெரியாது.
ஆனால், உயிரெனத் தன் உள்ளத்தில் அவளைப் பொதிந்து வைத்திருக்கிறான். ‘ஐ லவ் யூ’ என மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொள்பவர்கள் மட்டும் தான் காதலிக்கிறார்கள் என்று யார் சொன்னது?
“என்னதான் பண்ணுறான்னு தெரியல.. மதியானம் கொஞ்ச நேரம் படுன்னா கூடக் கேக்காம ஓடி போயிட்டா...” அவன் கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,
“என்ன அங்க தேடிக்கிட்டு இருக்கீங்க...? அம்மா ‘டீ போட்டுட்டேன்.. எடுத்துட்டு போ’ன்னாங்க... அதான் ஒண்ணா வாங்கிட்டு வந்துட்டேன்...” அவனிடம் ட்ரேயை நீட்டியவள், இன்னொரு கையால் பேலன்ஸ் பண்ணி சுமந்து வந்திருந்த தன் மெடிக்கல் கிட்பேகை அங்கிருந்த டீ டேபிளில் வைத்தாள்.
“ஏன், யாருக்காவது உடம்பு சரியில்லையா என்ன...?” தேநீரை வாங்கிக் கொண்டபடி அவன் வினவ, “அதை ஏன் கேக்குறீங்க போங்க...? எல்லோரும் என்னைப் பார்க்க தான் ஆசையா ஓடி வந்துருக்காங்கன்னு பார்த்தா, ஆளாளுக்கு ஒவ்வொரு வலியை சொல்லிக்கிட்டு வந்து நிக்குறாங்க...”
இப்படி உதட்டை பிதுக்கி சோக கீதம் பாடுபவள் தான், அவள் வேலை செய்யும் மருத்துவமனையின் நியோநேட்டல் துறையின் துணைத் தலைவி, ‘பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்’ என்று சொன்னால், சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
“’சரி, என்னை நம்பியும் வர்றீங்களே, வாங்க... வாங்க’ன்னு சொல்லி அயோடக்ஸ், ஜண்டுபாம்னு எல்லாம் ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து அனுப்பி விட்டுருக்கேன்....”
“என் ஜிலேபி கையெழுத்தை கண்டுபிடிச்சு மெடிக்கல் ஷாப்ல இருக்கிறவரு காறி துப்ப போறாரு.. பட், சோகம் என்னன்னு பார்த்தீங்கன்னா ஒத்தை பைசா கூடத் தேறல.. எல்லாமே ஓசி கிராக்கி....” அவள் வெகுவாக அலுத்துக் கொள்ள,
“உன்னை நீயே டேமேஜ் பண்ணிக்குறதுல உன்ன மிஞ்ச ஆளில்ல போ... யாராவது கேட்டா கூட, நீ நிஜமா தான் பேசுறியோன்னு நினைச்சுப்பாங்க...”
வந்தவர்களுக்கு எல்லாம் கையில் இருந்த சேம்பிள் மருந்துகள் முதற்கொண்டு அள்ளிக் கொடுத்து அனுப்பியிருப்பாள் என்று தெரியும். “என்னமோடா ஆகாஷா.. ஏதோ நம்மால முடிஞ்சுது...” அதற்கும் அவளிடம் கேலி பதில் தான்.
“நீ என்ன வேணா உன்னைப் பத்தி நீயே கலாய்ச்சுக்கோ. ஆனா ஒண்ணே ஒண்ணு... யாரு எந்தத் தொழில் செஞ்சாலும் சரி, டாக்டர்ஸ்க்கு இருக்கிற சொசைட்டல் ரெஸ்பெக்ட் மாதிரி வேறு யாருக்கும் கிடைக்காது”
“அம்மு... இது நோபிள் ப்ரொபஷன்... இல்லடா.. “ கிட் பேகின் மேலே கிடந்த ஸ்டெத்தை காதலுடன் வருடிக் கொடுத்தன அவன் விரல்கள்.
அவன் வெகுவாக நெகிழ்ந்து போயிருப்பதை அவன் குரலே சொல்ல, “ஏன் ஆகாஷ்.. திடீர்னு இவ்வளவு பீலிங்.. உங்களுக்கு இன்னும் அந்த வருத்தம் மனசை விட்டு போகலையா?” நேத்ராவுக்குக் கவலையாக இருந்தது.
“சே.. சே.. நான் என்னை வச்சே சொல்லல... பொதுவா சொன்னேன். டெல்லில இருந்து படிப்புக்கு முழுக்கு போட்டு வந்தப்ப பீல் பண்ணினது உண்டு தான். ஆனா அதுக்கப்புறம் அப்படில்லாம் யோசிச்சு பார்த்துக்கிறதே இல்ல.. இப்ப நினைச்சு பார்த்தா எனக்கு பிசினஸ்தான் நல்லா சூட் ஆகுதுன்னு தோணுது...”
அவன் சொல்வதில் முக்கால்வாசிதான் உண்மை என்று புரிந்தாலும், “எந்த வேலையை எடுத்துக்கிட்டாலும் நீங்க அதை பெர்பெக்ட்டா செய்வீங்கம்மா..” அவள் கரங்கள் ஆறுதலாக அவன் தோளை பிணைத்துக் கொள்ள,
“நீ எதுக்கு இவ்வளவு பீல் பண்ணுற...? குடும்பத்துல ஒரு கொலைகாரி இருந்தா போதும்னு அந்த ஆண்டவன் அன்னிக்கே முடிவு பண்ணிட்டான் போல..” ஆகாஷ் கன்னத்தில் துருத்தியபடி சிரித்தான்.
“சொல்ல மாட்டீங்க பின்ன..?” அவன் தோளில் குத்தியவள், “என்ன, நான் வர்றதுக்கு முந்தி ரோட்டையே எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தீங்க..? எந்தப் பொண்ணு போச்சு அந்தப் பக்கம்...?” புருவங்களை உயர்த்த,
‘ஆமா.. உலக அழகி ஒண்ணு போச்சு... அதான் வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்தேன்... அதுக்குள்ள தான் நீ வந்துட்டியே.....”
அவன் இலகுவாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே இந்த விஷயத்தையும் பேசி விடலாம் என்று நினைத்தாள் நேத்ரா. இல்லையென்றால், நொய்நொய்யென்று இதன் பின்னாலேயே குறியாக இருக்கும் அப்பாவிடம் என்ன பதில் சொல்வது?
“வந்து.. ஆகாஷ்... ம்ம்.. அப்பா ஒண்ணு சொன்னாரு..” அவள் பலத்த பீடிகை போட, “என்ன ரொம்ப பம்முற...?” டீ கப்பை சாசரில் வைத்தபடி அவளைப் பார்த்தான்.
‘இல்ல.. உங்க வீடு... ம்ம். அந்தப் பழைய வீடு இருக்குல்ல...” அவர்களின் பழைய குடியிருப்பின் பக்கம் கைகளைக் காட்டியவள்,
“அதை நாமளே வாங்கிடலாமான்னு அப்பா கேக்குறாரு.. இப்ப அங்க இருக்குறவங்க ஏதோ வகைல நமக்குத் தூரத்துச் சொந்தமாம். கொஞ்சம் பண தேவைல இருக்காங்க போல. நல்ல விலைக்கு வந்தா கொடுத்துடற மாதிரி பேச்சு அடிபடுது... உங்களுக்கு இஷ்டம்னா நேர்ல போய்ப் பேசி நாமளே வாங்கிக்கலாம்னு அப்பா சொல்றாங்க...”
இவன் எந்தச் சமயம் எப்படி எகிறுவான் என்று தெரிந்தாலும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச அவளுக்கே தயக்கமாக இருக்க, சிறு கவனம் கலந்தே வந்தது அவள் குரல்.
“அட பாருடா.. என் மாமனாருக்கு என் மேல எம்புட்டு பாசமுன்னு...” நக்கலடித்தவன், அவள் எண்ணியது போல எதுவும் கத்தி கித்தி வைக்கவில்லை. ஏன், குரல் கூட உயரவில்லை.
“உங்கப்பா அப்படிச் சொல்லியிருந்தாருன்னா அது நம்ம மேல இருக்கிற அக்கறைல சொல்றது. மத்தபடி எனக்கு அந்த வீட்டை வாங்கணும்கிற எண்ணமெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது. அவருகிட்ட அப்படி ஒரு ஐடியாவே வேணாம்னு சொல்லிடு...”
அவன் பளிச்சென்று சொல்லிவிட, இவளுக்குத் தான் அப்படியே விட்டுவிட மனமில்லை.
“இல்ல.. நல்லா யோசிச்சு சொல்லுங்களேன்... ஏன்னா இந்த மாதிரி இன்னொரு சந்தர்ப்பம் அமையுமோ, என்னமோ.... உங்களுக்குள்ள நீங்க எவ்வளவு பீல் பண்ணியிருப்பீங்க, வீட்ட வித்துட்டு போனப்ப.. அதான், நாமளே வாங்கிகிட்டா நல்லா இருக்குமேன்னு தோணுது..”
அவர்கள் விட்டு சென்றதை மீண்டும் மீட்டுக்கொள்ளும் வாய்ப்பு வந்தால் அதை ஏன் விடவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால், ஆகாஷ் தெளிவாக இருந்தான்.
“ஏய் லூஸு... இந்த வீட்டை பத்தி நினைச்சாலே நாங்க அழுதுகிட்டே இங்க இருந்து கிளம்புனது தான் ஞாபகம் வரும். அதைப் போய்த் திரும்பவும் வாங்கி வச்சு அந்த நாளை பத்தியெல்லாம் திரும்ப திரும்ப ரிவைண்ட் பண்ணி பார்த்து கஷ்டப்படணுமா..? “
“வீடுங்கிறது எப்பயுமே நமக்குச் சந்தோசத்தையும் நல்ல நல்ல ஞாபகங்களையும் கொடுக்கிறதா இருக்கணும்... அதை விட்டுட்டு.... முடிஞ்சு போனதை கிளறிக்கிட்டு....? நமக்கு வீடுன்னு ஒண்ணு இருக்குதுன்னா அது இப்ப இருக்குற வீடு தான், புரியுதா....?” இலகுவாக அந்த பேச்சைப் புறம் தள்ளியவன்,
“நீயென்ன என்னை சினிமால வர்ற ஹீரோ மாதிரி ‘வருவேன், பெரிய ஆளா வருவேன், இந்த வீட்டை திரும்பவும் வாங்கிக் காண்பிப்பேன், பார்த்துட்டே இருங்க’னு எல்லோருகிட்டயும் வீராவேசமா சவால் விட்டுட்டு இங்க இருந்து போனேன்னு நினைச்சியா...?” அவன் கிண்டலடிக்க,
கண்களில் துளிர்த்த நீர்த்துளியுடன் அவன் மடியில் அப்படியே சரிந்து கொண்ட நேத்ரா எந்த மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியாது.
எந்த அனாவசிய ஆசைகளோ, பழைய துவேசங்களோ இல்லாமல்.... இந்தத் திடமான மனதுக்கும், ஆரோக்கியமான சிந்தனைக்கும் மேல் வேறு என்ன வேண்டும்?
“யூ ஆர் மை ஹீரோ ஆகாஷ்.....“ அவன் கன்னத்தில் அவள் அழுத்தமாக முத்தமிட, “ஏன், எப்பயும் ஜீரோன்னு ஆரம்பிச்சு வெறுப்பேத்துவ... செண்டிமெண்ட் சீன்ல டயலாக் மறந்து போச்சா...?” அவன் இதழ்களும் அவளில் ஆழப் பதிந்தது.
“என்ன பண்ணுறது ஆகாஷா....? நீ ஜீரோவோ, ஹீரோவோ, உன்னை வச்சுக் குப்பை கொட்டணும்கிறது தானே என்னோட தலைவிதி...” ஒற்றை விரலால் நெற்றியை அவள் வழித்துக் காட்ட,
“அடிங்.. என்னடி ரொம்பத் தான் சலிச்சுக்குற...?” அவளை நகரவிடாமல் நிறுத்தி முறைக்க முயன்றவனின் கண்களில் தெரிந்தது காதல், காதல், காதல், மட்டுமே.
அவள் ஆழ்நயனங்களின் ஆழத்தில் விழுந்தவன் எழுந்து கொள்ள முடியாமல் தடுமாற, “போதும்... கண்ணுலயே பிச்சு சாப்ட்டுடாதீங்க..” அவளின் உள்ளங்கை சிணுங்கலாய் அவன் கண்களை மறைத்தது.
அவளது விழி சொன்ன கவிதைகளில் உயிர்ப்பை மீட்டு தனக்கான வானத்தைக் கண்டு கொண்டவன் ஆகாஷ்; அவனது விழிவழி விரிந்த வானத்தில் தன்னுடைய சிறகுகளை விரித்துக் கொண்டவள் நேத்ரா; இதற்கு மேல் என்ன பொருத்தம் வேண்டும் இருவருக்கும் இடையில்!?
‘கடமையெனக் காலம் செல்ல,
கவிதையென என்னுள் வந்தாய்;
வலிகளை நான் மென்றிருக்க,
வானவில்லாய் வண்ணம் சேர்த்தாய்;
வெறுமையில் வெந்து தணிய,
குளிர்நிலவாய் உந்தன் மீட்சி;
இறுகிய என் இதயம் தட்டி,
அதிரடியாய் உன் அன்பின் ஆட்சி;
என் கோப சிவப்பெடுத்து, ஒளி
ஓவியம் நீயும் தீட்ட,
உன் சிரிப்பின் ஓசை மட்டும்
என் பிரபஞ்ச ஆதி ஸ்ருதி;
நான் பேசா மொழிகள் எல்லாம்
உன் விழிகள் தன்னால் பேச,
காணாத இன்பம் எல்லாம்
இனி தானாக நம்மைச் சேரும்;
வழித்துணையாய் நீ இணைந்திருக்க
வானமும் வளைந்து வரும்;
வசந்தங்கள் சேர்ந்தமையும்;
வாழ்க்கை நம் வசமாகும்;
இப்போதெல்லாம் இந்த மாதிரி கவிதையாய், அட்லீஸ்ட் கவிதை என்ற பெயரில் என்னென்னமோ நிறையத் தோன்றுகிறது அவனுக்கு. எல்லாம் லவ், ப்யார், ப்ரேமம், இஷ்க் என்றெல்லாம் விதவிதமாகச் சொல்கிறார்களே.... அந்த வஸ்து படுத்தும் பாடு!
அவளிடம் சொன்னால் “இதுக்குப் பேரு தான் கவிதையா? உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல...” செமையாக ஓட்டி எடுத்து விடுவாள் என்று தெரியும்.
தனக்குள் புன்னகைத்தவன், வெளியே சொல்லிக் கொள்ளாமல் தன் டிஜிட்டல் பேடில் வேக வேகமாகக் குறித்துக் கொள்ள, “என்ன கம்முன்னு இருக்கீங்க...?” சீண்டியது அவன் மார்பில் சாய்ந்திருந்த நேத்ராவின் குரல்.
அவன் என்னவோ எழுதுவதை நிமிர்ந்து பார்த்து கடுப்பானவள், “என்னத்துக்கு இப்ப அதை எடுத்து நோண்டுறீங்க...? உங்க சினிமா வேலையெல்லாம் ஒரு இரண்டு நாளைக்குத் தள்ளி வைச்சா என்ன...?” அதட்டியபடி அதை வாங்க முயல,
“ம்ம்... டக்குனு ஒரு ஐடியா தோணுச்சு... அது தான்....” ஆகாஷ் அவசரமாக மூடி வைக்கப் பார்த்தான்.
ஆனால், அதற்குள் அவனிடமிருந்து பறித்திருந்தவள், “அப்படி என்ன மறைக்குறீங்க...?” மிரட்டிக் கொண்டே பிரித்து அதிலிருந்ததை வாசிக்க, வாசிக்க.... விழி விரித்துதான் போனாள்.
சில கணங்கள் பிரமிப்பில் வாயடைத்திருந்தவளுக்கு எதுவும் சொல்லக்கூடத் தோன்றவில்லை. அவன் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையின் ஆழமும் அவளுக்குத் தெளிவாகப் புரியவே செய்தது. எனினும் எந்த நேரத்திலும் சூழ்நிலையைக் கனமாக்கிக் கொள்ளவே விரும்பாதவள் அவள்.
“அட பாருடா... சூப்பர்... சூப்பர்....” நொடியில் சகஜமாகி சிரித்தவள், “ஏன் ஆகாஷ்.. உங்களுக்கு இந்தளவுக்கு மூளைல்லாம் இருக்கா?“ முகவாயில் கை வைத்து வியக்க, அவள் உண்மையாகவே சொல்கிறாளா இல்லை நக்கல் அடிக்கிறாளா என்றே அவனுக்குப் புரியவில்லை.
“’கழுதை மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவா?’ன்ற மாதிரியே கேட்குற...?” ஆகாஷ் சிரிப்போடு முறைக்க, “ம்ம்... இல்லல்ல.. நல்லாதான் இருந்துச்சு.... குட்... குட்... கீப் இட் அப்...” கெத்தாக பாராட்ட வேறு.
“நானும் ஒரு கவிதை சொல்லட்டுமா ஆகாஷ்....? எனக்கும் ஆசையா இருக்கு....” வெகு சின்சியராகக் கேட்டவளின் முகத்தில் அதிதீவிர பாவனை.
“காசா பணமா? சொல்லேன்...” ஆகாஷ் கிண்டலாக அனுமதி கொடுக்க,
இரண்டு நிமிடங்கள் கண்ணை மூடி திறந்து முழிகளை உருட்டி திரட்டி யோசித்தவள், “இருங்க.. சொல்றேன்.. க்கும்...” தொண்டையைச் செருமிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்து வாயை திறந்தாள்.
அவள் கொடுத்த பில்ட்-அப்பில் ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்த ஆகாஷ், முதல் வரியில் சிரித்து, இரண்டாம் வரியில் முறைத்து, மூன்றாம் வரியில் கொலை வெறியாகி, கடைசியில் கை எடுத்து கும்பிடும் நிலைக்கு வந்திருந்தான்.
ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இரண்டு நிமிட இடைவெளி எடுத்து ‘ம்’...’ம்’ கொட்டி யோசித்து யோசித்து அவள் சொன்னாளே ஒரு ‘கவிதை’! அட! அட!! அட!!!
"ராஜாவுக்குப் பக்கத்துல ராணி,
.....
நான் புடுங்குறது எல்லாமே
தேவையில்லாத ஆணி;
...ம்ம்...
ஆகாஷுக்கு பக்கத்துல இந்த அம்மு,
‘ஹ..’ நான்தான் அவனுக்கேத்த பொம்மு;
....
இல்லேன்னு மட்டும் சொல்லி நீ ப...ம்மு,
.ம்...உன் வாயில நான் கொட்ட போ..றேன் கம்மு;
எ.....எ..."
இதற்கு மேல் அவள் வாயிலிருந்து உதிரும் பொன்மொழிகளை இந்த உலகம் தாங்காது என்பதால், “வேண்டாம்.. விட்டுடு... முடியல...” நல்லவேளை, அதற்குள் ஆகாஷ் வேகமாக அவள் வாயை அடைத்திருந்தான்.
“ப்ச்.. விடுங்க ஆகாஷ்....” அவன் கையைக் கஷ்டப்பட்டு எடுத்து விட்டவள், “எப்படி இருந்துச்சு என்னோட கவிதை...? ம்ம்... கவித... கவித....இல்ல... ?” பெருமையாகத் தோளை குலுக்கிக் கேட்க,
“இதுக்கு நான் கிறுக்கி வச்சதையே வழக்கம் போல நீ கலாய்ச்சு தள்ளியிருக்கலாம்...” முறைத்தவன் அவள் தலையை விளையாட்டாக முன்னால் தள்ளினான்.
“ஏன்...? நல்லா இல்லையா? போங்க...” சலித்துக் கொண்ட நேத்ரா,
“அது வேற ஒண்ணும் இல்ல ஆகாஷ்... உங்க லெவலுக்கு நீங்களே என்னத்தையாவது உளர்றப்போ நான்லாம் சும்மா இருந்தேன்னு வைங்க.... நாளைக்கு இந்த உலகம் என்னைப் பத்தி தப்பா பேசும்பா... அதுக்குத் தான்..” பாவமாக விழி கொட்டி விளக்கம் கொடுத்ததில் அவன் வெறுத்தே போனான்.
“சரி விடுங்க... இப்போதைக்கு என் கற்பனை குதிரையோட காலை தட்டி விட்டுட்டீங்க..... நாளைக்கே யோசிச்சு சூப்பரா ஒண்ணு எழுதி கொடுக்கிறேன்.... ஓகேவா? சோ டோன்ட் வொர்ரி.. பி ஹேப்பி....”
என்னவோ தனது திருவாய் மொழிகளைச் செவிமடுக்க இவன் ‘ப்ளீஸ்.. ப்ளீஸ்’ என்று கெஞ்சி தவம் கிடப்பது போல அவள் பேசிக் கொண்டே சென்றதில் ஆகாஷ் வாய் விட்டு சிரித்து விட்டான்.
“உன்னால மட்டும் எப்படி இப்படி...?” அருகில் இருந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “நீ மட்டும் இல்லன்னா நான் ஒண்ணுமே இல்லடி....”
வெகு அபூர்வமாகவே காதல் வசனங்கள் பேசுபவன் இன்று என்னவோ அதிசயமாக உருகி உருகிப் போக, கிண்டலாக நிமிர்ந்தவள் அவன் முகவாயைப் பற்றி மேலும் கீழுமாக ஆட்டிப் பார்த்தாள்.
“ரொம்ப நேரம் தனியாவே இருந்து ஏதாவது ஆகிடுச்சாம்மா...? அச்சச்சோ... இன்னிக்கு என்னென்னவோ ட்ரை பண்ணுதே என் டிஎம்பி முறுக்குக்கம்பி....” அவள் கொஞ்சலாய் கால் வாரியதில், “உனக்கிருக்குற திமிரு இருக்கே...!” அவன் சிரிப்பும் முறைப்புமாக அவள் காதை நிமிண்டினான்.
இந்தச் சின்னச் சின்னச் சீண்டல்களும், செல்ல சிணுங்கல்களும், ‘லுலுலாய்’ சண்டைகளும் அவர்களுடைய காதல் வாழ்வை மென்மேலும் சுவாரஸ்யமாக்கிக் கொண்டிருக்க,
எந்த எதிர்பார்ப்பும், ஈகோவும் இல்லாமல் உணர்வுகளால் மட்டுமே ஒன்றிணைந்து, அழகிய கவிதையாய் மனம் கவரும் அவர்களின் நேசத்தை அந்த வானமும் கூட ஆசை ஆசையாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.
(நிறைந்தது)

Author: SudhaSri
Article Title: விழிகள் தீட்டும் வானவில் - இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.